Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Thursday, July 05, 2012

ஜி. நாகராஜன் - ன் கல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா - சிறுகதை

http://3.bp.blogspot.com/_7D-hvmm-KN0/TSZT2L7tTUI/AAAAAAAATho/UZ4s9S0sKps/s1600/%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B1%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF+%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%25811.JPG 

எனக்கு முதலில் பயமாய் இருந்தது; ஹாஸ்டலில் யாருமில்லை. ராணியும் ஜேனும் `ஷாப்பிங்’ சென்றிருந்தார்கள். எங்கள் மூவரைத் தவிர மற்றவர்கள் ஊருக்குப் போய்விட்டார்கள். நானும் கிளம்புவதாகத் தான் இருந்தேன். ஆனால் ராணிதான் இருவரும் ஒரு சினிமாப் பார்த்து விட்டுச் செல்லலாம் என்று வற்புறுத்திக்கொண்டிருந்தாள். மேலும் அந்தக் காதர் நான் குளிக்கப் போகும்போது, `பாப்பா, ஒரு நா இருந்திட்டுப் போயேன்’ என்றான். காதரை உனக்குத் தெரியுமே. மொட்டை மண்டை; பொக்கை வாய். அவனை நோட்டுப் புத்தகம், காகிதம், ஏதாவது வாங்கிக் கொண்டு வரச் சொல்லும்போது சமயங்களில் அவன் கை என்மீது பட்டுவிடும். அப்போது எனக்கு ஒரு மாதிரி இருக்கும். அவன் முகத்திலும் கள்ளத்தனம் தெரியும். ஆடவரே இல்லாத இடத்தில் அவன் ஒரே ஆடவனாக இருந்ததால் இருக்கும் என்று நினைத்துக்கொள்வேன்.


நான் என் அறையில் தனியே இருந்தேன். கொஞ்சம் பயம். இருந்தாலும் காதர் வர வேண்டும்போல் இருந்தது. அவன் வராது போய்விடுவானோ என்றுகூடப் பயம். ஹாஸ்டலில் அவனுக்கென்று ஒரு அறை உண்டு. அங்கு போய் ஏÊதாவது சாக்குச் சொல்லி அவனைப் பார்த்துவிடலாம் என்றுகூட நினைத்தேன். ஹாஸ்டலில் ஸ்டோர் ரூம்தான் அவனுடைய அறை. ஓரிரு தடவை அவனைக் கூப்பிட அங்கு சென்றிருக்கிறேன். மிகவும் சிறிய அறை, எப்படித்தான் காலை நீட்டிப் படுத்துறங்குவானோ? அந்த அறைக்குள் சென்று சுருண்டு படுத்துறங்க வேண்டும் என்ற ஆசை எனக்கு சில தடவைகள் வந்ததுண்டு.


காலடிச் சத்தம் கேட்டது. வழக்கமான மெல்லிய காலடிச் சத்தம். காதர் என் அறையைக் கடந்து இரண்டு எட்டு சென்றுவிட்டுத் திரும்பி நடந்து என் அறைக்குள் நுழைந்தான். `பாப்பாவுக்கு என்ன வேணும்?’ என்று கேட்பான் என்று எதிர்பார்த்தேன். உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்டான். `என்ன காதர்?’ எனக் கத்தினேன். `ஏம் பாப்பா, கத்தறே, நான் கிளவன்’ என்றான் காதர். `ஏங் கதவே அடச்சே?’ என்றேன். `ஒன்னெத் தொட்டுக் கும்பிட’ என்று சொல்லிக்கொண்டே, காதர் மண்டியிட்டு என் இரு பாதங்களையும் பற்றினான். அவன் கை பட்டது எனக்கு இதமாக இருந்தது’’.


ஹெட்கிளார்க் சுகுணா உள்ளே வரவும் நிர்மலா கடிதத்தை மேஜைமீது வைத்து அதன்மீது ஒரு டேபிள் வெய்ட்டை வைத்தாள். “பாரதி மூப்பனார் வந்திருக்காரு’’ என்றாள் சுகுணா. “மூப்பனாரா? அவர் பில் பாஸ் ஆயிடுச்சின்னு சொல்லு. நாளைக்கழிச்சு வந்து செக்கை வாங்கிட்டுப் போகட்டும்’’ என்றாள் நிர்மலா. சுகுணா அறையை விட்டகலவும் கடிதத்தைத் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று தோன்றவில்லை நிர்மலாவுக்கு. அவள் ஏற்கனவே ஒருமுறை படித்த கடிதம்தான். இருந்தாலும் அது அவள் கையைச் சுற்றிச் சுற்றிக்கொண்டிருந்தது. இப்போது அவள் நினைவு அவளது மாணவிக் காலத்துக்குச் சென்றது.


மூன்று மணி நேரம் மெய் மறந்து, ஒரு முக்கோணத்தின் ஒன்பது புள்ளி வட்டம் அதன் உள்வட்டத்தைத் தொட்டுச் செல்லும் என்று நிரூபித்தது; பதினேழு பக்கங்கள் கொண்ட ஒரு ஒழுங்குப் பல கோணம் வரைய ஒரு மாதம் தொடர்ந்து முயன்று தோல்வியுற்றது; ஒரு கோணத்துக்கு இரு சமவெட்டி உண்டு என்று ஏற்றுக்கொண்டாலன்றி, அதனை வரைய முறை காணமுடியாதென்று ஆசிரியரோடு வாதிட்டது; இறுதியில் ஃபெர்மாவின் கடைசித் தேற்றத்தை மெய்ப்பிக்க முயன்று `ரிசேர்ச்’ உதவித்தொகையை இழந்தது, எல்லாமே அவள் மனத்தினூடே பாய்ந்து சென்றன.


மறக்க முடியாத அப்பாவின் நினைவு! `நீ எம் மூத்த குழந்தையாப் பிறந்த பாவத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட்டுட்டேம்மா! இன்னைக்கு நெனெவிலே இருக்கு. உன்னை ஹாஸ்டல்லே வந்து பார்க்க வந்தேனே, அப்ப எல்லாக் குழந்தைகளும் விதவிதமாய் போட்டிட்டு, கவலையே இல்லாம, வரதும் போறதுமா இருக்கும்போது, நீ ஒரு கிழிஞ்ச ரவிக்கையைப் போட்டுக்கிட்டு எங்கூட ஸ்டேஷனுக்கு வரேனியே!’ `அய்யோ, அப்பா! இப்ப இதெல்லாம் பத்தி என்ன பேச்சு? நீங்க நிம்மதியா இருங்க

. உங்களுக்கு ஒரு கவலையும் வேண்டாம். நான் எப்பவும் சந்தோஷமாத்தான் இருந்தேன்; இப்பவும் சந்தோஷமாத்தான் இருக்கேன். சாந்தாவைப் பத்தியோ, மனோகரைப் பத்தியோ கவலைப்படாதீங்க. எல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க ரொம்ப நல்லவர். ஆனா, நீங்க வாழத் தெரியாம வாழ்ந்திட்டீங்க…’


நிர்மலா மேஜை மீது இருந்த கடிதத்தை எடுத்துத் தொடர்ந்து படிக்கலானாள்.


“நிமிர்ந்து நின்றேன். என் பாதங்களைப் பற்றியிருந்த காதரின் கரங்கள் உயர்ந்துவந்து என் கணுக்கால்களை வருடின. காதரின் கைகள் மெல்ல உயர்ந்தன. என்னால் நிற்க முடியவில்லை; அப்படியே கட்டிலில் அமர்ந்தேன். `நில்லு பாப்பா, நில்லு’ என்று கெஞ்சினான் காதர். நான் மீண்டும் நிற்கவும், பொக்கை வாய் சிரிப்போடு, மண்டியிட்டு, காதர் என்னை நோக்கிக் கொண்டிருந்தான்…’’


நிர்மலா கடிதத்தை மேஜை மீது வைத்துவிட்டு இரு கைகளையும் அகல விரித்து சோம்பல் முறித்தாள்.

வருஷம் பூரா இரண்டு சேலை; மூணு ஜம்பர். அத்தனை அவமானமும் எதுக்கு? என்னத்தை சாதித்துவிட்டேன்? அர்த்தமில்லாத தியாகம். அது தியாகமா? அதுவுமில்லியே! ஒரு வகையில் நிர்ப்பந்தம்தானே? ஒன்றையும் காணவில்லையே! ஒரு தெய்வமும் எனக்குத் தட்டுப்படவில்லையே! ஒரு உண்மையும் பிடிபடவில்லையே! இருபது வருடங்களுக்கு முன் தோன்றிய வினாக்களுக்கு இன்னும் விடைகளில்லையே? சாந்தா சந்தோஷமாக இருக்கிறாள்; மனோகர் முன்னுக்கு வந்துவிட்டான். இப்ப இருவரும் சேர்ந்து `அக்காளுக்கு உலகம் தெரியவில்லை’ என்கிறார்கள்.

நிர்மலா கடிதத்தை எடுத்துத் தொடர்ந்து படித்தாள்.

“… என் கால்கள் தடுமாறின. எனக்குப் பசுவிடத்துப் பால் உண்ணும் கன்றின் நினைவு ஏற்பட்டு, அருகில் லயித்துத் தடுமாறினேன். காதர் எழுந்து என்னை அணைக்க வேண்டும்போல் இருந்தது. நான் விழுந்து விடாதபடி அவன் கைகள் ஆதரவாக என் பின்புறத்தைப் பற்றியிருந்தன.’’


மிஸ் நிர்மலா வாசித்த கடிதம் கடந்த ஆண்டு அவளது கல்லூரியில் படித்த லைலா தற்போது ஹாஸ்டலில் தங்கிப் படித்து வரும் இந்திராவுக்கு எழுதிய கடிதம். இந்திரா கவனக்குறைவாக அதைத் தனது சினிமா சஞ்சிகைக்குள் வைத்திருந்தாள். அந்த சஞ்சிகையை எடுத்த அண்ணன் மூலம் அது இந்திராவின் தகப்பனார் டாக்டர் சந்திரசேகரன் கைக்குப் போய்விட்டது. “நான் ஒரு டாக்டர். எனவேதான் அளவுக்கு மீறிக் கலவரப்படாது, இந்தக் கடிதத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருவதோடு நிறுத்திக்கொண்டு, மேலும் பல்கலைக்கழக, அரசாங்க மட்டங்களில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்’’ என்று பயமுறுத்தாது, பயமுறுத்தியிருந்தார் டாக்டர்.


`அடேயப்பா, டாக்டரின் விசால புத்தியைப் பாராட்டத்தான் வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டே, நிர்மலா காதரைப் பற்றி நினைத்தாள். கிழவனுக்கு அப்படி ஒரு ஆசை! உம். எதைப்பற்றி ஆச்சரியப்படுவது? எல்லாமே ஆச்சரியப்பட வேண்டியதுதானே! நாமாக அது இயற்கை, இது இயல்பு, அது பகுத்தறிவு, இது நடைமுறை அனுபவம் என்று கற்பனை செய்துகொள்வதால்தானே இத்தனைப் `புதுமைகளும்’, `முரண்பாடுகளும்’, `இயற்கைக்கு மாறானவையும்!’ சன்னல் வழி வந்த சூரிய ஒளியின் பக்கம் நிர்மலா திரும்பினாள். ஒளி என்ன? புரியவில்லையே! மனிதனின் கணிதக் கட்டுக்கோப்புகள் அதை அடைத்து விடுவதால் அதைப் புரிந்துகொண்டதாகிவிடுமா? விஞ்ஞானிகளை முற்றிலும் புரிந்துகொள்ள முடிகிறதா?

ஆமாம். `லாசரை’யும், `டி.வி.’யையும் படைத்துவிடுகிறார்கள். இருந்தாலும் அந்தக் காதர்! அந்தக் காதர்!! அவள் கல்லூரியில் முதலாண்டில் படித்த புத்தகம் ஒன்று இப்போது அவள் நினைவுக்கு வந்தது. அழகழகான படங்களைக் கொண்ட புத்தகம். ஐன்ஸ்டைனின் வியப்பு நிறைந்த கண்கள். நீல்ஸ்போரின் பெருமிதம். மிலிக்கனின் சாமர்த்தியம். டிப்ராலியின் அழகு… காதர் முகத்திலும் எப்படி அப்படி ஒரு ஒளி? இல்லை, வெறும் கற்பனையா? எல்லாமே நாமாக நினைத்துக் கொள்வதுதானா?


நிர்மலா மணியை அழுத்தவும் சுகுணா வந்தாள்.

“ஹாஸ்டல் வாச்மேன் காதரை வரச் சொல்லு.’’

“சரிங்க, மிஸ்.’’

மிஸ், மிஸ், மிஸ்… ஆனால், படிப்புக்குக் குறைச்சல் இல்லை. அந்தஸ்துக்குக் குறைச்சல் இல்லை. ஆமாம், அவமானத்துக்கும் குறைச்சல் இல்லை. எதுக்குமே குறைச்சல் இல்லை! ஆனால்… நிர்மலா தனது வலது கையைக் கொண்டு சேலையைச் சரி செய்துகொள்வதுபோல், இல்லை, மார்பகத்தைத் தடவிக்கொள்வது போல், சேலையைச் சரி செய்துகொண்டாள். லேசாக ஏதோ தட்டிற்று; அவ்வளவுதான்.


காதர் வந்து நின்றான். மொட்டை மண்டை. பொக்கை வாய்.

“ஹாஸ்டலுக்கு வேறே வாச்மேன் போட்டிருக்கேன்.’’


“நல்லதுங்க’’ என்றான் காதர்.

அரை நிமிடம் இருவரும் பேசவில்லை. நிர்மலா அந்தக் கடிதத்தைப் படிப்பதாகப் பாவனை செய்தாள்.


“உனக்குத் தோட்ட வேலை தெரியுமா?’’


“தோட்ட வேலைக்குத்தானே நம்ம காலேசுக்கு வந்தேன்?’’

“அப்படியா, எனக்குத் தெரியாதே! இனிமே எம் பங்களாத் தோட்டத்தெ கவனிச்சுக்க. ரத்தினம்மா ஹாஸ்டலைப் பார்த்துக்கட்டும்.’’

“உத்தரவு அம்மா’’ என்றான் காதர். இருந்தாலும் அவன் முகத்தில் ஒரு கள்ளத்தனம் இருந்ததாகப் பட்டது, மிஸ் நிர்மலாவுக்கு.

காதர் அறையை விட்டு வெளியேறவும், நிர்மலா தனது வலது கையைக் கொண்டு சேலையைச் சரி செய்துகொள்வது போல், இல்லை, மார்பகத்தைத் தடவிக்கொள்வது போல், சேலையைச் சரி செய்து கொண்டாள். லேசாக ஏதோ தட்டிற்று; அவ்வளவுதான்.


நன்றி - ஜி நாகராஜன், சிறுகதைகள்,

Monday, July 02, 2012

புரட்சி எழுத்தாளரின் கதாநாயகி - கு.அழகிரிசாமி - சிறுகதை

https://www.nhm.in/img/100-00-0000-186-6_b.jpg 


கதை ஆசிரியர்: கு.அழகிரிசாமி.

ராமநாதனுக்குப் பட்டண வாழ்க்கை அலுத்துவிட்டதாகச் சொல்ல முடியாது. வெறுத்து விட்டது. அதுதான் உண்மை. அவன் சென்னைக்கு வந்து அதிகமாய்ப் போனால் நாலு வருஷங்கள்தான் ஆகியிருக்கும். இப்போது அவன் குடியிருப்பது இரண்டாவது வாடகை வீடுதான். ஆபீஸில் பற்றாக்குறைச் சம்பளம் என்றும் சொல்வதற்கில்லை. இத்தனையும் இருந்தும் சென்னை நகரை அவன் விஷமாக வெறுத்தான். ‘ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் விழுந்த அணுகுண்டுகள் இந்தப் பாழாய்ப்போன பட்டணத்தில் விழுந்து ஊரைத் தரை மட்டமாக்கியிருந்தால் வேறு எங்காவது தலைநகரை மாற்றியிருப்பார்கள் அல்லவா ?


மாற்றாவிட்டாலும் சுடுகாட்டிலாவது நிம்மதியாகக் குடியிருந்திருக்கலாமே ‘ இப்பொழுது சென்னையில் அல்லவா குடியிருக்கவேண்டியிருக்கிறது ? ‘ –இப்படி ஒரே வெறுப்பு. நண்பர்களிடம் பலதடவை தன் வெறுப்பைக் கொட்டி மனக் கொதிப்பை ஆற்றியிருக்கிறான். அவர்களுக்கு ராமநாதனுடைய பேச்சையும் ஆவேசத்தையும் பார்க்க வியப்பாக இருந்தது. ‘யாரையும் எதையும் வெறுத்துப் பேசுகிறவன் அல்லவே ‘ சிரித்த முகத்துடன் சுமுகமாகப் பழகுபவன்; உல்லாசப் போக்குடையவன்; அப்படிபட்டவன் இந்த மாதிரி பேசுகிறானே ‘ ‘ என்று அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.


ராமநாதனுக்கு இப்படி வெறுப்பும் கசப்பும் சிரசு முட்டிப் போனதற்குக் காரணம் அற்பமான ஒரு விஷயம்தான். சொன்னால் நம்புவது கூடக் கஷ்டமாக இருக்கும். பட்டணம் அல்லவா ? உண்மையை நம்பத் தோன்றுமா ? அவன் குடியிருந்த மாடிவீடுதான் இத்தனைக்கும் காரணம். மனித குணங்களை, குடியிருக்கும் வீடும் உருவாக்குகிறது என்று பிரெஞ்சு நாவலாசிரியர் பால்ஸாக் ஓரிடத்தில் சொன்னது சரியோ தப்போ, இவன் விஷயத்தில் முற்றிலும் சரியாகவே இருந்தது.


