அன்புள்ள இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் அவர்களுக்கு,
வணக்கம்.நான் உங்கள் பரம ரசிகன்.மின்னலே படத்தில் வசீகரா பாட்டும் ,படமாக்கபட்ட விதமும் காதலை காதலோடு பார்க்க வைத்தது.விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவுக்கு புனர் ஜென்மம் கொடுத்தீர்கள். த்ரிஷாவை மிக அழகாக காட்டினீர்.இன்னும் உங்கள் பெருமையை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் எல்லாவற்றையும் மறக்கடித்து விடது உங்கள் லேட்டஸ்ட் படம் நடு நிசி நாய்கள்.
ஊர் உலகத்துல நடக்கறதைத்தானே காட்டறேன் என நீங்கள் சால்ஜாப்பு சொல்லலாம்.சமூகத்தை திருத்தத்தான் ஒரு விழிப்புணர்வுப்படமா எடுத்தேன் என நீங்கள் எஸ்கேப் ஆகலாம்.ஆனால் நான் கேட்கும்,இந்த சினிமா ரசிகர்கள் கேட்கும் கேள்விகளை கொஞ்சம் செவி மடுங்கள்.
1. உங்க அம்மா, அப்பாவோட அமர்ந்து இந்தப்படத்தை நீங்க பார்ப்பீர்களா?
2. உங்க பையன் வளர்ந்து பெரியவன் ஆன பின்னாடி இது எங்கப்பா டைரக்ட் பண்ணுன படம்னு பெருமையா சொல்லிக்க முடியுமா?
3.உங்க பட விளம்பரத்துல உண்மை சுடும் ஆனால் உண்மை உண்மைதான் என போட்டிருக்கிறீர்களே...ஈழத்தமிழர்கள் வாழ்வு காங்கிரஸ் ஆட்சியாலும், கலைஞரின் சுயநலத்தாலும் தான் நிர்மூலமானது என்ற உண்மையை தெளிவு படுத்த படமா எடுக்க முன் வருவீங்களா?
4. எங்கோ ஒரு மூலையில் எப்போதாவது நடக்கும் அபூர்வ நிகழ்வை எல்லா இடங்களிலும் நடப்பது போலவும்,தமிழகமே கலாச்சார சீர்கேட்டில் சிக்கி தவிப்பது போலவும் காட்டி இருக்கீங்களே.. மன நோய் பீடித்திருப்பது உங்கள் பட ஹீரோவுக்கா? உங்களுக்கா?
5. படம் ரிலீஸ் ஆகி 2-வது நாளே படம் டப்பா என அனைவருக்கும் தெரிந்து விட்ட நிலையில் விஜய் டி வி , கலைஞர் டி வி என மாறி மாறி வந்து இந்தப்படத்தின் நியாயங்களை எடுத்துரைக்கிறீர்களே.. உங்களுக்கு கூச்சமாக இல்லையா?
6.படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்து விட்டார்கள்.. ஓகே 18 வயசுக்கு உட்பட்டவர்கள் தியேட்டருக்கு வர மாட்டார்கள்.. ஆனால் டி வி என்பது வீட்டில் இருக்கும் சாதனம். அதில் அனைவரும் பார்க்கும் சாத்தியமே அதிகம் உள்ளது என தெரிந்தும் மீண்டும் மீண்டும் அந்த படத்துக்காக வாதாடி,படத்தின் கதைக்கருவை பெண்களுக்கு மத்தியிலும் கூச்சமே இல்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறிர்களே.. எப்படி..?
7. ஆங்கிலப்படத்துக்கு நிகராக எடுத்திருக்கிறேன் என வாய் கூசாமல் சொல்கிறீர்களே...அதற்கு பேசாமல் ட்ரிபிள் எக்ஸ் படம் எடுத்திருக்கிறேன் என சொல்லி இருக்கலாமே..?
8. சீன் படங்களை மக்கள் ரசிப்பதில்லையா? என கேட்டிருக்கிறீர்கள்.. ஆம்... ரசிப்பதுண்டுதான். ஆனால் அதே சீன் படமான சிந்து சமவெளி கலாச்சார சீர் கேடு என்று தெரிந்ததும் மக்கள் காரி துப்பி டப்பா ஆக்கவில்லையா? இயக்குநர் சாமி வெளி இடங்களுக்கே சரியாகப்போகாமல் முக்காடு போட்டு உட்கார்ந்து இருக்காரே... அதைப்பார்த்துமா நீங்க இப்படி ..?
9. நூறாவது நாள் படத்தைப்பார்த்து ஒரு ஆட்டோ சங்கர் உருவான மாதிரி இந்தப்படத்தைப்பார்த்து ஒரு வீரா உருவாகமாட்டான் என்பது என்ன நிச்சயம்..?
10. கற்பழிப்பின்போது ஆரம்பத்தில் எதிர்க்கும் பெண் பின் அதை விரும்புவாள் என்ற தவறான எண்ணத்தை பார்வையாளன் மனதில் விதைத்த நீங்கள் இதனை முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு யாரேனும் முயற்சி செய்தாலோ, குற்றங்கள் அதிகரித்தாலோ உங்களால் அதற்கு பதில் சொல்ல முடியுமா?