Showing posts with label தோஷம். Show all posts
Showing posts with label தோஷம். Show all posts

Thursday, August 23, 2012

சனி தோஷம் நீங்க.... ( ஆன்மீகம்)

சனிக்கிரக தோஷம் நீங்க... பைரவருக்கு துலாபாரம்!

பலன்... பரிகாரம்... புண்ணிய தரிசனம்!
ன் உருக, அந்தப் பரவசத்தில் உள்ளமும் உருக, சித்தத்தில் சிவம் வைத்து நித்தமும் வழிபட்ட சித்த புருஷர்களது கனவில் ஒளி வடிவாகத் தோன்றி, தென்னாடுடையான் அருள்பாலித்த திருத்தலம் - என்.வைரவன்பட்டி.
காரைக்குடி- திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். இங்கே, அருள்மிகு வளரொளி நாதராகக் கோயில்கொண்டிருக்கிறார் சிவனார். சித்தர்களுக்கு ஒளி வடிவாய் காட்சி தந்ததால் இப்படியரு நாமகரணம் இந்தச் சிவனாருக்கு. இங்கு அருளும் அம்மையின் திருநாமம்- ஸ்ரீவடிவுடைநாயகி.
பாண்டியர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த ஆலயம், நகரத்தார்கள் போற்றிப் பரவும் 9 ஆலயங்களில் முதன்மையானது என்கிறார்கள். இந்தக் கோயிலின் சிறப்பம்சம் ஸ்ரீபைரவ தரிசனம். அம்மையப்பனுக்கு அடுத்த பிரதான தெய்வமாக இவரே இங்கு வழிபடப்படுகிறார்.


தேவாதிதேவர்களாலும் வெல்ல முடியாத வல்லமை பெற்றிருந்தான் சம்பகாசுரன். அவனை, சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் தோன்றிய ஸ்ரீபைரவ மூர்த்தி வதம் செய்தார். இதை நினைவுகூரும் வகையில் வருடம்தோறும் ஐப்பசி மாதத்தில், சம்பகா சஷ்டி விழா இங்கே கொண்டாடப்படுகிறது. திருக்கோயிலில் ஸ்ரீவளரொளி நாதரும் ஸ்ரீவயிரவரும் அருகருகே சந்நிதி கொண்டுள்ளனர் (ஸ்ரீபைரவரையே வயிரவர், வைரவர் என்றெல்லாம் அழைப்பர்).



பிணி தீர்க்கும் பைரவ தீர்த்தம்!


ஸ்ரீபைரவர் மட்டுமல்ல, அவருக்கான வழிபாடுகளும் இங்கே விசேஷம்தான்! இந்தத் திருத்தலத்துக்குச் சென்று ஸ்ரீபைரவர் சந்நிதிக்கு எதிரே உள்ள பைரவ தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம். சம்பகாசுரனை வதம் செய்த சூலத்தைக் கழுவுவதற்காக ஸ்ரீபைரவர் உருவாக்கிய தீர்த்தம் இது என்கின்றன புராணங்கள். இதை, அஷ்ட வயிரவ சூல தீர்த்தக் குளம் என்றும் போற்றுகின்றார்கள்.


ஸ்ரீபைரவர் சந்நிதியின் 12 தூண்களும் 12 ராசிகளுக்காகக் கட்டப்பட்டுள்ளன. இவையனைத்தையும் கட்டுப்படுத்தும் மூலவராக ஸ்ரீபைரவர் அருள்கிறார் என்பது ஐதீகம்.


குழந்தை வரம் அருளும் தெய்வ விருட்சம்!


தொடர்ந்து 3 புதன்கிழமை (அ) சனிக்கிழமைகள் இந்தக் கோயிலுக்குச் சென்று அஷ்ட வயிரவ சூல தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீபைரவரை வழிபட்டு, கோயிலின் பின்புறம் உள்ள ஏறு அழிஞ்சில் மரத்தை வலம் வந்து வணங்க, குழந்தை வரம் கிடைக்கும்;  இழந்த பணத்தையும் புகழையும் மீண்டும் பெறலாம் என்கின்றனர். இந்த மரத்தடியில் தியானம் செய்வதை விருட்ச விசேஷம் என்பர்.


