Showing posts with label பட்டுக்கோட்டை பிரபாகர் - மைக்ரோ கதைப்போட்டி. Show all posts
Showing posts with label பட்டுக்கோட்டை பிரபாகர் - மைக்ரோ கதைப்போட்டி. Show all posts

Tuesday, January 14, 2020

பட்டுக்கோட்டை பிரபாகர் - மைக்ரோ கதைப்போட்டி

சில தினங்களுக்கு முன்  ரைட்டரும் , ஏய் , காப்பான் பட வசனகர்த்தாவும் ஆகிய பட்டுக்கோட்டை பிரபாகர் முக நூலில்  மைக்ரோ கதைப்போட்டி வைத்தார். அதில் பலரும் கலந்து கொண்டனர். அதற்கு முன் கணேஷ் வைத்த சிறுகதைப்போட்டியில் செமி ஃபைனலில் தேர்வான கதைகளில் இருந்து ஃபைனல் செலக்சனாக  பிகேபி நடுவராக   ஜட்ஜாக இருந்து தேர்ந்தெடுத்தார். அதில் செமி ஃபைனலில் கூட நம்ம கதை  தேர்வாகாததால் ஃபைனலுக்கு  பிகேபி சாரின் பார்வைக்கே நம்ம கதை போகாமல் இருந்தது. சரி இந்த வாட்டியாவது அவரது நேரடி பார்வையில் நம் படைப்பு போய் சேரவாவது செய்யட்டும் என நானும் கலந்து கொண்டேன். அதில் 613 கதைகள் பங்கேற்றன. 25 கதைகள் தேர்வாகி இருக்கு.


 முகநூலில் அவரது அறிவிப்பும் கதைகளும்....


உலகத்திலேயே மிகவும் குட்டிக் கதை
ஆறே வார்த்தைகளில்
ஹெமிங்வே எழுதியது.

“For sale: Baby shoes. Never worn.”
விற்பனைக்கு: குழந்தையின் செருப்பு - ஒருபோதும் அணியப்படாதது!

ஆங்கிலத்தில் படித்த
சில இரண்டு வரி
மைக்ரோ கதைகள்
என்னைக் கவர்ந்தன.
--------------------------------------------------------------------------------
He asked,"Are you a HIndu or Muslim?''.
The response came,"I am hungry''

அவன் கேட்டான்," நீ இந்துவா முஸ்லிமா?''
பதில் வந்தது," எனக்கு பசிக்கிறது!''
-------------------------------------------------------------------------------
Man and God both met somewhere.
Both exclaimed,"My creator!'

மனிதனும் கடவுளும் சந்தித்தார்கள்.
இருவருமே வியந்தார்கள்,"என்னைப் படைத்தவன்!''
--------------------------------------------------------------------------------
"wrong number'' said a familiar voice.

"தவறான எண்'' என்றது பரிச்சயமான குரல்.
----------------------------------------------------------------------------
What if God asks you after you die,"So how was heaven?''

இறந்த பிறகு கடவுள் ஒரு வேளை உங்களிடம், "சொர்க்கம் எப்படி இருந்தது?'' என்று கேட்டால்..?
----------------------------------------------------------------------------
We don't make friends anymore. We add them nowadays!

இப்போதெல்லாம் நாம் நண்பர்களை உருவாக்குவதில்லை. சேர்க்கிறோம்!
--------------------------------------------------------------------------------

தமிழில் நீங்கள் எழுதும் சிறந்த
10 மைக்ரோ கதைகளுக்கு
பரிசளிக்கக் காத்திருக்கிறேன்.
கதைகளை பொதுவெளியில்
பின்னூட்டமாகவும் எழுதலாம்.
அல்லது எனது உள் பெட்டிக்கும்
அனுப்பலாம்.
(இரண்டே வரிகள் என்பதே நிபந்தனை!)



வீட்டுக்கொரு கற்பனைக்- காரன்/காரி இருப்பதறியாமல் எழுதச்சொல்லிவிட்டேன்.
பின்னூட்டமாகவும் உள் பெட்டியிலுமாக
மொத்தம் வந்த மைக்ரோ கதைகள் 613.

சிலர் கதைகளில் முயற்சி இருந்தது.
சிலர் கதைகளில் பயிற்சி இருந்தது.

பல வகையான கதைகள் சுவாரசியமாக இருந்தன. இதிலிருந்து பத்து கதைகளை மட்டும் தேர்வுசெய்ய சிரமமாக இருந்ததால் 25 மைக்ரோ கதைகளைத் தேர்வுசெய்திருக்கிறேன். சுவாரசியம் கூட்ட சில கதைகளை சற்றே திருத்தியமைத்திருக்கிறேன்.
மற்ற கதைகளையும் ரசித்தேன். அவைகள் நிராகரிக்கப்பட வேண்டியவை என்று அர்த்தமல்ல.. இந்த 25 கொஞ்சம் தூக்கலாக மனதில் இடம் பிடித்தவை. அவ்வளவுதான்.
ஆர்வத்துடன் கலந்துகொண்ட அனைவருக்குமே என் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!
வென்றவர்கள் உள் பெட்டியில் விலாசம் கொடுங்கள். என் அன்புப் பரிசாக நான் எழுதிய ஒரு புத்தகம் தேடி வரும்.
25 மைக்ரோ கதைகள்:
--------------------------------

1. அப்பாவின் மரணத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்தவனிடம் சாக்லேட் கேட்டது குழந்தை.
- ஜெயா சிங்காரம்

2. ஐந்து வயது மகள் விளையாட செல்போன் கொடுத்துவிட்டு வளர்ப்பு நாயை வெளியில் அழைத்துச் சென்றான்.
- பிரபு பாலசுப்பிரமணியன்

