
அபார சக்தி கொண்ட வேதாள தேசத்திடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் சாமான்ய மக்களை விடுவிக்க முற்படும் நாயகனின் போராட்டம்தான் ‘புலி’யின் கதை.
நதி வெள்ளத்தில் அடித்து வரும் ஒரு குழந்தையை எடுத்துத் தன் மகனாக வளர்க்கிறார், பிரபு. அந்தக் குழந்தைதான் மருதீரன் (விஜய்). பிரபு வசிக்கும் பகுதி வேதாள தேசத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. வேதாள இனமோ சாதாரண மனிதர்களைவிடப் பல மடங்கு சக்தி வாய்ந்தவர்கள்.
அடர்ந்த காட்டுக்கு நடுவே கோட்டை கொத்தளத்துடன் இருக்கிறது வேதாள தேசம். அதை ஆட்சி செய்பவர் யவன ராணி (ஸ்ரீதேவி). அந்த தேசமே தளபதி ஜலதரங்கன் (சுதீப்) கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
சிறு வயது முதல் பழகிய பவளவல்லியுடன் (ஸ்ருதி ஹாசன்) மருதீரனுக் குக் காதல் பூக்கிறது. இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அப்போது பவளவல்லி வேதாள தேசத்து வீரர்களால் கடத்திச் செல்லப் படுகிறாள். மனைவியை மீட்க நண்பர்களுடன் புறப்படுகிறான் மருதீரன். வேதாளக் கோட்டையை அவனால் நெருங்க முடிந்ததா? மாய சக்தி கொண்ட யவன ராணியையும் தளபதியையும் மீறி அவனால் மீட்க முடிந்ததா?
தொடக்கத்தில், வேதாள தேசத்திலிருந்து ஒரு வீரன் வந்து சாமானிய மக்களை மிரட்டுகிறான். எல்லோரும் பயந்து நடுங்கும் நேரத்தில் நாயகன் விஜய் பிரவேசிக்கிறார். விஜய் அவனைத் துரத்த, அவன் ஓடுகிறான். விடாமல் துரத்திப் பிடிக்கும் விஜய் அந்த வீரனை நையப்புடைப்பார் என்று பார்த்தால் அவன் காலில் விழுந்து கெஞ்சுகிறார். இன் னொரு காட்சியில் நான்கு வேதாளங்களை அடித்து விரட்டுகிறார். அப்புறம் பார்த்தால் அது காதலியைக் கவர்வதற்கான நாடகமாம்!
வரலாற்றுப் பின்னணியில் அங்கதச் சுவையுடன் கதை சொல்லும் இயக்குநர் சிம்பு தேவனின் முத்திரை யைக் காட்டும் காட்சிகள் இவை. விஜய் எப்போது வீறு கொண்டு எழுவார் என்னும் எதிர்பார்ப்பையும் இவை உருவாக்கி விடுகின்றன.
மேற்கொண்டு சிம்புதேவனின் படமாகவும் இல்லாமல், விஜய்யின் படமாகவும் இல்லாமல் நகருவதுதான் துரதிருஷ்டம். ஃபேண்டஸி வகை கதைக் களமும், கதை நகர்ந்துசெல்லும் சூழலும் ஆவலைத் தூண்டுகின்றன. ஆனால், அழுத்தமான காட்சிகளும், விறுவிறுப்பான திருப்பங்களும் இல்லாத திரைக்கதை சோர்வை ஏற்படுத்துகிறது.
மலைக் கிராமம், குள்ள மனிதர்கள் வாழும் இடம், வேதாளக் கோட்டை ஆகிய இடங்களில் நாம் சந்திக்கும் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் கதைக்குள் நம்மை ஈர்க்கவில்லை. ஸ்ருதி கடத்தப்பட்ட அடுத்த நொடியிலிருந்து படம் வேகம் எடுத்திருக்க வேண்டும். ஆனால் எடுக்கவில்லை. நாயகன் மருதீரனுக்குப் பதற்றம் தொற்றிக்கொள்ளும் என்று பார்த்தால், அவர் மிகவும் நிதானமாகச் செயல்படுகிறார். பவளவல்லியைக் கடத்திச் சென்ற யவன ராணியும் அவரைக் கட்டிப்போட்டு யாகம் வளர்த்து பலிகொடுக்க நாள் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
ஃபேண்டஸி படங்களில் வியப்பு ஏற்படுத்துவது முக்கியம். நம்பகமான லாஜிக்குகளை உருவாக்க வேண்டியதும் முக்கியம். இரண்டுமே படத்தில் போதிய அளவு இல்லை. பேசும் ராட்சத ஆமை, ஒற்றைக் கண் வேதாளம், பறந்து வரும் ராணி என்றெல்லாம் இருந்தாலும் எதுவும் நம்மை வியப்பூட்டவில்லை. வேதாளக் கோட்டைக்குச் செல்லும் முயற்சியை ஃபேண்டஸியும் சாகசமும் கலந்த விறுவிறுப்பான பயணமாக மாற்றியிருக்கலாம். இரண்டும் இல்லாமல் எதிர்பார்க்கக்கூடிய திருப்பங்களுடன் நகர் கிறது திரைக்கதை. விஜய்யின் பின்னணியை வெளிப் படுத்தும் இடத்திலும் போதிய தாக்கம் ஏற்படவில்லை.
