Showing posts with label போட்டி. Show all posts
Showing posts with label போட்டி. Show all posts

Saturday, August 18, 2012

பால்காரம்மா - எம்.ஜி.கன்னியப்பன் - மூன்றாம் பரிசுக் கதை-கல்கி

மூன்றாம் பரிசுக் கதை



பால்காரம்மா



ஓவியம்: தமிழ்


எம்.ஜி.கன்னியப்பன்


நடுவர் கமென்ட்ஸ்!


மனிதாபிமானம் குருத்துவிடும் கதை. மனிதநேயமும், அன்பும், ஆதரவற்ற இதயங்கள் மீது பொழியும் கருணையும் இன்றும் வற்றிவிட வில்லை என்பதை வலியுறுத்துகிறது. மனத்தில் வெகுநேரம் வலம் வரும் சோகம் ததும்புவது.


- வெ.இறையன்பு, ஐ.ஏ.எஸ்.



தாயின் மனதை யார்தான் கணிக்க முடியும்... உதவி செய்யும் மனம் அடுத்த முறை தயங்குவது, அது அன்பு மட்டுமே செய்யத் தெரிந்த ஒருத்தியினால் என்பது இதில் நான் ரசித்த முரண்.

- ரோஹிணி



அன்று தீப்பற்றிக் கொள்ளாத ஞாயிற்றுக்கிழமை. பரபரப்பு இல்லை. புரண்டு போத்திக் கொண்டு எட்டு வரை தூங்கலாம். டி.வி. பார்க்கலாம். காயமின்றி ஷேவ் செய்யலாம். மதியம் தூங்கலாம். மாலையில் குளிக்கலாம்.



மனைவி திவ்யா மணக்க மணக்கப் போட்டிருந்த காஃபியைக் குடித்துவிட்டு நாக்கில் இனிப்புச் சுவை குறையுமுன் ஒரு நிக்கோடின் குச்சியையும் தீப்பெட்டியையும் எடுத்துக் கொண்டேன். மொட்டை மாடி அதற்கெல்லாம் வசதியாக இருந்தது.





மாடி செல்லும் முன் பெட்ரூமை எட்டிப் பார்த்தேன். என் ஐந்து வயது கீர்த்தனா கடந்த ஆறு நாட்களுக்கான அதிகாலைத் தூக்கத்தை நிறைவு செய்து கொண்டிருந்தாள். சத்தமில்லாமல் கதவைச் சாத்திவிட்டு மாடிக்கு வந்தேன். முனையைப் பற்றவைத்துக் கொண்டு நுரையீரலை நிரப்பினேன்.





சென்னைக்கு வந்து ஒன்பது மாதங்கள். பிரபலமான கம்ப்யூட்டர் நிறுவனத்தின் கோவை கிளையிலிருந்து சென்னை மெயின் பிராஞ்சுக்கு மாற்றியிருந்தார்கள். இங்கு எல்லாமே புதிது. மக்கள், பேச்சு, வேலை, நடவடிக்கை, நட்பு, ட்ராஃபிக் எல்லாமே... அதிலும் சொந்த வீடு இல்லை என்றால், மாதமொருமுறை 'TOLET' போர்டைத் தேட வேண்டியதுதான்.



சிகரெட்டைப் பாதியோடு மிதித்து அணைத்துவிட்டு, ஹால்ஸ் போட்டுக் கொண்டு கீழே வந்தேன். திவ்யா காய்கறி கேரி பேகுடனும் அன்றைய தினசரியுடனும் வந்தாள். பேப்பரைக் கொடுத்தாள்.



இன்றைக்கு என்ன ஸ்பெஷல்?"



மீன்... சங்கரா மீனே... கிலோ இருநூறு சொல்றாங்க... அரைகிலோதான் வாங்கினேன்... போதுமில்ல?"



தாராளமா போதும். கீர்த்துக்குட்டி எழுந்துட்டாளா?"


இல்லை..." பேப்பரைப் பிரித்து தலைப்புகளை மேலோட்டம் பார்த்தேன்.


ஏம்மா... கீழே ஒரே சத்தமா இருக்குது... என்னாச்சு?"



வழக்கம் போலத்தாங்க... எதிர்வீட்டு பால்காரம் மாவுக்கும், அவங்க மருமகளுக்கும் சண்டை.

"

என்னதான் அவங்க பிரச்னை?"



மாமியார் வீட்டுல இருக்கிறது மருமகளுக்குப் பிடிக்கலை. என்ன காரணம் காட்டியாவது வீட்டை விட்டு விரட்டிடணும்னு முடிவு பண்ணிட்டா... அதுக்குத்தான் இந்த ஆர்ப்பாட்டம்."



வயசானவங்க எங்க போக முடியும். யோசிக்க வேணாம். அந்தம்மாவோட பையனும் கேட்டுக்கிறதில்லையா?"



என்னத்த கேட்க முடியும். நீங்களே பாத்திங்கில்ல ரோடுன்னு கூடப் பார்க்காம புருஷனை என்ன மாதிரி அசிங்கம் அசிங்கமா திட்டிச்சின்னு."



கூடப் பொறந்தவங்க யாரும்... கேட்க மாட்டாங்களா?"



அந்தம்மாவுக்கு அவர் ஒரே பையன் தான். தவமிருந்து பெத்திருப்பாங்க பாவம். வீடு வாசல்னு சேர்த்து வெச்சி என்ன பண்றது. கடைசி காலத்துல ஒரு வாய் சோறுக்கும் கட்ட துணிக்கும் கலங்குறாங்க."



மீன் கவரை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள் திவ்யா.



பால்காரம்மா பால் போடும் அம்மா வாகத்தான் எங்களுக்கு அறிமுகமானார். குடிவந்த இரண்டாம் நாள். அதிகாலை ஆறு மணிக்கு காலிங்பெல் ஒலிக்க, சின்னதும், பெரியதுமான பால்பாக்கெட்டுகளுடன் நின்றிருந்தார்.



தம்பி... இங்க நாலஞ்சு தெருவுக்கு நான்தான் பாக்கெட் போடுறேன். உங்களுக்கும் தேவைன்னா சொல்லுங்க. நாளையிலேர்ந்து கொண்டு வந்து போடுறேன். மாசம் ஐம்பது ரூபாய் சேர்த்துக் கொடுத்தா போதும்" என்றார்.



அதைச் சொல்வதற்குள் இரண்டு முறை வலது இடதுக்குமாக இடுப்புக்குப் பாத்திரத்தை மாற்றிக் கொண்டார். காலம் காலமாகப் பால் போடும் பெண்ணாகத் தெரியவில்லை. ஏதோ வறுமைக்குத் தள்ளப்பட்டு வாழ்ந்து கொண்ட குடும்பத்து முதியவள் போல இருந்தாள்.

கேட்ட பாவனையில் ஐம்பது ரூபாய் விட்டுப் போய்விடக் கூடாதே என்ற கவலை தெரிந்தது.

நான்கைந்து வீடுகள் தள்ளிப் போனால் மளிகைக் கடையிலேயே பால் கிடைக்கும் என்றாலும் அந்த அம்மாவுக்கு மாதம் கொடுக்கும் ஐம்பது ரூபாயில் ஒன்றும் குறையப் போவதில்லை.



சரிங்கம்மா நாளை லேர்ந்து போடுங்க. முன்னாடியே பணம் அட்வான்ஸ் கட்டணுமா?"



வேண்டாம்மா. எதிர்த்த மாதிரிதான் என் வீடு. இந்தக் கெழவிய ஏமாத்தி ஓடிப்போயி மாடியா கட்டப் போறீங்க. எத்தனை லிட்டர் தேவைப்படும் தம்பி?"




ஒரு லிட்டர் போதும்மா. ரெண்டு அரையா போட்டுடுங்க."



சரிப்பா. கேட்டுல ஒரு பை மட்டும் கட்டிவைங்க பால் போட்டதும் பெல் அடிக்கிறேன். எப்பவேணாலும் எடுத்துக்கங்க" என்று தொழில் விருத்தியான சந்தோஷத்தில் இறங்கிப் போனார்.



இன்று வரை அவர் பால் போடுவதோடு, மதிய நேரங்களில் திவ்யாவுடன் பேச்சுத்துணைக்கு இருப்பார். மகன், மருமகளைப் பற்றிய மனக்குறைகளைக் கொட்டுவார். அவர் கணவருடனான பிரியம், அவர் இருந்த வரைக்குமான கவனிப்பு எல்லாம் ஒன்று விடாமல் சொல்லுவார். கீர்த்தனாவும் பாட்டி பாட்டி என ஒட்டிக் கொண்டாள். நான் வெளியூர் செல்லும் நேரங்களில் வீட்டில் வந்து படுத்துக் கொள்வார். கீர்த்தனாவைப் பள்ளியிலிருந்தும் அழைத்துக் கொண்டும் வந்திருக்கிறார். வேண்டாம் வேண்டாமென மறுத்தும் கேட்காமல் காய்கறி நறுக்குவது, மீன் சுத்தப்படுத்துவது, கோதுமை அரைத்துக் கொடுப்பது என சின்னச் சின்ன உதவிகளைச் செய்வார்.



ஒருநாள் மகன் குடும்பத்துடன் திருப்பதி சென்றபோது வீட்டில் தனியாகக் குளிர் ஜுரத்தில் முனகிக் கொண்டிருந்த பால்காரம்மாவை திவ்யா தான் ஆஸ்பிடலுக்கு அழைத்துச் சென்று வைத்தியம் பார்த்தாள். திரும்பி வந்த மகன் விஷயத்தைக் கேள்விப்பட்டு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லவில்லை. காப்பாற்றிய கோபமோ என்னவோ.



ஒரு பண்டிகையின் போது அந்த அம்மாவுக்கும் ஒரு நூல் புடைவை எடுத்துக் கொடுத்தேன். கட்டிய அன்று பெரிய ரகளை. வீடுவீடா போய் துணி பிச்சை கேட்குறியா, கட்டிக்கத் துணி எடுத்துத் தரக்கூடவா வக்கத்துப் போயிட்டோம்," என்று ஒன்றுமில்லாத விஷயத்துக்கு பெரிதாகத் தெருவையே வேடிக்கை பார்க்க வைத்துவிட்டாள் மருமகக்காரி.





