Showing posts with label ஞானி. Show all posts
Showing posts with label ஞானி. Show all posts

Wednesday, September 12, 2012

ஈழ விவகாரம் - உணர்ச்சி அரசியல் - ஓ பக்கங்கள் ஞானி @ கல்கி

பக்கங்கள்

உணர்ச்சி அரசியல் கூடாது!

ஞாநி

இந்தக் கட்டுரையை மிகுந்த மன வருத்தத்துடன் எழுதுகிறேன், இதற்காக ஒரு சிலரின் வசைகளும் அவதூறுகளும் வருமென்ற போதிலும். உண்மைகள் கசக்கும் என்பதற்காக அவற்றைச் சொல்லாமல் இருப்பதற்கில்லை. தமிழ்நாட்டில் கால்பந்து விளையாட வந்த இலங்கைச் சிறுவர்களையும், தேவாலயத் திருவிழாவுக்கு வந்த இலங்கை பக்தர்களையும் துரத்தியடித்த நிகழ்வுகள் நிச்சயம் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கக்கூடியவை அல்ல.
இலங்கையில் நடந்த யுத்தத்தில் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் காரணம் காட்டி இங்கே இலங்கையைச் சேர்ந்த சிங்களர் வரக் கூடாது என்று போராடுவது அர்த்தமற்றது; அநீதியானது.
போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியது இலங்கை அரசுதான். இலங்கை மக்கள் அல்ல. இலங்கை அரசின் உச்ச அடையாளமான ராஜபட்சேவையும் அவரது சகாக்கள் கோத்தபாயா, பொன்சேகா முதலியோரையும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துவதற்கு வழிகள் என்ன என்றுதான் யோசிக்க வேண்டும்.
அரசையும் பொதுமக்களையும் பிரித்துப் பார்க்கக்கூடத் தெரியாதவர்கள் அரசியல் செய்வதுதான் இந்தச் சிக்கல்களுக்குக் காரணம். பாகிஸ்தான் அரசு பல விதங்களில் இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களைச் செய்வோருக்கு ஆதரவும் தூண்டுதலும் அளித்துவருகிறது என்பதை இந்தியா பல முறை நிரூபித்திருக்கிறது. அதற்காக அந்த அரசின் மீது நடவடிக்கையைக் கோரி வந்திருக்கிறது. ஆனால் அதற்காக பாகிஸ்தானின் சாதாரண மக்களுடன் நாம் விரோதம் பாராட்டுவதில்லை. பல பாகிஸ்தான் நோயாளிகள் சென்னை வரை வந்து மருத்துவச் சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள். இதே அணுகுமுறையைத்தான் நாம் இலங்கையின் சிங்கள மக்கள் விஷயத்திலும் பின்பற்றவேண்டும்.

சாதாரண சிங்கள மக்களையும் எதிரியாகத்தான் பார்ப்போம் என்று ஒரு தமிழ்த் தேசிய அமைப்பின் பிரமுகர் தொலைக்காட்சி விவாதத்தில் சொன்னார். காரணம் அவர்கள்தான் ராஜபட்சேவைத் தேர்தலில் ஜெயிக்க வைத்தவர்கள் என்றார். இந்த விசித்திரமான அணுகுமுறையை ஏற்றுக்கொண்டால், தமிழகத்தில் ஊழலின் உச்சங்களான கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் திரும்பத் திரும்ப தேர்தல்களில் தேர்வு செய்யும் தமிழக மக்களை அதற்காகத் தண்டிக்கவேண்டும் என்றாகிவிடும். தேர்தல்களில் மக்கள் வாக்களிப்பது பல அம்சங்களைப் பொறுத்தது.
இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும் விளையாட்டு வீரர்களையும் மிரட்டித் திருப்பி அனுப்புபவர்கள், இலங்கையில் நடந்த போரில் இலங்கை அரசுக்கு உடந்தையாக இருந்த இந்திய அரசின் பிரதமரை தமிழ்நாட்டுக்கு வராதே என்று தடுப்பதில்லை. அப்பாவிகளான சுற்றுலாப் பயணிகளை மிரட்டுவது தான் அவர்களுக்கு எளிமையான அரசியல்.
ஜெயலலிதாவும் கருணாநிதியும் தங்கள் அரசியல் போட்டிக்காக ஈழத்தமிழர் பிரச்னையை வழக்கம் போல் மேலும் குழப்புகிறார்கள். ஜெயலலிதா அரசு இலங்கையின் கால்பந்து சிறுவர்களைத் திருப்பி அனுப்பியதும் அவர்கள் விளையாட அரங்கை அளித்த தமிழக அதிகாரியை இடைநீக்கம் செய்ததும் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச விளையாட்டு ஒப்பந்தங்களுக்கு விரோதமானது.