வசனங்களில் சமகால வாடை அதிகம். ‘மூடினு இரு’, ‘மொக்கை’ என்பன போன்ற வசனங்கள் வருகின்றன. குள்ளர் தேசத்தைச் சேர்ந்தவர்களின் பேச்சில் நெல்லைத் தமிழ் வாடை.
விஜய் படங்களில் பொதுவாக காமெடி நன்றாக இருக்கும். சிம்புதேவனும் நகைச்சுவைக்குப் பேர்போன வர்தான். ஆனால் இதில் காமெடியும் எடுபடவில்லை.
உடைகளைத் தவிர விஜய்யிடம் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. மருதீரனாக வரும் விஜய்யின் தோற்றத்தைக் காட்டிலும் அப்பா விஜய்யின் தோற்றம், வசனங்கள் பரவாயில்லை.
தமிழில் ஸ்ரீதேவியின் மறுபிரவேசம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அவரது உடைகளில் கம்பீரம் மிளிர்கிறது. திகட்டவைக்கும் ஒப்பனை, வலுவற்ற பாத்திரப் படைப்பு.
ஸ்ருதி ஹாசன், இளவரசி ஹன்சிகா இருவரும் திரையில் அழகைக் கூட்டவே வந்துசெல்கிறார்கள். ஸ்ருதியின் நடனங்கள் அருமை. சாமானிய மனிதர்களில் ஒருவராக வரும் ஸ்ருதிக்கு ஏன் இவ்வளவு மிகையான ஒப்பனை?
பிரபு, தம்பி ராமையா, ஆடுகளம் நரேன், சுதீப் ஆகியோரை இன்னும் நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம்.
கிராஃபிக்ஸ் நன்றாக உள்ளது. கலை இயக்குநர் முத்துராஜின் உழைப்பு, நட்ராஜின் ஒளிப்பதிவு, தேவிஸ்ரீ பிரசாத் இசை ஆகியவை படத்துக்கு வலுவூட்டும் அம்சங்கள். ‘ஏண்டி ஏண்டி’, ‘ஜிங்கிலியா’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.
திறமையும் வசீகரமும் கொண்ட நட்சத்திரங்கள், கற்பனைக்கு இடமளிக்கும் கதையமைப்பு ஆகியவற்றை வைத்துக்கொண்டு பிரமாதப் படுத்தியிருக்கக்கூடிய வாய்ப்பை இயக்குநர் தவறவிட்டிருக்கிறார். சில காட்சிகளைக் குழந்தைகள் ரசிக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.
