Showing posts with label அழகு குட்டி செல்லம்’. Show all posts
Showing posts with label அழகு குட்டி செல்லம்’. Show all posts

Thursday, December 31, 2015

அழகு குட்டி செல்லம்’

‘நஞ்சுபுரம்’ திரைப்படம் வழியாகக் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சார்லஸ். திரைப்படங்கள் குறித்தும் திரைக்கதைக் குறித்தும் எளிமையான மொழியில் ஆழமாக எழுதிவரும் அயராத வலைப்பூ எழுத்தாளராகவும்(https://vaarthaikal.wordpress.com/) தன்னைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அழகு குட்டி செல்லம்’. படம் குறித்து அவரிடம் பேசியதிலிருந்து…உங்களது பின்னணியைச் சுருக்கமாகப் பகிருங்கள்?


எனது சொந்த ஊர் கோவில்பட்டி. நான் படித்தது வளர்ந்தது எல்லாமே அங்கேதான். பள்ளிக் காலத்தில் ஓவியம் மீதும் கவிதை மீதும் அதிக ஆர்வமிருந்தது. பத்தாம் வகுப்பு படிக்கிறபோது யாப்பிலக்கணத்தை முறையாகப் பயின்றேன். மரபுக் கவிதைப் போட்டிகளில் மாவட்ட அளவில் பரிசுகள் வாங்கியிருக்கிறேன்.பிறகு சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். சினிமா பார்க்க வீட்டில் தடையில்லை என்பதால் சிறு வயது, முதலே அதிக படங்களைப் பார்த்து வளர்ந்தேன். பிறகு பள்ளியிறுதி வகுப்பு படிக்கிறபோது தூர்தர்சன் ஒளிபரப்பிவந்த ஒரு நிகழ்ச்சி என்னை சென்னை திரைப்படக் கல்லூரி நோக்கி இழுத்து வந்தது. பல்கலை. மாணவர்களுக்காக ஒளிபரப்பப்பட்டுவந்த உயர்கல்வி நிகழ்ச்சி அது. அதில் வாரம் ஒருமுறை ‘அண்டர்ஸ்டாண்டிங் சினிமா’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதைத் திறம்பட நடத்திவந்தவர்‘ஏழாவது மனிதன்’ திரைப்படத்தை இயக்கிய தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ஹரிஹரன். அந்த நிகழ்ச்சி சினிமா பற்றி அடிப்படையான அறிவையும் தொழில்நுட்ப அறிவையும் எனக்கு ஒருசேர வழங்கியது. பிறகு 12-ம் வகுப்பு முடிந்ததும் சென்னை அரசுத் திரைப்படக் கல்லூரியில் இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல் பிரிவில் சேர்ந்து படித்தேன். திரைப்படக் கல்லூரியின் இறுதியாண்டில் கமல ஹாசன் மருதநாயகம் படத்தைத் தொடங்கினார். அவரது படத்தில் பயிற்சி உதவி இயக்குநராக பணிபுரிய எனது துறையாசிரியரும் கமல் சாரும் தேர்ந்தெடுத்த மூன்று மாணவர்களில் நானும் ஒருவன்.எதிர்பாராத விதமாக அந்தப் படம் தொடர்ந்து நடக்காததால் நாங்கள் பணிபுரிய முடியாமல் போனது. ஆனால் தனியார் தொலைக்காட்சிகளுக்குக் கிடைத்த வரவேற்பு என்னைப் போன்ற இன்ஸ்டிட்யூட் மாணவர்களுக்குப் பெரிய வாசலைத் திறந்துவிட்டது.
திரைப்படக் கல்லூரி வட்டாரத்தில் விசாரிக்கும்போது உங்களை ‘அகதி’ சார்லஸ் என்றார்கள்...
நான் இயக்கிய டிப்ளமா குறும்படம்தான் ‘அகதி’. 90களில் ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பிறகு இலங்கைப் பிரச்சினை பற்றி பேசவே பயந்த நாட்கள் அவை. அப்போது ஓர் ஈழ அகதியை மையப்படுத்தி நான் எனது குறும்படத்தை இயக்குகிறேன் என்றதும் கல்லூரி நிர்வாகமும் ஆசிரியர்களும் அதை விரும்பவில்லை. படத்தை எடுத்து முடிக்கும் முன்பே அதைப் பார்க்காமல் அதிருப்தி அடைந்தார்கள். ஆனால் நான் பிடிவாதமாக அந்தப் படத்தை எடுத்தேன்.எனது படத்தின் திரைமொழியில் தவறு இருந்தால் அதற்கு பெயில் மார்க் கூட போடுங்கள். ஆனால் தடுக்காதீர்கள் என்றேன். ஏற்றுக்கொண்டார்கள். அந்தக் குறும்படத்துக்காக ஒரு குண்டுவெடிப்பையும் யாழ்ப்பாணத்தையும் சித்தரிக்க வேண்டியிருந்தது. அதில் ஈழ அகதி இருந்தாலும் உலகளாவிய அகதிகளின் பிரச்சினையை பதிவு செய்தேன். இன்றளவும் புதிய மாணவர்களுக்குத் திரையிடப்படும் படமாக ‘அகதி’ இருக்கிறது. அந்தப் படம் ஏற்படுத்திக் கொடுத்த பெயர்தான் ‘அகதி’ சார்லஸ்.


