Showing posts with label ஸ்பெக்டர் - ஜெயமோகன். Show all posts
Showing posts with label ஸ்பெக்டர் - ஜெயமோகன். Show all posts

Monday, November 30, 2015

ஸ்பெக்டர் - ஜெயமோகன்

24-வது ஜேம்ஸ் பாண்ட் படமாக சமீபத்தில் இந்தியாவில் வெளியான ஸ்பெக்டர் படத்தைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன், தன்னுடையஇணையத்தளத்தில் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
‘வெண்முரசு காண்டீபம் முடிந்த கையோடு ஒரு மாறுதலுக்காக சினிமா பார்க்கப்போகலாம் என முடிவெடுத்தேன். ஸ்பெக்டர் பார்க்கப்போகிறேன் என்று நண்பர் சுகாவிடம் சொன்னேன். அவரும் ஒருமாதிரி சிரித்து ’போய்ட்டு வாருங்க மோகன்’ என்றர். ஜேம்ஸ்பாண்ட் படம் பார்ப்பது அறிவுஜீவிகளுக்கு உகந்தது அல்ல என்று ஒரு பொதுநம்பிக்கை இருப்பது தெரிந்தது. ஆனால் வேண்டாம் என்று விடவும் எனக்கு மனமில்லை. நான் இதுவரை வந்த எல்லா பாண்ட் படங்களையும் பார்த்திருக்கிறேன், எனக்கு பிடிக்கும்.
என் திரைப்பட ரசனை பொதுவாக ஒரு பத்துவயதுப் பையனுக்குரியது. தெளிவாகச் சொன்னால் ‘சிந்தனைக்கோ கற்பனைக்கோ இலக்கியம் இருக்கிறதே சினிமா எதற்கு?’ என்னும் மனநிலைதான். மாஸ்டர்பீஸ்கள் என்று சொல்லப்படும் படங்களை விழுந்து விழுந்து பார்த்த காலம் உண்டு. ஃபிலிம் சொசைட்டி இயக்கத்தில் செயலாற்றியும் இருக்கிறேன். ஆனால் எந்த சினிமாவும் ஒரு நடுவாந்தர நாவல் அளித்த அனுபவத்தைக்கூட எனக்கு அளித்ததில்லை. சினிமா குறைவான கலை என நான் நினைக்கவில்லை, என் கலை அல்ல.
எனக்கு சினிமா கேளிக்கைவடிவம்தான். சினிமாஸ்கோப்பில் பிரம்மாண்டமான நிலக்காட்சிகளைப் பார்ப்பதுதான் முதல் கவர்ச்சி. நகரங்கள், விதவிதமான சூழல்கள் பிடிக்கும். அத்துடன் பரபரப்பாகச் செல்லும் காட்சிகள் கவரும்.
நான் பார்த்த முதல் ஜேம்ஸ்பாண்ட் படம் கோல்ட் ஃபிங்கர். நான் அப்போது எட்டாம் வகுப்பு மாணவன். நாகர்கோயிலுக்கு அக்கா வீட்டுக்கு வந்தபோது மச்சான் என்னை கூட்டிக்கொண்டுசென்றார். லட்சுமி திரையரங்கம் என நினைக்கிறேன். அப்போதெல்லாம் பெரிய திரை எல்லாம் கிடையாது. படமே ரொம்ப பழைய அச்சாக இருக்கும். மழை பெய்யும்.மொத்தமாகச் சிவந்துபோயிருக்கும்.
ஆனால் சினிமாவை நாம் கற்பனையில் காண்கிறோம். இன்றைய சினிமாக்களைவிட பிரம்மாண்டமாக அதை அன்று நான் கண்டேன். நான் எண்ணிப்பார்க்கவும் முடியாத உலகங்களில் வாழ்ந்தேன். பாண்ட் என்னும் அந்தக்கனவு என்னை அப்போதுதான் ஆட்கொண்டது. நானே படம் பார்க்க ஆரம்பித்தபோது திருவனந்தபுரம் சென்று ஜேம்ஸ்பாண்ட் படங்களைப் பார்த்தேன். நாவல்களை திருவனந்தபுரம் வாடகை நூலகத்தில் இருந்து எடுத்து வாசித்தேன்.
திருவரம்பு என்னும் சின்னக்கிராமத்தில் பிறந்து, மாடுமேய்த்து, சாணி சுமந்து, தொளியுழவு செய்து வாழ்ந்த ஓர் இளைஞனுக்கு ஜேம்ஸ்பாண்ட் என்னவாகப் பொருள் பட்டிருப்பார் என இன்று சிந்தித்துப்பார்க்கிறேன். ‘வெளியுலகம்’ என்றுதான். மாநகர்கள், உயர்தர விடுதிகள், அதிவேக கார்கள், விழாக்கள், நவீனக் கருவிகள், பெண்கள்… அறிவியலும் முதலாளித்துவப் பண்பாடும் சேர்ந்து உருவாக்கிய வாழ்க்கையின் உச்சகட்ட நுனி அது. அது எந்த இளைஞனுக்கும் கனவு.
