Showing posts with label ஞாநி. Show all posts
Showing posts with label ஞாநி. Show all posts

Saturday, December 29, 2012

டெல்லி சம்பவத்துக்கு நாம் அனைவரும் பொறுப்பு - ஓ பக்கங்கள் ஞானி கடிதம் @ குமுதம்

மன்னிக்க வேண்டுகிறேன்…..!!!!


அன்புள்ள…..

... உன் பெயர் எனக்குத் தெரியவில்லை. தெரியாதது பற்றி வருத்தமில்லை. ஏனென்றால் எனக்குத் தெரிந்து முதல்முறையாக இப்போதுதான் மீடியா பாலியல் வன்முறைக்குள்ளான ஒருவரின் பெயரையும் படத்தையும் வெளியிடக் கூடாது என்ற இதழியல் அறத்தைப் பின்பற்றியிருக்கிறது.

டெல்லி இந்தியாவின் அரசியல் தலைநகரம் மட்டுமல்ல பாலியல் வன்முறைக்கும் தலைநகரம் என்பதை மீண்டுமொரு முறை உனக்கு எதிரான வன்முறை நிரூபித்திருக்கிறது. இந்தியா முழுவதும் கிராமங்களிலும் கூட பெண்களுக்கெதிரான, குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் உச்சமான அதிகார மையமான டெல்லியிலேயே இது நடக்கும்போது இதர இடங்களில் நடப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

உன்னைப் பற்றிய முதல் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரவு 9 மணிக்கு நண்பருடன் ஒரு பஸ்சில் ஏறினாய். அதில் இருந்த டிரைவரும் இன்னும் ஐந்து பேரும் உன்னை கிண்டல் செய்தார்கள். கண்டித்த உன் நண்பனை இரும்புக் கம்பியால் அடித்துப் போட்டுவிட்டு, எதிர்த்த உன்னையும் அடித்துப் போட்டுவிட்டு ஆறு பேரும் மாறி மாறி உன்னைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கினார்கள். உன்னையும் நண்பரையும் சாலையோரம் தூக்கி எறிந்துவிட்டுப் போனார்கள். 


இந்த நான்கு வரிகளை எழுதும்போதே, கோபத்திலும் ஆற்றாமையிலும் என் கண்களில் நீர் பொங்கி வருகிறது . எழுதும் எனக்கே இத்தனை வேதனையை ஏற்படுத்தும் இந்த நிகழ்வு உன்னை எத்தனை துயரத்துக்கும் அதிர்ச்சிக்கும் வலிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியிருக்கும் என்று நினைக்கும்போது தொடர்ந்து அழுவதை என்னால் நிறுத்தமுடியவில்லை.

உன்னைப் பற்றி அடுத்தடுத்து வரும் செய்திகள்தான் என் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள வைக்கின்றன. உயிர் பிழைப்பதற்காக மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கும் உன் மன உறுதியை மருத்துவர்களே வியந்து பாராட்டுகிறார்கள். இரும்புத் தடியால் சிதைக்கப்பட்ட உன் முழு குடலையும் அறுவை சிகிச்சை செய்து நீக்கியபின்னரும் நீ தொடர்ந்து போராடுகிறாய். 


நினைவு வரும்போதெல்லாம், குற்றவாளிகள் சிக்கிவிட்டார்களா, அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று எழுதிக் காட்டுகிறாய். குடும்பத்தில் முதல் தலைமுறையாகப் படிக்கப் போயிருக்கும் உன்னை நம்பித் தங்கள் எதிர்காலத்தை வைத்திருக்கும் சகோதரிகளிடமும், பெற்றோரிடமும் கவலைப்படவேண்டாம், நான் பிழைத்துக் கொள்வேன் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறாய்.

உன்னிடம் மன்னிப்பு கேட்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உனக்கு நேர்ந்த நிலைக்குக் காரணமான ஒவ்வொன்றின் சார்பாகவும் நான் மன்னிப்பைக் கோருகிறேன்.

பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த பஸ்சை விடுமுறை நாளன்று அதன் டிரைவர் மது குடித்துவிட்டு தன் நண்பர்களுடன் உல்லாசமாக சுற்றித் திரிய எடுத்துச் செல்ல அனுமதிக்கும் பஸ் முதலாளிகளை, நம் சமூகத்தில் சகித்துக் கொண்டிருப்பதற்காக உன் மன்னிப்பைக் கோருகிறேன். ஒரு விபத்துக்குப் பின் டிரைவர் வேலைக்கான உடல் தகுதி இல்லையென்று அறியப்பட்ட ஒருவரை தொடர்ந்து டிரைவராக வைத்திருந்த அந்த முதலாளியின் குற்றத்தினால் இத்தனை நாட்களாக தம்மையறியாமலே ஆபத்தை சந்தித்து மயிரிழையில் தப்பி வந்த பள்ளிக் குழந்தைகளிடமும் தப்ப முடியாமல் சிக்கிய உன்னிடமும் மன்னிப்பைக் கோருகிறேன்.

மக்கள் தேவைக்கான போதுமான அரசு பஸ்களை இயக்காமல், எந்த தனியாரும் எப்படிப்பட்ட பஸ்சையும் பொது தடங்களில் இயக்க அனுமதித்திருக்கும் லாயக்கற்ற டெல்லி பஸ் நிர்வாகத்தை நாங்கள் சகித்துக் கொண்டிருப்பதற்காக உன் மன்னிப்பைக் கோருகிறேன். அதனால்தான் நீயும் உன் நண்பரும் இந்த பஸ்சையும் அப்படிப்பட்ட ஒரு பஸ் என்று நம்பி ஏறும் நிலை வந்தது.

படிப்பறிவில்லாத அந்த டிரைவரும் அவன் நண்பர்களும் குடித்துவிட்டு ஒரு பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட என்ன காரணம் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

நாங்கள்தான் – we the people of Indiaதான். காரணம். முதலில் எல்லாருக்கும் படிப்பு, எல்லாருக்கும் சமமான படிப்பு என்பதை நாங்கள் கொடுக்கத் தவறிவிட்டோம்.

படிப்பு கிடைத்தவர்களுக்கும் எப்படிப்பட்ட படிப்பை வழங்கினோம் ? வேலைக்குப் போய் கணிசமான சம்பளம் வாங்குவதற்கான திறமைகளை மட்டுமே தரும் படிப்பை வழங்கினோமே தவிர, சக மனிதர்களுடன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எதையும் எங்கள் பள்ளிகளும் கல்லூரிகளும் சொல்லித் தந்ததில்லை.

அதையெல்லாம் குடும்பம் பார்த்துக் கொள்ளும் என்று விட்டுவிட்டோம். குடும்பம் என்ன பார்த்தது ? சாதி பார்த்தது. மதம் பார்த்தது. ஆணுக்கு அடிமையாக வேலை செய்யவே பெண் பிறந்திருக்கிறாள் என்ற கருத்தைக் குழந்தையிலிருந்தே என்னைப் போன்ற ஆண்களுக்கு ஊட்டி வளர்த்தது.

உன்னைப் போன்ற பெண்கள் படித்து வேலைக்கு சென்றபின்னரும் கூட, திருமணமாகிவிட்டால், கணவன் சொல்படிதான் நடக்க வேண்டும் என்பதைத்தான் குடும்பம் இன்று வரைக் கற்றுக் கொடுத்துக் கொண்டேஇருக்கிறது. இருவரும் வேலையில் இருப்பீர்கள். ஆனால் திருமணம் ஆகிவிட்டால், தொடர்ந்து வேலைக்குப் போவாயா என்று ஒரு போதும் எந்த ஆணிடமும் எந்தக் குடும்பமும் கேட்டதே இல்லை. கணவனுக்கு சரியென்றால் மட்டுமே தொடர்ந்து வேலைக்குப் போகலாம் என்று பெண்ணுக்கு சொல்லத் தவறியதும் இல்லை.