அந்த அம்மாளின் ஒவ்வொரு நாளும் நரகமாகத்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. என்னங்க" திவ்யா சமையல் அறையிலிருந்து குரல் கொடுத்தாள்.



சென்றேன்.



என்ன?"

எங்கப்பா நேத்து ஃபோன் பண்ணியிருந்தாரு. ஊர்ல இருந்த காட்டை வித்துட்டாங்களாம். அதைப் பங்கு பிரிச்சதுல எனக்கு இருபது ரூபாய் வருதாம். என்ன பண்ணலாம்?"



உனக்கு என்ன தோணுதோ செய்ம்மா."



எத்தனை காலத்துக்கு வாடகை வீட்டிலேயே காலம் தள்ளுறது. நமக்குன்னு சொந்த வீடு, வாசல்னு இருக்க வேணாமா?"



வேணும்தான். இருபது லட்சத்தை வெச்சிக்கிட்டு சென்னைல வீடு வாங்க முடியாது. வாசல் மட்டும்தான்..."



உங்க ஆஃபீஸ்ல லோன் போடுங்க. உங்கப்பாகிட்ட பணம் கேளுங்க. ஐம்பது அறுபதுல வாங்க முடியாதா..."



முடியும்மா... நல்ல ஐடியாதான். முயற்சி பண்றேன்."



அடுத்த மாதமே பால்காரம்மாவிடமிருந்து அந்தச் செய்தி வந்தது. அவரது மகன் வீட்டை விற்றுவிட்டு மனைவியின் சொந்த ஊரில் செட்டிலாகப் போவதாகக் கூறினார்.



பால்காரம்மாவின் வீடு இருபது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக இருந்தாலும், பார்க்க லட்சணமாகத்தான் இருந்தது. திவ்யாவுக்கும் வீடு பிடித்திருந்தது.



நேராக பால்காரம்மாவின் மகனைப் பார்த்துப் பேசினேன்.

இங்க பாருங்க சார். புரோக்கர்கிட்ட போனா கமிஷனுக்காக விலையை ஏத்தி விட்டு நீங்க விற்க முடியாத மாதிரியும், நான் வாங்க முடியாத மாதிரியும் பண்ணிடுவாங்க. அவங்களுக்குக் கொடுக்கறதை நாம பிரிச்சுக்குவோம். அதனால என்ன விலையோ சொல்லுங்க. கூடக் கொறைச்சி நாமளே பேசி முடிச்சுக்குவோம்."



பின்னால் நின்றிருந்த மனைவியை ஒருதரம் திரும்பிப் பார்த்துவிட்டுத் தலையாட்டினார்.



பல தொகைகள் பேசப்பட்டு பின் ஐம்பது லட்சம் என முடிவானது. ஒரு நல்ல நாளில் பத்திரப்பதிவும் பணம் செட்டில் செய்வதாகவும் முடிவாயிற்று.



அந்த நேரத்தில் அதைக் கேட்கக் கூடாதுதான் இருந்தாலும் மனம் தாங்காமல் கேட்டு விட்டேன்.



அம்மா உங்க கூடவே வர்றாங்களா...?"



இல்லைங்க சார். கிராமத்துல எதுக்கு? நாற்பது வருஷமாய் இங்க பழகிட்டு, திடுதிப்புன்னு புது இடத்துக்குக் கூட்டிட்டுப் போனா அந்தரத்துல விட்ட மாதிரி ஆயிடும். அதனால ஒரு நல்ல முதியோர் இல்லத்துல விட்டுட்டு மாதா மாதம் பணம் அனுப்பலாம்னு இருக்கோம். ஆறு மாதத்துக்கு ஒரு தடவை வந்து பார்த்துட்டும் போகலாம்" என்றார்.



சுவரின் மூலையில் ஒட்டி அமர்ந்திருந்த பால்கார அம்மா முந்தானையில் கண்களை ஒற்றியபடி பேச எதுவுமில்லை என்பது போல இருந்தார்

.

பேரம் திருப்தியாக அமைந்ததால், பால்காரம்மா மருமகள் கொண்டு வந்து கொடுத்த காஃபியைக் குடித்துவிட்டு வெளியே வந்தேன். தம்பி... தம்பி..." என்று அழைத்தபடி பின்னாலேயே வந்தார் பால்காரம்மா. நின்றேன்.



இந்த வீட்டைக் கட்ட கொஞ்சநஞ்ச மில்லப்பா. பார்த்துப் பார்த்து இழைச்சிக் கட்டினது. எம்புள்ள விக்கிறேன்னு சொன்னதும் எனக்கு உசுரே போயிடுச்சு. நீங்க வாங்குறீங்கனதும் மனசுக்கு ஆறுதலாய் இருக்கு" சற்று நேர அமைதிக்குப் பின் தம்பி எனக்காக ஒரு உதவி செய்வியா?"



என்னம்மா செய்யணும் சொல்லுங்க...?"





இந்த வீட்டுல எம்புருஷனோடு சேர்ந்து சாகத்தான் முடியலை. அவர் வாழ்ந்த இந்த வீட்டுலயாவது கொஞ்ச காலம் இருந்துட்டுக் கண்ணை மூடிடறேனே... எங்கயாச்சும் ஒரு மூலையில இருக்க எடம் கொடுப்பா."



கும்பிட்ட அவரின் கையைப் பிடித்துக் கொண்டேன். சரிங்கம்மா" என்று விடுவித்தேன்.



நடந்த அனைத்தும் திவ்யாவிடம் சொன்னேன். மறுப்பு ஏதும் காட்டவில்லை. அத்தோடு இன்னொரு யோசனையும் இருந்தது. செலவோடு செலவாக இரண்டு லட்ச ரூபாயை பால்காரம்மா பெயருக்கு ஃபிக்ஸட் டெபாஸிட் செய்து, அதில் வரும் வட்டித் தொகை, அவருக்கு உதவியாக இருக்கும்படி செய்ய வேண்டும்.




இன்னும் ஒரு வாரத்தில் வீட்டைக் காலி பண்ணிக் கொடுப்பதாக பால்காரம்மா மகன் கூறினார். நினைத்த படியே பால்காரம்மா பெயரில் இரண்டு லட்ச ரூபாயை டெபாஸிட் செய்தேன். பத்திரப்பதிவு, திவ்யா பெயரில் செய்யப்பட்டது. எல்லாம் முடிவடைந்த நிலையில், அன்று காலை பால்காரம்மாவையும் அவருக்கான உடைகளையும் விட்டுவிட்டு அவரின் மகன் குடும்பம் வீட்டுப் பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு கிளம்பிப் போனார்கள்.




அன்று மதியமே நாங்களும் பால் காய்ச்சிக் குடிவந்தோம். ஒவ்வொரு பொருட்களாக புது வீட்டில் கொண்டு வந்து சேர்த்தோம். கீர்த்துக்குட்டிக்கு சந்தோஷத்தில் துள்ளிக் கொண்டிருந்தாள்.



பால்காரம்மாவுக்கு மாடியென்றால் படியேறும் சிரமம் இருக்கும் என்பதால் ஏற்கெனவே அவர் இருந்த கிணற்றை ஒட்டிய அறையையே ஒதுக்கிக் கொடுத்தேன். தம்பி என் வயித்துல நீ புள்ளையா பொறந்திருக்கக் கூடாதா" என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். இரவு சப்பாத்தி சாப்பிட்டு விட்டு அந்த அறையில் போய்ப் படுத்தும் கொண்டார்.



மறுநாள் அதிகாலை கதவு தட்டும் ஓசை கேட்டு நெஞ்சின் மேலிருந்த கீர்த்திக் குட்டியின் கையை விலக்கிவிட்டு எழுந்து வந்து கதவைத் திறந்தேன்.



பால்காரம்மா துணிகள் திணிக்கப்பட்ட பையோடு நின்றிருந்தார்.



என்னம்மா... பையோடு எங்க கிளம்பிட்டீங்க?"


தலைகவிழ்ந்தபடி சொன்னார்.


எம் புள்ளைகிட்டேயே போறேம்பா."



அவருதான் உங்களை வேணாம்னு விட்டுட்டுப் போயிட்டாறேம்மா."



இப்போது என் முகம் பார்த்தே பேசினார். அம்மாவை வேணாம்னு வெறுத்து விட்டுட்டுப் போற பிள்ளைங்க இருக்கலாம்பா... பிள்ளை வேணாம்னு ஒதுக்குற அம்மா இருக்க முடியுமா...

"

சட்டையை மாட்டிக்கொண்டு பைக் சாவியுடன் வெளியே வந்தேன்.



கோயம்பேடு பஸ் நிலையத்தில் மருமகளின் ஊரைக் கேட்டு, சிதம்பரம் போகும் பஸ்ஸில் அமரவைத்து ஆயிரம் ரூபாயைக் கையில் கொடுத்தேன். கண்டக்டரிடம் இடம் பார்த்து இறக்கிவிடச் சொன்னேன்.



வீடு வந்தேன். வாயில் ஓரமாக பைக்கை நிறுத்திவிட்டு படியேறப் போனேன். தெருவில் ஐஸ் வண்டி போல் இருந்த மூன்று சக்கர பால்வண்டி கைப்பிடியைத் தள்ளிக் கொண்டு ஒரு வயதான பெண்மணி நின்றாள்.

தம்பி."

என்னம்மா?"

புதுசா குடிவந்திருக்கீங்க போல... உங்க வீட்டுக்கு நாளைலேர்ந்து பால் போடலாமாப்பா..." என்றார் புன்னகையுடன்.

உங்களுக்கு எத்தனை பிள்ளைங்கம்மா?" என்றேன்.



கேள்வி அவருக்கு ஆச்சர்யமாக இருந்திருக்கும். சற்று நேரம் உற்றுப் பார்த்தார்.



அந்தக் கொடுப்பினை எனக்குக் கிடைக்கலேப்பா" என்றார்.



நாளையிலேர்ந்து எங்க வீட்டுக்குப் பால் போடுங்கம்மா" என்று சொல்லி விட்டுப் படியேறினேன்.



