Showing posts with label மங்கையர் மலர். Show all posts
Showing posts with label மங்கையர் மலர். Show all posts

Tuesday, October 09, 2012

சுதா சந்திரன் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி @ மங்கையர் மலர்

http://homepreneur-online.com/wp-content/uploads/2009/08/image003.jpg 

என்னைச் செதுக்கிய சோதனைகள்!

சுதா சந்திரன் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி

காட்டுப்பாக்கத்தில்சூரிய புத்திரிதொடருக்காகப் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தமயூரிசுதா சந்திரனுடன் ஒரு சுவையான சந்திப்பு நடந்தது.
வாங்க, வாங்க, வணக்கம்" என சரளமான தமிழ் பேசி வரவேற்றார் சுதா சந்திரன்,
என்ன அப்படிப் பார்க்கறீங்க? நான் மும்பையிலேயே பிறந்து வளர்ந்த பொண்ணுன்னாலும் நல்லா தமிழ் பேசுவேங்க.. என் சரியான தமிழ் உச்சரிப்புக்குக் காரணம் விஜயகாந்த் சார்தான்.. ‘வசந்தராகம்படத்துல அவருடன் இணைந்து நடிச்சப்போ, செட்டுல இங்லீஷ்லயே பேசிச் சமாளிச்சுடலாம்னுதான் பார்த்தேன். ஆனா அவர் விடலை.
தமிழ் சினிமாவுல நடிக்கன்னு வந்தாச்சு. அதுக்கப்புறம் தமிழ் கத்துக்கலைன்னா எப்படி? தமிழை சுலபமாகக் கத்துக்கலாம்"னு சொல்லிச் சொல்லியே என்னைத் தமிழ் பேச வெச்சுட்டாரு. அவருக்கு என் நன்றி!" என்று கலகலப்பாக ஆரம்பித்தார் சுதா சந்திரன்.
நீங்க சினிமாத் துறைக்கு வந்து இருபத்தேழு வருஷமாயிடுச்சாமே!

ஆமா... என்னவோ, இப்பதான் ஃபீல்டுக்குள்ள நுழைஞ்சமாதிரி ரொம்ப ஜாலியா, சந்தோஷமா போய்க்கிட்டு இருக்கு. தினம் புதுசு புதுசா ஏதாவது கத்துக்கிட்டே இருக்கேன், புதுபுது முகங்களைச் சந்திக்கறேன்.
குடும்ப விஷயத்திலும் ரொம்ப அதிர்ஷ்டசாலி நான். அருமையான, அழகான, அன்பான குடும்பத்தை இறைவன் எனக்குக் கொடுத்திருக்கிறார். என் அப்பா, நான், என் கணவர் ரவி டாங் என எங்கள் மூன்று பேரையும் கொண்ட அற்புதமான குடும்பம் என்னுடையது" என்றவரை இடை மறித்து,
எல்லா சானல்களிலுமே வருகிறீர்களே.. உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்?" என்று கேட்டபொழுது, சரசரவென வந்து விழுந்தது ஒரு பெரிய லிஸ்ட்!
ஹிந்தி, குஜராத்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ், ஆங்கிலம், பஞ்சாபி. இதுல பஞ்சாபி கொஞ்சம் ஸ்பெஷல் ஏன்னா, என்னை 18 வருடங்களுக்கு முன் கைப்பிடித்தவர் ஒரு பஞ்சாபி!"
இத்தனை வருஷமாய் மேக் அப், கேமரா, ஆக்டிங்ன்னு இருந்துட்டீங்களே..சினிமாத் துறையைப் பற்றி உங்க அபிப்ராயம் என்ன...?
இது ஒரு வொன்டர்ஃபுல் இன்டஸ்ட்ரி... சவால்கள் நிறைந்தத் துறை. கொஞ்சம் திறமை + நிறைய பொறுமை + நிறைய, நிறைய உழைப்பு இருந்துட்டா, எந்த உச்சிக்கும் போகலாம்! இதுவரை யாரும் என்னிடம் எதுக்காகவும் மிஸ்பிஹேவ் பண்ணினதே கிடையாது.
அந்தக் குறிப்பிட்ட விபத்துக்குப் பிறகு, செயற்கைக் கால் பொருத்திக்கிட்டு, ‘மயூரிபடம் செஞ்சீங்க; அதுவும் நாட்டியத் தாரகையா! இப்ப அதைப் பற்றி உங்க எண்ண ஓட்டம் எப்படியிருக்கு?

‘மயூரிபடம் முடிஞ்சப்பறம் ஏதோ ஃப்ளூக்ல ஒரு படம் ஹிட் ஆயிடுச்சு. தொடர்ந்து ஒரு ஹேன்டிகேப்ட் பெர்சனால் மீடியாவில் நிச்சயம் ஜெயிக்கவே முடியாதுன்னு என் காதுபடவே நிறைய பேர் சொன்னாங்க.. அந்தச் சொற்களை, நான் சவாலாய் எடுத்துகிட்டேன்... ஜெயிச்சே தீரணுங்கிற என்னுடைய வெறிதான், ஒரு ஏக்தா கபூர் என்னை வைச்சு ஹிந்தி சீரியல்கள் பண்ணி, என்னை ஒரு style icon ஆக என் ஹெவி நகைகளுக்காகவும், ஸ்டைலான பொட்டுகளுக்காகவும், சேலைகளுக்காகவும் பேச வெச்சுருக்கு. நம் மனம்தான் நம் வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம். நம்மால் நிச்சயம் முடியுங்கிற மனோபாவத்தை வளர்த்துக்கிட்டா நம்மால், எதையும் சாதிக்க முடியும் என்பது என் வாழ்க்கை எனக்கு சொல்லிக் கொடுத்த பர்சனல் பாடம்.
விபத்துல என் கால் போனபோது, ‘உன்னால் இனி நடனம் ஆடவே முடியாதுன்னு சொன்னவங்க முன்னாடி நடனம் ஆடியே காட்டணும்னு வெறியாயிடுச்சு. அதற்கு ஏற்றார் போல் எனக்கு உதவி செய்ய கடவுள் நல்ல மக்களை எனக்கு அனுப்புவார், அனுப்பியிருக்கார்.
எங்கப்பாதான் போதும்மா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ, கொஞ்சமாவது ஸ்லோடவுன் பண்ணிகோ"ன்னு சொல்லுவாரு. நமக்காவது ரெஸ்டாவது!


