Sunday, June 01, 2014

எழுத்தாளன் மனைவி - என்.சொக்கன்- சிறுகதை @ ஆனந்த விகடன்(ஜூன் 2008)

காலையில் ஆ·பீசுக்கு வந்து உட்கார்ந்து தினமணியைப் பிரிப்பதற்குள் அதற்காகவே காத்திருந்ததுபோல் ·போன் வந்தது. எதிர்முனையில் உச்ச சத்தத்தில் ‘ஹலாவ்’ என்கிற குரலைக் கேட்டதும் தெரிந்துவிட்டது. சங்கரலிங்கம்.
‘சொல்லுங்க சார், நான் விஜயன்தான் பேசறேன்’
‘விஜயன் சார், விஜயன் சார்’, ஆக்ஸிஜனுக்குத் திணறுகிறவர்போல் எதிர்முனையில் சங்கரலிங்கம் திக்குமுக்காடினார், ‘என்னாச்சு சார், ஏன் ஒரு மாதிரி பேசறீங்க ?’ பேப்பரை மேஜைமேல் போட்டுவிட்டு ரிசீவரை சரியாய்ப் பிடித்துக்கொண்டேன்.
‘சந்தோஷம் சார், சந்தோஷம், ஆனந்தக் கண்நீர்’ என்றார் சங்கரலிங்கம். அந்தக் காலத்தில் அரசியல் தலைவர்களையும், கல்யாண மாப்பிள்ளை – பெண்களையும் அறுசீர் விருத்தம் எழுதிப் புகழ்ந்த பழக்கத்தில் அடிக்கடி இப்படிதான் அளவுக்கதிகமாய் உணர்ச்சிவசப்படுவார், உட்காரவைத்து ஒரு சோடாவோ, ஐம்பது பைசாவுக்குத் துளிர் வெற்றிலையோ வாங்கிக்கொடுத்தால் பழைய நிலைக்குத் திரும்பி, ‘ஓ போடு-ன்னு ஒருத்தி ஆடறாளே, நன்னாவா இருக்கா ?’ என்று நாட்டுக்குத் அத்தியாவசியமானதைப் பேச ஆரம்பித்துவிடுவார்.
சங்கரலிங்கப் பெரியவருக்கு அறுபத்தெட்டு வயதில் இப்படி ஆனந்தக் கண்நீர் வருவதற்கான காரணங்களை உள்மனதில் கணக்குப்போட்டுப்பார்த்தேன், ஐந்து வாரிசுகளுக்கும் கல்யாணம் பண்ணிவைத்துவிட்டார், மகன்களெல்லாம் அமெரிக்காவில் பிட்ஸா மென்றுகொண்டு மாதந்தவறாமல் அரை டிராயரோடு காரின்மேல் சாய்ந்த புகைப்படங்களை ஈமெயிலில் அனுப்பிக்கொண்டு சௌக்கியமாய் இருக்கிறார்கள், மகள்கள் வெளியூரில் பெரிய குடும்பங்களின் நல்ல மருமகள்களாய் டிவி சீரியல்கள் பார்த்துக்கொண்டு வேலைக்காரிகளை விரட்டியபடி குண்டாகிக்கொண்டிருக்கிறார்கள், ஒருவேளை அவர்களில் யாருக்காவது குழந்தை பிறந்திருக்கிறதோ ? அவருடைய மகள்களில் ஒருத்தி பிரசவத்துக்காக தாய்வீட்டுக்கு வந்திருந்தாகத்தான் ஞாபகம், ஆனால் அது போன வருஷம் இல்லையோ, வயோதிக வாலிபர்போல் இப்போது என்ன புதிதாய் சந்தோஷம் இவருக்கு ?
என் குழப்பத்தை அதிகம் பண்ணுகிறவர்போல் அவர் இன்னும் பரவசமாய் பேசிக்கொண்டிருந்தார், ‘விஜயன் சார், உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவேன், எனக்கு பெரிய கௌரவத்தைத் தேடிக்கொடுத்துட்டேள் !’
நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன், ‘என்ன சார் சொல்றீங்க ?’, தேடிப் பிடித்துக் கொடுப்பதற்கு இவரிடம் எந்தக் காலத்திலும் கௌரவம் இருந்ததாய்த் தெரியவில்லை – என்னைப்போலவேதான் இவரும், சாதாரண நபர் ! (அல்லது அவரைப்போலவேதான் நானும், சாதாரண நபன் !)
அவர் சற்றே நிதானமாகி தெளிவாய்ப் பேசினார், ‘நீங்க செலக்ட் பண்ணிக்கொடுத்த புக்குக்கு நேஷனல் அவார்டு கெடச்சிருக்கு சார், இந்தியாவிலேயே பெஸ்ட் புத்தகமா தேர்ந்தெடுத்திருக்காங்க !’
எனக்கு குப்பென்று மூச்சடைப்பதுபோல் இருந்தது, ‘எ – எந்த புத்தகம் சார் ?’ என்றேன், அவர் தவறவிட்ட பதட்டமெல்லாம் டெலி·போன் வயர்கள்வழியே பயணமாகி என்னைத் தொற்றிக்கொண்டிருந்தது.
கவியரங்கத்தில் கவிதை வாசிக்கிற தோரணையில் அவர் நிறுத்தி நிதானமாய்ச் சொன்னார். ‘நினைவோடைகளில் நீரில்லை’, ஒரு சிறு இடைவெளிவிட்டு, ‘நினைவிருக்கா சார் ?’ என்றார்.
எப்படி மறக்கமுடியும் ? நான் உட்கார்ந்த நிலையிலிருந்து அனிச்சையாய் எழுந்துகொண்டேன், ‘நிஜமாத்தான் சொல்றீங்களா சார் ?’ என்றேன், அந்தச் செய்தியை என்னால் கொஞ்சமும் நம்பமுடியவில்லை.
‘அட ஆமாம் சார், நானும் உங்களை மாதிரியேதான், நியூஸ் கேட்டதும் ஆடிப் போய்ட்டேன், சுத்தமா நம்பிக்கையே வரலை, டிவியைப்போட்டு பைத்தியம் பிடிச்சமாதிரி ஒவ்வொரு சேனலா மாத்தறேன், என் நேரம் – எதிலயும் நியூஸ் இல்லை, அப்புறம் ரெண்டு மூணு பேருக்கு ·போன் பண்ணி விசாரிச்சுட்டே இருக்கேன் – டெல்லியில இருந்து தந்தி வந்துடுச்சு, நம்ம புக்குக்குதான் ·பர்ஸ்ட் ப்ரைஸ், நம்ம பதிப்பகத்துக்கு தங்கப்பேனா, எழுத்தாளருக்கு ஒன்றரை லட்ச ரூபாய் ரொக்கப்பணம், இந்தியா முழுக்க இருபத்தஞ்சு லாங்வேஜ்ல பப்ளிஷ் ரைட்ஸ் .. இன்னும் என்னென்னவோ’, அவர் கனவுபோல் பேசிக்கொண்டேபோனார், ‘பணமெல்லாம் கிடக்கட்டும் சார், நம்ம புஸ்தகம் தேசிய விருது வாங்கியிருக்குன்னா சும்மாவா ? எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா ?’ என்றார். வியாபாரிக்கும், இலக்கியவாதிக்கும் இடையே அவராடும் சுகமான ஊசலாட்டம் எனக்குப் பொறாமையாய் இருந்தது.