உன் உடல் உனக்குச் சொந்தமில்லை என்றுதான் நாங்கள் உன்னைப் போன்ற பெண்களிடம் காலம் காலமாக கற்றுத் தந்திருக்கிறோம். அது ஆணுக்கானது. அதற்குரிய ஆண் வரும்வரை பத்திரமாக வைத்திருந்து அவனிடம் ஒப்படைப்பதையே பெற்றோரின் மகத்தான கடமையாக குடும்பம் சொல்லித் தந்திருக்கிறது. அதனால்தான் என்ன உடை அணியவேண்டும், எங்கே எந்த நேரத்தில் போக வேண்டும், எப்படி ஆணுக்குள் எப்போதும் காத்திருக்கும் காமப் பிசாசை உசுப்பிவிட்டுவிடக் கூடாது என்றெல்லாம் உனக்கு - உங்களுக்கு கட்டளைகள் போட்டு வந்திருக்கிறோம். ஆண் குடிக்கலாம். ஆண் சிகரெட் பிடிக்கலாம். ஆண் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், நீ — நீ ஒரு பெண் – செய்யக்கூடாது என்று மிரட்டி வந்திருக்கிறோம்.

நியாயப்படி பெண்ணை சக மனுஷியாக, தன்னைப் போலவே சிந்திக்கக் கூடிய, செயல்படக் கூடிய ஆற்றல் உடைய இன்னொரு உயிராகப் பார்க்கவும் மதிக்கவும் எங்கள் ஆண்களுக்கு எங்கள் குடும்பங்கள் சொல்லித் தந்ததே இல்லை. அப்பா எதிரிலே பேசவே மாட்டோம் என்றால் அது ‘மரியாதை’ தெரிந்த குடும்பம்.

பெண் காமத்துக்கானவள். பெண் குழந்தை வளர்ப்பதற்கானவள். பெண் ஆணின் இச்சைகளை பூர்த்தி செய்வதற்கானவள். இதைத் தவிரவும் ஒரு பெண் வேறு ஏதாவது அவள் விருப்பப்படி செய்ய முடிந்தால், அது அவளின் உரிமையாளனாகிய ஆணின் பெருந்தன்மையையே காட்டும் என்றே நாங்கள் உங்களை நம்பவைத்தோம்.

குடும்பம் வார்த்திருக்கும் இந்தப் பார்வையை தொடர்ந்து உரம் போட்டு வளர்த்து உறுதி செய்வதையே தங்கள் தலையாய பணியாக, பத்திரிகைகள், சினிமா, தொலைக்காட்சி என்று எல்லா ஊடகங்களும் செய்து வந்திருக்கின்றன. பெண்ணின் உடல் அழகிப்போட்டி முதல் பத்திரிகை அட்டை வரை, சீட்டுக்கட்டு முதல் சினிமா வரை எல்லா இடங்களிலும் ஆணுக்கான போகப்பொருளாகவே அழுத்தந்திருத்தமாக வரையறுக்கப்பட்டு விட்டது. பொறுக்கித்தனம் செய்பவன்தான் கதாநாயகன். அவனுக்காக உருகுபவள்தான் கதாநாயகி என்ற கருத்தை வலியுறுத்தும் படங்களுக்கு தேசிய விருது கொடுத்து கௌரவிப்பவர்கள் நாங்கள்.

இந்தச் சூழலில் வளரும் ஆண் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்று யோசி. படிக்காதவனாக இருந்தால் நீ பஸ்சில் எதிர்கொண்ட ஆறு பேரில் ஒருவனாகும் வாய்ப்பே அதிகம். தன்னைச் சுற்றிலும் காமத்தை தூண்டும் சூழல். நீ ஆண் என்பதால் நீதான் அதிகாரம் உள்ளவன் என்ற போதை. கூடுதல் போதைக்கு மது. பள்ளிகளை விட அதிகமாக பார்களை அரசாங்கமே நடத்தும் நாடல்லவா இது….

படிக்காதவன் தன்னைக் காதலிக்க மறுக்கும் பெண்ணாயிருந்தால் முகத்தில் ஆசிட் ஊற்றுவான். எனக்கு கிடைக்காத உடல் வேறு எவனுக்கும் கிடைக்க வேண்டாம் என்ற ஆணாதிக்க மனநிலை அது.