‘நஞ்சுபுரம்’ திரைப்பட அனுபவம் பற்றிக் கூறுங்கள்
2006 ல் டிஜிட்டல் கேமராக்கள் இங்கே பிரபலமாகாத காலகட்டத்தில் அந்தப் படத்தை நானும் நடிகர் ராகவும் டிஜிட்டலில் உருவாக்கினோம். எங்களோடு சேர்ந்து அந்தப் படத்துக்கு மொத்தம் 29 பேர் முதலீடு செய்தார்கள். இன்று பிரபலமாக இருக்கும் தம்பி ராமைய்யா அண்ணனை இந்தப் படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தினேன். அதேபோல சகோதரர் ‘ஆடுகளம்’ நரேனை இந்தப் படத்தில் நாயகனின் அப்பாவாக ஒரு சீரியஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவைத்தேன்.ஒரே மூச்சில் படத்தை எடுத்து முடித்தாலும் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. பிறகு இராம.நாராயணன் இந்தப் படத்தை வெளியிட்டு வெற்றிபெற வைத்தார். யதார்த்த சினிமா அல்லது வணிக சினிமா-இந்த இரண்டு வகைதான் இங்கே பிரதானமாக எடுக்கப்பட்டு வரும் நிலையில், நஞ்சுபுரம் படத்தை ‘ஃபேண்டஸி கலந்த மெட்டஃபாரிக்’ படமாக முயற்சித்து வெற்றியும் பெற்றோம். பாம்புப் படம் என்றால் பக்தி கலந்த சென்டிமென்ட் முக்கியமாகக் கருதப்பட்டுவரும் நிலையில் பாம்பை ஒரு தீய சக்தியாக, சாதியத்தின் உருவகமாக அந்தப் படத்தில் சித்தரித்தேன். பாம்பின் விஷத்தைவிட சாதியத்தின் விஷம் கொடியது என்பதை அந்தப் படம் கோனார் நோட்ஸ் இல்லாமல் காட்சிகளின் வழியாகவே ரசிகர்களை உணரவைத்தது.பல விமர்சகர்கள் தமிழின் முதல் மெட்டஃபாரிக் படம் என்றும் பாராட்டியதை மறக்க முடியாது. இதைவிட மறக்க முடியாத ஒன்று நஞ்சுபுரம் ஓடிய திரையரங்குகளில் பாம்பு வரும் எல்லாக் காட்சிகளிலும் ரசிகர்கள் கால்களை இருக்கையில் தூக்கி வைத்துக்கொண்டு பயத்துடன் ரசித்தார்கள்.‘அழகு குட்டி செல்லம்’ உங்களது முந்தைய ஆக்கங்களிலிருந்து எப்படி மாறுபடுகிறது?‘நஞ்சுபுரம்’ டார்க் ஸ்டோரி என்றால் இது வெளிச்சத்தின் கதை, நம்பிக்கையின் கதை என்று சொல்ல வேண்டும். ‘அகதி’ எனக்கு நிறைய தொடர்புகளையும் நட்புலகையும் உருவாக்கித் தந்தது. ‘நீயா? நானா?’ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் இயக்குநர் அந்தோணியை ‘அகதி’ குறும்படத்தைப் எடுத்த துணிச்சலான திரைப்படக் கல்லூரி மாணவராகத்தான் சந்தித்தேன். அவர்தான் தற்போது ‘அழகு குட்டி செல்லம்’ படத்தின் தயாரிப்பாளர். இந்தப் படத்தின் கதையைக் கேட்ட அவர் ‘ நானே இதைத் தயாரிக்கிறேன்’ என்று முன்வந்தார்.இந்தக் கதை இப்படித்தான் போகும் என்று எல்லோரும் நினைக்கும்போது, அது ரசிகர்கள் சிலிர்த்து ஏற்றுக்கொள்ளக்கூடிய இன்னொரு பாதையில் பரபரப்பாக நகரும் திரைக்கதையைக் கொண்டது. இது சிறுவர்களைப் பற்றிய பெரியவர்களுக்கான படம். சிறுவர்களுக்கு மிகவும் பிடிக்கக்கூடிய படம். பல கதாபாத்திரங்கள். பல கதைகள். எல்லாக் கதைகளுமே குழந்தைகளின் விதவிதமான பிரச்சினைகளை மையப்படுத்தியதாகவே இருக்கும்.இந்தப் படத்தின் மையம் என்னவென்றால்… இந்த உலகத்தில் நடக்கும் எல்லா விஷயங்களும் குழந்தைகளுக்காகத்தான். வருங்கால சந்ததிகளை மனதில் கொள்ளாமல் நாம் ஒரு சிறு துரும்பைக்கூட கிள்ளிப்போட முடியாது. இதை நாம் உணர்வதில்லை. அதேபோல இந்த உலகின் பெரிய பிரச்சினைகள் குழந்தைகளை மையப்படுத்தியதாக இருக்கின்றன.
இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வும் குழந்தைகள்தான். இதில் திரைக்கதையும் இசையும் கதையை நகர்த்திச் செல்வதில் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. தமிழ் சினிமாவில் காட்சிமொழியைத் தீவிரமாகவும் அழகியலுடனும் பயன்படுத்தும் விஜய் ஆம்ஸ்ட்ராங்க் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வேத் சங்கர் இசை அமைத்திருக்கிறார். பிரவீன் பாஸ்கரின் படத்தொகுப்பும் பேசப்படும். அதேபோல் இந்தப் படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்களின் பங்களிப்பும் ரசிகர்களால் கொண்டாடப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.a

 tha hindu
சார்லஸ்