என்னுடைய மௌனத்தையும் அவர் தனது படபடவென்ற பேச்சால் நிரப்பினார், ‘நிஜமா, உங்களுக்குதான் சார் நான் தேங்க்ஸ் சொல்லணும், நீங்கதானே அந்த புக்கை செலக்ட் பண்ணிக் கொடுத்தீங்க !’, அவர் அதோடு நிறுத்தியிருக்கலாம், தொடர்ந்து, ‘அதோட ரைட்டர் உங்க ·ப்ரெண்டுன்னுதானே சொன்னீங்க ?’ என்றார் கேள்விக்குறியாய்.
அதற்குமேல் என்னால் பேசமுடியவில்லை, அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ·போனை வைத்துவிட்டேன், எதிர்முனையில் அவர் திகைத்துப்போய் திருதிருவென்று விழித்துக்கொண்டிருக்கக் கூடும் – அல்லது வேறு யாருக்காவது ·போன் பண்ணி, ‘நான் போட்ட புஸ்தகத்துக்கு நேஷனல் அவார்டு கெடச்சிருக்குய்யா ? ஜனாதிபதி கையால வாங்கப்போறேன்’ என்று பெருமையடிக்கத் துவங்கியிருக்கக்கூடும்.
எனக்குள் அந்தப் புத்தகத்தின் நினைவுகள் அலையலையாய் எழுந்து ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தன. உள்ளே உறங்கிக்கொண்டிருந்த அலைகளுக்கு இந்தப் பரிசு ஒரு தூண்டுதல், அவ்வளவுதான். இந்தப் பரிசு கிடைக்கவேண்டும் என்றில்லை, கிடைக்காமல் போயிருந்தால்கூட இந்த அலைகள் எழத் தொடங்கியிருக்கும் – அவற்றுக்குத் தேவை ஒரு சிறு பேச்சு, யதேச்சையான நினைவுப்பொறி, சிந்தனைத் தெறிப்பு, அதன்பிறகு அவற்றின் அசுர ராஜாங்கம்தான்.
வேலை செய்ய மனமில்லை, விமர்சனத்துக்காக வந்திருந்த நான்கு புத்தகங்களையும் ஓரமாய் ஒதுக்கிவைத்துவிட்டு, ஒரு சிகரெட் பிடித்துவரலாம் என்று மாடிக்குப்போனேன், வெய்யிலும், காற்றும் சமவிகிதத்தில் முகத்தைத் தாக்க வெகுநேரம் கையில் பற்றவைக்காத சிகரெட்டோடு நின்றபடியிருந்தேன். ‘நினைவோடைகளில் நீரில்லை’ என்று அழுத்தமான கறுப்பு வண்ணத்தில் தலைப்பிடப்பட்ட அந்தப் புத்தகத்தின் கையெழுத்துப்பிரதியைப்பார்த்த நாள் இன்றுபோல் நினைவிலிருந்தது.
சங்கரலிங்கம் சொல்வதுபோல் நான் ஒன்றும் அந்தப் புத்தகத்தை ஊர் உலகமெல்லாம் தேடிக்கொடுத்துவிடவில்லை – அதை எழுதிய எழுத்தாளர் சங்கரலிங்கத்தை நேரில்பார்த்து அந்த கையெழுத்துப் பிரதியைக் கொடுத்திருந்தார் – அவரும் வழக்கம்போல அதை ஆர்வமில்லாமல் மேஜைமேல் போட, அனுதினம் மேலேமேலே விழுகிற புத்தகங்களும் லெட்ஜர்களும் அதைக் கீழே தள்ள, கீழே விழுந்ததை நடக்கிற மனிதர்களும், பிரின்டிங் பிரஸ்ஸின் ராட்சஸ பேப்பர் கட்டுகளும் ஓரமாய் ஒதுக்க, சீக்கிரத்திலேயே அது குப்பையோடு குப்பையாய்க் கிடக்க ஆரம்பித்திருந்தது. நான் ஒருநாள் மதியம் ஆ·பீசில் வேலையில்லாமல் சங்கரலிங்கத்தைப் பார்க்கப்போக, அவருக்காக காத்திருந்த வேளையில் யதேச்சையாய் அந்தத் தொகுப்பு கண்ணில்பட்டது. அசாதாரணமான தலைப்பினால் கவரப்பட்டு வாசிக்க ஆரம்பித்தேன். கறுப்பு மையில் குண்டுகுண்டான எழுத்துக்கள், தெளிவான ஜெராக்ஸ், கண்வலியில்லாமல் படிக்கமுடிந்தது.
பத்திரிக்கை உதவி ஆசிரியன் என்கிறவன் எந்தப் பிறவியிலோ சுகித்துக்கொண்டிருந்த இணைப் பறவைகளில் ஒன்றைமட்டும் பிடிவாதமாய் குறிபார்த்துக் கொன்று, சபிக்கப்பட்டவன் என்பது என் அபிப்பிராயம். உப்புமாப் பத்திரிக்கைதான் என்றாலும் தமிழ்நாட்டில் இத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்களா என்கிற பிரம்மிப்பை உண்டுபண்ணும் அளவுக்கு தினம்தினம் கதைகள் வந்து குவியும். வருகிற கதைகளில் நூறுக்கு நாலு கதை தேறினால் அன்று அதிர்ஷ்டதினம். ஆனால் அந்த நாலு கதைகளில் கிடைக்கிற திருப்தியைப்போல பலமடங்கு தொந்தரவுகளை, மன உளைச்சலை, சோர்வை மீதமிருக்கிற தொன்னூற்றாறு சொதப்பல் கதைகளும் அள்ளித் தந்துவிடும். அதற்காக அவற்றை வாசிக்காமல் ஒதுக்கித் தள்ளவும்முடியாது – கடமை உணர்ச்சி குறுக்கிட்டு, ‘ஒரு அப்பாவி எழுத்தாளன் வயித்துல அடிக்கறியே, நீ உருப்படுவியா ?’ என்று கேள்விகேட்கும். வேறு வழியில்லாமல் கண்கள் செருக வெவ்வேறு விதமான கோழிக்கிறுக்கல்களை சகித்துக்கொண்டு, ‘ஹா என்று கத்தியபடி தலை சுக்குநூறானதுபோல் அதிர்ச்சிக்குள்ளானான் ராஜா’வையோ, ‘உன்னைப் பெத்து வளர்த்து படிக்கவெச்சதுக்கு இதுதானாடா நீ கொடுக்கும் பரிசு ?’ என்று பல யுகங்களாய் ஒரேமாதிரி வயிற்றிலடித்துக்கொண்டு அழுகிற தியாகத் தாயாரையோ வாசித்துக்கொண்டிருக்கவேண்டும்.
ஏதோ ஒரு சினிமாவில் கதாநாயகன் நூறு கோடியோ, ஆயிரம் கோடியோ மூன்று மாதத்துக்குள் பரபரவென்று செலவு செய்வான், அதனால் அவனுக்குப் பணம் என்கிற விஷயமே வெறுத்துப் போய்விடும் ! அதுபோலதான் எனக்கும் – கதை படிப்பது என்றாலே நாக்கில் சூடுபட்ட பூனைபோல் தலைதெறிக்க ஓடுகிற நிலையில் நான் இருந்தபோதுதான் ‘நினைவோடைகளில் நீரில்லை’ என்கிற அந்தத் தொகுப்பின் முதல் கதையை அவ்வளவாய் ஆர்வமில்லாமல் வாசித்தேன்.
