Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

Saturday, May 04, 2013

அஜித் 42!


தமிழ் திரையுலகின் முக்கியமானவர்கள் பட்டியலில் இருப்பவர் அஜித். பஸ்ஸில் கண்டக்டராக இருந்து  நடிகரான ரஜினியை அடுத்து தனது சொந்த முயற்சியில் வெற்றியும் தோல்விகளையும் ஒரு சேர பார்த்தவர் அஜித். இன்றும் எனது விருப்பதற்காக எனது ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன் என தனது நற்பணி மன்றங்களை எல்லாம் களைத்து விட்டு இன்றும் தான் உண்டு தனக்கு பிடித்த சினிமா உண்டு என்று ஒதுங்கி வாழ்பவர் இன்று தனது 42 வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரை பற்றிய 42 துளிகள் இங்கே...


தெலுங்கு படமான பிரேம புஸ்தகம் மூலம் திரையுலகிற்கு (1992) அறிமுகம் ஆனார்.


தமிழில் 'அமராவதி' என்ற படம் மூலம் அறிமுகம் ஆனார். அத்திரைப்படத்தை அடுத்து பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே என பல படங்களில் நடித்தார்.


தனக்கு எதிர்பார்த்த வெற்றி இல்லையே என தவித்தவர்க்கு 'ஆசை' என்ற படத்தின் மூலம் வெற்றியை கொடுத்தவர் வஸந்த். அந்த படத்தை தயாரித்தவர் மணி ரத்னம்.


அடுத்தடுத்து பல படங்களில் நடித்தாலும் காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற படங்களின் வெற்றியால் முன்னணி கதாநாயகனாக வலம் வர தொடங்கினார்.


1998ம் ஆண்டு வெளிவந்த 'காதல் மன்னன்' என்ற படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.


'அமர்க்களம்' படப்பிடிப்பில் ஏற்பட்ட காதலால் ஷாலினியை 2000-ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். நட்சத்திரத் தம்பதியினருக்கு வாரிசு 'அனோஷ்கா' என்ற குட்டி தேவதை.


தனது பெயருக்கும் முன்னால் எந்த பெயரையும் போட விரும்ப மாட்டார். ஆனால் 'அமர்க்களம்' படத்தில் 'அல்டிமேட் ஸ்டார்' என்ற பட்டத்தை கொடுத்தவர் சரண்.  அடுத்து சரண் இயக்கிய 'அசல்' படத்தில் பட்டம் எதுவும் போட வேண்டாம் என அஜித்தே நீக்க சொல்லிவிட்டார்.


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வந்த வெற்றிப்படம் 'தீனா'. படத்தில் " தல இருக்கும்போது வால் ஆடக்கூடாது.. நீ ஆடு தல.. " என்று வசனம் வரும். அன்று முதல் ரசிகர்களுக்கும் 'தல' ஆனார் அஜித்.


அவரது சினிமா வாழ்க்கையில் சர்ச்சைகளும் விடவில்லை. 'நியூ', 'மிரட்டல்', 'நான் கடவுள்', 'ஏறுமுகம்' என பல படங்கள் இவர் கமிட் ஆகிவிட்டு கருத்து வேறுபாடால் நடிக்க முடியாது என்று கூறி விட்டார்.


'வாலி', 'வில்லன்', 'வரலாறு' போன்ற படங்களில் இரண்டு/மூன்று வேடங்களில் நடித்தார். அப்படி நடித்த படங்கள் எல்லாம் ஹிட்.! 'ஆனந்தப் பூங்காற்றே', 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்', 'நீ வருவாய் என' போன்ற படங்களில் கௌரவ வேடத்திலும் நடித்திருக்கிறார்.


மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார். அதனாலேயே பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து விடுவார். 'பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' என்ற நிகழ்ச்சியில் " ஐயா.. அடிக்கடி ஏதாவது நிகழ்ச்சினு மிரட்டி வர சொல்றாங்கய்யா.. " என்று மேடையில் முதல்வர் கருணாநிதியிடமே முறையிட்டார். அஜித் பேச்சிற்கு மேடையில் இருந்த ரஜினி எழுந்து நின்று கை தட்டினார்.


இன்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நெருக்கமானவர் அஜித். ரஜினி நடித்த 'பில்லா' படத்தின் ரீமேக்கில் அஜித் தான் நடிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தவர் ரஜினி.


கல்யாணத்திற்கு முன்பு புகைபிடிக்கும்  பழக்கம் கொண்டவர். கல்யாணம் ஆனவுடன் தனது மனைவிக்காக சிகரெட்டை விட்டொழித்தார்.


சிம்பு, ஜீவா, ஆர்யா என தமிழ் திரையுலகின் அடுத்த தலைமுறை நாயகர்கள் ஃபேவரைட் எப்போதும் அஜித் தான்.  அதிலும் சிம்பு ஒரு அஜித் வெறியர்.


பல நாயகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களுக்கு நாயகியாக இவர் தான் வேண்டும் என்று சிபாரிசு செய்வார்கள். ஆனால் அஜித் எப்போதும் நாயகி விஷயத்தில் தலையிடுவது இல்லை.


'நேருக்கு நேர்' படத்தில் அஜித்தும் விஜய்யும் இணைந்து நடித்தனர். இருந்தாலும், கருத்து வேறுபாடு காரணமாக அஜித் படத்திலிருந்து விலக, சரவணன் என்ற இளைஞரை அஜித் நடித்த வேடத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் வஸந்த். சரவணனுக்கு சினிமாவுக்காக சூட்டப்பட்ட பெயர் சூர்யா.


அஜித்தும் விஜய்யும் இணைந்து நடித்த ஒரே படம் 'ராஜாவின் பார்வையிலே'. அதன் பிறகு இருவருக்கும் என தனித்தனியாக ரசிகர்கள் கூட்டம் சேர, இணைந்து நடிப்பதைத் தவிர்த்தனர். இருவரும் தொழில்முறையில் போட்டியாளர்கள் என ஆகிவிட, அவர்களது ரசிகர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டனர். 'மங்காத்தா' படப்பிடிப்பில் விஜய்யும் அஜித்தும் சந்தித்து கொண்டதிலிருந்து இன்றும் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.


சுப நிகழ்ச்சிகளுக்கு போகிறாரோ இல்லையோ துக்க நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்து கொள்வார். சமீபத்தில் பாடகி சித்ராவின் குழந்தை  நந்தனா இறந்ததற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.