இன்னொரு பக்கம் நூற்றுக்கணக்கான தமிழர்கள், வணிகத்துக்காகவும், சுற்றுலாவுக்காகவும் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குப் போய் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இங்கே வரும் சிங்கள சிறுவர்களைத் திருப்பி அனுப்பும் ஜெயலலிதாவால், இங்கிருக்கும் தமிழர்கள் யாரும் எதற்கும் இலங்கைக்குச் செல்லக்கூடாது என்று தடுத்துவிட முடியுமா? இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடக்கும் வர்த்தகத்தில் அங்கிருந்து இறக்குமதியாவதைவிட நான்கு மடங்கு அதிக மதிப்புக்கு இங்கிருந்து ஏற்றுமதி நடக்கிறது. தமிழகத்திலிருந்து கார்களும் பஸ்களும் இலங்கைக்கு ஏற்றுமதியாகின்றன.
சீனா இந்தியாவின் எதிரி நாடு. அதற்கு இலங்கை அரசு பெருமளவில் இடமளித்து வருகிறது. எனவே இலங்கை மக்களும் அதிபரும் இந்தியாவுக்கு வருவதைத் தடுக்க வேண்டும் என்று இன்னொரு தமிழக அரசியல் பிரமுகர் ஒருவர் தொலைக்காட்சியில் பேசினார். சீனா எதிரியா, அல்லது அமெரிக்காவால் நமது எதிரியாக ஆக்கப்படுகிறதா என்பது இன்னொரு ஆய்வுக்குரிய விஷயம். ‘எதிரியான சீனாவுடன் இந்தியா பெரும் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. அண்மையில் சீனாவுடன் கூட்டாக ராணுவப் பயிற்சிகளில் கூட ஈடுபட ஒப்பந்தம் போட்டிருக்கிறது. சீன அமைச்சர்கள் இந்தியாவுக்கு வந்து போகிறார்கள்.

உலக அரசியல் என்பது வேறு தளத்தில் செயல்படுவது. மறைமுகப் போர் நடத்தும் நாட்டுடன் கூடப் பேச்சுவார்த்தையும் வர்த்தகக் கலாசார உறவுகளும் துண்டிக்கப்படுவதில்லை. சாதாரண மக்கள் இடையே பரிமாற்றங்கள் எப்போதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும்; இருக்க வேண்டும். அதுதான் புரிதல் உணர்வை அதிகப்படுத்த உதவும். அரசுகளின் அராஜகங்களை இரு தரப்பு மக்களிடமும் அம்பலப்படுத்த, இரு தரப்பு மக்களிடையேயும் உறவுகள் தேவை.
ராஜபட்சே முதலானோரை அம்பலப்படுத்த நீதியின் முன் நிறுத்த இலங்கை மக்களின் ஆதரவையும் திரட்டுவது அவசியம். ஏற்கெனவே பல சிங்கள மனித உரிமையாளர்கள் பகிரங்கமாகவே ராஜபட்சே அரசை விமர்சித்து வருகிறார்கள். சிங்கள இன வெறியர்களால் எரிக்கப்பட்டு மீண்டும் எழுப்பப்பட்ட யாழ்நூலகத்துக்கு தம் நூல்கள் எல்லாவற்றையும் உயில் எழுதி வைத்திருந்தார் ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் தலைவர் பீட்டர் கெனுமன்.
ஈழத்தமிழர்களுடன் இணக்கத்தை விரும்பும் பல சிங்கள சக்திகள் இருக்கின்றன. தமிழகத்துக்கு வரும் சிங்களச் சுற்றுலாப் பயணிகளை மிரட்டி விரட்டுவது போன்ற செயல்கள் அவர்களை அந்நியப்படுத்தும். அங்குள்ள இனவெறியாளர்களுக்கே இது உதவியாக இருக்கும். எப்படி இந்துத்துவ வெறியர்களும் அல்-உம்மா தீவிரவாதிகளும் ஒருவரையொருவர் வளர்க்க உதவுகிறார்களோ அதுதான் நடக்கும். இடையில் சிக்கி சாதாரண மக்களே வீணாக அழிவர். உணர்ச்சிவசப்பட்டு சாதாரண மக்களைத் துரத்துவது ஈழத்தமிழருக்கும் உதவாது; இங்குள்ள தமிழருக்கும் உதவாது.
ஈழத்தமிழர் பிரச்னைக்குத் தீர்வு வேண்டுமென்றால் முதலில் கருணாநிதி ஜெயலலிதா முதலானோரின் உள்ளூர் அரசியலிலிருந்து இந்தப் பிரச்னை பிரிக்கப்பட வேண்டும்.
இன்று ஈழத்தமிழர்களின் முதன்மை தேவை என்ன?

