Saturday, September 01, 2012

ஜெ முன் ரஜினியின் சர்ச்சைக்குரிய மேடைப்பேச்சு

கலைஞரின் புகழ்!''

ஜெயலலிதா முகத்துக்கு நேரே கருணா நிதியைப் புகழ்ந்து பேசி, பரபரப்பு அரசியலுக்கு விதை போட்டிருக்கிறார் ரஜினிகாந்த்!


மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு விழா மற்றும் ஜெயா டி.வி-யின் 14-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி கடந்த 29-ம் தேதி சென்னையில் நடந்தது. விழா அழைப்பிதழில் ஜெயலலிதா பெயரைத்தவிர வேறு பெயர்கள் இல்லை.


 ரஜினி, கமல் மேடையேறுவதைக்கூட கடைசிவரை சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்தனர். ஜெயலலிதா வருவதற்கு முன்பே ரஜினி, கமல், கே.பாலசந்தர், இளையராஜா, ஏவி.எம்.சரவணன் ஆகியோர் மேடையில் அமர வைக்கப்பட்டனர். ஜெயலலி தாவைச் சேர்த்து எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக் கைகள். எம்.எஸ்.வி-க்கும் ராமமூர்த்திக்கும் 'திரை இசை சக்கரவர்த்தி’ விருதை அளித்து பொற்கிழிகள் வழங்கி கார்களையும் பரிசளித்தார் ஜெயலலிதா.


இதில் ரஜினி பேச்சுதான் ஹைலைட்!



''ஜெயா டி.வி-யில் சோ எழுதிய 'எங்கே பிராமணன்’ நிகழ்ச்சியை ரொம்ப ரசித்துப் பார்த் தேன். திடீரென்று அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு விட்டது. என்ன காரணம் என்று விசாரித்தபோது சோ அதை தொடராமல் இருப்பது தெரியவர... அவரிடமே கேட்டேன். 'முதல்வர் ஜெயலலிதாவும் இதையே என்னிடம் கேட்டார். தொடர முடியாத காரணத்தை அவரிடம் சொல்லிவிட்டேன்’ என்றார். இதில் இருந்து தெரிவது என்னவென்றால், முதல்வர் சொல்லியும் கேட்காத ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் சோ மட்டும்தான்'' என்று ரஜினி சொன்னபோது எதிரே உட்கார்ந்திருந்தார் சோ. ரஜினியைப் பார்த்து கையை நீட்டிவிட்டு, அப்படியே சீரியஸாக தலையில் வைத்துக் கொண்டார் சோ. இதை அங்கே இருந்த திரையில் காட்ட... கூட்டத்தினர் ரசித்துச் சிரித்தனர்.






தொடர்ந்து பேசிய ரஜினி, ''ஒவ்வொரு மனிதனும் இரண்டு முறை இறக்கிறான். பேரும் புகழும் பெற்றவர்கள் அதை இழக்கும்போது அவர்களுக்கு ஒரு முறை மரணம் நேரும். இரண்டாவது, உடலில் இருந்து உயிர் பிரியும்போது ஏற்படும். சாகாவரம் பெற்றவர்கள் இறந்தாலும் அவர்களின் புகழ் மறையாது. தமிழகத்தில் பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்றவர்கள் மறைந்தாலும் அவர்கள் புகழ் மறையவில்லை. அந்த வகையில் இப்போது அரசியலில் இருக்கும்....'' என்று லேசாக நிறுத்திய ரஜினி...



''என் ஆருயிர் நண்பர் கலைஞர்'' என்று சொல்லி அதிர வைத்தார். மேடையில் இருந்த முதல்வரின் முகம் மாற ஆரம்பித்தது. தொடர்ந்து பேசிய ரஜினி, அடுத்ததாக,




''புரட்சித் தலைவி போன்றவர்களின் புகழ் என் றும் அழியாது'' என்றும் சொல்லி வைத்தார். எப்போதும் ரஜினியின் வாய்ஸ் சர்ச்சைக் குரியதாகவே ஆகும். முன்பு, ஜெயலலிதாவை எதிர்த்து வாய்ஸ் வந்தது. இப்போது, ஜெயலலிதா முன்பே கருணாநிதியை புகழ்ந்து!



