Showing posts with label அம்மா’ மெஸ். Show all posts
Showing posts with label அம்மா’ மெஸ். Show all posts

Sunday, February 24, 2013

சாப்பாட்டுக்கடை -அம்மா’ மெஸ் - சென்னை

அன்னமிட்ட கை... நம்மை ஆக்கிவிட்ட கை...’ என்று, எம்.ஜி.ஆர். பட பாட்டு ஒன்று இருக்கிறது. முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் ஜோராக ஆரம்பித்துவிட்ட அரசின் மலிவு விலை உணவகத்தைப் பார்த்து ரத்தத்தின் ரத்தங்கள் இப்படித்தான் பாடுகிறார்கள்!  
சென்னை மாநகராட்சி சார்பில் 15 இடங்களில் மலிவு விலை உணவகங்களை 19-ம் தேதி மதியம் திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. காலையில், ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லியும் மதியம் தயிர் சாதம் மூன்று ரூபாய்க்கும் சாம்பார் சாதம் ஐந்து ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இட்லிக்கு சாம்பார் மட்டுமே, சட்னி கிடையாது. தயிர் சாதத்துக்கு ஊறுகாய் கிடையாது. சாம்பார் சாதத்துக்கு அப்பளம் கிடையாது. 'அதையும் சேர்த்துக் கொடுத்தா என்னவாம்?’ என்று கேட்கிறார்கள் பசியோடு வருபவர்கள்!



மண்டலத்துக்கு ஒன்று எனத் திறக்கப்பட்டுள்ள இந்த உணவகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஐந்து லட்ச ரூபாய் செலவில் சமையல் பாத்திரங்கள், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாதத்தில் 200 வார்டுகளிலும் கடை திறக்கத் திட்டமாம். மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு சமையல் பயிற்சி வழங்கப்படுகிறது. உணவுக்கூடத்தில் வேலை செய்பவர்களுக்கான சீருடை, பச்சைக் கலர் சேலை. கடை திறக்கப்பட்ட முதல் நாள் ஒரு மணி நேரத்திலேயே உணவு வகைகள் காலியானது. சாந்தோமில் முதல்வர் திறந்து வைத்த உணவகத்தில் மறுநாள் காலை 6.30 மணியில் இருந்தே நீண்ட வரிசை நின்றது.


''சாம்பார் சாதம் ருசியா இருந்துச்சு. நான் செக்யூரிட்டியா வேலை பார்க்கேன். ஒரு சாதமே வயிறு ஃபுல் ஆகிருச்சு. என்னோட வசதிக்கு எப்பவும் ரோட்டுக் கடைதான். இனிமேல் அம்மா கடைதான்'' என்றபடியே சாம்பார் சாதத்தில் அம்மா முகம் பார்க்கிறார் சர்தார் முகமது.



சீனிவாசபுரத்தைச் சேர்ந்த அஜிதா, ''பேப்பர் பிளேட்டை கையில் பிடிக்க முடியலை. சாப்பாடு சூடாக இருக்கிறதுனால, பயங்கரமாச் சுடுது. உட்கார்ந்து சாப்பிடலாம்னு பார்த்தா, அதுக்கு இட​வசதி இல்லை'' என்று 'உச்’ கொட்டுகிறார்.


தனியார் நிறுவன ஊழியர் செல்வகுமார், ''சாம்பார் சாதத்தில் மஞ்சள் வாசம் அதிகமா இருக்கு. ரெண்டு சாதமும் 350 கிராம் அளவுனு சொன்னாங்க. ஆனா, தயிர் சாதம் அளவு குறைவாத் தெரியுது. தொட்டுக்க ஏதாவது கொடுத்தாத்தானே சாப்பிட முடியும்?'' என்று கெஞ்சிக் கேட்கிறார்.



குறைகள் என்று சிலர் பட்டியல் போட்டாலும், ஜெட் வேகத்தில் எல்லாம் காலியாகி விடுகிறது. தரம் குறையாமல் இதே அக்கறையோடு தொடர்ந்தால், 'அம்மா’ மெஸ் ஏழைகளின் அமுதசுரபி​யாகிவிடும்!


- எஸ்.முத்துகிருஷ்ணன் 

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்


நன்றி - விகடன்