Showing posts with label THRILLER. Show all posts
Showing posts with label THRILLER. Show all posts

Monday, July 23, 2012

நயாகரா-சுஜாதா - சிறுகதை

http://www.kirukkal.com/images/sujatha_OEA_old_1.jpg 

எனக்கும் நீர் வீழ்ச்சிகளுக்கும் அவ்வளவாக ஒத்துப்போவதில்லை. பாண தீர்த்தத்தில் ஒரு முறை தடுக்கி விழுந்து, தாமிரபரணியில் சேர்ந்துகொள்ள இருந்தேன். அதே போல், ஒகனேக்கலில் பாசி வழுக்கி காவிரியில் கலக்க இருந்தேன். அப்புறம் அகஸ்தியர் ஃபால்ஸில்… எதற்கு விவரம்? நீ.வீக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது என்கிற சினே ரியோ புரிந்தால் சரி. வீழ்ச்சியைக் கண்டாலே எனக்கு ஞமஙம என்று மூக்கில் உறுத்தும். அடுத்த பஸ்ஸைப் பிடிப்பதற்குள் ஜலதோஷம் பிடித்துக்கொண்டுவிடும்.



இருந்தாலும் அமெரிக்காவுக்குப் போய் நயாகராவைப் பார்க்காமல் வந்தால்,

1. ஜன்மம் சாபல்யம் அடையாது.

2. திரும்பி வந்ததும் ஜனங்கள் வெறுப்பேற்றும் (”என்ன சார் அவ்வளவு தூரம் போயிட்டு நயாகரா பார்க்கலை… உச்… உச்… உச்” எக்ஸெட்ரா).

எனவே, நயாகரா பார்க்கச் சென்றோம்.

அமெரிக்காவில் நகரங்களைச் சுற்றிப் பார்க்க வசதியாக எங்களிடம் ஒரு ‘ஸீ யு.எஸ்.ஏ.’ ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸின் டிக்கெட் இருந்தது. ரொம்ப சல்லிசான டிக்கெட். அதை வைத்துக்கொண்டு அந்த கம்பெனியின் ஏரோப்ளேனில் ஏறிக்கொண்டு எங்கே வேண்டுமானாலும் போகலாம், புறப்பட்ட இடத்துக்குத் திரும்ப வராத வரையில். ‘பரவாயில்லையே’ என்று வியக்காதீர்கள். இந்தச் சுதந்திர சீட்டில் ஒரே ஒரு சிக்கல். பெரும்பாலான ஃப்ளைட்டுகளுக்கு அட்லாண்டா போய்த்தான் போக வேண்டும்.

உதாரணம் நியூயார்க்கிலிருந்து பஃபலோ போவதற்கு, நியூயார்க் அட்லாண்டா, அட்லாண்டா பஃபலோ என்ற ரூட்டில்தான் போக முடியும். இது சென்னையிலிருந்து பெங்களூரு போக, சென்னை டெல்லி, டெல்லி பெங்களூரு போகிற மாதிரி! எனவே அவர்கள் ஒன்றும் சும்மா கொடுத்துவிடவில்லை என்பது உங்களுக்குத் தெள்ளென விளங்கும் (‘தெள்’ என்றால் என்ன?) எனவே பத்து நகரங்களைப் பார்ப்பதற்குள் எத்தனை முறை அட்லாண்டா பார்த்திருப்போம் என்று நீங்கள் சுலபமாகக் கணக்கிட்டுக்கொள்ளலாம். அட்லாண்டா விமான நிலையத்தில் சிப்பந்திகள் அனைவரும். ”என்ன அண்ணா, மறுபடியும் வந்துட்டேளா” என்று விசாரிக்கும் அளவுக்குப் பரிச்சயமாகிவிட்டார்கள்.


நான் சொல்ல வந்தது நயாகரா பற்றி அல்லவா? நயாகராவுக்கு பஃபலோதான் விமான நிலையம். அங்கே போக வழக்கம் போல அட்லாண்டா விமான நிலையத்தில் காத்திருந்தபோது, பொடி நடையாகப் போய் ஒரு காபி சாப்பிட்டு வரலாம் என்று சென்று திரும்பியபோது, என் மனைவியின் அருகில் இரண்டு இந்தியர்கள் உட்கார்ந்துகொண்டு கையைத் தீவிரமாக ஆட்டிப் பேசிக்கொண்டு இருந்தார்கள். கிட்டே போனதில், ஒருவர் பிஸ்வாஸ். மற்றவர் சின்ஹா. பெங்காலிக்காரர்கள்.


இந்தியர்கள் எந்த மாநிலத்தவர்கள் என்று கண்டுபிடிக்க அவர்கள் ஒரு வாக்கியம் இங்கிலீஷ் பேசினால் போதும். மலையாளியை காலேஜ் என்று சொல்லச் சொன்னால் மதி. பெங்காலிகள் போல்ட்டை வோல்ட் என்றும் வோல்ட்டை போல்ட்* என்றும் சொல்லுவார்கள். எல்லாப் பெயருக்கும் ஓகாரம் சேர்த்துக்கொண்டு, ரங்கராஜன் என்பதை ரொங்கொரோஜன் என்பர்.

பிஸ்வாஸ், கல்கத்தாவில்ரொம்ப பிஸியான சர்ஜன் என்று தெரியவந்தது. சின்ஹா, மெட்டலர்ஜிஸ்டோ என்னவோ. இருவரும் லண்டனில் சந்தித்துக் கூட்டணி அமைத்துக்கொண்டு அமெரிக்கா வந்திருக்கிறார்கள். எங்களைப் போலவே இடங்களைச் சுற்றிப் பார்க்க ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் டிக்கெட் கைவசம் வைத்திருந்தார்கள். அதைப்பற்றிக் கேட்டபோது, ”சே! டிக்கெட்டா இது! அட்லாண்டா அட்லாண்டா!” என்றனர். ரொம்ப நொந்து போயிருந்தார்கள். சக சோகத்தால் சினேகிதமாகிவிட்டோம். இப்போது நயாகரா பார்க்க பஃபலோ போகிறோம் எனக் கேட்டதும் சந்தோஷப்பட்டு எங்களை ஆட்கொண்டு. ”கவலைப்படாதே. நாம் எல்லோரும் சேர்ந்தாற் போலப் போகலாம்” என்றனர். என் மனைவியும் ஒப்புக்கொள்ள, எனக்கு வயிற்றைக் கலக்கியது.


எனக்குத் தெரிந்த பெங்காலி நண்பர்கள் எல்லோரும் நல்லவர்களே. அவர்கள் சரோட் வாசிப்பார்கள். பிரிட்ஜ் ஆடுவார்கள். கவிதை எழுதுவார்கள். சங்கீதம், நடனம் எல்லாம் சரிதான். ஆனால், சுலபத்தில் கோபித்துக்கொண்டுவிடுவார்கள். கொல்கத்தாவில் ஒரு பெங்காலி நண்பருடன் பார்ட்னராக பிரிட்ஜ் ஆடிக்கொண்டு இருக்கும்போது, நாலு ஸ்பேடை டபிள் பண்ணி ஆயிரத்து இருநூறு பாயின்ட் கொடுத்துவிட்டேன் என்று, என் மேல் பெஞ்சு நாற்காலியை வீசினார். அதனால் இந்த பெங்காலி தமிழ் நட்பு, நயாகரா வரை தாங்குமா என்பது சந்தேகமாகத்தான் இருந்தது. மேலும் அவர்கள் இரண்டு பேருக்குள்ளேயே உறவு அவ்வளவு பேப்பரில் போடும்படியாக இல்லை. சிநேகிதம் மெல்லிய கண்ணாடி போலிருந்தது. பிஸ்வாஸ் எதையாவது சொன்னால் அதற்கு நேர்மாறாக சின்ஹா சொல்ல, முணுக்கென்று சண்டை வந்துவிடும். சீ! நீ ஒரு மனுஷனா என்கிற தொனியிலே பெங்காலியில் ‘கீ!’ ‘கீ!’ என்று மூக்குக்கு மூக்கு தொட்டுக்கொண்டு எதிர்ப் பேச்சு துவங்கிவிடும்.

இருந்தும் இரண்டு பேரும் வலுக்கட்டாயமாக எங்கள் தோழமையை நாட, அவர்களுடன் சேர்ந்துகொண்டோம். ப்ளேனில் நாலு பேரும் வரிசையாக உட்கார்ந்துகொண்டோம். என் மனைவியிடம் சின்ஹா, ‘என்ன என்ன வாங்கினாய்’ என்று விசாரிக்க, நான் எழுத்தாளன் என்றதும் ‘சுனில் கங்குலியைத் தெரியுமோ?’ என்று பிஸ்வாஸ் கேட்க, ‘நான் தெரியாது’ என்று சொல்ல, நீ என்ன எழுத்தாளன் என்கிற மாதிரி பார்த்தார். பத்து நிமிஷத்துக்குப் பேசவில்லை. இவர்களிடமிருந்து பஃபலோவில் இறங்கின மாத்திரம் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்கிற தீர்மானம் வந்துவிட்டது.


இறங்கினவுடன், ‘வா’ என்று மனைவியைக் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு பாகேஜ் செக்குக்கு ஓடிப் போய் சடுதியில் பெட்டி படுக்கைகளை விடுவித்துக்கொண்டு கலர் கலராக நகரத்துக்குப் போகும் பஸ்சுக்குக் காத்திருக்க, என் பின்னாலேயே, ”ரொங்கொரோஜன்!”

”ஓ, ஹலோ மிஸ்டர் பிஸ்வாஸ்! ஐ வாஸ் லுக்கிங் ஃபார் யூ!”

”ஓட்டல் ஏற்பாடு பண்ணிவிட்டேன்.”

”அப்படியா சந்தோஷம்… ஸீ யூ!”

”உங்கள் இருவருக்கும் சேர்த்துத்தான்!”

”வாடகை ஒரு வேளை அதிகம் இருக்கப் போகிறது. நாங்கள்…”

”வாடகை பதினஞ்சு டாலர்!”

பதினைந்து டாலர் என்பது அமெரிக்காவில் ரொம்ப சீப். ”ஊருக்கு வெளியே இருக்குமோ என்னவோ?”

”சேச்சே! நயாகராவிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கிறதாம்!”

”சன்னலைத் திறந்தால் நயாகரா தெரியுமாம்” என்றார் சின்ஹா. என்னால் நம்ப முடியவில்லை.

”ஓட்டல் பேர் என்ன?”

கார்டைக் காட்டினான். ”இந்த பஸ் போகிற வழியில் இறக்கிவிடுமாம். டிரைவர்தான் சொன்னான். அமெரிக்காவில் கொஞ்சம் தீர விசாரித்தால் செலவு இல்லாத இடம் கிடைக்கும்.”

நான் என் மனைவியைப் பார்க்க அவள், ”அங்கேயே போகலாம்” என்றாள்.

”வாருங்கள். எதற்கு முப்பது டாலரும் நாற்பது டாலரும் கொடுக்க வேண்டும்?” என்றார் பிஸ்வாஸ். பஸ்ஸில் ஏறினோம். பிஸ்வாஸ், சின்ஹா, நான், மனைவி என்ற நாலு பேரும் இ.பிரியாத நண்பர்கள் போல உட்கார்ந்துகொள்ள, ‘பஸ் டிக்கெட் நான்தான் வாங்குவேன், நான்தான் வாங்குவேன்’ என்று சண்டை போட்டு டிக்கெட் ஐந்து டாலர் என்று தெரிந்ததும், ‘ஓட்டல் போய் செட்டில் பண்ணிடலாம்” என்றார்கள்.


பஃபலோ நகரம் பிழைப்பதே நயாகராவுக்கு வரும் டூரிஸ்ட்டு களால்தான். எங்கு திரும்பினாலும் நயாகராவுக்கு வழி போட்டிருந்தது. பஸ் வெண்ணெய் போலச் செல்ல, தூரத்திலிருந்தே நீர்வீழ்ச்சி சுந்தரமாகத் தெரிய ஆரம்பித்து விட்டது. அங்கங்கே ஒளிந்துகொண்டு மறுபடி மறுபடி எட்டிப் பார்த்தது. நயாகரா, கனடா அமெரிக்க எல்லையில் இருப்பது உங்களில் ஜியாக்ரஃபி தெரிந்தவருக்குத் தெரிந்திருக்கும். கனடா சைடிலிருந்து பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கேள்வி. எங்களிடம் கனடியன் விசா இல்லை. அதற்கு மனுப் போடாமலிருந்தது என் மனைவிக்குக் குறை. ஷேக்ஸ்பியரின் ரோஜா போல, ஒரு நீர்வீழ்ச்சியை கனடாவிலிருந்து பார்த்தாலும் அமெரிக்காவிலிருந்து பார்த்தாலும் அது நீர்வீழ்ச்சிதான் என்பது என் சித்தாந்தம். பிஸ்வாஸைக் கேட்டேன், ”கனடியன் விசா இருக்கிறதா?”

”இல்லை. ஆனால், தற்காலிகமாக விசா தருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.”

”நான் கேள்விப்பட்டது, அதெல்லாம் கிடையாது. ஒரு வாரம் முந்தி மனுப் போட்டால்தான் கிடைக்கும் என்று.”

”கேட்டுப் பார்க்கலாம்! கொடுக்காமல் போய்விடுகிறார்களா, பார்த்துவிடலாம்.”

பஸ் டிரைவர் சிரித்துக்கொண்டே நால்வரையும் இறக்கிவிட்டு, ”அதோ பார் ஓட்டல்” என்று காட்டிவிட்டு விலகினான்.




http://newspaper.li/static/a5cfc9e0b3215237028ce0de10e3bf35.jpg

பிரமாதமாகத்தான் இருந்தது ஓட்டல் கட்டடம், சொன்னதெல்லாம் சரிதான். நயாகரா நீர்விழ்ச்சி அருகிலேயே இருப்பது தெரிந்தது. என்னால் நம்ப முடியவில்லை. ”பிஸ்வாஸ் நீங்கள் சரியாகக் கேட்டுக்கொண்டீர்களா? தினத்துக்குப் பதினைந்து டாலர் சொன்னானா? மணிக்கு பதினைந்து டாலரா?”

”தினத்துக்குத்தான். நீ வாயேன்” என்றார்.

அந்தப் பளபளப்பான ஓட்டல் கட்டடத்தில் போய் விசாரித்ததில் நாங்கள் தேடிச் சென்ற ந்யூ மெட்ரோ அதில்லை என்றும் அதற்கு அடுத்த கட்டடம் என்றும் தெரிய வந்தது.

”அடுத்த கட்டடமா? கட்டடமில்லையே! காலி மனையல்லவா இருக்கிறது?”

‘உன்னிப்பாகப் பாருங்கள் தெரியும்.”

பார்த்ததில் சின்னதாக ஒரு அமெரிக்கக் குடிசை போல ஒரு கட்டடம் தெரிந்தது. அதன் மூஞ்சியையே மறைக்குமாறு ‘ஓட்டல் மெட்ரோ வேகன்ஸி’ என்று சாக்பீஸில் எழுதியிருந்தது. அருகே சென்று பார்த்ததில் ஒற்றை மாடியுடன் மே ஃபிளவர் தினங்களில் கட்டிய கட்டடம் போல ஒன்று தெரிந்தது. வாயிற் கதவில் மணிப் பொத்தான் இருந்தது. அழுத்தியதில் சப்தம் வரவில்லை. கதவைத் தட்டினதில் லேசாகப் பொடி தூவித் திறந்துகொண்டது. உள்ளே டெலிவிஷன் அருகில் படுத்திருந்த நாய் என்னை ஒற்றைக் கண்ணால் பார்த்தது. இதுதான் ஓனரோ என்ற சந்தேகம் உடனே தீர்ந்தது. சுமார் எண்பது வயசு மதிக்கத்தக்க ஒரு கிழவர் மூக்கைத் தக்காளி நிறத்துக்குத் தேய்த்துக்கொண்டு வந்தார்.


”இங்கே ரூம் இருப்பதாக..?”

‘ட்வென்டி டாலர்ஸ்!”

”பஸ் டிரைவர் பதினைந்து என்று சொன்னான்.”

”ஓ.கே, ஃபிஃப்டீன்டாலர்ஸ்!” என்று ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து விரைவில் பதினைந்து பதினைந்து டாலருக்கு இரண்டு ரசீது எழுதி, ”ஐ டேக் அட்வான்ஸ்” என்றார்.

”ரூமைப் பர்க்கலாமா” என்றார் சின்ஹா.

”குட் ரூம், பே ஃபிஃப்டீன் டாலர்ஸ்.”

அட்வான்ஸாகப் பதினைந்து டாலர் கொடுத்துவிட்டு, எங்கள் இருவருக்கும் கொடுக்கப்பட்ட அறையை நோக்கிப் போனோம். சாவியைத் துவாரத்தில் தொடுவதற்கு முன்னமேயே கதவு திறந்துகொண்டது. உள்ளே ரூமை ஏழில் எட்டு பாகம் ஒரு கட்டில் அடைத்திருந்தது. குட்டியாக மேசை போட்டு, அதன் மேல் மேசை விளக்கு வைத்திருந்தது. உத்தரத்தில் இருந்த விளக்கைப் போடுவதற்கு ஸ்விட்சுடன் ஒரு கயிறு கட்டியிருந்தது. அதை இழுத்துப் பார்த்ததில், மாடியில் தடால் என்று உருண்ட சப்தம் கேட்டது.
பிஸ்வாஸ் என் அறையை எட்டிப் பார்த்து, ”உன் அறையும் இப்படித்தானா? ரொம்ப மோசம், இதற்குப் போய் பதினைந்து டாலரா? வழிப்பறி. கிழவனிடம் போய்ப் பணத்தைக் கேட்டு வேறு ஓட்டலுக்குப் போகலாம்” என்றார்.