உடனடியான மறுவாழ்வு, கல்வி, வேலைவாப்புகள். அடுத்த கட்டமாக சமமான அரசியல் உரிமைகள். இவை நிகழவேண்டுமானால் இந்திய அரசு உள்ளிட்ட பல நாட்டு அரசுகள் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். இந்திய அரசைத் தெளிவான நிலை எடுக்க செய நிர்ப்பந்திக்கத்தான் தமிழக அரசியல் சக்திகள் முயற்சிக்க வேண்டும். சுற்றுலாப் பயணி களைத் துரத்துவது எந்த விதத்திலும் இந்திய அரசின் மீது நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தாது.
ராஜபட்சே இந்தியாவுக்கு வருவதைத் தடுத்துவிடுவதாலோ ரத்துச் செய்துவிடுவதாலோ ஈழத்தமிழர்களின் பிரச்னைக்குத் தீர்வு வரப்போவதில்லை. ஒரு பக்கம் நம் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் தெரிவித்தபடியே மறுபக்கம் சர்வதேசப் பின்னணியிலான பேச்சு வார்த்தைகள் மூலம் காய் நகர்த்துவது தான் உலக அரசியலின் வழிமுறை. ராஜபட்சேவுக்கு நம் கண்டனத்தைத் தெரிவிக்க கறுப்புக் கொடியும் காட்டவேண்டும். மன்மோகனுடன் பேசும்போது ஈழத் தமிழருக்கான அரசியல் உரிமைக்கான நடவடிக்கை பற்றி அழுத்தத்தையும் தரவேண்டும். இதுதான் யதார்த்த அரசியல்.
தங்கள் சக்தியை சாதாரண மக்களைத் துன்புறுத்துவதில் செலவழிக்காமல், ஆக்க பூர்வமாகச் செய்ய இங்கேயே நிறைய வேலைகள் இருக்கின்றன. சுமார் முப்பதாண்டுகளாகத் தமிழ்நாட்டில் இருக்கும் ஈழத்தமிழர்களின் அகதி முகாம்களைப் போர் முடியும்வரை எட்டிக்கூடப் பார்க்காமல் இருந்தவர்கள் எல்லாம் இப்போதாவது அவற்றில் கூடுதல் கவனம் செலுத்தலாம். மத்தியப்பிரதேசம் போய் ராஜபட்சேவுக்குக் கறுப்புக்கொடி காட்டத் தயாராக இருப்போர், செங்கல்பட்டிலும் பூந்தமல்லியிலும் சிறப்பு முகாம் என்ற தவறான பெயரில் குற்றச்சாட்டோ விசாரணையோ இன்றி இருபது வருடங்களாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் கறுப்புக் கொடி காட்ட இதுவரை முற்படாதது ஏன்?