தொகுப்பின் பெயர் மட்டுமல்ல, கதாசிரியரின் பெயரும் புதுமையாகவே இருந்தது – ‘சூட்சுமன்’, அவருடைய நிஜ பெயர் கிருஷ்ணமூர்த்தியோ, ராஜசேகரோ – சரியாய் நினைவில்லை, ஆனால் அந்தத் தொகுப்பிலிருந்த ஒவ்வொரு கதையும் என்னை அப்படியே உள்ளே இழுத்து சாப்பிட்டுவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். இத்தனைக்கும் அந்தக் கதைகளில் வேதங்கள், உபநிஷத்கள்போல உயர்ந்த அறிவுரைகளோ, மைல் நீளத்தில் தத்துவ விளக்கங்களோ இல்லை, அசரடிக்கும் மாய நடை இல்லை, புரியாத குழப்ப அலசல்கள் இல்லை, தரையிலிருந்து எப்போதும் பத்தடி உயரத்தில் நடக்கிற வித்தியாசமான கதாபாத்திரங்கள், வசனங்கள் இல்லை, வாசகனை மயக்கி ஏமாற்றும் காதல் இல்லை – சுருக்கமாய்ச் சொன்னால் யதார்த்தத்திலிருந்து விலகிய எதுவுமே இல்லை. நம்மோடு பக்கத்தில் உட்கார்ந்து பேசுவதுபோன்ற எளிய நடை, அன்றாடம் அக்கம்பக்கத்தில் நாம் பார்க்கிற பாத்திரங்கள், பிரச்சனைகள், ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் – ஆனால் அந்தக் கதைகளையெல்லாம் அவர் சொன்ன விதம்தான் அசரடித்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குள்ளும் புகுந்துகொண்டுவிட்டதுபோல் அவர்களின் மன ஓட்டங்களை தெள்ளத்தெளிவாய் எழுதியிருந்தார். அது மட்டுமில்லை, ஒரு துணிசோப்பு விளம்பரத்தில் சோப்போடு அதை உபயோகிக்கிற பெண்ணும் துணிக்குள் சென்று அழுக்கு நீங்குவதையெல்லாம் பார்வையிடுவாளே, அதுபோல வாசிக்கிறவர்களையும் கதாபாத்திரங்களோடு உலவவிட்டு கதையைப் படிக்கிறமாதிரி இல்லாமல், நாமே அனுபவிக்கிறமாதிரி செய்திருந்தார் சூட்சுமன்.
அன்றைக்கு ஒரு புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்த சங்கரலிங்கம் திரும்பி வருவதற்குள் அந்தப் புத்தகத்தை முழுக்க படித்துமுடித்துவிட்டேன். உண்மையைச் சொல்வதானால், முதல் கதையைப் படிக்க ஆரம்பித்தபிறகு, என்னால் நிறுத்தவே முடியவில்லை, தொகுப்பிலிருக்கிற ஒவ்வொன்றும் வெவ்வேறு கதைகள் என்கிறதையே என்னால் நம்பமுடியாதபடிக்கு எல்லாக் கதைகளுக்கிடையேயும் ஒரு மாய இழை ஓடிக்கொண்டிருப்பதாய்த் தோன்றியது. ஒன்றைப் படித்தால் அடுத்ததையும் படித்தாகவேண்டும் என்று யாரோ கொக்கிபோட்டு இழுப்பதுபோலிருந்தது. இன்னும், இன்னும், இன்னும் என்று படித்துக்கொண்டே இருந்தேன், தொகுப்பு முடியும்போது ‘அவ்வளவுதானா ?’ என்று ஒரு ஏமாற்றமும், வருத்தமும் எழுந்ததுபாருங்கள், இதைத்தான் திருவள்ளுவர் ‘உள்ளப்பிரிதல்’ என்று சொல்லியிருக்கவேண்டும் !
சங்கரலிங்கம் வந்தவுடன் அவரிடம் அந்த கையெழுத்துப் பிரதியை நீட்டினேன். ‘பிரமாதமா இருக்கு சார் ஒவ்வொரு கதையும், யார் இந்த சூட்சுமன் ?’ என்றேன்.
வெய்யிலில் வந்திருந்த அவர் வியர்வையோடு விழித்தார். ‘சத்தியமா எனக்குத் தெரியலை விஜயன் சார் !’ என்றார் பரிதாபமாய், ‘யாரோ வந்து கொடுத்துட்டுப் போனதா ஞாபகம், நல்லா இருக்கா ?’
நான் அவருக்கு பதில் சொல்லாமல் கடைசிப் பக்கத்தைத் திருப்பிப் பார்த்தேன், கோயம்பத்தூர் முகவரியும், தொலைபேசி எண்ணும் ரப்பர் ஸ்டாம்ப் முத்திரையாய். ‘நான் இந்த ரைட்டரோட பேசறேன் சார், நீங்க இந்த புத்தகத்தை அவசியம் பப்ளிஷ் பண்ணனும், அருமையான வொர்க்’ என்றேன். அவர், ‘ஆஹா !’ என்றார் பரவசமாய் – கௌரவ (சம்பளம் வாங்காத) ஆலோசகனாய் மாதமாதம் இவர்களுக்கு புத்தகம் தேர்ந்தெடுத்துக்கொடுப்பதற்கு இந்த மரியாதைகூட இல்லையென்றால் எப்படி !
ஸ்கூட்டரை விரட்டியபடி ஆ·பீசுக்குத் திரும்பியபோது இந்த எழுத்தாளரை என் பத்திரிக்கைக்கு தொடர்ந்து எழுதச்சொல்லவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டேன். இத்தனை பிரமாதமாய் எழுதுகிற ஆளை எந்த பிரபல இதழும் கண்டுகொள்ளவில்லை என்பது எனக்கு ஆழ்ந்த வருத்தமாய் இருந்தது.
அன்று இரவு தொலைபேசிக் கட்டணங்கள் பாதியாய்க் குறைந்தபிறகு கோயம்பத்தூருக்குத் தொலைபேசினேன். பத்துப் பதினைந்து மணியொலிகளுக்குப்பிறகு யாரோ எடுத்தார்கள், அது ஒரு மளிகைக்கடை என்று தெரிந்தது, கடை மூடுகிற அவசரத்தில் ‘யாருங்க வேணும் ?’ என்றபோது தூசி நெடியடிப்பதுபோலிருந்தது.
புத்தகத்தை ஓரக்கண்ணால் பார்த்தபடி அவருடைய பெயரைச் சொன்னேன், எதிர்முனைக்குத் தெரிந்திருக்கவில்லை, ‘சூட்சுமன்-னு கதையெல்லாம் எழுதுவாருங்களே’ என்றேன் ரொம்பகாலம் பழகியவன்போல்.
‘அட, அவரா ?’ என்று ஒரு சின்ன அதிர்ச்சியோடு கோவை மளிகைக்கடை ஸ்தம்பித்து நின்றது. சில விநாடிகள்பொறுத்து, ‘நீங்க விஷயம் தெரிஞ்சுதான் ·போன் பண்றீங்களா தெரியலை, அந்த மனுஷன் பாவம், போனவாரம் கேன்ஸர்ல போயிட்டார்’ என்று குரல் வந்தது.
நான் பதட்டத்தில் ·போனை நழுவவிட இருந்தேன், சரியாய்ப் பிடித்துக்கொண்டு, ‘என்ன சார் சொல்றீங்க ?’ என்றேன் இன்னும் அந்த செய்தியை ஜீரணிக்க முடியாதவனாய்.
‘ஆமா சார், முப்பது வயசுதான் சார் ஆச்சு அந்தாளுக்கு, ஆனா ரொம்ப நாளாவே அவருக்கு அந்த வியாதி இருந்ததுபோல, இதில கோயம்பத்தூருக்கும், மெட்ராசுக்கும் பஸ்ஸிலயும், ரயில்லயும் அலைச்சலா அலைஞ்சிட்டிருந்தாரா, போனமாசம் ரொம்ப முடியாமபோய் ஹாஸ்பிடல்ல சேர்த்தாங்க, கோமாவிலயே போயிட்டார் மனுஷன்’ என்றபடி உச்சுக்கொட்டினார் அந்த முதலாளியோ, தொழிலாளியோ, ‘வேணும்ன்னா அவங்க வீட்ல யாரையாச்சும் கூப்பிடட்டுமா ?’ என்றார் தொடர்ந்து.