”பாத்ரூம் எங்கே இருக்கிறது?” என்று என் மனைவி கேட்க, அந்த ஓட்டலில் தங்குபவர்கள் அத்தனை பேருக்கும், கிழவனுக்கும், நாய்க்கும் சேர்த்து ஒரே ஒரு பாத்ரூம்தான் என்பது தெரிய வந்தத
ு.
”வேண்டாம். வேறு இடத்துக்குப் போய்விடலாம்” என்றான் பிஸ்வாஸ்.

”நீதானே இங்கே அழைத்து வந்தாய்” என்றார் சின்ஹா.

”நீதான் பதினைந்து டாலரில் அறை வேண்டும் என்றாய்” என்றார் பிஸ். ‘நீதான் நீதான்…’ என்று இரண்டு பேரும் அடிதடிக்கு வந்துவிட்டார்கள். இடம் போதவில்லை.

”இது என்ன சோப்பா, மெழுகுவத்தியா?” என்று டேபிள் விளக்கை சின்ஹா போட்டுப் பார்க்க, ‘ஊய்’ என்று ஷாக் அடித்து விளக்கிலிருந்து பிசுபிசு என்று புகை வந்தது. விளக்கின் அடியில் ”டோண்ட் ஸ்விட்ச் ஆன்” என்று எழுதியிருந்தது. ”அமெரிக்காவில்கூட இந்த மாதிரி ஓட்டல் இருக்கிறது ஆச்சர்யம்தான்” என்றேன்.

”எங்கே அந்தக் கிழவன்?” என்று கீழே போய் விசாரிக்கப் போன பிஸ்வாஸ் உடனே திரும்பிவிட்டார். ”நாய் துரத்தறது” என்றார்.

”பதினைந்து டாலர் கொடுத்தாகிவிட்டது. ராத்திரி படுக்க மட்டும்தான் இந்த இடம்! என்ன போச்சு? முகம் கழுவிக்கொண்டு வாருங்கள். நயாகரா போய்ப் பார்க்கலாம்” என்றேன்.

நாய் போனதும் சின்ஹா பாத்ரூம் போய்விட்டார். கால்மணி கழித்து பிஸ்வாஸ் பாத்ரூம் வாசலில் காத்திருப்பது தெரிந்தது. ”இந்த ஆள் எப்போதும் இப்படித்தான். பாத்ரூம் போனால் ஒரு மணி நேரம்!” என்றார்.



http://image.shutterstock.com/display_pic_with_logo/205801/205801,1215720645,5/stock-photo-edge-of-niagara-falls-in-winter-14743486.jpg

”சேச்சே ! இவ்வளவு மோசம் என்று தெரியாமல் போய்விட்டது. ராஸ்கல் அந்த டிரைவரை உதைக்க வேண்டும். சின்ஹா! என்ன தூங்கிவிட்டாயா!”
அவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று என் மனைவியை அவசரப்படுத்தி, வேறு ரூட்டாக நடந்து போய் நயாகரா பார்க்கச் சென்றோம். அங்கே நயாகராவின் அடிமடிக்கே அழைத்துப் போகும் படகுக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு க்யூவில் போய் நின்றால், ”ரொங்கோ ரோஜன்” என்று கேட்க பின்னால் சின்ஹாவும் பிஸ்வாசும்!


நயாகராவில் எத்தனை காலன் ஒரு நிமிஷத்துக்கு ஊற்றுகிறது. எத்தனை மெகா வாட் சக்தி பண்ணுகிறார்கள், எத்தனை அழகு என்றெல்லாம் விவரம் கொடுத்து உங்களை அறுக்க விரும்பவில்லை. நயாகராவில் எனக்குப் பிடித்தது படகு அதன் அடியில் செல்லும்போது ஆரவாரமும் நம்மேல் படரும் குளிர் மழையும்தான். இந்தக் குளிர் மழையில் சின்ஹாவை பிஸ்வாசும், பிஸ்ஸை சின்னும் படம் பிடிக்க, காமிரா லென்ஸ் முழுவதும் நீர் கோத்துக்கொண்டுவிட, ‘சொன்னேன். கேட்டாயா?’ என்று நயாகராவைவிடச் சத்தமாக சண்டை போட்டுக்கொண்டே வந்தார்கள். படகைவிட்டு மேலே வந்து நாங்கள் கழன்றுகொள்ள விருப்பப்பட, ”வா கனடா பகுதிக்கு நடந்து போகலாம்” என்றார் பிஸ்வாஸ். ”வேண்டாம் விசா கொடுக்க மாட்டார்கள்” என்று சொல்ல, ”யார் சொன்னது? பாஸ்போர்ட்டுகளை சரண்டர் பண்ணிவிட்டால் ஒரு மணி நேரத்துக்கு அனுமதி கொடுப்பார்கள். அங்கேயிருந்து பார்ப்பதுதான் உத்தமம்” என்றார்.


நிஜமாகவே இங்கிருந்து தெரிந்த கனடியப் பகுதி கலகலப்பாகத்தான் இருந்தது. வ்யூவிங் டவர், வண்ண வண்ண விளக்குகள், ஜிலுஜிலுப்பு எல்லாமாக ஆசை காட்டியது. போய்த்தான் பார்க்கலாமே என்று பாலத்தைக் கடந்து கனடியப் பகுதிக்குச் சென்றோம். வாட்டசாட்டமாக ஒரு போலீஸ்காரி, ”லெட் மி ஸீ யுவர் பாஸ்போர்ட்ஸ்” என்றாள். ஆளுக்கு ஐந்து சென்ட் வாங்கிக்கொண்டாள். ”இங்கே நில்லுங்கள் பிஸ்வாஸ்” என்று பவ்யமாகச் சொன்னாள். ‘பார்த்தாயா!’ என்று என்னைப் பார்த்து கண்ணடித்தார். காத்திருந்தோம். அந்தப் பெண் மற்றொரு அதிகாரியைக் கொண்டுவந்து எங்களைச் சுட்டிக்காட்டினாள். பற்பல அமெரிக்கர்கள் உற்சாகமாக லைனைக் கடந்து சென்றுகொண்டிருக்க, எங்கள் நாலு பேரை மட்டும் தண்டையார்பேட்டை ஐ.டி. ஆஸ்பத்திரியில் போல் ஒதுக்கி வைத்திருந்தார்கள். மற்றொரு வெள்ளைகார ஆபீஸர் வந்து இடது கையால் எங்கள் பெயர்களை ஒரு ஃபாரத்தில் எழுதி நிரப்பி, ”விசா இல்லை. அது இல்லாமல் கனடிய மண்ணில் அனுமதி கிடையாது. திரும்ப அமெரிக்கா செல்லுங்கள்” என்றார்.

சின்ஹாவுக்குக் கோபம். ”எதற்காக எங்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்ல முடியுமா?”

”விசா இல்லை. அனுமதி இல்லை.”

”நாங்கள் இந்தியர்கள் என்பதால்தானே இந்த மாதிரி நடத்துகிறீர்கள்?”

”அதெல்லாம் இல்லை.”

”அமெரிக்கர்களை மட்டும் அனுமதிக்கிறீர்கள்?”

”அவர்களிடம் விசா இருக்கிறது.”

”எப்படித் தெரியும்?”

”எங்களுக்குத் தெரியும். பாருங்கள். அதிகம் வாதாடினால் உங்களைச் சிறைக்கு அனுப்புவோம்” என்று காகிதங்களை எங்களிடம் கொடுத்தார்.

”இந்தக் காகிதங்களை நயாகராவிலேயே போடுகிறோம்” என்று பிஸ்வாஸ் சிரித்தார்.

”அது உங்கள் இஷ்டம்! இந்தக் காகிதம் இல்லையென்றால் மறுபடி அமெரிக்காவில் அனுமதி கிடைக்காது. உங்கள் வாழ்நாளை இந்தப் பாலத்தின் மத்தியிலேயே கழிக்க விருப்பமென்றால் சரி.”
நான் அவசரமாகக் காகிதங்களை வாங்கி வைத்துக்கொண்டேன்.

சின்ஹா திரும்பும் வழியெல்லாம், ”இந்தியர்கள் என்றால் எவ்வளவு மட்டமாக ட்ரீட் பண்ணுகிறார்கள்” என்று அரற்றிக் கொண்டே வந்தார்.

”நாம் அந்த மாதிரி நடந்துகொள்கிறோம்” என்றார் பிஸ்வாஸ்.

”நாம் என்ன தப்பாக நடந்துகொண்டுவிட்டோம்?”

”இல்லீகல் இமிக்ரேஷன்.”

”அதைப் பற்றி உனக்கென்ன தெரியும்?”

”உனக்குத்தான் தெரியுமோ?”

இருவரும் கனடிய அமெரிக்க எல்லைக்கோட்டில் நின்று கொண்டு இரைச்சலாகச் சண்டை போட்டுக்கொண்டார்கள். கம்யூனிஸம், மார்க்ஸிஸம், விவேகானந்தா… என்று என்னென்னவோ வார்த்தைகள் எல்லாம் கேட்க, நான் மனைவியை அழைத்துக்கொண்டு விரைவாக நடக்க, சட்டென்று பிஸ்வாஸ், ”ரொங்கொரோஜன் எங்கே போகிறாய்?” என்று காலரைப் பிடித்து நிறுத்தினார். விதியே என்று நடந்து அமெரிக்கப் பகுதிக்கு வந்தோம்.

சின்ஹா தாகமாக இருக்கிறது என்று கோக்கோ கோலா மெஷினில் ஒரு ஐம்பது சென்ட் நாணயத்தைப் போட்டார். அமெரிக்காவில் இருந்த ஒரே ஒரு பழுதடைந்த கொக்கோ கோலா மெஷின் அது. காசை வாங்கிக்கொண்டு சும்மா இருந்தது.

சின்ஹா அதை அடித்து உதைத்து பற்பல சித்ரவதைகள் செய்து பார்த்தார். ஹ§ம்! போட்ட காசையோ, கோக்கோ கோலாவையோ தர மாட்டேன் என்று சொல்லிவிட்டது.

”அமெரிக்கர்கள் இத்தனை விஞ்ஞான முன்னேற்றம் அடைந்து என்ன பிரயோசனம்? ஒரு கோக்கோ கோலா மிஷினைச் சரியாக வைத்துக்கொள்ளத் தெரியவில்லையே!”

”உனக்கு ஒரு கோக்கோ கோலா கிடைக்கவில்லை என்றால் மேற்கத்திய நாகரிகத்தைச் சாடுவது என்ன நியாயம்?”

”இதெல்லாம் வைத்து என்ன பிரயோசனம்? ஒழுங்காக வைக்க வேண்டும், இல்லை மிஷின் வைக்கவே கூடாது.”

”இந்த ஒரு மிஷின் வேலை செய்யவில்லை. எத்தனை மிஷின் வேலை செய்திருக்கிறது அதாவது எத்தனை கோக் சாப்பிட்டிருக்கிறோம்.”

”தட்ஸ் நாட் தி பாயின்ட்.”

”தட் இஸ் தி பாயின்ட்!”

”நீ ஒரு பூர்ஷ்வா… அடிவருடி!”

”நீ ஒரு சிவப்பு எலி…”

யார் சிவப்பு எலியோ, இரண்டு பேருக்கும் முகம் சிவந்து போனதென்னவோ வாஸ்தவம்.

கம்யூனிஸம் காபிடலிஸம் என்று குடுமியைப் பிடித்துக் கொண்டிருக்கும் சமயம் நான் என் மனைவியின் கையைப் பிடித்து இழுத்து, ”வா ஓடலாம்!” என்றேன்.

அதிகாலை எழுந்து சொல்லாமல்கொள்ளாமல் பஸ் ஏறி திரும்ப ப்ளேன் பிடித்து, உட்கார்ந்ததும் பெருமூச்சுவிட்டேன்.

”அப்பாடா ஒழிஞ்சாங்க.”

”ரொங்கோரோஜன்!” என்று பின் ஸீட்டில் ஒரு குரல் கேட்டது!


http://www.niagarafallslive.com/images/HorseshoefromSkylon.jpg

Saturday, July 21, 2012

ஓர் உத்தம தினம்- சுஜாதா - லவ் & சஸ்பென்ஸ் - சிறுகதை

ஜன்னல் வழியாக ஆதவன் தலையெடுக்கும் முன்னமேயே புல் தரையில் சிறு குழந்தை தவழ்ந்து வருகிறது. களுக்கென்று சிரிக்கிறது. அதனால் நடக்க முடியுமா என்று கவலையாக இருக்கிறது. அதற்குப் பெயர் இருக்கிறது. பறந்து வந்து விளிம்பில் உட்கார்ந்துவிட்டு அறைக்குள் சிற்றடி வைத்து இறங்கி, அவளருகில் வந்து அவள் மார்பைச் சுதந்திரமாகத் திறந்துகொண்டு, ஏங்கி ஏங்கிப் பால் குடிக்க… அதன் சின்ன விரல்கள் அவள் முலையை நெருட… உள்ளுக்குள் திகட்டிய சந்தோஷத்தைக் கலைக்க விருப்பமின்றி இன்னும் இன்னும் என்று ஒரு விளிம்பைத் தொட்டு ஒரு கணத்தில் சகலமும் வெடித்துப் புலனாகி விழித்தபோது, ”நீங்களா?” என்றாள்.


சத்தீஷ் திருப்திப்பட்ட நிலையில் மல்லாந்து படுத்துக்கொண்டு புன்னகையுடன் தூக்கத்தின் இரண்டாம் பாகத்தைத் துவங்கினான். கஸ்தூரி தன் உடைகளை அவசரமாகச் சரிசெய்துகொண்டு எழுந்து, ஜன்னலைத் திறந்து சில்லென்ற காற்றிலும் சூரிய வெளிச்சத்திலும் முகத்தை அலம்பிக்கொண்டு திரும்பி நிதானமாகக் கணவனைப் பார்த்தாள்.


என் கனவில் புகுந்து என் கனவைக் கலைக்காமல் எனக்குள் நிரம்பிய என் கணவனே!


”எழுந்திருங்க” என்று தலையைக் கலைத்தாள். அவன் விழித்து அவளைப் பரிச்சயமே இல்லாத புதியவளைப் போலப் பார்த்துப் புன்னகைத்து, ”ஹேப்பி பர்த்டே தில்லு! ம்ம்ம்… உன்னை வாசனை பார்க்கணும், வா!” என்று கையை விரித்து விரல்களால் அழைத்தான்.


”ம்ஹ¨ம். நான் மாட்டேம்பா. எனக்கு எத்தனையோ வேலை இருக்கு.”


”ஒரு தேங்க்ஸ் முத்தம்கூடக் கிடையாதா?”

”கிடையாது.”

டெலிபோன் ஒலிக்க, அதைப் படுக்கையில் இருந்தே எடுத்து ஆன்டெனாவை நீட்டிக்கொண்டு, ”ஹலோ?” என்று அதட்டினான். சற்று நேரத்தில், ”உனக்குத்தான்” என்று கொடுத்தான்.


”என்ன எழுந்துட்டியா, ஹேப்பி பர்த்டே” மஞ்சுவின் குரலை டெலிபோன்கூட அசைக்க முடியாது.


”தேங்க்ஸ் மஞ்சு.”

”உனக்கு என்ன வயசுன்னு கேக்கலை. வயசு முக்கியமா என்ன? இந்த வருஷமாவது பெத்துண்டுடு. ரொம்பத் தள்ளிப் போடாதே.”


”மஞ்சு, இன்னிக்குக் காலையில என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு கனா கண்டேன். அதை உனக்கு விரிவா சொல்லியே ஆகணும். எப்ப வரே?”


”எப்ப வேணும்னாலும் வரேன். தில்லுவோட பர்த்டேக்கு வராம இருப்பேனா? உன் ஹஸ்பண்ட் என்ன பிளான் வெச்சிருக்கார்னு கேட்டுக்கோ.”

”அவருக்கென்ன… வழக்கம்போல் ஆபீஸ் போவார்.”

சத்தீஷ் படுக்கையிலிருந்தே, ”இல்லை… இல்லை… நாமிருவரும் வெளியே போறோம்” என்று ஜாடை காட்டினான்.

”மஞ்சு, அவர் எங்கேயோ வெளியே போகப் பிளான் வெச்சிருக்கார்.”

”ஆல் தி பெஸ்ட் தில்லு. போன் பண்ணிட்டு மத்யானம், சாயங்காலம், ராத்திரி எப்பவாவது ஒரு சமயம் வந்து உன் கன்னத்தில் முத்தம் கொடுத்துட்டுத்தான் போவேன். பை தில்லு! மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்!”

டெலிபோனை வைத்தபோது அது ‘டிரிரிக்’ என்றது பறவைபோல.

”மஞ்சுதானே! ஒழிஞ்சுதா?”

”சே! இன்னிக்கு யாரையும் திட்டக் கூடாது. அப்படிப்பட்ட நாள் இன்னிக்கு.”

அவளைப் பிடித்து இழுத்துக் கன்னத்தை உரசிக் கூந்தலுக்குள் கை செலுத்தி நிமிர்த்தி, ”ம், என்ன கனா? சொல்லு!” என்றான்.

”கையெடுங்க. சொல்றேன்.”

”எடுத்தாச்சு.”

”அந்தக் கை.”

”அதுபாட்டுக்கு அது. சொல்லு, என்ன கனா?”

”ஜன்னல் வழியா கிருஷ்ண விக்கிரகம் மாதிரி… ஐயோ, என்ன விஷமம்! நான் சொல்லமாட்டேன்.”