நன்றி - கல்கி, புலவர் தருமி 

Wednesday, August 08, 2012

பெண் ஜென்மம்! - 2ம் பரிசு ரூ 7500 பெற்ற கல்கி போட்டிக்கதை -

பெண் ஜென்மம்!



எஸ்.முத்துச்செல்வன்




வாளியில் தண்ணீர் நிரம்பி வழிய ஆரம்பித்தபோது சுயநினைவு தட்ட, பைப்பைத் திருகி நிறுத்தினாள். நிரம்பத் தடவியிருந்த எண்ணெய்ப் பிசுக்கு அழுக்கோடு சிதறியோட சீயக்காய் அரப்பை, தண்ணீர் சேந்திக் கரைத்துத் தலையில் அழுத்தி, தேய்க்க ஆரம்பித்தாள். குளியலறைக் கதவை ஊடுருவி, கம்பெனிக்குள் நுழையும் பணியாளர்களை அழைத்து வரும் பேருந்துகளின் ஹாரன் சத்தம் அவள் காதைத் துளைத்தது. அவசரமாகத் தண்ணீரைக் குவளையில் எடுத்து, தலைக்கு ஊற்றினாள். மீண்டும் மீண்டும் தலையைத் தேய்த்து நீரை மொண்டு ஊற்றிக் கொண்ட வளுக்கு நினைவில் அம்மாவின் முகம் தட்டுப்பட்டது.



தண்ணீயைப் பாத்துப் பாத்துச் சேந்துடி."


கோபத்தில் முகம் சிவக்க, திரும்பி அம்மாவை முறைத்தாள்.


என்னடி முறைக்கிறே அடிபைப்ல தண்ணீரை அடிச்சு எடுத்து வர்றவளுக்குத் தானே தெரியும்"


யாரோ குளியலறைக் கதவைத் தட்டி, ஏய்... எவடி இவ்வளவு நேரம் குளிக்கிறது..."


சுதாரித்தவள் அவசரமாக குளித்துவிட்டு நினைவுகளையும் துவட்டிய துண்டையும் உதறி விட்டு வெளியேறினாள். வெளியே நின்றிருந்தவள் முணு முணுத்ததைக் கண்டுகொள்ளாது படியிறங்கினாள்.


சௌம்யா, தங்கியிருக்கும் கம்பெனியின் விடுதியிலிருந்து பார்த்தால் சற்றுத் தொலைவில் கார்மெண்ட்ஸ் எக்ஸ்போர்ட் கம்பெனியின் நுழைவாயில் தெரியும். ஜன்னல் வழியே பார்த்தவள் பரபரத்தாள். கம்பெனிக்குள் அனைத்து பஸ்களும் நுழைந்துவிட்டிருக்க பணியாட்கள் ஷிப்டுக்கு வேகவேகமாகச் செல்வது தெரிந்தது. வேகமாக கம்பெனிக்கு நடக்க ஆரம்பித்தாள்.



வேலைக்குச் சேர்ந்து இன்று இருபத்தைந்து நாட்கள். முதல் நாளிலிருந்தே வீட்டு நினைவு அலைக்கழிக்கிறது. கண்களில் நீர் தளும்ப மனத்தை அடக்க பழகிக் கொண்டாள்.



அப்பாதான் இப்படியொரு கம்பெனி பற்றி விசாரித்து இருநூறு கிலோமீட்டர் தள்ளி வந்து சேர்த்துவிட்டார். வீட்டில் இவள் இரண்டாவது. இவளுக்குப் பிறகு நான்கு பேர். அம்மா தான் புலம்புவாள்.



எப்படித்தான் கரை சேர்க்கப் போறேனோ?"



பையன் பிறப்பான் என்று அம்மாவும் அப்பாவும் நினைக்க ஆறு பேரும் பெண்ணாகப் பிறந்தது பற்றி யாரிடம் குறைசொல்வது? இவள் ருதுவான போது ‘அய்யோ இவளுமா?’ என்றுதான் அம்மா எரிச்சலோடு கத்தினாள். அக்கா கார்த்திகா ருதுவாகி ஆறேழு மாதம் ஆகியிருந்தது. அடிவயிற்றின் வலியை விட அம்மாவின் எரிச்சல் மனத்தைச் சுக்குநூறாக்கியது.


வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் எல்லாமே பிரமிப்பு. நேற்றைக்கு கரட்டாம்பட்டியில் ஓடியாடித் திரிந்த வாழ்க்கை திடீரென்று தடம் புரண்டது போல் இருந்தது.



கார்த்திகா ஏழாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு சித்தாள் வேலைக்குச் செல்கிறாள். பத்தாம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்திருந்ததால் படிக்க வைப்பார்கள் என்று எதிர்பார்த்தாள்.



படிச்சா... படிச்ச மாப்பிள்ளையாகப் பார்க்க வேண்டும். ஏதாவது ஜவுளிக்கடை, ஜெராக்ஸ் கடைன்னு வேலைக்குச் சேர்த்து விடுங்க. மிச்ச சொச்சத்தைச் சேர்த்து வைச்சு கரைசேர்க்கவாவது ஆவும்." அம்மாவின் தின புலம்பல் அப்பாவைப் பாடுபடுத்திக் கொண்டிருந்தது. இவளும் படிப்பை நிறுத்திவிட்டதால் சும்மா பொழுதை வீட்டில் கழிக்கவில்லை. அவரைத் தோட்டத்தில் அவரை பறிக்க, கடலைக்காய் பிடுங்க என்று கூலி வேலைக்குச் செல்வாள். கம்பந்தட்டை அறுக்கவும் சென்றிருக்கிறாள்.



சௌம்யா யாருடி? நீயா... போ. கட்டிங் மாஸ்டர் குவாலிடி ஆபிஸர் எல்லாம் கூப்பிடறாங்க உன்னை."



கட்டிங் செய்து கொண்டிருந்த துணியை வைத்துவிட்டு டேபிளைச் சுத்தப்படுத்தி விட்டுச் சென்றாள்.



வந்து எத்தனை நாளாவுது? இப்படியா துணியை வெட்டறது?"



கட்டிங் மாஸ்டர் சத்தமிட்டபோது அவள் மனம் நடுநடுங்கியது. சரியாகத்தானே வெட்டினோம். காஸ்ட்லியான துணிவேறு.



துணியோட ரேட்டு என்ன தெரியுமா? வேலை செய்யத்தான் வந்தியா? பொழுது போக்க வந்தியா? இன்னையோட போகட்டும். அடுத்த முறை தப்பு பண்ணினே சம்பளத்துல பிடிச்சுக்குவோம். போ... லைன் சூபர்வைசர் யாரு? அந்தத் தறுதலையக் கூப்பிடு" என்றபடி அவர் நகர்ந்தார்.



டேபிளுக்கு வந்தாள். டயா பதினாலு என் பதில் நான்கை ஒன்பது போல் எழுதியிருப்பது போன்று தெரிய எல்லாமே தவறாகப் போய்விட்டது. விளக்கம் சொல்லாது அழுகையை மென்று முழுங்கி சரியான டயாவினை செட் செய்து துணியை கட் செய்தாள்.



இந்த மாதத்தோடு சம்பளத்தை வாங்கிக் கொண்டு வேலையை விட்டு வீட்டுக்குச் சென்றுவிட வேண்டும். போனதும் தங்கைகளோடு கூத்தடிக்க வேண்டும். எல்லா விளையாட்டுகளையும் அலுப்பு தீர விளையாடியது நெஞ்சுக்குள் அலையடிக்கிறது. தோற்று விட்டால், தோற்றவர்களை ‘தோத்தான் தும்பான் சோறு சட்டி திம்பான்’ என்று கேலி பண்ணினால் அழுவார்கள்.



இங்கே எல்லாவற்றையும் டி.வி. பெட்டி முழுங்கிக் கொண்டு அதுவே கதியெனக் கிடக்க வேண்டியிருக்கிறது. வீட்டில் இலவச டி.வி.கூட இல்லை.



ஏய் வெறும் சாப்பாட்டைக் கிளறிக்கிட்டு இருக்கே, போய் ரசம் வாங்குடி" - பக்கத்தில் அக்கா சத்தமிட நினைவைத் தட்டி விட்டு தட்டை எடுத்துக் கொண்டு உணவு பரிமாறும் இடத்துக்குச் சென்றாள்.



சாப்பிட்டு மாடிப்படி ஏற ஏற புளிக்குழம்பு சாப்பாடும் கேரட் பொரியல் வாசமும் ஏப்பத்தோடு வரும்போல் இருந்தது. துணிகளைத் துவைத்துக் காயப்போட வந்தபோது கீழிருந்து வார்டன் மைக்கில் ஒவ்வொரு மாடியிலும் இருக்கும் சில பெண்களை மட்டும் பெயர் குறிப்பிட்டுக் கீழே வரும்படி அழைத்தார்.



கீதா, கீர்த்தனா, ஸ்ரீதேவி, கனகா, லட்சுமி, அமுதா, ஆயிஷா, கௌசல்யா, சித்திரைச் செல்வி, சசிகலா, பவித்ரா, பவுலின் மேரி, மகாலட்சுமி, இலக்கியா, பிருந்தா, நதியா, குஷ்பு, பிரியதர்ஷினி, சௌம்யா..."



அரக்கப் பரக்கக் கிளம்பினாள்.



ஐந்து ஃப்ளோரில் தங்கியிருக்கும் நானூறு பேர் சொச்சத்தில் முப்பது நாப்பது பேராவது டைனிங் ஹாலில் இரைச்சலோடு குழுமியிருந்தனர்.

உஷ் சத்தம் போடாதீங்கடி."



பதினைந்து நிமிடங்கள் கழித்து பணியாளர் துறையின் மேலதிகாரி, வாய்பொத்தி அழுதபடி ஒரு அம்மாள், சோகமாக வெளிறிப்போன முகத்தோடு ஒல்லியாக ஒரு அண்ணன், சிவப்பாக தாட்டியாக சட்டையை இன் செய்து அலட்சிய முகபாவத்தோடு மற்றொரு அண்ணன் என நான்கு பேர் வந்தனர்

.

