Showing posts with label சி.பி.ஐ. Show all posts
Showing posts with label சி.பி.ஐ. Show all posts

Wednesday, March 27, 2013

ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ சோதனை -புலனாய்வு - துலங்கும் மர்மங்கள் - ஜூ வி


கார் மட்டும்தான் காரணமா?

ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ...

ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் மூன்றாவது விதி, அடிக்கடி நிரூபிக்கப்படுவது அரசியலில்தான். தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த புதன்கிழமை, 'சோனியாவின் பேச்சு திருப்தி அளிக்கவில்லை. காங்கிரஸுடன் இணைவதற்கு இனி வாய்ப்பே இல்லை’ என்றார். இதை​யடுத்து, தி.மு.க. அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களைக் சமர்ப்பித்த 24 மணி நேரத்துக்குள் ஸ்டாலின் வீட்டுக்குள் நுழைந்தது சி.பி.ஐ. 

கருணாநிதியின் குடும்​பத்துக்கு வெளிநாட்டுக் கார்களால் எப்போ​துமே வில்லங்கம்தான். கடந்த 2010-ம் ஆண்டு மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன், பல கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை அன்பளிப்பாகப் பெற்றார் என்ற சர்ச்சையில் சிக்கினார். மீண்டும், 2011-ம் ஆண்டு மஸராட்டி வகை காரை சபரீசனும் உதயநிதி ஸ்டாலினும் முறைகேடான வழியில் இறக்குமதிசெய்து பயன்படுத்துவதாக ஒரு பிரச்னை கிளம்பியது. இப்போதும் வெளிநாட்டு கார் விவகாரத்தை வைத்தே சி.பி.ஐ-யும் ஸ்டாலினின் வீட்டுக்குள் நுழைந்துள்ளது.

இதன் உண்மையான விவரங்களை அறிய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ''அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், 'இந்தியாவில் 500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கார்கள் சுற்றுகின்றன. முறைகேடான வழியில் இறக்குமதி செய்யப்பட்டு அவை இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன. உடனடியாக இதுபற்றி விசாரணை நடத்தி அந்தக் கார்களைப் பறிமுதல்செய்ய வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இதையடுத்து, வரி இழப்பைத் தடுக்கும் பொருட்டு இதுபோன்ற கார்களைப் பயன்படுத்துபவர்கள் யார்? அவர்கள் யார் மூலம் இவற்றை வாங்கினர் என்று விசாரிக்குமாறு மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. கடந்த ஆறு மாத காலமாக இந்தியாவில் உள்ள முக்கியத் தலைநகரங்கள் அனைத்திலும் இந்த வேலை நடைபெற்றது.


தமிழகத்தில் நாங்கள் நடத்திய சோதனையில், இதுபோல் 30-க்கும் மேற்பட்ட கார்கள் இறக்கு​மதி செய்யப்பட்டுப் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது. அதில் பல கார்கள், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உறவினர்கள், தொழில் அதிபர்கள் பயன்படுத்தி வந்தனர். கருணாநிதி தன்னுடைய பயணத்துக்கு 'லம்போகினி’, 'ஆஸ்டன் மார்ட்டின்’, 'பென்ஸ்’ ஆகிய கார்களைப் பயன்படுத்துகிறார். மு.க.ஸ்டாலின் 'ரேஞ்ச் ரோவர்’ என்ற ஸ்போர்ட்ஸ் மாடல் காரைப் பயன்படுத்தி வருகிறார். அவருடைய மருமகன் சபரீசன் 'பிஎம்டபிள்யூ மற்றும்  மஸராட்டி கார்களை பயன்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது

. எல்லாவற்றையும்விட விலை உயர்ந்தது, மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தும் ஹம்மர் கார். இதனால்தான் அவர்கள் வீட்டில் சி.பி.ஐ. ரெய்டுக்குச் சென்றுள்ளனர். இந்த சோதனை இங்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நடைபெறுகிறது'' என்றவர்,