‘வேண்டாம்’ என்றேன் அவசரமாய். நன்றி சொல்லி ·போனை வைத்துவிட்டேன்.
அதன்பிறகு நெடுநேரத்துக்கு என் படபடப்பு குறையவில்லை. வாழ்க்கையின் அபத்திரத்துக்கான சாட்சியைப் பார்த்துவிட்டவன்போல் விழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். இன்றைக்கு நான் சங்கரலிங்கம் சாரின் பிரஸ்ஸ¤க்குப் போகாமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது. எல்லோரும் ஒதுக்கித் தள்ளிய அந்தப் புத்தகம் ஏன் என் கண்ணில்மட்டும் படவேண்டும் ? அதை எழுதியவரோடு உடனே பேசவேண்டும் என்று எனக்கு ஏன் தோன்றவேண்டும் ? எல்லாமே அமானுஷ்யமாய் இருந்தது. நேரில் பார்த்ததில்லை என்றாலும் மதியம் முழுக்க என்னோடு எழுத்துக்களால் உறவாடின அந்த சூட்சும மனிதரை இழந்துவிட்ட வெறுமையில் அன்று இரவு எனக்குத் தூக்கமே வரவில்லை.
மறுநாள் காலை முதல் வேலையாய் சங்கரலிங்கம் சாரைப் பார்த்து அந்த புத்தகத்தின் பிரதியை வாங்கிக்கொண்டேன். ·போனில் பேசிய விபரம் சொன்னபோது அவர் ஏதும் சொல்லத் தோன்றாமல் வெறுமனே அமர்ந்திருந்தார். அந்தக் கதைகளை அவர் ஏற்கெனவே படித்திருந்தால், இந்த மரணச்செய்தி கேட்கையில் அவரும் ஒரு சொட்டுக் கண்நீராவது சிந்தியிருப்பார் என்று எனக்குத் தோன்றியது.
அன்றைக்கே அந்தத் தொகுப்பை மூன்று பிரதிகள் எடுத்துக்கொண்டேன். பத்திரிக்கை ஆ·பீசில், நண்பர்கள் சந்திப்பில், இலக்கியக் கூட்டங்களில் என்று கண்ணில்படுகிறவர்களிடமெல்லாம் அதில் ஒரு புத்தகத்தைக் கொடுத்து படிக்கும்படி கேட்டுக்கொண்டேன். இரண்டொரு நாட்களில் அவர்கள் புத்தகத்தைத் திருப்பிக்கொடுத்து சாதாரணமான வார்த்தைகளில் அதைப் பாராட்டுகையில், இதை எழுதியவர் புற்றுநோயால் இறந்துவிட்டார் என்கிற தகவலை என்னால் ஆனவரை இயல்பாகச் சொல்ல முயன்றேன். அவர்களின் அதிர்ச்சி கலந்த பரிதாப உணர்ச்சியில், திகைப்பில், சொல்வதறியாது தவிக்கும் நம்பமுடியாத முகபாவங்களிலெல்லாம் இந்தச் செய்தி என்னிடம் ·போன்வழியே வீசப்பட்டபோது நான் அடைந்த அதிர்ச்சியின் காயங்களை ஆற்றிக்கொண்டேன். இப்போது யோசித்துப்பார்க்கையில் இதையெல்லாம் ஏன் செய்தேன் என்று வேடிக்கையாகவும், வெட்கமாகவும்கூட இருக்கிறது. தனக்கிருந்த ஒரே அடையாளத்தையும் இழந்து அனாதையாகிவிட்ட அந்த சிறுகதைத் தொகுப்பின்மேல் எனக்கு ஏற்பட்ட கரிசன உணர்ச்சிதான் அதைப் பிறரோடு பகிர்ந்துகொண்டதற்குக் காரணமாய் இருந்திருக்கவேண்டும். என்னைப்போலவே அந்தத் தொகுப்பை பாசத்தோடு பார்க்கக்கூடியவர்களை இப்படி விநோதமான முறையில் தேடியிருக்கிறேனோ ?
அப்போதெல்லாம் வாரம் இரண்டுமுறையாவது சங்கரலிங்கம் சாருக்கு ·போன் செய்து தொகுப்பின் வேலைகளைப்பற்றி விசாரித்துக்கொண்டிருந்தேன். என் தொந்தரவு தாங்காமல் அவரும் சீக்கிரமே அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தார். சூட்சுமனின் மனைவியிடம் பேசி காபிரைட் அனுமதி பெற்று வருவதற்காக என்னையே கோயம்பத்தூருக்கு அனுப்பப் பார்த்தார். எனக்கு விருப்பம்தான் என்றாலும், நான் அதற்குத் தயாரில்லை என்று ஏனோ தோன்றியது. அப்புறம் சங்கரலிங்கம் சாருடைய சகலை பையனோ யாரோ போய்வந்தார்கள். அந்த அம்மாள் சரியாய்ப் பேசவில்லை என்றும், ஆனால் புத்தகம் வெளியிடுவதற்கு அனுமதி கொடுத்துவிட்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன்.
சென்னை புத்தகக் கண்காட்சியின்போது அந்தத் தொகுப்பு வெளிவந்தது. சுஜாதா ஒரு அருமையான முன்னுரை எழுதியிருந்தார். புத்தகம் கண்காட்சியில் கொஞ்சூண்டு விற்றது. சுயமாகவும், என் முயற்சியிலும் நிறைய பத்திரிக்கைகளில் விமர்சனங்களும் – தவறாத அடிக்குறிப்பாய் அதன் ஆசிரியரின் மரணச் செய்தியும் ·போட்டோவோடு வந்தது. இலக்கிய ரசிகர்கள் மெல்ல அதைத் தேடி வாங்க ஆரம்பித்தார்கள். முதல் பதிப்பு விற்றுத் தீர்ந்து, ரெண்டாம் பதிப்பு போட்டாயிற்று. சங்கரலிங்கம் சாருக்கும் சந்தோஷம், பரவலாய் அந்தப் புத்தகம் வாசித்து, பாராட்டப்பட்டதில் எனக்கும் சந்தோஷம். எல்லோரும் நிராகரித்த குழந்தையைக் கண்டெடுத்து வளர்த்து, அது பெரிய படிப்பு படித்து நிற்கும்போது சந்தோஷப்படுகிற தத்துத் தகப்பனைப்போல் என்னை உணர்ந்தேன் நான்.
அநேகமாய் சென்ற வருடத்தின் எல்லா இலக்கியப் போட்டிகளிலும் அந்தப் புத்தகம் கலந்துகொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். ‘மாம்பலம் டைம்ஸ்’ முதல் ‘மங்காத்தா மகிமை’வரை ஊரில் அச்சாகிற அத்தனை பத்திரிக்கைகளையும் எங்கள் ஆ·பீசில் வாங்குகிறார்கள், அதில் வருகிற எல்லா போட்டி அறிவிப்புகளையும் தேடிப்பிடித்து அவற்றுக்கு இந்தப் புத்தகத்தை அனுப்பும்படி சங்கரலிங்கம் சாரைத் தொல்லை பண்ணிக்கொண்டிருந்தேன். அவரும் சளைக்காத பொறுமையோடு இரண்டிரண்டு காப்பிகளாக அனுப்பிவைத்தார் – ஆனால் ஏனோ பரிசுதான் எங்கேயும் கிடைக்கவில்லை. தகுதியான புத்தகம் என்பதில் சந்தேகமில்லை, ஆனாலும் ஒவ்வொரு போட்டியிலும் இது தோற்கிறபோது யாரோ லாபி பண்ணி பரிசுகளை வாங்கிக்கொண்டு போய்விடுகிறார்கள் என்ற அழுத்தமான சந்தேகம் எனக்குள் எழுந்தது. இது விஷயமாய் நான் அடிக்கடி சங்கரலிங்கம் சாரிடம் பேசி(புலம்பி)க்கொண்டிருந்ததையும், புத்தகத்துக்கான ராயல்டி தொகை மூன்று மாதத்துக்கு ஒருமுறை கோயம்பத்தூருக்கு தவறாமல் அனுப்பப்படுகிறதா என்பதை அடிக்கடி சரிபார்த்துக்கொண்டிருந்ததையும் வைத்துதான் இந்த புத்தகத்தை எழுதிய சூட்சுமன் என் நண்பர் என்று ஊகித்திருக்கிறார் சங்கரலிங்கம் சார்.