நம்ம ஹாஸ்டலில் ரூம் நெம்பர் அது18 ல் தங்கியிருந்த மாலாவோட அம்மா, அண்ணன், அந்தப் பொண்ணுக்கு நிச்சயம் பண்ணின மாப்பிள்ளை உங்க முன்னாடி நிக்கிறாங்க. மூன்று தினத்துக்கு முன்னாடி அவுட் பாஸ் வாங்கி ஊருக்குப் போறேன்னு கிளம்பிப் போன மாலாவைக் காணவில்லை."



நிறைய பேர் ‘அய்யோ’ என்று பயம் கலந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். மாலாவின் ஊருக்கு அருகாமையில் இருக்கும் அனைத்து ஊர்ப் பெண்களையும் அழைத்திருப்பது அப்போதுதான் தெரிந்தது. மாலா குறித்தும் அவள் முக அடையாளம் குறித்தும் எதுவும் நினைவில் தட்டுப்படவில்லை. ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் யார் யாரை நினைவில் வைப்பது? நிச்சயம் பண்ணின பிறகு காணாமல் போய்விட்டாள். மாலாவைக் கட்டிக்க இருந்த மாப்பிள்ளை வெறுப்பான பார்வையை எங்கள் மீது வீசினார்.



அன்றைக்கு முழுதும் காணாமல் போனவளைப் பற்றித்தான் பேச்சு. எனக்கு என்னவோ வீட்டு நினைப்பு மறந்து விட்டது போலிருந்தது. ஆனால் காலையில் எழுந்ததும் இந்த மாதம் எப்போது முடியும்... சம்பளம் வாங்கியவுடன் வீட்டுக்குக் கிளம்பிட வேண்டும் என்று மனம் தவியாய்த் தவிக்க ஆரம்பித்தது.



கீதாக்கா... இந்த மாதம் சம்பளம் வாங்கிக்கிட்டு வீட்டுக்குப் போகணுங்க்கா."



வார்டன் கிட்டே கேளு."



வார்டன் மேடம் பொரிய ஆரம்பித்தாள். வீட்டுக்கெல்லாம் போக முடியாது. சம்பளத்தை வந்து வாங்கிட்டுப் போகச்சொல்லு. வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு எவனையாவது கூட்டிட்டு சுத்தறது. அந்த மாலா சனியன் பண்ணின கூத்துல ரூல்ஸ்லாம் ஸ்ட்ரிக்ட்டா போட்டிருக்காங்க."



உள்ளுக்குள் மனம் அதிர்ந்தது. அழுகை வந்தது.



அங்கிருந்து நைட்டியில் இருந்த ஒரு அக்கா, அவளை வார்டனிடமிருந்து நைச்சியமாக அழைத்து மொட்டை மாடிக்குச் சென்றாள். இவளைக் குறித்து எல்லாம் விசாரித்தாள். பின் சம்பந்தமே இல்லாமல், எவனையாவது லவ் பண்றியாடி" என்றாள்.



சௌம்யா வெடுக்கென்று அவளை விட்டு விறுவிறுவென்று படியிறங்கி ரூமுக்கு வந்து சுருண்டு படுத்தாள். முணுக்கென்று கண்களில் நீர் கட்டியது. எப்போது கண் அசந்தாள் என்று தெரியவில்லை. லேசாக நினைவு தட்டியபோது பேச்சுக்குரல் காதுகளில் இரைந்தது.



இவ யாரடி... இப்படிப் படுத்துக்கிடக்கிறா."





புதுசுடி... விடு... அவ போக்கல விட்டுட்டோம்."

அந்தச் சமயத்துல வயித்தைப் பயங்கரமாய் வலிக்குதடி."



யேய்... வாழைப்பழம் சாப்பிட்டால் வலி குறைஞ்ச மாதிரி ஃபீலிங் வருமாம்டி."



சரிங்க பாட்டி."



புதுசா ஒரு லைன் சூபர்வைசர் வந்திருக்கான் பார்த்தியா."



என்னடி உன் ரசனை. அவன் ஒரு ஆளு..."



ஆமாப்பா நேத்து சிரிச்சேன். உம்முன்னு முறைச்சான்."



ஏய் நிஜமா அவ ஓடிப் போயிட்ட மாதிரி பேசுற."



அவ பேச்சை விடுங்கடி. சித்ரா கல்யாணத்துக்கு எவ எவ வரப்போறது."



நிறையபேர் அறையில் கூடிவிட்டது போல் தெரிந்தது. எழுந்திரிக்கலாமா. எழுந்து தான் ஆகவேண்டும்.

பசி வயிற்றைக் கிள்ளுகிறது. யாரோ அவளை எழுப்பினார்கள். அவள் தூக்கத்தில் விழிப்பது போல் விழித்து எழுந்தாள்.

வாடி சாப்பிட."

ஒவ்வொரு படிக்கட்டாக இறங்கும் போது ஒரே கலகலப்பான பேச்சாக இருந்தது.



ஏய், நீயும் கல்யாணத்துக்கு வரத்தானே?"



இல்லக்கா... வந்து... நான்..."



அவ பாருடி... சம்பளம் கொடுக்கிற தேதியில் இருந்து இரண்டு நாள் தள்ளி கல்யாணத்தை வச்சிருக்கிறா?"



நிறைய மொய்ப் பணம் வசூல் பண்ண பிளான் பண்ணியிருப்பாடீ..."



சௌம்யாவுக்குப் பின்னால் அடித்தது போன்று யோசனை. இவர்கள் கல்யாணத்துக்குக் கிளம்பும்போது அப்படியே கிளம்பிட வேண்டியதுதான்.



சம்பளப் பணத்தை பேக்கின் இடையில் வைத்து, சுடிதார்களை மடித்து வைத்து மறைத்தாள். முதல் நாள் இரவு கல்யாணப் பெண் வீட்டில் தங்குவதால் ஆளுக்கு ஒரு பேக் வைத்திருந்தனர். சௌம்யா வரும்போது பெரிதாக ஒன்றும் கொண்டு வரவில்லை. ஒரே ஒரு மாற்று சுடிதார், கிழிந்ததைத் தைத்து வைத்திருந்த ஒரு நைட்டி அவ்வளவுதான்.



தினேஷ் சார்தான் கிடுக்குப்பிடி போட்டார். இவள் புதுசு என்பதால் கேள்விகளைத் துருவித் துருவிக் கேட்டார். உண்மையைச் சொல்லி விடலாம் என்று ஒருகணம் யோசித்தாள். யோசனையை அழித்தாள். ‘கீர்த்தனக்காதான் இவளுக்குப் பொறுப்பு’ என்று சொல்ல அரைகுறையாக தலையசைத்தார்.



கல்யாண மண்டபத்தில் கீர்த்தனக்கா நல்ல மூடில் இருந்த சமயம், அக்கா எங்க ஊரு இங்க பக்கத்துலதான். வீட்டுக்குப் போயிட்டு தங்கச்சி பாப்பாவையெல்லாம் பார்த்துட்டு சம்பளப் பணத்தைக் கொடுத்துட்டு வந்துடறேன்க்கா" என்று கெஞ்சிக் கேட்டாள்.



சரி, உடனே திரும்பிடுவியா? தலையைத் தலையை ஆட்டாதே. ஒருநாள் இருந்துட்டு உடனே வந்து சேரு. இந்தா ஃபோன் நெம்பரு. ரிஸ்க் எடுத்துருக்கேன்டி... என்னைக் கவுத்துறாதே."



மென்று விழுங்கினாள். உண்மையைச் சொல்லிவிடலாமா? வேண்டாம். விட மாட்டார்கள். தான் காணாமல் போய்விட்டால் தானே பிரச்னை. ஃபோன் எண் இருக்கிறதே. ஃபோன் செய்து வீட்ல போக வேண்டாம்னுட்டாங்க என்று சொல்லி விடலாம். வீட்டுக்குப் போகிறோம் என்கிற சந்தோஷமே அலை அலையாக உற்சாகத்தை எழுப்பியது.



சாயங்காலம் வெயில் தாழ்ந்திருந்தது.



எங்கிருந்து ஓடி வந்தாளோ தெரியவில்லை கடைக்குட்டி கனகா, ‘ஹய்யா... அக்கா...’ என்று தாவி கழுத்தைக் கட்டிக் கொண்டாள். குனிந்தவளின் முகமெங்கும் முத்தமிட்டாள்.



இவளுக்குத் தொண்டையை அடைத்தது. வாசல் பகுதியில் இருக்கும் அப்பாவின் சைக்கிளைக் காணவில்லை. பால் கேனில் ஊற்றும்போது சிதறிய பால் சிதறல்கள் மண்ணில் ஈரமாக மினுங்கின. அவர் வருவதற்கு இரவு ஏழெட்டு மணியாகும்.



விறகுக் கட்டைகளை அம்மா கீழே போட்டாள். தலை சும்மாட்டை உதறி முகத்தை ஒற்றி எடுத்தவள் இவளைக் கண்டாள்.



என்னடி இப்ப வந்துருக்கே."





வந்ததே பிடிக்கலையோ என்று சௌம்யாவுக்குப் பட்டது. எதுவும் பேசாமல் கிடந்தாள். ஆனால் அம்மா விடவில்லை.

\

இல்லைம்மா ரெண்டு நாள் லீவு விட்டுட்டாங்க."



அப்பாவிடம் மட்டும்தான் சொல்ல வேண்டும். இவள் தொணதொணப்பு ஜாஸ்தியாகிவிடும். பால் கேன்கள் உரசும் சப்தங்களோடு சைக்கிளை நிறுத்தும் ஓசை கேட்டது

.

தனியாவா வந்தே லீவா" என்றார். பொதுவாக தலையசைத்தாள்.



அம்மா இல்லாத நேரம் பார்த்து சம்பளத்தைத் தந்தவள், எனக்கு அங்கே இருக்கவே பிடிக்கலைப்பா. இங்கனேயே ஜவுளிக் கடை, ஜெராக்ஸ் கடைனு வேலைக்குச் சேர்த்து விடுப்பா. பாப்பாவையெல்லாம் விட்டுட்டு இருக்க முடியலை."