இந்த சூழலில் படித்தவனாக இருந்தால் அந்த ஆண் எப்படிப்பட்டவனாக வருவான் ? வரதட்சிணை பிரச்சினைக்காக மனைவியை வீட்டை விட்டுத் துரத்துவான்.அல்லது தன் பேச்சைக் கேட்காமல் கருவுற்ற குழந்தையை அபார்ஷன் செய்ய மறுத்த மனைவியை தண்டிக்க, பெற்ற குழந்தையை சுவரில் அடித்துக் கொல்வான். இதையெல்லாம் உன் நண்பனைப் போன்ற ஐ.டி படித்த எஞ்சினீயர்கள்தான் இதே நாட்டில் செய்தார்கள். கொஞ்சம் நாசூக்கு தெரிந்தவனாக இருந்தால், உடன் வேலை பார்க்கும் பெண்ணை கண்ணியமான ரேப்புக்கு அழைப்பான். உடன்படுத்தால் வேலை ஏணியில் அவள் அடுத்த படி ஏறிப் போகலாம்.

மாறுபட்ட எல்லா அணுகுமுறைகளுக்கும் ஒரே அடிப்படைதான். பெண்ணின் உடல் ஆணுக்கானது. மனம், சிந்தனை, அறிவு அதெல்லாம் ஆம்பளைங்க சமாச்சாரம். ஒவ்வொரு ஆணும் இன்னும் வாய்ப்பு கிடைக்காத ரேப்பிஸ்ட் என்ற நிலையை உருவாக்குவதையே நாங்கள் குடும்பம் தொடங்கி மீடியா வரை முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பார்வையைத் தொடர்ந்து பரப்பி வரும் நாங்கள் எல்லாரும்தான் குற்றவாளிகள். அந்த ஆறு பேர் மட்டுமல்ல. அவர்களை தண்டிக்க சில சட்ட வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் எங்களை தண்டிக்க சட்டத்தில் இதுவரை இடமில்லை.

அதனால்தான் உன் மன்னிப்பைக் கோருகிறேன். உன்னிடம் மட்டுமல்ல, ஒவ்வொரு பெண்ணிடமும் மன்னிப்பைக் கோருகிறேன். அவர்கள் எல்லாரும் இன்னமும் பாலியல் வன்முறைக்கு உட்படாமல் இருப்பது அதிர்ஷ்டம்தான். நேற்று நீ. நாளை இன்னொருத்தி. இந்த நிலை மாறவேண்டுமானால், அந்த ஆறு பேரை தூக்கில் போட்டால் மாறிவிடாது. அல்லது ஆறு பேரையும் காயடித்தாலும் மாறிவிடாது. நம் குடும்பம் மாற வேண்டும் நம் கல்வி மாற வேண்டும். நம் அரசியல் மாற வேண்டும். நம் ‘பண்பாடு’ மாறவேண்டும்.

இதையெல்லாம் மாற்ற உன்னைப் போன்ற பெண்கள் வேண்டும். உனக்கு நேர்ந்த கொடூரத்துக்குப் பின்னும் இந்த வாழ்க்கை மேல் நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறாய். நீ பிழைத்து வந்து மீடியாவில் தோன்ற வேண்டும். எவனோ ஒருவன் லவ் லெட்டர் கொடுத்தாலே தன் மானம் போய்விட்டதாகப் பதறும் கோழைப் பெண்களை மாற்ற நீ வர வேண்டும். தன்னைச் சுற்றிலும் இருக்கும் அத்தனை அம்சங்களும் தன் திமிரையும் காமத்தையும் மட்டுமே ஊக்குவிக்கும் ஆபத்திலிருந்து, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பும் ஆண்களை ஊக்குவிக்க நீ வரவேண்டும்.

அப்படி வரும்போது எங்களை மன்னித்துவிட்டு நம்பிக்கையுடன் வா. உன் மன்னிப்புதான் இனியேனும் எங்களை நல்லவர்களாக்கும்.

அன்புடன்

ஞாநி

சக இந்தியர்கள் சார்பாக.

குமுதம்
டிசம்பர் .2012

Saturday, December 08, 2012

மத்திய அரசின் ஆதார் அடையாள அட்டைக்குழப்படிகள் - ஓ பக்கங்கள் ஞாநி சாட்டை அடி


பக்கங்கள்

கை மேல காசு!