அந்த மாடி வீட்டுக்கு அவன் குடித்தனம் வந்து ஒரு வருஷம் ஆகிறது. அதற்கு முன் போதிய காற்றும் வெளிச்சமும் இல்லாத ஒரு சிறு வீட்டில் மனைவியோடும் மைத்துனனோடும் பெற்றோர்களோடும் அவதிப் பட்டுக் கொண்டிருந்தான். கல்யாணமான புதிதில் அந்த இருட்டுக் கொட்டடியில் முன்று வருஷங்களைத் தள்ளினான். பிறகு இந்த மாடி வீட்டுக்குக் குடியேறினான். இந்த வீட்டில் காற்று இருந்தது; வெளிச்சம் இருந்தது; இடவசதி இருந்தது. வீடு பிடிக்கும் சமயத்தில் வீட்டுக்காரனின் பேச்சில் கற்கண்டும் இருந்தது. கேட்கவா வேண்டும் ? குடிவந்து விட்டான். அப்போது அவனுக்கு ஒரு கைக் குழந்தை இருந்ததுடன் மனைவி கர்ப்பிணியாகவும் இருந்தாள்.


இந்த மாடி வீட்டில் ஒரு பெரிய அசெளகரியம்; அதாவது தண்ணீர்க் கஷ்டம். தண்ணீரை வரவழைப்பது. உதைக்கிற மாட்டில் பால் கறக்கும் கதைதான். ‘பம்ப் ‘ அடிக்க வேண்டும். கீழே ஐந்தாறு குடித்தனங்கள்; குடும்பங்கள். காலை நாலரை மணியிலிருந்து, தண்ணீர் சப்ளை நிற்கும்வரை –அதாவது பத்தரை மணிவரை — ஒருவர் மாற்றி ஒருவர் குழாயடியிலேயே காரியம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களே ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுத்தான் காலா காலத்தில் குளிக்கவேண்டி யிருந்தது.


இந்த நிலையில் குழாயை மூடுவதற்கு எங்கே சமயம் வாய்க்கும் ? மூடாவிட்டால், மேலே எவ்வளவு அடித்தாலும் தண்ணீர் வராது என்பது வெளிப்படை. எனவே ஒரு வாளித் தண்ணீருக்கும், கீழே குழாயை மூடச்சொல்லி மாடியிலிருந்து கெஞ்ச வேண்டும். இவ்வளவு கஷ்டங்கள் இருந்தும், ராமநாதன் ஆரம்ப காலத்தில் இரண்டு மூன்று மாதங்கள் வரை அவற்றை அவ்வளவாக உணராமல் இருந்ததற்குக் காரணம், அவனுடைய மைத்துனன் நடராஜனின் உதவிதான். அவன் வேலைத் தேடிப் பட்டணத்துக்கு வந்து அக்காள் வீட்டில் தற்காலிகமாகத் தங்கியிருந்தான். ராமநாதன் காலையில் ஒன்பது மணிக்கே அவசர அவசரமாகக் குளித்துச் சாப்பிட்டுவிட்டுத் தன் காரியாலயத்துக்கு வேலைக்கு போய்விடுவான். அதிலிருந்து நடராஜன் பம்ப் அருகில் ஒற்றைக் காலில் நின்று, சமயம் வாய்க்கும்போதெல்லாம் தண்ணீர் அடித்து வைத்துவிடுவான். வீட்டுத் தண்ணீர் தேவை பூர்த்தியாகிவிடும். சாயங்காலமும் இதே கதைதான்.


மூன்று மாதங்களுக்குப் பிறகு நடராஜனுக்கு சேலத்தில் வேலை கிடைத்துவிட்டது. உடனே அவன் புறப்பட்டுப் போய்விட்டான். அப்பொழுதுதான் ராமநாதன் தண்ணீர்க் கஷ்டத்தை உணர ஆரம்பித்தான். ஒன்று ஆபீசுக்குப் போக வேண்டும்; இல்லையென்றால் தண்ணீர் அடிக்க வேண்டும். இரண்டு வேலைகளையும் செய்வது என்பது விடுமுறை நாட்களில் மட்டுமே சாத்தியமாக இருந்தது. என்ன செய்வது ?


‘வீட்டில் பண்ட பாத்திரங்களைத் தேய்த்து வைத்து, துணி துவைத்துப் போடும் வேலைக்காரியைத் தண்ணீர் அடிக்கும்படி சொல்லி, அவளுக்கு மேற்கொண்டு இரண்டோ மூன்றோ கொடுக்கலாம்; அவளும் பிள்ளைகுட்டிகாரி; பிழைத்துப் போவாள்; வேறொருத்தியை வேலைக்கு வைத்து அவளுக்கு பணத்தைத் தூக்கிக் கொடுப்பானேன் ? ‘ என்று நினைத்து, ராமநாதன், கமலாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். கமலா என்பவள் வேலைக்காரி.


அன்றைய தினம் அவள் குறித்த காலத்திஒல் வராமல் அரை மணி நேரம் தாமதித்து வந்தாள். வந்தவள் விறுவிறு என்று சமையலறையை நோக்கி நடந்து சென்றாள். மீனாவை –ராமநாதனின் மனைவியை –அழைத்தாள். அப்புறம் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அது இந்தப் பக்கத்திலிருந்த ராமநாதனின் காதில் சரியாக விழவில்லை. ஐந்து நிமிஷத்துக்குப் பிறகு மீனா நேரே ராமநாதனிடம் வந்தாள். வந்து ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டாள். ராமநாதன் அதிர்ச்சியினால் அப்படியே நாற்காலியில் சாய்ந்து விட்டான்.


‘கமலா வேலையைவிட்டு நின்றுகொள்கிறாளாம். ‘

‘ஏன் ? ‘

‘அவளால் தண்ணீர் அடிக்க முடியாதாம். இந்த இரண்டு நாள் தண்ணீர் அடித்ததிலேயே கையும் நெஞ்சும் நோகிறதாம். அதனால் வேலைக்கு வரமுடியாதாம். ‘

‘இத்தனை நாளும் எப்படி தண்ணீர் அடிக்க முடிந்ததாம் ? இதுவரையிலும் நோகாத கை இப்பொழுது நோவானேன் ? ‘

‘அவள் எங்கே தண்ணீர் அடித்தாள் ? நடராஜன் அடித்து வைப்பான். அந்தத் தண்ணீரில் அவள் பத்துத் தேய்த்து, துணிகளையும் அலசிப் போட்டு விட்டுப் போவாள். ‘


‘அப்படியா சமாச்சாரம் ? சரி சரி; கமலாவை இப்படிக் கூப்பிடு ‘ என்றான் ராமநாதன்.

‘அதிகச் சம்பளத்துக்குத்தான் இந்த விதமாகக் கிராக்கி பண்ணி அடிப் போடுகிறாள்; நாம்தான் இரண்டோ மூன்றோ சேர்த்துக் கொடுக்கத் தயாராக இருக்கிறோமே ‘ என்ற எக்களிப்போடு கமலாவைப் பார்த்து,


‘நீ என்ன இப்படிச் சொல்றே ? இரண்டு வாளித் தண்ணீர் அடிப்பது அவ்வளவு கஷ்டமா ? ‘ என்று அவன் ஆரம்பித்தான்.


வேலைக்காரி பதில் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டும், ஒரு நகத்தை மற்றொரு நகத்தால் சுரண்டிக் கொண்டும் சுவரை ஒட்டி நின்றாள்.

‘என்ன கமலா, என்ன சொல்றே ? என்னிடத்தில் விஷயத்தைச் சொல்லேன் ‘ என்றான் ராமநாதன்.

‘என்னாலே முடியாதுங்க. வேறே யாரையாவது வச்சிக்கோங்கோ ‘ என்று தலையைக் குலுக்கினாள் கமலா.

வீட்டுத் தேவை முழுவதற்குமே தண்ணீர் அடிக்க அவளை ஏற்பாடு செய்ய– அதிலும் கருணையுள்ளத்தோடு ஏற்பாடு செய்ய— நினைக்கப் போய், அவள் மாமூல் வேலையையே செய்ய முடியாது என்று மறுத்துவிட்டாள்.


ராமநாதன் என்னன்னவோ சொல்லிப் பார்த்தான். அவனுடைய மனைவியும் தாங்கினாள். ராமநாதனின் வயது முதிர்ந்த பெற்றோர்களும் கேட்டுப் பார்த்தார்கள். பருப்பு வேகவில்லை. கடைசியில், ‘இரண்டு ரூபாய் கூடத் தருகிறேன். வீட்டுக்குத் தண்ணீர் அடித்து வைத்துவிடு; நித்யப்படி வேலையையும் செய் ‘ என்று ராமநாதன் கடைசி அஸ்திரத்தைப் பிரயோகித்துப் பார்த்தான்.


‘நூறு ரூபா கொடுத்தாலும் சரி, தண்ணீர் அடிக்க முடியாதுங்க. ‘

இதுவே கமலாவின் பதில்; ஆணித்தரமான கடைசிப் பதில்.


அதற்குமேல் அவளைக் கட்டாயப் படுத்துவதில் கெளரவமில்லை என்று, கொடுக்கவேண்டிய பாக்கியைக் கொடுத்து அனுப்பிவைத்தான் ராமநாதன்.

‘இப்படிப் பிடிவாதமாக முடியாது என்று சொல்லி விட்டுப் போய் விட்டாளே ‘ இனி தண்ணீருக்கு என்ன செய்வது ? ‘ என்று தன் கவலையை வெளியிட்டாள் மீனா. தன் நோஞ்சான் உடம்பையும் கைக்குழந்தையையும், வயிற்றுப் பிள்ளையையும் வைத்துக் கொண்டு, ஒரு செம்புத் தண்ணீர்கூட அடிக்க முடியாதே என்ற கவலை அவளுக்கு.


‘நீ ஒரு பைத்தியக்காரி, மீனா ‘ ஒரு நேரக் கஞ்சிக்கு வழி இல்லாமல் எத்தனையோ பேர் தெருதெருவாய் அலையிறாங்க. நீ பேசாமல் இரு. நாளையே வேறு ஒரு வேலைக்காரியைக் கொண்டு வந்து நிறுத்துறேன், பார் ‘ என்று மனப்பூர்வமாகவே சொன்னான் ராமநாதன்.

அதிலிருந்து இரண்டு மூன்று நாள் நண்பர்களின் வீடுகளில் சொல்லி, ஒரு வேலைக்காரியை வலை போட்டுப் பிடித்துக் கொண்டு வந்தான்.


புது வேலைக்காரியின் பெயர் மங்களம். நல்ல வாலிப வயது. அவளுக்கு நாலு வயதில் ஒரு பெண் குழந்தை. தோற்றத்தில் ஒரு மாதிரி அழகாகவே இருந்தாள். நல்ல நிறம். கட்டுறுதி கொண்ட உடம்பு. எந்த வேலையையும் சளைக்காமல் செய்யக்கூடியவள் என்று பார்த்த மாத்திரத்திலேயே சொல்லி விடலாம். அவளுடைய புருஷன் அவளை விட்டுவிட்டு எங்கோ போய்விட்டானாம். மூன்று வருஷங்களாகத் தன் குழந்தையோடு கஷ்ட ஜீவனம் செய்து வருகிறாளாம். இதை அவளே சொன்னாள்.


‘ஐயோ பாவம் ‘ இந்தக் காலத்து ஆண் பிள்ளைகளுக்கு மனசு கல்மனசு ‘ என்று தன் அனுதாபத்தை தெரிவித்தாள் ராமநாதனின் தாயார்.


‘இந்த இளம் வயதில், இவ்வளவு அழகான மனைவியையும், லக்ஷணமான குழந்தையையும் விட்டுவிட்டு எப்படித்தான் அவன் போனானோ ‘ என்று ஆச்சரியப்பட்டான் ராமநாதன்.


எப்படி போனானோ ? போய்விட்டான். இவளும் வேலைக்கு வந்துவிட்டாள்.

அன்று ராமநாதன் நிம்மதியோடு ஆபீசுக்குப் போனான்.

* * *
மங்களம் சுமார் ஒரு வாரம் வரையிலும் எல்லோரும் மெச்சும்படியாக மிகவும் சூட்டிகையாக வேலை செய்து வந்தாள். கீழே குடித்தனம் இருப்பவர்களில் ஆண்கள்— வயது முதிர்ந்தவர்கள், வாலிபர்கள், எல்லோருமே— அவள் பம்ப் அடிக்க வரும்போது, கீழே குழாயைத் திறப்பதில்லை. மேலே அவள் பம்ப் அடிப்பதை அவ்வப்போது ஏறிட்டுப் பார்த்துக் கொள்ளுவதும், அதைக் தத்தம் மனைவிமார் கவனிக்கிறார்களோ என்று சுற்றுமுற்றும் பார்த்துக் கொள்ளுவதுமாகக் கீழே குழாயடியில் உலாவிக்கொண்டிருப்பார்கள்.

மங்களம் மேலே தண்ணீர் அடித்து முடித்த பிறகுதான் கீழே குழாயைத் திறப்பார்கள். எனவே ராமநாதன் வீட்டில் தண்ணீர்த் தரித்திரம் நீங்கிவிட்டது. இந்தச் சந்தோஷத்தில் மங்களத்துக்கு ஒரு கிழியாத பழைய புடவையையும், அவளுடைய நாலு வயதுப் பெண்ணுக்கு புதுப் பாவாடை, சட்டையும் வாங்கிக் கொடுத்து விட்டார்கள்.


இந்தச் சமயத்தில் மங்களத்துக்கு எப்படியோ ‘ஞானோதயம் ‘ ஆகிவிட்டது. பட்டணத்து வேலைக்காரிகள், ஆயிரம் கொடுத்தாலும் செய்யாத — ‘செய்யக்கூடாத ‘ —- வேலையைத் தான் மட்டும் செய்துவரும் விபரீதம் எப்படியோ அவள் மனசுக்குப் புலனாயிற்று. அவ்வளவுதான். மாடு சண்டித்தனத்துக்குத் தயாராகிவிட்டது. பழைய வேலைக்காரியைப்போல இவளும் ஓடிவிடக்கூடாதே என்று, சாப்பாடு போடுவதிலிருந்து சகல் விஷயத்திலும் மீனா தாராளமாக நடந்துகொண்டு வந்தாள். இதைக் கண்டு வேலைக்காரி ஏமாந்து விடுவாளா, என்ன ?


ராமநாதன் பார்த்தான். சம்பளத்தைக் கூட்டித் தருவதாகச் சொன்னான். மங்களம் உடனடியாகச் சம்மதிக்கவில்லை. கடைசியில் மூன்று ரூபாயை அதிகப்படியாகக் கொடுப்பதாக அவன் திட்டவட்டமாகச் சொல்லவே, அவள் வேண்டா விருப்புடன் சம்மதித்தாள்.


இந்த மூன்று ரூபாய்க் கவர்ச்சியும் ஒரு மாதத்துக்கு மேல் நீடிக்கவில்லை. ஒரு நாள் பழைய வேலைக்காரி கமலா அவளைத் தெருவில் சந்தித்து, வலிய வந்து பேசி, ‘நீ என்ன இந்த வேலையெல்லாம் செய்யிறே ? உன்னைப் போலப் பொம்மனாட்டிங்க இருக்கப் போய்த்தானே எங்களையும் கண்ட கண்ட வேலையெல்லாம் செய்யச் சொல்லி உசிரை வாங்குறாங்க. நீ தண்ணி அடிக்கிறயே, எத்தனை நாளைக்கு அடிப்பே ? எத்தனை நாளைக்கு உன் ஒடம்பு தாங்கும் ? அப்படி உனக்கு எவ்வளவுதான் அள்ளிக் கொடுக்கிறாங்களாம் ‘ ‘ என்று மனசைக் கலைத்தாள்.

அவ்வளவில் மங்களம் விழித்துக் கொண்டாள். மறுநாளே ராமநாதனின் மனைவியிடம் வந்து, ‘தண்ணீர் அடிக்க முடியாது ‘ என்று அந்த பட்டணத்துப் பல்லவியைப் பாடினாள்.


பழையபடியும் ராமநாதன் அதிர்ச்சிக்குள்ளானான். மங்களத்தின் காலில் விழுந்து கும்பிடாத குறையாக வீட்டோடு எல்லோரும் கெஞ்சிப் பார்த்தார்கள். புலி பசித்தாலும் புல்லைத் தின்னுமா ? வேலைக்காரி தண்ணீர் அடிப்பாளா ?


பாக்கி சாக்கியை கணக்குப் பண்ணி வாங்கிக் கொண்டு மங்களமும் போய்விட்டாள்.


அவள் போய், அதற்குப் பிறகு குப்பம்மாள் என்ற வேலைக்காரி வந்து சேரும் வரையில், அந்த இரண்டு வார இடைக்காலத்தில் ராமநாதன் பட்ட துன்பம் சொல்லும் தரத்ததல்ல. நான்கு நாட்கள் அவன் குளிக்கவில்லை. இரண்டு நாள் லீவு எடுத்துக்கொண்டு தண்ணீர் அடித்தான். இரண்டு நாள் ஆபீசுக்கு காலதாமதமாகப் போய், மேலதிகாரியால் கடுமையாக எச்சரிக்கப் பட்டான். ஒரு நாள் கீழே குடித்தனம் இருந்த ஒரு குடும்பத்துடன் சண்டையும் போட்டு விட்டான்.


தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும் என்பார்கள். ராமநாதனோ தண்ணீருக்காக மூன்று பிழை பொறுப்பது என்று மூன்றாவது வேலைக்காரியை ஏற்பாடு செய்தான். இவளும் கிராக்கி பண்ணினாள், வீட்டை மாற்றி மாட்டுத் தொழுவுக்காவது போய்க் குடியேறுவது என்று முடிவு கட்டிக்கொண்டான்.