அங்கேயெல்லாம் இந்தச் சம்பளம் எல்லாம் சம்பாதிக்க முடியாதும்மா. உங்களை நான் எப்படி கரை சேர்க்கறதுன்னு முழிக்கிறேம்மா. பால் வருமானம் முன்னே மாதிரியில்லே."




அவர் பேசப் பேச இவளுக்கு அடி மனசிலே பயம் எழுந்தது.



காலை பரப்பியபடி அசந்து கார்த்திகா தூங்கிக் கொண்டிருந்தாள். கால் பாதங்கள் வெடித்து சிமெண்ட்பால் தீற்றல்களோடு கிடந்தது. மற்ற நால்வரும் ஒருத்தரையொருத்தர் அணைத்தபடி கால்கள் மேல் கால்கள் போட்டுத் தூக்கத்திலிருந்தனர்.



அடுத்த நாள் -



எக்கா இன்னைக்குதான் சூப்பர் சாப்பாடு" என்றாள் ஒரு தங்கை.



வக்கணையா திங்கணும்னா எல்லாரும் உக்காந்திருந்தா ஆகாது" - அம்மா வெறுப்பாகப் பேசினாள்.



ஏதேனும் பேசினால் வம்பாகும். வெளியே காலை வெயில் சுள்ளென்று வீதியில் உறைந்திருந்தது. ஊரே ‘வெறிச்’ என்று தான் இருக்கிறது.



தீபாவளி சமயத்துலதான் ஜவுளிக் கடைகளுக்குப் போய் வேலை கேட்க முடியும்" என்று பக்கத்து வீட்டு நர்ஸ் அக்கா சொல்லி விட்டாள். அவள் பணிபுரியும் ஆஸ்பத்திரியில் கூட்டுற வேலையையாவது வாங்கிக் கொடுக்கா என்றவளை முறைத்துக் கொண்டு அம்மாவிடம், ‘போட்டு விட்டு’ போய் விட்டாள்.



இந்த நாறக் கழுதை வேலையத் தலை முழுகிட்டுத்தான் இங்கே வந்திருக்கா போலிருக்கே."



அப்பா எதுவும் பேசவில்லை. அன்றைக்கு காய்கறி எதுவுமில்லாமல் வழக்கம் போல் ரசம், வாதநாராயண் இலை துவையல் என்று சமைத்துப் போட்டாள் அம்மா.



என்ன செய்வது, பாப்பாக்கள் நிறம் மங்கின. ஒட்டுக் கிழிசல்களோடுதான் வாழ்கின்றனர். சிமெண்ட்பால் ஊறின கால்களோடு அக்கா. தாம் சம்பாதிப்பது திருமண நல்வாழ்வுக்கு எனில் அது சப்பைக்கட்டுதான். சம்பாதிப்பது ‘எவன்ட்டேயோ பிடித்துக் கொடுக்க’ என்பது பேச்சுக்குத்தான். வயதுக்கு வந்து விட்டாளே அடுத்து கல்யாணம், பிள்ளை குட்டி... குடிக்கிற புருஷனோ... குடிக்காத புருஷனோ, பிடிச்ச புருஷனோ... பிடிக்காத புருஷனோ...



காலை பால் சப்ளைக்குச் சென்றுவிட்டு அப்பா வரும்போது மணி பனிரெண்டரை இருக்கும். வீட்டில் யாருமில்லை. பாப்பாக்கள் பள்ளியில். அக்கா கட்டட வேலையில். அம்மா காட்டு வேலைக்கு.



யப்பா இன்னிக்கு ரெண்டு நாப்பது வண்டில கிளம்பறேம்பா" என்றாள்.



பேக்கைத் துடைத்து ரெடி செய்தாள். ஒரு நைந்த போர்வையை மட்டும் எடுத்து வைத்திருந்தாள்.



வீட்ல அம்மாட்ட பாப்பாகிட்டேயெல்லாம் சொல்லிட்டியாம்மா?"



நீங்க சொல்லிடுங்கப்பா."



சைக்கிளிலிருந்து பால் கேன்களைக் கழட்டினார். வீட்டு படலைச் சாத்தினார். சைக்கிளை மிதித்தார். முன் ஹாண்ட் பாரில் பேக்கும் பின் கேரியரில் அவளும். பல நாட்கள் படிந்திருந்த பால் வீச்சம் மூக்கைத் துளைத்து இறங்கிக் கொண்டிருந்தது.



ஒற்றையடிப் பாதையைக் கடந்து வண்டிப் பாதையைக் கடந்து சிறு சாலையில் மினி பஸ்ஸுக்குக் காத்திருந்தனர்.



மினி பஸ்ஸின் பின் சீட்டில் உட்கார்ந்தாள். பஸ்ஸின் பின் கண்ணாடி வழியே சைக்கிளை மிதித்து மேடேறிச் செல்லும் தந்தை இறங்கி சைக்கிளை இறுகப் பிடித்துக்கொண்டு பின்னால் சென்று கொண்டிருக்கும் பஸ்ஸைத் திரும்பிப் பார்ப்பதைப் பார்த்தாள்.



சௌம்யா சட்டென்று திரும்பிக் குனிந்து கொண்டாள். கண்களில் நீர் கட்டியது. பஸ் குலுங்களோடு திருப்பத்தில் திரும்பி வேக மெடுத்தது.


டிஸ்கி -

ரூ 10,000 முதல் பரிசு பெற்ற கல்கி போட்டிக்கதை -போன்சாய் நிழல்கள்! -செம்பை முருகானந்தம்- http://www.adrasaka.com/2012/

07/10000.html


நன்றி - கல்கி, புலவர் தருமி

Monday, July 30, 2012

ரூ 10,000 முதல் பரிசு பெற்ற கல்கி போட்டிக்கதை -போன்சாய் நிழல்கள்! -செம்பை முருகானந்தம்-

முதல் பரிசுக் கதை



போன்சாய் நிழல்கள்!



செம்பை முருகானந்தம்



ஒம் பேரு என்ன?"

கோபாலகிருஷ்ணன்."


அம்மா, அப்பா பேரு?"


அம்மா பேரு வாணி.அப்பா பேரு கோவிந்தன்."


ஒன்னப்பத்தி, ஒங்குடும்பத்தப் பத்தி சொல்லேன்."


எங்க வீட்டுக்கு நான் ஒரே பையந்தான். அம்மா, அப்பா, நாங்க மூணு பேருந்தான். எங்க வீடு புதுக்கோட்ட கீழ ரெண்டாம் வீதியில இருக்கு. அதுவொரு லையன் வீடு. அதுலதான் வாடகைக்குக் குடியிருக்கோம். இருவது வருசமாய் அங்கதாங் குடியிருக்குறதா எங்கப்பா சொல்வாரு. அம்மா ஹவுஸ் ஒய்ஃப்தான். அப்பா சின்ன அச்சகம் வெச்சுருக்கார். அது ரொம்பப் பழசு. பழய காலத்து அச்சுக்கோர்த்து ஓட்டுற மிஷினு."



சரி, ஒங்கூடப் பொறந்தவுங்க?"



கூடப் பொறந்தவுங்க யாருமில்ல."



அண்ணந்தம்பி, அக்கா தங்கையின்னு யாருமில்லயே, அது ஒனக்கு கவலையா இல்லையா? ஒன்னப் பாதிக்கலயா?"



பாதிச்சது. ஆனா நாங்க லையன் வீட்டுலதானே இருக்கோம். எல்லார் வீட்டுலயும் பசங்க இருக்குறதால என்னயப் பெருசாய் ஒண்ணும் பாதிக்கல."



ஓகே. ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட்,செகண்ட் ஸ்டாண்டர்டெல்லாம் எங்க படிச்ச?"



எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருந்த பி.வி.எஸ். மெட்ரிகுலேஷன் ஸ்கூல்லதான் ஃபிப்த் வரைக்கும் படிச்சேன். அப்புறம், எங்கப்பா பணங்கட்ட முடியலைன்னுட்டாரு. ஏன்னா எங்கப்பா வச்சுருக்குற அச்சகத்துக்கு அவ்வளவா வேல வராது. இந்தக் கல்யாண சீசன்ல இன்விடேஷன் ஆர்டர் வரும். ஸ்கூல் சீசன்ல காம்போசிசன், பிராக்ரஸ் கார்டு, டைம்டேபிள் கார்டு ஆர்டர் வரும். அப்புறம் அப்பப்போ வேற ஏதாவது சின்னச் சின்ன வேலைக வரும். இதெல்லாங்கூட எங்கப்பாவோட ஒர்க் ஃபெர்பெக்ஷனுக்காகவும் சொன்னா சொன்ன நேரத்துல குடுக்குற சின்சியாரிட்டிக்குத்தான் தேடிவந்து குடுப்பாங்க."



குட். நீ எப்படிப் படிப்ப?"



நல்லா படிப்பேன்."



நல்லான்னா?"



நீங்க கேக்குறது எனக்குப் புரியல."


மனப்பாடம் பண்ணுவியா, இல்ல புரிஞ்சுக்க ட்ரை பண்ணுவியா?"


புரிஞ்சுக்க மட்டுந்தான் ட்ரை பண்ணுவேன்."



ட்ரை பண்ணுவியா? புரிஞ்சுக்குவியா?"


கண்டிப்பா புரிஞ்சுக்குவேன்."


வெரிகுட். அப்ப, நீ ஒன்னோட எக்ஸாம்ஸ்ஸெல்லாம் புரிஞ்சுதான் எழுதுவியா? நோட்ஸ் ஃபாலோ பண்ணுவியா?"



உறுதியா நோட்ஸ் ஃபாலோ பண்ண மாட்டேன். புரிஞ்சுதான் எழுதுவேன். குறிப்பா எய்த்துல இருந்து தமிழுக்குக் கூட நோட்ஸே பயன்படுத்துறதில்ல. மத்த சப்ஜெக்ட்டுக்குப் பாத்துப்பேன். ஆனா, என்னோட ஓன் சென்டன்சுலதான் எழுதுவேன்."





வெரிகுட். அதென்ன குறிப்பா எய்த்துலருந்து."