கூடவே அதன் அபாயங்கள். வேட்டையாடுதலும் வேட்டையாடப்படுதலும். ஜேம்ஸ்பாண்டுடன் நான் என்னை அடையாளம் கண்டுகொண்டதே இல்லை. ஆனால் அவருடன் சென்றுகொண்டிருந்தேன். அந்தக்கனவில் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். பின்னர் வெளிநாட்டுப்பயணங்களில் பெருநகர்களின் தெருக்களில், மலையுச்சிகளில், எரிமலைச்சாரல்களில், ஏரிக்கரைகளில் நின்றிருந்தபோது, மிக உயர்தர விடுதியறைகளில் தங்கியபோது அந்த கனவில்தான் வாழ்ந்தேன்.
எனக்குப் பிடித்த பாண்ட் ரோஜர்மூர்தான். சீன் கானரி அடுத்தபடியாக. ஆனால் பிற பாண்ட்களைப் பிடிக்காது என்றல்ல. எல்லா பாண்டுகளும் பிடித்தமானவர்கள்தான். ஏதோ ஒருவகையில் டேனியல் கிரெய்க் மூன்றாவதாக பிடித்தமானவராக இருக்கிறார். குழப்பமான பாண்ட். கவலைப்படுபவர், அலைக்கழிப்புகள் கொண்டவர். துரோகங்கள் பாண்டுக்குப் புதியவை அல்ல, ஆனால் கிரெய்க் மனம் கலைந்துபோகிறார். இன்றைய காலகட்டத்தின் பாண்ட். தான் சார்ந்திருக்கும் அமைப்பாலேயே வேட்டையாடப்படுபவர்.
ராஜாஸ் மால் அரங்கில் பகல்முழுக்க பெய்த மழைச்சாரலிலும் நூறுபேர் இருந்தனர். நாகர்கோயிலிலேயே நல்ல திரையரங்கு, நல்ல ஒலியமைப்பு. படம் எனக்கு மீண்டும் ஒர் இளமைமீட்சியாக இருந்தது. பாண்ட் ஓடிக்கொண்டே இருந்தார். அவருக்கும் பத்து வயதுதான். பத்து வயதுப்பையனின் உலகில்தான் சாகசம் உண்டு, சாவு இல்லை.
ஆனால் நம் மக்களுக்கு இன்னமும் நல்ல அரங்கில் படம் பார்க்கத்தெரியாது. ஒற்றை ஸ்பீக்கர் அரங்கில் படம் பார்த்த பழக்கம். பல ஓடைகளிலாக சூழொலி அமைப்பு உள்ள அரங்கில் ஒலிகள் அரங்கின் அனைத்து திசைகளிலும் கேட்கும். எல்லா ஒலிகளும் துல்லியமாகக் கேட்பதனால் இன்றைய படங்கள் மௌனமாகவும் மெல்லிய இசையுடனும் மிகமென்மையான ஒலிகளுடனும் இருக்கும்.
ஆகவே நடுவே செல்பேசி ஒலிப்பது, பேசிக்கொண்டிருப்பது , கூச்சலிடுவது எல்லாம் ஒலியனுபவத்தை அழித்துவிடும். என்னருகே இருந்த இரண்டு இளம்ஜோடிகள் பேசிக்கொண்டே இருந்தனர்.நடுவே செல்பேசியில்  பேசினர். படித்த ‘நவயுவர்’கள். அவர்களிடம் சொல்லிப்பார்த்தேன். முறைத்தார்கள்.
நான் எழுந்து சென்று அரங்கப்பணியாளரிடம் அப்பால் ஓர் இடம் கோரிப்பெற்றேன். முன்பக்கம் சென்று தனித்து அமரமுடிந்தது. பின்னால் செல்பேசி ஒலித்துக்கொண்டே இருந்தது. ‘ஆமா மச்சி, படம் பாக்கிறேண்டா’ போல குரல்கள்.
புன்னகையுடன் எண்ணிக்கொண்டேன். ஒருபக்கம் பாண்டின் அதிநவீனத் தொழில்நுட்பம். செல்பேசிகள், நவீனத் திரையரங்கம். ஆனால் ஓலைக்கொட்டகையில் படம் பார்க்கும் கலாச்சாரப்பயிற்சி. இதுதான் நவீன இந்தியா.
மெக்ஸிகோசிட்டி, லண்டன், ரோம், மொரோக்கோவின் டான்ஜியர் வரை வெவ்வேறு நிலங்கள். வழக்கமான ஜேம்ஸ்பாண்ட் அல்ல. உணர்வுபூர்வமானவர், தன்னந்தனிமையை ஒவ்வொரு கணமும் உணர்பவர். ஆனால் வழக்கமான உலகைக் காக்கும் சாகசம்.
படம் முடிந்தபோது உருவான எண்ணம் ஒருவகை இரட்டைநிலை. ஒன்று என் இளமைமுதல் கண்ட பாண்ட், அதே கதை. ஒன்றுமே மாறவில்லை. அப்பாடா! ஆனால் அதற்குள் அனைத்துமே மாறிவிட்டிருக்கின்றன. பாண்டே கூட. அதுவும் நன்றாகவே இருந்தது என்று ஜெயமோகன் எழுதியுள்ளார்.