அதெல்லாம் பழைய கதை, இப்போது இந்த புத்தகத்துக்கு தேசத்தின் உயர்ந்த விருது கிடைத்திருக்கிறது. இதுவரை அதற்குப் பரிசுகொடுக்காமல் நிராகரித்துவந்த எல்லார் முகத்திலும் அழுத்தமாய் ரெண்டு கோட் கரியைப் பூசிவிட்டதுபோல் உணர்ந்தேன். அந்தப் புத்தகத்தை நான் எழுதவில்லை, ஆனால் என்னுடைய புத்தகத்துக்குப் பரிசு கிடைத்திருந்தால்கூட இந்த அளவு பரவசப்பட்டிருப்பேனா என்பது சந்தேகம். இனம் புரியாத திருப்தியோ, நிம்மதியோ எனக்குள் பரவிக்கொண்டிருந்தது. பாதி முடிந்திருந்த சிகரெட்டை சுவற்றில் தேய்த்து அணைத்து குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு கீழே இறங்கிவந்தேன், அலமாரியில் இருந்த அந்தத் தொகுப்பைக் கையிலெடுத்து வாஞ்சையோடு ஒருமுறை தடவிக்கொடுத்தேன், முதல் பக்கத்தில் இன்றைய தேதியை எழுதி – ‘தேசிய விருது’ என்று குறித்தேன்.
புத்தகமும் கையுமாய் எடிட்டரைப்பார்த்து விஷயத்தைச் சொன்னேன், ‘அடடே’ என்றார் மலர்ச்சியாய். அவருடைய மிகப்பெரிய பாராட்டு அதுதான்.
சில விநாடிகள் யோசனைக்குப்பிறகு, ‘ஒண்ணு பண்ணுங்க விஜயன், நேரா கோயம்பத்தூர்போய் அவரோட வொய்·ப்க்கு நியூஸைச் சொல்லி ஒரு பேட்டி எடுத்துட்டு வந்துடுங்க, அப்படியே அந்த ரைட்டரோட பழைய ·போட்டோ, பிரசுரமாகாத கதை இப்படி எதுனா இருந்தா தள்ளிட்டு வாங்க, ஒரு எக்ஸ்க்ளூசிவ் கவர்ஸ்டோரி போட்டு அசத்திடலாம்’ என்றார் சிரித்து.
நான் உடனடியாய் ஏதும் பதில் சொல்லிவிடவில்லை. அகாலத்தில் இப்படியொரு நல்ல, அறிவுப்பூர்வமான கணவனை இழந்த ஒரு பெண்ணைச் சந்திப்பதில் எனக்கு முன்பிருந்த தயக்கம் இன்னும் மீதமிருந்தது. ஆனாலும் இப்போது ஏனோ அவரைப் பார்க்கவேண்டும் என்றும் தோன்றியது – போலியான பேச்சோ, பாசாங்கோ இல்லாமல் அவர்களிடம் உண்மையாய் இந்த புத்தகத்தைப்பற்றி, இதை எழுதியவர்பற்றிய விமர்சனத்தைச் சொல்லவேண்டும் – அவருடைய கணவரின் மரணம் அவருக்கு மட்டுமில்லை, தமிழ் இலக்கியத்துக்கே இழப்புதான் என்று சொல்லவேண்டும். அவருடைய சோகத்துக்கு ஆறுதல் சொல்வது முடியாது என்றாலும், இந்தப் புத்தகத்தை வாசிக்கிற ஒவ்வொருவருக்குள்ளும் அவர் மறுபடி, மறுபடி உயிர்த்தெழுவார், உண்மையான படைப்பாளிக்கு சாவே கிடையாது என்று சொல்லவேண்டும் … ஒத்துக்கொண்டேன்.
கோயம்பத்தூருக்குப் பக்கத்தில் குனியம்புத்தூரோ, குனியமுத்தூரோ – அங்கே டவுன் பஸ்ஸில் போய் இறங்கியபோது வெய்யில் சுள்ளென்று அடித்துக்கொண்டிருந்தது. ஆனாலும் காற்றில் லேசாய் குளிர்ச்சி கலந்திருப்பதுபோன்ற பிரம்மை. நெரிசலில்லாத சாலைகள், மலையாள வாசனையோடு பஜ்ஜி மணக்கும் பேக்கரிகள், தெருவோரங்களில் இலக்கியம் வளர்க்கிற பழைய பொக்கிஷக் கடைகள், எப்போதும் சிரிக்கிற, அதிர்ந்து பேசாத, வார்த்தைக்கு வார்த்தை ‘ங்க’ சேர்த்துப் பேசும் பண்பான, ஒரு முகவரி எங்கே இருக்கிறது என்று கேட்டால், கூடவே வந்து வழிசொல்லும் இனிமையான மக்கள். கோயம்பத்தூர் எப்போதும்போல் என்னை ஆகர்ஷித்துக்கொண்டது.
சூட்சுமன் வீட்டுக்கு வழிகேட்டுக்கொண்டு நடக்கும்போது அவர் மனைவி விஜயா எப்படி இருப்பார் என்கிற ஊகங்களில் மூழ்க ஆரம்பித்தேன். மெல்லிய தேகம், முக்காடு, பொட்டில்லாத பாழ் நெற்றி என்று ஒரு பதினேழாம் நூற்றாண்டுக் கற்பனை செய்து அதைச் சட்டென்று அழித்தேன். மனைவியை இழந்த ஆணுக்கு இப்படியெல்லாம் தனிப்பட்ட பிம்பங்கள் விதித்துவைக்கிறதா இந்த சமூகம் ? சம்பந்தமில்லாமல் என் மனைவி ஜானகியின் நினைவுவந்தது, திடீர்ப் பயணமாய் நான் கோயம்பத்தூர் கிளம்பியதில் அவளுக்கு ரொம்பக் கோபம் – ஆனால் இந்த வேலையில், அதையெல்லாம் பார்த்தால் முடியுமா ?
ஒரு மருந்துக் கடைக்குப் பக்கத்தில் பயந்து ஒளிந்துகொண்டிருந்த தெருவைக் கண்டுபிடித்ததும் வீட்டைப் பிடிப்பதில் சிரமம் இருக்கவில்லை. ஒன்றரை ஆட்கள்மட்டும் நடக்கத்தக்க நடைபாதையின் மூலையில் சிறிய கதவோடு அந்த வீடு இருந்தது, காற்றோட்டம் போதாமல் உள்ளே பல வருடத்து வியர்வையும், இருளும் அப்பியிருக்க, சூட்சுமனின் மனைவி என்னை சிரிப்பில்லாமல் வரவேற்றார்.