ஆமா. எங்கப்பா அந்தக் காலத்து எட்டாங்கிளாஸ் வரைக்கும் படிச்சவரு. ஆனா நெறைய புத்தகங்களைப் படிப்பாரு. திருக்குறள், கம்பன், பாரதி, பாரதிதாசன், ஷெல்லி, கீட்ஸ், காரல் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், டால்ஸ்டாய், காந்தி, அம்பேத்கர், நேரு, பெரியார், ஜீவா, அகிலன், கல்கி, ஜெயகாந்தன்னு இப்ப கரண்டுல எழுதுற ரைட்டர்ஸ் வரைக்கும் படிச்சுக்கிட்டே இருப்பாரு. நான் எய்த்துப் படிக்கிறப்பவே மக்ஸிம்கார்க்கியோட ‘தாய்’ நாவல் படிச்சுட்டேன். செகண்ட், த்தேர்டு படிக்கிறப்ப இருந்தே எனக்கு எங்கப்பா கதை, கவிதைன்னு நெறைய்ய சொல்லிக்கிட்டே இருப்பாரு.



மொதநா அவரு சொன்ன கதைய அடுத்தநா என்னையச் சொல்லச் சொல்வாரு. கத கண்டன்ட் மாறாது. காட்சியும் மாறாது. ஆனா கதக்குள்ள எஞ்சொந்த வார்த்தப் புகுந்துடும். அதாவது, ‘பாரதியார் வீட்டுல சமைக்க அரிசி இல்லாமப் பட்டினியா இருந்தாங்களாம். அப்போ வீட்டு முத்தத்துல பசியோட கத்திக்கிட்டிருந்த சிட்டுக்குருவிகளப் பார்த்துட்டு வீட்டுக்குள்ள போயி, இருந்த கொஞ்சங் குருணையையும் எடுத்துக்கிட்டு வந்து போட்டுட்டு சிட்டுக்குருவிக திங்கிறதப் பார்த்துச் சந்தோஷப்பட்டாராம்’ பார். அடுத்தநா இதே கதைய என்னையச் ‘சொல்லுடா’ம்பாரு.





ஒரு நாள் பாரதியாருக்கு ரொம்பப் பசியாம். வீட்டுல சமைக்கவே இல்லயாம். ஏன்னா அரிசியே இல்லயே என்ன பண்றது. அப்ப பாத்து அவரு வீட்டு முத்தத்துல நெறய சிட்டுக்குருவிக பசியோட கத்திக்கிட்டே அங்கிட்டும் இங்கிட்டும் பறந்துச்சாம். பாரதியாரு நேராய் வீட்டுக்குள்ள போயி கொஞ்சூண்டு இருந்த குருணையையும் எடுத்துக்கிட்டு வந்து போட்டாராம். அவ்ளதான் எல்லா சிட்டுக்குருவியும் கீச்சு மூச்சு, கீச்சு மூச்சுன்னு சந்தோஷமாய் சத்தம் போட்டுக்கிட்டே தின்னுச்சாம். இத பாத்த பாரதியாரு சந்தோஷந்தாங்காம ஆனந்தமாய் பாடுனாராம்"ன்னு சொன்னேன்.

எங்கப்பா ‘டேய்! என்னடா கோபால கிருஷ்ணா... என்னென்னமோ ஒஞ்சொந்த சரடயெல்லாம் உள்ளவிட்டுக் கலக்குற. பரவாயில்ல. நாஞ்சொன்னதவிட நீ சொல்றதுதான் தத்ரூவமாய் இருக்கு’ அப்புடின்னு எங் கன்னத்துல முத்தங்குடுத்து, முதுகுல ‘சபாஷ், சபாஷ்’ன்னு தட்டிக் குடுத்தாரு. இப்புடிதான் எஞ்சொந்த வார்த்த இல்லாம யாரோடதையும் அப்புடியே காப்பியடிக்கிற புத்தி காணாமப் போச்சு."



ஓ! இதச் சொல்றப்போ இவ்ளோ சந்தோஷமாய் சொல்ற."



ஆமா...அதான் உண்மை. அப்புடிதான் நடந்துச்சு. அது மட்டுமில்ல."



ம்... அப்புறம்!?"



நான் எய்த் படிக்கிறப்போ ஜி.பி.எம்.ன்னு எங்க தமிழ்சாரு. அவரு, ஒருநா சொன்னாரு, ‘டேய் மனப்பாடம் பண்ணுறதுக்கும் புரிஞ்சுக்கிறதுக்கும் பெரிய வேறுபாடுயில்ல. நீங்க புரிஞ்சுக்கிட்டிங்கன்னாலே அது மனப்பாடமாகிருச்சுன்னு அர்த்தம். ஆனா நீங்க மனப்பாடம் பண்ணினாலும் அது புரிஞ்சுகிட்டதாய் அர்த்தமில்ல. அதே மாதிரி புரிஞ்சுக்கிட்டா ஒங்க வார்த்தையில எப்புடி வேணாலும் எழுதலாம். மனப்பாடம் பண்ணினா ஒரு வார்த்த மறந்தாலும் பிரேக் டௌனான வண்டி மாதிரி அம்புட்டு தான்’னாரு.



எனக்கு அந்த வயசுல லேசா பொறிதட்டுன மாதிரி இருந்துச்சு. அதுக்கப்புறம் வளர வளர அதோட மகத்துவம் புரிஞ்சது. அதுனாலதான் டென்த்துல தமிழ்ல நான் தொண்ணூத்தெட்டு மார்க்கு."



வ்வாவ்... ஃபென்டாஸ்டிக். ஒம் மொகமெல்லாம் எவ்வளவு மலர்ச்சியா, சந்தோஷமாய் இருக்கு தெரியுமா?"



இருக்கும். இருக்கும். இதெல்லாம் நெனக்கிறப்போ எனக்கு அவ்ளோ சந்தோஷமாய் இருக்கு."



சரி... நீ ஸ்போர்ட்சுல எப்புடி?"



அய்யோ என்னவிட்டா ட்வென்டி ஃபோரவர்சும் வௌயாடுவேன். கொள்ளப் பிரியம் வெளையாட்டுன்னா."



என்ன வௌயாட்டு ஒனக்கு ரொம்பப் புடிக்கும்."



ஃபுட்பால், கிரிக்கெட், அத்தலெட்டிக் குல டிஸ்டிக் ரன்னிங் பிளேயர் நான்."



குட்... கோபாலகிருஷ்ணா. இது தவிர."



இலக்கிய மன்றப் போட்டி எல்லாத்லேயும் பார்ட்டிசிபேட் பண்ணுவேன். பெரும்பாலும் முதல் பரிசுதான் வாங்குவேன்."



அடடே! குதூகலப்புயல்லக் கூத்தாடிக் கிட்டுருந்த..."

ஸ்யோர்"



ஓகே ஓகே... வீட்ல ஒன்ன ரொம்பக் கண்ட்ரோல் பண்றது யாரு?"



இதுல என்ன சந்தேகம், எங்கம்மாதான். வெளையாட விடாது. நான் எங்க போனாலும் பின்னாடியே வரும். ‘ஒரு புள்ள. ஒனக்கு ஏதாவது ஒண்ணுன்னா என்ன பண்ணுறது’ன்னு சொல்லிச் சொல்லியே கொல்லும். ‘படி, படி’ன்னு உசுர எடுக்கும்.



எங்கப்பா என்ன படின்னு சொன்னதே கெடையாது. அன்னிக்கி ஸ்கூல்ல என்ன நடந்துச்சுன்னு கேப்பாரு. எல்லாமே அதுக்குள்ள இன்குலூடட். அப்புறம் ஒவ்வொரு நாளும் எங்கம்மா எங்கப்பாகிட்ட அவ்ளோ கம்ப்ளெயிண்ட் பண்ணும். அவரு எங்கிட்ட எதுவுமே கேக்க மாட்டாரு. அதே மாதிரி என்ன சேட்ட செஞ்சாலும் அடிக்கவே மாட்டாரு. அடிச்சதே இல்லை.



ஆனால், எல்லாத்துக்கும் ஒட்டுமொத்தமாய் என்னிக்காவது ஒரு நாளு நைட்டு சாப்புட்ட பிறகு ஒக்கார வெச்சுக் கத சொல்லுவாரு. அந்தக் கதையோட க்ளைமாக்ஸ் வரவரத்தான் நாஞ்செஞ்சத் தப்புகளுக்குத்தான் இந்தக் கதங்கிறது எனக்கே புரியும். அவமானமாய் இருக்கும். மனசெல்லாம் வலிக்கும். இனியொருமுறை அப்புடி ஒரு தப்ப வாழ்க்கையில செய்யக்கூடாதுன்னு தோணும்."



ஓ... கிரேட் யுவர் ஃபாதர்."



ஆமா அவரு எனக்கு அப்பா மட்டுமில்ல. ஹி இஸ் மை பெஸ்ட் ஃப்ரெண்ட், அண்ட் மை வெல்விஷர்."



சரி, கோபாலகிருஷ்ணா, டென்த்ல எவ்ளோ மார்க்கு வாங்கின?"



நானூத்தித் தொண்ணூத்திரெண்டு."



பப்ளிக் எக்ஸாமும் ஒண்ணோட ஓன் சென்டன்ஸ்சுலதான் எழுதினியா?"



நிச்சயமா. கொஸ்டின் பேப்பர்லே சொல்லியிருப்பாங்களே. உன் சொந்த நடையில் எழுதுன்னு."



சரி, அந்த ரிசல்ட் வந்தப்ப எப்புடி இருந்துச்சு?"



ரொம்ப சந்தோஷமாய் இருந்துச்சு. எங்க நகராட்சி ஸ்கூல்ல பெரிய ரெக்கார்ட் ஃபிரேக்குன்னு சொன்னாங்க. ஏன்னா ஸ்டேட் செகண்ட் நான். எங்க ஹெட்மாஸ்டரு, எல்லா சாருங்களும் எங்க வீட்டுக்கு வந்து, என்னய காருல வச்சு ஸ்கூலுக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. டி.வி.,பேப்பர் காரங்கன்னு ஒரே அமர்க்களம். எங்கம்மா சந்தோஷத்துல அழுதுகிட்டே இருந்துச்சு. எங்கப்பாவுக்கு ஆனந்தந் தாங்கல.