குப்பம்மாள் என்கிற பெயரைப் பார்த்து அவளைக் கிழவி என்று நினைத்து விடக்கூடாது. அதிகமாகப் போனால் நாற்பது வயதுதான் இருக்கும். பரம ஏழை. முக்கால்வாசி நாள் கந்தலைக் கட்டிக்கொண்டே வேலைக்கு வருவாள். அப்படிப்பட்டவளும் எண்ணி இரண்டு மாதங்களே வேலை செய்தாள்; மூன்றாவது மாதம் இரண்டாம் தேதி சம்பளம் வாங்கியதும், அன்றோடு நின்று கொள்வதாக அறிவிப்புக் கொடுத்துவிட்டாள்.

காரணம், அதே காரணம்தான். ‘தண்ணீர் அடிக்க முடியாது. ‘ அத்துடன் வேறொரு சாக்கையும் சொன்னாள். அவள் தண்ணீர் அடிப்பது அவள் புருஷனுக்கும் பிடிக்கவில்லையாம்; கோபித்து கொள்ளுகிறானாம்; அடிக்கிறானாம்; பிடிக்கிறானாம்; ‘தண்ணீர் அடிப்பதாயிருந்தால் வீட்டை விட்டே போய்விடு ‘ என்றே துரத்துகிறானாம் ‘


ராமநாதனுக்கு உள்ளுக்குள் ஒரே எரிச்சல். அவள் பேச்சைக் கேட்கக் கேட்க ஆத்திரம் பொங்கியது. ‘இந்தா, அதையும் இதையும் சொல்லிக்கொண்டு நிற்காதே. இஷ்டமிருந்தால் வேலை செய்; கஷ்டமிருந்தால் போய் விடு ‘ என்று வெட்டு ஒன்று, துண்டு இரண்டாகச் சொன்னான்.

குப்பம்மாள் மேற்கொண்டு அங்கே நிற்கவில்லை.

‘புருஷனுக்கு பிடிக்கவில்லையாமே ‘ வேண்டியதுதான் ‘ இவள் இங்கே வாங்கிக்கொண்டு போகும் பழஞ்சோற்றை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டு ஜீவனம் பண்ணுகிற அழகில் இவனுக்கு இந்த ஜம்பம் வேறு கேடா ? ‘குடிக்கிறது கூழ்; கொப்பளிக்கிறது பன்னீர் ‘ ‘ என்று தெரியாமலா சொன்னார்கள் ? ‘


அன்று முழுவதும் ராமநாதனுக்கு எதைக் கண்டாலும் ஆத்திரம் பொங்கியது. பட்டணத்தையே சுட்டு எரித்துக் கரிக்கோட்டையாக்கிப் பார்க்கவேண்டும்போல ருத்ராவேசம் பிறந்து வீட்டைவிட்டே வெளியே போய் விட்டான். நல்ல வெயில் நேரம். எங்கே போவது என்ற குறிக்கோள் எதுவுமின்றிப் போய்க்கொண்டிருந்தான்.


‘பட்டணத்துக்கு உத்தியோகம் பார்க்க வந்ததற்குப் பதில். கிராமத்திலேயே பிச்சை எடுத்துப் பிழைத்திருக்கலாம். இன்னும் முப்பது வருஷம் உத்தியோகம் பார்த்தாலும் கூட, என்னத்தை அள்ளிக் குவித்துவிடப் போகிறோம் ? காசு செலவாகியும் நிம்மதியான வாழ்க்கையைக் காணோம். கேவலம், வேலைக்காரிக்கு உள்ள மனத்திராணிகூட நமக்கு இல்லை.

தனக்கு அசெளகரியம் என்றால் ஒரே நிமிஷத்தில் ஓடிவிடுகிறாள். நாமோ தினந்தினமும் அவஸ்தைப்பட்டுக் கொண்டு இந்த உத்தியோகத்தையும், இந்தப் பட்டணத்தையும் கட்டி அழுகிறோம். மகா மானங்கெட்ட பிழைப்பு… ‘ என்று மனம் கசந்து கொண்டே கண்ணில் தட்டுப்பட்ட ஒரு சினிமாக் கொட்டகைக்குள் நுழைந்தான். கவலையைக் கொஞ்ச நேரமாவது மறந்திருக்கலாம் என்று உத்தேசம். இரண்டு மணிநேர ஆங்கிலப் படம். பார்த்து முடித்து வெளியே வந்ததும், நேரே ஒரு ஹோட்டலுக்குப் போய் வயிறாரச் சாப்பிட்டுக் காபி குடித்தான். நிலாக் காலமானதால் அரை மணி நேரமாவது கடற்கரையில் உட்கார்ந்திருந்துவிட்டு வரலாம் என்று பஸ்ஸில் ஏறினான்.


கடற்கரை மணலில் உட்கார்ந்து சுகமான காற்றை அனுபவித்தான். எட்டு மணிக்கெல்லாம் அங்கிருந்து கிளம்பி வரும்போது, பக்கத்திலேயே தன் நண்பர் ஒருவருடைய வீடு இருப்பது ஞாபகத்துக்கு வந்தது. அங்கே போய்ச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வரலாம், அந்தப் பக்கத்தில் தண்ணீர் வசதியுடன் வீடு ஏதாவது கிடைக்குமா என்று விசாரித்து விட்டும் வரலாம் என்று எண்ணிப் போனான் ராமநாதன்.


நல்ல வேளையாக இவன் போய்ச் சேர்ந்த நேரத்தில் நண்பர் இருந்தார். அந்த நண்பர்தான் புரட்சிகரமாக எழுதும் பார்த்தசாரதி; பிரபல நாவலாசிரியர்; சிறு கதைகளும் எழுதுவார். ‘பார்த்தன், ‘ ‘தேரோட்டி ‘ என்ற புனைப்பெயர்களும் அவருக்கு உண்டு.


ராமநாதன் போய் உட்கார்ந்ததும், முதலில் சம்பிரதாயமாக ஏதாவது பேசவேண்டுமே என்பதற்காக ‘என்ன ஸார், இப்போது ஏதாவது நாவல் எழுதிக் கொண்டிருக்கிறீர்களா ? ‘ என்று கேட்டான்.


‘ஆம ‘ என்றார் பார்த்தசாரதி.

‘என்ன நாவல் ? ‘ என்று அர்த்தமில்லாமல் கேட்டான் ராமநாதன்.

‘எல்லாம் நம் வாழ்க்கையில் தினம் தினமும் காணும் நாவல்தான் ‘ என்று பதிலளித்தார் எழுத்தாளர்.

‘எப்படி ஸார் உங்களுக்கு கதை தோன்றுகிறது ? எங்களுக்கெல்லாம் ஒரு கதைகூடத் தோன்றுவதில்லையே ‘ ‘

‘கதை தோன்றுவதாவது ? தானே எப்படித் தோன்றும் ? நெருப்பில்லாமல் புகையுமா ? நாம் வாழ்க்கையில் கண்ணாரக் காணும் ஏதேனும் ஒரு நிகழ்ச்சிதான் கருவாக இருக்கும். அதுதான் சிறு கதையாக, நாவலாக உருவாகும். என்னைப் பொறுத்த மட்டிலும் நான் எதார்த்த வாழ்க்கையை அப்படி அப்படியே சித்தரிப்பவன் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே ?

பாருங்கள், இப்பொழுது நான் எழுதிக்கொண்டிருக்கும் நாவலுக்குக்கூட இந்தத் தெருவிலேயே விஷயம் கிடைத்தது. ஏறக்குறைய கதை முழுவதுமே உண்மையாக நடைபெற்றுக்கொண்டிருப்பதுதான். அந்தக் கதைக்கு உருவம் கொடுத்து, சுவாரஸ்யம் குன்றாமல் சித்தரிப்பதுதான் என் வேலை. ‘

‘அப்படி இந்தத் தெருவில் என்ன நடக்கிறது ? ‘ என்று ராமநாதன் கேட்க, பார்த்தசாரதி நாவலையே சுருக்கமாகச் சொல்லத் தொடங்கி விட்டார்.

அது ஒரு சோகக் கதை. உடலை விற்றுப் பிழைக்கும் ஒரு மாதின் கதை. அதனால்தான் நாவலுக்கு ‘வழுக்கி விழுந்த சகோதரி ‘ என்று பெயர் கொடுத்திருந்தார்.

கதாநாயகியான அந்த ‘வழுக்கி விழுந்த சகோதரி ‘க்கு ஒரு பெண் குழந்தை. தாயையும் குழந்தையையும் தவிக்க விட்டுவிட்டான் காதலித்துக் கைவிட்ட காதகன். யாருமற்ற அனாதையாக உலகில் தத்தளிக்கிறாள் அபலை. ஊரெல்லாம் சுற்றியும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. தாயும் குழந்தையும் பல நாள் பட்டினி கிடக்கிறார்கள். கடைசியில் குழந்தையின் பொருட்டு உடலை விற்றே சம்பாதிக்கத் துணிகிறாள். சம்பாத்தியத்திற்காக அவள் வெளியே போய்விடும்போதெல்லாம் தனியாக விடப்பட்ட குழந்தை, தாயைக் காணாமலும் பசிக்கொடுமை தாங்க முடியாமலும் அழுது துடிக்கிறாள்…..

இப்படியே அவர் கதையைச் சொல்லிக்கொண்டு வரும்போது ராமநாதனுக்கு மூளையில் ஏதோ தட்டுப் பட்டதுபோல் இருந்தது. உடனே ‘சட் ‘டென்று, ‘உங்கள் கதாநாயகி இந்தத் தெருவில்தான் இருக்கிறாளா ? ‘ என்று கேட்டான்.

‘இந்தத் தெருவில்தான், அதுவும் எதிர் வீட்டிலேயே இருக்கிறாள். ‘

‘அப்படியா ‘ எவ்வளவு நாளாக இங்கே இருக்கிறாள் ? ‘


‘வந்து ஒரு மாதமாகியிருக்கும். ‘

‘அவளுடைய பெயர் தெரியுமோ ? ‘

‘தெரியாது. ‘

‘ஆள் எப்படி இருப்பாள் ? ‘

பார்த்தசாரதி வர்ணித்தார். வர்ணனை முடிந்தது.

‘சரி சரி ‘ என்றான் ராமநாதன்.


‘ஏன், என்ன விஷயம் ? நீங்கள் இப்படியெல்லாம் பேசுவதைப் பார்த்தால், அவளைப் பற்றி உங்களுக்கு ஏற்கெனவே தெரியும் போல் அல்லவா தோன்றுகிறது ? ‘

‘அது இருக்கட்டும், அவளை நான் பார்க்கவேண்டுமென்றால் எப்படிப் பார்ப்பது ? ‘

ராமநாதனுக்குத் திகைப்பாகவும் இருந்தது; சிரிப்பாகவும் இருந்தது.

‘அவளிடத்தில் உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை ? ‘ என்று எழுத்தாளர் கேட்டார்.

‘அதை அப்புறம் சொல்லுகிறேன். நீங்கள் மீதிக் கதையையும் சொல்லுங்கள் ‘ என்றான் ராமநாதன்.


எழுத்தாளருக்கு மேற்கொண்டு கதையைச் சொல்லுவதற்கு உற்சாகமில்லாமல் போய்விட்டது. எனவே ராமநாதனை சாப்பிட அழைத்துக்கொண்டு போனார். இருவரும் சாப்பிட்டுவிட்டு வந்து பழையபடியும் மாடியறையில் உட்கார்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருக்கும்போது, நிமிஷத்துக்கு ஒரு தடவை ஜன்னல் வழியாகத் தெருவை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார் பார்த்தசாரதி.


ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். தனக்கு ஒரு வீடு தேவை என்று ராமநாதன் சொன்னதும் ‘ஏன், இப்போது இருக்கும் வீட்டில் என்ன அசெளகரியம் ? ‘ என்று கேட்டார் எழுத்தாளர்.


அவன் தன் துன்பக் கதையைச் சொல்லத் தொடங்கினான். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் ஒரு வேலைக்காரி அகப்படாத கஷ்டத்தைச் சொன்னான். ஒவ்வொரு வேலைக்காரியும் கிராக்கி பண்ணியதையும், உடம்பை வளைத்து வேலை செய்ய இஷ்டமில்லாமல் ஓடிவிட்டதையும் விவரித்துக்கொண்டு வந்தான். பார்த்தசாரதிக்கும் அந்த வேலைக்காரிகள் மேல் கடுங்கோபம் வந்தது. இருந்தாலும், ‘எல்லா வேலைக்காரிகளும் இப்படித்தான் இருக்கிறார்கள். வேலை செய்யாமல் சாப்பிடத்தான் எல்லோருக்கும் ஆசை. அவர்கள் காலமும் ஓடிவிடுகிறது ‘ என்றார்.



ராமநாதன் சொந்தக் கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பார்த்தசாரதி குறுக்கிட்டு, ‘அதோ, அங்கே பாருங்கள், ரிக்ஷாவிலிருந்து இறங்குகிறாளே, அவள்தான்…. ‘ என்றார்.


எட்டிப் பார்த்த ராமநாதனுக்கு அதிர்ச்சி ஏற்படவில்லை. தான் நினைத்தது சரியாக இருந்துவிட்டதை எண்ணி அவனுக்குச் சந்தோஷமாகத்தான் இருந்தது. அவளை ரோடு விளக்கின் வெளிச்சத்தில் நன்றாகக் கவனித்துப் பார்த்தான். அவளேதான்.


‘இவளைப் பற்றித்தான் நாவல் எழுதுகிறீர்களா ? ‘ என்று ராமநாதன் கேட்டதற்கு, ‘ஆம் ‘ என்று எழுத்தாளர் ஒப்புக்கொண்டார்.


‘உங்கள் கதாநாயகி யார் தெரியுமா ? என் இரண்டாவது வேலைக்காரி மங்களம் ‘ இவள்தான் ‘வழுக்கி விழுந்த சகோதரி ‘ ‘ இவளுக்காகத்தான் கண்ணீர் விட்டுக் கரைகிறீர்கள் ‘ அரை மணி நேரம் தண்ணீர் அடிப்பதற்கு மாட்டேன் என்று நல்ல சம்பளத்தையும், சாப்பாட்டையும் உதறிவிட்டு வந்து, குழந்தையையும் தனியாகக் கதற விட்டுவிட்டுச் சம்பாத்தியத்துக்குப் போய்விடுகிறாளே, இவளுக்கு நாவலும் எழுதவேண்டியதுதான்; நாடகமும் எழுதவேண்டியதுதான் ‘ ‘ என்று ராமநாதன் ஒரு போடு போட்டான்.


எழுத்தாளர் பார்த்தசாரதி என்ன சொல்லுவதென்று புரியாமல், ‘அப்படியா ? ‘ ‘நிஜம்தானா ? ‘ ‘இவள்தானா ? ‘ என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்.


ராமநாதன் பேச்சை முறித்து, ‘ஏன் சும்மா அங்கலாய்க்கிறீர்கள் ? அது எப்படியும் போகட்டும், நான் கேட்பதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்; எனக்கு ஒரு வீடு பிடித்துத் தருகிறீர்களா ? இல்லை, இந்த நாவலைக் கிழித்துத் தூரப் போடுகிறீர்களா ? இந்த இரண்டில் நீங்கள் எதைச் செய்தாலும் அந்த உதவியை மறக்க மாட்டேன் ‘ என்றான். உடனே ‘கடகட ‘வென்று சிரித்தான்.


புரட்சி எழுத்தாளரும் சேர்ந்து சிரித்தார்.



Wednesday, June 27, 2012

ஜெயமோகனுக்கு எதிராக ஒரு கட்டுரை

http://lh5.ggpht.com/-4AsyoVhVYoo/TIINSjzEX9I/AAAAAAAAAOQ/0frGhaSaQbE/Jeyamohan%252527s%252520family.JPG 

ஜெயமோகனின் பூச்சாண்டி அரசியல்: தர்க்கரீதியான மறுப்பு- Rajan Kurai Krishnan

1. பூச்சாண்டி அரசியல்: பூச்சாண்டி அரசியல் என்றால் என்ன? கொச்சையான வார்த்தை என்று முகம் சுளிக்காதீர்கள். தத்துவத்திற்கு கொச்சை பிரயோகங்களை எடுத்து கையாண்டு புதிய அர்த்தங்களை வழங்க உரிமை உண்டு. பூச்சாண்டி காட்டுவது என்பது ரகளை செய்யும் குழந்தைகளை பயமுறுத்த பெற்றோர் கடைப்பிடிக்கும் வழி. நண்பர்கள் யாரோ சொன்னார்கள்


, ஃபிரான்ஸில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் கறுப்பின மக்களை காட்டி குழந்தைகளை பயமுறுத்துவார்கள் என்று. அப்படி சில சமயம் உள்நாட்டில் பல்வேறு விதமாக பாதிக்கப்படும் மக்களின் உரிமைக் குரல்களை அடக்குவதற்கு அரசும், அரசியல்வாதிகளும் அந்நிய சக்திகள், ஏகாதிபத்தியம் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டுவார்கள். அதுதான் பூச்சாண்டி அரசியல். இந்த கருத்தாக்கத்தை பெரியாரும் அவருக்கே உரிய வழியில் உபயோகித்துள்ளார். எனவே பூச்சாண்டி அரசியல் புதிதல்ல. 


ஒரு அமைப்பின் உள்ளே நிலவும் அதிருப்தியை சமாளிக்க வெளியேயிருந்து வரும் ஆபத்தை கற்பிப்பது பூச்சாண்டி அரசியல் என வரையறுக்கலாம். ஜெயமோகனின் பூச்சாண்டி என்னவென்றால் இந்திய தேசத்தினை “அழிக்க”, இறையாண்மையை பலவீனமாக்க அந்நிய சக்திகள், அந்நிய நிதி (இது ஜெயமோகனின் சுவாரசியமான சொற்சேர்க்கை), ஏகாதிபத்தியம் ஆகியவை கிறிஸ்துவ மத அமைப்புகளின் மூலம், அவர்கள் உதவி செய்யும் தன்னார்வ அமைப்புகள், சிந்தனையாளர்கள் மூலம் சதி செய்கின்றன என்பதுதான். இது எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்பதை பொறுமையாக பரிசீலிப்போம். அதற்கு முன் இந்த உள்/வெளி என்ற அடையாளங்களை பொறுத்தவரை அரசியல் தத்துவம் இன்று சந்திக்கும் சிக்கல் என்ன என்பதை முதலில் பரிசீலித்து வைத்துக்கொள்வோம்.