ஞாநி

மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறிய வேண்டியது தான். அல்லது வருகிற பொங்கல் சமயத்தில் போகியன்று தீக்கிரையாக்கிக் குளிர் காயலாம்.
அரசு மான்ய விலையில் மக்களுக்கு அளித்து வரும் எல்லா பொருட்களையும் இனி மக்கள் தனியாரிடம்தான் வாங்க வேண்டும் என்றும், விலை குறைத்தோ விலை இல்லாமலோ தரப்பட்ட பொருட்களுக்கான அரசு மான்யம் இனிமேல் ரொக்கப் பணமாகவே மக்களுக்குத் தரப்படும் என்றும் மன்மோகன் அரசு அறிவித்திருக்கிறது.
இதை உடனடியாக இந்தியாவில் 51 மாவட்டங்களில் செயல்படுத்தப் போகிறது. பின்னர் படிப்படியாக செய்வதே திட்டம். இதில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், புதியகை மேல காசுதிட்டத்தின் கீழ் யார் யாருக்கு மான்யம் தரப்படவேண்டும் என்பதைத் தீர்மானிக்கப் போவது ஆதார் அடையாள அட்டைதான்.
ஏன் இந்தத் திட்டம்? இதுவரை அரசு மக்களுக்கு மான்ய விலையில் தரும் பல பொருட்கள் தகுதியானவர்களுக்கு மட்டும் போகாமல், வசதியானவர்களுக்கும் போவதைத் தடுப்பது ஒரு நோக்கம். இந்த நோக்கம் என்னவோ நல்ல நோக்கம்தான்.

யார் தகுதியானவர், யார் தகுதியில்லாதவர் என்பதை இனி ஆதார் அட்டைதான் தீர்மானிக்கும். ஆதார் அட்டை தரும்போது ஒருவரிடம் பெற்ற விவரங்களின் அடிப்படையில் அவர் மான்யத்துக்கு உரியவரா இல்லையா என்பது முடிவு செய்யப்படும். இதற்கு ஏன் தனியே ஆதார் அட்டை? இதைத் தரும்போது ஒருவரின் சமூகப் பொருளாதார நிலையைக் கணக்கிடுவது போல, ரேஷன் அட்டை வைத்திருப்பவரின் தகுதியையே விசாரித்து தகுதியற்றவரை நீக்கியிருக்கலாமே? கூடாது என்கிறது அரசு. ஆதார் அட்டை என்பது ஒரு பிரஜையின் அடையாளத்தைக் கொண்டு, ஏழைமைக்கான சாட்சியம், வெவ்வேறு திட்டங்களின் கீழ் பெறும் கூலியின் பதிவுகள், மான்யங்களின் அளவுகள், அரசிடமோ, வங்கியிடமோ கேட்கும் கடன், பெற்ற கடன், கட்டிய கடன் விவரங்கள் என்று எல்லாவற்றையும் கணினி வழியே பதிந்து வைக்க வசதியான ஒற்றைப் பதிவு முறை என்கிறது அரசு.
கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், ஆதார் அட்டை என்பதற்கு இன்னமும் சட்டப்படியான சம்மதமே வரவில்லை. ஒவ்வொரு பிரஜையும் இந்த அட்டை வைத்திருக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் இயற்றப்படவில்லை. விரும்பினால் இந்த அட்டையைப் பெறலாம் என்றே இப்போதைய நிலை உள்ளது. மொத்த மக்கள் தொகையில் இதுவரை வெறும் 22 கோடி பேர் மட்டுமே ஆதார் அட்டைக்காகப் பதிவு செய்துள்ளனர் (தமிழ்நாட்டில் 69 லட்சம் பேர்தான்.) ஆதார் அட்டையை பிரஜா உரிமை அட்டை போல அரசு ஆக்கப்பார்ப்பதில், ஒரு தனி நபரின் அந்தரங்க உரிமைகளில் அரசு கண்காணிப்புக்கு இடம் இருப்பதாக ஏற்கெனவே எதிர்ப்பு கிளம்பியது. எனவே ஆதார் அட்டையை அனைவருக்குமானதாக ஆக்கும் சட்டம் இன்னும் நிறைவேற்றப் படாமல் இருக்கிறது.
ஆனால் இப்போது அவசர அவசரமாக மன்மோகன் அரசு ஆதார் அட்டை அடிப்படையில் இனி மான்யம் எல்லாம் ரொக்கமாக மட்டுமே தரப்படும் என்று அறிவிப்பதன் ரகசியம் என்ன? பல வருடங்களாகவே உலக வங்கியும் அமெரிக்க அரசின் தனியார் சார்பு பிரசாரகர்களும் இந்தியாவில் உணவு உட்பட எதற்கும் அரசு மான்யம் கொடுக்கப்படக் கூடாது என்று வற்புறுத்தி வருகிறார்கள். எல்லாவற்றையும் மார்க்கெட்டே தீர்மானிக்க விடவேண்டும் என்பதே அவர்கள் நிலை. ஆனால் இதைச் செயல்படுத்த விரும்பியும் முடியாமல் மன்மோகன் இதுவரை திணறி வந்தார். இப்போது தம் பதவிக்காலம் முடியும் வேளையில் உலக முதலாளிகள் சார்பான எல்லா முடிவுகளையும் செயல்படுத்திவிட்டே போவது என்ற பிடிவாதத்துக்கு வந்துவிட்டார்.