நா ஆரம்பத்துல படிச்ச பி.வி.எஸ். ஸ்கூல்லருந்து ஆரம்பிச்சு புதுக்கோட்டயில இருக்குற அத்தன பெரிய ஸ்கூல்ல இருந்தும் எங்கப்பாவுக்குக் கால் பண்ணுனாங்க.



திருச்சியில இருக்குற எல்லாப் பெரிய ஸ்கூல்லயிருந்துங் கால் பண்ணுனாங்க. ‘எங்க ஸ்கூல்ல சேருங்க, எங்க ஸ்கூல்ல சேருங்க, எந்தக் கட்டணமும் வேணாம். ஹாஸ்டல் ஃப்ரீ. எல்லாமே நாங்க பாத்துக்குறோம்’ன்னு."



சரி."



எங்கப்பா, ‘அதெல்லாம் வேணாம். புதுக்கோட்ட கவர்ன்மெண்ட் ஸ்கூல்லயே படிக்கட்டும். இப்ப மார்க் வாங்கலையா? அதே நேரம் புள்ளயும் நம்ம கூடவே இருப்பான்’னாரு. எங்கம்மா கேக்கவே இல்ல.



எங்க சொந்தக்காரங்க, சுத்துப்பட்டுல உள்ளவுங்க எல்லாரும் எங்க அப்பாகிட்ட சொன்னா கேக்க மாட்டாருன்னு எங்க அம்மாகிட்ட நல்ல ஸ்க்ரூ போட்டுவிட்டாங்க. எங்க அம்மாவும் எங்க அப்பாகிட்ட, ‘இங்க பாருங்க, அதெல்லாம் சரிப்படாது. டென்த்து மாதிரி கெடையாது ப்ளஸ்டூ. அதுதான் இவனோட வாழ்க்கையே. இவன் டாக்டராகவோ, இன்ஜீனியராகவோ வரணுமின்னா திருச்சி ஸ்கூல்லதான் சேத்தாகணும். அந்த ஸ்கூல்லயெல்லாம் நம்மாலப் பணங்கட்டி காலடி கூட வக்க முடியுமா? நம்ம புள்ள மார்க்குக்கு ஏதோ இலவசமாய் சீட்டுத் தர்றாங்க?’ அப்புடி இப்புடின்னு எங்கப்பாவப் படாதபாடுபடுத்தி சம்மதிக்க வெச்சுட்டாங்க.




ஆனா எனக்குத்தான் எங்க அம்மா, அப்பாவை விட்டுப் பிரியணுமான்னு கவலையாய் இருந்துச்சு. ஏன்னா, ஒரு நாளைக்கி ஒரு வேளையாவது எங்கம்மா ஊட்டி விட்டாதான் எனக்குச் சாப்பிட்ட மாதிரி இருக்கும். அதே மாதிரி எங்கப்பா கையில தல வச்சு, எங்கம்மா கால் மேல கால் போட்டு, தெனமும் யாரோட வாழ்க்க வரலாறாவது எங்கப்பா எனக்குக் கதையா சொன்னாதான் எனக்குத் தூக்கமே வரும். எப்புடி இவுகளப் பிரிஞ்சு இருப்பேன்னு அழுதுட்டேன். அப்புறம், ஒருவழியாய் திருச்சி எம்.ஆர்.பி.எஸ். ஸ்கூல்ல சேத்து விட்டாங்க."





எப்டி இருந்துச்சு எம்.ஆர்.பி.எஸ்."



ம்.. அங்க... அங்கதான் என் லட்சியம், எங்கனவு, என் அறிவு, எந்திறம, எம் விளையாட்டு எல்லாம், எல்லாம் எல்லாமே செதஞ்சு, கொழஞ்சு போனது."



கோபாலகிருஷ்ணா அழுகையாய் வருதா.. ம்... ஏன் அழுகையை அடக்குற. அழு. நல்லா அழு. மொதல்ல எப்புடி டென்த்தப் பத்திப் பேசறப்போ சந்தோஷமாய் பேசுனியோ அதே மாதிரி இப்ப சோகமாய் இருக்கு, அழுகையா வருதுன்னா நல்லா அழு. ஒம் மனசுல என்னென்னவெல்லாம் இருக்கோ எல்லாத்தையும் வெளியில சொல்லிடு. ம். ம்... சொல்லு."



முதல் நாளு ப்ளஸ் ஒன் ஸ்டூடெண்ட்ஸ்க் கெல்லாம் ஒரு மீட்டிங் போட்டாங்க. வித் பேரண்ட்ஸுக்கும். அப்ப பிரின்ஸ்பாலு, பேசுறப்போ, ‘நீங்க எல்லா ஸ்டூடண்ட்ஸும் கவனமாய் கேளுங்க, நீங்கயெல்லாம் வெளியில எப்புடி படிச்சுட்டு வந்திருந்தாலுஞ் சரி. இங்க எம்.ஆர்.பி.எஸ்.க்குன்னு சில மெத்தடாலஜி வச்சுருக்கோம். அதத்தான் நீங்க ஃபோலா பண்ணணும். பேரன்ட்ஸும் கோ-ஆப்ரேட் பண்ணுங்க. ஒங்க பசங்களுக்குஞ் சொல்லுங்க’ன்னார். அப்பவே எனக்கு எதையோ இழந்த மாதிரி மனசு கவலையாய் இருந்துச்சு.



அடுத்தநா ஸ்கூலுக்குப் போனா, தமிழ் உள்பட ஒவ்வொரு டீச்சரும் வந்து, இங்க எல்லா சப்ஜெக்டுக்கும் நோட்ஸ்தான் ஃபாலோ பண்ணுவோம். அதத்தான் நீங்க படிக்கணும்ன்னாங்க. க்ளாஸ்ல பேருக்கு நடத்துவாங்க. புரியலைன்னு ஏதாவது டௌட் கேட்டா ‘இப்ப என்ன புரிஞ்சு வானத்த வில்லா வளக்கப் போறியா. நோட்ஸ் இருக்குள்ள அதப் படி... மனப்பாடம் பண்ணு. அது போதும்’பாங்க. மேத்ஸ்ல டௌட் கேட்டாக் கூட ‘இதெல்லாஞ் சொல்லிப் புரியவக்க முடியாது. ஒருமுறைக்கு நாலு முறையாய் கணக்கப் போட்டுப் பாரு. அப்பதான் வரும்’பாங்க. எனக்கு ஏதோ தனித்தீவுல தனியா மாட்டிக்கிட்ட மாதிரி இருந்துச்சு.




ஒவ்வொரு டெஸ்டுலயும், ஒவ்வொரு எக்ஸாம்லயும் பேப்பரை எடுத்து வச்சுக்கிட்டு கிளாஸ்லயே அவ்ளோ பேருக்கு முன்னாடி கேவலமாகத் திட்டுவாங்க. ‘கோபாலகிருஷணா நோட்ஸ்ல என்ன இருக்கு; நீ என்ன எழுதியிருக்க’ம்பாங்க. ‘அதே கருத்தத்தானே நானும் எழுதியிருக்கேன்’ அப்புடின்னா அவ்ளோதான். ‘ஒம் மேதாவித் தனத்தையெல்லாம் மூட்ட கட்டிட்டு, நோட்ஸ்ல என்ன இருக்கோ அத வார்த்த பிசகாம வாக்கியம் மாறாம எழுது. ஒஞ்சொந்த நடை, நொந்த நடையெல்லாம் இங்க யாருங்கேக்கல’ம்பாங்க.

எந்தக் காரணங்களுக்காக நகராட்சி ஸ்கூல்ல எல்லா டீச்சரும் என்னைப் பாராட்டினாங்களோ, அதே காரணங்களுக்காக இங்க நான் அவமானப்படுத்தப்பட்டேன். இப்புடிதான் ப்ளஸ்ஒன் கழிஞ்சது. அப்பவே முடிவுக்கு வந்துட்டேன். எங்கம்மா கனவு, எங்கப்பா நம்பிக்க எதையும் என்னால காப்பாத்த முடியாதுன்னு.



இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாய் ப்ளஸ்டூ. லெவன்த் ஹாப்பேர்லி முடிஞ்சதுமே ப்ளஸ்டூ சிலபஸ் படிக்கச் சொல்லிட்டாங்க. புரியாத ஒண்ணு மொட்டையா மனப்பாடம் பண்ணி எழுதுறது எனக்குச் சாத்தியப்படவே இல்ல. புரிஞ்ச விஷயங்கள எனக்குப் புரிஞ்ச மாதிரி எழுதுறது டீச்சர்ஸுக்கு புடிக்கவே இல்ல.



இதவிடப் பெரிய கொடும, எம் பேப்பர எடுத்துக்கிட்டு வந்து, ‘நோட்ஸ்ல உள்ள மாதிரி எதுவுமே இல்லயே. ஒனக்கு மனப்பாடமே வராதா? ம்... நீ எப்புடி டென்த்துல நானூத்தி தொண்ணூத்திரெண்டு மார்க்கு வாங்கின; உண்மையிலேயே படிச்சுத்தான் எடுத்தியா’ம்பாங்க.



எ(ன்) அறிவையும், தெறமையையும் தீவச்சுக் கொளுத்துன மாதிரி இருக்கும் அந்த வார்த்த. எது என் திறமையின்னு, அறிவுன்னு பெருமையாப் பேசப்பட்டதோ, அதையே காரணமாக் காட்டி என்ன அவமானப்படுத்துவாங்க.



எ(ன்) அப்பாவோட மடியில படுத்து அழணும் போல இருக்கும். பேரண்ட்ஸ பார்க்கவோ, பேசவோ விடமாட்டாங்க. எ(ன்) ரெண்டு வருஷப் பொறந்த நாளு, நானே என் நினைவு நாள அனுஷ்டிக்கிற மாதிரி போனுச்சு. எங்கம்மா அப்பாவ வாழ்த்துச் சொல்லக் கூட அனுமதிக்கல. ரெண்டு வருஷமாய் எங்காலு கூட கிரவுண்டுல படல. சாப்புட, தூங்க முடியாம நரக வேதனையை அனுபவிச்சேன்.