நான் உள்ளே வந்து உட்கார்ந்தபிறகும் வெகுநேரத்திற்கு அவர் என் கையிலிருந்த ‘நினைவோடைகளில் நீரில்லை’ தொகுப்பையே வெறித்துக்கொண்டிருந்தார். நான் சங்கடமாய் வீட்டைச் சுற்றிப் பார்வையை ஓட்ட முயன்றேன். அந்தச் சின்ன அறையின் மூலையில் செய்தித்தாள்கள் அடுக்கியிருந்தது, அதன்மேல் ஒரு மர அலமாரியில் சில புத்தகங்கள், நடுநாயகமாய் இந்தத் தொகுப்பு வைக்கப்பட்டு, அதற்கு சரஸ்வதி பூஜையின்போது செய்வதுபோல் சந்தனமும், குங்குமமும் இட்டிருந்தது. கதவு ஒருக்களித்திருந்த உள்ளறையினுள் இருட்டும், கட்டிலும் லேசாய்த் தெரிந்தது, சமையலறை வேறெங்காவது ஒரு மூலையில் மறைந்திருக்கும். பக்கத்து வீட்டில் எங்கோ ·போன் அடிக்கிற சப்தம் இங்குபோல் தெளிவாய்க் கேட்டது.
அந்தச் சிறிய அறையில் முன்பின் அறிமுகமற்ற நானும், அவரும்போக மௌனமே நீக்கமற நிரம்பியிருந்தது. நான் பேசுவேன் என்று அவரும், அவர் பேசுவார் என்று நானும் காத்திருப்பதுபோல் ஒரு மாபெரும் தயக்கத்திரை எங்களை மூடியிருக்க, எங்கள் இருவரையும் இணைக்கிற ஒரே சரடு இந்தப்புத்தகம்தான், அதற்குதான் தேசிய விருது கிடைத்திருக்கிறது.
‘சொல்லுங்க சார், என்ன விஷயம் ?’ – அவர்தான் முதலில் பேச ஆரம்பித்தது, குரலில் கரகரப்பான ஆண்மை இருந்தது.
நீருக்குள் நீச்சலடிக்கையில் மூச்சுத் திணறுகிறவர்கள் தண்நீர்ப் பரப்புக்குமேல் எட்டிப்பார்த்து தவிப்போடு ‘ஹா, ஹா’ என்று பெரிதாய் ஆக்ஸிஜன் வாங்குவதுபோல, எங்களின் நீண்ட மௌனத்துக்கு நிவாரணமாய் அவருடைய பேச்சு இருந்தது. நானும் நேரடியாய் விஷயத்துக்கு வந்தேன், ‘உங்க கணவரோட தொகுப்புக்கு இந்திய அரசோட பரிசு கிடைச்சிருக்கும்மா, இன்னிக்கு பேப்பர்லகூட நியூஸ் வந்திருக்கு’ என்றபடி பையில் நான்காய், எட்டாய் மடக்கி வைத்திருந்த செய்தித்தாளை எடுக்க முயன்றேன், ‘பார்த்தேன்’ என்றார் அவர்.
‘இந்த செய்தியை உங்ககிட்டே முறைப்படி சொல்லி எங்களோட வாழ்த்துக்களைத் தெரிவிக்க வந்தேம்மா, நான் ஒரு பத்திரிக்கையாளன்’, என்னுடைய கார்டைக் கொடுத்தேன். அவர் அதை வாங்கி சோ·பாவின் முனையில் கீழே விழுவதுபோல் வைத்தார், ‘அப்புறம் ?’ என்றார்.
அவர் நடந்துகொள்ளும் விதம் எனக்கு லேசான அதிர்ச்சியாகவே இருந்தது. என்னதான் கணவரை இழந்த துயரம் இருந்தாலும், இதுபோல ஒரு பெரிய பரிசு அவர் புத்தகத்துக்குக் கிடைத்திருக்கிறது என்னும்போது முகத்தில் ஒரு மலர்ச்சி வேண்டாமா ? என்ன பரிசு அது, யார் யாருக்கெல்லாம் கிடைத்திருக்கிறது, ரொம்பப் பெரிய கௌரவமா என்றெல்லாம் பெருமையோடு விசாரிக்க வேண்டாமா ? அட, அட்லீஸ்ட் ஒரு சிரிப்பாவது …
நான் என் உணர்ச்சிகளை அதிகம் காட்டிக்கொள்ளாமல் பேட்டிக்கு வந்திருக்கும் விவரத்தைச் சொன்னேன், பையிலிருந்து குறிப்பு நோட்டை எடுத்து விரித்துக்கொண்டபோது அதையும் அவர் வெறித்துப்பார்த்தார், ‘என்னோட பேட்டியெல்லாம் எதுக்கு ?’ என்றார் மெல்லியகுரலில்.
நான் பொறுமையாய் பதில் சொன்னேன், ‘தப்பா நினைக்காதீங்கம்மா, இப்படியொரு உயர்ந்த பரிசை வாங்கியிருக்கிற எழுத்தாளரைப்பத்தி இன்னும் தெரிஞ்சுக்கணும்-ன்னு வாசகர்கள் ஆசைப் படுவாங்க, நாங்க அவரைப்பற்றி ஒரு ஸ்பெஷல் இஷ்யூ போடலாம்-ன்னு முடிவு பண்ணியிருக்கோம்’.
நான் சொன்னது எதுவும் அவரை அசைத்ததாய்த் தெரியவில்லை, ‘இல்லைங்க, பேட்டியெல்லாம் வேண்டாம்’ – எழுந்துகொண்டார். ‘உள்ளே அவரோட டைரி, எழுத்து நோட்டு எல்லாத்தையும் மூட்டைகட்டி வெச்சிருக்கேன், அவர் என்கிட்டே பேசினதைவிட அதுங்ககிட்டே பேசினதுதான் அதிகம், என்னைப் பேட்டி எடுக்கற நேரத்தில நீங்க அதையெல்லாம் கிளறினீங்கன்னா எதுனா விஷயம் கிடைக்கும்’, கைகூப்பிவிட்டு உள்ளேபோனவர் ஒரு சிறு புத்தகக் கட்டுடன் வந்தார், ‘ப்ளீஸ், ஹெல்ப் யுவர்செல்·ப்’ என்றார். போயே போய்விட்டார்.
அதன்பிறகு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் நான் அந்த காற்றில்லாத அறையில் சூட்சுமனின் படைப்புகளோடு மன்றாடிக்கொண்டிருந்தேன். என்னுடைய வியர்வை அந்த நோட்டுக்களின்மேல் பட்டுவிடாமல் துடைப்பதே பெரிய காரியமாய் இருந்தது. ரொம்பநேரம் ஒரே மாதிரி உட்கார்ந்திருந்ததில் முழங்காலுக்குக் கீழே மரத்துப்போய் ஆயிரம், லட்சம் ஊசிகள் ஒரே சமயத்தில் பாய்வதுபோல் கூருணர்வு.