  - எம். பரக்கத் அலி

''கருணாநிதிக்கு என்ன புகழ் எஞ்சி நிற்கிறது?''


''ஜெயலலிதாவை  மேடையில் வைத்துக் கொண்டு  கருணாநிதியைப் புகழ்ந்தாரே ரஜினி?'' என்று, அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வான பழ.கருப்பையாவிடம் கேட்டோம். ''அம்மா முன்னிலையில் ரஜினி பேசியதை நானும் கேட்டேன். 'புகழ் பெற்றவர்கள் இருமுறை சாகிறார்கள். ஒன்று உடலை விட்டு உயிர் நீங்கும் போது. இன்னொரு முறை புகழ்நிலையில் இருந்து சரிவுறும் போது.’ இப்படிச் சொல்லிக் கொண்டு வந்தவர் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் என்று வரிசைப்படுத்தி, இவர்களுக்குகெல்லாம் ஒருமுறைதான் மரணம் ஏற்பட்டதென்றார்.



அவர்கள் வாழும் போது புகழை இழந்து மனஉளைச்சலுக்கு ஆகாதவர்கள் என்பதால், வாழும்போது சாகாதவர்கள் என்பது அதன் பொருள். இந்த வரிசையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் சேர்த்தார்.



ரஜினிகாந்த்தின் ஆராய்ச்சி சரியானதுதானா? தமிழுக்காகவும் தமிழனத்துக்காகவும் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின் தலைவராக இருந்து கொண்டு, மைய ஆட்சியிலும், அங்கம் வகித்துக் கொண்டு, சோனியா காந்தியின் சொந்த நோக்கத்துக்குத் துணைபோய், கசாப்புக்கடைக்காரன் ராஜபக்ஷே ஈழத்தை சுடுகாடாக்கும் வேளையில் தமிழ்நாடு பொங்கி எழுந்து விடாமல் பல நாடகங்களை ஆடி, இன அழிவுக்குக் காரணமான கருணாநிதிக்கு என்ன புகழ் எஞ்சி நிற்கிறது?



காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலிருந்து தி.மு.க-வை விலக்கிக் கொண்டிருந்தால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்திருக்கும். போர் நின்றிருக்கும். ஈழத் தமிழினம் காக்கப்பட்டிருக்கும். அந்த ஒன்றைக் கருணாநிதி செய்திருந்தால் அரசியல் ரீதியான திறனாய்வுகள் அப்போதும் இருக்கும் என்றாலும் 'இனம் அழியக் காரணமானவர்’ என்னும் 'வரலாற்று இழிவுக்கு’ உள்ளாகி இருக்க மாட்டார்.



 ரஜினிகாந்த் சொல்லிய வாழும் போதே அடையும் இன்னொரு மரணம் இதுவாக இருக்கலாம். ஒரு கருதுகோளை முன்வைத்து அதைத் திறம்பட வளர்த்து முடிக்க ரஜினிகாந்த் பழக்கப்பட்டிருக்கவில்லை. உண்மையிலேயே ரஜினி நல்லவர். கருணாநிதி 'என் பெயரை ஏன் விட்டு விட்டாய்’ என்று கேட்டு வருத்தப்பட்டு விடுவாரோ என்னும் தாட்சண்யம் ரஜினியை அவ்வாறு சொல்ல வைத்து விட்டது!''



கழுகார் பதில்கள்

மா.சந்திரசேகர், மேட்டு மகாதானபுரம்.


ஜெயலலிதா, மாயாவதி, மம்தா போன்றவர்களைப் பார்க்கும்போது பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணமே அடிபட்டுப் போய்விடுகிறதே? 