நான் குடியிருந்த ஒரு வீட்டிற்கு பக்கத்து போர்ஷனில் தினமும் காலையில் கணவன், மனைவியிடையே கடும் தகராறு வரும். பாத்திரங்கள் உருளும், நாற்காலிகள் எறியப்படும் பயங்கர சப்தங்களும் அந்த அம்மாள் அய்யோ, அய்யோ என்று கத்துவதும் கலவரமாக இருக்கும். ஒரு நாள் சப்தத்தின் உச்சத்தில் நான் பயந்து ஓடிப்போய் அந்த வீட்டின் அழைப்புமணியை அழுத்தி விட்டேன். அந்த கணவர் தெலுங்கு பட வில்லனை போல் வாட்ட, சாட்டமாக தாடியுடன் இருப்பார். வெளியே வந்து என்னவேண்டும் என்று கர்ஜித்தார். பின்னாலிருந்து அந்த அம்மாளும் எட்டிப்பார்த்தார். “இல்லை, ஏதோ சப்தம் கேட்டது” என்று மென்று விழுங்கினேன். அதெல்லாம் ஒன்றுமில்லை, போங்கள் என்று கூறிவிட்டு கதவை அறைந்து சாத்தி விட்டார்.


எதற்காக சொல்கிறேன் என்றால் நாம் “அடுத்தவர்” பிரச்சினையில் தலையிடலாமா, கூடாதா அதை எப்படி முடிவு செய்வது என்பதை தீர்மானிப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. மேற்கத்திய தேசங்கள் பலவற்றில் அரசு குடும்பத்தை அங்கீகரிப்பதே இல்லை. சமீபத்தில் இந்திய பெற்றோரிடமிருந்து குழுந்தையை நார்வே போலீஸ் எடுத்துச்சென்ற சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கும். உங்கள் வளர்ப்புப் பிராணியை நீங்கள் கொடுமைப்படுத்துவதாக யாராவது புகார் சொன்னால்கூட போலீஸ் வந்துவிடும். என் மனைவி, என் குழந்தை, என்னுடைய நாய் நான் அடிப்பேன் என்றெல்லாம் பேசினால், கம்பிதான். ஏனென்றால் உரிமைகள் பற்றிய கருத்தாக்கங்கள் குடும்பத்தின் சுவர்களை தகர்த்துவிட்டன.

தேசங்களுக்கிடையே இன்று அப்படி ஒரு பிரச்சினை தீவிரமாக நிலவுகிறது. சமீபத்தில் லெபனானில் ஐக்கிய, அதாவது மேற்கத்திய நாடுகள் தலையிட வேண்டுமா, கூடாதா என்பதில் வலது சாரிகள், இடது சாரிகள் என எல்லாரிடையேயும் கடும் விவாதங்கள் நிகழ்ந்தன. சூடானில் ஏன் மேற்கத்திய நாடுகள் தலையிடவில்லை, டார்ஃபர் படுகொலைகளை வேடிக்கை பார்க்கலாமா என்று பல இடதுசாரிகளே கேட்டார்கள். இலங்கையை பற்றி பேசினால் இதயம் வலிக்கும். இந்தியாவோ, ஐக்கிய நாடுகளோ உள்ளே நுழைந்து முள்ளிவாய்க்காலை தவிர்த்திருந்தால் இடது சாரி நண்பர்கள் பலரும் மகிழ்ந்திருப்போம் என்பதுதான் உண்மை.


மனித உரிமைகளின் சர்வதேசப் பரிமாணம் கூடிக்கொண்டே போகிறது. பொதுவாக இவை மேற்கத்திய நாடுகளின், சர்வதேச முதலீட்டின் நலன்களுக்கு ஏற்ப வளைக்கப்படுகின்றன என்றாலும், பல சமயங்களில் தேசத்தின் எல்லைகளை மதிப்பதில் பலருக்கும் சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. இதை முதலில் நாம் குறித்துக்கொள்ள வேண்டும். தேசத்தின் இறையாண்மை என்பது கருத்தியல் தளத்திலும், பொருளாதார தளத்திலும் பலவகையான இடையீடுகளை சந்தித்தே தீரவேண்டிய நிலை எல்லா நாடுகளுக்குமே இருக்கிறது. மனித உரிமை தளத்தில் சீனாவும் கடுமையான அழுத்தங்களை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறது, இப்போதைக்கு அதை அசைக்க முடியாது என்றாலும், அமெரிக்காவும் இதற்கு விதிவிலக்கல்ல.


குடியேற்றம் குறித்த அதன் கொள்கைகள் கடுமையான விமர்சனத்தை சந்திக்கின்றன. எந்த நாடும் வெளியிலிருந்து வரும் விமர்சனங்களிற்கு தப்ப முடியாது. இறையாண்மையின் பொருள் மாறிக்கொண்டே இருக்கிறது. வழக்கம்போல அ.மார்க்ஸ் நல்ல கட்டுரை ஒன்றை இதுகுறித்து எழுதியிருக்கிறார். அவரை வசைபாடுவதில் காட்டும் உற்சாகத்தை அவரது நல்ல கட்டுரைகளை விமர்சன ரீதியாக வாசிப்பதிலும் காட்டலாம். ஒவ்வொரு வார்த்தையிலுமா வஹாபிசம் ஒட்டிக்கொள்ளும்? அப்படி ஒட்டிக்கொண்டாலும் ஜெயமோகனை படித்து அதை கழுவி விடலாம் என்பதால் அரசியல் தத்துவம் சார்ந்த கட்டுரைகளை வாசகர்கள் கவனமாக படிக்கவேண்டும். மனித உரிமைகள் என்ற கருத்தாக்கம் சார்ந்து, சர்வதேச குடிமைச் சமூகம் உருவாகிறதா, வடிவமற்றுப் பரவும் எதிர்பாற்றலால் தேசங்கள் கடந்த மக்கள் திரள் (multitude) சக்திகள் உருவாகின்றனவா என்பதெல்லாம்தான் இன்று அரசியல் தத்துவம் தீவிரமாக விவாதிக்கும் கேள்விகள். பூச்சாண்டி அரசியல் இதையெல்லாம் கண்டுகொள்ளாது.
http://www.sactamil.org/Writer%20Jeyamohan%20visit%20to%20Sacramento/slides/Jemo-GC%201029.jpg

2. கருத்தா, நேர்மையா?: ஜெயமோகன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் இன்னொரு பிரச்சினையையும் நான் முதலிலேயே எதிர்கொண்டுவிட வேண்டும். ஒருவரது கருத்தை எதிர்கொள்வது பிரச்சினையல்ல, அவரது நேர்மைதான் முக்கியம் என்கிறார்.


(உ-ம்:1. “ஒருவரின் கருத்துக்களை நான் எதிர்கொள்ளவேண்டுமென்றால் அக்கருத்துக்களை அவர் நேர்மையுடன் சொல்கிறார் என்று நம்பவேண்டும். அந்நம்பிக்கை இல்லாதபோது நிழலுடன் போரிட்டு அடையப்போவது என்ன?”


2. தமிழில் நேர்மையும் கொள்கைப்பிடிப்பும் கொண்ட ஒவ்வொரு இடதுசாரியையும் ஒவ்வொரு பெரியாரியரையும் நான் அங்கீகரித்து வழிபாட்டின் தொனியில் எழுதியிருப்பதைக் காணமுடியும். ஏனென்றால் நான் பார்ப்பது அந்தக்கருத்துக்கள் மீதான அவர்களின் அர்ப்பணிப்பை மட்டுமே. நான் என் வாசிப்பாலும் அனுபவத்தாலும் அவர்களிடம் முரண்படுகிறேன் என்பது அந்த மதிப்பை ஒருபோதும் குறைப்பதில்லை.- அவதூறு செய்கிறேனா? ஜூன் 23,2012;) நான் இதை மிக ஆபத்தான கருத்தாக பார்க்கிறேன்.

ஒருவர் அவர் கருத்தை நேர்மையாக சொல்கிறாரா இல்லையா என்பதை எப்படி மதிப்பிடுவது? எஸ்.வி.ஆர், அ.மார்க்ஸ், முத்துகிருஷ்ணன் ஆகியவர்களிடம் நேர்மை இல்லை என்று ஜெயமோகன் தீர்ப்பளிக்கிறார். அவர்களை மிகச்சிறந்த நேர்மையாளர்களாக மதிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இதை எப்படி புரிந்துகொள்வது? அந்தக்காலத்தில் இடதுசாரிகள் மூச்சுக்கு நூறுமுறை “இன்டக்ரிடி, இன்டக்ரிடி” என்று ஜெபிப்பார்கள். அப்போதிருந்தே எனக்கு மிகுந்த அருவருப்பை ஏற்படுத்தும் கருத்தாகத்தான் அது இருந்தது.

காரணம் அடுத்தவர் நேர்மை, இன்டக்ரிடி இதையெல்லாம் பற்றி பேசுவது என்னை போலீஸ்காரனாக, துப்பறிவாளனாக, நீதிபதியாக மாற்றுகிறது. நான் சிந்தனையாளன். நீதிபதி அல்ல. “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்பதே என்னுடைய ஆப்த வாக்கியம். சொல்பவர் கடன் வாங்கி சொல்கிறாரா, காசு வாங்கிக்கொண்டு சொல்கிறாரா, சுத்த சுயம்புவாக தன் ஆன்மாவிற்குள்ளிருந்து தோண்டியெடுத்து (பயமாக இருக்கிறது) சொல்கிறாரா என்றெல்லாம் நான் கவலைப்படுவதில்லை. சொன்னது என்ன என்பதுதான் என் அக்கறை. இதற்காக “ஆசிரியன் இறந்துவிட்டான்”, “குறியியக்கத்தின் சுயமின்மை” என்பதெல்லாம் வரை போக வேண்டியதில்லை.

சாதாரண பொதுப்புத்தியே நல்லதை யார் சொன்னாலும் கேட்கனும், கெட்டதை யார் சொன்னாலும் கேட்கக் கூடாது என்பதுதான். நல்லது எது, கெட்டது எது என்று தீர்மானிப்பதன் தளமே சுதந்திரம். பெரியார் அழகாகச் சொல்வார். நான் திருடனாகவோ, சுயநலமியாகவோ, பச்சோந்தியாகவோ இருந்தால் உங்களுக்கு என்ன? நான் சொல்வது சரியாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள் என்று. ஆகையால் நான் தம்பி அரங்கசாமி எதை சொன்னாலும் அந்தக் கருத்தைதான் எதிர்கொள்வேன். அவர் ஜெயமோகன் தூண்டுவிட்டு சொன்னாரா, “சுய” சிந்தனையில் சொன்னாரா, அல்லது சிலர் ஐயப்படுவது போல ஜெயமோகனே அவர் அடையாளத்தில் எழுதுகிறாரா என்பதெல்லாம் என் பிரச்சினை கிடையாது.


அதேபோல ஜெயமோகனின் உள்நோக்கம் என்ன, அவர் எந்த அரசியல் ஆதாயத்திற்காக இதை சொல்கிறார், அவர் பின்னால் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் நான் யோசிக்க மாட்டேன். அவர் ஒரு கருத்தை சொல்கிறார். அதை கருத்தாக எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் என் கோட்பாடு. உளவு அமைப்பு அதிகாரிகளுடன் பேசுவது, போலீஸ் அதிகாரிகளுடன் பேசுவது, கிறுத்துவத் தன்னார்வக் குழுக்களுக்கு உள்ளேயிருந்தே உளவுத் தகவல்கள் பெறுவது இதெல்லாம் என் வேலையல்ல.பொதுவெளியில் சுய-நியாயப்பாட்டிற்காக பேசுவதும், என்னுடைய அளவுகோல்களைக் கொண்டு பிறரை அளந்து பார்ப்பதும் எனக்கு சிறிதும் ஒவ்வாத செயல்கள். நான் கருத்துக்களுடன் மட்டுமே பேசுகிறேன். நபர்களோடு அல்ல. கண்காணிப்பது என் வேலையல்ல.


என்னுடைய பேனாப்டிகானை (panopticon) தகர்த்து நொறுக்கிவிட்டேன். ஜெயமோகன் சுய நியாயப்பாட்டின் பிரம்மாண்ட மேடையில் அமர்ந்து, எந்திரன் ரஜினி போல உளவுப்படைகள் இலட்சம், எந்திர நாய்கள் நூறு ஆகிவயற்றுடன் அனைவரது வாழ்க்கையையும் விசாரணை செய்து தீர்ப்புகள் வழங்குவதைப் பார்த்து என்னால் சிரிக்க மட்டுமே முடியும். காஃப்காவின் மின்னலைகளை பகிராத ஒரு சமகால இலக்கியத்தை என்னால் யோசிக்க முடியாது. கொடுப்பினை உள்ளவர்களுக்கு வாய்க்கும் காஃப்காவும், தெல்யூஸும். மற்றவர்கள் நீதிபதியின் ஆசனத்திற்கு முந்தலாம். பரஸ்பர குற்றச்சாட்டுகளில் முக்குளிக்கலாம்.

3. ஏகாதிபத்தியம் என்றால் என்ன? ஜெயமோகனின் கட்டுரைகளில் வெளிப்படும் முக்கியமான அரசியல் கருத்து கிறித்துவ நிறுவனங்கள் ஏகாதிபத்திய நலன்களுக்காக இயங்கும் முன்னணி அமைப்புகள் என்பது. இதில் அவர் மதம் என்பதைவிட அரசியல் பொருளாதாரமே அடிப்படையாக இருப்பதாக பலமுறை தெளிவுபடுத்துகிறார். அவரிடம் ஏகாதிபத்தியம் என்றால் என்ன என்று கேட்பதில் பொருள் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஏனென்றால் சிக்கலான கேள்வியைக் கண்டால் நான் எழுத்தாளன், கோட்பாட்டாளனல்ல என்று சொல்லிவிடுவார். ஆகவே அவரைக் கேட்காமல் நானே என் சிந்தனைக்கு எட்டியதை சொல்லிவிடுகிறேன்.

இன்றைய நிலையில் ஏகாதிபத்தியம் என்று எதையும் வரையறுப்பது கடினம். ராணுவ, தொழில் கூட்டமைப்பில் (military-industrial complex) அமெரிக்கா அதிகபட்ச ஆற்றலுடன் இருக்கிறது. ஆனால் பொருளாதார அளவில் அது சீனாவுடன் மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளின் கடன், நிலுவை பட்டியலில் அமெரிக்கா அதிகபட்ச கடனாளியாகவும், சீனா அதிகபட்ச கடன் கொடுத்த நாடாகவும் இருப்பதை நீங்கள் கூகுள் செய்து பார்க்கலாம். இப்படிப்பட்ட சீன-அமெரிக்க வர்த்தக நிலையின் அரசியல் அர்த்தம் என்ன, யூரோவிற்கும் டாலருக்கும் முரண்பாடு இருக்கிறதா இல்லையா, ஏன் ஐரோப்பிய நாடுகள் பலவும் திவாலாகும் நிலையில் இருக்கின்றன என்பதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் உலக பொருளாதார அமைப்பு முன்னெப்போதும் இல்லாது அளவு சிக்கலடைந்திருப்பது தெரியும்.


http://10hot.files.wordpress.com/2009/08/writer-tamil-authors-jeyamohan-a-muthulingam.jpg
முதலீட்டின் பன்னாட்டுப் பரிமாணம் அதன் தேசியப் பரிமாணத்தை முற்றிலும் கட்டுப்படுத்தியுள்ள காலம் என்று சொல்லலாம். ஆனால் தேசம் என்ற கட்டுமானம் இல்லாமல் இந்த அமைப்பை நிர்வகிப்பதும் கடினம். தேசம் என்பது வேண்டும். ஆனால் அது சர்வதேசிய முதலீட்டிற்கு கட்டுப்பட்டு இருக்கவேண்டும். எந்தவொரு தேசிய அரசும் அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும், அந்நிய பொருள்களை அனுமதிக்க வேண்டும். இந்திய கார்ப்பரேஷன்களும் அந்நிய நாடுகளில் முதலீடு செய்கின்றன. நைஜீரியாவில் இந்திய முதலீடு மொத்தம் $13 பில்லியன் என்கிறது கூகுள் செய்தி. 6500 கோடி ரூபாய் என்று நினைக்கிறேன். சின்ன தொகைதான்.


ஆனால் பொருளாதார வலைப்பின்னல் என்பதைப் பற்றி யோசிக்க மிகவும் உதவக்கூடியது. ஏக ஆதிபத்தியம் என்பது குண ரீதியான ஒரு ஒப்பீட்டு ரீதியான வார்த்தையாகவே இன்று அர்த்தப்படும். ஏகம் அநேகமாய் பரம்பொருளைப்போல திரிவது முதலீடு என்ற மாய சக்திதான். ஒவ்வொரு தேசிய இறையாண்மையும் தன்னை செலவாணிகளாக, நாணயங்களாக (currency) மாற்றிக்கொண்டு சூதாடியைப்போல மேஜையை சுற்றி நின்று விளையாடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தேசத்தின் உழைக்கும் மக்களும், வறியவர்களும் செய்வதறியாது நிற்கின்றனர். ஏதோ போராடுகின்றனர், கோஷங்கள் போடுகின்றனர், வோட்டுப்போடுகின்றனர், ஆட்சியை மாற்றுகின்றனர். ஆனால் வரலாறு அவர்கள் கைகளிலிருந்து சூதாடிகளின் மேஜைக்கு போய்விட்டது. 