thanx-thehindu
- BharanidharanWorst movie of this yeara day ago(2) · (0)reply (0)
- பபொ.ஜெயப்பிரகாஷ்என்னா குறை இருக்கு என்று கூறும் உங்களுக்கு ஒரு அட்வைஷ் 1) மூன்று வருடம் கிராஃபிக்ஸ் செய்து ஒரு தெலுங்கு படத்தை(பாகுபலி) தமிழில் டப் செய்து வெளியிட்டால் அதை நம் விமர்ச்சர்கள் வெற்றி படம் என்பார்கள். 2) ஆனால் ஏழு மாதம் கிராஃபிக்ஸ் செய்து ஒரு தமிழ் படத்தை(புலி) தமிழிலேயே வெளியிட்டால் அதை நம் விமர்ச்சர்கள் குறையை மட்டும் கூறுவார்கள். அதுமட்டுமின்றி படம் தோல்வி என கூறீவிடுவார்கள். நம் தமிழனுக்கு மற்ற மொழி படங்களில் உள்ள ஈர்ப்பு நம் தமிழ் படங்களில் இல்லையே என்பது வருத்தமாக உள்ளது.a day ago
- SSARAVANAAAபடம் முதல் அரை மணி நேரம் படு மொக்கைய இருக்கும் , அப்பறம் அதுவே பழகிடும்a day agoPoints990
- Kkilikkaaduமிக அருமையான பொழுது போக்கு படம்..அனைவரும் பார்க்கவேண்டிய படம்..குழந்தைகள் நன்றாக ரசிக்கிறார்கள்..குடும்பத்துடன் போயி பாருங்க தியேட்டர்ல..மிஸ் பண்ணீடாதீங்க..இப்படி விமர்சகர்கள் சொல்ல மாட்டார்கள்..பொதுமக்கள் பார்த்து உண்மையை உணர வேண்டும்..2 days agoPoints3580
- BBBaskar Baskarசிம்பு தேவன் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து இருக்கலாம்... விஜய் இந்த படத்தில் அப்பா விஜய் போல வசனம் பேசி இருக்கலாம் .... லோக்கல் தமிழ் பேசியதால படம் கொஞ்சம் சுமார் தான்......ஆனால் அழகான கதை அம்சம் ....சில நாட்களுக்கு பின்னர் ஹரி - பார்ட்டர் திரைபடத்தின் முன்னோட்டம் போல இருந்தது .... படம் ஓ கே2 days agoPoints1160
- Ssoundarrajanடைட்டில் வைபதில் கவனித்திருக்கவேண்டும். என்னைக் கேட் டால் வேதாலயுலகம் வைக்கலாம்2 days ago
- NNathaNஉங்கள மாதிரி ஆளுங்க இருந்தா தமிழ் சினிமா உறுபுடும். இதையே வேற மொழில எடுத்து இருந்தா ஆஹா ஓஹோன்னு பாராட்டி இருப்பிங்க. அது குழந்தைகளுக்கான மற்றும் குடும்பத்துக்கான படம்னு தான சொல்லிருதாங்க. இந்த காலத்துல இது மாதிரி சினிமா எடுக்க ஒரு தில் வேணும் அத இவங்க முயற்சி பண்ணிருகாங்க. எடுத்த எடுப்புலயே 100% ஹிட் படம் குடுக்க முடியாது அத மொதல்ல தெரிஞ்சுக்குங்க. இது மாதிரி விமர்சனம் வந்த இனி எவன் இந்த மாதிரி படம் எடுக்க முன் வருவான். பாராட்ட தெரியலைன கூட கொஞ்சம் படம் எடுத்த திறமைய மதிக்க தெரிஞ்சுக்குங்க. குழந்தை கிட்ட கேளுங்க இந்த படத்த பத்தி அவங்க சொல்லுவாங்க விமர்சனம் அத விட்டுட்டு குறை சொல்றதுக்கு முன்னாடி வந்து நிக்குறிங்க.2 days agoPoints490
- NNarmadhaதிரு. சிம்புதேவன் '23ம் புலிகேசிக்கு' பிறகு நல்ல திரைப்படம் கொடுக்கவில்லையே என்று "புலி" படம் பற்றி முதல் செய்தி வந்தபோதே யோசித்தேன். நான் பயந்தது போலவே நடந்துவிட்டது. மிகவும் வருத்தமாக இருக்கிறது. இயக்குனருக்கு தான் தெரியவில்லை, திரு. விஜய் அவர்களுக்குமா தன் அபிமான ரசிகர்கள் தன்னிடம் இருந்து என்ன மாதிரி கதை மற்றும் நடிப்பை எதிர்பார்ப்பார்கள் என்று தெரியவில்லை? முழு படம் முடிந்தபின் தானே பின்னணி குரல் கொடுத்திருப்பீர்கள் திரு. விஜய்? அப்பொழுதே திரைக்கதை சரியில்லையே என்று நீங்கள் யோசிக்கவில்லையா? ஹாரி போட்டர் படங்கள் போல மாயாஜாலத்தில் அசத்தியிருப்பீர்கள் என்று எதிர்பார்த்தால் இப்படி ஏமாற்றிவிட்டீர்களே!3 days agoPoints780
- Jjayarekhaஅதுதான் அவங்களே! இது குழந்தைங்களுக்கான படம் என்று விளம்பர படுத்திவிட்டார்கள். இதை பெரியவர்கள் பார்த்துவிட்டு,படத்துக்கு எதிராக கருத்து கூறாதீர்! "ஹூலி வூட்" ஹீரோவா இருந்த விஜய்,இந்த படத்தின் மூலம் "TOOLY WOOD" ஹீரோவாக வலம் வந்துயிருகிறார். மொத்தத்தில் இந்த படமோ குழந்தைகளுக்கான "குட்டி சுட்டி" - இதற்க்கு எதிராக கூறாதீர் வரிந்து கட்டி!!3 days ago