இந்த மரத்துக்கு வேறொரு மகத்துவமும் உண்டு. இறைவனால் உருவாக்கப்பட்ட மனிதன் இறந்ததும் மீண்டும் இறைவனால் ஆட்கொள்ளப்படுகிறான் என்பதை உணர்த்தும் விதமாக, ஏறு அழிஞ்சில் மரத்திலிருந்து கீழே விழும் விதைகள் மீண்டும் மரத்திலேயே ஒட்டிக்கொள்கின்றனவாம். மேலும், மாசி மாதத்தில் இந்த மரத்தில் பூக்கும் சூரிய வெண்மை கொண்ட பூக்களைக் காண்பதே புனிதம் என்கிறார்கள்.


தோஷம் நீக்கும் துலாபாரம்!


ஸ்ரீபைரவருக்குப் பிடித்தமான உளுந்து, வெல்லம், பச்சரிசி ஆகியவற்றைத் துலாபாரம் செலுத்தி வழிபடுவதால், அஷ்டமத்து சனி, ஏழரைச் சனி, சனி தசை நடைபெறும் அன்பர்கள் சனிக் கிரக பாதிப்புகள் யாவும் நீங்கி நலம் பெறுவர் என்பது நம்பிக்கை.


மேலும், படிப்பில் மந்தமாக உள்ள பிள்ளைகளை இந்தத் தலத்துக்கு அழைத்து வந்து வழிபடச் செய்தால், விரைவில் அவர்களின் கல்வியறிவு மேம்படும்; பாலாரிஷ்ட தோஷம் முதலானவை நீங்கும் என்றும் விவரிக்கிறார்கள் பக்தர்கள்.


இரவில் தங்கி... உச்சிப்பொழுதில் தரிசனம்!


இந்தக் கோயிலின் மற்றுமொரு சிறப்பு ஸ்ரீவடிவுடையம்மன். மற்ற கோயில்களில் உள்ள அம்மன்களைவிட ஸ்ரீவடிவுடையம்மனின் காது பெரிது எனச் சிலாகிக்கிறார்கள் பக்தர்கள். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இரவு ஸ்ரீவடிவுடையம்மனைப் பிரார்த்தித்து, அங்கேயே தங்கியிருந்து, மறுநாள் உச்சிப் பொழுதில் ஸ்ரீபைரவரை வழிபட, நினைத்த காரியங்கள் இனிதே நிறைவேறும்.


நித்யாக்னி பூஜை!


வளரொளி நாதர் அக்னி சொரூபராக இருப்பதால், வருடத்தின் 365 நாட்களும் இங்கே நித்ய அக்னி பூஜை நடைபெறும். இதில் கலந்து கொண்டு வழிபடுவதால் தீராத பீடைகளும் நோய்களும் நீங்கும்; திருமண தோஷங்கள் தவிடுபொடியாகும். அதேபோன்று, அம்மன் சந்நிதிக்கு நேர் பின்புறம் உள்ள இரண்டு பல்லி உருவங்களை வழிபடுவதன் மூலம் பில்லி தோஷங்கள் அகலுமாம். வள்ளி- தெய்வானை தேவியருடன் ஸ்ரீசண்முகநாதராகவும், ஸ்ரீசுப்ரமணியராகவும் இரண்டு சந்நிதிகளில் முருகப்பெருமான் இங்கு அருள்பாலிக்கிறார். ஸ்ரீசண்டீஸ்வரர், ஸ்ரீஆஞ்சநேயர் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம்.



பெரும்பாலும் சிவாலயங்களில் வலப்புறம் விநாயகரும் இடப்புறம் முருகப்பெருமான் சந்நிதி யும் அமைந்திருக்கும். ஆனால், இங்கே இடப் புறத்தில் முப்பலிக் கருப்பர் அருள்கிறார். இவரை வணங்கி வழிபட, மன தைரியம் உண்டாகும்; உடல் பலம் பெருகும் என்கின்றனர். நாமும் வைரவன்பட்டி தலத்துக்குச் சென்று ஸ்ரீபைரவரை வழிபட்டுப் பலன் பெறுவோம்.



நன்றி - சக்தி விகடன்