4. இந்திய தேசமும், அந்நிய நிதியும் இந்திய அரசும், இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் அந்நிய நிதியை பெரிது விரும்புகின்றன. FDI (Foreign Direct Investment) என்ற நேரடி அந்நிய மூலதனமே இந்திய பொருளாதார வளர்ச்சியின் மூல நாடி. மைக்ரோசாஃட் அதிபர் பில் கேட்ஸ் இந்தியா வந்தபோது ஒரு அரசருக்கு உரிய மரியாதையும், கவனமும் அவருக்கு தரப்படவில்லையா? பாரதீய ஜனதா கட்சியின் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அந்நிய முதலீடு பெருமளவில் கிடைக்க தமிழக கோவில்கள் பலவற்றில் விசேஷ பூஜைகளும், அர்ச்சனைகளும் செய்யவில்லையா? சி.பி.ஐ(எம்) முதலமைச்சர் புத்ததேப் அந்நிய முதலீட்டினை பெற கடுந்தவம் புரியவில்லையா?

எல்லா அரசியல் கட்சிகளுமே வளர்ச்சிக்கு முதலீடு தேவை, முதலீடு பெருமளவில் வேண்டுமென்றால் அது அந்நிய முதலீடாக இருந்தால்தான் சாத்தியம் என்பதில் முழு உடன்பாட்டுடன் இயங்கி வருகின்றன. அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வளர்ச்சி சார்ந்த பிம்பம் ஒருபுறம், கையூட்டு கமிஷன்கள் ஒருபுறம் என்ற இருவித கவர்ச்சிகள் அனைவரையும் இயக்குகின்றன.


இப்படிப்பட்ட நிலையில் தாங்கள் முதலீடு செய்யும் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை குறைப்பதில், அந்த நாட்டு அரசாங்கத்தை பலவீனமாக்குவதில் அந்நிய நிதிக்கு என்ன அக்கறை இருக்க முடியும்? இந்திய அரசு வலுவாக இருந்தால்தானே அவர்கள் தொழில் இங்கு நன்றாக நடக்கும்? அவர்கள் முதலுக்கு நல்ல இலாபம் கிடைக்கும்?

ஒருவேளை ஜெயமோகன் சொல்வதை இப்படி எடுத்துக்கொள்வோம். அந்நிய நிதி மூலங்கள் இந்திய அரசினை கைக்குள் வைத்திருக்க பல்வேறு அதிருப்திகளை வளர்த்து வைத்துக்கொள்ள விரும்புகின்றன; தேவைப்பட்டால் அவற்றை தூண்டிவிட்டு பெரிதாக்க விரும்புகின்றன என்கிறார் ஜெயமோகன். நைஜீரியா விஷயத்தில் இதை குறிப்பிட்டுள்ளார். வேண்டுமென்றால் பெரிதுபடுத்திக்கொள்ள வசதியாக அதிருப்திகளுக்கு கருத்தியல் அடிப்படைகளை உருவாக்கி வைத்துக்கொள்ள வேண்டுமென்பதால் இந்த அந்நிய நிதிகள் அறிவாளிகளையும், கல்வியாளர்களையும் வந்தடைகின்றன என்று அவர் நினைக்கிறார். அவர்களும் ஆதரவு அளிப்பவர்களுக்கு விசுவாசமாக இருக்க விரும்பவதால் கருத்தியல் அடிப்படைகளை உருவாக்கித் தருகின்றனர் என்பதே அவர் வாதம்.

இது எவ்வளவு அடிப்படையற்ற கற்பனை என்பதை புரிந்துகொள்ள அந்நிய நிதி என்பதை அளவு ரீதியாக முதலில் கவனித்தால் போதும். இந்திய பட்ஜெட்டில் வரவு செலவு கணக்கு காட்டப்படும் பணம் பதினாலு இலட்சம் கோடி. ஒரு ஆண்டில் இந்தியாவில் முதலீடு செய்யப்படும் அந்நிய நிதி குத்துமதிப்பாக 12,500 கோடி முதல் 15,000 கோடி ரூபாய் என்று கூகுள் தகவல்களிலிருந்து சொல்ல முடிகிறது. ஒரு ஆண்டில் மட்டும். ஒரு தொழிற்சாலை தொடங்கவே முந்நூறு கோடி, ஐநூறு கோடி என்று செலவாகிறது. தமிழ் சினிமாவே கூட நூறு கோடி முதலீட்டில் எடுக்கத் துணிகிறார்கள்.

அரசியல்வாதிகள் பெறும் கையூட்டுக்களைப் பற்றி நான் சொல்லத்தேவையில்லை. அவர்களது சொத்துக்களெல்லாம் பிரமிப்பூட்டும் எல்லைகளில் இருக்கின்றன. இதெல்லாம் அந்நிய நிதியின் உள்வரத்து தோற்றுவித்த பொருளாதார நடவடிக்கைகளின் விளைவு என்று கூறப்படுகிறது. இப்படி ஆயிரக்கணக்கான கோடிகளில் வரும் நிதிக்கும், ஃபோர்டு ஃப்வுண்டேஷன் வழங்கும் நிதிக்கும் என்ன ஒப்பீடு? அரசு சாரா நிறுவனங்கள் (NGO) எவ்வளவு கோடிகள் பெறுகின்றன? எனக்குத் தெரிந்து ஒரு தனிப்பட்ட நபர் அல்லது அமைப்பு பெறும் நிதி என்பது இலட்சங்களில்தான் இருக்கிறது. அப்படியே ஒரு அமைப்பு சாரா நிறுவனத்திற்கு சில கோடிகள் கிடைத்தாலும் அவர்கள் அதை ஆயிரக்கணக்கானோருக்கு பகிர்ந்தளிக்க நேர்கிறது. ஏதோ ஒரு சில பேர் கார்களில் போய்விட்டு வருவதை பார்த்துவிட்டு “ஆஹா, அயல்நாட்டு பணம், அயல்நாட்டு பணம்” என்று கூவுபவர்கள் ஒரு அரசியல் கட்சியின் மாவட்டச் செயலாளர் வகை வகையான பத்து கார்கள் முன்னும் பின்னும் வர பவனி வருவதை என்னவென்று சொல்கிறார்கள் என்று புரியவில்லை.

எதற்காக இந்த ஒப்பீடு என்றால ஆயிரக்கணக்கான கோடிகளை நேரடியாக முதலீடு செய்து இந்தியாவின் முதலாளி வர்க்கம், அதிகார வர்க்கம், அரசியல்வாதிகள் வர்க்கம் எல்லோருடனும் நேரடியாக பேரத்தில் இருக்கும் அந்நிய நிதி மூலங்கள் அவர்கள் ஒத்துழைப்புடன் இந்தியாவில் எதை வேண்டுமானாலும் நேரடியாக செய்துகொள்ளலாம். குறிப்பிட்ட கட்சி ஒத்துழைக்கவில்லையென்றால் அதை கவிழ்த்துவிட்டு ஒத்துழைக்கும் கட்சியின் ஆட்சியை கொண்டுவரலாம். (சுப்ரமண்யம் சுவாமி சொல்வதை விகடனில் படித்தீர்களா? நினைவிலிருந்து சொல்கிறேன்:

“சோனியா பிஜேபி ஆட்சியை கவுத்து எனக்கு ஆட்சியை பிடிச்சுகொடுங்கோன்னு கேட்டா(ர்)! ஜெயலலிதாவும் கேட்டா(ர்)! நான் டீ பார்ட்டி வைச்சேன்”. எவ்வளவு வெளிப்படையாக பேசுகிறார் இந்த மனிதர்) எந்த ஆட்சிக்கும் தலைவலி தர எந்த பகுதியிலும் எந்த ஒரு குட்டி அரசியல்வாதியையும் தூண்டிவிட்டு பிரச்சினை செய்யலாம். தேவைப்பட்டால் ஆயுதங்களை கூட தருவித்துக் கொடுக்கலாம். அந்நிய நிதி என்பது ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான கோடிகளின் விளையாட்டு என்பதால் அது பாதாளம் வரை நேரடியாகப் பாயும். இப்படியிருக்க அரசை கட்டுக்குள் வைத்திருக்க ஆய்வாளர்களுக்கு சுண்டைக்காய் பணம் கொடுத்து, அவர்கள் ஆய்வை திசை மாற்றி, கருத்தியலை உருவாக்கி, அதை ஊடகத்துள் செலுத்தி, பின்னர் இந்திய அரசிற்கு சிக்கலை ஏற்படுத்தும் திட்டம் கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடிக்கும் சாமர்த்தியமாக இருக்கிறது.

என்னவோ அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும், தேசிய முதலாளிகளும் இந்த தேசத்தை பாதுகாக்க துடிப்பது போலவும், அறிவுஜீவிகள் மட்டுமே காசு வாங்கிக்கொண்டு காட்டிக் கொடுப்பது போலவும் ஜெயமோகனின் பூச்சாண்டி அரசியல் காமெடி ஃபில்ம் காட்டுகிறது. உண்மை என்னவென்றால் தேசமென்பது மக்கள் என்று கொண்டால் அறிவு ஜீவிகள் மட்டுமே அவர்கள் நலனை பேச முனைகிறார்கள். அதிகாரப் பரவலில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை பேசுகிறார்கள். வறியவர்கள் சந்திக்கும் அநீதியின் கோர தாண்டவத்தை மனசாட்சியின் குரலாக ஒலிக்கிறார்கள். தேசத்தை அந்நிய நிதி மூலங்களுடன் சேர்ந்து சுரண்டும் கும்பலுக்கு அது பிடிக்காததால் இவர்களை தேச விரோதிகள் என்கின்றன. ஜெயமோகனிடம் இடம் என்ன என்பதை அவர் தீர்மானிக்கட்டும். வாசகர்கள் முதலில் என்ன நடக்கிறது என்பதில் தெளிவு பெற வேண்டும்.

எஸ்.வி.ஆர் நூலையே எடுத்துக்கொள்வோம். அவர் எழுதித்தான் திராவிட இயக்கம் பிரிவினை கோரிக்கையை வைத்ததா? பெரியார் சுதந்திர தினத்தை துக்க தினமாக அறிவித்தாரா? தி.மு.க மாநில சுயாட்சி கோரிக்கையாக பிரிவினை கோரிக்கையை மாற்றியதா? பல்வேறு விதமான தமிழ் விடுதலை இயக்கங்கள் ஆங்காங்கே தோன்றியவண்ணம் இருக்கின்றனவா? அவரைக்கேட்டுதான் RAW என்ற இந்திய உளவுத்துறை அமைப்பு இலங்கை ஆயுதப் போராட்டித்திற்கான முகாம்களை தமிழகத்தில் நடத்தியதா? அவருடைய நூலால் என்ன இதுவரை இல்லாத கருத்தியல் பரவி இந்தியாவிற்கு பெரிய சிக்கல் ஏற்படப்போகிறது? 1994-இல் தனுவின் படத்தை தியாகியின் படம் என்று ஊர்வலத்தில் தூக்கிச்சென்ற பாட்டாளி மக்கள் கட்சியுடன் அடுத்தடுத்த தேர்தல்களில் பி.ஜே.பி.யும், காங்கிரஸும் கூட்டணி வைத்துக்கொள்ளவில்லையா? வெகுஜன அரசியலில் எதைப்பேசினாலும் சகஜம். அறிவுஜீவிகள் முரண்களை பதிவு செய்தால் தேசத்திற்கு ஆபத்து வந்துவிடுமா? பூச்சாண்டி சூ ஓடிப்போ.

5. இந்திய அரசே காட்டும் பூச்சாண்டி: இடது சாரிகளும் கூட இந்த பூச்சாண்டி அரசியலில் கைதேர்ந்தவர்கள்தான். அவர்களுக்கு பிடிக்காதவர்களை CIA, NGO என்று போட்டுத்தள்ளும் காலத்தில்தான் எஸ்.வி.ஆரை அவதூறு செய்து கேடயம் எழுதியதை இன்று ஜெயமோகன் மேற்கோள் காட்டுகிறார். கோட்பாட்டு ரீதியான உடன்பாடு இல்லாத பகுதிகளிலிருந்து அவதூறை மட்டும் எடுத்துக்கொள்வதை சந்தர்ப்பவாத அரசியல் என்பார்கள். அது போக அரசியலில் குழப்பம் என்பது அனைவருக்கும் நேர்வதுதான். ராமேஸ்வரத்தில் சேது சமுத்திர திட்டத்தை பி.ஜே.பி, இந்து முன்னணி இன்னபிற ராமர் பேரால் எதிர்க்கின்றன. மீனவர்களிடையே செயல்படும் ஒரு சில கிறித்துவ என்.ஜி.ஓக்களும் சுற்றுச்சூழல் காரணத்திற்காக எதிர்க்கின்றன. அங்கே ஒரு இடதுசாரி நண்பர் என்னிடம் சொன்னார்: “அந்நிய சக்திகள் இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பதற்காக சேது சமுத்திர திட்டத்தை எதிர்க்கின்றன” என்று. பி.ஜே.பியும் எதிர்க்கிறதே என்றேன். அது மதவாத சக்தி என்றார். பூச்சாண்டி அரசியலுக்கு முரண்களை புரிந்துகொள்ளும் சக்தி கிடையாது.

பூச்சாண்டி அரசியலில் ஜெயமோகனின் புதுமை தமிழில் வலது சாரி அரசியல் சார்பாக சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் மீதும், சிந்தனையாளர்கள் மீதும் அதை ஏவுவதுதான். ஏனென்றால் சோ ராமசாமி, சுப்ரமண்யம் சுவாமி போன்றவர்கள் எஸ்.வி.ஆரையோ, அ.மார்க்ஸையோ, முத்துகிருஷ்ணனையோ கண்டுகொள்ள மாட்டார்கள். அதனால் விடுபட்ட ஏரியாவில் பூச்சாண்டி அரசியல் செய்ய முனைந்திருக்கிறார். இந்திய அரசே அதைச்செய்யும்போது ரொம்ப வேடிக்கையாக இருக்கும். கூடங்குளம் போராட்டத்தில்தான் அது நடந்தது. நல்லவேளையாக கூடங்குளம் போராட்டத்தை ஜெயமோகன் ஆதரிப்பதால் இப்போது நான் சொல்வது அனைவருக்கும் விளங்கும்.

கூடங்குளம் போராட்டத்தை அந்நிய சக்திகள் தூண்டி விடுவதாக அரசு கூறியது. அந்த போராட்டத்தை வழிநடத்தும் உதயகுமாரின் பள்ளிக்கு நன்கொடை வழங்கிய அமைப்புகளையெல்லாம் தடலாடியாக ரெய்டு செய்து தினமலர் தலைப்புச் செய்தியாக்கினார்கள். அந்தப் பக்கம் வந்த யாரோ ஐரோப்பிய தேசாந்திரியை பிடித்து நாடகீயமாக நாடு கடத்தினார்கள். அமெரிக்க ஆதரவுள்ள அரசு சாரா நிறுவனங்கள் அணு உலையை தடுப்பதாக பிரதமரே சொன்னார். எதற்காக தடுக்க வேண்டும்? அமெரிக்காவிடம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டுதானே இந்த காரியத்தில் இறங்குகிறார்கள்? அமெரிக்கா நினைத்தால் நேரடியாக இந்த அணு உலைகளை தடுக்க, ஆட்சேபிக்க முடியாதா?

இந்த அணு உலையை ரஷ்யா கொடுக்கிறது. அடுத்தடுத்த அணு உலைகள் பல்வேறு நாடுகளிலிருந்து வருகின்றன. இதில் பிரச்சினை செய்தால், அடுத்த உலைகளுக்கும் பிரச்சினை வராதா? இன்று பொருளாதார மந்த நிலையை உலகளாவியதாகத்தானே சொல்கிறார்கள் (Global recession)? எந்த ஒரு நாட்டிலும் பொருளாதார நடவடிக்கையை தடுப்பது எல்லா நாடுகளையும்தானே பாதிக்கும்? கிரீஸ் திவாலானால் ஏன் மற்ற நாடுகளில் விலை ஏறுகிறது? இன்றைய உலக பொருளாதார அமைப்பில் தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறியேறும். எனவே இந்தியாவின் வளர்ச்சியை தடுத்து உலக பொருளாதார மந்த நிலையை அதிகரிப்பதில் எந்த அந்நிய சக்திக்கும் ஆர்வம் கிடையாது. அந்நிய நிதிக்கும், இந்திய நிதிக்கும் பெரிய முரண்பாடும் கிடையாது. ஓடுகிற நீரில் என் கை நீர் எது என்பது போலத்தான் உலக முதலீட்டியம் இயங்குகிறது.

ஆனால் மக்கள் போராட்டத்தை ஒடுக்கவேண்டுமென்றால் அதற்கு நியாயம் கற்பிக்க வேண்டுமல்லவா? போராடும் மக்கள் மீது தேசத்துரோக குற்றம் சுமத்தி கைது பண்ணும் அரசு அதற்கு ஏற்ற ஃபில்ம் காட்ட வேண்டாமா? அதற்குத்தான் இந்த பூச்சாண்டி அரசியல். அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஜெயமோகனுக்கு என்ன தேவை என்றுதான் புரிந்துகொள்ள முடியவில்லை.

6. ஆய்வுக்கு ஆதரவு கொடுங்கள்: ஜெயமோகனுக்கு ஆலோசனை சொல்லும் தகுதி எனக்கில்லாவிட்டாலும் தேவை இருக்கிறது. நான் மேற்கொள்ள விரும்பும் பல்வேறு பண்பாட்டு ஆய்வுகளுக்கு நிதி உதவிக்கு எங்கே போவது என்று தெரியவில்லை. மீண்டும், மீண்டும் அந்நிய நிதிகளிடமே போகவேண்டியிருக்கிறது. ஜெயமோகன், பேசாமல் நீங்களே விஷ்ணுபுரம் அறக்கட்டளை ஒன்றையும். அதன் சார்பாக விஷ்ணுபுரம் ஆய்வு நிறுவனம் ஒன்றையும் தொடங்குங்கள். பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற பெரிய மனிதர்களின் நட்பு உங்களுக்கு உண்டு. அ.நீ, ராஜீவ் மல்ஹோத்ரா மூலமாக ஹிந்துஜா போன்ற நிறுவனங்களிடமிருந்தும் “தேசிய” நன்கொடை வாங்கலாம்.