  அதிகார போதை அனைவரையுமே மாற்றி விடுகிறது. இதில் ஆண், பெண் பேதம் இல்லை. அரசியலில் இருக்கும் ஆண்கள் எல்லாம் சரி யானவர்களா என்ன?


தேசிய இயக்கத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி யும், திராவிட இயக்கத்தில் மூவலூர் ராமாமிர்தமும், கம்யூனிஸ இயக்கத்தில் ஜானகி அம்மாளும் இருந்த தமிழ்நாட்டு அரசியல்தான் இது. அம்புஜம் அம்மாளின் தியாகம் இங்கு மறக்கப்பட்ட விஷயங்களில் ஒன்று. எனவே, அதிகார அரசியலில் ஆண், பெண் பேதம் பார்க்கக் கூடாது!


 போடி எஸ்.சையது முகமது, சென்னை-93.


  '2ஜி உள்ளிட்ட ஊழல்களுக்குப் பிரதமர் அரசியல் ரீதியாகவும் மறைமுகமாகவும் காரணமாக இருந்தார்’ என்று பி.ஜே.பி. குற்றம் சாட்டுவதில் உண்மை உள்ளதா? 


  நிச்சயமாக! எந்த முறைகேட்டிலும் பிரதமருக்குப் பங்கு போனது என்று இதுவரை மன்மோகனின் அரசியல் எதிரிகள்கூடச் சொல்லவில்லை. ஆனால், அவரது மௌனம்தான் இங்கே விமர்சிக்கப்படுகிறது. தானே ஒரு காரியத்தைச் செய்வது அல்லது அந்தக் காரியத்தை யாரோ செய்யும்போது கண்டும் காணாமல் இருப்பது என இரண்டுமே தவறுதான். இரண்டாவது தவறைத்தான் இரண்டு முறை பிரதமராக இருக்கும் போதும்  மன்மோகன் அதிகமாகச் செய்திருக்கிறார்.


 பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.


  நிலக்கரி ஊழலை அம்பலப்படுத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியை, மத்திய மந்திரிகள் விமர்சிப்பது உரிமை மீறல்தானே? 



  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளில் ஒன்று தலை மைக் கணக்குத் தணிக்கை. அதை, அரசியல் ரீதியாக விமர்சிப்பது, உரிமை மீறல் மட்டுமல்ல, அந்த அதிகார அமைப்பை அரசியல் ரீதியாக அச்சுறுத்துவது ஆகும்.


ஆட்சியில் யார் இருந்தாலும், அரசாங்கப் பணம் முறையாகச் செலவு செய்யப்பட்டு உள்ளதா, விதிமுறைகள் ஒழுங்காகப் பின்பற்றப்பட்டு உள்ளனவா என்பதைக் கண்காணிப்பவர்கள் அவர்கள். பாரதிய ஜனதாவின் எத்தனையோ நடை முறைகளை இவர்கள் கேள்வி கேட்டவர்கள்தான். எனவே, அந்த அமைப்பை காங்கிரஸ் அமைச்சர்கள் கொச்சைப்படுத்துவது, அரசியல் அமைப்பின் மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை யின்மையைத்தான் காட்டுகிறது!


 இரா.தோணி, தூத்துக்குடி.


பரவாயில்லையே... ஒழுங்கு நடவடிக்கைக்காக நோட்டீஸ்கூட அனுப்புகிறதே காங்கிரஸ்? 


  விவகாரம் ஜெயந்தி நடராஜன் சம்பந்தப்பட்டது என்பதால் அனுப்பு கிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸில் எத்தனையோ ஒழுங்குமீறல்கள் தினமும் நடக்கின்றன. அதையெல்லாம் டெல்லி மேலிடம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. டெல்லியில் செல்வாக்கான ஜெயந்திக்கு ஒரு பிரச்னை என்றதும் நோட்டீஸ் அனுப்புகிறார்கள். மற்றபடி, 'ஒரு கண்ணில் வெண்ணெய்... இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு’ என்பதுதான் எப்போதும் டெல்லித் தலைமையின் ஃபார்முலா!