தனது 50வது படமான மங்காத்தாவில் ஜார்ஜ் க்லூனி போன்ற கெட்டப்பில் நடித்தார். 'வாலி', 'வரலாறு' என தான் கதாநாயகனாக நடித்த படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தாலும், 'மங்காத்தா' படத்தில் நடித்தது  நெகட்டிவ் ரோலில் மட்டுமே.


சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் சிலர் கூறவே " எனது பெயரை தவறாக உபயோகித்தால் ரசிகர் மன்றத்தை கலைத்து விடுவேன்" என்று எச்சரித்தார்.  நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் இவரது பெயர் தவறாக  உபயோகப்படுத்தப்படவே தனது அனைத்து ரசிகர் மன்றங்களையும் கலைத்து விட்டார் அஜித்.


அஜித் ரசிகர் மன்ற கலைப்புக்கு கூறும் காரணம் " மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் எல்லாரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்களுக்கு அப்பால் பொதுமக்களின் பார்வையிலும் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே, நடிகருக்கும் அவரது ரசிகர்களுக்கும் கவுரவம் கிட்டும் என்பது என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது இந்த பிறந்த நாளுக்கு உண்மையான பரிசாகும்!"


தீவிரமான சாய்பாபா பக்தர். கார், பைக் என எந்தப் பொருள் வாங்கினாலும் பாபாவுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டுதான் பயன்படுத்துவார்!


வெளி இடங்களில் தண்ணீர், பழரசம் போன்றவற்றை அருந்த வேண்டியிருந்தால், இடது கையால் தான் கிளாஸைப் பிடித்துக் கொள்வார். பெரும்பாலான வலது கைக்காரர்கள் பயன்படுத்தியபோது உதடுகள் பட்ட பகுதியைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த முன்னெச்சரிக்கை!


சினிமாவில் நடிப்பதற்கு முன் வேலை பார்த்த ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்தின் நிலவரங்களை இப்போதும் அடிக்கடி அப்டேட் செய்துகொள்கிறார்!


வீடு, அலுவலகம் என எங்கு ரசிகர்களைச் சந்தித்தாலும், 'உங்க குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க. மன்றப் பணிகளை நேரம் இருந்தா பார்த்துக்கலாம்!' எனப் பாசமாக வலியுறுத்துவார்!


உள்ளூர் அரசியல் பற்றித்தான் கருத்துச் சொல்ல மாட்டார். ஆனால், உலக அரசியலின் இன்றைய நிலவரம்பற்றி எந்த நிமிடமும் அவரிடம் பேச, விவாதிக்க அவ்வளவு விஷயம் இருக்கும்!


சாய்பாபாவுக்குப் பிறகு அஜித்துக்குப் பிடித்த தெய்வம் திருப்பதி வெங்கடாஜலபதி. சென்னையில் இருந்தே இதுவரை இரண்டு தடவை நடந்தே சென்று திருப்பதி சாமி தரிசனம் செய்திருக்கிறார்!


ரேஸ் போட்டிகளில் அஜித்துக்கு ரோல் மாடல் பிரபல ரேசர் அயர்டன் சென்னா. அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதிதான் அயர்டன் ஒரு கார் விபத்தில் இறந்தார். அதை நினைத்து தன் பிறந்த நாளன்றும் உருகி வருந்துவார் அஜித்!


ரசிகர்களின் திருமணங்களுக்குத் தன்னுடைய பெயர், படம் போட்டு ஃப்ளெக்ஸ் பேனர்கள் அடிப்பதை விரும்பவே மாட்டார். 'கல்யாணம் ரொம்ப பெர்சனல் விஷயம்ல!' என்பார்!


தனது மொபைல் போனில் குழந்தை அனோஷ்கா பிறந்ததில் இருந்து இப்போது வரை நடப்பது, பேசுவது, ஓடுவது, சிரிப்பது என எல்லாமே குட்டிக் குட்டி வீடியோ கிளிப்பிங்குகளாக இருக்கின்றன. படப்பிடிப்பு இடைவேளைகளில் அவற்றைப் பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பார்!


'இது நான் பேச உங்களுக்கு உகந்த நேரமா?' என கேட்டுவிட்டுத்தான் தொலைபேசி, அலைபேசிகளில் பேச ஆரம்பிப்பார்!



thanx - vikatan



பொதுவாக, சுயசரிதை நூல்கள் வாசிப்பது பிடிக்கும். ரஜினி பரிசளித்த 'ஹிமாலயன் மாஸ்டர்ஸ்' புத்தகத்தை அடிக்கடி வாசிப்பார். வீட்டில் மினி நூலகமே உண்டு!


அஜித்தின் விமான ஆசை கிளை விரித்தது ஆசான் மெமோரியல் பள்ளியில். அங்கே அவர் பாடமாகப் படித்த ஏரோ மாடலிங்தான் இன்றைய ரிமோட் விமானம், பைலட் அசோசியேஷன் நடவடிக்கைகள் வரை வளர்ந்து நிற்கிறது!


உருளைக்கிழங்கு பொரியல், சாம்பார், சிக்கன் பிரியாணி சமைப்பதில் எக்ஸ்பர்ட். சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருப்பதாகத் தெரிந்தால், நண்பர்கள் வீட்டில் குவிந்து, பிரியாணி சமைக்கச் சொல்லி அஜித்தை வம்பிழுப்பார்கள்!


எந்த ஹோட்டலுக்குச் சென்றாலும் புதுவித உணவு வகைகளாக ஆர்டர் செய்வார். அந்த உணவு அருமையாக இருந்தால், அதைத் தயாரித்தவர்களை நேரில் அழைத்துப் பாராட்டித் தள்ளிவிடுவார்!


படிக்கிற காலத்தில் தீவிர கிரிக்கெட் பிரியர். ஆனால், இப்போது 'கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் எல்லா விளையாட்டுகளுக்கும் தேவை' என்கிறார்!


மனித முகங்களைப் படம் பிடிப்பதில் கேமராமேன் அஜித்துக்கு அத்தனை ஆர்வம். நண்பர்களின் கேமரா பழுதடைந்தால் பைசா செலவில்லாமல் ரிப்பேர் சரி செய்து தரும் அளவுக்கு கேமராக் காதலர் இவர்!


அனோஷ்கா, தந்தையை 'அஜித் குமார்' என்றுதான் அழைப்பாள். அப்படி ஒவ்வொரு முறை அனோஷ்கா அழைக்கும்போதும் பூரிப்பில் முகம் இன்னும் சிவக்கும் அஜித்துக்கு!


மினியேச்சர் ஹெல்மெட்களைச் சேகரிப்பது அஜித்தின் பொழுதுபோக்கு. விதவித நாணயங்கள், தபால் தலைகளைக் காட்டிலும் அபூர்வமான கலெக்ஷன்ஸ் இது!


