Showing posts with label காவல் - சினிமா விமர்சனம் ( மா தோ ம ). Show all posts
Showing posts with label காவல் - சினிமா விமர்சனம் ( மா தோ ம ). Show all posts

Saturday, June 27, 2015

காவல் - சினிமா விமர்சனம் ( மா தோ ம )

நடிகர் : விமல்
நடிகை :கீதா
இயக்குனர் :நாகேந்திரன் வி ஆர்
இசை :ஜி வி பிரகாஷ் குமார்
ஓளிப்பதிவு :என் கே ஏகாம்பரம்
பட்டினம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து ஆகியோர் போலீஸ்காரர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கூலிப்படைகளுக்கு எல்லாம் தலைவனான வில்லன் தேவாவிடம், பணத்தைப் பெற்றுக் கொண்டு அவருக்கு விசுவாசமாக இருந்து வருகிறார்கள்.

எம்.எஸ்.பாஸ்கரின் மகன் நாயகன் விமலும், இமான் அண்ணாச்சி மகன் கும்கி அஸ்வினும் மற்ற போலீஸ்காரர் மகன்களுடன் சேர்ந்து ஜாலியாக ஊரை சுற்றிக் கொண்டு வருகிறார்கள். ஒரு விபத்தில் நாயகி கீதாவை விமல் சந்திக்கிறார். பார்த்தவுடனே அவள்மீது காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள்.

இந்நிலையில், போலீஸ் உயர் அதிகாரிகள் வில்லனை பிடிக்க சமுத்திகனியை நியமிக்கிறார்கள். சமுத்திரகனி வில்லனை என்கவுண்டர் செய்ய மாறுவேடத்தில் கண்காணித்து வருகிறார். பட்டினம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு அதிகாரியாகவும் பதவி ஏற்கிறார்.

இந்தநிலையில், சமுத்திரகனியை பற்றி வில்லனிடம் போட்டு கொடுக்கிறார் விமல். இதனால் வில்லன் தலைமறைவான இடத்திற்கு தப்பித்து செல்கிறார். வில்லன் தலைமறைவானதற்கு விமல்தான் காரணம் சமுத்திரகனிக்கு தெரியவருகிறது.

இதனால் தந்திரமாக விமல் மூலமாகவே வில்லனை வரவழைக்கிறார் சமுத்திரகனி. அப்போது என்கவுண்டர் செய்யும் சூழ்நிலையில் வில்லன் தப்பித்து சென்று விடுகிறார். விமல்தான் வில்லனை தப்பிக்க வைத்தான் என்று சமுத்திரகனி நினைக்க, அதுபோல் விமல்தான் தன்னை போலீஸ் சிக்க வைக்க முயற்சி செய்கிறான் என்று வில்லன் நினைக்க, இருவரும் விமலை தேடி வருகிறார்கள். ஒரு பக்கம் நாயகி கீதாவும் விமல் காணவில்லை என்று தேட ஆரம்பிக்கிறார்.

இறுதியில் விமல் சமுத்திகனியிடம் சிக்கினாரா? அல்லது வில்லனிடம் சிக்கினாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விமல், தன்னுடைய வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். முந்தைய படங்களைவிட இப்படத்தில் நடிப்பில் அதிக முதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் புன்னகைப்பூ கீதா, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வலம் வந்திருக்கிறார் சமுத்திரகனி. இவருடைய வசன உச்சரிப்பு பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. வில்லனாக நடித்திருக்கும் தேவா வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். மற்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்கள் அவரவர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

கூலிப்படையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் நாகேந்திரன், அதில் சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து, அதற்கு ஏற்றார் போல் கதாபாத்திரங்களை தேர்வு செய்து வெற்றி கண்டிருக்கிறார். ஒரு காலத்தில் கௌரவம் மற்றும் பகைக்காக கொலை செய்த காலம் போய், தற்போது பணத்திற்காக கொலை செய்யும் காலம் வந்துவிட்டது என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார். விறுவிறுப்பான திரைக்கதை படம் பார்ப்பவர்களை சோர்வடைய வைக்காமல் கொண்டு சென்றிருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘காவல்’ கம்பீரம்.


நன்றி = மாலை மலர்