”சரி, இப்ப?” இடுப்பை வளைத்து அவளைத் தன்னிடம் இழுத்துக்கொண்டு முகத்துக்கு முகம் ஒரு இன்ச் பண்ணிக்கொண்டு ”ம், சொல்லு” என்று இழுத்தான்.

”ஜன்னல் வழியா தங்கக் கலர் குழந்தை வந்து அப்படியே எம் மேல படிஞ்சு உடம்பெல்லாம் முலாம் பூசினாப்ல குளுகுளுன்னு ஊர்றது.”

”மை டியர் தில்லு! அது குழந்தை இல்லை நானு! வி ஹேடு செக்ஸ்.”

”ச்சே! உங்களைப் போல எல்லாத்தையும் போட்டு உடைக்கிற ஆசாமி கிடையாது.”

இடுப்பின் உடைகளைத் தளர்த்தத் துவங்கவே, விஷயம் கவலைக்கிடமாகும் என்று கஸ்தூரி நழுவி எழுந்து பாத்ரூமுக்குச் சென்றாள்.


பல் தேய்த்து முகத்தில் தண்ணீர் தெளித்துக்கொள்ளும்போதும் உற்சாகம் மிச்சமிருந்தது. ஜன்னலைத் திறக்க வானம் மேகங்களற்று ‘விம்’ போட்டு அலம்பினாற் போல இருந்தது. கொன்றை மரத்தில் அந்த மாம்பழக் குருவியைப் பார்த்தாள். அவள் பிறந்த தினத்துக்கென்றே தனிப்பட்ட விஜயம் போல் தங்கத் தலையை வைத்துக்கொண்டு, ‘ச்சீயோ, ச்சீயோ’ என்று தேவதூதனைப் போலக் கூப்பிட வந்திருக்கிறது.

நடுவே, தெளிவாக அந்தக் குருவி அவளைத் ‘தில்லு’ என்று பெயர் சொல்லி அழைத்ததை கஸ்தூரி எல்லா கோயில்களிலும் சத்தியம் பண்ணுவாள். நிச்சயம் இன்றைக்குப் பிறந்த தினம்தான். எனக்கு மட்டுமில்லை. எனக்குள் உத்தரவாதமாகப் புகுந்திருக்கும் அதற்கும்தான்.

சத்தீசுக்குக் காபி போட்டுக்கொண்டு போர்வையை விலக்கி, அவன் தலையைக் கலைத்து, ”எழுந்திருங்க. ஆபீஸ் போக வேண்டாம்?” என்று கேட்டாள்.

”இன்னிக்கு ஆபீஸ் லீவு! உனக்குப் பிறந்த நாள் இல்லையா?”

”நாள் முழுக்க வீட்லயா இருக்கப் போறீங்க?”

”வீட்ல இருக்கலாம். வெளியவும் போகலாம். அல்லது ஏ.ஸி. போட்டுட்டுக் கட்டிண்டு படுத்துரலாம். இன்னிக்கு ராணி நீதான்.”

”கோயிலுக்குப் போயாகணும்.”

”ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு எம்.டி.ஆர். போகலாமா?”

”முதல்ல கோயில். அப்புறம்தான் பாக்கியெல்லாம். ஜெயநகர் போய் அம்மாவையும் சரண்யாவையும் பார்த்துட்டு வந்தே ஆகணும்.”

”சாயங்கால ஃப்ளைட்ல பம்பாய் போறதுக்குள்ளே முடிச்சிரணும்.”

”பாம்பே போறீங்களா? சொல்லவே இல்லையே?”

”போர்டு மீட்டிங். நாளன்னிக்கு மார்னிங் ஃப்ளைட்ல திரும்பி வந்துடுவேன்.”

புதுசாக கார், லாரி வாங்கினவர்கள் எல்லாம் பள்ளத்து பிள்ளையாருக்கு முன் வரிசையாகத் தத்தம் வாகனங்களை நிறுத்தியிருந்தார்கள். மல்லிகையும், அகர்பத்தியும், பட்டுப் புடவையும், இளங் காலையும், விபூதியும் கலந்து ஆரோக்கியமாக வாசனை அடித்தது. சத்தீஷ் பாசாங்கோடு மனைவியைக் கவனித்துக்கொண்டு இருந்தான். கஸ்தூரி வேண்டிக் கொண்டாள்.

”கடவுளே! ஏன் இத்தனை உத்தமமான தினம்?”

”இந்தாம்மா புஷ்பம்” என்று ஒரு சிறுவன் பளிச்சென்று திருநீறும் இந்த வயசுக்கு வேஷ்டியுமாக வந்து கொடுத்துச் சிரித்தான்.

பிளாட்ஃபாரத்தில் நடக்கையில், ”எல்லாமே நல்லபடியாக இருக்கு. காலங்கார்த்தால அந்தக் கனா, அந்தக் குருவி என்னைப் பேர் சொல்லிக் கூப்பிட்டது, இந்த அழகான பையன்….” என்று கூறினாள்.

”த பாரு, இன்னி முழுக்கவே இப்படித்தான். சொல்லிண்டிருக்கப் போறியா? மஞ்சள், குருவி, கிருஷ்ண விக்கிரகம், விநாயகர் பிரத்தியட்சம், இப்படி…?”

”நிச்சயம் எனக்கு இன்னிக்கு என்னமோ ஆயிருக்கு. உடம்பு பூரா பதர்றது.”

மாருதியில் ஏறிக்கொள்ள, ”தில்லு, உலகத்திலேயே ரொம்ப சுலபமான விஷயம் எது தெரியுமா?” என்று கேட்டான்.

”தெரியும், சொல்ல வேண்டாம்.”

”யு வான்ட் தி சைல்டு இல்லையா? வேணும்னா சந்தேகத்துக்கு சாம்பாரா வீட்டுக்குப் போய் இன்னுமொரு முறை ஊர்ஜிதம் பண்ணிரலாமா?”

”சே, புத்தி போறதே!”

ஜெயநகரில் மணிப் பொத்தானை அழுத்தியபோது சத்தீஷ், ”இதோ பாரு! அரை மணி, அதுக்கு மேல் அரட்டை கிடையாது” என்று கிசுகிசுத்தான். கதவு திறக்க, ”ஹலோ, கர்னல்!”

அப்பாவைத் தாரிணியின் குழந்தைகள் உள்பட எல்லோரும் ‘கர்னல்’ என்றுதான் கூப்பிடுவார்கள்.


கஸ்தூரியைப் பார்த்ததும் கட்டிக்கொண்டு உச்சியில் முத்தம் கொடுத்து, ”ஓ மை ஸ்வீட் தில்லு, ஹேப்பி பர்த்டே” 


”தேங்க்யூ கர்னல்.”


”இங்கிலீஷ் தேதிப்படி லெவன்த் செப்டம்பர், இன்னிக்கு உனக்கு 25. நீ பிறந்தப்ப விஜயவாடா டூர் போயிருந்தேன் கிருஷ்ணா ரிவர்ல வெள்ளம் அதிகமாயி ரயில் எல்லாம் குளோஸ் பண்ணிட்டான். டக்கோடா ஃப்ளைட்டைப் பிடிச்சுக் காலங்கார்த்தால வந்துட்டேன். தில்லு டியர்! பெரி யாழ்வார் பாசுரம் சொல்லிண் டிருக்கியா?”

”தவறாம! தினம் பெரியாழ்வாருக்காகத்தானே நான் எழுந்திருக்கிறேன்” என்றான் சத்தீஷ்.

”தட்ஸ் மை கேர்ள். சின்ன வயசிலேயே நாலாயிரமும் ஒப்பிப்பா. மாப்பிள்ளை, இவ முழுப் பேர் கஸ்தூரி திலக்கா. நாங்க எல்லோரும் தில்லுன்னுதான் கூப்பிடுவோம். கஸ்தூரின்னு பேர் எப்படி வந்ததுன்னு தெரியுமா?”

”கர்னல் இதை என்கிட்டேயே முப்பது தடவை சொல்லியாச்சு” என்றான் சத்தீஷ்.

கஸ்தூரி, கணவனை முறைக்க… அவன் கடிகாரத்தைச் சுட்டிக் காட்டினான். ”வர்றோம் கர்னல்” என்றான்.

”சேச்சே, லஞ்ச் சாப்பிட்டுட்டுதான் போறீங்க!”

”தேர் கோஸ் மை எம்.டி.ஆர்.”

”அம்மா, நீங்க சும்மாருங்கோ. அவா வேற ஏதாவது பிளான் போட்டு வெச்சிருப்பா” என்று இடைமறித்தாள்.

அம்மா தனியாகக் கூப்பிட்டு, ”இன்னும் குளிக்கிறியா?” என்றாள்.

”ஆமாம்மா.”

”எல்லாம் போறும். அப்புறம் நாளாயிருந்துன்னா பிற்காலத்தில் வளர்க்கிறது கஷ்டம். இந்தப் புரட்டாசிக்கு இருபத்தஞ்சு முடிஞ்சுர்றது உனக்கு.”

அப்பா வந்து, ”தில்லு, மாப்பிள்ளை டூர் போறாராமே. இங்கே வந்து இரேன்?” என்றார்.

”இல்லைப்பா, ராத்திரி துணைக்கு வேலைக்காரப் பொண்ணு வரும். செக்யூரிட்டி இருக்கு. சௌக்கிதார் இருக்கான்.”

”எங்காத்திலெல்லாம் வந்து படுத்துப்பியா, ரிச் கேர்ள்.”

”அப்படி இல்லைப்பா. இவர் இல்லாதபோதுதான் வீட்டை ஒழிக்க முடியும்.” முக்கிய காரணம் அதில்லை. தனியாக வீடியோ பார்க்க வேண்டும் என்று தில்லு தீர்மானித்துவிட்டாள்.

ரேஸ் கோர்ஸ் வழியாக ஆபீசுக்கு வந்து பதினைந்து நிமிஷம் என்று சொல்லிவிட்டுச் சென்றான். பேண்ட் வாத்தியமும் பொய்க்கால் குதிரையுமாக கணேசா ஊர்வலம் ஏரியில் முங்குவதற்காக டெம்போவில் சென்றுகொண்டு இருக்க, பொய்க்கால் குதிரைக்காரன் கூலிங் கிளாசும், பொய்த் தாடியும், ஜிகினா ஜிப்பாவுமாக அவளைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போனான்.

சத்தீஷ் திரும்பி வந்து, ”முக்கியமா மூணு ஃபைல் பார்த்துட்டேன். ஏர் டிக்கெட் கன்ஃபார்ம் ஆயிடுத்து. சாயங்காலம் வரை நாம ஃப்ரீதான். எங்கே போகணும் சொல்லு?” என்றான்.

”எங்கேயாவது!”

”சரி லெட்ஸ் கோ டு ‘எங்கேயாவது’….”

ஸோஃபியா கான்வென்ட்டின் ஆரோக்கியமான ‘ஹன்’களும் கூட்டம் கூட்டமாகச் சட்டை அணிந்த ஆயிரம் உற்சாகப் பெண்களும்… நீச்சல் குளத்தில் உன்னதமாகக் குதித்த ஒரே இளைஞன். மரத்தடியில் டிராஃபிக் சந்தடியில் படுத்துத் தூங்கிக்கொண்டு இருந்த உழைப்பாளி. கீரை விற்றுக்கொண்டு இருந்த கறுப்புப் பெண்ணின் அருகில் சாக்கின் மேல் தூங்கிக்கொண்டிருந்த தேவதைக் குழந்தையின் அரைஞானில் முடிந்திருந்த தாயத்து. இந்த சுசுகியில் ஒரே மாதிரி ஜீன்ஸ் அணிந்து பையனும் பெண்ணும் எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள் என்னைப் போல…. என்னைப் போல.

ஏன் இந்தத் திகட்டும் சந்தோஷம்? விண்ட்சர் மேனரில் ஐஸ்க்ரீம் புடிங் வகைகளிலேயே பத்து தினுசு சாப்பிட்டாள். பெங்காலி போலிருந்த இளைஞன் சின்தஸைஸர் டிரம் அடிக்க… மைக்கை முழுங்குகிற மாதிரி வைத்துக்கொண்டு ஸ்டீவி வாண்டர் பாடினான்.

மிக அழகான ஒரு வெயிட்டர் இளைஞன் அவளருகில் பூச்செண்டு கொண்டுவந்து, ”மேடம்! ஹேப்பி பர்த்டே” என்றான். ஆச்சர்யப்பட்டு சத்தீஷைப் பார்க்க, அவன் மனோகரமாகக் கண்ணடித்தான். அந்த மலர்க் கொத்து செலஃபன் தயவில் புதுசு கலையாமல் அவளை அணைத்துக்கொண்டது. பக்கத்து டேபிள் குண்டுகுழந்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது. இவள் ‘வா’ என்று அழைத்ததும் ஓடி வந்துவிட்டது.

”பிங்க்கு பேட்டே இதர் ஆவோ.”

‘லேஸ் மேக்கர்’ போக வேண்டாம் என்று கப்பன் பார்க்கில் கொஞ்ச நேரம் லைப்ரரியில் உலவிவிட்டு, ஒரு கவிதைத் தொகுப்புடன் வெளியே வந்து, மண்டபத்தின் அருகில் மர அடர்த்தியின் கரும் பச்சை நிழலில் ஒரு பெஞ்ச் காலியாக இருக்க, அதில் அவள் உட்கார்ந்துகொள்ள அவள் மடி மேல் தலைவைத்து,

”ஜென்னி கிஸ்ட் மீ படிக்கட்டுமா?”

”படிங்க.”

”ஜென்னி என்னை முத்தமிட்டாள் சட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்து வந்து! காலம் என்னும் கள்ளனே! உன் பட்டியலில் எத்தனையோ இனிய விஷயங்களைச் சேர்த்துக்கொள்ள விரும்புகிறாயே, இதையும் சேர்த்துக்கொள். நான் களைத்திருக்கிறேன் என்று சொல். நான் சோகமாக இருக்கிறேன் என்று சொல். ஏழை என்று சொல். உடல் நலமில்லை என்று சொல். வயசாகிக் கொண்டிருக்கிறேன் என்று சொல். ஆனால், ஜென்னி என்னை முத்தமிட்டாள் என்பதையும் சொல்.”

பிற்பகலின் அமைதியில் தூரத்தில் நகரத்தின் சந்தடி கேட்க மடி மேல் கணவனை அமைதியாக அழுத்திக்கொண்டு அவன் முகத்தையே ஒரு மணி நேரம் பார்த்துக்கொண்டு இருந்தாள். நிச்சயம் இன்றைக்குத்தான் நிகழ்ந்திருக்கிறது!

இரண்டு நாளுக்காக மெத்தென்ற பெட்டியில் அவன் சூட், வெள்ளை வெளேர் சட்டைகள், அவன் மாத்திரைகள், ஷேவிங் சாதனங்கள், ஆஃப்டர் ஷேவ் லோஷன், தங்க விளிம்பிட்ட சீப்பு, ஆண் பிள்ளை கர்ச்சீப், அவன் ஃபைல்கள் எல்லாவற்றையும் அடுக்கிவைக்கையில், குறும்பாகத் தன்னுடைய ‘ப்ரா’ ஒன்றையும் இடையில் செருகி மூடினாள்.

பம்பாய் ஃப்ளைட் எட்டரைக்குத்தான் கிளம்பும் என்றார்கள். பேப்பர் கப்பில் சத்தீசுடன் காபி சாப்பிட்டுவிட்டு இருவரும் புத்தகம் பார்த்தார்கள். ஏர்போர்ட் ஜனங்களை வேடிக்கை பார்த்தார்கள். குல்லாயும், தொப்பியும், குங்குமமும், இடது பக்கம் ஸாரியும், அரசியலும், சூட்டும் கோட்டும், வெற்றியும், சவரம் செய்த பச்சை முகங்களும், நாசூக்கான அழுகைகளும்…

”நான் களைத்திருக்கிறேன் என்று சொல், ஏழை என்று சொல், உடல் நலமில்லை என்று சொல், வயசாகிக்கொண்டிருக்கிறேன் என்று சொல், சத்தீஷ் என்னை முத்தமிட்டான் என்பதையும் சொல்.”

செக்யூரிட்டி கேட்டில் நுழையுமுன் சத்தீஷ் திரும்பிக் காற்றில் ‘கேஸி’ என்று வரைந்துகாட்ட, அதன் அந்தரங்க அர்த்தம் அவள் கன்னங்களில் ரத்தம் பாய, கண்ணாடிக்குப் பின்னாலிருந்து சின்னதாக நாலு விரல் டாட்டா காட்டிவிட்டு மறைந்தான்.

மாருதியை பேஸ்மென்ட்டில் நிறுத்திவிட்டு, கதவைத் தன் சாவியால் திறந்து உள்ளே வந்து உடை மாற்றி, படுக்கையறைக்குச் சென்று, பசியின்றி ஒரு சாண்ட்விச் தயாரித்து, ‘விசிஆரை’ இணைத்து, கல்யாண கேஸட்டை நுழைத்து, ரிமோட் கன்ட்ரோலை எடுத்து, மூன்று தலையணைகள் அமைத்து, விளக்கைத் தணித்துவிட்டு, ‘ப்ளே’ பொத்தானை அழுத்தினாள்.

எதிரே டெலிவிஷன் திரையில் மறுபடி சத்தீஷைக் கல்யாணம் செய்துகொள்ள ஆரம்பித்தாள். சத்தீஷ் சின்னப் பையன் போல கன்னத்தில் மை, நெற்றியில் அலையும் தலைமயிர், மஞ்சள் சரிகை வேட்டியில் பஞ்சகச்சம், அசௌகரியத்தில் வாத்தியாரைக் கனவுக் கண்களுடன் பார்த்துக்கொண்டே, அவ்வப்போது சாஸ்திரத்துக்கு மந்திரம் சொல்ல, கண்கள் மையிட்ட கண்கள் அலைய சத்தீஷ் எவ்வளவு அழகாக இருக்கிறான்.