தான் நடித்த படம் ரிலீஸ் ஆன பிறகு ரிசல்ட் கேட்டு அதைப்பற்றிய விமர்சனத்தில் ஈடுபடவே மாட்டார் அஜித். 'சந்தைக்கு வந்திருச்சு. இனி ரசிகர்கள்தான் தீர்மானிக்கணும். நம்ம பங்கு முடிஞ்சுபோச்சு!' என்பார்!


தங்களது படம் வெளியாகும்போது படத்துக்கான பப்ளிசிட்டிக்கு பல நடிகர்கள் ஊர் ஊராக செல்லும் நிலையில்,  'மங்காத்தா' படத்திலிருந்து என் படம் குறித்து  எதுவும் பேசக்கூடாது என முடிவு செய்திருக்கிறேன்.."   என படம் குறித்து பேச  திடமாக மறுத்திருக்கிறார்.


சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை இருந்த ஒரே முன்னணி நடிகர் அஜித் மட்டுமே!


    thanx - vikatan

Friday, March 08, 2013

கோச்சடையான் ல என்னை நீக்கிட்டாங்களா? - கே எஸ் ரவிக்குமார் பேட்டி

ஆப்பிரிக்காவில் வடிவேலு!

இது புது சினிமா
க.ராஜீவ் காந்தி
கே எஸ்.ரவிகுமார்... தமிழ் சினிமாவின் மாஸ்டர் இயக்குநர், இப்போ பாலிவுட்டில்! சஞ்சய்தத்தை வைத்து 'சாமி’ படத்தை இந்தியில் இயக்கிக்கொண்டு இருப்பவரைச் சந்தித்தேன்.  



 ''நீங்கள் இயக்கிய ஹிட் படங்களே அவ்வளவு இருக்கும்போது, ஏன் இந்தியில் 'சாமி’ ரீமேக் பண்றீங்க?''



''அவங்க ரைட்ஸ் வாங்கிவெச்சுட்டுக் கூப்பிட் டாங்க. நான் என்ன பண்ண முடியும்? நிறைய போலீஸ் சப்ஜெக்ட் படங்கள் வருதேனு சின்ன சந்தேகம் இருந்துச்சு. அவருக்காக நிறைய மாத்தியிருக்கேன். என் ஸ்பீடுக்கு அங்கே வேலை பார்க்கிறதுதான் கொஞ்சம் சிரமமா இருக்கு. ஆனா, ஹீரோ இல்லைன்னாலும் ஹீரோ இல்லாத போர்ஷனை எடுத்துருவேன். பரபரனு ஷூட்டிங் முடிச்சாச்சு. ஒரு ஃபைட்டு, ரெண்டு பாட்டு மட்டும்தான் பாக்கி!''
''சமீபமா இங்கே தமிழ்நாட்டில் சினிமாவை வெளியிடுவதில் நிறைய சிக்கல்கள் வந்துள்ளனவே?''



''எப்படிப் படம் எடுத்தாலும் சண்டைக்கு வர்றாங்க. இனிமே ஈ, கொசு, பல்லி, கரப்பான் பூச்சிகளைத்தான் வில்லனாக் காட்ட முடியும்போல. ஏன்னா, அதுகதான் கேஸ் போடாது. கெட்டவன்னா மது, சிகரெட் பழக்கம் இருக்கிறவனாத்தான் காட்ட முடியும். அப்படி சீன் வெச்சா திட்டுறீங்க. ஆனா, அப்புறம் ஏன் ரோட்டுக்கு ரோடு ஒயின்ஷாப் வெச்சு விக்கறீங்க? இதெல்லாம் டூமச்சா இருக்கு.''



''ரஜினிக்கு அரசியல் நிர்பந்தம் வந்த மாதிரி, கமலுக்கும் வந்துருச்சே...''



''ரஜினி அரசியலுக்கு வர்றது ஆண்டவன் கையில் இருக்கு. கமல் சார் மனசுல என்ன இருக்குனு நமக்குத் தெரியாதே? தவிர, கமல் சார் எனக்கு நெருங்கிய நண்பர் இல்லை. 'மன்மதன் அம்பு’க்குப் பிறகு அதிகபட்சம் நாலஞ்சு தடவை சந்திச்சிருப்போம். ரஜினி சார்கூட ரெண்டு, மூணு நாளைக்கு ஒரு முறை பேசிடுவேன். யாரா இருந்தாலும் நிர்பந்தம்னு ஒண்ணு இருந்தாதான் அரசியலுக்கு வர முடியும். சினிமாவைப் பொறுத்தவரைக்கும் அவர் மாஸ்... இவர் கிளாஸ். அரசியல் எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியலை.''
''சரி... இப்போ உண்மை சொல்லுங்க, 'கோச்சடையான்’ படத்தின் ஸ்டேட்டஸ் என்ன?''



''போன வாரம்தான் படம் பார்த்தேன். ரொம்பப் பிரமாண்டமா வந்திருக்கு. ரஜினி சாருக்கும் எனக்கும் பரம திருப்தி. சௌந்தர்யா ரொம்பப் பிரமாதமா டைரக்ஷன் பண்ணியிருக்காங்க. இந்த மாதிரியான படங்களுக்கு ஷூட்டிங்குக்கு 20 நாள் போதும். ஆனா, போஸ்ட்புரொடக்ஷன் வேலைகள்தான் மாசக்கணக்கில் இழுக்கும். 'கோச்சடையான்’ல கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் மேற்பார்வை என் பொறுப்பு. 



 படத்தை ரசிகர்களுக்கு விஷ§வல் விருந்தாக் கொடுக்க வேண்டியது சௌந்தர்யாவின் பொறுப்பு. படம் முழுக்க சுத்தத் தமிழ். ரஜினி சாரும் இலக்கிய நடையில்தான் வசனம் பேசி இருக்கார். ரொம்பப் புதுசா, வித்தியாசமா இதுவரை பார்க்காத ரஜினியைப் பார்க்கப்போறீங்க. நானே ரஜினியை அப்படிப் பார்த்தது இல்லை. அடிச்சுச் சொல்றேன்... இந்தப் படத்தைக் குறைஞ்சது அஞ்சு முறை பார்ப்பீங்க. அவ்ளோ புடிக்கும்!''



''ஆனா, 'கோச்சடையான்’ படத்தில் இருந்து உங்களை நீக்கிட்டதாவும் மாதேஷை நியமிச்சதாவும் செய்திகள் றெக்கையடிக்கின்றனவே?''



