குற்றப் பின்னணி கொண்ட கொடூர வில்லன், குடும்பப் பின்னணி கொண்ட சாகச நாயகன். இவர்கள் இருவருக்கும் இடையே போராட்டம். இடை யிடையே வில்லன் கை ஓங்கினாலும் இறுதியில் வெல்வது நாயகனே. சரத்குமார் கதை எழுதி, க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமார் திரைக்கதை எழுதி, ஏ.வெங்கடேஷ் இயக்கி யிருக்கும் இந்தப் படமும் அதே பழங்கஞ்சிதான்.
கல்வித் தந்தை என்ற போர்வையில் நிழல் உலகில் சர்வ வல்லமை படைத்தவராக கும்பகோணத்தில் சாம்ராஜ்ஜியம் நடத்திக்கொண்டிருக்கிறார் வில்லன் சர்வேஸ்வரன் (சரத் குமார்). தன்னை எதிர்ப்பவர்களை அதிநவீன திரவ வெடிபொருள் மூலம் உருத் தெரியாமல் எரித்துச் சாம்பலாக்குகிறார் (க்ரைம் கதை மன்னனின் ஐடியா?). அந்த திரவ வெடிபொருளைக் கொண்டு நாடு முழுக்க 101 இடங்களில் குண்டுவெடிப்புகளை நடத்தத் திட்டமிடுகிறார். சர்வேஸ்வரனின் இந்தத் திட்டத்தை முறியடிக்கக் கிளம்புகிறார் ரகசிய போலீஸாக இருக்கும் நாயகன் சூர்யா (சரத்குமார்).
வில்லன், நாயகன் ஆகிய இரு தரப்புக்கும் இடையில் ஏகப் பட்ட உயிரிழப்புகளைக் கடந்து இறுதியில் வில்லன் எப்படி வீழ்த்தப்பட்டார் என்பதுதான் சண்டமாருதம்.
ஹரி பாணியில் படத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். இதற் காக ஐந்து நிமிடத்துக்கு ஒரு திருப்பத்தை உருவாக்கியிருக் கிறார்கள். படமும் வேகமாகத்தான் நகருகிறது. ஆனால் எந்த திருப்பத்திலும் புதுமையும் இல்லை, சுவாரஸ்யமும் இல்லை. காட்சிகள், திருப்பங்கள் எல் லாமே ஏற்கெனவே பலப்பல படங்களில் கையாளப்பட்ட சரக்குகள். குறிப்பாக, திரவ வெடிகுண்டால் மனிதர்கள் கொல்லப்படும் காட்சிகள் தமி ழில் மொழியாக்கம் செய்யப்பட்ட பல ஹாலிவுட் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்குப் பழக்கப் பட்டவை.
வில்லன் சர்வேஸ்வரன் வீட் டுக்குத் தண்ணீர் கேன் போடுபவராகச் செல்கிறார் ரகசிய போலீஸ் சரத்குமார். தண்ணீர் கேன் விநியோகிக்கும் சூர்யாவும் சகாக்களும் முறுக்கேறிய உடலுடன் வாட்டசாட்டமாக இருப்பது வில்லனுக்கு துளிகூட சந்தேகத்தை எழுப்பவில்லை. எதிராளி பதுங்கியிருக்கும் இடத்தை ஜிபிஆர்எஸ் உதவி யுடன் வில்லனும் நாயகனும் அறிந்துகொள்கிறார்களாம். பல சினிமாக்களில் பார்த்துப் பார்த்து போரடித்துவிட்டது. நாயகனின் குடும்பத்தைப் பிடித்துவைத்துக்கொண்டு மிரட்டும் கிளைமாக்ஸ் அரை நூற்றாண்டுக் காலப் பழசு.
க்ரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார் புண்ணியத்தில் அறிவியல் பூர்வமான கொலை உத்தி திரைக்கதையில் பயன்படுத்தப் படுகிறது. அதைத் தவிர வேறு எதிலும் எழுத்தாளரின் கைவண்ணம் தெரியவில்லை.
நாயகன் - வில்லன் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களையும் சரத்குமார் ஏற்று நடித்திருக்கிறார். நாயகனைக் காட்டிலும் வில்லன் வேடத்தில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக, கத்தி யைத் தூக்குவதைக் குறைத்துக் கொண்டு குரலால் கத்திக் கத்தி ரசிகர்களை பயமுறுத்துகிறார். என்றாலும் வில்லன் சரத்குமாரை ஓரளவு ரசிக்க முடிகிறது.
மீரா நந்தன், ஓவியா என இரண்டு கதாநாயகிகள். மீராநந்தன் வெறும் கருவேப்பிலை. இளம் சரத்தின் ஜோடியாக வரும் ஓவியா, கரம் மசாலா சேர்த்த கருவேப்பிலை. வெங்கடேஷ் படங்களில் நாயகிக்கு என்ன வேலை உண்டோ, அதைச் செவ்வனே செய்திருக்கிறார்.
கதாநாயகியின் தந்தை தம்பி ராமய்யாவை நகைச்சுவை என்ற பெயரில் நாயகன் துன்புறுத் தும் விதம் ரசிக்கத்தக்கதாக இல்லை.
‘செய்தி'யே சொல்லாமல் முழுக்க முழுக்க பொழுது போக்குப் படம் தரவேண்டும் என்று முயற்சிப்பது தவறல்ல. நல்ல சக்தி தீய சக்தி போராட் டம் என்னும் ஆதி காலத்துக் கதையை எடுப்பதிலும் பிரச்சினை இல்லை. ஆனால் காட்சிகள் சற்றேனும் புதுமையாகவோ, புதிதாகவோ இருக்கவேண்டும். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில் ‘சண்டமாருதம்’ வேகம் இல்லை.
thanx - the hindu