ஈழத்தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண தமிழக அரசியல்வாதிகள் உண்மையிலேயே உதவ நினைத்தால், ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ, ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன்... எல்லாரும் தங்கள் ஈகோக்களை கழற்றி வைத்துவிட்டு, ஒரு முறையேனும் நேரில் சந்தித்து உட்கார்ந்து கூடிப் பேசி தாங்கள் ஒருமித்த குரலில் சொல்வது என்ன என்பதை தில்லிக்குத் தெரிவிக்க முன் வரட்டும்; வரமாட்டார்கள். காவிரி, முல்லைப் பெரியாறு, ஈழத்தமிழர் பிரச்னை எல்லாமே அவர்களுடைய உள்ளூர் அரசியலுக்கான தீனிகளே; அசல் அக்கறைகள் அல்ல.
மறுபடியும் ஆயுதப் போராட்டம், இன்னாரு யுத்தம், அதில் வென்று தனி ஈழம் அமைத்தல் என்பவை சிலருக்குச் சுகமான கனவுகளாக இருக்கலாம். ஆனால் முப்பதாண்டுகளாக வலியிலும் மரணத்துள்ளும் வாழ்ந்து எஞ்சிப் பிழைத்திருக்கும் மனங்களுக்குத் தேவைப்படுவது சுயகௌரவமும் சுயசார்பும் உள்ள ஒரு வாழ்க்கை. அதை சாதிக்கத் தேவைப்படுவது தெளிவான, நிதானமான, பொறுப்பான அரசியல் முயற்சிகள்தான். கொடுமைகளைக் கண்டு உணர்ச்சிவசப்படும் மனம் நிச்சயம் வேண்டும். ஆனால் அந்த மனம் விரும்பும் தீர்வுகளைப் பெற அறிவார்ந்த அரசியல் மட்டுமே உதவும்.




நன்றி - ஓ பக்கங்கள் , கல்கி, ஞானி , புலவர் தருமி

Tuesday, August 28, 2012

இந்தியாவில் பரவும் வி ஐ பி கலாச்சாரம் - ஓ பக்கங்கள் ஞானி @ கல்கி

ஓ பக்கங்கள்

விலாஸ்ராவ் என்ற வி.ஐ.பி. நோயாளி!

ஞாநி


நிறைய பேர் என்னை ஒரு வி.ஐ.பி என்று கருதுகிறார்கள். பத்திரிகைகளில் எழுதுவதால், டி.வி.களில் தோன்றுவதால், பரவலாகப் பலருக்கு என் முகம் பரிச்சயமாகியிருப்பதால், நான் ஒரு வி.ஐ.பி. என்று அவர்கள் நினைக்கிறார்கள்.


வி.ஐ.பி. என்ற ஜாதியே இந்தியாவுக்கே உரியது. மேலை சமூகத்தில் அதை ஏறத்தாழ ஒழித்துவிட்டார்கள். எல்லோரும் சமம்.



வி.ஐ.பி. என்றால் என்ன அர்த்தம்? எல்லா பொது இடங்களிலும் முன்னுரிமை, சலுகைகளுக்கு உரியவர் என்றே இங்கே அர்த்தம். ஏர்-போர்ட்டில் ஒருமுறை லிஃப்டுக்காகக் காத்திருந்தபோது பார்த்தேன். இன்னும் சிலர் இருந்தார்கள். ஒரு சினிமாப் பாட்டு சக்கரவர்த்தி வந்ததும் எல்லோரும் ஒதுங்கி அவர் முதலில் லிஃப்டுக்குச் செல்ல வழிவிட்டு விட்டார்கள். இப்படிப்பட்ட முன்னுரிமைகளைப் பெற குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள், உடற்குறையுடையோர் தவிர வேறு யாருக்கும் தகுதியில்லை என்பதே என் கருத்து.



நான் அடிக்கடி மருத்துவமனைகளுக்குச் செல்கிறேன். பரிசோதனை நிலையங்களுக்குப் போகிறேன். டோக்கன் வரிசைப்படி என் முறைக்காகக் காத்திருக்கிறேன். நான் ஐந்நூறு ரூபாய் பீஸ் கொடுக்கும் டாக்டரைச் சந்திக்க இரண்டு மணி நேரமெல்லாம் வரிசையில் காத்திருந்திருக்கிறேன். காத்திருக்கும் மற்றவர்களும் அதே பீஸ்தான் கொடுக்கிறார்கள். அவர்களும் காத்திருக்கிறார்கள்.



க்யூவில் நிற்காமல் முன்னே செல்லும் உரிமையுடையவர் வி.ஐ.பி. என்பது நம் சமூகத்தில் நிலவும் கிறுக்குத்தனம். இதை வோட்டுச் சாவடியிலிருந்து ஏர்-போர்ட் வரை எங்கேயும் பார்க்கலாம். தங்கள் முறை வருவதற்காகக் காத்திருக்கக் கூட முடியாத நிலை ஒரு வி.ஐ.பி.க்கு என்ன தான் இருக்க முடியும்? மலம் கழிக்கும் அவசரத்தைத் தவிர வேறெதற்கும் இந்தச் சலுகையைத் தரமுடியாது.