''நானும் அதைக் கவனிச்சுட்டுதான் இருக்கேன். கேட்டுட்டு ரஜினி சாரே சிரிக்கிறார். எதுவா இருந்தாலும் அவர் சொல்லட்டும். படப்பிடிப்பு என் பொறுப்பு. அதை முடிச்சுக் கொடுத்துட்டேன். இப்போ மாதேஷ் வேலை பார்க்கிறார்னா, அவரோட தேவை அங்கே இருக்கும். எடிட்டிங்கில் எதுவும் உதவினா, 'எடிட்டிங் உதவி’னு அவர் பேரைப் போட்டுக்கச் சொல்லுங்க. யாரும் யாரை நம்பியும் இங்கே வாழ்க்கை நடத்துறது இல்லை. நானும் யாரை நம்பியும் இல்லை!''


''அடுத்து ரஜினி, கமல்... யாராவது ஒருத்தரைவெச்சு பக்கா கமர்ஷியல் படம் கொடுப்பீங்கன்னு பார்த்தா, வடிவேலு நடிக்கிற படத்தை இயக்கப்போறீங்கன்னு சொல்றாங்களே... உண்மையா?''



'' 'கோச்சடையான்’ முடிஞ்ச பிறகு 'ராணா’ பத்திப் பேசலாம்னு ரஜினி சார் சொல்லிட்டார். 'பஞ்சதந்திரம் பார்ட் 2’னு பேச்சு வந்தது. ஆனா, அதிகாரபூர்வமா கமல் சார் தரப்பில் இருந்து யாரும் பேசலை. அந்த இடைவேளையில் வடிவேலுவுக்காக ஒரு கதை கேட்டேன். ரஜினி சார் பயோகிராஃபி எழுதின காயத்ரி சொன்ன கதை அது. கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. வடிவேலுவும் கதையைக் கேட்டுட்டு வந்து என்னைப் பார்த்தார். 'பண்ணலாமாண்ணே’னு கேட்டாரு. சரின்னு சொல்லிட்டேன். பிரமாண்டமான படமா இருக்கும். இந்தப் படத்துக்கு சினிமாவை சினிமாவாப் பார்க்கிற தயாரிப்பாளர்கள் வேணும். வந்தா, பிரமாதமா பட்டையைக் கிளப்பலாம்!''


நன்றி - விகடன் 

Saturday, December 15, 2012

ரஜினி அரசியலுக்கு வர உள்ளூர ஆசைப்படுகிறாரா?

''இனி என்ன செய்ய..?'' தவிக்கும் ரஜினி!

ஜினியின் பிறந்த நாள் என்பது, அவரது படம் ரிலீஸ் மாதிரியே பரபரப்பைக் கிளப்பும். இந்த ஆண்டு 12.12.12 என்ற அபூர்வ தேதியில் வருவதால் ரஜினிக்கே இந்த பிறந்த நாள் செம ஸ்வீட் தினம். பொதுவாக பிறந்த நாள் அன்று எஸ்கேப் ஆகிவிடுபவர், இந்தப் பிறந்த நாள் அன்று போயஸ் தோட்டம் வீட்டுக்கு வந்த ரசிகர்களை நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.



 திரைப்படத் துறைக்கு ரஜினிகாந்த் வந்து 36 ஆண்டுகள் ஆகின்றன. அவருக்கு இந்த ஆண்டு 63-வது பிறந்த நாள். ரசிகர்களுக்குத் தேவை இல்லாத சிரமத்தைக் கொடுக்கக் கூடாது என்றுதான், பிறந்த நாள் அன்று ரசிகர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துவந்தார் ரஜினி. கடந்த ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிறகு ரசிகர்களைச் சந்திப்பதில் அதிக அக்கறை செலுத்தத் தொடங்கினார்.



ஒவ்வோர் ஆண்டும் ரஜினியின் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடிவந்தாலும், கடந்த ஆண்டுதான் சென்னை மாவட்டத் தலைமை ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி​யின் 62-வது பிறந்த நாள் விழாவை பெரிய அளவில் கொண்டாடினார்கள். இந்த ஆண்டும் வள்ளுவர் கோட்டத்திலேயே விழா எடுக்க, கடந்த மாதமே வேலைகளைத் தொடங்கினர். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மண்டபத்துக்கு விண்ணப்பத்தோடு வாடகையும் செலுத்தப்பட்டது. கடைசி நேரத்தில், அரசு விழாவுக்கு புக் செய்யப்பட்டுள்ளது என்று காரணம் கூறி, அனுமதி மறுத்துவிட்டனர். அதனால், ரசிகர் மன்ற விழாவை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு மாற்றினார்கள்.



கடந்த சில வருடங்களாக டிசம்பர் 12-ம் தேதி பிறந்த நாள் விழா கொண்டாடுவதைத் தவிர்த்துவந்த ரஜினியின் வீடு, இந்தத் தடவை விழாக்கோலம் பூண்டது. போயஸ் கார்டன் வீட்டில் வாழை மரம், மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டன. பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது.  



சென்னையில் ரஜினி இருக்கும் விவரத்தைத் தெரிந்துகொண்ட ரசிகர்கள், அதிகாலை 6 மணிக்கே போயஸ் தோட்டத்தில் குவியத் தொடங்கினர். ரஜினி வீடு இருக்கும் பகுதியில்தான் முதல்வர் ஜெயலலிதாவின் வீடும் இருப்பதால், உடனடியாகப் பாதுகாப்புப் பணியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கவே, ரசிகர்களை ரஜினி சந்திப்பதற்கு ஸ்பெஷல் மேடை தயாரானது. மின்னல் போன்று வீட்டைவிட்டு வெளியே வந்த ரஜினி, ரசிகர்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்தார்.



'சூப்பர் ஸ்டார் வாழ்க, தலைவர் வாழ்க’ என்று ரசிகர்கள் கோஷம் விண்ணைப் பிளந்தது. பட்டு வேட்டி, பட்டுச் சட்டை, கழுத்தில் ருத்திராட்ச மாலையோடு விறுவிறுவென மேடை ஏறிய ரஜினி, கைகளை தலைக்கு மேல் தூக்கிக் கும்பிட்டார். ரசிகர்களின் வாழ்த்து கோஷமும் விசில் சத்தமும் காதைப் பிளக்கவே... புன்னகையுடன்  ரசிகர்களை அமைதிப்படுத்திய ரஜினி மைக்கில் பேசினார்.  