மான்யங்களை ஒழிப்பதுதான் அவரது இறுதி நோக்கம். முதல் கட்டத்தில் மான்யமாகப் பொருட்களைத் தருவதை நிறுத்தி காசாகக் கொடுக்க ஆரம்பித்தால், அந்தக் காசைக் கொண்டு தனியாரிடம்தான் மக்கள் எதையும் வாங்கும் நிலை உருவாகும். அடுத்த கட்டமாக, காசாகத் தரும் மான்ய அளவைப் படிப்படியாகக் குறைத்து நீக்கிவிடலாம் என்பதே தொலைநோக்குத் திட்டம்.
இதன் உடனடி விளைவு என்ன என்று பார்க்கலாம். அரசு நடத்தி வரும் ரேஷன் கடைகளை எல்லாம் மூடவேண்டி வரும். லட்சக்கணக்கான ஊழியர்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான ரேஷன் கடைகள், இதர தனியார் கடைகள் போல இயங்கமுடியாமல் மூடப்படும். ரேஷன் கடை மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரை போன்றவற்றை அரசு விற்கப்போவதில்லை என்றால், அடுத்த கட்டமாக அவை எதையும் அரசு விவசாயிகளிடம் இருந்து வாங்கத் தேவையில்லை. குறைந்தபட்ச கொள்முதல் விலையின் மூலம் அரசு இதுவரை விவசாயிகளுக்கு ஓரளவு வாழ்க்கை உத்தரவாதம் தருவது அடியோடு கைவிடப்படும். எல்லா விவசாயிகளும் தங்கள் பொருட்களை, தனியாருக்கு மட்டுமே விற்கும் நிலை ஏற்படும். தனியார் கொள்முதல் செய்து வைத்துக் கொண்டு பதுக்கலாம். செயற்கையான பொருள் பஞ்சத்தை ஏற்படுத்தி விலையை உயரச் செயலாம். ஆனால் அரசு தன்வசம் இருக்கும் ஸ்டாக்கை பயன்படுத்தி விலையைச் சரி செய்ய வைக்க முடியாது. ஏனென்றால் அதனிடம் ஸ்டாக்கோ ரேஷன் கடையோ இருக்காது. அரசு காசாகக் கொடுத்த மான்யத்தைக் கொண்டு தனியார் கடையில் மட்டும்தான் மக்கள் பொருள் வாங்கும் நிலை என்றால் விலைகளை மார்க்கெட்தான் தீர்மானிக்கும்.
அரசு பொருளுக்குப் பதில் கொடுக்கும் மான்யக் காசை ஆதார் அட்டைதாரரின் வங்கிக்கணக்கில் செலுத்தும் என்று அறிவித்திருக்கிறது. இந்தியாவில் வறுமையிலும் வறுமைக்கோட்டுக்குக் கீழேயும் இருப்போர் இதற்காக வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும். கிராமப் புற மக்கள் தொகையில் வெறும் 54 சதவிகிதம் பேருக்குத்தான் வங்கிக் கணக்கு இருக்கிறது. ஆதார் அட்டை இருப்போருக்கெல்லாம் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்குவது என்றால் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்த பட்சம் ஒரு வங்கிக் கிளை திறக்க வேண்டும். அல்லது .டி.எம். திறக்க வேண்டும். அது வங்கிக்கே கட்டுப்படியாகாது. இதற்குப் பதிலாக நடமாடும் ஏஜென்ட்டுகளை ஒவ்வொரு கிராமத்திலும் நியமித்து அவர் கைமெஷின் மூலம் ஒவ்வொருவர் கணக்கிலும் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்துச் சொல்லும் வசதியை உருவாக்க ஒரு யோசனை இருக்கிறது. இதுவும் நடைமுறையில் சிக்கல்தான். பொருள் வாங்க மான்யப் பணத்தை எடுக்க வங்கிக்குத்தான் போயாகவேண்டும்.