வி.ஐ.பி.யின் நேரம் பொன்னானது. அந்த நேரத்தில் அவர் சமூக மேம்பாட்டுக்காக உழைப்பது வீணாகிவிடும் என்றெல்லாம் கற்பனையாகச் சொல்லப்படுகின்றன. இந்த வி.ஐ.பி. கலாசாரத்தை எல்லா இடங்களிலும் நிச்சயம் ஒழித்துக் கட்டவேண்டும்.



குறிப்பாக மருத்துவத் துறையில் ஒழித்துக்கட்ட வேண்டியிருக்கிறது. வி.ஐ.பி.களால் சாதாரண மனிதர்களுக்கு ஏற்படும் தொல்லைகள் கொஞ்சநஞ்சமல்ல. சுமார் 29 வருடங்களுக்கு முன்னால் என் அம்மா ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் அதிகாலையில் இறந்துபோனார். அந்த வார்டுக்குப் பக்கத்து வார்டில் ஒரு முன்னாள் அமைச்சர் சாவதற்கு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். என் அம்மா இறந்த உடனே மருத்துவமனை ஊழியர்கள் அடுத்த நிமிடமே பிணத்தை எடுத்துக் கொண்டு ஓடும்படி என்னைத் துரத்தினார்கள். காரணம் செத்துக் கொண்டிருக்கும் வி.ஐ.பி.யைப் பார்க்க சாகப் போகும் சில வி.ஐ.பி.கள் அடுத்த சில நிமிடங்களில் வந்துவிடுவார்களாம். அப்போது வார்டில் பிணம் இருக்கக்கூடாதாம். மாடியிலிருந்து அம்மாவின் உடலைக் கீழே எடுத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர் கேட்டேன். வரவில்லை. அம்மாவின் உடலை என் இரு கைகளில் ஏந்திக் கொண்டு படிகளில் இறங்கி வெளியே வந்தேன். நான் வெளியேறவும் வி.ஐ.பி.களின் கார்கள் நுழையவும் சரியாக இருந்தது!




சிகிச்சையில் ஒரு வி.ஐ.பி.க்கு முன்னுரிமை உண்டா என்ற கேள்வி இந்த வாரம் மனத்தில் அலைமோதியது. காரணம் மத்திய அமைச்சரும் முன்னாள் மராட்டிய முதல்வருமான விலாஸ்ராவ் தேஷ்முக்தான்.



மரணப்படுக்கையில் இருந்த விலாஸ்ராவுக்கு கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் முழுக்கக் கெட்டுவிட்டன. அவற்றை உறுப்பு தானமாக வாங்கி அவருக்குப் பொருத்தி அவரைக் காப்பாற்ற முடியுமா என்று அவர் குடும்பத்தினர் முயற்சி செய்தார்கள்.



உறுப்பு தானத்தில்தான் வி.ஐ.பி. பிரச்னை நுழைகிறது. இந்தியாவில் உறுப்பு தானம் செய்பவர்கள் மிகக் குறைவு. மூளைச் சாவு ஏற்பட்டதும் உறவினர் சம்மதத்துடன் ஒருவரின் உறுப்புகளை எடுத்துப் பயன்படுத்த அனுமதிக்கும் சட்டமே நம் நாட்டில் தாமதமாகத்தான் வந்தது.



எப்போதுமே தேவைப்படும் உறுப்புகளின் எண்ணிக்கையை விட, கிடைக்கும் உறுப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். எனவே உறுப்பு பொருத்தப்பட வேண்டிக் காத்திருப்போர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. உறுப்பு கிடைக்கக் கிடைக்க வரிசைப்படி அளிக்கப்படுகிறது. இதுதான் தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலங்களிலும் பின்பற்றும் நடைமுறை.



விலாஸ்ராவ் இந்தப் பட்டியலில் முதலில் இருக்க வாய்ப்பே இல்லை. அவருக்கு முன்பே பலர் காத்திருந்தார்கள். ஆனால் விதிகளை வளைத்து விலாஸ்ராவுக்கு ஒரு கல்லீரலையும் சிறுநீரகத்தையும் பெற்றுவிடமுடியுமா என்று கொஞ்சம் முயற்சிகள் நடந்திருக்கின்றன.