''அனைவருக்கும் நன்றி. உங்களால் பெருமை அடைகிறேன். உங்களது பூஜை, வேண்டுதல்களால் நான் நலமுடன் இருக்கிறேன். இந்த ஏரியா செக்யூரிட்டி நிறைந்த இடம். முதல்வர் வசிக்கும் இடம். நாம் யாருக்கும் தொந்தரவாக இருக்கக் கூடாது. உங்கள் எல்லோரையும் தனித்தனியாகப் பார்த்து கைகுலுக்கி போட்டோ எடுத்துக்கொள்ள ஆசை. ஆனால் அதற்கு நேரம் போதாது. உங்களது பெற்றோரை, குடும்பத்தை அன்போடு கவனித்துக்கொள்ளுங்கள். அதுதான் எனக்கு மகிழ்ச்சி தரும்'' என்றார்.



ரசிகர்கள் கொண்டுவந்த பிரசாதங்கள், வாழ்த்து அட்டைகள், மலர்க் கொத்துகளை சந்தோஷமாகப் பெற்றுக்கொண்டார். பின்னர், பத்திரிகையாளர்களை வீட்டுக்குள் அழைத்துப் பேட்டி கொடுத்தார். ''இந்தப் பிறந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள். 'கோச்சடையான்’ படம் இன்னும் இரண்டு மாதங்களில் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருக்கிறது. இந்தப் படம் வெற்றிபெற்றால், 'பொன்னியின் செல்வன்’, 'ராமாயணம், மகாபாரதம் எல்லாவற்றையும் அருமையான படங்களாக எடுக்கும் காலம் மலரும். திரையுலகில் புதிய டிரெண்டை இது உருவாக்கும்'' என்றார்.



''பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு நீங்கள் சொல்லும் மெசேஜ்?''


''நல்லதையே நினைக்கவேண்டும். நல்லதே நடக்கும். நம்பிக்கையோடு காரியங்களில் ஈடுபட​வேண்டும். அனைவரிடமும் அன்பாக இருங்கள்'' என்றவர் மீண்டும் ரசிகர்களைச் சந்திக்க மேடை ஏறினார்.



இந்தச் சந்திப்பு முடிந்த பிறகு, 'ரஜினி வெளியே செல்கிறார்’ என்று சொல்லி, ரசிகர் மன்ற மூத்த நிர்வாகி சத்யநாராயணாவும் போலீஸாரும் ரசிகர்களை அப்புறப்படுத்தினர். அனைவரையும் போயஸ் தோட்டத்தின் நுழைவாயிலான பின்னி சாலை சந்திப்பில் கொண்டுபோய் விட்டனர். அதன் பிறகு வந்த ரசிகர்களை அனுமதிக்காமல், பின்னி சாலை சந்திப்பின் அருகிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினார்கள். ஆனாலும், 'ரஜினியைப் பார்த்துவிட்டுத்தான் போவோம்’ என்று ரசிகர்களும் அங்கேயே நின்றனர். இந்தப் பிரச்னையை ரஜினியின் காதுக்கு அவரது ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகள் கொண்டுசென்றனர். 



அதன் பிறகு, 'ரசிகர்களை ரஜினி தொடர்ந்து சந்திக்கிறார். உள்ளே விடுங்கள்’ என்று போலீஸாருக்குத் தகவல் சொல்லப்பட்டது. அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை என்று ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. ஆனால், ரஜினியின் பக்கத்து வீட்டு காம்பவுண்ட் சுவரில் ரசிகர்கள் அதிக அளவில் ஏறி நின்றதால், சுவர் இடிந்து விழுந்தது. நல்லவேளையாக யாருக்கும் எந்தக் காயமும் இல்லை.



பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் போயஸ் தோட்டம் பகுதியில் 10-ம் தேதி இரவு போஸ்டர் ஓட்டினார்கள். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீ​ஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி... ஒட்டிய போஸ்டரையும் கிழித்துள்ளனர். 'யாரும் போஸ்டர் ஒட்டக் கூடாது’ என்று எச்சரித்து விரட்டினார்கள். ஏனாம்?


அந்த போஸ்டரில், 'தலைவா, தமிழர்களை ஏமாற்​றும் விதியை மாற்று! தமிழர்களுக்கு ஏற்றம் தரும் கொடியை ஏற்று!’ என்று குறிப்பிட்டு இருந்தனர். அதில் விதி என்ற வார்த்தையில் 'வி’-யை கறுப்பு - சிவப்பு நிறத்திலும், 'தி’-யை கறுப்பு - வெள்ளை - சிவப்பு நிறத்திலும் எழுதி இருந்தனர். இந்த பிரச்னையும் ரஜினி கவனத்துக்குப் போனதாம். அந்த வாசகங்களை திரும்பத் திரும்பப் படித்து சிரித்துக்கொண்டாராம்.



இதையடுத்து 13-ம் தேதி ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் நடைபெற்ற ரசிகர் மன்ற விழாவில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென கலந்துகொண்டார் ரஜினி. அந்தக் கூட்டத்தில் தனது அரசியல் பிரவேசம் பற்றி பரபரப்பாகப் பேசவும் செய்தார்.



''1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நேரத்தில் பலரும் என்னை அரசியலுக்கு அழைத்தார்கள். நான் அரசியலில் இறங்க விரும்பாமல் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டேன். அப்போதும் என்னை விடவில்லை. நான் வெளிப்படையாக யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்பதை அறிவிக்கவில்லை என்றால் கோழை என்று சொல்வார்கள் என்றார்கள். நான் பிச்சை எடுத்து வாழ்ந்தாலும் வாழ்வேனே தவிர, கோழையாக வாழ விரும்பவில்லை. அந்த சூழ்நிலை காரணமாக என்னுடைய ஆதரவை வெளிப்படையாக அறிவித்தேன். 


அதனால் ஆட்சி மாற்றம் நடந்தது. ஆதரவு கொடுத்துவிட்டேன் என்பதால் அடுத்த ஐந்து ஆண்டுகளும் அமைதியாக இருந்தேன். அதற்குப் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டேன்.



அரசியல் கட்சி நடத்துவது எளிதல்ல. எந்தத் தலைவரும் சந்தோஷமாக இல்லை. தொண்டர்கள் மட்டும்தான் சந்தோஷமாக இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் நல்லது செய்ய நினைத்தாலும் முடிவது இல்லை. ஆட்சியில் அமரவைக்கும் தொண்டர்களே... அவர்களைத் தோற்கடிக்கவும் செய்கிறார்கள்.