மணிரத்தினம் மூலமாக ரிலையன்ஸை கூட அணுகலாம். மொத்தமாக ஒரு கணிசமான நிதியை உருவாக்கினீர்கள் என்றால், என்னைப் போன்றவர்களின் ஆய்வுகளுக்கு உதவி செய்யலாம். எனக்கும் அடிப்படையில் இந்த நாட்டின் பண்பாட்டின்மீது மிகுந்த மதிப்பும், காதலும் உண்டு என்பதால் இந்திய இறையாண்மையை எந்த வகையிலும் தொந்திரவு செய்யாமல் ஆய்வை மேற்கொள்கிறேன். அரவிந்தன் நீலகண்டன் மேற்பார்வையில்கூட வேலை செய்கிறேன். ஆய்வாளர்களின் கருத்தியல் சுதந்திரத்தை நீங்கள் மதித்து, கிறித்துவ ஏகாபத்திய நிறுவனங்கள் செய்வதாக நீங்கள் சொல்வதுபோல ஆய்வின் போக்கில் தலையிடமாட்டீர்கள், முன் நிபந்தனைகள் விதிக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. சீக்கிரம் “தேசிய நிதி” சக்திகளை சமூக அறிவியல், மொழியியல், வரலாறு போன்ற துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்வதில் ஈடுபடுத்துங்கள். இல்லாவிட்டால் அந்நிய நிதியைத்தான் நாட வேண்டியிருக்கும்.

அதே போல அரசு நிர்வாகமும் உண்மையிலேயே மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யத் தொடங்கினால் அரசு சாரா நிறுவனங்களுக்கும் தேவை இல்லாமல் போய்விடும். ஒரு கிராமத்தில் துப்புரவு தொழிலாளிக்கு உரிய சம்பளத்தை பெற்றுத்தர ஒரு NGO பணியாளர் போராட வேண்டியிருக்கிறது. சில இடங்களில் கம்யூனிஸ்டுகள் செய்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் எங்கேயும் இதுபோன்ற காரியங்களை செய்வதை நான் பார்க்கவில்லை. செய்கிறார்கள் என்றால் மகிழ்ச்சிதான். பெரியார் பெயரை சொன்னால் உங்களுக்கு பிடிக்காது. அதனால் காந்தியும், வினோபாவும் பிறந்த மண்ணில் ஒரு துப்புரவு தொழிலாளி கெளரவமாக வாழவேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் தமிழகமெங்கும் ஏற்படுத்திவிட்டீர்களென்றால் உங்களை சிலை வைத்து வழிபடுவேன். வெல்க பாரதம்!

P.S: I have not asked for Rajan's permission to share this. In case he has a problem with this, I will take this down- Prakash Venkatesan

Wednesday, June 20, 2012

எழுத்தாளர் ஜெயமோகனும் , தண்ணீர் தண்ணீர் சரிதாவும்

http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/S6C4AXyX8lI/AAAAAAAAF5Q/LlnwYPNFvuc/90akc7_thumb%5B6%5D.jpg
இரு தருணங்களிலாக நான் ஒரு திரைப் படத்தைப் பார்த்தேன். கே.பாலசந்தர் இயக்கிய ‘தண்ணீர் தண்ணீர்’. முதல்முறை பார்க்கும்போது  எனக்கு 19 வயது. கல்லூரி இறுதிவகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். வகுப்பை வெட்டிவிட்டு கையில் புத்தகங்களுடன் நாகர்கோயில் பயோனியர் முத்து திரையரங்குக்குச் சென்று சொட்டிக்கொண்டிருந்த மழையில் நனைந்துகொண்டு வரிசையில் நின்று, ஈரஉடலில் மின்விசிறிக்காற்று குளிரக் குளிர, அரங்கெங்கும் ஈர உடைகள் நீராவியை உமிழ,  தென்தமிழ்நாட் டின் கடும் வறட்சியைப் பற்றிய அந்தப் படத்தைப் பார்த்தேன்.

ஆரம்பித்த சில கணங்களுக்குள் பாலைநிலம் வழியாக வெக்கையில் உடல் எரிய சென்று கொண்டிருந்தேன். தலையில் தண்ணீர்க்குடங்களுடன் வெறும் கால்களுடன் சரிதா, அந்த முள்பரவிய வெற்று நிலத்தில் நடந்துகொண்டே இருந்தார். அவர் நடந்து நடந்து கண்முன் விரித்த அந்த நிலத்தில் வெடிப்புகள் வாய்திறந்து தண்ணீர் தண்ணீர் என்று முனகிக்கொண்டிருப்பதைக் கேட்டேன். வழியில் ஒருவன் சாக்கடை நீரை அள்ளிக்குடிக்க முற்படுகையில் சரிதா அவனைத் தடுத்து, சின்னமூக்கைச் சுளித்துச் சிரித்து, ‘இந்தா குடி' என நீரை அவனுக்கு ஊற்றுவார்.

என்னை நெகிழச்செய்த அந்தக் காட்சியை எத்தனையோ ஆண்டுகளாக நினைவில் வைத்திருக்கிறேன். எந்த வறட்சியிலும் வறளாத கருணை ஒன்றை அது அடையாளம் காட்டியது. உண்மையில் படத்தின் மையமே அதுதான். வறண்ட மண்ணுக்கும் வறட்சியை அறியாத மனங்களுக்கும் இடையேயான போராட்டம்.


 அந்தப் படம் முழுக்க சரிதா தென்தமிழ்நாட்டின் கிராமத்துப் பெண்ணாகவே தெரிந்துகொண்டிருந்தார். கொசுவத்தை சுழற்றிச் செருகும் அழகு, கையை கண்மேல் வைத்து வானை நோக்கி ஏங்கும் துயரம், கண்ணீர் படர்ந்த பெரிய கண்களில் தெரிந்த சீற்றம். அன்று சரிதாவுக்காகவே அந்தப் படத்தை ஏழு முறைக்குமேல் பார்த்தேன்.


இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் கோவை பி.எஸ்.ஜி கல்லூரி ஊடகவியல்துறை கே.பாலசந்தரின் ஆக்கங்கள் பற்றி ஒரு கருத்தரங்கை ஏற்பாடுசெய்தது. அதில் நான் அவரைப் பற்றி பேசவேண்டும் என்று நண்பர் வசந்த் கேட்டுக்கொண்டார். நான் மீண்டும் எனக்குப் பிடித்த கே.பாலசந்தரின் படங்களைப் பார்த்தேன்.


என் மனதில் முதலிடத்தில் இருந்த 'தண்ணீர் தண்ணீர்'தான் முதலில். பழைய குறுவட்டு ஓடி சிவந்த காட்சிகள் தெளிந்து சரிதா, அந்த காய்ந்த மண்ணில் நடக்க ஆரம்பித்ததும் நான் மீண்டும் அதே உணர்ச்சிகளுக்கு ஆளானேன். அந்தப் படத்தின் எவ்வளவோ விஷயங்கள் பழைமையாகிவிட்டன. இசை, ஒளிப்பதிவு, காட்சியமைப்புகள்... ஆனால் சரிதாவின் அந்த கனிவும் ஏக்கமும் சீற்றமும் அதே நுட்பங்களுடன் அதே உத்வேகத்துடன் இருந்தது.


அது என் கடந்தகால ஏக்கமா என்ற ஐயம் ஏற்பட்டது. நாற்பது தாண்டும்போது இளமைக்கால கட்டம் தனி ஒளிகொள்ள ஆரம்பிக்கிறது. நான் அருகே அமர்ந்து படம்பார்த்த என் மகனையே பார்த்துக் கொண்டிருந்தேன். பொதுவாக தமிழ்ப் படங்களை ரசிக்காதவர்கள் என் பிள்ளைகள். படம் முடிந்ததும் மகன் உணர்வெழுச்சியுடன் சொன்னான் ‘நல்ல படமா இல்லையான்னு சொல்லத் தெரியல்ல அப்பா. ஆனா பாத்து முடிக்கிறப்ப ஒரு பயங்கரமான ஆவேசம் வருது' நான் சொன்னேன் ‘அதான் நல்ல படத்துக்கு இலக்கணம். அது நினைச்ச உணர்ச்சிய உண்டுபண்ணுதே'

அவனே சரிதா பற்றி ஏதாவது சொல்வான் என எதிர்பார்த்தேன். அவன் நல்ல மலையாளப் படங் களில் ஏற்கெனவே சரிதாவைப் பார்த்திருந்தான். படத்தைப் பற்றி மேலும் பேசும்போது அவன் சொன்னான் ‘அந்தக் கிராமத்துப் பொண்ணு நல்லா நடிச்சிருக்கா அப்பா... நான் புன்னகையுடன் அது சரிதா.. என்றேன். ‘யாரு? காதோடு காதோரம் படத்திலே நடிச்சாங்களே அவங்களா? மீண்டும் படத்தின் குறுவட்டை எடுத்துப்பார்த்து ‘அட ஆமா’ என்றான் ‘தெரியவே இல்ல அப்பா...அப்டியே அந்த மண்ணில நிக்கிற முள்ளுசெடி மாதிரி இருந்தாங்க அவங்களும்'

http://cine-talkies.com/movies/malayalam-actress/saritha/saritha-102.jpg

கடும் விமர்சனங்கள் கொண்ட அடுத்த தலைமுறையிடமிருந்து வரும் பாராட்டு. ஒருவேளை சரிதாவுக்குக் கிடைக்கச் சாத்தியமான அதிகபட்ச அங்கீகாரமும் அதுவாக இருக்கலாம். இருபத்தைந் தாண்டுகளுக்கு முன் நான் சரிதாவின் ரசிகனாக இருந்தேன் என்று சொன்னேன். தனிப்பட்ட முறையில் நான் இரண்டே நடிகர்களுக்குத்தான் ரசிகன் என்று சொல்லிக்கொள்வேன். அவர்கள் என்ன நடித்தாலும் அது எனக்குப் பிடிக்கும். சரிதாவை விட்டால் மலையாள நடிகர் திலகன். அவர்கள் நடிப்பதையறியாத நடிகர்கள். எந்த கதாபாத்திரத்திலும் மிகச்சாதாரணமாக கலந்துவிடும் ஆன்மா கொண்டவர்கள். அக்கதாபாத்திரத்துக்கு வெளியே கொஞ்சம்கூட நீட்டிநிற்கும் அகந்தையோ ஆளுமையோ இல்லாதவர்கள்.

சரிதாவின் முந்தைய படங்களை உண்மையில், நான் அதன்பின்னர் தான் பார்த்தேன். தப்புத்தாளங்கள், பொண்ணு ஊருக்குப் புதுசு, மௌனகீதங்கள், வண்டிச்சக்கரம், மலையூர் மம்பட்டியான் போன்ற பல படங்களை சரிதாவுக்காக பலமுறை பார்த்திருக்கிறேன். பிற்காலப்படங்களில் சரிதாவின் நடிப்பை மிகைப்படுத்தும் காட்சிகளை இயக்குநர்கள் அளித்து மிகையாகவே நடிக்கவும் செய்திருந்தார்கள். ஆனால் அவற்றையும் மீறி அப்படங்களில்கூட அவரது நடிப்பு நுட்பங்களும் மெருகும் கொண்டதாக இருந்தது


நடுவே சில ஆண்டுகள் நான் திரைப்படங்கள் பார்க்கவில்லை. மீண்டும் எண்பதுகளின் இறுதியில் மலையாளப் படங்களில் புதியதாக சரிதாவின் நடிப்பைக் கண்டு கொண்டேன். இன்னும் முதிர்ச்சியும், இன்னும் அடக்கமும், இன்னும் நுட்பங்களும் செறிந்த சரிதா. இன்னும் ஆழமான, இன்னும் யதார்த்தமான கதாபாத்திரங்கள். ஜோஷி இயக்கிய ‘சம்பவம்’ சிபி மலையில் இயக்கிய ‘தனியாவர்த்தனம்’ பரதன் இயக்கிய ‘காதோடு காதோரம்’ போன்ற படங்களில் தெரிந்த சரிதா நான் மறக்கமுடியாத முகம்.


வழக்கமான பார்வையில் ஒரு கதாநாயகிக்கான தோற்றம் கொண்டவர் அல்ல சரிதா; குள்ளமான, குண்டான, கரிய பெண். நடிப்பை வெளிப்படுத்துவதற்கு ஒத்துவராத சின்ன உதடுகளும் சின்ன மூக்கும் கொண்ட வட்டப் ‘பம்ளிமாஸ்’ முகம். ஆனால் சரிதா அளவுக்கு எந்த நடிகையும் துல்லியமான முகபாவங்கள் வழியாக கதாபாத்திரத்தின் அகத்தைக் காட்சிப்படுத்தியதில்லை.


எந்த அம்சம் சரிதாமேல் அத்தனை பெரிய ஈர்ப்பை உருவாக்கியது? நான் அன்றுவரை திரையில் கண்டிருந்த எல்லா நடிகைகளும் செயற்கையான நளினங்களையும், செயற்கையான உணர்ச்சிகரத்தையும் வெளிப்படுத்துபவர்களாகவே இருந்தார்கள். சரிதாவின் அசைவுகளும் சிரிப்பும் பேச்சும் எல்லாமே மிகமிக சகஜமானவையாக இருந்தன. அது உருவாக்கிய ஆச்சரியத்தை இன்று சொல்லிப் புரியவைப்பது கடினம்.



அன்றைய கதைகள் பெண்களைச் சார்ந்தவை. பெண்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பாக நடிப்பதற்கானவை. சரிதா, அத்தகைய கதாபாத்திரங் களைக்கூட மிக அடக்கமாகவும் நுட்பமாகவும்தான் வெளிப்படுத்தி யிருந்தார். மிகையாக நடித்தார் என்று அவரைப் பற்றிச் சொல்வதற்கான சந்தர்ப்பங்கள் மிகமிகக் குறைவானவை. மிக அசட்டுத்தனமான, சம்பிரதாயமான கதாபாத்திரங்களில்கூட முகபாவனைகளின் நுட்பங்கள் வழியாக தனி அழகை சரிதாவால் உருவாக்க முடிந்திருக்கிறது என இப்போது தோன்றுகிறது.


பலவகையிலும் சரிதாவை எஸ்.ஜானகியிடம்தான் ஒப்பிடவேண்டும். திரைப்பாடலுக்குரிய கணீர்க்குரல் இல்லாத ஜானகி, கடும் முயற்சியால் தனக்கென இனிய குரலை உருவாக்கிக்கொண்டார் என்பார்கள். சரிதாவும் அப்படியே, தோற்றத்தின் எதிர்மறை அம்சத்தை நடிப்பால் வென்றவர் அவர்.


மலையாளத்தின் எல்லா வகையான வட்டார உச்சரிப்புகளையும், சாதிய வேறுபாடுகளையும் துல்லியமாக தன் பாடல்களில் கொண்டுவர முடிந்த பாடகி என எஸ்.ஜானகி யைச் சொல்லலாம். சரிதாவும் அப்படியே. இந்த அளவுக்கு நுட்பமாக மலையாளப்பெண்களின் வெவ்வேறு வகையான உடல்மொழியை முகபாவனை களை நடித்துக்காட்ட சரிதாவால் முடிந்ததை சாதனை என்றே சொல்லவேண்டும். அதேசமயம் தமிழில் மலையாளச்சாயலே இல்லாமல் அப்பட்டமான தமிழ்ப் பெண்ணாகவே அவர் காட்சியளித்தார். ஆனால் எஸ்.ஜானகியைப்போலவே சரிதாவும் தெலுங்கர்.



வேறெந்த கலைஞர்களைவிடவும் தமிழில் திரைக்கலைஞர்கள்தான் அதிகம் கொண்டாடப்படுகிறார்கள். ஆனால் சாதனையாளர்கள் எளிதில் மறக்கப்படுவதும் திரைத்துறையிலேயே. சரிதா தமிழ்த் திரையின் சாதனைக் கலைஞர்களில் ஒருவர்.

அந்த அங்கீகாரத்தை அவருக்கு அளித்து எழுதப்பட்ட குறிப்புகளை நான் கண்டதில்லை.  சரிதாவின் நடிப்பு அவருக்குப் பின்னால் வந்த எல்லா கதாநாயகிகளிலும் ஒரு பாதிப்பைச் செலுத்தியிருக்கிற தென்றே நினைக்கிறேன். இயல்பான சரளமான நடிப்பே உண்மையான நடிப்பு என்பதை தமிழ்த் திரைப்படத்தின் திருப்புமுனைக் காலகட்டத்தில் வந்து தமிழ் ரசனைக்கு முன்னால் நிறுவிக்காட்டியவர் அவர்.


திரைச்சீலைகளை நடனமிடச் செய்தபடி கடந்து செல்லும் மெல்லிய பூங்காற்றுபோல தமிழ்த் திரை வழியாக கடந்து சென்றவர்.


நன்றி - த சண்டே இந்தியன்

Thursday, June 14, 2012

சாருநிவேதிதாவும் ,அவர் மனம் கவர்ந்த சில்க் ஸ்மிதாவும்


பாலியல் தொழிலாளியாக இருந்து, பின்னர் எழுத்தாளராக மாறிய நளினி ஜமீலா ஒருமுறை என்னிடம் குறிப்பிட்டார். அவருடைய சுயசரிதை நூல் கேரளத்தில் பிரபலமான பிறகு அவருடைய நேர்காணல்கள் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் வெளிவரத் தொடங்கின.  அப்போது அவருக்கு தினமும் நூற்றுக்கணக்கான காதல் கடிதங்கள் வர ஆரம்பித்தனவாம்.  காதல் என்றால் எப்படிப்பட்ட காதல்?  “உங்களோடு ஒரே ஒருமுறை செக்ஸ் அனுபவிக்க வேண்டும்.”  இதைப் பற்றி சிரித்துக் கொண்டே குறிப்பிட்ட ஜமீலா, “அவர்கள் அனுபவிக்க நினைத்தது, ரத்தமும் சதையுமாக உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் இந்த ஜமீலாவுடன் அல்ல;  தொலைக்காட்சியில் தெரியும் ஜமீலாவின் நிழலுடன்” என்றார்.


எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  ஏனென்றால், ஜமீலா அனுபவரீதியாக உணர்ந்து கூறியதைத்தான்  ஃபிரான்ஸைச் சேர்ந்த பிரபலமான பின்நவீனத்துவ சிந்தனாவாதியான ஜான் பொத்ரியார் (Jean Baudrillard)  தன்னுடைய Simulacra and Simulation என்ற நூலில் Hyperreality என்ற கருத்தாக்கமாக முன்வைக்கிறார்.   சுருக்கமாகக் கூறினால், எதார்த்தத்துக்குப் பதிலாக, அதன் இடத்தை பிம்பங்கள் எடுத்துக் கொள்வதே ஹைப்பர் ரியாலிட்டி.

தமிழ்க் கலாச்சாரத்தை நிர்ணயிக்கும் சக்திகளில் பிரதானமாக இருப்பது சினிமா என்பது நம் எல்லோருக்குமே தெரியும்.  அந்த சினிமாதான் தமிழர்களுக்கான பிம்பங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பிம்பங்களில் மிக முக்கியமானவர் சில்க் ஸ்மிதா (1960-&96).  ஆந்திராவின் ஏழ்மையான குடும்பம் ஒன்றைச் சேர்ந்த விஜயலட்சுமிக்கு பள்ளிக்குச் சென்று படிக்க வசதியில்லை. 


 அதனால் மிகச் சிறிய வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். திருமண வாழ்க்கை தோல்வியில் முடிய, ஆந்திராவிலிருந்து பிழைப்புக்காக சென்னைக்கு வந்து, கோடம்பாக்கத்தின் சினிமா ஸ்டுடியோக்களில் எடுபிடி வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் வயது 16. இதேபோல், கிராமத்தில் சிறுவயதில் திருமணம் செய்விக்கப்பட்டு, அது தோல்வியில் முடிந்து, பிறகு சினிமாவில் சேர்ந்து புகழ்பெற்ற நடிகைகள் பலர் இருக்கிறார்கள்.  உதாரணத்துக்கு ராக்கி, ஜெயா பாதுரி.  இதை இங்கே குறிப்பிடக் காரணம், அந்தக் காலகட்டத்தில் பல நடிகைகளின் கதையும் ஒரே மாதிரியாகத்தான் இருந்திருக்கிறது.  

ஒருநாள் ஏவிஎம் ஸ்டுடியோவின் எதிரே இருந்த மாவு மில்லில் வேலை செய்துகொண்டிருந்த விஜயா, நடிகர் வினு சக்ரவர்த்தியின் பார்வையில் பட  விஜயாவின் வாழ்க்கையில் அதிரடித் திருப்பம் ஏற்படுகிறது.  வண்டிச் சக்கரம் என்ற படத்தில் விஜயா சாராயம் விற்கும் பெண்.  பெயர் சிலுக்கு. பிறகு அந்தப் பெயரே அவருக்கு நிலைத்துவிடுகிறது. 

அதற்குப் பிறகு சில்க் ஸ்மிதா 450 படங்களில் நடித்தார்.  புகழின் உச்சத்தில் இருக்கும்போது தற்கொலை செய்துகொண்டார். மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று இன்றளவும் நம்புகிறவர்கள் உண்டு.  புகழின் உச்சாணியில் இருந்த சிலுக்குவின் சடலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்தபோது அந்த சடலத்தைப் பெற்றுக் கொள்வதற்குக்கூட யாரும் இல்லை என்பது இன்னொரு துயரமான விசித்திரம். இதிலும் பல நடிகைகளின் கதை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.  பர்வீன் பாபி, இந்தியா முழுவதும் பிரபலமாக இருந்த ஒரு நடிகை. பாலிவுட்டின் செக்ஸ் ஸிம்பலாகக் கருதப்பட்டவர். தத்துவ ஞானி யு.ஜி. கிருஷ்ணமூர்த்தியின் சிநேகிதி.  என்னுடைய எக்ஸிஸ் டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற நாவலுக்கு டெபொனேர் பத்திரிகையில் வெளிவந்த பர்வீன் பாபியின் ஒரு பேட்டிதான் அடிப்படையாக இருந்தது. அந்தப் பேட்டி வந்த ஆண்டு 1972.  அப்படிப்பட்ட பர்வீன் பாபி 2005-&ல் இறந்தபோது அவரது சடலமும் Unclaimed body (Token No. 62) -ஆகத்தான் கிடந்தது. மேலும், சிலுக்கு பிரபலமான பிறகு தன் சொந்த பந்தங்கள் யாரையும் தன்னோடு சேர்த்துக் கொள்ளவில்லை. அவருடைய மூத்த சகோதரர், சிலுக்கு சாகும்போதுகூட லாரி டிரைவராகத்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில்க் ஸ்மிதா அளவுக்குப் பிரபலமாக இருந்த நடிகை தமிழ் சினிமாவில் இன்றளவுக்கும் வேறு யாரும் இல்லை. ஒருமுறை இந்திரா காந்தி “யார் இந்த சில்க்?” என்று சிரித்துக்கொண்டே கேட்கும் அளவுக்கு சில்க் ஸ்மிதாவின் பெயர் இந்தியா முழுவதும் பரவியிருந்தது.   பெண்களுக்கும் சிலுக்கைப் பிடித்திருந்தது.  இன்றைய கவர்ச்சி நடிகைகள் யாருமே சில்க்கின் நிழலைக்கூடத் தொட முடியவில்லை.  அன்றைய கதாநாயக நடிகர்கள்கூட பிரபலம் என்ற அளவில் சிலுக்குவுக்குப் பின்னால்தான் இருந்தார்கள். 17 ஆண்டுகள் ஓர் ஒட்டுமொத்த சமூகத்தின் பாலியல் கனவாக விளங்கினார் சில்க்.  இது எப்படி நிகழ்ந்தது என்பதை ஆய்வு செய்தால், தமிழ்ச் சமூகத்தை மிகச் சிறந்த முறையில் புரிந்து கொள்ள முடியும். 

ஆந்திரா பற்றித் தெரிந்தவர்களுக்குத் தெரியும்.  அங்கே முக்கால்வாசிப் பெண்கள் சில்க் ஸ்மிதாவைப் போல்தான் இருப்பார்கள்.  அவர்களில் ஒருவரைத் தூக்கிக்கொண்டு வந்து ஒரு மாநிலம் தனது கனவுக் கன்னியாக வைத்துக் கொண்டதற்குக் காரணம் என்ன?

உலகில் பாலியல் வறட்சி மிகுந்த பிரதேசங்களில் தமிழ்நாடு முன்னணியில் வரும் என்று நினைக்கிறேன். என் வாசகர் ஒருவர் இருந்தார். வயது 60. அவர் நீண்ட நாட்களாக யோசித்து, தயங்கி, பிறகு சற்றே துணிச்சல் பெற்று ஒருநாள் தன் மனைவி தனியாக இருக்கும்போது முத்தமிட்டார்.  உடனே அந்தப் பெண்மணியும், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் சேர்ந்து அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள்.  “உங்கள் புத்தகங்களைப் படித்ததால் எனக்கு ஏற்பட்ட கதியைப் பாருங்கள்” என்று பிறகு அவர் என்னிடம் வருத்தப்பட்டார். 

அப்போதெல்லாம் கழிப்பறை வசதி கொண்ட கேரவன்கள் கிடையாது.  அதனால் வெளிப்புறப் படப்பிடிப்பின்போது நடிகைகள் பெரும் அவதிக்குள்ளாவது உண்டு.  அப்படி ஒரு சமயத்தில் ஒரு தனியான இடத்தைக் கண்டுபிடித்து சிறுநீர் கழித்திருக்கிறார் சில்க்.  முடித்து விட்டு நிமிர்ந்து பார்த்தால் சுவரிலும், பக்கத்திலிருந்த மரக் கிளைகளிலும் பல ஆண் உருவங்கள்.  இதை சிலுக்கே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.  


அவர் இறந்த பிறகு அவரது பிரேதம் necrophilia செயலுக்கு ஆட்பட்டதாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக ஒரு பேச்சு உண்டு.  ஒரு பிரபலமான நடிகை பல நாட்கள் கோமாவில் இருந்த போது, அந்த மருத்துவமனையின் வார்ட்பாயிலிருந்து மூத்த டாக்டர் வரை அந்த நடிகையின் ஜனனேந்திரியத்தைப் பார்த்து விட்டுச் சென்றார்கள் என்று அங்கே பணிபுரிந்த ஒரு பெண் மருத்துவர் என்னிடம் சொல்லியிருக்கிறார். 

ஹைப்பர்ரியாலிட்டி என்பது எதார்த்தம் அல்ல; ஆனால் எதார்த்தத்திலிருந்து முழுதும் அந்நியமானதும் அல்ல. அதே சமயம், அதில் எதார்த்தத்தின் சாயலும் உண்டு.  Hallucinatory resemblance என்கிறார் பொத்ரியார்.  தமிழ்நாட்டை சுமார் 20 ஆண்டுகள் இந்த மாயத்தன்மையினால் ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த சில்க் ஸ்மிதாவின் கதையை ஆராய்ந்தால் ஒருவேளை அது தமிழர்களின் கதையையே சொல்லக்கூடும்.


நன்றி - த சண்டே இந்தியன்

Wednesday, May 09, 2012

சுஜாதா -வின் அம்மோனியம் பாஸ்பேட் - சிறுகதை ( 1970)

http://diary.typepad.com/.a/6a00e54fce1e91883401287639c376970c-500wi
நாஜி ஸல்யூட் போல நின்ற கான்கிரீட் கம்பங்கள், விண் என்று முடிச்சு முடிச்சாக முள் கம்பிகள், விரோதமாக மூடியிருக்கும் கேட், உள்ளே பசுமைப் பண்ணை,. காற்றில் பயிர்களின் பலவிதப் பச்சைகள். மஞ்சள் பச்சை, எமரால்ட் பச்சை, பாட்டில் பச்சை, கண்மட்டத்துக்கு உயர்ந்த கதிர்கள், ஃபர்லாங் பாதையின் S-Z ஓட்டம். 


அதோ வீடு. வீட்டின் நிழல், மரங்களின் நிழல், நிழலில் இளைப்பாறிக்கொண்டிருக்கும் டிராக்டர்கள். சங்கிலிக் கட்டுப்பாட்டை மீறி ஒருவித தற்கொலை இயக்கத்துடன் எம்பிக் குரைக்கும் ஆக்ரோஷ நாய்கள். ஒரு நாய், இரண்டு நாய். மற்றபடி அமைதி. மறுபடி வீடு. வீட்டினுள் வசதிகள். மத்தியில் அந்தப் பெரியவர். எதிரே நான்.


அவருக்கு வயது ஐம்பதுக்கு அருகில் இருக்கும். தலையின் நரை ஐம்பத்து ஐந்து என்றது. உடலின் வலிமை நாற்பத்து ஐந்து என்றது. ஹாலில் படங்கள் இருந்தன. அவைகளில் சில பக்தியைத் தெரிவித்தன. சில பெண்களைத் தெரிவித்தன.

‘இவ்வளவு பெரிய பண்ணையை நீங்க ஒரு ஆளா சமாளிக்கிறீங்க?’என்றேன் !....த்துடன்.

‘எனக்கு ஒத்தாசைக்கு இரண்டு பேர் இருக்காங்க. வெளியுலகத்துக்கும் எனக்கும் அவங்கதான் தொடர்பு. தபால் சேகரிப்பாங்க. விதை வாங்குவாங்க. உரம் வாங்குவாங்க. மற்றபடி நான்தான் எல்லாம். டிராக்டர் இருக்கவே இருக்கு. அதுக்கு உலகத்திலே உள்ள அட்டாச்மெண்ட் எல்லாம் இருக்கு. நானே உழறேன். 


நானே விதைக்கிறேன்; நானே பயிர் செய்கிறேன்; களைகிறேன்; சேர்க்கிறேன்; எல்லாத்துக்கும் டெக்னாலஜி கொடுத்த சாதனங்கள். மருந்து அடிக்கக் கோயமுத்தூர் ஏரோடிரோமிலிருந்து ப்ளேன் வரும். ஒர்ரே ஓட்டு….என்ன?’


‘நீங்க ஒரு வித்தியாசமான விவசாயி சார்!’


‘மேல் நாட்டிலே இதெல்லாம் சாதாரணம் இல்லையா?’


‘இருந்தாலும் நம் நாட்டிலே ரொம்பப் புதுசுங்க’

‘மிஷின் தம்பி. மிஷின்! மிஷின் இருக்கு; டீஸல் இருக்கு; பணம் இருக்கு. பத்திரிக்கை படிக்கிறதில்லை. பொய்யை எதுக்குப் பைசா கொடுத்துப் படிக்கணும்? ரேடியோவிலே நியூஸ் கேப்பேன். அவ்வளவு தான். லெட்டர் எழுதறதில்லை. இந்த முள் கம்பிக்கு உள்ளே நான்தான் கடவுள். மனித சகவாசம் கிடையாது!’


‘அப்ப எனக்கு அனுமதி கிடைச்சது ரொம்ப பெரிசுன்னு சொல்லுங்க!’


‘ஒரு விதத்துல சரி. நான் வெளியாட்கள் யாரையும் பார்க்கிறது கிடையாது. போனவருஷம் சித்திரை மாசம் ஒருவன் இன்ஸ்யூரன்ஸ் விக்க வந்தான். நாயை அவுத்து விட்டேன்.’


வெளியே ஒரு பெரிய ‘வள்’ கேட்டது.


‘என் மேல நாயை அவுத்து விடலியே?’

‘உரம் விக்க வந்தீங்க. எனக்கு உரம் தேவையாயிருக்கு. கந்தசாமிதான் வாங்கி வருவான். காச்சல்ல படுத்துட்டான். சமயத்துல வந்தீங்க; அதான்…’


‘அதான் உள்ள விட்டீங்களாக்கும். சரியான க்ரெமலின் சார், இந்த இடம்’


‘தம்பி எனக்கு மனுஷங்க வேண்டாம். மோர் சாப்பிடறீங்களா?’


‘வேண்டாம்’ என்றேன். ‘எங்க உரம் அம்மோனியம் பாஸ்ஃபேட் ஸார். தமிழ்நாடு பூரா இப்ப பரவலா உபயோகப்படுத்தறாங்க. நாளைக்கு எங்க வான் வரலாமா உள்ளே…தயங்காம….?’


‘தாராளமா’

‘முள் கம்பியைப் பார்த்தாலே பயமா இருந்தது ஸார். அந்த ஆள் காவல்காரன் என்ன பாஷை பேசறான் அவன்?’


‘அவன் ஒரு நேபாளி…விசுவாசம், பேச மாட்டான்.’


‘என்னவோ கேட்டான்…சரி, நீங்க ஒண்ணு யோசித்துப் பார்த்தீங்களா, ஸார்?’


‘என்ன?’


‘இந்த மாதிரி மெகானிகல் ஃபார்மிங்கினாலே ஒரு 500 ஆட்களுக்கு வேலை கிடைக்கிற வாய்ப்பு போய்விடறதே’

http://thamizhthirai.com/blog/wp-content/uploads/2012/02/347657402-791542.jpg


‘தம்பி, எனக்கு மனுசங்க மேலே நம்பிக்கை போய்டுத்து. மெஷின்ப்பா, மெஷின்! மெஷின் எதிர்த்துப் பேசாது. போட்ட டீஸலுக்கு உழைக்கும்.மெஷின் எப்படி வேலை செய்யறதுன்னு புரியும். மெஷின் விசுவாசம் உள்ளது. மெஷினுக்கு மனசு கிடையாது. சிவப்புக் கொடி கிடையாது. தொழிற்சங்கம் கிடையாது. மீட்டிங் கிடையாது. ரகளை கிடையாது. –எனக்கு மனுசங்க வேண்டாம்’



‘அவங்களுக்கு நீங்க வேணுமே. அதுவும் நம்ப தேசத்துலே அந்த மாதிரி மெஷின் ஆதிக்கம் சரிப்பட்டு வருமா? இந்த மாதிரி நீங்க சிங்கிளா நடத்தறதனாலே எவ்வளவு வேலைவாய்ப்புகள் வீணா போய்டுது…?’


‘தம்பி, ஆயிரம் பேர்க்கு வேலை கொடுத்து ராஜா மாதிரி பண்ணை நடத்திட்டிருந்தேன். இங்கே இல்லை. தஞ்சாவூர் பக்கம்’


‘எப்ப?’

‘சில வருஷங்களுக்கு முன்னாடி’

‘அதை விட்டுட்டீங்களா?’

‘வித்துட்டேன்’

;ஸார் நான் ஒண்ணு கேக்கறேன். கோவிச்சுக்க மாட்டீங்களே?’

‘கேளு’


‘நீங்க இந்த இடத்துலே தனியா வந்து வெளிக் காத்து படாம இருக்கறதுக்கு வேற ஒரு காரணம் இருக்கலாம்னு படறது…’


‘மேலே சொல்லு’


‘ஏதோ ஒரு ஞாபகத்துலிருந்து விலகி நிற்க, மறக்க, நீங்க இங்கே வந்திருக்கலாம்னு எனக்குப் படறது. நீங்க இதுக்குப் பதில் சொல்ல விரும்பலேன்னா வேண்டாம்.’


‘பதில் சொல்றேன். நீ புத்திசாலிப் பையனா இருக்கிறே. எனக்கு புத்திசாலிகளைக் கண்டா பயம்…என்ன படிச்சிருக்கே?’



‘பி.எஸ்.ஸி அக்ரிகல்ச்சர்’-தயங்காமல் பொய் சொன்னேன்.



‘கல்யாணம் …ஆயிடுச்சா?’