நெற்றியில் அம்மா அவனுக்குப் பொட்டு இடுகிறாள். அத்தை, சித்தி, தாரணி, பேபி அம்மா எல்லாரும் மஞ்சள் நீரை இறைத்துக்கொண்டே சுற்றிச் சுற்றி வருகிறார்கள். கால் அலம்பிப் பாய் மேல் வைக்கிறார்கள். சத்தீஷ் கட்டை விரலைப் பிடித்துப் படிப் படியாகச் சம்பந்தாசம்பதமில்லாமல் பேசுகிறான். என்னைவிட சத்தீஷ்தான் நெர்வஸ்.

கர்னலின் மடியில் உட்கார்ந்திருக்க என்னை நெற்றியில் எங்கோ பார்க்கிறான். தாலி கட்டிய பின் அம்மாவின் கண்களில் கண்ணீர். எல்லோருமே கட்டிப் பிடித்துக்கொண்டு, கை குலுக்கிக்கொண்டு, இது என்ன புது வழக்கம்?

ரிசப்ஷனில் ஜெயராமன் கச்சேரியில் சிமென்ட் கலர் சூட்டு போட்டு நிற்க, மத்தியானத்திலிருந்து ப்யூட்டீஷியன் எனக்குச் செய்த அலங்காரம் எனக்குப் பிடிக்கவே இல்லை. ஏதோ விக்ரமாதித்தன் பதுமை மாதிரி, அலுங்காமல் ஆயில் மேக் அப் என்று எண்ணெய் வழிந்துகொண்டு…

வீடியோ முடிந்து கீற்றல் வந்த பின்னும் சற்று நேரம் திரையையே பார்த்துக்கொண்டு இருந்தாள். பின் அணைத்தாள்.

”அன்புள்ள கடவுளே, நான் உனக்கு எப்படி இந்த மகத்தான, உத்தமமான தினத்துக்கு வந்தனம் சொல்ல வேண்டும்? ஏன் இத்தனை சந்தோஷம்? ஏன் இத்தனை வெளிச்சம்? ஏன் இத்தனை உற்சா கம்? ஏன் இப்படி ஒரு ஸ்படிக சுத்தமான தினம்? தயவுசெய்து இதற்கு மேல் சந்தோஷம் தராதே. தாங்காது. எனக்கு இது போதும். இது போதும்!”

கஸ்தூரி தூங்கிப் போய்ப் பத்து நிமிஷத்தில் டெலிபோன் ஒலித்தது!



சி.பி -  ( accident to her husband)

Monday, July 02, 2012

மஹா பலி - லவ் த்ரில்லர் - சுஜாதா - சிறுகதை

http://farm4.static.flickr.com/3554/3312807515_4584031f64_o.jpg

மகிஷாசுரமர்த்தினி குகைக்கு முன்னால் பெங்காலிகள் ‘ஆஷோன்… ஆஷோன்’ என்று ஆரவாரத்துடன் போட்டோ பிடித்துக்கொள்ள… சென்னை-103-ஐச் சேர்ந்த ‘அன்னை இந்திரா மகளிர் உயர்நிலைப்பள்ளி’யின் ஆசிரியைகள் டீசல் வேனில் இருந்து உதிர்ந்து, மஹாபலிபுரத்தின் சரித்திர முக்கியத்துவத்தை விளக் கும்வகையில், ”இங்கதான்டி ‘சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு’ ஷூட்டிங் எடுத்தாங்க” என்று வியக்க, கற்சிற்பிகளின் உளிச் சத்தம் எதிரொலிக்க, பிள்ளையார்களும் கொள்ளை -----------  சுந்தரிகளும் சிலை வடிவில் டூரிஸ்ட்டுகளுக்குக் காத்திருந்தார்கள். ‘கல்லோரல் சீப்பா கிடைக்கும்னு யாரோ சொன்னாங்களே?’


இவற்றையெல்லாம் கவனிக்காமல் ஊடே நடந்த அந்த இளைஞன் கரைக் கோயிலின் அருகில் வந்து கடற்கரைப் பக்கம் சென்றான். 1200 வருஷம் கடலின் சீற்றத்தையும் உப்புக் காற்றையும் தாங்கி வந்திருக்கும் அற்புதத்தைச் சற்று நேரம் பார்த்தான்.


”கேமரா வேணுங்களா… நிக்கான், ஜப்பான்… ரேபான் கண்ணாடி, எலெக்ட்ரிக் ஷேவர்?”

அவன் மௌனமாக இருக்க,

”செருப்பு வேணுங்களா? ஜோடி இருபது ரூபாதாங்க… கோலாப்பூரி…”


”…..”

”பேச மாட்டீங்களா?”

அவனுக்குப் பள்ளிச் சிறுவன் போல அறியாத முகம். கருநீலத்தில் தொளதொள சட்டை அவன் சிவந்த நிறத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. முதுகில் பட்டைவார் இறுக்கி பை வைத்திருந்தான். ஒருவேளை வடக்கத்திக்காரனாக இருப்பானோ என்று ”சேட், பந்த்ரா ரூபாய் மே லேலோ போணி!” என்றான் செருப்பு விற்ற சிறுவன்.


அவனை உணர்ச்சியில்லாமல் பார்த்துவிட்டு, கடலலைகளின் கோபத்தை மழுப்ப அமைக்கப்பட்ட கருங்கல் தடைகளில் ஒன்றில் உட்கார்ந்திருந்தவரை அணுகினான்.


”எக்ஸ்கியூஸ் மி…”

அவர் திரும்ப, ”புரொஃபசர் சந்திரகுமார்?”

”யெஸ்…”

”என் பெயர் அஜய். நான்தான் உங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். செக்ரெட்டரிக்கு விளம்பரம் கொடுத்திருந்தீர்கள்.”

”ஓ! நீதானா அது? ‘யங்’காக இருக்கிறாயே?!”


”எனக்கு 25 வயது!”


”எனக்கு ஏறக்குறைய 70” என்றார். ”கண்தான் சரியாகத் தெரியவில்லை. ராத்திரி கார் ஓட்ட முடியவில்லை. பொய்ப் பற்கள்… ஒருமுறை ‘பைபாஸ்’ ஆகி விட்டது. கடன் வாங்கின ஆயுள்!”

”மாடர்ன் மெடிக்கல் சயின்ஸ்” என்றான்.

கரைக் கோயிலின் கோபுரத்தைச் சிரத்தையாக அமிலம்வைத்துச் சுத்தம் பண்ணிக்கொண்டு இருந்தார்கள்.

”ஒரு வருஷமாவது இருப்பதாக வாக்களித்தால்தான் உனக்கு வேலை. சான்றிதழ்களை அப்புறம் பார்க்கிறேன். என் புத்தகத்தை முடித்தே ஆக வேண்டும்… பிரசுரகர்த்தர்கள் கெடு.”

”என்ன புத்தகம்?”

புல் போர்வையையும் கம்பி கேட்டையும் கடந்து சாலை நோக்கி நடந்தார்கள்.

”பல்லவர் காலச் சிற்பக்கலை பற்றி ஓர் அந்தரங்கப் பார்வை…”

பஸ் நிறைய மாணவர்கள் இறங்கி, விநோதமான ‘போஸ்’களில் படம் பிடித்துக்கொண்டு, ”என்ன மச்சி… கலர்ஸ் எல்லாம் ஒரு பக்கமா ஒதுங்கிருச்சு!”

”இவர்களுக்கா பல்லவச் சிற்பக் கலை பற்றிச் சொல்லப்போகிறீர்கள்?”

”ஏன்?”

”பெரிப்ளுஸ் கிரேக்க யாத்திரை புத்தகத்திலும், யுவான் சுவாங்கிலும் குறிப்பிடப்பட்டு இருக்கும் இந்த இடத்துக்கு அசைவ உணவகத்தில் புரோட்டா தின்று, பிக்னிக் பெண்களைத் துரத்த வந்திருக்கும் இந்தத் தலைமுறை கலாசாரமற்றது.”


”நீயும் இந்தத் தலைமுறைதானே?”

”ஆம். ஆனால், வேறு சாதி.”


அவர் அவனை நிமிர்ந்து பார்த்து, ”பெரிப்ளுஸ் பற்றி உனக்குத் தெரியுமா?”

”கி.பி. முதலாம் நூற்றாண்டில் இருந்து இருக்கும் துறைமுகம் என்பதும், பல்லவக் கட்டடக்கலை பற்றியும் தெரியும்.”

அவர் அவனைச் சிநேகபாவத்துடன் பார்த்து, ”ஐ லைக் யூ!”

”எப்போது வேலைக்கு வரலாம்?”

”இப்போதே என்னுடன் வா… உன் பைகள் எல்லாம் எங்கே?”


”எல்லாம் என் முதுகுக்குப் பின்னால்!”

”இவ்வளவுதானா?”

”இதில்கூடப் புத்தகங்கள்தான் அதிகம்.”

”செஸ் ஆடுவாயா?”

”சுமாராக.”

”சுமாராக ஆடி என்னிடம் தோற்பவர்கள்தான் எனக்கு வேண்டும். பேசப் பேச உன்னைப் பிடித்திருக்கிறது. லூயிஸ் தாமசும் படிப்பேன் என்று சொல்லாதே…”
”மெடுஸா அண்ட் தி ஸ்னெய்ல்.”


”கிரேட் யங்மேன். உன்னை எனக்கு நிச்சயம் பிடித்துவிடப் போகிறது. என் பெண் வினிதா சம்மதித்தால் கல்யாணம் செய்து கொடுத்துவிடுவேன்.”


இருவரும் வெளியே சாலைக்கு வர, அவர் கார் அருகில் சென்று, ”மாருதி ஓட்டுவாயா?”

”நான் ஓட்டாத வாகனமே இல்லை!” என்று சிரித்தான்.

”சிகரெட் பிடிப்பாயா?”

”இல்லை.”

”கல்யாணம் ஆகிவிட்டதா?”


”இல்லை.”

”பர்ஃபெக்ட்! சம்பளம் எத்தனை வேண்டும்?”

”உங்கள் இஷ்டம்.”


மாருதி காரைத் திறந்து, முதுகுச் சுமையைப் பின் இருக்கைக்குத் தள்ளிவிட்டு, முன்னால் ஏறிக் கொண்டான்.

”ஓட்டுகிறாயா?”


”இல்லை, இந்தப் பிரதேசமே எனக்குப் புதிது.”


”எந்த ஊர் நீ?”

”எதும் என் ஊர் இல்லை.”


கடற்கரையோரம் சென்றபோது மௌனமாக வந்தான். அருச்சுனன் தவத்தைக் கடந்து, கல்பாக்கம் சாலையைத் தவிர்த்து, ஊருக்கு வெளியே சென்று நீல, மஞ்சள் நைலான் வலைகளையும், மீன் நாற்றத்தையும் கடந்து கடலோர வீட்டு வாசலில் சென்றபோது, வெள்ளைச் சடை நாய் வந்து வாலை ஆட்டியது.


”அமைதியான இடம்… இவன் பெயர் ஸ்னோ. இங்கேயே இருப்பதில் உனக்குத் தயக்கம் ஏதும் உண்டா?”


”இல்லை.”

”அலை ஓசை பழகிவிடும். மாடியில் என் மகனின் அறை இருக்கிறது. எடுத்துக்கொள். மகன் அமெரிக்காவில் இருக்கிறான், டெக் நிறுவனத்தில். மகள் சென்னையில் படிக்கிறாள். விடுமுறைக்கு வருவாள்.”

”அப்படியா?!” – உள்ளே வந்து சித்திரங்களைப் பார்த்தான்.

”யாருக்கு ஷகால் பிடிக்கும்?”

”எனக்கு. உனக்கு..?”


”கன்டின்ஸ்கி.”


”ஏதோ ஒரு விதி என்னிடம் கொண்டுசேர்த்திருக்கிறது உன்னை. நான் இதுவரை தேடிய ஆதர்ச இந்திய இளைஞன் கிடைத்துவிட்டதுபோலத் தோன்றுகிறது.”


அவன் புன்னகைத்தான். ”மிகைப்படுத்துகிறீர்கள்…”


‘எதுவரை படித்திருக்கிறாய்?”


”கல்லூரிக்கு முழுதும் போகவில்லை. படிப்பு தடைப்பட்டுவிட்டது. பி.ஏ. ஹிஸ்டரி படித் தேன்.”

”எங்கே படித்தாய்?”

”லண்டனில்.”

”விட்டுவிட்டாயா?”

”ஆம். பெற்றோரை ஒரு விபத்தில் இழந்த பின்…”

அவன் பையிலிருந்து சாமான்களை எடுத்துவைத்தான். பெரும்பாலும் புத்தகங்கள்… 101 கவிதைகள், லையால் வாட்ஸன் கட்டுரைகள், ரயில்வே அட்டவணை, சதுரங்கம் பற்றிய பாபி ஃபிஷரின் புத்தகம், ‘தி டவ் ஆஃப் பவர்’, மெக்கியாவல்லியின் ‘பிரின்ஸ்’, மோதியின் ‘ஜூரிஸ் புடன்ஸ்’…


”உன்னை வகைப்படுத்த முடியவில்லை.”

மறுபடி புன்னகைத்தான். பதில் சொல்ல விரும்பாதபோதெல்லாம் மையமாகப் புன்னகைப்பான் என்பது புரிந்தது.
'

முதல் மாதத்தில் அவன் முழுத்திறமையும் படிப்படியாகப் புரிந்தது.

அஜய் ஆறு மணிக்கு எழுந்து காபி போட்டுக் கொடுப்பான். சந்திரகுமாருக்குத் தேவையான ஐஸ் டீ, லெமன் கார்டியல் தேன் கலந்து கொடுப்பான். இரவு அவர் எழுதிவைத்திருப்பதை எல்லாம் பிழையே இன்றி மிகச் சுத்தமாக எலெக்ட்ரிக் டைப்ரைட்டரில் அடித்துக் கொடுத்துவிடுவான். ஒன்றிரண்டு திருத்தங்கள்தான் இருக்கும். புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றிப் பேசவே மாட்டான். மாலை செஸ் ஆடுவார்கள். ஒரு நாள் அவன் தோற்பான். ஒரு நாள் இவர்… சில நாள் ட்ரா!

ராத்திரி அவருக்குக் கண்பார்வை மங்கியதால், படித்துக்காட்டினான். ஒருநாள், ”மாறுதலுக்காக ஏதாவது உன் புத்தகத்தில் இருந்து படித்துக்காட்டேன்” என்றார்.


”என் புத்தகங்கள் உங்களுக்குப் பிடிக்காது.”

”நான் தற்போது எழுதும் புத்தகத்தைப்பற்றி என்ன நினைக்கிறாய்?”

”இது நம் நாட்டுக்குத் தேவைஅற்றது.”

”எப்படிச் சொல்கிறாய்?” என்றார் கோபப்படாமல்.

”மகேந்திரன் கட்டிய தூணுக்கும் ராஜசிம்மன் கட்டிய தூணுக்கும் வித்தியாசங்கள் பற்றி ஒரு அத்தியாயமே விளக்கும் புத்தகத்தால் இன்றைய இந்தியாவுக்கு என்ன பயன்?”

”நம் கலாசார மரபு தெரிய வேண்டாமா?”

”தெரிந்து..?”

”நம் இந்தியாவை ஒன்றுசேர்த்த இந்த மரபு இப்போது தேவை இல்லை என்கிறாயா?”

”இந்தியா ஒன்றல்ல! இந்த மஹாபலிபுரம் பல்லவ ராஜ்யமாக இருந்தது. அவன் விரோதி புலிகேசி சாளுக்கிய ராஜ்யம்… அது போல் சோழ மண்டலம்…வேங்கி… இந்தியாவாக இல்லை. இந்தியா பிரிட்டிஷ்காரன் அமைத்தது.”

”எங்கள் தலைமுறை அப்படி நினைக்கவில்லை. நாங்கள் சுதந்திர வேட்கைப்பட்டு, தியாகங்கள் செய்தோம்.”


”காரணம், உங்களை எல்லாம் ஒருமைப்படுத்த ஒரு பொது எதிரி இருந்தான். இப்போது நம் எதிரி நாமேதான்.”

”இருந்தும் இந்த நாட்டை ஒன்றுசேர்ப்பது கலாசாரம்.”

”இல்லை… ஏழ்மை!”

”உனக்குச் சிற்பங்கள் பிடிக்காதோ?”

”கரைக் கோயிலின் ஆர்க்கி டெக்சர் எனக்குப் பிடிக்கிறது. எனக்கு அதன் அழகை நிலவொளியில் பார்க்கப் பிடிக்கும். அதை அமைத்த பெயரில்லாத சிற்பி தான் என் ஹீரோ. மகேந்திரவர்மன் அல்ல.”

”மனம் மாறுவாய்” என்றார் சந்திரகுமார் புன்னகையுடன்.

வினிதா தசராவுக்கு வந்திருந்தபோது அவனை அறிமுகப்படுத்தினார். ”வினித், திஸ் இஸ் அஜய்… வினிதா என் பெண்.”

”ஹாய், யு லைக் மியூஸிக்?”

”பிடிக்கும்…”

”ஃபில் காலின்ஸ்?” என்றாள் எதிர்பார்ப்புடன்.

”மொஸார்ட்” என்றான்.

”யக்…” என்றாள் அருவருப்புடன்.

”புக்ஸ்? ஜெஃப்ரி ஆர்ச்சர்…”

”ஃபிக்ஷன் ரெண்டாம்பட்சம்… ஐ ரீட் போயம்ஸ்.”

”போயம்ஸ்! மைகாட்…”

”தேர் கோஸ் மை மேரேஜ் அலையன்ஸ்…” என்றார் சந்திரகுமார்.