 ஒரு மனிதனுக்கு எப்படி தலையெழுத்து இருக்கிறதோ அதுபோலவே ஒரு மாநிலத்துக்கும் தலையெழுத்து உண்டு, ஒரு நாட்டுக்கும் தலையெழுத்து உண்டு. யார் ஆளவேண்டும் என்பது சந்தர்ப்ப சூழல்களால்தான் நடக்கும்,  தனிப்பட்ட திறமையால் நடக்காது. நேரம் என்பது முக்கியப் பாத்திரம் வகிக்கிறது. காமராஜரைவிட நல்ல தலைவர் ஒருவர் இருக்காரா? அவரையே தோற்கடித்துவிட்டனர். எல்லாம் காலம்தான்.



நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். தமிழ் மக்கள்தான் எனக்கு எல்லாம். நான் என்ன செய்யவேண்டும் என்பதை கோஷம்போட்டுச் சொல்கிறீர்கள். நான் பொய்யான வாக்குறுதி கொடுக்கத் தயார் இல்லை...'' என்று அரசியல் பேசியவர் அடுத்து 'பாபா’ விவகாரம் குறித்தும் பேசினார்.



''என்னுடைய ஒரு படம் வெளியிடுவதற்கு பிரச்னை செய்தார்கள். சிகரெட் பிடிக்கக்கூடாது என்றார்கள். நான் சினிமாவில் வீம்புக்காகவே சிகரெட் பிடித்திருப்பேன். ஆனால், அவர்கள் சொன்ன விஷயம் நல்லது. ஆனால், அதைச் சொன்னவிதம் சரியில்லை. இப்போது நான் சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டேன். சிகரெட் காரணமாகத்தான் என்னுடைய உடல் கெட்டுப்போனது. நான் குணமாகிவந்ததை மெடிக்கல் மிரக்கிள் என்றுதான் மருத்துவர்கள் சொல்கிறார்கள். அந்த மெடிக்கல் மிரக்கிள் என்பது நீங்கள் செய்த பிரார்த்தனைதான்'' என்றவர் ரசிகர்கள் சிகரெட் பிடிக்கவேண்டாம் என்பதை பிறந்த நாள் கோரிக்கையாகவும் வைத்தார்.


ரஜினிக்கு அரசியல் ஆசை இருந்தாலும் பிரச்னைகளுக்குள் எப்போதும் சிக்கிக்கொள்ள அவர் விரும்பியது இல்லை. இப்போது கோர்ட், கேஸ் என்று அலையும் விஜயகாந்த்தின் அரசியல் நிலைமையைப் பார்த்து ரஜினியின் தவிப்பு மேலும் அதிகமாகிவிட்டது. ஆனாலும் இதுவரை அரசியல் பற்றி வெளிப்படையாகப் பேசாத ரஜினி, ரசிகர்கள் மத்தியில் மனம்திறந்து பேசியிருப்பது சோர்ந்துகிடக்கும் ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.



- எம்.குணா, எஸ்.முத்துகிருஷ்ணன்,


அட்டை மற்றும் படங்கள்:


சொ.பாலசுப்பிரமணியன், பா.கார்த்தி


 வெளியே செல்லாத முதல்வர்!


கடந்த மாதம் 11-ம் தேதி சிறுதாவூர் சென்ற முதல்வர் ஜெயலலிதா, அங்கு இருந்தபடியே, தினமும் போயஸ் தோட்டம் வீட்டுக்கு வந்து கோட்டைக்குச் செல்வார். மாலையில் சிறுதாவூர் சென்றுவிடுவார். இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி கிறிஸ்துமஸ் விழா முடிந்த பிறகு அவர் போயஸ் தோட்டம் வீட்டிலேயே தங்கிவிட்டார். வழக்கமாகக் கோட்டைக்குச் செல்லும் அவர், ரஜினி பிறந்த நாள் அன்று, வீட்டில் இருந்தபடியே பணிகளைக் கவனித்தாராம்.


 ஓ, நண்பனே!


ரஜினிக்கு நெருக்கமான நண்பர்கள் வட்டாரத்தில் முக்கியமானவர் மயிலாப்பூர் காந்தி. இவர்தான், கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தைக் கவனித்துவந்தார். மனதில் பட்டதை ரஜினியிடம் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். எந்த உதவியையும் ரஜினியிடம் கேட்டது கிடையாது. சிறப்பு தினங்களில் காந்தியின் வீட்டில் இருந்துதான் ரஜினிக்கு மீன் குழம்பு செல்லும். திரைப்படக் கல்லூரியில் படிக்கும்போது இருவருக்கும் இடையே உருவான நட்பு, 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. அத்தகைய நண்பரான காந்தி, கடந்த 10-ம் தேதி இரவு மாரடைப்பால் இறந்துவிட்டார். செய்தியைக் கேட்டு துடிதுடித்துப்போன ரஜினி, பிறந்த நாளுக்கு முந்தைய நாளான 11-ம் தேதி காலை மனைவி லதாவுடன் காந்தி வீட்டுக்குச் சென்று மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினார். ரஜினியின் சார்பில் அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ், கூடவே இருந்து இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளைக் கவனித்துக்கொண்டார்.



 நன்றி = ஜூ வி 



மக்கள் கருத்து 



1. ஹூம்.. செலிபிரட்டிகள் தான் தமிழகத்தை ஆள முடியும்.இதை வேறு சிலர் வக்காலத்து வாங்கு கிரார்கள். என்று மறையும் இந்த செலிபிரட்டி கிரேஸ். 




2. யார் சொன்னது ஜெயல்லிதா துணிச்சல் மிக்கவர் என்று? மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் எவ்வளவு கோலை என்று. வழக்கமாக கோட்டைக்கு செல்லும் ஜெயலலிதா, ரஜினியின் பிறந்த நாள் அன்று கோட்டைக்கு செல்லாமல், பயந்து வீட்டிலேயே வேலையை செய்துவந்தாராம்!




3. புலி வருது...புலி வருதுன்னு சொல்லியே சம்பாதித்த பணத்தை வைத்து நோகாமல் நோம்பி கும்பிட வேண்டியதுதான். தன்னால் எதையும் செய்ய இயலாது. கடவுள் கட்டளையிடும் நாளுக்காக காத்திருக்கிறேன் என்று சொல்லியே சுய முடிவெடுக்க முடியாமல் தடுமாறிவரும் பயந்தாங்கொள்ளி.



4. அரசியல் கட்சி நடத்துவது எளிதல்ல. எந்தத் தலைவரும் சந்தோஷமாக இல்லை--- ஆம் கொள்ளையடிக்க தலைவன் ஆனவனெல்லாம் சந்தோஷமாக இல்லை. சேவை செய்ய வ்ந்த நல்லகண்ணு போன்றவர்கள் ஏழ்மையிலும் சந்தோஷமாகத் தான் இருக்கிறார்கள். ரஜினி இனி வேஷம் போட வேண்டாம். படம் வரும் போது பில்டப் கொடுத்து ஏமாற்றுவது , கோழைத்தனத்திலும் கீழ்மையானது.