வங்கிக் கணக்கு யார் பெயரில் இருக்கும்? ரேஷன் அட்டையில் அப்பா பெயர் இருக்கலாம். ஆதார் அட்டை வைத்திருக்கும் மகனோ, மகளோ கூலியோ மான்யமோ பெறுவதானால் அவர்கள் பெயரில் வங்கிக் கணக்கு தேவை. குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கும் தேவை. ஆதார் அட்டையும் தேவை என்று ஆகிவிடும். ரேஷன் அட்டைக்கும் ஆதார் அட்டைக்கும் இடையே முரண்பாடு இருந்தால் தீர்ப்பது இன்னும் சிக்கலை ஏற்படுத்தும்.
இந்த ஓட்டையான திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தியே தீரப் போவதாக மன்மோகன் அரசு பிடிவாதமாக அறிவித்திருக்கிறது. இந்தத் திட்டம் எப்படி செயல்படும் என்பதற்கு முன்னோடியாக ஓர் இடத்தில் செயல்படுத்திப் பார்த்தார்கள். ராஜஸ்தானில் ஆல்வார் மாவட்டத்தில் கோட் காசிம் கிராமத்தில் இது எப்படி செயல்பட்டது என்பதை அவுட்லுக் இதழ் அம்பலப்படுத்தியிருக்கிறது. கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரை இங்குள்ள ரேஷன் கடையில், மண்ணெண்ணெய் மான்ய விலைக்கு பதில் மார்க்கெட் விலையில் விற்கப்பட்டது. மான்ய விலை லிட்டருக்கு 15 ரூ. மார்க்கெட் விலை 50 ரூபாய். மக்களிடம் 35 ரூபாய் உங்கள் கணக்கில் அரசு போடும் என்று சொல்லப்பட்டது. மக்கள் கடையில் போய் 50 ரூபாய்க்கு வாங்கியாக வேண்டிய நிலை. வாங்கினார்கள். ஆனால் மூன்று நான்கு மாதங்களாகியும் வங்கிக்கணக்கில் மான்யம் வந்து சேரவில்லை. எப்போது வங்கிக் கணக்கில் வரும்? மாநில அரசுக்கு வந்து விட்டது. சிக்கிரமே அனுப்புவோம் என்கிறார் கலெக்டர். அதுவரை முன்பணம் போட்டு கிரசின் வாங்க, வறுமைக் கோட்டில் இருப்பவர்களால் எப்படி முடியும்? திட்டத்தின் கீழ் பதிவு செய்த 350 பேரில் இப்போது 30 பேர்தான் கடைக்கு வந்து வாங்குகிறார்கள். கிரசின் உபயோகிக்கவே முடியாமல் போய் சுள்ளி, விறகு என்று தேடப் போய்விட்டார்கள். இதுதான் சோதனை முயற்சியின் நிலை.
பணத்தை முன்கூட்டியே கொடுக்கும் ஏற்பாடு வந்துவிடுவதாகவே வைத்துக் கொள்வோம். தமிழ் நாட்டில் இப்போது விலையில்லாத அரிசி 20 கிலோ தரப்படுகிறது. இது திரும்ப கடைக்குப் போய் மார்க்கெட்டில் இட்லி மாவுக்காக விற்கப்படும்போது கிலோ நான்கு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த அரிசியின் மார்க்கெட் மதிப்பு நான்கு ரூபாய்தான். என்னைப் போன்ற வசதியானவர்கள் கிலோ 30 முதல் 40 ரூபாய் வரையிலான அரிசியை உபயோகிக்கிறோம். இப்போது 20 கிலோ இலவச, மன்னிக்கவும் விலையில்லாத அரிசி பெறுவோர் இனி மார்க்கெட்டில்தான் அரிசி வாங்கிச் சோறு சமைக்க வேண்டுமென்றால், நிச்சயம் நான்கு ரூபாய் அரிசியை வாங்கமாட்டார்கள். குறைந்தபட்சம் கிலோ 15 ரூபாய் அரிசியாவது தேவை. அரசு மான்யமாக எதைக் கொடுக்கும்? இப்போது தரும் நான்கு ரூபாய் மதிப்புள்ள அரிசியானால் எவ்வளவு மான்யம்? 15 ரூபாய் அரிசியென்றால் எவ்வளவு மான்யம்? இந்தக் குழப்பங்கள் தவிர வேறு ஓர் அடிப்படை பிரச்னை ரொக்க மான்யத்தில் இருக்கிறது.