”எங்கிருந்து அப்பா இந்தப் பிராணியைப் பிடிச்சுட்டு வந்தீங்க? ஹி இஸ் நாட் நார்மல்!” என்றாள் வினிதா.

இருவருக்கும் ஒரே ஒரு பொது அம்சம் – மே மாதத்தில் பிறந்தவர்கள் இருவரும். அவளுடன் விகற்பமில்லாமல் பழகினான். அவளைக் கவிதைகள் படிக்கவைத்தான். மொஸார்ட்டின் வாழ்க்கை வரலாற்றை வீடியோ பார்க்கவைத்தான்.

ஒருநாள் மாலை ‘ரொம்பப் போர் அடிக்கிறது’ என்று கட்டாயப்படுத்தி அவனை ஊருக்குள் அழைத்துச் சென்றாள். ”கடற்கரைப் பக்கம் வாக்மென் போட்டுக்கொண்டு நடக்கப்போகிறேன். நீயும் வருகிறாயா?”

கட்டாயத்தின் பேரில்தான் சென்றான். திரும்பி வந்ததும், ”இரவு எனக்கு நிலவொளியில் கரைக் கோயிலைப் பார்க்க வேண்டும்.”

”அழைத்துச் செல்கிறேன்!”

அவர்கள் சென்றதும் கொஞ்ச நேரம் சும்மா இருந்தார். இருவரும் நெருக்கமாகப் பழகுவது திருப்தியாக இருந்தது. ”அவனைப்பற்றி, குடும்பத்தைப்பற்றி விசாரிக்க வேண்டும். இவனைப்போல் மாப்பிள்ளை கிடைப்பது மிக அரிது.’

இருவரும் போனதும் வீடு வெறிச்சென்று இருந்தது. மேஜையில் அவன், அவளுக்குப் படித்துக்காட்டிக்கொண்டு இருந்த புத்தகத்தை எடுத்தார். காது மடங்கியிருந்த பக்கத்தில் திறந்தது… ‘How did you die?’


கவிதையின் தலைப்பே சற்று அதிர்ச்சி தந்தது.

‘Death comes with a crawl,
or comes with a pounce
And whether he is slow or spry
It is not the fact that
you are dead that counts
But only, how did you die?’


வாசலில் ஜீப்பில் இருந்து ஒருவர் மெள்ள இறங்கி வந்து, சுற்றிலும் சவுக்குத் தோட்டத்தைப் பார்த்தபடியே அணுகினார்.

”புரொஃபசர் சந்திரகுமார்?”

”யெஸ்…”

”ஐ’ம் ஃப்ரம் தி போலீஸ் ஸ்பெஷல் பிராஞ்ச்” என்று அடையாள அட்டையைக் காட்டி, ”இந்த போட்டோவில் உள்ளவனை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?”

கண்ணாடி போட்டுக்கொண்டு வெளிச்சத்தில் பார்த்தார். மீசை இல்லை; கிராப்பு வெட்டப்பட்டுச் சுருக்கமாக இருந்தது. இருந்தும் திட்டவட்டமாகச் சொல்ல முடிந்தது.


”இவன் பெயர் அஜய். என் செக்ரெட்டரி…”

”இவன் உண்மையான பெயர் அஜய் இல்லை. அவன் இங்கே இருக்கிறானா?”

”என் மகளுடன் கடற்கரைக்குப் போயிருக்கிறான். இப்போது வந்துவிடுவான். ஏதோ அடையாளக் குழப்பம் போலிருக்கிறது.”


வந்தவர் மிக வேகமாகச் செயல்பட்டார் ரேடியோவில். ”சார்லி, திஸ் இஸ் தி ப்ளேஸ்… வி காட் ஹிம்!”

”விவரமாகச் சொல்லுங்களேன்?”

”இவன் யார் தெரியுமா? மை காட்! எங்கே கடற்கரைக்கா?”

”இன்ஸ்பெக்டர், இதில் ஏதோ தப்பு நிகழ்ந்திருக்கிறது. இந்தப் பையன் என்னுடன் இருக்கும் செக்ரெட்டரி… ரொம்ப நல்ல பையன்.”

”புரொஃபசர், இவன் யார் தெரியுமா? எல்லா போலீஸாலும் தேடப்படும் மிகப் பெரிய தீவிரவாதி… மொத்தம் 18 கொலைகள் இவன் கணக்கில் உள்ளன.”

”சம்திங் பாஸிட்டிவ்லி ராங்… ஆள் மாறாட்டம்… போட்டோ தப்பு” என்றார்.


”அவன் இங்கேதான் தங்கி இருக்கிறானா?”

”ஆம்…”

”எந்த அறையில்?”

”மாடியில்!”

”என்னுடன் வாருங்கள்…” சரசரவென்று மாடிப்படி ஏறினவரைத் தயக்கத்துடன் பின்தொடர்ந்து, அஜய் தங்கியிருந்த அறைக்குள் முதன்முதலாக நுழைந்தார். ”என் செக்ரெட்டரியைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. மணியான பையன். மிகுந்த புத்திசாலி. அழகுணர்ச்சி உள்ளவன், படித்தவன், சிந்திப்பவன்…”

அதிகாரி அதைப்பற்றி எல்லாம் சிந்திக்காமல் இரை தேடும் சிங்கம் போல அறைக்குள் அலைந்தார். ஒழுங்கான அறை. சுவரில் கலையம்சத்துடன் நவீன சித்திரம் மாட்டியிருந்தது. அலமாரிப் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கிவைத்திருந்தான். மேஜை மேல் காகிதங்கள் அடுக்காக… ஜன்னல் மலர் ஜாடியில் ரோஜா.


அதிகாரி அவன் மேஜை இழுப் பறைகளைச் ‘சரக்… சரக்…’ என்று திறந்தார். மலர் ஜாடிகள் உருண்டன. காகிதங்கள் பறந்தன. பூட்டுகள் உடைந்தன.

”புரொஃபசர், இங்கே வந்து பார்க்கிறீர்களா, உம் நம்பிக்கைக்குரிய காரியதரிசியின் சொத்துக்களை?”

சந்திரகுமார் அருகே சென்றார்.

”இது உங்களுடையது அல்லவே?”

மேஜையின் மேல்மட்ட இழுப்பறையில் துப்பாக்கி இருந்தது. கீழ் அறையில் ஒரு காலாஷ் நிக்காஃப் ரைஃபிளின் பாகங்களும், மேகஸின்களும் இருந்தன. ஒரு ரேடியோ டிரான்ஸ்மீட்டர் இருந்தது.


”ஐ கான்ட் பிலீவ் இட்… திஸ் இஸ் இம்பாஸிபிள்!”

”இவன் பெயர் அஜய் அல்ல… இவன் பெயர் டோனு. கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். உங்கள் மகளுடன் எங்கே போய் இருக்கிறான்?”


”கடற்கரைக்கு என்று சொன்னேனே!”


”பதற்றப்படாதீர்கள், அவனுக்கு நாங்கள் இங்கு வந்து தேடுவது தெரியாது. அவனும் உங்கள் மகளும் திரும்பும் வரை பதுங்கி இருக்கலாம்.”

ஜீப்பைப் போகச் சொல்லி ஆணை கொடுத்தார். தபதப வென்று பத்து போலீஸ்காரர்கள் வீட்டுக்குள் நுழைந்து வாசல் கதவைச் சாத்திக்கொண்டார்கள்.


”வெயிட்… யு கான்ட் டூ திஸ்… அவன் வேறு யாரையோ…”

”ஷட் அப் ஓல்ட்மேன்… கீப் கொயட்! ஒரு பயங்கரவாதிக்கு, தீவிரவாதிக்குப் புகலிடம் அளித்திருக்கிறீர்கள். வாயை மூடிக்கொண்டு நடப்பதைக் கவனிப்பது உசிதம்!”

”என்ன செய்யப்போகிறீர்கள்? காட்! என் மகள்… என் மகள் அவனுடன் இருக்கிறாள்!”

”அவளைக் காப்பாற்ற

முயற்சிக்கிறோம்.”

அவர் உடல் நடுங்க ஆரம்பித்தது. அலமாரியில் இருக்கும் ஸார்பிட்டால் தேவைப்பட்டது. நாக்கு உலர்ந்தது. ‘என்னவோ ஒரு பெரிய தப்பு நேர்ந்திருக்கிறது… ஆள்மாறாட்டத் தப்பு. இவன் இல்லை… தடுக்க வேண்டும்.’

”வர்றாங்க. எல்லாரும் தயாரா இருங்க. அநாவசியமா சுட வேண்டாம். நான் சொல்லும்போது சுட்டாப் போதும்!”

ஜன்னல் வழியே, வினிதாவுடன் அஜய் மெதுவாகப் பேசிக் கொண்டே வருவது தெரிந்தது. அவர்கள் கைகோத்துக்கொண்டு இருந்தார்கள். அவ்வப்போது அவன் தோளில் தட்டி ஆரவாரமாகச் சிரித்தாள்.

”ரெடி!”

ஒரு கணம் உலகமே நின்றது.

இங்கே துல்லியமாகத் துப்பாக்கிகளின் ட்ரிக்கரைத் தயாரிக்கும் சத்தம் கேட்டது. வீட்டை நோக்கி வந்துகொண்டு இருந்தவன், தரையில் ஈரம் இருந்ததைப் பார்த்தான். அதில் பதிந்திருந்த பூட்ஸ் அடையாளங்களைப் பார்த்தான். நின்றான். வின்னியிடம் ஏதோ சொன்னான். அவள் வியப்புடன் கீழே பார்த்தாள்.

”நாம் வந்திருப்பதைக் கண்டு பிடித்துவிட்டான், பூட்ஸ் அடை யாளங்களைப் பார்த்து. ஓடுங்க… பிடிங்க!”

இதற்குள் அஜய், வின்னியை முன்னால் இழுத்துத் தன்னை மறைத்துக்கொண்டான்.

போலீஸார் வெளியே வெள்ளமாகப் பாய்ந்தார்கள். அங்கிருந்து கத்தினான். தன் பையில் இருந்து எடுத்த துப்பாக்கியை வின்னியின் நெற்றியில் பதித்து, ”ஸ்டாப்! கிட்ட வந்தா பெண் இறந்து போவாள்… நில்லு!”

‘சினிமாவில்தான் இந்த மாதிரி காட்சிகள் வரும்’ என்று சந்திர குமார் நினைத்தார். ‘இப்போது கூட அனைத்தும் கனவு’ என்று விழிக்கத் தயாராக இருந்தார்.

அவர் பெண்ணை அவன் தரதரவென்று இழுத்துச் சென்று மாருதி காரில் திணித்து ஏற்றிக் கொண்டு புறப்பட்டபோது, போலீஸார் ‘வாக்கிடாக்கி’யில் ஆணைகள் பிறப்பித்தனர். ”க்விக்! செண்ட் த ஜீப்… ஹி இஸ் ரன்னிங்…”


புரொஃபசரைப் புறக்கணித்து விட்டு அனைவரும் ஓடினார்கள். நாய் வாலை ஆட்டிக்கொண்டு அவர்கள் பின்னால் கேட் வரை ஓடியது. புரொஃபசர் வெலவெலத் துப்போய், ”என் மகள்… என் மகளைக் காப்பாற்றுங்கள்…”

இரவு எட்டு மணிக்கு அவர்கள் திரும்பி வந்து, அவரைக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்கள்.


”என்ன ஆச்சு… என் மகளுக்கு என்ன ஆச்சு..?”

”ஓ! ஷி இஸ் ஆல்ரைட்…”

”பையன்?”

”கடற்கரையில் சுட வேண்டி இருந்தது…” அவர்கள் அந்த இடத்தை அணுக, வின்னி அவரை நோக்கி ஓடி வந்தாள்.

”வின்னி, தப்பித்தாயா! வின்னி, ஆர் யு ஆல்ரைட்?” என்று அவளைக் கட்டிக்கொண்டு நெற்றியில் முத்தங்கள் அளித்தார். ”எங்கேயாவது அடிபட்டதா?”

”இல்லை அப்பா… அவன் என்னை எதும் செய்யவில்லை.”

”எதும் செய்யவில்லையா?!”

”நான் அகப்பட்டுவிட்டேன். என்னை நிச்சயம் சுட்டுவிடுவார்கள். சாவதற்கு முன் கடற்கரைக் கோயிலை ஒரு முறை நிலவில் பார்த்து விட வேண்டும்” என்றான். அதற்காகத்தான் என்னைப் பணயக் கைதியாக அழைத்துச் சென்றான். இங்கே வந்ததும் என்னை விடுவித்து விட்டான்!”

சந்திரகுமார் கரைக் கோயிலைப் பார்த்தார். அதன் விளிம்புகளில் வெள்ளி பூசியிருந்தது. தூரத்தில் கடலலைகளின் சுருட்டல்களின் மீதும் வெள்ளி பிரவாகித்தது. அலை புரளும் ஓசை அவ்வப்போது உருண்டது.

”அப்பா, அவர்கள் அவனை… அவனை…” என்று விசித்து அழுதாள்.

கடற்கரைக் கோயிலின் அருகே மணல்வெளியில், நிலவில் நனைந்துகிடந்தான் அவன். மாருதியின் ஹெட்லைட் வெளிச் சத்தில் மார்பில் பாய்ந்திருந்த குண்டின் ரத்த உறைவு தெரிந்தது. சந்திரகுமார் கிட்டே போய் அவனைப் பார்த்தார்.

‘உங்களையெல்லாம் ஒருமைப்படுத்த ஒரு பொது எதிரி இருந்தான்… இப்போது நம் எதிரி நாமேதான்!’


”மைகாட்! வாட் வென்ட் ராங்?” என்றார் சந்திரகுமார்.

”என்ன?”

”நம் இளைஞர்களை நம் கடற்கரையில் நாமே சுட்டுப் பலி வாங்கும்படியாக எங்கே, எந்தக் கட்டத்தில் இந்த நாட்டில் பெரியவர்கள் தப்பு செய்துவிட்டோம்? நன்றாகத்தானே ஆரம்பித்தோம்! எங்கே தப்பு செய்தோம்? எங்கே… எங்கே…?”

”அந்தக் கேள்வியெல்லாம் கேட்கறதில்லை நாங்கள்” என்றார் அதிகாரி!




http://www.bharatmoms.com/uploads/Image/writer-sujatha3.jpg

Friday, June 29, 2012

சுஜாதா - சயின்ஸ் ஃபிக்‌ஷன் - சிறுகதை - திமலா


Writer Sujatha - Smiles at Chennai book fair 2006

உங்களைப் பார்க்க உங்கள்…” என்று வெளி ஆபீஸ் சொல்லி முடிப்பதற்குள் ஆத்மா குறுக்கிட்டு “எத்தனை முறை சொல்லிருக்கிறேன். இந்த வேளையில் பார்வையாளர்களை அனுமதிக்காதே என்று” வெட்டினான். கோபக் கதவு திறந்தது.



“நான் பார்வையாளர் இல்லை. உன் மனைவி”




“ஒ நித்யா! நீயா?”




“உள்ளே வரலாமில்லையா?”




“தாரளமாக. உனக்கு யார் தடை செய்ய முடியும்?. அருகே வா! முத்தம் தருகிறேன்.




நித்யா அருகே செல்லாமல் தீர்க்கமாக தன் கணவனைப் பார்த்தாள். ஆத்மாவின் மேசையில் டெர்மினல் திரையில் எழுத்துக்கள் அதி விரைந்தன.


சுவற்றில் உயர வரைபடங்கள் சிவப்பிலும் பச்சையிலும் உயிர் பெற்று ‘ஆத்மா & கோ’வின் அந்த நிமிஷ ஆரோக்கியத்தை அடித்துக் காட்டின.


ஆத்மா டச் போனில் “நியூயார்க்” என்று கூப்பிட்டு விட்டு “உட்காரேன் நித்யா” என்றான்.


நித்யா உட்காராமல் கைகளைக் கட்டிக்கொண்டு கணவனைக் கவனித்தாள்.




“நியூயார்க் நியூயார்க்!”




“நியூயார்க் சார்”




“எத்தனை வேண்டுமாம்?”


“இருபது மில்லியன்”


“பத்தொன்பதுக்கு தீர்த்துவிடு”




“நிக்ஸ் சார்”


“வாங்குவது யார்?”


“ராத்சைல்டு”


“அந்தக் கழுகா?. சரியாக ஒரு நிமிஷம் பார். அதன்பின் பத்தொன்பது நாற்பது வரை போ”.




“சரி”


ஆத்மா டச் போனிலிருந்து நிமிர்ந்து நித்யாவை ஒரு மில்லிசெகண்டு புன்னகைத்து விட்டு ””பிஸி பிஸி பிஸி. இந்த சமயத்தில் வந்தாயே?”  என்றான். நித்யா பதில் சொல்லவில்லை ஆத்மா தன் கோட்டின் உட்பறத்தில்கைவிட்டு பேஸ்மேக்கரை அமைத்து இதயத் துடிப்பைஅதிகரித்துக் கொண்டான். மூளைக்கு ரத்த ஆக்ஸிஜன் அளவை அதிகரிததுக் கொண்டான்.




துல்லியமாக சிந்திக்க முடிந்தது. அந்த வரைபடங்கள் இன்னும் நடனித்துக் கொண்டிருந்தன.




“க்ரேட் ! ஒரு நிமிஷத்தில் ஒரு லட்சம் செய்துவிட்டேன். நித்யா

நீ நிற்கிறாயே  என்னவேண்டும் சொல்”


“நான் யார் தெரியுமா உனக்கு?”