5. பிறந்த நாளன்று, பத்திரிகையாளர்களிடம் தனியாக 'கோச்சடையான்' பற்றி பேச்சு... ரசிகர்களிடம் 'அரசியல்' பற்றி பேச்சு... ம்ம்ம், நடத்துங்க...



ரஜினி - பிறந்த நாள் விழா - வீர உரை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzhMmfGhECdKMX7xu48S5aG4Vj0ee10mN0TtvLeooBY86pbLaD0raZUVIvIVUIZcscZke8dWCihtABUFCK4U9JNi8ihW4G87rZMIob_cG8ZEnw1KP603NGWOPM6sgiy7nuNKo-uA5_Z44/s1600/rajinikanth-birthday-special13.jpg'என்னை கோழை என்று நினைத்து விடாதீர்கள்' - ரஜினி

தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில், ரஜினியின் 63வது பிறந்தநாள் விழா YMCA மைதானத்தில் நடைபெற்றது.  நடிகர் சங்க தலைவர் சரத்குமார், ராதாரவி, சந்திரசேகர், லாரன்ஸ், கலைப்புலி எஸ்.தாணு, எஸ்.வி.ரம ணன், பாண்டு, நமீதா, உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.


அவ்விழாவில் ரஜினி கலந்து கொண்டு பேசியது :

ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாள் அன்று சென்னையில் இருக்க மாட்டேன். இதற்கு முக்கிய காரணம், 22 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு துயரமான சம்பவம்தான், அப்போது நடந்த என் பிறந்தநாள் விழாவுக்கு வெளியூரிலிருந்து வந்த 3 பேர் ஊருக்கு திரும்பிச் சென்றபோது, விபத்தில் சிக்கி இறந்தனர். அதற்குப் பிறகுதான் நான் இந்த முடிவுக்கு வந்தேன்.

என் பிறந்தநாளில் வெளியூருக்கு சென்றுவிடுவேன். அங்கு தனியாக அமர்ந்து, இதுவரை நான் என்ன செய்தேன்? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன்? இனி என்ன செய்யப் போகிறேன் என்று நினைத்துப் பார்ப்பேன். என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. அது ஆண்டவன் கையில் இருக்கிறது.

மிகப் பெரிய பிளான் போட்டால், அது நடக்காது. மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்று ஒருவன் நினைத்தால், அப்படியே நடந்து விடாது. அதிகமாக சம்பாதிக்கலாம். அல்லது அதைவிட குறைவாக சம்பாதிக்கலாம். இதிகாசம், புராணங்களில் கூட நினைத்தது அப்படியே நடந்து விடாது.

நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அபூர்வமாக வரும் 12.12.12 அன்று என் பிறந்தநாளில், என் உயிரினும் மேலான ரசிகர்களை சந்தித்தது அதிக மகிழ்ச்சி அளித்தது. ஆனால், இது நடக்குமா என்று சந்தேகமாக இருந்தது. காரணம், என் உயிர் நண்பன், எனக்கு அனுமான் மாதிரி துணையாக இருந்த காந்தி, 10ம் தேதி ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். 11ம் தேதி உடல் அடக்கம் நடந்தது. மறுநாள் காலையில் என் பிறந்தநாள். 11ம் தேதியே ரசிகர்களுக்கு தகவல் சொல்லியாகி விட்டது. 


ஒரு நானூறு பேர் காலையிலேயே என் வீட்டுக்கு வந்து விட்டார்கள். உடனே நான் குளித்து முடித்து, அவர்களைப் பார்க்க வந்துவிட்டேன். ரசிகர்களைப் பார்த்த பிறகுதான் மகிழ்ச்சி ஏற்பட்டது. காந்தி இறந்த கவலையில் மூழ்கியிருந்த நான், அதிலிருந்து வெளியே வர ஆரம்பித்தேன். ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும், அந்த வலியை தீர்த்திருக்க முடியாது. ரசிகர்களை சந்தித்துப் பேசியபோது, அவர்கள் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டபோது கிடைத்த சந்தோஷம் எல்லாம் ஆண்டவன் செயல்தான்.

சத்யநாராயணாவை நான் மன்றத்தை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டேன் என்றெல்லாம் சொன்னார்கள். அவர் இவ்வளவு நாட்கள் ஓய்வு எடுத்தார். காரணம், உடல்நிலை சரியில்லை. அவர் வந்தால்தான் ரசிகர்களை கட்டுப்பாடாக வைத்திருக்க முடியும் என்று அவரை வரவழைத்தேன். என் ரசிகர்கள் பவர்புல் ஆட்கள் என்பது எனக்கு தெரியும். அரசியல் கடல் மாதிரி. அதுபற்றி நான் பேச விரும்பவில்லை. 



இங்கு அ.தி.மு.க கூட்டணியில் உள்ள சரத்குமார், தி.மு.கவில் உள்ள சந்திரசேகர் எல்லாம் வந்திருக்கிறார்கள். போயஸ் கார்டனும் வந்திருக்கிறது. கோபாலபுரமும் வந்திருக்கிறது. சரத்குமார் ஜெயலலிதா மேடத்திடமோ, சந்திரசேகர் டாக்டர் கலைஞரிடமோ இந்த விழாவுக்கு செல்ல வேண்டும் என்று கேட்டிருந்தால், கண்டிப்பாக அவர்கள் அனுமதிப்பார்கள். காரணம், நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். தமிழ் ரசிகர்கள்தான் என்னை வாழ வைத்தவர்கள். அவர்கள் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும். 1996ல் எனக்கு நடந்த பிரச்னை பற்றி எல்லாருக்கும் தெரியும். அதற்குப் பிறகு என் பெயரையோ, புகைப்படத்தையோ ரசிகர்கள் பயன்படுத்தக் கூடாது என்று சொன்னேன்.

அப்போது இந்தியாவிலுள்ள மிகப் பெரிய அரசியல் தலைவர்கள், அவர்கள் பெயரைச் சொல்ல விரும்பவில்லை, அவர்கள் எல்லாரும், ‘உங்க ஆதரவு யாருக்கு? நீங்க தேர்தல் பிரசாரத்துக்கு வர வேணாம். ஆதரவை மட்டும் தெரிவிச்சா போதும்’ என்று கேட்டுக்கொண்டார்கள். நான் எந்த பதிலும் சொல்லவில்லை. அதற்காக என்னை கோழை என்று நினைத்து விடாதீர்கள். 