காத்திருப்போரில் யாருக்கு முன்னுரிமை தருவது என்பதற்கு ஒரு நடைமுறை இருக்கிறது. திடீரென உடல்நலம் குலைந்து உடனடியாக மாற்று உறுப்பு பொருத்தப்படாவிட்டால் இறந்துவிடும் ஆபத்தான நிலையில் இருப்பவரை அக்யூட் நோயாளி என்று சொல்வார்கள். இவர்களிலும் மிக அவசர நிலையில் இருக்கும் சிலரே முன்னுரிமைக்கு உரியவர்கள். நீண்ட காலமாக உடலின் ஒவ்வொரு பாகமாகப் பழுதடைந்து மெல்ல மெல்லச் சீர்குலைந்து வந்த நிலையில் இருப்போர் க்ரானிக் எனப்படுவர். இவர்கள் முன்னுரிமைக்கு உரியவர்கள் அல்ல.




விலாஸ்ராவ் தேஷ்முக்கின் கல்லீரல் பழுதாகி, பல காலம் ஆயிற்று. அதன்பின் அதில் புற்றுநோயும் ஏற்பட்டது. அவரது சிறுநீரகங்கள் பழுதடைந்தன. அவர் க்ரானிக் நோயாளி நிலையில் இருந்தவர்.



வி.ஐ.பி. என்பதற்காக அவருக்கு முன்னுரிமை தர மாற்று உறுப்புகள் தொடர்பான சட்டங்களில் ஒரு வழியும் கிடையாது. அவ்வளவு ஏன், இந்தியாவின் எந்தச் சட்டத்திலும் வி.ஐ.பி. என்ற வரையறையோ, யாருக்கும் சலுகையோ கிடையாது.



எனவே விலாஸ்ராவை க்ரானிக் கேட்டகரியில் இல்லாமல், ஹைப்பர் அல்ட்ரா க்ரிட்டிகல் கேஸ் என்று அவர் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை அறிவித்தது. அந்த முன்னுரிமை பெற்றும் கூட, இன்னமும் அறுவைச் சிகிச்சைக்குத் தயாராக இல்லாத நிலையிலேயே அவர் காலமாகிவிட்டார்.



மும்பையில் கல்லீரல் பெற இயலாத நிலையில் அவரை சென்னைக்குக் கொண்டு வந்து இங்கே விதியை வளைக்க ஏதேனும் செய்யமுடியுமா என்ற முயற்சி நடந்திருக்கிறது. இங்கேயும் சிரமம் என்ற போது மறுபடியும் மும்பையில் முயற்சித்தார்கள். உறுப்பு தான விதிகளின்படி வி.ஐ.பி. என்று யாரும் இல்லை. எனவே அவரை வி.ஐ.பி. யாகக் கருதி முன்னுரிமை தந்து உறுப்பை ஒதுக்கீடு செய்யமுடியாது என்று மும்பையில் சொல்லிவிட்டார்கள். ஆனால் க்ரானிக் நிலையில் இருந்த அவர் உறுப்பு கிடைக்கும் முன்பே காலமாகி விட்டார்.



அமெரிக்கா, மும்பை, சென்னை, ஏர் ஆம்புலன்ஸ் என்றெல்லாம் அலைந்து விலாஸ்ராவுக்கு உறுப்பு தானம் பெற்று பொருத்த முயற்சித்தவர்கள், அவர் இறந்த பின் அவரது கண்களையோ உடலையோ கூட தானமாகத் தரவில்லை. இதுதான் நம் சமூகத்தின் வி.ஐ.பி. மனநிலை. எனக்கு எல்லோரும் தரவேண்டும். நான் யாருக்கும் எதையும் தரமாட்டேன்.



மருத்துவச் சிகிச்சை பெறுவதில் வி.ஐ.பி.க்கு முன்னுரிமை என்று எதுவும் இருக்க முடியாது. எல்லா உயிரும் சமமானவை என்பதே சரியான கோட்பாடு. ஆனால் நாம் உயிர்களை வி.ஐ.பி. உயிர், சாதா உயிர் என்று பிரித்தே நடத்துகிறோம்.