“என்ன பைத்தியக்காரக் கேள்வி? நீ என் மனைவி. ஹலோ நியுயார்க்
பத்தொன்பது ஐம்பதா? முடியாது இன்னும் நாற்பது செகண்டு தயங்கி நாற்பத்தி ஐந்துக்கு முடித்து விடு”.




“என்ன சொன்னே  நித்யா”




“ஒன்றுமே சொல்லவில்லை. என் கணவன் இயங்குவதைப் பார்ததுக் கொண்டிருக்கிறேன்”.


“என்னவேண்டும? சொல்லவே இல்லையே”


“ஆத்மா,எனக்கு நீ வேண்டும்”




“நானா? அதுதான் எதிரிலேயே இருக்கிறேனே”




“என் எதிரில் இருப்பது ஒரு பணம் பண்ணும் இயந்திரம்”




“பணம் சக்தி நித்யா. வந்த காரியத்தை நாற்பது செகண்டுக்குள் சொல்”




“ஆத்மா நீ ஒரு மணிநேரம் எனக்கே எனககு என்று பிரத்தியேகமாக வேண்டும்”




“ராத்திரிதான் வருகிறேனே”




“வருகிறாய் ,மாத்திரை விழுங்குகிறாய் இதயத் துடிப்பைக் குறைத்துக் கொள்கிறாய்.  தூங்கி விடுகிறாய். காலை எழுந்து நான் காண்பது காலிப் படுக்கை”




“தேவைப் பட்ட போது ஸ்டிவியில் பேசிக் கொள்கிறோமே?”


“அது வெறும் பிம்பம் எனக்கு வேண்டியது நிஜ நீ”




“ஹலோ டோக்கியோ”




நித்யா டச்போனை பட்டென்று நிறுத்தினாள்.




“என்ன நித்யா இது?”


“ஆத்மா நான் சொல்வதை தயவு செய்து கவனி போன வருஷம் திமலா போவதற்கு அனுமதி கேட்டு எழுதினோமே ஞாபகம் இருக்கிறதா?”




“அதற்கென்ன?”


“அனுமதி கிடைததிருக்கிறது” என்று ஆர்வததுடன் ஒரு மஞ்சள் அட்டையை எடுதது  அவனிடம் காட்டினாள்    அதில் கம்பயுட்டர் அச்சில்




திமலா நிர்வாகம்
உங்கள் வேண்டுகோள்-
20-2-2080 அன்று காலை 10-16
உங்களுக்காக ஒதுக்கப் பட்டிருக்கிறது
நேரந்தவறாமல் வரவும்
இந்த அட்டையையும் கொண்டு வரவும்
உங்கள் பார்வையாளர் எண் 164396
(இது செயற்கைக் காகிதம்)




ஆத்மா அதை அவளிடம் திருப்பிக் கொடுத்து விட்டு “அப்பாடா கடைசியில் அனுமதி கிடைத்து விட்டது சந்தோஷம் போய்வா” என்றான்


நித்யா கோபத்துடன் தெளிவாகப் பேசினாள் “ஆத்மா நீயும் என்னுடன் வருகிறாய் வந்துதான் ஆகவேண்டும்.   ஒரு மணி நேரம்தான் ஆகும். வரவில்லையென்றால் இந்த அலுவலகத்தை நாசம் பண்ணிவிட்டுத்தான் போவேன் அத்தனையும் உடைத்து..”




“இரு இரு எப்போது போகவேண்டும்”




“நாளை காலை 10-16″




“ஹேய் கம்ப்யுட்டர் நாளை காலை 10-16 க்கு நான் ·ப்ரீயா?”




அறையில் ஓர் அமானுஷ்யக் குரல் ஒலித்தது.




“நாளைக் காலை 10-16க்கு வத்தாநபே வருகிறார் “




“ஓகாட்! வத்தாநபே ஜப்பானியன். மிக முக்கியமான சந்திர காண்ட்ராக்ட்.ஸாரி நித்யா நான் வரமுடியாது”




நித்யா இப்போது அழுந்தி உட்கார்ந்தாள். ”முடியாது நாளை நீ என்னுடன் வந்துதான் ஆக வேண்டும்.டச்போன் கொடு  ஜப்பான்காரனுடன் பேசகிறேன். ஹேய் கம்ப்யுட்டர் வத்தாநபே கொடு”.




“ஸாரி கிடைக்கவில்லை” என்றது குரல்.




“போய் உன் தலையைத் தின்னு”




“ஸாரி தலை கிடையாது”




“இரு நித்யா கோபிக்காதே நான் வந்துதான் ஆகவேண்டும என்று என்ன கட்டாயம்? நீதான் திமலா பார்க்கத் துடித்துக் கொண்டிருந்தாய். தனியாகப் போய்ப் பாரேன் மற்றொரு முறை உன்னுடன் வருகிறேன்”




நித்யா பதற்றத்துடன் ” ஆத்மா எப்படி இதைச்சொல்வேன் இரண்டு பேரும் போவதாகத்தானே முதலிலிருந்தே பேச்சு. அட்டையைப் பார் அனுமதி இரணடுபேருக்கு!”




“கூட யாரையாவது அனுப்பட்டுமா?”




நித்யா அழ ஆரமபித்தாள்.




“நித்யா என்ன இது? இந்த நு¡ற்றாண்டில் யாரும் அழுவதில்லை”.




மேலும் அழுதாள்.




“இதோ பார் நித்யா உனக்கு என்ன குறை? கல்யாணம் செய்து கொள்ளும்போது என்னுடன் வாழ்க்கை இப்படிததான் இருக்கும் என்று நான் சொல்லவில்லையா?”




“ஒரே ஒரு மணி நேரம். அப்படி நான் என்ன பெரிசாகக் கேட்கிறேன்?”




“ஒன்று செய்யலாம், திமலா எவ்வளவு தூரம்?”




“நூற்றம்பது கிலோ”




“நீ முதலில் போ நான் சட்டென்று அவனுடன் பேச்சை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன்”




“முடியாது நீ வரமாடடாய்.எனக்குத் தெரியும். நான் போகிறேன். உனக்கு வாழ்க்கைப்பட்டதற்கு பதில் ஒரு கம்ப்யூட்டரைக் கட்டிக் கொண்டிருக்கலாம். ஹேய் கம்ப்யூட்டர் என்னைக் கல்யாணம் செய்து கொள்வாயா”




“ஸாரி பதில் இல்லை”

http://image1.indiaglitz.com/tamil/news/shankar010308_1.jpg


ஆத்மா சிரித்தான்.




“சிரிக்கிறாய்! எனக்குப் பற்றிக்கொண்டு வருகிறது. ஆத்மா நாம் பிரிந்து விடுவோம் என்று நினைக்கிறேன்.  எனக்காகப் பத்து பேர் மனுப் போட்டிருக்கிறார்கள்”




“அப்படி எல்லாம் பேசாதே நித்யா”




“பின்னே என்ன?”




“அந்த திமலா அப்படி என்ன முக்கியம் உனக்கு”




“முக்கியம் ஆத்மா.அங்கே போக வேண்டியது என் நிம்மதிக்கு முக்கியம், என் மனநிலை ஸ்திரமடைவதற்கு முக்கியம்.. ஒரு வருஷமாக நான் இதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அங்கே நமக்கு கிடைக்கப்போகும் ஆறுதலும் நிம்மதியும் பிரபஞ்சத்தில் எங்கேயும் இல்லை”.






“இந்த நூற்றாண்டில் இதெல்லாம் அபத்தமாக பிற்போக்காகப் படுகிறது  எனக்கு”.




“ஒரு முறை வந்துபார். உன் மனம் மாறிவிடும். கணவன் மனைவியாகப் போவது பெரும்  பாக்கியம் என்கிறார்கள்”.




“இந்த முறை மன்னித்துவிடு நித்யா மற்றொரு மனுப்போடலாம்”.




“ஹலோ  ந்யூ யார்க்  என்ன ஆச்சு?” நித்யா டச்போனைப் பிடுங்கி எரிச்சலுடன் கீழே எறிந்தாள்




ஹை இம்பாக்ட் பாலிமரி‘ல் செய்யப்பட்ட அது சேதமடையவில்லை.


ஆத்மா அதைப் பொறுக்கிக் கொண்டு “கோபம் கூடாது என் மனைவியே”என்றான்.


“நான் அனி உன் மனைவி இல்லை”


கம்ப்யூட்டர் குறுக்கிட்டது “ஒரு புதிய செய்தி வந்திருக்கிறது”.




“என்ன?”




“வத்தாநபேக்கு வேறு அவசர வேலைகள் இருப்பதால் நாளை வர முடியாதாம் அதிக மன்னிப்புக்கள் கேட்கிறார்”


நித்யா முகம் மலர்ந்தாள் “வாழ்க வத்தாநபே. கம்ப்யூட்டரே நீயும் வாழ்க” என்று கூவினாள்.


“மிகைப் பட்ட உற்சாகம் எதற்கு என்று தெரியவில்லை எனினும் வாழ்த்துக்களும் அஸ்ட்ரா கம்பெனியின் சார்பாக வந்தனமும்“ என்றது கம்ப்.


ஆத்மா சிரித்து” திருப்திதானே? நாளை வருகிறேன். முத்தம் உண்டா?”.


நித்யா அவன் உதடுகளில் முத்தமிட்டாள்.




மறு நாள் ஒன்பது மணிக்கே தயாராகி விட்டாள். ஸ்டி.வி அலுவலகத்தில் சொல்லி விடுமுறை வாங்கிக்கொண்டாள்.  தன்னை மெலிதாக அலங்கரித்துக் கொண்டள். ஸின்த்ரானில் பாட்டு அமைத்தாள்.பைக்குள் தேவையான சாமான்களை அடைத்துக் கொண்டாள். டச்போனை எடுத்து வான டாக்ஸியை அழைத்தாள். ஒன்பது பதினைந்துக்கு மேல்மாடிக்கு வந்து காத்திருந்தாள். நிறைய சமயமிருக்கிறது.




திமலா!
அவள் எதிர்பார்த்து ஏங்கிய திமலா!


கணவனுடன் சென்று வரவேண்டும் என்ற ஒரு வருஷ வைராக்கியம்  என் விரதம் இன்று பூர்த்தியாகப் போகிறது.


நித்யா மற்ற பெண்களைப் போல் இல்லை


.
கணவன் மனைவி உறவுக்கு இந்த நூற்றாண்டின் புதிய அர்த்தங்கள் அவளுக்குப் பிடிக்கவிலலை. அயற்சேர்க்கை விழாவுக்கு அவள் போவதே இல்லை.
குருட்டுக் கூட்டுக்கள் அவளுக்கு பிடிக்காது. கணவன் மனைவி உறவில் இன்னும் சில கவிதை கலந்த சங்கதிகள் இருப்பதாகவே நம்புகிறவள்.
அவள் ஜீன்களில் கோளாறு என்று ஆத்மா சொல்லியிருக்கிறான்.




இருக்கட்டும் கோளாறு அவளுக்குப் பிடித்திருக்கிறது. எனக்கு ஆத்மா ஒருவன் போதும், அவனுடன் என் சுக துக்கங்கள் அனைத்தும் ஐக்கியமாகட்டும்.
மெலிதாக பெருமூச்சு விட்டுக்கொண்டு வான டாக்ஸி வந்து வரைந்த வட்டததில் இறங்கி சுவாசித்தது.




நித்யா ஏறிக் கொண்டாள் “எங்கே” என்றான் டாக்ஸி ஓட்டி.


“முதலில் அஜாக்ஸ் கட்டிடம். அங்கே கணவனை அழைத்துக்கொண்டு
திமலா போகவேண்டும்  பத்தே காலுக்குள். உன்னிடம் பூஸ்டர் இருக்கிறதா?”.




“இருக்கிறது. நிறைய சமயமும் இருக்கிறது. அஜாக்ஸ் கட்டிடத்தில் எத்தனை நேரம் காத்திருக்க வேண்டும்?”.




“அதிகப் படியாக ஐந்து நிமிஷம்”


“சரி”


டாக்ஸி நழுவியது.




அஜாக்ஸ் கட்டிடத்தில் இறங்கிய போது ஒன்பது நாற்பது முப்பது.”ஒரு நிமிஷம்” என்று சொல்லி அதிவேக லி·ப்ட்டில் இறங்கி ஆத்மாவின் அறைக்குள் சென்றாள். எப்போதும் போல் அவன் பணம் பேசிக்கொண்டிருந்தான்,




“ஹலோ லண்டன்!  மெட்ரோவில் டாக்டர் டாம்லின்ஸன் வேண்டும். ஹலோ நித்யா”




“நேரமாகிறது கிளம்பு கிளம்பு”




“ஒரு நிமிஷம் டாக்டர் டாம்லின்ஸன் ஆத்மா ஹியர் ஐயம் ஹோல்டிங் எங்கே போகிறோம்?”




“நாசமாப் போச்சு. திமலா!”




“ஓ எஸ் திமலா திமலா நமக்கு அனுமதி கிடைத்து விட்டதல்லவா?.
இன்னும அரை மணி இருக்கிறதே, இதோ வந்துவிட்டேன்”.




ஆத்மாவை ஒரு வழியாக பிடுங்கிக்கொண்டு வர பத்தாகி விட்டது.
பத்து பதினாறுக்கு அனுமதி. நித்யாவுக்கு கவலை அதிகரித்தது. கடவுளே!
போக்குவரத்துக் குழப்பமில்லாமல் போய்ச் சேரவேண்டும்.




“டிரைவர் பத்து பதினைந்துக்கு நங்கள் அங்கே இருக்க வேண்டும்”




“கவலைப் படாதீர்கள் ·ப்யூல் செல்கள் எல்லாம் புதிதாக சார்ஜ் வாங்கியிருக்கின்றன  பூஸ்டர் வைத்திருக்கிறேன். திமலாவில் எந்த ப்ளாட்பார்ம்?”




“புரியவில்லை”




“உங்கள் அனுமதி அட்டை என்ன நிறம்?”




“மஞ்சள்”


“பத்தாவது ப்ளாட்பார்ம்”


வான டாக்ஸி அம்பாக விரைந்தது. அதன் வேக ஈர்ப்புடன் நித்யாவின்
வயிற்றில் எதிர்பார்ப்பின் ஈர்ப்பும் கலந்திருக்கிறது.




ஆத்மாவை முழுசாக பககத்தில் வைத்துக் கொண்டிருக்கிறாள்.




அவனை உரசிக் கொணடாள்




திமலாவுக்கு அவர்கள் வந்து சேர்ந்தபோது பத்து பதிநான்கு நாற்பது.


அப்பாடா!


ஒரு வழியாக வந்து சேர்ந்தோம்.




நீண்ட ப்ளாட்பாரத்தில் அதிகம் சந்தடி இல்லை.


‘திமலாவுக்கு வரவேற்கிறோம்’ என்று ஸோடியம் ஒளிர்ந்தது.




நித்யா வேகமாக நடந்தாள்.




நீண்ட சதுர இயந்திரங்கள் ’உங்கள் அனுமதிச் சீட்டை செருகுங்கள்‘ என்றன.




செருகினாள். உள்ளே அதன் காந்த எண்கள் படிக்கப் பட்டு

” நீங்கள் ஒரு நிமிஷம் முன்னதாக வந்திருக்கிறீர்கள் ஒன்பதாம் எண் கன்வேயரில் செல்லவும்”. சற்று தூரம் நடந்தார்கள். ஒன்பதாம் எண் கன்வேயருக்கு.
ஒரு வரிசை காத்திருக்க மேலே ஒரு ஆரஞ்சு வண்ண விளக்கு பளிச் பளிச்சிட்டது.




‘இன்னும் முப்பது செகண்டுகளில் புறப்படும்’ என்றது ஒலிபெருக்கி ஆத்மாவும் நித்யாவும் அதன்மேல் ஏறிக்கொள்ள சற்று நேரத்தில் ஆரஞ்சு சிவப்பாகி டர்ன்ஸ்டைல் பூட்டிக் கொள்ள ஊஷ் என்ற சப்தத்துடன் பெல்ட் நகர ஆரம்பித்தது.




முதலில் ஒரு மண்டபத்தின் ஊடே விரைந்தது. மேலும் வேகம் பிடித்து மிக மெலிதான கட்டத்துடன் சுற்றி வந்து …கோபுரம் தெரிந்தது.




நித்யாவின் துடிப்பு அதிகரிக்க ஆத்மாவை அப்படியே அணைத்துக் கொண்டாள்.




பிரதான வாசல் திறந்திருந்தது. அவர் இங்கிருந்தே தெரிந்தார்.




நித்யா துள்ளினாள். “பார் ஆத்மா, அவர்தான்!”.




வேகம் குறைந்து சரியாக பத்து பதினாறுக்கு ஆத்மாவும் நித்யாவும சன்னிதியில் அனுமதிக்கப் பட்டார்கள்.




மெலிதாக ஏர்கண்டிஷனரின் மூச்சு கேட்டது அருகே அருகே அருகே சென்றார்கள்.




“அப்பா! என்ன ஜாஜ்வல்யம் என்ன கம்பீரம்!”




“உங்களுக்காக சரியாக இருபது செகண்டு அனுமதிக்கப் பட்டிருக்கிறது
ஆசை தீர சேவிக்கலாம்’என்று குரல் மேலே ஒலித்தது.




அர்ச்சகர் பட்டாடை அணிந்து நெற்றியில் நாமம் அணிந்து “அர்ச்சனை உண்டா? என்ன மொழி?” என்றார்.




“தமிழ்” என்றாள் நித்யா.




அர்ச்சகர் அருகே இருந்த பட்டன்களைத் தொட்டார். மெலிதான இசை பரவியது.