ஆனால் இந்த சங்கடங்களையெல்லாம் மறக்கச் செய்தது என் முன்னிருந்த பொக்கிஷம். சூட்சுமன் என்கிற இந்த மனிதர் எழுதியதில் ஒரு துளிதான் இப்போது தேசிய விருது பெற்றிருக்கிறது, மற்றதெல்லாம் இத்தனை காலமாய் ஒரு பழைய தினத்தந்தி தாளால் சுற்றி வளைக்கப்பட்டு, நைலான் கயிற்றால் கட்டி இருட்டறை மூலையில் வீசப்பட்டிருக்கிறது என்று எண்ணும்போது எனக்குள் கவிந்த துன்பத்தை வர்ணிக்க எந்த எழுத்துவடிவ மொழிக்கும் சாமர்த்தியம் போதாது. டைரி, டைரியாய், நோட்டு, நோட்டாய், ஏன், காலண்டர் தாள்களின் பின்பக்கத்தில், மளிகைக்கடை ரசீதின் ஓரங்களில்கூட ஏதாவது எழுதி வைத்திருந்தார் மனிதர். கவிதை, அன்றைக்கு படித்த செய்தியைப்பற்றிய விமர்சனம், நண்பரிடம் பேசும்போது தெரிந்துகொண்ட புதிய விஷயம், ரயிலில் சந்தித்த சுவாரஸ்யமான மனிதர்கள், அவ்வப்போது கதைகள், சிறு நாடகங்கள், ஆங்கிலக் கவிதைகள், மொழிபெயர்ப்பு முயற்சிகள், இண்டியன் இங்கில் வரைந்த தீர்க்கமான, எளிய கார்ட்டூன்கள், சந்தத்துக்கு எழுதிப்பார்த்த சினிமாப்பாட்டு ஒன்று – இன்னும் என்னென்னவோ கிடைத்தது, அத்தனையையும் முழுசாய்ப் படித்துமுடிக்க ஒரு மாதத்துக்கு மேல் ஆகலாம் என்று உறுதியாய்த் தோன்றியது எனக்கு, இவையெல்லாம் புத்தகமாய் வந்தால் எப்படியிருக்கும் – கற்பனையே சுகமாய் இருந்தது, ‘சூட்சுமன் படைப்புகள்’ என்று அட்டையில் அவர் படம்போட்டு க்ரௌன் அளவில் காலிக்கோ பைண்டிங்கில் தங்க வண்ணத்தில் நூல் அடையாளம் இட்டு ஜிலுஜிலுவென்று ஒரு புத்தகம் என் கற்பனையில் விரிந்தது. அதற்கும் தேசிய விருது கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.
அப்போது உள்ளறையின் கதவு திறந்து அவர் வெளியேவந்தார். இங்கே ஒரு ஜீவன் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து நோட்டுப் புத்தகங்களிடையே இலக்கியம் தேடிக்கொண்டிருப்பதை லட்சியமே பண்ணாமல், கையிலிருந்த செய்தித்தாளை ஓரமாயிருந்த அடுக்கின்மேல் வைத்துவிட்டு மறுபடி உள்ளே போய்விட்டார் அவர்.
என்னுடைய எரிச்சல் அதிகமாகிக்கொண்டே இருந்தது. ஒருவேளை இந்தப் பெண்ணுக்குத் தன் கணவனின் மதிப்பு தெரியவில்லையோ ? அலமாரியில் பொட்டிட்டு வைத்திருக்கிற தொகுப்பை இவள் படித்திருப்பாளா ? என் முன்னே பரந்துகிடக்கிறவற்றில் ஒன்றிரண்டையாவது புரட்டிப் பார்த்திருப்பாளா ?
நோட்டுக்களையெல்லாம் சரியாய் அடுக்கி கட்டுக் கட்டிக்கொண்டேன். அவற்றை டீப்பாயின்மேல் வைத்துவிட்டு மீண்டும் சோ·பாவின்மேல் ஏறி உட்கார்ந்துகொண்டு உள்ளேயிருக்கிற பெண்ணைப்பற்றிய சிந்தனைகளில் மூழ்கிப்போனேன். ஒருமுறைகூட நேரில் சந்தித்திராத இந்த எழுத்தாளரின்மேல் நான் வைத்திருக்கிற பாசத்தில், மரியாதையில் ஒரு சதவீதமாவது அவருடைய வாழ்க்கைத் துணையாய் வந்த இந்தப் பெண்ணுக்கு இருக்கிறதா ? இருந்தால், அவரை இப்படி இருட்டறையில் நைலான் கயிற்றில் கட்டிப்போட்டிருப்பாளா ? அவருக்கு தேசிய விருது வந்திருக்கிறது என்ற செய்தியை இப்படி சோ·பாவின் மூலையில் அலட்சியமாய் வீசியெறிவாளா ?
கதவு இன்னமும் மூடியே இருந்தது. பதினைந்து நிமிடங்கள்போல் அப்படியே உட்கார்ந்திருந்தேன். தூசு நெடியில் ஒன்றிரண்டு தும்மல்களும், நானாய் சிரமப்பட்டு வரவழைத்துக்கொண்ட இருமல்களும்கூட அந்தக் கதவை அசைக்கவில்லை. நான் சலித்துப்போய் கட்டைப்பிரிக்காமல் ஒரு நோட்டை உருவிப் படிக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கையில், நீண்ட க்ரீஈஈஈச் பின்னணியில் மணிக்கதவம் தாழ்திறந்து அவர் வெளியேவந்தார், என்னையும் பக்கத்திலிருந்த கட்டையும் இரண்டுமுறை மாறிமாறிப் பார்த்துவிட்டு எதிர் சோ·பாவில் உட்கார்ந்தார். ‘நீ என்ன கேட்கப்போகிறாய் என்பது எனக்குத் தெரியும்’ என்பதுபோல் முகத்தில் ஒரு அலட்சிய முத்திரை.
நான் பணிவோடு அவரிடம் அந்த நோட்டுப் புத்தகங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதி கேட்டேன், ‘இல்லைன்னா இங்கயே ஜெராக்ஸ் எடுத்துக்கறேன் மேடம்’ என்றேன். அவர் வேண்டாம் என்பதுபோல் கையசைத்தார், ‘எல்லாத்தையும் நீங்களே எடுத்துட்டுப் போங்க’ என்றார் சலனமில்லாமல். ஒரு பக்கம் சந்தோஷமாய் இருந்தாலும், அவருடைய குரலிலிருந்த கழித்துக்கட்டும் தொனி எரிச்சலூட்டியது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், ‘ரொம்ப நன்றி மேடம் !’ என்றேன் மறுபடி. அவர் வெறுமனே தலையசைத்தார்.
கடைசியாய் இன்னொருமுறை அவருடைய பேட்டிக்கு அனுமதி கேட்டேன். ‘அதான் வேண்டாம்ன்னு சொன்னேனே மிஸ்டர்’ என்றபோது அவருடைய முகத்தில் வெளிப்படையாய் கோபம் வெடித்தது. அதுவரை அடக்கிவைத்திருந்த என்னுடைய ஆத்திரமும் அந்த விநாடியில் எல்லைமீறியது, ‘சாரி மேடம்’ என்றேன் வேகமாய். ‘உங்க கணவர் ஒரு கதையில எழுதியிருப்பார் – ஒருத்தரை நல்லா புரிஞ்சுகிட்ட மனைவியோ, கணவனோ கிடைப்பது பெரிய வரம்-ன்னு, பாவம், அவருக்கு அந்த வரம் கிடைக்கலை போலிருக்கு’ – என் மனதிலிருந்த அத்தனை வன்மத்தையும் இறக்கிச் சொன்னேன். அப்படிச் சொல்வதால் எனக்கு இந்த புத்தகக்கட்டு கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை என்று அந்த நேரத்தில் தோன்றியது.
அவருடைய முகம் சட்டென்று சுருங்கி மீண்டும் சலனமில்லாத நிலைக்குப் போனது. கோபத்தின் பற்களிலிருந்து பிழைத்து வந்துவிட்ட நானும் கொட்டிவிட்ட வார்த்தைகளை நினைத்து வருத்தப்பட ஆரம்பித்திருந்தேன். இனிமேல் நாக்கைக் கடித்தென்ன ஆவது ? கண்ணகி நடுச்சபையில் வீசி உடைத்த சிலம்பைப்போல கண்ணியத்தையும், சுய கட்டுப்பாட்டையும் சிதைத்து சொல்லக்கூடாத வசவுகளை எறிந்தாகிவிட்டது, இனிமேல் பொறுக்கவா முடியும் ? அந்த சிந்தனையாலேயே என் கால்கள் தளர்வதுபோல் உணர்ந்தேன்.