''வெளிநாட்டுக் கார்களை இறக்குமதி​செய்து பயன்படுத்தும்போது, அதற்கு இரண்டு வகையில் வரி விதிக்கப்​படுகிறது. புதிய கார்களை வாங்கிப் பயன்படுத்தினால் அதற்கு ஒரு வரியும், ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கார்​களை வாங்குவதற்கு ஒரு வகை வரியும் விதிக்கப்படுகிறது. ஆனால், இங்குள்​ளவர்கள் புதிய கார்களின் ஆவணங்களைத் திருத்திவிட்டு, பழைய கார்கள் என்று வரி ஏய்ப்பு செய்வார்கள்.


 தமிழகத்தில் இப்படிப் போலியாக ஆவணங்களைத் திருத்தி, கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற காரியங்களுக்கு உடந்தையாக இருந்த ஒருவர், முன்பு விமானநிலையத்தில் மக்கள் தொடர்பாளராக இருந்தவர். அதன்பிறகு, வருவாய் புலனாய்வுத் துறை மூத்த அதிகாரியாகப் பணியாற்றினார். அமலாக்கத் துறை ஆணையராக இருந்த இன்னொருவரின் பெயரும் இந்த விவகாரத்தில் அடிபடுகிறது. அவர்களிடமும் விசாரணை நடத்தப்படும். இந்தச் சோதனையை அடுத்து, மு.க.ஸ்டாலினின் குடும்பத்தினரிடம் விசாரணை செய்யப்படும். வரி ஏய்ப்பு செய்திருந்தால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்'' என்றனர்.

ஆனால், ரெய்டு நடத்திய சி.பி.ஐ., ஸ்டாலின் குடும்பத்தினருக்கு உள்ள தொழில் தொடர்புகள், சொத்துக்கள் பற்றிய பல முக்கிய ஆவணங்களையும் அள்ளிச்சென்றதாகச் சொல்கிறார்கள்.  

சி.பி.ஐ. ரெய்டு நடந்தபோது, காலையில் நடைப்பயிற்சிக்காக முன்னாள் மேயர் மா.சுப்பிர​மணியனுடன் ஸ்டாலின் வெளியில் சென்றிருந்தார். தகவல் தெரிந்த தி.மு.க. தொண்டர்கள் ஸ்டாலினின் வீட்டுக்கு முன் திரண்டனர். அவர்கள் வெளியில் இருந்தபடியே 'சி.பி.ஐ. நாயே வெளியே போ’ என்றும் 'காங்கிரஸ் அரசின் பழிவாங்கும் நடவடிக்கை ஒழிக’ என்றும் கோஷங்களை எழுப்பினர்.


அந்தச் சமயத்தில் அங்கு வந்த ஸ்டாலினைப் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து, 'இதைப் பழிவாங்கும் நடவடிக்கையாகப் பார்க்கிறீர்களா?’ என்றனர்.

''அதுதான் நீங்களே சொல்லி விட்டீர்களே. அப்புறம் என்ன? இது பழிவாங்கும் நடவடிக்கை​தான்'' என்றார் கோபத்துடன்.

தகவல் அறிந்து துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி ஆகியோரும் ஸ்டாலின் வீட்டுக்கு வந்தனர். ரெய்டு, அதிகாலையில் நடந்ததால், அனைவரையும் உடற்பயிற்சி ஆடைகளில் பார்க்க முடிந்தது. செல்வியும் உடற்பயிற்சி ஆடையிலேயே வந்திருந்தார். இரண்டரை மணி நேர ரெய்டை முடித்துக் கொண்டு சி.பி.ஐ அதிகாரிகள் வெளியே வந்தபோது, ஏற்கெனவே கொதித்துப்போய் இருந்த தி.மு.க. தொண்டர்கள் கோஷம் எழுப்பியதுடன் அதிகாரிகளின் கார்களையும் தாக்கினர். மிகவும் ரகசியமாக வந்திருந்ததால், போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

சோதனை நடந்துகொண்டிருந்தபோதே, சி.பி.ஐ-யின் இந்தச் செயல்பாடுகளைக் கண்டித்து பி.ஜே.பி-யும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அறிக்கை விட்டன. ஆச்சரியமளிக்கும் வகையில் ப.சிதம்பரமும் சி.பி.ஐ-யின் இந்தச் செயல்பாடு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று பேட்டி கொடுத்தார்.

