Showing posts with label பூலோகம் - ஜெயம் ரவி. Show all posts
Showing posts with label பூலோகம் - ஜெயம் ரவி. Show all posts

Saturday, July 05, 2014

பூலோகம் - ஜெயம் ரவி, பேட்டி


பையனாக இருந்த ஜெயம் ரவி, சில மாதங்களுக்கு முன்பு சமூக அநீதிகளைக் கண்டு பொங்கி எழும் ‘அரவிந்தனாக’ ரசிகர்கள் மனதில் ‘நிமிர்ந்து நின்றார்’. தற்போது சமூகத்துக்காக வேறொரு வண்ணத்தில் ‘பூலோகம்’ என்ற குத்துச்சண்டை வீரராக வர இருக்கிறார். எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தைப் பற்றி ‘தி இந்து’வுக்காக பிரத்யேக மாகப் பேசினார் ஜெயம் ரவி.


பூலோகம் என்ற தலைப்பு உங்கள் கதாபாத்திரத்தின் பெயரா? இல்லை கதையோடு தொடர்புடையதா?


எனது கதாபாத்திரத்தின் பெயர்தான். விவேக் பூலோகம் என்ற குத்துச்சண்டை வீரனாக நடித்திருக்கிறேன். என்றாலும் பூலோகம் என்ற வார்த்தைக்குக் கதையிலும் முக்கியமான இடமிருக்கிறது. ஒரு இளம் பாக்ஸரின் வாழ்க்கையில் நடக்கும் முக்கிய சம்பவம்தான் கதையை நகர்த்துகிறது. குத்துச்சண்டைதான் கதையோட பேக்டிராப். பாக்ஸிங்கில் ஆறு விதமான குத்தும் முறைகள்தான் முக்கியம். அதை வைத்துக்கொண்டு களத்தில் நம்மை எதிர்த்து நிற்கும் போட்டியாளரைத் தாக்கி, ஜெயிக்கணும். இந்த ஆறு பஞ்ச்சஸ் மட்டுமே வைத்துக் கொண்டு மொத்தப் படத்தையும் எப்படி சுவாரசியமாக எடுப்பது என்பதுதான் எங்களுக்கு இருந்த மிகப் பெரிய சவால். இந்தச் சவாலை எப்படி எதிர்கொண்டோம் என்றால், எதற்காகப் பூலோகம் அடிக்கிறான் என்ற எமோஷனை வைத்திருக்கிறோம். தங்கைக்காக அடித்தான் என்றால் அது ஒரு எமோஷன், மக்களுக்காக அடித்தால் அதுவொரு எமோஷன், ஆனால் இந்தப் படத்தில் பூலோகம் என்ன காரணத்துக்காக அடிக்கிறான் என்பதில்தான் கதையோட சக்ஸஸ் உட்கார்ந்திருக்கு. பூலோகம் புத்திசாலித்தனமாக அடிப்பது, அவனை இயக்கும் பின்னணிக் காரணங்களின் பாதிப்புடன் அடிப்பது என்று மாறுபட்ட எமோஷன்களில் ஒவ்வொரு பாக்ஸிங் காட்சியும் இருக்கும். இது படத்தின் ஹைலைட்களில் ஒன்றாக இருக்கும். இது ஜெயம் ரவியின் படமாகவும் இருக்கும். இயக்குநர் கல்யாணின் படமாகவும் இருக்கும்.


எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமியில் ஏற்கனவே குத்துச்சண்டை வீரராக நடித்திருந்தீர்கள். மறுபடியும் ஒரு குத்துச்சண்டை படத்தை ஏற்றுக்கொள்ள வலுவான காரணங்கள் இருக்க வேண்டும் இல்லையா?


