Showing posts with label கிச்சன் கில்லாடிகள். Show all posts
Showing posts with label கிச்சன் கில்லாடிகள். Show all posts

Sunday, June 12, 2011

வெண் பொங்கல்,கோதுமை தோசை ,வெந்தயக் குழம்பு செய்வது எப்படி?

1.கோதுமை தோசை மிக்ஸ் 


தேவையானவை: கோதுமை மாவு - 200 கிராம், அரிசி மாவு - 150 கிராம், சீரகம், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன்.

தோசை செய்ய: கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவு, அரிசி மாவு, சீரகம், மிளகாய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து வைத்துக் கொள்ளவும். தோசை தேவைப்படும்போது, இந்த மாவுடன் உப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு, தோசை மாவு பதத்தில் கரைக்கவும். சூடான தோசைக்கல்லில் மாவைப் பரவலாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, மொறுகலானதும் திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுக்கவும்.

இதற்கு இட்லி மிளகாய்ப்பொடி, சட்னி சரியான சைட் டிஷ். மாதக்கணக்கில் இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம். .


2.  வெண் பொங்கல் மிக்ஸ்

தேவையானவை: பச்சரிசி - 150 கிராம், பாசிப்பருப்பு - 75 கிராம், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், முந்திரி - 10, உலர்ந்த கறிவேப்பிலை, காய்ந்த இஞ்சித் துண்டுகள், பெருங்காயத்தூள் - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுக்கவும். மிளகு, சீரகத்தை வறுத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும். கறிவேப்பிலை,   இஞ்சித் துண்டுகள், பெருங்காயத்தூளை சேர்த்து வறுக்கவும். எல்லாவற்றையும் அரிசி, பாசிப்பருப்புடன் சேர்த்து ஒன்றாக கலந்து வைக்கவும்.

பொங்கல் தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் பொங்கல் கலவையுடன், உப்பு, தண்ணீர் சேர்த்து (ஒரு பங்கு கலவைக்கு நான்கு பங்கு தண்ணீர்) குக்கரில் வைத்து, 5 அல்லது 6 விசில் வந்ததும் இறக்கவும். மேலாக நெய் விட்டு பரிமாற வும். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

 3.. மிளகு ரச மிக்ஸ் 

தேவையானவை: மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - 2 டேபிள்ஸ்பூன், தனியா - ஒன்றரை டேபிள்ஸ்பூன், வெயிலில் காயவைத்த புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, பூண்டுப் பல் - 4, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, நெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.  
செய்முறை: வெறும் கடாயில் புளியை நன்றாக வறுக்கவும். மிளகு, சீரகம், தனியா ஆகியவற்றை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனுடன் வறுத்த புளியைச் சேர்த்து அரைத்து, எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து வைக்கவும்.
ரசம் தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடி, தேவையான தண்ணீர், உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்க வைக்கவும். நன்றாக நுரை வந்ததும் இறக்கி, நெய்யில் பூண்டை வதக்கிச் சேர்க்கவும்.
ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

 4..வெந்தயக் குழம்பு 

தேவையானவை: வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன், குழம்பு மிளகாய்த்தூள், குழம்பு வடகம் - தலா 2 டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - 2, மஞ்சள்தூள், வெல்லம், கறிவேப்பிலை - சிறிதளவு, உரித்த பூண்டு - ஒரு கைப்பிடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெந்தயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். காய்ந்த மிளகாயையும் சேர்த்து வறுத்து, தனியே எடுத்து வைக்கவும். சிறிது எண்ணெயில் பூண்டு, குழம்பு வடகத்தை சிவக்க வறுத்து... வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, புளியைக் கெட்டியாக கரைத்து விடவும். உப்பு, மஞ்சள்தூள், குழம்பு மிளகாய்த்தூள், வெல்லம் இதில் சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.  

குழம்பு கொதிக்கும்போது வீடே மணக்கும். இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.  

குறிப்பு: சாதத்துடன் சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.

இஞ்சி புளி 

தேவையானவை: இஞ்சி - 50 கிராம், பச்சை மிளகாய் - 10, கெட்டியான புளிக் கரைசல் - 50 கிராம், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இஞ்சியைத் தோல் சீவி, பொடியாக நறுக்கி, ஒன்றிரண்டாக இடிக்கவும். பச்சை மிளகாயையும் இடித்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து... நசுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, சுருள வதக்கவும். இதில் புளிக் கரைசல், உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
இதை தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம். ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

நன்றி - அவள் விகடன்