பொன்விழி, அன்னூர்.


சுவிஸ் வங்கியில் பணம் போட என்ன தகுதி வேண்டும்? 


  சுயசம்பாத்தியமாக இருக்கக் கூடாது!


 வி.ஜி.சத்தியநாராயணன், நங்கநல்லூர்.


  'நிலக்கரி ஒதுக்கீட்டில் அரசுக்கு எவ்விதமான நஷ்டமும் இல்லை’ என்று ப.சிதம்பரம் கூறிவிட்டாரே? 


  அப்படிச் சொல்லவில்லை என்றும் சிதம்பரம் சொல்லி விட்டாரே. இப்படித்தான் சில நாட்களுக்கு முன், விலைவாசி உயர்வு பற்றி ஒரு கருத்தைச் சொன்னார். அது சர்ச்சை ஆனதும் அப்படிச் சொல்லவில்லை என்றார். பொதுவாக, எந்தச் செய்தியைச் சொன்னாலும் அழுத்தம் திருத்தமாக வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசக்கூடியவர் சிதம்பரம். அவரது வார்த்தைகளை பத்திரிகைக்காரர்கள் மாற்றி எழுதி விட்டார்கள் என்று சொல்ல முடியாது.


க.ராமராஜ், கோவில்பட்டி.


முந்தைய பி.ஜே.பி. ஆட்சிக்கும் இன்றைய காங்கிரஸ் ஆட்சிக்கும் நாளைய பி.ஜே.பி. ஆட்சிக்கும் இடையே இந்தியாவின் முன்னேற்றம்..? 


நாளை பி.ஜே.பி. ஆட்சி என்பது உங்களது எதிர்பார்ப்பு. அதுபற்றி இப்போது கருத்துச் சொல்ல முடியாது!


முந்தைய பி.ஜே.பி. ஆட்சியில் ஊழல் முறைகேடுகள் ஒரு சில துறைகளில் மட்டும்தான் இருந்தன. ஆனால் இன்று, பெரும்பாலான துறைகளுக்கும் பரவி விட்டது. லட்சம், கோடி என்று பரிணாமம் அடைந் துள்ளது. விலைவாசியும் எகிறிவிட்டது. அதைவிட மிகமுக்கியமான வேறுபாடு, பொதுமக்கள் மீது இன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு இருக்கும் அலட்சியம், பாரதிய ஜனதா தலைவர்களுக்கு இருக்கவில்லை. அவர்கள் மக்களைப் பார்த்துப் பயந்தார்கள். அந்தப் பயம், இன்றைய மத்திய மந்திரிகளுக்கு இல்லை!


 அ.ராஜா ரஹ்மான், கம்பம்.


  மறைந்த பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனிடம் தங்களைக் கவர்ந்த அம்சம் எது?
  எதையும் சுவாரஸ்யமாய்ச் சொல்வது. நேரடிப் படைப்பா அல்லது மொழிபெயர்ப்பா என்று தெரியாதது மாதிரி இயல்பாக இருக்கும் அவரது மொழிபெயர்ப்புகள். 'பட்டாம்பூச்சி’ அவரது மொழிபெயர்ப்புகளில் சிறந்த ஒன்று. 'நான் கிருஷ்ணதேவராயர்’ அவரது எழுத்தின் மகுடம். கிருஷ்ணதேவராயரே தனது சொந்தக் கதையைச் சொல்வதாக அது அமைந்திருக்கும். தொழிலுக்காகவோ, சம்பளத்துக்காகவோ இல்லாமல் எழுத்துக்காகவே எழுதியவர்!


 இ.சிகாமணி, அத்தனூர்.


  பயப்படாமல் சொல்லுங்கள்... அழகிரி, ஸ்டாலின் ஆகிய இருவரில் யார் திறமைசாலி? 


  டெஸ்ட் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் இருவரும். ரிசல்ட்டை அவுட் பண்ணக் கூடாது!

hared Junior Vikatan's photo.




நன்றி - ஜூ வி