துல்லியமான கணீர் என்ற பெண் குரலில் பாட்டுக் கேட்டது-




“குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
என்றுமே தொழ நம் வினை ஓயுமே”





“சேவிங்கோ சேவிங்கோ! நன்னா கண்குளிரச் சேவிங்கோ சீனிவாசப் பெருமாள்! முன்னெல்லம் திருப்பதி திருவேங்கடம் திருமலைன்னு பேரு.இப்பதான் கம்ப்யூட்டருககுத் தோதா திமலான்னு சின்னதாக்கிட்டா… பூலோக தெய்வம்..பிராசீனமான கோயில்.
நின்ற திருஉருவம் திருமுடியும் தாளும் தடக்கையும்..





கற்பூர ஒளியில் ஆத்மா “த்ரில்லிங்!”என்றான்.

நன்றி - அமரர் சுஜாதா, சிறுகதைகள்,உயிர்மை பதிப்பகம்

BTW, here are the pictures of Sujatha which I took in the Chennai book fair 2006.
Writer Sujatha - Chennai book fair 2006

Thursday, June 28, 2012

சுஜாதா - த்ரில்லர் சிறுகதை - ஜோதியும் ரமணியும்

http://chummaaorublog.files.wordpress.com/2010/02/sujata-portrait.jpg

புதிய பெண் லெக்சரர், ரமணியை எப்படி சமாளிக்கப்போகிறாள் என்று கதி கலங்கிப்போனோம். ரமணி என்று பெயர் இருந்தால் ஒருவன் எப்படி இருப்பான்? குழந்தை முகம், பெண்மை மிளிரும் தேக அமைப்புடன்தானே? தப்பு. இவன் மிலிட்டரி மீசையுடன் காட்டாகுஸ்தி பயில்வான் போல இருந்தான். போதாமல் பலத்த குரல். யாரையாவது விளித்தால் ஹாஸ்டலே அதிரும். சிரிக்கும்போது மட்டும் கண்களில் ரமணி தெரிவான். மற்றபடி காட்டான்.


ஒரு மாதம் லேட்டாகத்தான் சேர்ந்தான். முதலில் அவனை சர்வே கிளாசில் வெளியே ஹாஸ்டலைச் சுற்றி அளக்கும் பயிற்சியில் பார்த்தேன். ‘‘என் பேர் ரமணி. ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங்ல புதுசா சேர்ந்திருக்கேன். கை குடு’ என்றான். குடுத்த கை வெல்லப்பாகு போல் பிசுபிசுவென்றிருந்தது. நான் துடைத்துக்கொள்ள, ‘‘கொஞ்சம் பிடிச்சுக்கோ’’ என்று செயின் சர்வேக்கான சங்கிலியை என்னிடம் கொடுத்துவிட்டு நியூ ஆஸ்டலின் மூலையில் திரும்பி அங்கே ரத்தன்லாலிடம் எனக்குத் தெரியாமல் மறுமுனையைக் கொடுத்துவிட்டு வேறுவழியாக காண்டீனுக்கு போய்விட்டான்

. இருவரும் பேந்தா மாதிரி ஒரு மணி நேரமாகசெயினைப் பிடித்துக் கொண்டு நிற்கிறோம். ‘என்னடா’ என்று பட்டூஸ் என்கிற பட்டாபிராமன் விசாரித்ததில் ரமணி அந்தப் பக்கம் இருக்கிறான். அளந்துகொண்டு இருக்கிறான் என்று இருவரும் சொல்ல, விசாரித்ததில் கேண்டீனில் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். ‘‘நானா! நீ வேற யாரையோ சொல்ற! எனக்கு சர்வே கிளாஸே கிடையாதே!’’ என்று சாது முகத்துடன் புளுகினதிலிருந்து அவனைக் கண்டாலே நானும் ரத்தன்லாலும் ஒதுங்கினோம். அந்த சம்பவத்தின் அவமானம் கலைய மூன்று மாதமாயிற்று.


ரமணி எப்போது யாரை எப்படிக் கவிழ்ப்பான் என்பது யாருக்கும் தெரியாது. சிறு நாடகங்களாடுவது அவனது இயற்கை. சின்ன விஷயத்துக்குக்கூட பொய் சொல்வான். மணி என்ன என்றால், அரை மணி கூட்டிச் சொல்வான். திங்கள்கிழமையை வியாழக்கிழமை என்பான். புதிய ஆட்களைச் சந்திக்கும்போது முத்தரையன், ரமணி ஐயர், அல்டாப் உசேன் என்று இஷ்டத்துக்கு பேர் மாற்றிச் சொல்வான். சொந்த ஊர் கேட்டால் ஒரு நாள் ஹைதராபாத், ஒரு நாள் சின்னாளம்பட்டி, ஒரு நாள் மொரிஷியஸ். நிஜப் பெயர் ரமணிதானா என்று எங்களுக்கு ரொம்ப நாள் சந்தேகமாக இருந்தது.


திடீர் என்று மொட்டை போட்டுக்கொள்வான். இட்லி விழுங்கும் போட்டியில் மற்ற பேர் பதினைந்து இட்லியிலேயே தவித்துக்கொண்டு இருக்கையில் ரமணி லேட்டாக மெஸ்ஸக்கு வந்து சேர்ந்துகொள்வான். நாற்பது இட்லி போடச் சொல்லி சாம்பாரில் குளிப்பாட்டி கவளம் கவளமாக ஆக்கிக்கொண்டு கன்னங்களின் இடுக்கிலேயே வைத்துக்கொள்வான். போட்டிக்கான நேரம் தீர்ந்ததும் துப்பிவிட்டு இன்னும் இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு எழுந்து செல்வான். ஹாஸ்டல் தினத்தின்போது மார்க்கருடன் ராயபுரத்திலிருந்து சாராயம் வாங்கி வந்து டென்னிஸ் கோர்ட்டில் நெற்றியில் கர்ச்சீப் கட்டிக்கொண்டு ‘‘மார்க்கர் வருத்தப்படாதே! சரோ வரேன்னு சொல்லிவிட்டு வரலை பாரு. அதான் ரொம்ப துக்கம். எனக்கு ஒரு தேவாங்கு மட்டும் வாங்கிக் கொடுத்துரு’’


மார்க்கர், ‘‘கவலைப்படாதே தம்பி! சரோசா இல்லைன்னா சரசாவை இட்டாரேன்’’


‘‘எங்க இருக்கா சொல்லு’’ இவ்வாறு திரும்பத் திரும்ப உரத்த குரலில் அலம்பிக்கொண்டு இருப்பார்கள். ஒரு பத்தி நாடகம் போல இருக்கும். பிறகு ‘‘மார்க்கர், இப்டியே போ, ரெண்டு லைட்டு தெரியுது பாரு. அதுக்கு மத்தியில் நடந்து போ’’ என்று அனுப்புவான். சற்று நேரத்தில் ‘க்றீச்’ என்று ப்ரேக் சப்தம் கேட்கும்.


‘‘மார்க்கர் போய்ட்டான்டா’’


‘‘அவனா… அவன் ஏன் சாவறான். இன்னும் எவ்வளவு ஜிஞ்சர் அடிக்கணும் அவனுக்கு’’.

‘‘ரமணி தேவாங்கு வளக்கப் போறியா?’’

‘‘ஆமாடா’’

‘‘யார்ரா சரோ?’’

‘‘என் உயிர்க் காதலி. பேங்க்ல வேலைசெய்றா’’

‘‘எந்த பாங்க்?’’

‘‘ப்ளட் பாங்க்’’ என்று சிரித்தான்.

நியூ ஹாஸ்டலில் வடக்கத்தி மாணவர்களிடையே கைகலப்பு நேர்ந்தபோது ரமணி இடையே புகுந்து கையெடுத்துக் கும்பிட்டு சண்டையைச் சரளமாக இந்தி கவிதைகள் பேசி நிறுத்தினான். மற்றொரு சந்தர்ப்பத்தில் ப்ரேம் மல்ஹனை வெட்டக் கத்தியை எடுத்துக்கொண்டு துரத்தினான். வளாகத்தில் ஓடிப்பிடித்து அவன் கழுத்தில் கத்தி வைத்துவிட்டு சற்று யோசித்து, ‘‘கை குடு! வியாழக்கிழமை நான் கொல்றதில்லை’’ என்றான்.


முதல் செமஸ்டருக்குள்ளே அவனைக் கண்டாலே மற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் அலறத் தொடங்கி னார்கள். கிளாசுக்கு வரும்போது ஒரு ஜிம்மி நாய் கூட வந்து காத்திருக்கும். சிலவேளை உள்ளே எட்டிப் பார்க்கும். ‘‘வரேண்டா அவசரப்படாதே’’.


யாரைச் சந்தித்தாலும் கையை முதுகுப் பக்கம் முறுக்கி வலிக்கிறாற் போல் செய்துவிட்டுத்தான் விடுவான். ஏதாவது பதில் சொன்னால் நேராக அடிமடி மர்மஸ்தானத்தில் கை செலுத்தித் திருகுவான். நாம் துடிப்பதைக் கண்டு கண்ணீர் வரச் சிரிப்பான். அதீத பலாத்காரன். தொடாமல், அடிக்காமல், முதுகில் குத்தாமல், கன்னத்தில் தட்டாமல், அங்கே பிடிக்காமல் அவனால் பேசவே முடியாது!


பரீட்சை பேப்பர் திருத்துபவரை ஒருமுறை ரயிலிலிருந்து தள்ளுவதாகப் பயமுறுத்தியதில், ரமணி எல்லா சப்ஜெக்டிலும் பாஸ். கெமிஸ்டரி கிருஷ்ணசாமி ஒருமுறை வெற்றுப் பேப்பருக்கு நாற்பத்தைந்து போட்டார். ஓரத்தில் இரண்டு வரிதான் எழுதியிருந்தான்… ‘‘பட்டா, மார்க் போடலை… தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்ல தள்ளிடுவேன்’.’ தண்டவாளத்துக்குப் பக்கத்தில் இருந்ததால் அத்தனை ரெயில்களும் ஹாஸ்டலுக்கு அருகில் அலறிக்கொண்டு செல்லும். ‘‘எதுக்கப்பா பொல்லாப்பு, ரெண்டு பொண்ணு, வயசான அம்மா இருக்கா. கிறுக்குப் பய ஒண்ணு கிடக்க ஒண்ணு செய்துட்டான்னா?’’ என்று மார்க் போட்டு விட்டார்.


திடீர் என்று ராத்திரி ஒன்பதரைக்கு ‘‘வா ஓடியன்ல புதுப் படம் போலாம்’’ என்று எல்லாரையும் திரட்டிக் கொண்டு ஸ்டேஷனுக்குப் போவோம். ரமணி, ‘‘டிக்கெட் வாங்கிட்டு வரேன்’’ என்று படியேறிவிடுவான். ட்ரெய்ன் வந்து எல்லோரும் ஏறிக்கொள்ள அது நகர்ந்ததும் ரமணி எங்கள் தேசிய கீதமான ‘‘முண்டபக்கற மாரபக்கற ஓய் ஓய் ஓய்! சைதாப்பேட்டை க்ரோம்பேட்டை ஓய் ஓய் ஓய்!’’ சொல்லியபடி இறங்கி, ‘‘டேய் டிக்கெட் வாங்கலைடா, போய்ட்டு வாங்க’’ என்று டாட்டா காட்டுவான்.


இவன் கொட்டம் தாங்க முடியாமல் அத்தனை பேரும் உள்ளம் கொதித்துக்கொண்டு இருந்தாலும் அவனை நேர்கொள்ளும்போது நேசிக்காமல் இருக்க முடியவில்லை. நம் எல்லோரிடமும் உள்ள கோகுல கிருஷ்ணனின் விஷம இச்சை காரணமாக இருக்கலாம். இந்நிலையில் முதன்முதலாக ஆண்கள் காலேஜில் ஒரு பெண் லெக்சரராக சேரப்போகிறாள் என்று தெரிந்தபோது கதிகலங்கிப் போனோம். எப்போது ராஜினாமா கொடுப்பாள், மூணு நாளா… ஒரு வாரமா? என்று ரமணி இல்லாதபோது பந்தயம் கட்டி னோம்.


‘‘எலக்ட்ரானிக்ஸ் லெக்சரர்றா… ரமணி ஆட்டோ. அதனால ப்ரச்னை வராது’’ என்றேன்.

‘‘ஹாஸ்டல்ல ரூம் கொடுக்கப் போறாங்களாம்.

‘‘போச்சுரா.

’’
அவளை முதலில் ஸ்டேஷனில் வைத்துத்தான் பார்த்தோம். இந்த வருஷம்தான் பாஸ் பண்ணியிருக்க வேண்டும். படிப்பிலேயே கவனமாக, உடம்பை பார்த்துக்கொள்ளாமல் இருந்திருக்கிறாள் போல. மொத்தமே பத்து கேஜிதான் இருந்தாள். அஞ்சடிக்கு ஒரு அங்குலம்தான் மிஞ்சியிருந்தாள். பலமாக ஊதினால் விழுந்துவிடுவாள். ரமணி அவளை ஒற்றைக் கையால் தூக்கிவிடலாம். யாராவது காதலிக்க வேண்டும் என்றால் மிகுந்த கற்பனை வேண்டும் என்று தோன்றியது.


‘‘குழந்தைடா அது’’ என்றான் நித்யானந்தன். ‘இரு’ என்றான் ரமணி. அவள் வந்து சேரும்போதே, ரமணியை சந்திக்கும் துரதிர்ஷ்டமாகிவிட்டது. சபர்பன் ரயில் நிலையத்தில் புது ஜமக்காளம் சுற்றின படுக்கையும் தகரப் பெட்டியும் நடுவயதுத் தந்தையுமாக வந்து இறங்கியபோது, ரமணி ரெயில்வே பெஞ்சில் சிகரெட் கடைக்காரனிடம் கடன் சொல்லிக்கொண்டு இருந்தான். ‘‘குடுக்கலைன்னா என்ன ரமணி? ஒண்ணாம் தேதி குடு. அதுக்கு எதுக்கு கையை முறுக்கறே!’’

‘‘எக்ஸ்க்யூஸ் மி! ஹாஸ்டலுக்கு எப்டி போகணும்?’’

ரமணி சட்டென்று அஜித்குமாரின் கறுப்புக் கண்ணாடியை அணிந்துகொண்டு என் தோளைப் பிடித்துக்கொண்டு அருகே சென்று ‘‘ஐயா எனக்கு அனகாபுத்தூர் போகணும். மெயின் ரோட்டுக்கு போகணும்… கண் தெரியலை. கூட்டிட்டுப் போறீங்களா?’’


‘‘ஸாரி ஸாரி’’ என்றாள்.


‘‘இவன் பேரு மோகன்தாஸ் காந்தி. எனக்காகப் பரீட்சை எழுதுவான். ஸ்பெஷல் பர்மிஷன் கொடுத் திருக்காங்க’’


‘‘மன்னிச்சுக்கங்க. நாங்களே குரோம்பேட்டைக்குப் புதுசு. உங்க பேர்?’’

‘‘அனகாபுத்தூர் அழகேசன்’’.


அனைவரும் சிரிப்பை அடக்கி கொள்வதைப் பார்த்தாள்.

‘‘அனகாபுத்தூரா?’’ என்று நான் வியக்க, ‘‘சும்மாரு’’ என்று அதட்டினான்.


‘‘எதிர்லயே ஹாஸ்டல் தெரியறதே’’ என்றாள்.

‘‘பர்ஸ்ட் இயரா நீங்க?’’ என்றான்.

‘‘இல்லை, லெக்சரரா சேர வந்திருக்கேன்’’.

‘‘லெக்சரரா?’’ என்று அட்டகாசமாகச் சிரித்தான். தந்தை ‘‘ஜோதி! வா, கண்டவாளோட பேசாதே!’’

ரமணி எழுந்து அப்பனின் சட்டையைப் பிடித்தான்.

‘‘என் பேரு கண்டவன் இல்லை. மரியாதையா பேரு கேளு. தி நேம் இஸ் எல்.ரமணி’’

‘‘ஏய் சட்டையை விடு’’.

ரமணி, ‘‘டேக் இட் ஈசி. நீங்க போங்க சார். பாப்பா பயந்துக்கப் போறது. இப்படியே மேம்பாலத்தைக் கடந்தா அந்தப் பக்கம் குறுக்கு வழி இருக்கு’’.


‘‘என் பேர் கண்டவனாடா?’’

‘‘கண்டுக்காதே ரமணி’’.

‘‘வாம்மா, ஸ்டேஷன் மாஸ்டரைக் கேக்கலாம்’’.

‘‘கணபதி ஐயர்! உம்ம பொண்ணு எப்படி சேர்றான்னு பாத்துர்றேன்!’’ என்றபோது ‘‘என்ன நீ மரியாதை இல்லாமப் பேசறே?’’ என்று அந்த பெண் ரமணியை அதட்டினாள். சற்று நேரம் பூமி சுழல்வது நின்றது.


இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்கள். நாங்கள் பயந்துகொண்டு ரமணியை பார்க்க, அவள் யதார்த்தமாக, ‘‘அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் இருக்கு. என்னைத் தடுக்க நீ என்ன டைரக்டரா?’’


ரமணிக்கு இது புதுசு. இது வரை அவனை எதிர்த்தோ, ஏன் சமமாகவோகூட யாரும் பேசியதில்லை.


‘‘வா ஜோதி’’.

‘‘ஜோதியா? கவனிச்சுக்கறேன்.’’


ஜோதி ரிஜிஸ்ட்ராரிடம் பொறுப்பேற்ற கையோடு நடந்ததை ஒரு புகார் கடிதமாக எழுதிக் கொடுத்தாள். அப்போது ஆரம்பித்தது யுத்தம். டைரக்டர், ரமணியைக் கூப்பிட்டு விசாரித்திருக்கிறார். ‘‘உன்னைப்பற்றி கேள்விப்பட்டிருக்கேன். ரொம்ப ப்ராக்டிக்கல். ஜோக்ஸ் செய்றியாம். மனசுக்குள்ள என்னன்னு நினைச்சுட்டிருக்கே? ஒழுங்கா படிச்சு வெளிய வரணுமா? டிஸ்மிஸ் ஆகணுமா?’’