சில நிமிடங்கள் பொறுத்து அவர் எழுந்துகொண்டார், ‘நீங்க இந்த புக்ஸையெல்லாம் எடுத்துட்டுப் புறப்படுங்க மிஸ்டர்’ என்றார், ‘ஆறரை மணியாச்சு, நான் கோயிலுக்குப் போகணும்’, எதுவுமே நடக்காததுபோல் அவர் பேசியது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. தலையைக் கவிழ்ந்துகொண்டேன்.
புத்தகக்கட்டு ரொம்பவும் சுமையாய்த் தெரிந்தது. நைலான் முடிச்சினடியில் கைகளை நுழைத்து அதைத் தூக்கிக்கொண்டபோது உள்ளங்கையில் உறுத்தியது. ‘நன்றி மேடம்’ என்றேன் அவரிடம். சற்றுப் பொறுத்து, ‘ஏதோ கோபத்தில பேசிட்டேன், மனசில வெச்சுக்காதீங்க’ என்றும் சொன்னேன், அவர் அதை ஏற்கிறாரோ இல்லையோ, உள்ளே சுட்டெரிந்துகொண்டிருந்த என் மனசாட்சிக்கு அந்த மன்னிப்பு அவசியமாய் இருந்தது. அவர் இடவலம் தலையசைத்து, ‘நோ ப்ராப்ளம்’ என்றுமட்டும் சொன்னார். ‘சீக்கிரம் கிளம்பு’ என்பதுபோலிருந்தது பார்வை.
நான் கொஞ்சம் முன்னால் நகர்ந்தபோது அவர் மீண்டும் பேசினார், ‘உங்களுக்கெல்லாம் அவரோட கதைகளை மட்டும்தான் தெரியும் மிஸ்டர், ஆனா எனக்கு அவரை ரத்தமும் சதையுமா, ஒரு முழு மனுஷராத் தெரியும்’. நான் ஒன்றும் சொல்லாமல் அவர் பேசுவதையே பெரிய ஆச்சரியம்போல் பார்த்தேன், அவர் எங்கோ சுவரைப் பார்த்துக்கொண்டு தொடர்ந்து பேசினார், ‘நீங்க பார்த்ததெல்லாம் அவரோட எழுத்துக்களையும், கதை சொல்ற திறமையும்தான் – ஆனா நான் என் கண்ணுக்கு நேரா பார்த்தது வேற, எல்லோரும் பார்த்து ரசிக்கிற அலங்காரமான நாடக மேடையோட பின்பக்கத்தைப் பார்த்திருக்கீங்களா ? தென்னங்கீத்தும், சவுக்குக் கட்டையும், கரென்ட் வயருமா கண்டபடி நீட்டிக்கிட்டு சகிக்கமுடியாதபடி இருக்கும் – அந்த இன்னொரு பக்கத்தைப் பார்த்தவ நான் – சொற்ப சம்பளத்தில கொஞ்சம்கொஞ்சமா மிச்சம்பிடிச்சு, உடம்பைக் கெடுத்துக்கிட்டு ஓவர்டைம் பார்த்து பணம் சேர்த்து, எப்படியாவது தன்னோட கதைகளைப் புத்தகமா கொண்டுவந்துடணும்ன்னு மெட்ராஸ¤க்கு அலையா அலைஞ்சதையும், புது எழுத்தாளர்ங்கறதால ஒவ்வொரு பதிப்பகத்திலயும் அவரை நாளைக்கு, நாளைக்குன்னு இழுத்தடிச்சதையும், ஒவ்வொருவாட்டி மெட்ராஸ்ல இருந்து திரும்பி வந்தபிறகும் உடம்பும், மனசும் வலிதாங்காம அவர் துடிச்ச துடிப்பையும், அந்த வியாதி அவரை அணுஅணுவா சிதைச்சுக் கொன்னதையும் நான் என் கண்ணால பார்த்திருக்கேன் சார்’ என்றார். ஒரு சின்ன விம்மலோ, அழுகையோ அவருடைய பேச்சைக் கலைத்தது, சுதாரித்துக்கொண்டு தொடர்ந்து சொன்னார், ‘அவர் கோமாவில விழறதுக்குமுன்னாடி கடைசியா என்கிட்ட என்ன சொன்னார் தெரியுமா ? அப்பவும் என் புத்தகத்தைக் கண்ணால பார்க்காம சாகப்போறேனே விஜயா-ன்னுதார் கதறினார், பாவி மனுஷனுக்கு இத்தனை சின்ன வயசில சாகறமே-ன்னு ஆதங்கமில்லை, என்னைவிட்டுப் போறதுகூட பெரிய கஷ்டமா இல்லை, கடைசி வரைக்கும் ஒரு குழந்தைக்குக் கொடுத்து வைக்காம போயிட்டமே-ன்னு கவலை இல்லை, புத்தகம், புத்தகம், புத்தகம் – வாழ்ந்தபோதும் புத்தகம்தான், செத்தபோதும் புத்தகம்தான்’, அவருடைய விம்மல் மெல்லிய அழுகையாய் மாறியது. நான் திகைப்போடு நின்றிருந்தேன்.
எல்லாம் சில விநாடிகள்தான், மீண்டும் அவர் பழைய முகத்துக்குத் திரும்பிவிட்டார், சேலைத் தலைப்பால் கண்களை நாசூக்காய் ஒற்றியெடுத்துக்கொண்டபடி சொன்னார், ‘யாரோ ஒரு விமர்சகர் அவரோட புஸ்தகத்துக்கு ரெவ்யூ எழுதியிருந்தார், பாரதியார், புதுமைப் பித்தனெல்லாம் சின்ன வயசிலயே போயிட்டாங்களாம், இவரும் அவங்க மாதிரிதானாம். வேடிக்கையைப் பாருங்களேன், வாழும்போது ஒரு அங்கீகாரத்துக்கு, ரெண்டு வரி பாராட்டுக்கு, தெம்பூட்டற வார்த்தைகளுக்குத் துடிச்ச மனுஷருக்கு, செத்தப்புறம் ஞானிகள் வரிசையில இடம், ராத்திரியில சூரிய நமஸ்காரம் பண்றமாதிரி என்ன பிரயோஜனம் இந்த அடையாளங்களினால ?’.
ooOoo
இருட்ட ஆரம்பித்திருந்த பேருந்து நிறுத்தத்தில் என் பஸ்ஸ¤க்காக காத்திருக்கையில் அவர் பேசியதெல்லாம் என் மனதில் நிற்காமல் சுழன்று ஓடிக்கொண்டிருந்தது. அந்த விஜயாவினுடைய கோபம் அல்லது ஆதங்கம் தன்னுடைய கணவர்மீதா, அவர் விரும்பிய இலக்கியத்தின்மீதா, அவரை அங்கீகரிக்காத இந்த உலகத்தின்மீதா, அல்லது காலத்தின்மீதா ? இந்த விஷயத்தில் யாரைத் தப்புச் சொல்வதென்று தெரியவில்லை.
ஓரமாயிருந்த பெட்டிக்கடையில் விசாரித்தேன், ‘இங்க பக்கத்தில கிருஷ்ணா ஸ்வீட்ஸ் எங்கே இருக்கு சார் ?’
என் மனைவிக்கு மைசூர்பா ரொம்பப் பிடிக்கும்.


நன்றி: ‘ஆனந்த விகடன்’ வார இதழ், sirukathaigal.com


- என்.சொக்கன் [[email protected]] (ஜூன் 2008)