Showing posts with label உனக்கென்ன வேணும் சொல்லு (2015)-சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label உனக்கென்ன வேணும் சொல்லு (2015)-சினிமா விமர்சனம். Show all posts

Saturday, September 26, 2015

உனக்கென்ன வேணும் சொல்லு (2015)-சினிமா விமர்சனம்

நடிகர் : தீபக் பரமேஷ்
நடிகை :ஜாக்குலின் பிரகாஷ்
இயக்குனர் :ஸ்ரீநாத் ராமலிங்கம்
இசை :சிவா சரவணன்
ஓளிப்பதிவு :மனீஷ் மூர்த்தி
நாயகன் தீபக்கும், நாயகி ஜாக்லினும் திருமணம் செய்துகொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இதனால், ஜாக்லின் கர்ப்பமடைகிறாள். ஜாக்லின் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது, அந்த குழந்தையிடம் பேசும் தீபக்கும், ஜாக்லினும் உன்னை நாங்கள் கூடவே அருகிலிருந்து பார்த்துக் கொள்வோம் என்று கூறுகின்றனர். இவர்களது பாசத்தினால் அந்த குழந்தை வயிற்றில் நன்றாக வளர்ந்து வருகிறது. 

அந்த சமயத்தில் தீபக்குக்கு வேலை பறிபோகிறது. எனவே, ஜாக்லினை தனியாக விட்டுவிட்டு வேலை தேடி வெளிநாடு செல்கிறார் தீபக். வெளிநாடு சென்ற சமயத்தில் ஜாக்லின் குழந்தையை பெற்றெடுக்கவே, தீபக் இல்லாமல் குழந்தையை தனியாக வளர்த்தால் பிரச்சினை ஏற்படும் என்று தோழி பயமுறுத்த, அந்த குழந்தையை அனாதை ஆசிரமத்தில் சேர்க்கின்றனர். 

இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து குழந்தையை பார்க்க ஆவலுடன் திரும்பி வருகிறார் தீபக். ஆனால், ஜாக்லின் அந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறி அவனிடம் மறைக்கிறாள். இதனால், இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகிறார்கள். 

இதன்பிறகு, ஜாக்லின், குணாலன் மோகனை திருமணம் செய்துகொண்டு வெளிநாடு செல்கிறாள். ஜாக்குலினுக்கு 8 வயதில் மகன் உள்ள நிலையில் அந்த சிறுவனுக்கு ஒரு விநோத நோய் வருகிறது. அதை குணப்படுத்த சென்னைக்கு திரும்ப வேண்டிய சூழ்நிலை வருகிறது. 

சென்னைக்கு தனது கணவருடன் வரும் ஜாக்குலின், தீபக்குடன் தான் இருந்த வீட்டிலேயே தங்குகிறாள். அந்த வீட்டில் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி இவர்களை பயமுறுத்துகிறது. இதே போன்று, தீபக்கையும் ஒரு அமானுஷ்ய சக்தி பயமுறுத்துகிறது. இதனால் கிறிஸ்துவ போதகரான மைம் கோபி மூலம் அந்த ஆவி யார் என்பது அறிய முற்படுகிறார்கள். 

பின்னர் தீபக் மற்றும் ஜாக்லினால் கைவிடப்பட்ட அந்த குழந்தையின் ஆவிதான் அது என்பது அவர்களுக்கு தெரியவருகிறது. இந்த குழந்தை இவர்களுடன் சேர்ந்து வாழ விரும்புகிறது. இதற்காக இவர்களை கொல்ல முயற்சி செய்கிறது. 

இறுதியில் அந்த ஆவி விரட்டப்பட்டதா? என்ன ஆனது என்பதே மீதிக்கதை. 

தீபக் பரமேஷ், பாசத்துக்காக ஏங்கும் அப்பாவாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதலியிடம் கோபம் கொள்வதும், குழந்தையை நினைத்து உருகுவதும் என உணர்ச்சிபூர்வமான நடிப்பை காட்டியிருக்கிறார். ஜாக்லின் பிரகாஷ் அவசரப்பட்டதால் உருவான குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் காட்சியில் இன்றைய வாழ்க்கை மாற்றத்தை அப்படியே படம் பிடித்து காட்டுவதுபோல் இருக்கிறது. 

ஆவியை விரட்ட வரும் மைம் கோபி பயமுறுத்துகிறார். குணாலன் மோகன், மோர்ணா அனிதா ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பேயாக வரும் சிறுமி, அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறது. குழந்தை உலகத்துக்கு சென்று இவள் பேசும் ஒவ்வொரு வசனமும் ஒரு குழந்தையின் ஏக்கத்தை நம் கண்முன்னே காட்டியிருக்கிறது. 

ஒரு திகில் படத்துக்குண்டான காட்சிகளை மிகப் பொருத்தமாக அமைத்து மிரள வைத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம். ஆவியிடம் காட்டிய அக்கறையை கதையின் வேகத்திலும் காட்டியிருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். என்றாலும், இன்றைய நாகரீகத்தின் வளர்ச்சியில் எப்படி ஒரு குழந்தையின் கனவு அழிக்கப்படுகிறது என்பதை மிகவும் யதார்த்தமாக காட்டியிருக்கிறார். 

மனீஷ் மூர்த்தியின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. சிவசரவணனின் இசையும் மிரட்டுகிறது. 

மொத்தத்தில் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.

thanx-maalaimalar