3. எதிர்வீட்டு ரமேஷைத் தெரியாதென்றான் முகநூலில் 5000 நண்பர்களை வைத்திருக்கும் சுரேஷ். - தனுஜா ஜெயராமன்
4. "உன்னைவிட ஒரு அழகியைப் பார்த்ததில்லை'' என்றான் ஆதாம் ஏவாளிடம்.
-சி.பி.செந்தில்குமார்

5. என் சமையலைக் குறைகூறிக்கொண்டே வளரும் உன் தொப்பை!
-கல்யாணி சேகர்

6. பட்டினியால் இறந்த விவசாயி வாயில் போட்டார்கள் விதை நெல்லை!
-கவிதா ஹரிஹரன்

7. ஒரு மெளனத்தின் அலறல்!
சைலண்ட் மோடில் செல்போன்!
-மன்னன் உசைன்

8. சம உரிமை கேட்ட மனைவியிடம் மாதச் செலவுக் கணக்கைக் காட்டி "சமமா பிரிச்சுக்கலாம்'' என்றான்.
-ஆர்.திலகவதி ரவி

9. பேய் வீடென்று குறிப்பிட்ட வீடுகளில் எப்போதும் வாழ்கிறது ஊராரின் பயம்.
-அ.வேளாங்கண்ணி

10."டேய்! நீ இன்னொரு பையனை கட்டியிருந்தாலும் மனசு ஆறும்'' திட்டினார் பெண் ரோபோவுடன் வீட்டுக்கு வந்த மகனை!

11. அவன் அதிர்ஷ்டக்காரன்! மனைவி கிடைத்தாள் மார்பில் பச்சைக் குத்திய காதலியின் பெயரிலேயே!
-தயா.ஜி.வெள்ளைரோஜா

12. ''பிள்ளை பெத்துக்கத் துப்பில்ல'' வீட்டில் திட்டு வங்கியவள் பால் கொடுத்தாள் யாரோ பெற்ற பிள்ளைக்கு. "கட்'' என்றார் இயக்குனர்.
-விஜி.முருகநாதன்

13. யானையின் வழித் தடத்தில் அமைந்த இருப்புப் பாதையில் விரைவு ரயில் வருகிறது. யானை மெதுவாகக் கட..க்..கி..ற..!
-பழனீஸ்வரி தினகரன்

14. நாடுகளிக்கிடையில் பேச்சு வார்த்தை!
மேஜைகளுக்கடியில் துப்பாக்கிகள்!
-முரளி, மதுரை

15. "பேய்களில் நம்பிக்கையில்லை'' என்றான் சுடுகாட்டில். கல்லறைக்குள்ளிருந்து சிரிப்புச் சத்தம்!
-ரெஜி தரகன்

16. நடிக்க வந்த குழந்தைக்கு கேரவனில் நடிகை பால் கொடுத்தாள். குழந்தை சிரித்தது. மார்பில் வலி குறைந்தது.
-செல்லம் ஜெரினா

17. 'ஒரு ஊரில்' என்று ஆரம்பித்தார் தாத்தா.
'சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணுங்க' என்கிறான் பேரன்.
-இயக்குனர் ஹரி கணேஷ்

18. "விட்டுடு தம்பி!'' என்று கதறிய பெண்ணை விட்டுவிட்டு நகர்ந்தான் அனாதை கொள்ளையன்.
-குமரன் கருப்பையா

19. "Good morning. We are calling from tamil sangam!''
- அப்துல் ரஷீது

20. ஊருக்கே உணவு கொடுத்தான் கொள்ளைப் பசியுடன் ஸ்விக்கி டெலிவரி பையன்.
-ஜே.குமார் ராம்

21. வாசலில் பசியென்ற பிச்சைக்காரனை விரட்டிவிட்டு கோயிலுக்குச் சென்றார் அன்னதானம் செய்ய!
-லக்‌ஷ்மன் மோகனசந்திரன்

22.ஆம்புலன்சுக்கு போன் செய்யச்சொல்லி அழுதது குழந்தை- மாடியிலிருந்து தவறவிட்ட பொம்மைக்காக!
-எஸ்.எஸ்.பூங்கதிர்

23. மாமியாருக்குப் பிடித்த எல்லாவற்றையும் சமைத்தாள் மருமகள் - திதிக்காக!
-sridevi மோகன்

24. இன்றுடன் உலகம் அழிகிறது!
முழு விபரம் நாளைய நாளேட்டில்!
-ராம் சின்னப்பயல்

25. ஸாஃப்ட்வேர் என்ஜினியர் வேலைக்கான சிபாரிசுக் கடிதத்தில் அரசியல்வாதி வைத்தார் கைநாட்டு!
-கருணாகரன் கருணாகரன்



தேர்வுசெய்யப்பட்ட மைக்ரோ கதைகளை
முகநூலில் மட்டும்தானே படிப்பார்கள்..
இவர்களுக்கு இன்னும் சிறப்பான அங்கீகாரம்
கிடைத்தால் நன்றாயிருக்குமே என்று நினைத்த சமயம் அழைத்தார் ராணி வார இதழிலிருந்து ரசனைக்கார ஆசிரியர் திரு. ராமகிருஷ்ணன்.
விளைவாக..
25 மைக்ரோ கதைகளும் ராணி வார இதழில்
வெளியாகின்றன! இதழ் தேதி பின்னர்!
மீண்டும் வாழ்த்துகள்!
மீண்டும் பாராட்டுக்கள்!



நன்றி - பட்டுக்கோட்டை பிரபாகர்