நான் செத்தாலும் சாவேனே தவிர, பிச்சை எடுத்தாவது வாழ்வேனே தவிர, கோழையாக மட்டும் சாக மாட்டேன். டாக்டர் கலைஞர் என்னை ஒரு நண்பராக ஏற்றுக் கொண்டவர். அதனால், டாக்டர் கலைஞரை எனது அருமை நண்பர் என்று சொல்லிக்கொள்கிறேன். அவரை பலமுறை சந்தித்துப் பேசியிருந்தாலும், அவர் என்னிடம் அரசியல் பற்றி பேசியதில்லை.

பிறகு ஒருமுறை என் படத்துக்கு ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். அதுவும் ரசிகர்களுக்கு தெரியும். ஆனால், அவர்கள் சொன்ன பாயின்ட் ரொம்ப நல்ல பாயின்ட். அதற்குப் பிறகு நான் நடிக்கின்ற படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சியை வைக்கவில்லை. அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தது வேண்டுமானால் வேறுவிதமாக இருக்கலாம். ஆனால், அவர்கள் சொன்ன கருத்து நல்ல கருத்து.  மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றுதான் ஒவ்வொரு அரசியல் தலைவரும் வருகிறார்கள். 


ஆனால், இங்கு அவர்கள் நினைத்த மாதிரி எதுவும் செய்ய முடியவில்லை. காரணம், இங்கு இருக்கும் சிஸ்டம் அப்படி. அரசியல் கட்சிகளுக்கு மிகப் பெரிய பலமே அதன் தொண்டர்கள்தான். அவர்கள் நினைத்தால், ஒரு ஆட்சியை வரவழைக்க முடியும். அதைக் கவிழ்ப்பதும் அவர்கள்தான். என் குரு சச்சிதானந்த சுவாமிகள், தலையெழுத்து பற்றி அடிக்கடி சொல்வார். ஒரு நாட்டுக்கு யார் தலைவராக வர வேண்டும்? யார் ஆள வேண்டும் என்பது தலையெழுத்துப் படியே நடக்கும். அரசியலில் நேரம் ரொம்ப, ரொம்ப முக்கியம். இல்லை என்றால், காமராஜர் மாதிரி ஒரு நல்ல தலைவர் தோற்றிருக்க முடியுமா?

உடம்பு சரியில்லாமல் இருந்தபோது, நிறைய விஷயங்களை, டாக்டர்களின் ஆலோசனைப்படி என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டார்கள். பிறகு சென்னைக்கு வந்தவுடன் எல்லா நியூஸ் பேப்பர்களையும், பேப்பர் கட்டிங்குகளையும் பார்த்தேன். ரசிகர்கள் நான் நலம்பெற வேண்டும் என்று கோயில், கோயிலாகச் சென்று வேண்டியதையும், பிரார்த்தனை செய்ததையும் படித்து தெரிந்துகொண்டேன். அவர்கள் என்மீது கொண்ட இந்த அன்புக்கு எப்படி ரியாக்ட் பண்றது என்று தெரியவில்லை. இங்கே பேசிய ராதாரவி, நான் நலம்பெற ஒரு வாரம் விரதம் இருந்ததாக சொன்னார். அதற்கு என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை.

‘சந்திரமுகி’க்கு பிறகு ‘சிவாஜி’. அதற்குப் பிறகு ‘எந்திரன்’ படத்தில் நடித்தேன். வேட்டையன் கேரக்டரும், மொட்டை பாஸ் கேரக்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதால், அடுத்து உருவாக்க இருந்த ‘ராணா’ படத்தில் வில்லனாக நடிக்க முடிவு செய்தேன். அப்போது எனக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே மருத்துவமனையில்  சேர்ந்தால், தேவையில்லாத வதந்திகள் வரும் என்று தள்ளிப் போட்டுக்கொண்டே வந்ததால் ஏற்பட்ட விளைவு இது.

நான் கண்டக்டராக இருந்தபோது, நிறைய மது அருந்தியதுண்டு. அப்போது சில நண்பர்களின் தூண்டுதலால் இது நடந்தது. சினிமாவில் நடிக்க வந்த பிறகு நல்ல சரக்கு குடித்தேன். பிறகு இடைவிடாத ஷூட்டிங்கில் கடுமையாக உழைத்ததால், மன உளைச்சல் ஏற்பட்டது. அப்போது நடந்தது பற்றியும் ரசிகர்களுக்கு தெரியும். பிறகு லதாவை திருமணம் செய்தேன். மது அருந்துவதை குறைத்தேன். 


யோகா, உடற்பயிற்சி என என் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டேன். ஆனால், அளவுக்கதிமாக சிகரெட் பிடித்தேன். அதனால் வந்த வினை தான், எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. நுரையீரல் பாதிப்பை தொடர்ந்து கிட்னியில் பிரச்னை ஏற்பட்டது. முதலில் சென்னையிலும், பிறகு சிங்கப்பூரிலும் சிகிச்சை பெற்றேன். இந்த நேரத்தில் ரசிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது இது தான், தயவுசெய்து சிகரெட் பிடிக்காதீர்கள். அதை இன்றே, இப்போதே விட்டு விடுங்கள். தொடர்ந்து நான் மருந்துகளும், மாத்திரைகளும் எடுத்துக்கொண்டதால், சில மாதங்களாக உடம்பு ‘வீக்’ ஆகிக்கொண்டே வந்தது. உடனே மருத்துவ முறையை மாற்றினேன். இப்போது சொல்கிறேன். கடந்த ஓரிரு மாதங்களாக ரொம்ப நன்றாக இருக்கிறேன். டாக்டர்களே கூட, ‘இது ஒரு மிராக்கிள்’ என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள்.

நான் உடல்நிலை தேறி வந்ததற்கு முக்கியமான காரணம், ரசிகர்களின் அன்பும், பிரார்த்தனையும்தான்.  என் ரசிகர்களாகிய நீங்கள் முதலில் உங்கள் தாய், தந்தையரை கவனியுங்கள். நமக்கு நம் வீடுதான் சொர்க்கம். பெற்றோரை வணங்குங்கள். அவர்களின் காலில் விழுந்து வணங்கி, அவர்களுடைய ஆசிகளைப் பெறுங்கள். எனது பிறந்தநாளை, உங்கள் பெற்றோரை வணங்கும் நாளாக நினைத்தால் அதுவே எனக்குப் போதும் " என்று பேசினார்.


நன்றி - விகடன்



http://timesofap.com/wp-content/blogs.dir/3/files/2012/10/rajinikanth-amitabh-bachchan1.jpg