விலாஸ்ராவ் தொடர்பாக வெளியான இணையச் செய்திகளில் கமெண்ட் அடித்த பல வாசகர்கள், ‘விலாஸ்ராவ் ஆதர்ஷ் ஊழலில் தொடர்புள்ள நபர். அவர் இருந்தால் என்ன, இறந்தால் என்ன’ என்றெல்லாம் எழுதியிருந்தார்கள். இதுவும் தவறான அணுகுமுறைதான். ஊழலில் தொடர்புடையவர் செத்து ஒழியட்டும் என்று விட முடியாது. அவரை நீதிக்கு முன் நிறுத்திக் குற்றத்தை நிரூபித்து, தண்டிப்பதுதான் சரியான வழி. எந்த மனித உயிரும் காப்பாற்றப்படவேண்டியதுதான் - விலாஸ்ராவ் உட்பட. ஆனால் விலாஸ்ராவ் வி.ஐ.பி. என்பதால் முதலில் காப்பாற்றப் படவேண்டும் என்பதே தவறான அணுகுமுறை.



உண்மையில் எல்லா உயிர்களையும் சமமாக மதித்துக் கவனிப்பவர்கள் மருத்துவ மனையில் இருக்கும் நர்சுகள்தான். எங்கிருந்துதான் இப்படி அற்புதமான நர்சுகள் வருடந்தோறும் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கிறார்கள் என்று ஒவ்வொரு முறை மருத்துவமனைகளில் அட்மிட் ஆகும்போதும் வியக்கிறேன். அவர்கள் தான் நம் நாட்டு மருத்துவத்துறையின் மிகப்பெரிய சொத்து.



எனக்கு மூன்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டு அவற்றிலிருந்து மெல்ல மெல்ல முழுமையாகக் குணமடைய ஆறு வாரங்கள் தேவைப்படும் நிலையில், சென்ற இரண்டு வாரங்கள் ஓ பக்கங்களை எழுத முடியாமல் போய்விட்டது. எனக்கு முகம் தெரியாத எண்ணற்ற வாசகர்கள் என்னை நலம் பெற வாழ்த்தியதுதான் ஒருவன் எழுத்தாளனாக இருப்பதில் கிடைக்கும் மிகப்பெரிய வருவாய். அறுவை அனுபவங்களைப் பின்னர் உங்களுடன் பகிர்ந்துகொள்வேன்.



இந்த வாரக் கேள்வி



வடகிழக்கு மாநிலங்களிலிருந்து தென்னிந்தியாவுக்கு வந்து வேலை பார்த்த ஆயிரக்கணக்கானோர் பதற்றமான மனநிலையில் ஊர் திரும்பியது வருத்தமான விஷயம்தான். ஆனால் எனக்கு ஒரு அடிப்படைச் சந்தேகம். ஏன் இத்தனை ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து புறப்பட்டு இவ்வளவு தூரம் வந்து பிழைக்க வேண்டியிருக்கிறது? அந்த மாநிலங்களில் விவசாயம், தொழில் இவற்றின் நிலை என்ன? ஏன் அங்கே வேலை வாய்ப்புகள் இல்லை? அதற்கு யார் பொறுப்பு?



இந்த வார பதில்



தியேட்டர்களில் கூட்டம் குறைந்ததற்குக் காரணம் என்ன என்று சினிமா பிரமுகர்கள் ஒரு கூட்டத்தில் கேட்டிருக்கிறார்கள்:



இதோ பதில்: காரணம்

1: குப்பையாக படம் எடுக்கிறீர்கள்.

2. பெண்கள் தியேட்டருக்கு வந்து பார்க்க விரும்பாதபடி படம் எடுக்கிறீர்கள்.


3. பெரும்பாலான தமிழ் டி.வி. சேனல்கள் தாங்களே சினிமா கொட்டகை மாதிரி இருக்கின்றன.


 4. கொட்டகைக்கு வந்து காஃபி சாப்பிட்டாலே திவாலாக்கிவிடுகிறீர்கள். அண்மையில் ஒரு சாதாரணக் கொட்டகையில் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ. 30 கொடுத்து படம் பார்த்தேன். கேன்டீனில் மோசமான காஃபி குடித்தேன். விலை: பத்து ரூபாய்.




இந்த வாரப் பூச்செண்டு


கட்சி சார்பு இல்லாமல் மக்கள் சார்பாகச் செய்திகளை வழங்கி வெற்றி பெற முடியும் என்று நிரூபித்து இரண்டாம் ஆண்டில் நுழையும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு!

நன்றி - கல்கி, புலவர் தருமி, ஓ பக்கங்கள் ஞானி