சிறிது நேரத்தில், சி.பி.ஐ. தன் பங்குக்கு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் ''33 கார்​களைப் பற்றி புகார்கள் வந்ததன் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. மூத்த வருவாய் புலனாய்வு அதிகாரி ஒருவர் மீதும் இறக்குமதியாளர் ஒருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறும்'' என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

காரில் ஆரம்பித்திருக்கிறார்கள். விளைவு, வேகமாகத்​தான் இருக்கும்.

ஜோ.ஸ்டாலின்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

thanx - vikatan 

 readers views

1. ஒழுங்காக வரியை கட்டி எடுத்தால், வருமான வழிமுறையை காட்டனும்... இப்ப மாட்டி கொண்டு, அடுத்தவன் மீது பழியை போட்டு தப்பித்து கொள்வார்கள்.... இந்த போலி பகட்டெல்லாம் ரொம்ப காலம் நிற்காதுங்க....

2. பழிவாங்கு நடவடிக்கையாகவே இருக்கட்டும். வரி ஏய்ப்பு செய்து வெளினாடு கார்களை வாங்குவது தவறுதானே. அதுவுமில்லாம் வெளினாட்டு கார்கள் வாங்கும் அளவுக்கு என்ன சம்பாத்தியம் ஸ்டாலினுக்கு? ஜெ வின் புடவை, செருப்புக்கு குதியாய் குதித்தவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?

உங்ககிட்ட தான் கார் கம்பெனியையே வாங்கு அளவுக்கு பணம் இருக்கே,அப்புறம் எதுக்கு இந்த மோசடி வேலை?

3. ஒழுங்காகப் படித்துப் பட்டமும் பெற்று , சுயமாகத் தொழில் செய்தும் தன் வாழ்நாளில் ஒரு சராசரி இந்தியன் சட்டத்திற்கும் உட்பட்டு வரிகளை முறையாகச் செலுத்திய பின் ஒரு வீடோ அல்லது இரண்டு வீடுகளோ கூடவே ஒன்றிரண்டு கார்களோ தான் வாங்க முடியும் ! ஆனால் இந்தத் திருட்டுக் கும்பலைச் சேர்ந்த குஞ்சு குளுவான்கள் கூட தலைக்கு ஆயிரம் கோடிச் சொத்து, பங்களா , விலைஉயர்ந்த வெளிநாட்டுக் கார்கள் , வருடத்தில் 45 அல்லது 60 நாள் வெளினாட்டு உல்லாசப் பயணங்கள் , சின்னத் தலைவலிக்குக் கூட லண்டனில் சிகித்சை , பத்து லக்ஷம் சதுர அடிக்குக் குறையாமல் அம்பா கிம்பா போன்ற லம்பா மால்கள் , ஹோட்டல்கள் , உட்கார்ந்தது தின்றழித்தால் ஒரு நூறு தலை முறைக்கும் சொத்துக்கள் ! அப்பப்பா ! இந்தத் திருட்டுக் கும்பலைக் கண்டிக்கத் தவறினால் கூட பரவாயில்லை ! ஆனால் இவர்கள் பின்னால் கண்ணை மூடிக் கொண்டு சுய மரியாதையையும் விட்டு விட்டு இன்னமும் அலையும் கழகக் கண்மணிகளை நினைத்தால் தான் தமிழ் நாட்டின் தலைவிதியை நினைத்துக் கவலையாக இருக்கிறது !

4. இன்னுமா இவங்களை நம்புறீங்க சும்மா இருங்க இப்பவே கண்ணை கட்டுது இனிதான் இருக்கு செம காமெடி திராவிட இனமே இனிமே உனக்கு நல்ல நேரம்தான்