ரமணி தாசனுதாசனாக ‘‘சார் இனிமே அந்த மாதிரி கம்ப்ளெயிண்ட் வராது. இது உறுதி. எனக்கு எதிரிகள் யாரும் கிடையாது. விசாரிச்சுப் பாருங்க. ஸ்டேஷன்ல என் சாயல்ல ஒரு பிச்சைக்காரன் இருக்கான் சார். அவன் பேரும் ரமணி. அவனைப் பத்திதான் என் மேல குற்றம் சொல்லியிருக்காங்க. புதுசில்லையா? காலைலதான் ஊர்லருந்து வந்தேன்’’


‘‘அந்தக் கதையெல்லாம் வேண்டாம். ஸ்டேஷன்ல மிஸ் ஜோதிகிட்ட நீ நடந்ததுக்கு மன்னிப்புக் கேட்டு கடிதம் எழுது முதல்ல.’’


‘‘எழுதலைன்னா என்ன ஆகும் சார்… தெரிஞ்சுக்கலாமா?’’


‘‘உன்னை சஸ்பெண்ட் பண்ண வேண்டியிருக்கும்.’’.


‘‘வேண்டாம் சார். எங்கம்மா அப்பா உயிரை விட்டுருவாங்க. ரெண்டு பேருக்கும் ஹார்ட் வீக். எந்த பேப்பரைப் வேணா காட்டுங்க. கையெழுத்துப் போட்டுத் தரேன்.’’


அந்தக் கடிதத்தில் ‘‘சாது ரமணதாஸ், கேம்ப் மெட்ராஸ் 44’’ என்று கையெழுத்துப் போட்டான்.


அந்தப் பெண் இரண்டாம் வருஷத்துக்கு எலக்ட்ரானிக்ஸ் பாடம் எடுத்தபோது வகுப்பில் வந்து ரமணி உட்கார்ந்தான். அவனைப் பயத்துடன் பார்த்தோம்.


‘‘ரமணி இது உன் க்ளாஸ் இல்லை’’

‘‘அட ஜோஜோ… எப்படி சொல்லிக் கொடுக்கறதுன்னு டைரக்டர் ரிப்போர்ட் கேட்டிருக்கார்’’.

ஜோதி, ‘‘தி பீரியட் ஆஃப் தி மல்ட்டி வைப்ரேட்டர் இஸ் ஒன் பை ஸி ஆர்’’ என்றபோது, ‘‘உன் பீரியட் எப்ப?’’ என்றான். அவள் எழுதுவதை பாதியில் நிறுத்தி கரும்பலகையிலிருந்து திரும்பிப் பார்த்தாள். ‘‘ரமணி, இது உன் கிளாஸ் இல்லை. இப்ப வெளிய போ’’ என்றாள்.


‘‘நான் ஃபேகல்ட்டி மாத்திட்டேன். இப்ப எலக்ட்ரானிக்ஸ்’’.
‘‘கிளாஸ் ரிஜிஸ்டர்ல உன் பேர் இல்லை. போ… கெட் அவுட்.’’

‘‘நீயே எழுதிக்க என் பேரை. எல்.ரமணி. டி.நம்பர் 504. இல்ல கொடு, நான் எழுதறேன்’’.

ரிஜிஸ்தரில் தன் பெயரை எழுதினான். ‘‘லேடி லேடி, எங்கிட்ட வாடி. எல்லாம் சொல்லித் தாடி’’

ஒரு கணம் அவனையே கோபமாகப் பார்த்தாள். அந்த எளிய முகத்தில் அத்தனை கோபம்தான் சாத்தியம் என்பதுபோல் சட்டென்று கண்களில் நீர் நிரம்பியது. எத்தனை சபைகளில் எத்தனைப் பெண்கள் அவமானப்பட்டிருக்கிறார்கள். அவர்களது ஒட்டுமொத்தமான பிரதிநிதிபோல சரித்திரம் கடந்து சற்றுநேரம் நின்றாள். பிறகு சாக்பீஸ் கையைத் துடைத்துக்கொண்டாள்.


‘‘தங்கைகளைப் படிக்கவெக்க முதமுதலா வேலைக்கு வந்து சேர்ந்திருக்கேன். ஏன் இப்படிப் படுத்தறீங்க?’’ என்றாள்.

ரமணி ‘‘டேய் படுத்தாதீங்கப்பா. எத்தனை தங்கைங்க?’’ என்றான். சிகரெட் பற்றவைத்தான். பெஞ்சின் மேல் கால் போட்டுக்கொண்டு ஊதினான். எதிர்பாராதவிதமாக ஜோதி என்னைப் பார்த்து, ‘‘576, நீ போய் ரிஜிஸ்ட்ராரைக் கூட்டிட்டு வாப்பா’’ என்றாள்.

ரமணி என்னைப் பார்த்து, ‘‘ரங்குஸ், பலி விழும்’ என்றான்.

நான் மௌனமாக இருக்க, ‘‘கிளாஸ்ல நாப்பது பேர் இருக்கீங்க.. யாருக்கும் தைரியம் இல்லையா?’’ என்றாள். துரியோதனின் சபைபோல மௌனம்,.
‘‘நான் போறேன் மிஸ். எங்கிட்ட லெட்டர் குடுங்க’’ என்றான் ரமணி
அவளே போர்டை அழித்துவிட்டு டைரக்டரைச் சந்திக்கச் சென்றாள்.
மறுநாள் நோட்டீஸ் போர்டில் எல்.ரமணியின் மேல் மூன்று குற்றச்சாட்டுகள் பட்டியலிட்டிருந்தது. ‘தப்பான வகுப்பறையில், தவறான வார்த்தை
கள் பேசினது, வகுப்பில் புகை பிடித்தது. விசாரணை முடியும் வரை ரமணிக்கு வகுப்புகளில் நுழைய அனுமதி இல்லை’ என்று அறிவித்தது.
அதன் பிரதியை ப்யூன் கொண்டு வந்து கொடுக்க ரமணி அவனைத் துரத்தி அடித்தான். ‘‘வக்காளி, எனக்கு நோட்டீஸ் குடுக்க வைஸ் சான்சிலர் தாண்டா வரணும். எல்லாத்தையும் எல்லாரையும் பத்தவைக்கிறேன் பாரு. சிட்டில உள்ள அத்தனை காலேஜ்லயும் ஸ்ட்ரைக்’ என்று ஆபீஸ் வளாகத்தில் சத்தம் போட்டான்.

அப்படி ஏதும் நிகழவில்லை. ஹாஸ்டலிலிருந்து புறப்பட்டுச் சென்றான். நடுராத்திரியில் திரும்பி வந்து ஜோதி தங்கியிருந்த ஹாஸ்டல் அறைக்கு முன் சத்தம் போட்டான். ‘‘வெளிய வாடி ஏய்!’’ என்று கல்லெறிந்தான். புது ஹாஸ்டல் கட்டுவதற்காகக் கட்டியிருந்த தற்காலிக நீர்த் தொட்டியில் குதித்து ஈரமாக வந்து அவள் கதவைத் தட்டினான். ‘‘ஜோதி ஏய் ஜோதி, ரியலி சாரி ஜோதி. எனக்குப் பேதி ஜோதி. நான் ஏன் அப்படின்னு வெளிய வந்தா சொல்றேன். ஐ லவ் யு ஜோதி!’’

அந்த அறை இருட்டாக மௌனமாக இருந்தது. முதல் மாடியிலிருந்து டிசௌஸா, மொரைரா, வெங்கடேசன், நான் எல்லோரும் அவனைச் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றோம். அந்த அறையில் சலனமே இல்லை. பாவம் அந்தப் பெண், கிலியில் நடுங்கிக்கொன்டு சுருண்டு உட்கார்ந்திருக்க வேண்டும்.


ஹாஸ்டலிலிருந்து வகுப்பறைக்குச் செல்லும் பாதையில் சரக்கொன்றை மரங்களும் செம்பருத்தியும் நிழல் தரும் ஃபுட்பால் மைதானத்தில் ஒரு டக்கோட்டா ஏரோப்ளேன் இருக்கும். பேருந்துகளின் பணிமனை ஒன்று இருக்கும். ஜோதி அவ்வழியே தன் வகுப்புக்குப் பாடம் எடுக்கச் சென்ற போது, ஒரு புல்லட்டில் கடகடவென்று புழுதி பறக்க ஓட்டிவந்து அவளருகில் சுற்றி நிறுத்தி, ‘‘வா வா, க்ளாஸ்ல கொண்டுவிடறேன்’’. அவள், ‘‘என்கூட பேசாதே’’ என்று விரைவாக நடக்க, அடிக்கடி த்ராட்டிலை விர்விர் பண்ணிக்கொண்டு பாடிகார்டு போல கூடவே ஓட்டி வந்தான்.


அவள் மேலாடைத் தாவணியைப் பிடித்து இழுத்ததாக ஜோதி தன் புகார் கடிதத்தில், போலீஸ் எழுதச் சொன்னார்கள். பாதுகாப்பு கேட்டிருக்கிறாள். பல்லாவரம் ஸ்டேஷனிலிருந்து இன்ஸ்பெக்டர் வந்தார். டைரக்டரின் அலுவலகத்திலும் அவர் க்வார்ட்டர்ஸிலும் போலீஸ்காரர்கள் நின்றார்கள். டைரக்டருக்கு மகா கோபம். மன்னிப்பே கிடையாது என்று வி.சி. ஆபிஸக்கு எழுதி பர்மிஷன் வாங்கி கேம்பஸைவிட்டு நீக்கி மூணு வருஷம் ரஸ்டிகேட் பண்ணும்படி சிபாரிசு செய்தார். லெக்சரர் டி.எம்.டி. ஜோதியைப் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக அவனை அரெஸ்ட் பண்ண போலீஸ் வாரண்ட்டுடன் வந்திருந்தார்கள்.


ஹாஸ்டலில் ரமணியைத் தேடினால் காணவில்லை. மாணவர்கள் அனைவரும் பரபரப்பாக முடிச்சு முடிச்சாகக் கூடி இருக்க, டைரக்டரிடம் இந்த தடவை மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டோம்.


அவர், ‘‘படிக்கிற பையன், ரேங்க் வாங்குற பையனுக்கு மன்னிப்பு கேளுங்கப்பா. இந்தப் பொறுக்கி எல்லாரையும் கொடுமைப்படுத்திருக்கான். இவனை யாராலயும் காப்பாத்த முடியாது.’’.

‘‘இருந்தாலும் இத்தனை கடுமையாத் தண்டிக்கணுமா?’’

‘‘இது குறைந்தபட்சத் தண்டனை. யூனிவர்சிட்டி ரூல்ஸ் அப்படி’’ என்றார்.

‘‘யாராவது ரமணிகிட்ட போய்ச் சொல்லி ஊருக்குப் புறப்பட்டுப் போகச் சொல்லிரலாம்’’ என்று யோசனை சொன்னார்கள். ‘‘இல்லைடா, அவனை ஒருமுறை உள்ள தள்ளினால்தான் புத்தி வரும்’’

‘‘மூணு வருஷம் டீபார் பண்றது தப்புடா. அவன் வாழ்க்கையே பாழாகிடும்’’.

ரமணி லோக்கல் ட்ரெய்னிலிருந்து இறங்கி தூரத்தில் வந்துகொண்டு இருக்க, அவனை நோக்கி ஓடினேன். ‘‘ரமணி இப்படியே ஊருக்குப் போய்டு. உன்னை அரெஸ்ட் பண்ண போலீஸ் வந்திருக்காங்க.’’

‘‘அப்படியா? வெரிகுட் வெரிகுட்… எங்க?’’

‘‘டைரக்டர் ஆபிஸ்ல… போய்டுரா.’’

‘‘தேவையில்லை. யார் அந்த இன்ஸ்பெக்டர்? விசாரிக்கிறேன்.’’

‘‘ரமணி உன்னை மூணு வருஷம் டீபார் பண்ணிருக்காங்க. ஜெயில்ல போடுவாங்க. இது விளையாட்டில்லை புரியுதா?’’

‘‘என்னடா தப்புப் பண்ணிட்டேன்? எதுத்தாப்பல பஸ் வருது. ஒதுங்கிக்கன்னு அந்தப் பொண்ணைத் தொட்டேன், அவ்வளவுதான்’’.

‘‘நம்பச் சொல்றியா? ஏன் இப்படி மரமண்டையா இருக்கே ரமணி?’’

‘‘பாரு, நம்பாட்டிப் போங்க. ஐ டோண்ட் கேர்’’.

‘‘ரமணி சாரிடா’’.

‘‘நானே சாரி இல்லை. நீ ஏண்டா சாரி. ஜோதி அக்கா… எப்படி இருக்காங்க?’’

‘‘பயத்துல இன்னிக்கு பூரா கிளாஸ் வரலை. டைரக்டர் ஆபீஸ்லயே இருக்காங்க.’’

‘‘போய்ப் பார்த்தாகணும்’’.

‘‘வேண்டாம் ரமணி’’.

‘‘போடா!’’
டைரக்டர் ஆபீசில் எதிர்ப்புக் குரல் கொடுத்தோம். ‘‘ரமணி ரமணி’ என்று கோஷமிட்டதும் ரமணி அரசியல் தலைவன்போல வணங்கிவிட்டு ‘உங்களுக்கெல்லாம் நண்பர்களே, ரோஷமுள்ளவர்களே! நாட்டுக் கட்டைகளே! என் மேல இருக்கிற அக்கறைக்காக ஆளுக்கொரு ஏக்கரா நிலம் ஜூலியஸ் சீஸர் உங்களுக்கு கொடுத்தாச்சு பழவந்தாங்கல்ல. தட்டுங்கடா கையை! வாழ்க ஜோதிபாய். மெஸ்ல நெய் ரோஸ்ட் போடச் சொல்லு. இப்ப வந்துர்றேன்’’ என்று உள்ளே சென்றான்.


உள்ளே என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஒரு மணி நேரம் கழித்து முதலில் இன்ஸ்பெக்டர் வெளியே வந்து ஜீப்பில் ஏறிக்கொண்டார். கண்களைத் துடைத்துக் கொண்டு ரமணி மெல்லத்தான் வெளியே வந்தான். அவன் கையில் விலங்கு மாட்டினதுபோல் கர்ச்சீப் கட்டியிருந்தான். அதைச் சடுதியில் பிரித்து அவிழ்த்து, ‘‘த்ரீ சியர்ஸ் டு ஜுலியஸ் சீஸர், ஹிப் ஹிப் ஹ§ர்ரே, முண்ட பக்கற மார பக்கற ஓய் ஓய் ஓய்!’’ சொல்லிவிட்டு இரு கைகளையும் உயர்த்தி ‘‘கை தட்டுங்கடா. எல்லா ஆர்டரையும் வாபஸ் வாங்கிட்டாங்க. போலீஸ் கேஸ§ம் வாபஸ்’’.


நாங்கள் குதூகலத்துடன் ‘‘என்னம்மா…எப்படி?’’


‘‘ஒரே ஒரு பொய் சொன்னேன். சால்வ் ஆயிருச்சு. நமக்குக் கைவந்த கலையாச்சே’’


‘‘என்னடா சொன்னே?’’


‘‘எனக்கு லுக்கிமியா… ஆறு மாசத்தில சாவப்போறேன். அந்த துக்கத்தை மறக்கத்தான் இந்த தமாஷ் எல்லாம் செய்தேன்னேன். டைரக்டர் அப்படியே அழுதுட்டார். அந்தப் பெண்ணும் தேம்பித் தேம்பி அழுதுது. பாரு எம்மேல சாஞ்சுகிட்டு அழுததில சட்டையெல்லாம் ஈரம்! எல்லா புகாரையும் வாபஸ் வாங்கிடுத்து. இன்ஸ்பெக்டர்கூட புறப்படறப்ப ஓரக்கண்ணைத் துடைச்சுகிட்டுத்தான் போனார். பாத்தியா? இந்தா சாப்பிடு’’ என்று வேர்க்கடலை கொடுத்தான்.


அதை உடைத்தபோது உள்ளே எதிலும் பருப்பு இல்லை! ரமணியின் மற்றொரு ஏமாற்று வித்தை.


‘‘டேய் போறுண்டா. இனிமேலாவது பொய் சொல்றதை விட்டுருடா.’’


‘‘பொய்தாண்டா என் உலகத்தை சுவாரஸ்யமாக்கறது. பொய் இல்லைன்னா வாழ்க்கையே … உலகமே இல்லை!’’ என்றான்.


மூன்றாவது செமஸ்டருக்குள் ஜோதி ராஜினாமா கொடுத்து விட்டாள். கல்யாணம் பண்ணிக் கொண்டு அமெரிக்கா போய் விட்டதாகச் சொன்னார்கள்.

ஊருக்குப்போன ரமணி மூன்றாவது செமஸ்டருக்கு வந்து சேரவே இல்லை. அதன்பின் அவனை நாங்கள் பார்க்கவே இல்லை. ஏன் என்று விசாரிக்கப் பயமாக இருந்தது.


நன்றி - அமரர் சுஜாதா, உயிர் மெய்,சிறுகதைகள்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgL14wJu9e9O_PLdPtcyr__0Bk2HIaKfgjWPOmr1JYNm_Nfpv3E5faZsQnxaErcOkENBT1dVhOhxIq7OFFpoKG2rT796s7YSeFBM92d9GppyHCM2Y6bfkhh_G_EP4PJZqGNDckF_FdC827k/s320/writer+sujatha+family+2.jpg