ஹாலிவுட் படங்களிலும், இன்னும் பல உலக சினிமாக் களிலும் ரொம்பவே புரஃபெஷ னலான பாக்ஸிங் காட்சிகளைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் பாலிவுட்டில்கூட அதுபோன்ற முயற்சி இதுவரை இல்லை. பூலோகம் படத்தின் மூலம் அந்தப் பெருமை தமிழ் சினிமாவுக்குக் கிடைக்கும். எம்.குமரன் படம் கிக் பாக்ஸிங். இது ரா பாக்ஸிங். பொதுவாக உலகம் முழுக்கவே பாக்ஸிங் வைத்துப் படமெடுத்தால் ஓடாது என்ற செண்டிமெண்ட் இருக்கிறது. ஆனால் எம்.குமரனில் அதை உடைத்தோம். பாக்ஸிங் இதில் பின்னணியாக இருந்தாலும், கதையை நகர்த்திச் செல்ல நம்ம கல்சரிலிருந்து சில விஷயங்களும், இயல்பை மீறாத ஒரு அழகான லவ்வும் இருக்கு.



கலாச்சாரத்திலிருந்து சில விஷயங்கள் என்கிறீர்கள்… ‘மயானக் கொள்ளை’ வழிபாட்டு முறையைப் படமாக்கியிருப்பதைத்தானே சொல்கிறீர்கள்?



ஆமா. ஹீரோவோட வாழ்க்கையில அதுவும் ஒரு முக்கியமான பார்ட். மக்களை அழிக்கிற அசுரனை வதம்பண்ண, அம்மனா அவதாரம் எடுத்து, மயானத்துக்குப் போய் அவனை வதம் பண்றதுதான். அதை விரிவா சொல்ல வேணாம்னு நினைக்கிறேன். அந்தக் காட்சிய சூட் பண்றதுக்கு முன்னாடி வருஷா வருஷம் நடக்கிற உண்மையான மயானக் கொள்ளையோட வீடியோவைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னாங்க. எனக்குக் குலை நடுங்கிவிட்டது. உண்மையான வீடியோவில் அம்மனாக அருள் வந்து மயானத்துக்குப் போகும் பெண்மணியைச் சந்தித்து, அந்த நேரத்தில் நான் என்ன நினைத்துக் கொள்ள வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டேன். அவர் எனக்கு எந்த டிப்ஸும் கொடுக்கவில்லை. “ஆத்தா உனக்குள்ள வந்து உட்கார்ந்துடுவா போ” என்று ஆசி கொடுத்து அனுப்பினார். எனக்கு அதுதான் நடந்ததோ என்று இப்போது தோன்றுகிறது. மயானக் கொள்ளை ஒரு பாடல் காட்சி. அதில் எனது டிரான்ஸ்ஃபர்மெஷன் எனக்கே சர்ப்பிரைஸாக இருக்கிறது என்றால், ரசிகர்களும் ஜெயம் ரவிதானா இது என்று ஆச்சரியப்படுவார்கள்.



ஹாலிவுட் பட வில்லன்களுக்கும் உங்களுக்கும் அப்படி என்ன
 ஒரு பூர்வஜென்ம பந்தம்? இந்தப் படத்தில் நேதன் ஜோன்ஸ் ஏன் தேவைப்பட்டார்?



அது அப்படி அமைந்து விடுகிறது. பேராண்மை படத்தில் ‘சர்வதேசக் கூலிப்படை’ என்ற தீம் என்பதால் அதற்கு ரொனால்ட் தேவைப்பட்டார். பூலோகத்தில் இந்தியா ஒரு பெரிய மார்க்கெட் என்பது இந்தியர்களாகிய நமக்குத் தெரியாது என்று அந்நிய நாட்டவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி நினைத்துக்கொண்டிருப்பது தவறு என்று புரிய வைப்பவன்தான் பூலோகம். இதில் நேதன் ஜோன்ஸைக் குறிப்பாக ஒரு நாட்டைச் சேர்ந்தவராகக் காட்டாமல் அந்நிய நாட்டவர் என்று காட்டுகிறோம். ‘ஸ்கார்பியன் கிங் ’ படத்தில் நேதன் ஜோன்ஸைப் பார்த்து நான் வாய் பிளந்துபோய் இருக்கிறேன். 