‘இன்னும் இல்லே’


‘செய்யாதே. பெண்களை ஒதுக்கு. சினிமா போ. சீட்டாடு, சிதறு. பெண்கள் கிட்ட போகாதே’


‘இதுவரை சந்தர்ப்பம் எதுவும் வரவில்லை எனக்கு’


‘இனிமேலும் வேண்டாம். நான் சொல்றது ஒரு பட்டினத்தார் வெறுப்பினாலே இல்லை. பெண் எல்லாம் பிசாசு என்கிற ரீதியிலே இல்லை. பெண் வேண்டும். ‘செக்ஸ்’ வேண்டும். பெண் இல்லாம நீயும் நானும் அம்மோனியம் பாஸ்ஃபேட்டை இப்ப விலை பேசிக்கிட்டிருக்கமுடியாது. ஆனா வெக்க வேண்டிய இடத்திலே வைக்கணும். எனக்கு மட்டும் ஆசையில்லையா என்ன? ஆசையிருந்தா, அது என் நடைமுறை வாழ்க்கையிலே தொந்தரவு செஞ்சு குறுக்கிடறாப்பில அவ்வளவு தீவிரமா இருந்தா, கோயமுத்தூரிலிருந்து வரவழைப்பேன். அவ்வளவுதான். மறுநாள் காலை மண்ணுக்குத் திரும்பிடுவேன். என்ன பார்க்கிறே? டேஞ்சரான ஆசாமி இவன்னு யோசிக்கிறியா?’ சிரித்தார்.



‘இல்லைங்க. இதுவும் ஒருவித அபிப்ராயம்தான்’


‘நான் அனுபவப்பட்டுச் சொல்றேன். நான் வைத்திருந்தது ஐந்நூறு ஏக்கராப் பண்ணை. கரும்பு கதலி நெல்லுன்னு பசுமையிலே ஜொலிச்சிட்டிருந்த பண்ணைய ஒரு ராத்திரியிலே வித்து தொலைச்சது ஒரு பெண்ணாலே’


நான் பேசவில்லை. அவர் தொடரக் காத்திருந்தேன்.


‘நான் சொன்னேனே பண்ணை-எப்பேர்ப்பட்ட பண்ணை? நூறு மைல் வட்டாரத்துக்குப் பொறாமையால எரிஞ்சாங்க. தகதகன்னு, செழிப்பா, செல்வமா, பண்ணையா அது…! அதிலே என் குமாஸ்தா ஒருத்தன் இருந்தான். பேர் ஷண்முகம். பேரை மறக்க மாட்டேன். அவனுக்குப் பெண் ஒருத்தி இருந்தா, சரஸ்வதி. பேரை மறக்க மாட்டேன். ஷண்முகம் பரம்பரை பரம்பரையா எங்க குடும்பத்துக்கு உழைச்ச குடும்பத்திலே வந்தவன். அவன் என்னை எதுத்துக்கிட்டான். எங்க முப்பாட்டனார் பைசா பைசாவாக சேர்த்தபோது அவனுடைய முப்பாட்டன்தான் கணக்குப் பார்த்தான்.’


‘சரஸ்வதி?’

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXkU7p9U8AXehm8hZdDsi-i2vmjVphqUI-Irx85KQ5IuQ4NrzWzaERGyIo82E_6pMlXtfcujQ20h1a_vazfXPKjRqdO4gqa_5J60kUEW2vZhAg8YcV_emPND4ANfHBhaKsCM9bsHi-wFVV/s400/sujata.jpg


‘ஆமாம், சரஸ்வதி. மறக்கவே மாட்டேன் அவளை. சரியான உயரம். ஏறக்குறைய என் உயரம். என்னிக்கோ ஒருநாள் திடீர்னு அவளை வித்தியாசமா கவனிச்சேன். அவள் பிறந்தது என் பண்ணையிலே, வளர்ந்தது பாவாடை கட்டினது, தாவணி மாறினது, பள்ளிக்கூடம் போனது – எல்லாம் என் ஏரியாவிலேதான். கவனிச்சதே இல்லை.

கவனிக்க ஆரம்பித்தேன். அ! அவதான் என்கிட்டே வந்து கேட்டா, ஞாபகம் வருது. ‘முதலாளி! எங்க அப்பா என் படிப்பை நிறுத்திப்பிட்டாங்க. பத்தாவதுக்கப்புறம் படிக்க வெக்கலை. என்னைக் கட்டிக் கொடுக்க ஆசைப்படறாங்க. எனக்கு படிக்க ஆசை. எங்கப்பாகிட்டே நீங்கதான் சொல்லணும்னு’ ஒரு சாயங்காலம் நான் தனியா நடக்கப் போனபோது நிறுத்தி கேட்டா.

நான் அப்பதான் நிஜமா பார்த்தேன் அவளை.சரியான ஜடை, சரியான நடை. அந்த மாதிரி உடம்பெல்லாம் இப்ப அதிகம் தென்படறதில்லை. உடம்பான உடம்பு, பண்ணையில இருக்கிற இளம் பயல்களையெல்லாம் கரகம் ஆட வெக்கிற உடம்பு, பருத்தி உடுத்தினாலும் அப்படியே, அப்படியே…எனக்கு இதெல்லாம் சொல்ல வராது. நான் அப்ப தனியாள். தனி ஆள்னா பொண்டாட்டி இறந்து போய் வாரிசில்லாம துக்கம் மறைஞ்சு போன முதல் வருஷம்…

அந்தப் பெண்ணோட அப்பன்கிட்ட ‘பணம் தரேன், மேலே குழந்தையைப் படிக்க வை’ன்னு சொன்னேன். அவன் செய்தான். ஜில்லா போர்டு பள்ளிக்கூடத்திலே சேர்க்க வைச்சேன். படிச்சது. இரண்டு மூணு வருஷம் விட்டுப்போன படிப்பு, டவுனுக்குப் பஸ்ஸூக்கு என் ஜன்னல் எதிரேதான் நடந்து போவா. பள்ளி வாசனை,டவுன் வாசனை,டூரிங் தியேட்டர் சினிமா வாசனை, பத்திரிகை வாசனை-எல்லாம் சேர்ந்து அவ ஸ்டைல் மாறியது. நடக்கிற விதம் மாறியது. பாவனை மாறியது. எனக்கு முன்னாலே நாளுக்கு நாள் என் விருப்பத்தையும் வெறுப்பையும் தூண்டிக்கொண்டு போவா. விருப்பம் அவள் பெண்மையினாலே. வெறுப்பு என் வயசு வித்தியாசத்தினாலே…’



‘சாயங்கால வேளை தம்பி. செப்டம்பர் மாதம் 8ம் தேதி. மறக்கவே மாட்டேன். அவ வயக்காட்டுப் பக்கம் நடக்கிறா. தனியா நான் நடக்கிறேன். நான் எதிரே வந்ததும் ஒதுங்கறா. ‘இந்தா உன் பேர் என்னன்னு கேக்கறேன், தெரிந்துகொண்டே. ‘சரஸ்வதி’ங்கறா’


‘நல்லா படிக்கிறியா?’


‘நல்லா படிக்கிறேன். ‘சமூகத்திலே எண்பத்தெட்டு வாங்கினேன்’ங்கிறா’


‘சரஸ்வதி உனக்கு நிஜ முத்திலே மாலை போட்டுக்க ஆசையான்னு கேட்டேன். நிஜப் பட்டிலே சேலை கட்டிக்க ஆசையான்னு கேட்டேன். உனக்கு உடம்பு பூரா தங்கம் இழைச்சுக்க ஆசையான்னு கேட்டேன். எப்பவாவது நூறு ரூபாய் நோட்டைக் கண்ணாலே பாத்திருக்கியான்னு கேட்டேன்’



‘புரியலையே முதலாளின்னா, வயக்காட்டு மத்தியிலே ஆள் உயரம் பயிர்களுக்கு நடுவிலே அவளை வீழ்த்தினேன். என்ன பலம் அவள் பலம்! என் பலம் அதைவிட. இருட்டற வேளை. சத்தம் போட்டா கேக்கறதுக்கு சூரியன் கூட இல்லை. குடம் உருண்டுது. முள் குத்தித்து. பருத்தி கிழிஞ்சது. நான் வருத்தப்பட்டேன்.’



‘யாருக்கும் பிரியமில்லை.எனக்கும் பிரியமில்லை. அந்த ஒரு பலவந்தம் என் பாதையையே திருப்பிடுச்சி. என்ன என்னவோ சொன்னேன். பேசாம குடத்தை எடுத்துக்கிட்டா. முகத்தை துடைச்சுக் கிட்டா. நடந்தா. பத்தடிக்கப்புறம் ஓடினா’


‘அவ போய் அவ அப்பங்கிட்ட சொல்லியிருக்கா. அவன் வருஷம் வருஷமா எனக்கு அடிபணிஞ்சவன். என்னை எதிர்க்காதவன்.’


‘ராத்திரி எட்டு மணிக்கு வீட்டு வாசலுக்கு வந்து சத்தம் போட்டான். கூட ரெண்டு மூணு ஆளுங்க கம்பும் கழியுமா வந்து சுழட்டினாங்க. அதிலே ஒருத்தன் தமிழ்ப்புலவன். ‘ஒரு தமிழ்ப் பெண்ணின் கற்பை அழிச்சுட்டீங்களே!யாம். மறியல் பண்ணினாங்க. நான் பெரியசாமியைப் பின்பக்கமா அனுப்பிச்சு, போலீஸ்காரங்களை வரவழைச்சு அவங்களைக் கலைக்கச் சொன்னேன். குச்சியைச் சுழட்டினதும் போய்ட்டாங்க…தம்பி, போர் அடிக்குதா?’



‘இல்லை…இல்லை…தயவு செய்து தொடருங்க’ என்றேன்.


‘தம்பி, கற்பு,காதல்-இந்த மாதிரி வார்த்தைகளையெல்லாம் பத்தி நீ என்ன நினைக்கிறே?’


‘நீங்க என்ன நினைக்கிறீங்க?’



‘அந்த சண்முகம் பய பேசாம வந்து சமரசமா, ‘முதலாளி, நீங்க என் பெண்ணுக்கு இப்படி செஞ்சது நியாயமா?’ன்னு கேட்டிருந்தா, ஒரு வேளை அப்பவே அந்தப் பெண்ணைக் கல்யாணம் செஞ்சிருப்பேன். அப்ப அவ கற்பு ‘ஸேல்’ ஆயிடறது. அதாவது வயக்காட்டிலே நேராமல் மேளம் கொட்டி தேக்கு மரக் கட்டிலிலே நடந்தா கற்பு காப்பாத்தப்படுகிறது. இல்லேன்னா, அந்த செயலுக்கு வெறி,காமம்னு பேரு…அதே பெண் எம்.ஜி.ஆர், சிவாஜி படத்தைப் பார்த்துட்டு ஒத்த வயசு வாலிபனோட வயக்காட்டுப் பக்கம் ஒதுங்கினா காதல், அதைப் பத்திப் பாட்டு பாடலாம். ஒசத்தியா எழுதலாம். இல்லையா?’



‘அதுவும் ஒரு அபிப்ராயம்தாங்க’



‘மறியல் செஞ்சாங்க. ஒழிக ஒழிக சத்தம் போட்டாங்க. எனக்கு வெறுப்பு ஏறிப்போச்சு. இந்தச் சண்டை பெரிசாப் போச்சு. பண்ணை ஆளுங்க பல பேர் ஒரு கட்சியா கூடிக்கிட்டாங்க. அவங்களுக்கு அந்தச் சம்பவம் ஒரு சாக்கு. அவங்களைத் தூண்டிவிட்டவன் வேறு ஒருத்தன். என் பங்காளி, கோர்ட்டிலே தோத்துப்போனவன். இதாண்டா சமயம்னு சில்லறை ரௌடிப் பசங்க சில பேரையும் சேர்த்து அனுப்பி மறுநாள் ராத்திரி களத்துல தீ வச்சுட்டாங்க.

எவ்வளவோ பேர் சாப்பிடற நெல்லு…கருகிப் போச்சு. எனக்கு ரத்தத்திலே சூடேறிப்போச்சு. பார்த்தேன். அவங்களுக்கு சோதாப் பசங்க கிடைச்சா எனக்கும் கிடைக்க மாட்டாங்களா? அதுவும் பணம் என் பக்கத்திலே இருக்கு. ஆளுகளை விட்டு அந்த ஷண்முகத்தையும்-அதான் அந்த பொண்ணோட அப்பன், ஜெயராஜ்னு இன்னொருத்தன் அவனையும் ஒண்ணுலே ரெண்டு தீர்த்துட்டு வாங்கடான்னு சொல்லிட்டு, மெட்ராஸ் போய்ட்டேன். அந்தப் பசங்க குடுத்த காசுக்கு கொஞ்சம் அதிகமாகவே அடிச்சுப் பிட்டாங்க.



ஷண்முகம் ரத்த சேதம் ஜாஸ்தியாகி ஒரு வாரத்திலே ஆஸ்பத்திரியிலேயே காலமாய்ட்டான். செத்தே போய்ட்டான். பெரியசாமி ரயிலேறி வந்து என்கிட்டே சொல்றான். எனக்கு திக்குனு போச்சு. பண்ணை பூரா சூறையாடறாங்க. போலீஸ் கேஸ், அது இதுன்னு ரகளையாப் போச்சு…’


‘போலீஸ்லே கேஸ் பதிவாச்சு. ஷண்முகத்தை அடிச்சவனைப் பார்த்தவன் யாருமில்ல. நான் ஊரிலே இல்லை. ஜெயராஜ் காட்டிக் கொடுத்த ஆளைக் கைது செஞ்சாங்க. வக்கீல் பிச்சு உதறிப்பிட்டான். கேஸ் தள்ளுபடியாச்சு. ஒண்ணும் நடக்கலை. விரோதமும், நெருப்பும், அனாவசிய மரணமும்தான் மிச்சம். பார்த்தேன்.



இந்தப் பண்ணையை இனிமே நாம் ஒழுங்கா நடத்த முடியாதுன்னு ஒரே நாள்ல எல்லாத்தையும் சப்ஜாடா வித்தேன். அத்தனை ஏக்கராவையும் வித்தேன். ஊரையே விட்டுட்டேன். எங்கே போறேன்னு சொல்லலே. ஜில்லா மாறினேன். நடுநடுவே மெட்ராஸ் வந்து கொஞ்சம் பல்லாவரத்திலே ஜல்லி அடிச்சுப் பாத்தேன். சரிப்பட்டு வரலை. டயர் ரிட்ரெடிங் எடுத்தேன். அதுவும் தோல்வி. அப்புறம் லாரி வாங்கி ஓட்டினேன். ம்ஹூம்..எனக்கு ஏத்தது பூமிதான்னு வேற ஜில்லாவிலே-‘லாண்ட் ரிஃபார்ம்’ வந்துவிட்டது


-அதனாலே கொஞ்சமா நிலம் வாங்கி சொந்தமா தனியா மத்த ஜனங்க வாசனை இல்லாம நடத்தறேன். முதல்லே முள்கம்பி போட்டேன். கூர்க்காவை வச்சேன். நாயை வாங்கினேன். டிராக்டரை வாங்கினேன். ரொம்ப தனியா இருக்கேன். நிம்மதி. ஒரு பெண்ணை கட்டிட்டு வாழறதுக்கு பதிலா மண்ணை உழலாம்’ என்றார்.


சிரித்தேன். வெளியே பார்த்தேன். மிகத் தனியாகத்தான் இருந்தோம். வெகு தூரத்தில்-வெகு தூரத்தில் அந்த வேலியோரம் இருந்தது.



நான் கேட்டேன்.’அப்புறம் அந்தப் பெண் என்ன ஆனாள்?’



‘தெரியாது. அப்பன்தான் அடிபட்டு செத்தான் பைத்தியக்காரத்தனமா. அவனுக்கு அந்தப் பெண்ணும் ஒரு பையனும். பையன் பட்டணத்திலே படிச்சிட்டிருந்தான். அந்தப் பையன் நான் பார்த்ததில்லே. அவ தம்பிக்காரனோட பட்டணத்துக்குப் போயிட்டா. அவளுக்கு கல்யாணமே ஆகலே. வாத்யாராய் இருக்கான்னு கேள்விப்பட்டேன். எப்ப? அப்ப. அவ தம்பிக்காரன் ஒருத்தன் இருக்கானே, அவன் எனக்கு ஒரு லட்டர் எழுதினான். கன்னாபின்னான்னு ‘உன்னை ஜில்லா ஜில்லாவா துரத்தி வந்து பழிவாங்கப் போறேன்னு…எனக்காக காத்திரு’ அப்படி இப்படின்னு….அவன் பேர் கூட நாகராஜனோ என்னவோ…’


‘நடராஜன்’ என்றேன்.


‘ஆ! நடராஜன், நடராஜன்! உனக்கெப்படித் தெரியும்?’



‘நான்தான் நடராஜன்’என்றேன்.


நன்றி - மாயன் - அகமும் ,புறமும்  அண்ட் உயிர் மெய் பதிப்பகம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtYQSE9DSbfbiFWu7N13Aj1Tl286LCLSFAwdPsahw38wAFh0V1NYInAGhEM4FHhVSmwA2P5c6CQnGZS829ZPomgd4VRCJ72AE8oBVDSWx8bjt4lom2a2ETBKGc6uvOISydlnxF82q3rUJB/s320/writer+sujatha+family+1.jpg A

டிஸ்கி -
மாதந்தோறும் ஒரு பதிவருக்கு பரிசு வழங்குவது என்பதைதிரட்டி உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறது
.
திரட்டியில் பதிவுகளை இணைத்திடுங்கள். அத்துடன் http://www.hotlinksin.com
 திரட்டிக்கு லிங்க் தருவதற்கான கோடிங்கை உங்கள் சைடு பாரில் இணைத்துவிடுங்கள்.
------------------------------------
http://www.hotlinksin.com/
" target="_blank">More than a Blog Aggregatorhttp://hotlinksin.com/advt/hotlinksin_link.jpg
"/>a>