காசாக ஏழை மக்கள் கையில் தரும் பணம், எந்த நோக்கத்துக்காகத் தரப்படுகிறதோ அதே நோக்கத்துக்காகச் செலவழிக்கப்படும் வாய்ப்பு நம் சமூகச் சூழலில் மிக மிகக் குறைவு. உணவுப் பொருளாகத் தரும் போது நிச்சயம் அது வீட்டுக் குழந்தைகள் வரையில் உணவாகவே போய்ச் சேரும் வாய்ப்பு இருக்கிறது. காசாகக் கொடுத்தால், நமது டாஸ்மாக் கல்ச்சரில், நிச்சயம் வீணாகிப் போகும். வீட்டுப் பெண்கள் பெயருக்கே வங்கிக் கணக்கு வைத்து பணத்தைக் கொடுத்தால் கூட, இன்று ஏராளமான ஏழைமக்கள் வீடுகளில், பெண்ணை மிரட்டி, அடித்து உதைத்து, கொஞ்சி, கெஞ்சி, மிஞ்சி பணத்தைப் பறிக்கும் கணவன்கள், பிள்ளைகள் எனக்குத் தெரிந்தே பலர் உள்ளனர்.
இன்னொரு பக்கம், ஏழைமை அதிகமாக அதிகமாக, மத, சாதிச் சடங்குகளில் சாங்கியங்களில் பணத்தை வீணடிக்கும் விகிதமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. எனக்குத் தெரிந்த ஒரு வீட்டுப் பணியாளரான விதவைத் தாய் தம் மகன் திருமணத்துக்காக ஐந்து வட்டியில் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறார். அண்மைக் காலங்களில் நகரங்களையொட்டிய பகுதிகளில் பல விவசாயிகள் லட்சக்கணக்கான ரூபாய்களுக்குத் தங்கள் நிலத்தை விற்று விட்டு, சில மாதங்களிலேயே ஓட்டாண்டி களான நிகழ்ச்சிகள் கணிசமாக உள்ளன.
ஆனால் மன்மோகன் அரசுக்கு இதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லை. இந்தியாவில் தனியார் பெரு முதலாளிகளின் வணிக வாய்ப்பைப் பெருக்குவது, அந்நிய வங்கிகளுக்கு புது வாய்ப்புகளை ஏற்படுத்துவது, இந்தியாவில் ஈட்டிய பணத்தை தம் நாடுகளுக்கு எடுத்துச் செல்ல அந்நிய கம்பெனிகளுக்கு உதவுவது, அவர்களுக்கெல்லாம் மின்சாரம் முதல் நிலம் வரை மான்யங்களை அள்ளித் தருவது என்ற அவரது கொள்கையை எதைப் பற்றியும் கவலைப்படாமல் செய்து முடிக்கத் துடிப்பவராக அவர் இருக்கிறார்.
இதுவரையில் அவரைத் தடுக்க எந்தச் சக்தியாலும் முடியவில்லை. ஆனால் ஆதார் முதல் முட்டுக்கட்டையாக அமையலாம். ஏனென்றால் அதைச் செய்து முடிக்க இன்னும் ஓரிரு வருடம் தேவை. அதற்குள் வரும் தேர்தலில் அவர் ஆட்சியை முடித்து வைக்கும், ஒட்டகத்தின் முதுகை முறித்த கடைசிப் பொட்டலமாக ஆதார் அமையலாம்.

நன்றி - கல்கி