இவர் மனிதனா இல்லை கிராபிக்ஸா என்று கூட நினைத்ததுண்டு. நேதன் ஜோன்ஸுடன் மோத வேண்டும் என்று வருகிறபோது அவரது உயரத்துக்கு என்னால் இனி வளர முடியாது. ஆனால் அவர் அளவுக்கு என்னால் உடலை ஏற்ற முடியும். இதற்காக 15 கிலோ எடை கூட்டினேன். நேதன் ஜோன்ஸுக்கு அடி கொடுக்கிறவனாக நான் தெரிகிறேனா என்பதைப் படம் பார்த்துவிட்டு ரசிகர்கள் சொல்லட்டும். ஆனால் நேதன் ஜோன்ஸிடம் அடிவாங்குகிற அளவுக்கு உடலை ஏற்றினேன் என்று என்னால் சொல்ல முடியும். அதேபோல பூலோகம் கேரக்டரைசேஷன் என்பது நேதன் ஜோன்ஸுக்கு இணையாக இருக்கும்.



நேதன் ஜோன்ஸின் கடமை உணர்ச்சியைப் பார்த்து வியந்துபோனேன். முதல் நாள் படப்பிடிப்பின் இறுதியில் காலில் அடிபட்டுவிட்டது.முதலுதவியோடு சரி. “எனது ஊரில் போய்ச் சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன்.” என்று சொல்லி 48 மணிநேரம் இடைவிடாமல் கடுமையான பாக்ஸிங் காட்சிகளில் நடித்துக் கொடுத்துவிட்டுத்தான் கிளம்பினார். ரொனால்ட் என் வீட்டுக்கு வந்தார். நமது தமிழ்ப் பண்பாட்டின்படி வேட்டி அணிந்து விருந்து உண்டார். ஆனால் நேதனுக்கு அதற்கான நேரமில்லை. அதனால் எனது அப்பா, அம்மாவை செட்டுக்கு வரவழைத்து அவருக்கு அங்கவஸ்திரம் போர்த்தி மரியாதை செய்தோம். அவ்வளவு பெரிய உருவம் நெகிழ்ந்துவிட்டது.



நீங்க சொல்வதைப் பார்த்தால் இவர் படத்தின் முடிவில் வரும் வில்லன் என்று தெரியுது. அப்போ மெயின் வில்லன்?



பிரகாஷ்ராஜ். தீபக் ஷாங்கிற கேரக்டர் பன்றார். பெரிய பிசினஸ் மேக்னெட். பிச்சுருக்கார் மனுஷன். இந்த மாதிரி புத்திசாலி வில்லனைப் பார்த்து ரொம்ம நாளாச்சுன்னு ஃபீல் பண்ண வெச்சிடுவார். இவருக்குக் குப்பத்துல என்ன வேலை என்பதுதான் ஹீரோவோட இணைக்கிற புள்ளி.



மறுபடியும் த்ரிஷா கெமிஸ்ட்ரி அமைந்துவிட்டதே?



இதுவும் அதிர்ஷ்டம்தான். திகட்டாத அழகுன்னு சொல்வோம்ல அது த்ரிஷாதான். அதேபோல ஓவர் ஆக்டிங் பண்ணாம படத்துக்குப் படம் அந்த கேரக்டராவே தெரியுறதும் த்ரிஷாவோட ஸ்பெஷல். இந்தப் படத்துல ஒரு மலையாளப் பொண்ணுக்குரிய சாயலோட சிந்துன்னு ஒரு கேரக்டர் பண்ணியிருக்காங்க. அவங்க அண்ணன் பரோட்டா கடை வெச்சிருப்பார். படிச்சுகிட்டே அதுல பார்ட் டைம் வேலை செய்வாங்க. பூலோகம் கேரக்டர் ஒரு போட்டியில ஜெயிச்சிட்டா, பரிசு வாங்குற அந்த போட்டோவை உடம்புல பச்சை குத்திகிற கேரக்டர். கேக்குறதுக்கு ஒரு டைப்பா தெரியும். படத்துல பாருங்க. ஜமாய்ச்சிருக்காங்க. பூலோகம் படிக்காதவன். இண்டர்நேஷனல் பாக்ஸிங் எப்படியிருக்குன்னு இண்டர்நெட் வழியா அவனுக்கு ஃபீட் பண்றதும் ரசிக்கிற மாதிரி இருக்கும்.


நன்றி - த இந்து