எப்பப் பார்த்தாலும் ‘படி, படி, மனப்பாடம் பண்ணு. ஒப்பி, டெஸ்ட் எழுது’ன்னு டார்ச்சர் பண்ணுவாங்க. லஞ்ச் அவர்ஸ்ல கூட ‘பத்து நிமிஷத்துல சாப்புட்டுப் படி, படி’ன்னு வாங்க. நைட் ஸ்டடி பதினோரு மணி வரைக்கும். காலையில மூன்றரை மணிக்கே எழுப்பி விட்டுருவாங்க. சில நேரம் மாத்ரயெல்லாம் குடுப்பாங்க. கேட்டா ‘விட்டமின் டேப்லட்ஸ், ஹெல்த்துக்கு’ம்பாங்க. மாத்ரய சாப்புடலன்ன விடமாட்டாங்க. எனக்கு ஒவ்வொரு நாளும் வேதனையும் விரக்தியுந்தான் அதிகமாயிக்கிட்டே இருந்துச்சு.





ப்ளஸ்டூ பப்ளிக் எக்ஸாம் தேதி அறிவிச்சுட்டாங்க. எனக்கு மனசெல்லாங் கவல மூண்டுக்கிச்சு. நான் ஸ்டேட் லெவல்ல இல்ல, டிஸ்டிரிக்ட் லெவல்ல கூட மார்க் வாங்க முடியாதுன்னு எனக்குத் திண்ணமா தெரிஞ்சது. எங்கப்பா, அம்மா, எம் பழய நகராட்சி ஸ்கூலு எ(ன்) டீச்சர்ஸ் எப்புடி அவுங்க மொகத்துலயெல்லாம் முழிப்பேன்? நெனக்க நெனக்க இதயமே வெடிக்கிற மாதிரி இருக்கும். அழுது, அழுது ஓய்வேன்.



எக்ஸாம்ஸ் ஆரம்பிச்சது. எப்புடியோ, என்னத்தையோ எழுதி எக்ஸாம் முடிச்சுட்டேன். வீட்டுக்கு வந்தேன். எங்கப்பா எப்புடி எழுதினேனு கூடக் கேக்கல. ஏன்னா அவருக்குக் குற்றஉணர்ச்சி, யார் சொல்லியிருந்தாலுங் கேட்டுருக்கக் கூடாது. இருந்தும், தன்புள்ளய தானே கொண்டு போயி பலியிட்டுட்டோ மேங்கிற குற்ற உணர்ச்சி. எங்கம்மாதான் ‘எப்புடி எழுதுன, எப்புடி எழுதுன’ன்னு கேட்டுக்கிட்டே இருக்கும். என்ன பதில் சொல்றது.



எம் உடம்பு பாதியாய்ப் போச்சு. மனசுல கொஞ்சமும் தைரியமில்லாம ஆகிட்டேன். எம் பழைய சுறுசுறுப்பு, வௌயாட்டு, வெகுளி, ஆனந்தம், புத்தகங்கள மேஞ்சு திரியுற அறிவுத் தேடல், எல்லாம் எல்லாமே எங்கிட்ட இருந்து காணாமப் போச்சு.



வீட்ட விட்டு வெளியிலேயே போறதில்ல. ரூமுக்குள்ளேயே கெடந்தேன். எங்கம்மா என்ன நெனச்சோ என்னப் பார்த்துப் பார்த்து அழும். நானே உணர்ந்தேன். எனக்கு நானே பேசிக்கிற மாதிரி இருக்கும். என்னய எங்கம்மாவோ, வேற யாராவதோ பார்த்தா ஒடனே சரியா இருக்குற மாதிரி முயற்சி பண்ணுவேன். ஆனா, எனக்கு நானே எதை எதையோ பேசிக்குவேன். இதுவரைக்குந்தான் எனக்கு ஞாபகமிருக்கு."



இன்னும் என்ன இருந்தாலும் சொல்லு. அழுதுகிட்டே இருந்தா..."



எங்கம்மாவ தோச பெரட்டியால அடிச்சேன். எங்கப்பா எனக்கு சோறு ஊட்ட வருவாரு. அவர கன்னத்துல நெறைய தடவ அறைஞ்சேன். அங்க வீட்டுக்குள்ளயே ஒன்பாத், டூபாத்தெல்லாம் போனேன்."



நல்லாவே அழுதுட்ட. இப்ப ஒம்மனசுல வேறெதுவும் இல்லயே. எல்லாத்தையும் சொல்லிட்டியா..."



ம்... சொல்லிட்டேன்."



இப்ப ஒம் மனசு ரொம்ப இயல்பாய் இருக்கு. சரி, ப்ளஸ்டூ ரிசல்ட் வந்துருச்சா?"



தெரியல."


வந்தா எவ்ளோ மார்க்கு வாங்குவ?"


தொளாயிரத்தி அம்பதுக்குள்ள."


ரிசல்ட் வந்துருச்சு. தொள்ளாயிரத்தி எம்பது வாங்கி இருக்க. இது போதுமா?"


நோ... இது எம்மார்க்கு இல்ல. இது என் அறிவின் அடையாளமில்ல. என்ன என் இயல்புல விட்டுருந்தா ஆயிரத்தி நூத்தி எம்பதாவது வாங்கி இருப்பேன்."



ஓ.கே. யு டோண்ட் வொர்ரி. விதைச்சுருந்தா முளைச்சுருப்பா: திணிச்சுட்டாங்க. அதாம் பிரச்னை ஆகிடுச்சு. நோ ப்ராப்ளம். நா ஒனக்கொரு வாய்ப்புத் தர்றேன். நீ திரும்பவும் ப்ரைவேட்டா ப்ளஸ்டூ எழுத. ஓ(ம்) அறிவுல, ஓ(ம்) ஸ்டையில்ல எழுது. ஒன்னோட மார்க்கே நீ வாங்கலாம். சரியா."



ஒரு வருசம் வீணாகுமே."

பரவாயில்ல. ஒரு வருசந்தானே. பட் ஒன்னோட வாழ்க்க ஒனக்குக் கெடச்சுருமே."



எஸ்... எஸ் எழுதுறேன்."



இப்ப சந்தோஷமா இருக்குறியா."



நிச்சயமா."



நீ விரும்புற மார்க் ஒனக்கு வந்துருச்சு. அடுத்து என்ன படிக்க விரும்புற?"



டாக்டருக்கு."



டாக்டர்ன்னா."



ஒரு சைக்யார்டிஸ்டா வரணும்."



ஓகே... ஓகே... ஓகே..."



ஏன் இப்புடி சத்தம் போட்டுச் சிரிக்கறீங்க. நான் வரமாட்டேனா?"


யார் சொன்னது. நீ என்னைவிட சிறந்த சைக்யார்டிஸ்டா வருவ. வரணும். என் இதய பூர்வமான வாழ்த்துக்கள் கோபாலகிருஷ்ணா."



நன்றி - கல்கி, சீதாரவி,அமிர்தம் சூர்யா, கதிர் பாரதி,புலவர் தருமி

Tuesday, September 07, 2010

சினிமா டைட்டிலில் கவிதைப்போட்டி


Fifty Seven (by ..priya..)
சில வருடங்களுக்கு முன் தமிழன் எக்ஸ்பிரஸ் மாதமிருமுறை இதழில்
சில சினிமா டைட்டில்கள் கொடுத்து அதற்கு ஏற்றார்போல் கவிதை கேட்டிருந்தார்கள்.
சினிமாவில் சிச்சுவேசன் சாங் கேட்பது போல்தான் இதுவும்.தானாக உருவாகும் கவிதைகளை விட இது போல் நிர்ப்பந்தங்களில் உருவாகும் கவிதைகளில் வீரியம் குறைவாக இருக்கும்.சினி ஃபீல்டில் அதிக முறை திருத்தம் செய்து,அதிக வரிகளில் எடிட் செய்து உருவான பாடல் ரோஜா படத்தில் வைரமுத்து எழுதிய சின்ன சின்ன ஆசை.இதில் வைரமுத்து 240 ஆசைகளை எழுதிக்குடுக்க,மணிரத்னம் அதில் 40 ஆசைகளை தேர்வு செய்தார்.எந்த கரெக்‌ஷனும் இல்லாமல் உருவான பாடல் கண்ணதாசனின் சட்டி சுட்டதடா பாடல்.

முதலில் பரிசு பெற்ற கவிதை.

நேருக்கு நேர்




இனி என்னை மறந்து விடுங்கள் 

என்று தோழியிடம் சொல்லி விட்டாய்.

நமக்குள் இனி ஒன்றுமில்லை என 

கடிதம் எழுதினாய்.

என் வாழ்வில் இனி குறுக்கிடக்கூடாது 

என ஆள் அனுப்பினாய்.

சரி,எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன்.

இவை எல்லாவற்றையும் உன்னால் 

நேருக்கு நேர் நின்று 

என் கண்களைப்பார்த்து சொல்ல முடியுமா? 

 இனி பிரசுரத்துக்கு தேர்வானவை.


காதல்

உச்சரிக்கும்போது உதடுகள் கூட


ஒன்று சேர்வதில்லை


காதல்.




நாணயம் இல்லாத நாணயம் 


தொட்டுப்பார்க்க மட்டுமெ சொந்தம் 

பேங்க் கேஷியர் எண்ணும் பணம்.



 ஏட்டிக்குப்போட்டி


கதை எழுதும்போது கிடைக்கவில்லை

காதலிக்கும்போது மட்டும் 

உருவாகி விட்டது கரு.

கவிதைகளை வெளீயிடுவதில் முன்பிருந்ததை விட இப்போது குமுதமும்,விகடனும் அதிக அக்கறை செலுத்துகின்றன.குமுதத்தில் குழந்தைகள் செய்யும் குறும்புகள்,மழலை சம்பந்தப்பட்ட கவிதைகள் எழுதினால் 20 நாட்களில் போட்டு விடுவார்கள்.விகடனில் காதல் கவிதைகளும்,மனித மன விகாரங்கள்  பற்றிய அலசல்கள்,வித்யாசமான கருக்கள் இருந்தால் பிரசுரம் ஆகி விடும்.குமுதம் ரூ 50 பரிசும், விகடன் ரூ 250 பரிசும் தருகின்றன.