http://www.tamiloviam.com/img/Kalasam-Sudha1.jpg
உங்க பெற்றோர்கள் உங்களோட ஒவ்வொரு முன்னேற்றத்துலயும் உறுதுணையா இருந்திருக்காங்க இல்லயா?
நிச்சயமா.. அவங்க என்ன சொல்றாங்களோ அதை அப்படியே நான் கேட்டுப்பேன்,
முதல் முதல்லா நான் ஒப்பந்தத்துல கையெழுத்துப் போடும்போது, ராகு காலத்துல மட்டும் எக்காரணம் கொண்டும் கையெழுத்து போடாதேன்னு பெத்தவங்க சொன்னாங்க; ஆனா அத அப்படியே ஃபாலோ பண்றேன்.

நான் ஒரு பஞ்சாபியைத் திருமணம் செஞ்சுக்கப் போறேன்னு வீட்ல சொன்னபோது, உனக்கு சரிபடாது. கல்யாணம் பண்ணிக் கிட்டு ஆறே மாசத்துல பொட்டிய தூக்கிட்டு திரும்பி வருவேன்னு அம்மா சொன்னாங்க. அதையும் ஒரு சவாலாய் எடுத்துகிட்டேன். கிட்டத்தட்ட ஒன்பது வருஷம் காத்திருந்து... அவரை நல்லா புரிஞ்சுக்கிட்டு, அப்புறம் தான் திருமணம் செஞ்சுக்கிட்டேன். எங்களுக்குள்ள காதல் என்பதைவிட புரிந்துணர்வுங்கிறது ரொம்ப அழுத்தமாக, ஆழமாய் இருந்தது, இருந்துகிட்டும் இருக்கு.
என் அம்மா, தான் இறக்கும் தருவாயில் வெப் காமெரா வழியாக அப்பொழுது கனடாவில் இருந்த என் கணவரைப் பார்த்து கைகள் கூப்பி நன்றி"னு சொன்னதை நான் எப்பொழுதும் நினைச்சுப் பார்த்துப்பேன்.
உங்கள் வெற்றிக்கான காரணம்?
100% கடும் உழைப்பு மட்டும்தான். செய்யும் வேலையை மனதார விரும்பி செய்றேன்...எனக்கு சாக்குப் போக்கு பிடிக்காது... ஏதோ கடவுள் புண்ணியத்துல நல்லா இருக்கேன்னு சிலர் சொல்வாங்க. கடவுள் உழைப்பாளிங்க பக்கம்தான் நிற்பார், உழைக்காமல் இருப்பவங்க பக்கம் வெற்றிங்கிறது எப்படி வரும்?
நவராத்திரி சமயத்துல நம்ம பெண்களுக்கு நீங்க சொல்லும் வாழ்த்து மொழி என்ன?
நம் இந்திய பெண்கள் எல்லாருமே தைரியசாலிங்க. குடும்பத்துக்கு ஏதாவது ஒண்ணுன்னா, பாறை மாதிரி உறுதியாய் இருப்பாங்க. மேற்கத்திய நாடுகள்ல போய் பாருங்க ஏதாவது ஒரு சின்ன மனஸ்தாபம் வந்தாகூட மனம் ஒடிஞ்சுப் போய், குடி, தற்கொலைன்னு பெண்கள் போயிடுவாங்க. நம்ம பெண்கள் எதிலும் எப்பவும், ஸ்டெடியா நின்னு ஜெயிக்கக் கூடியவங்க. எப்பொழுதுமே ஏன்? இப்படி நடந்ததுனு கேள்வி கேட்காதீங்க! ‘அடுத்தது என்ன?’னு யோசியுங்க. வெற்றித் திருமகள் உங்கப் பக்கம் இருப்பாள்" என சிரித்தப்படி, முடிக்கிறார் சுதா சந்திரன் .
சந்திப்பு : நளினி சம்பத்குமார்


நன்றி - மங்கையர் மலர்  


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuH8t2SD0bCCtNj9W7kWogHHeTuNMXATxv2rqef7VGs5zz1YS-rgYSUtRqrFciE_EhoURXOBmMEptss7uL-LFCrZS3Eueh4PLgSVJRQe467lBq2S60FItn8L9NpCaA_I6FRwS5xd2X1IY/s1600/sutha+chandran.jpg

Thursday, September 06, 2012

உயிரோவியம்! -சிறு கதை: -தீபா ஸ்ரீ

உயிரோவியம்!


கதை: தீபா ஸ்ரீ


ஓவியம்: மாருதி


மங்கையர் மலர் மாத இதழில் சிறுகதைப்போட்டி வைத்திருந்தாங்க. அதுல 2 ஆம் பரிசு ரூ 10,000 பெற்ற கதை இது.

திரிந்துபோன பாலைக் கொட்டிக் கவிழ்த்ததுபோல, வானத்தில் மேகங்கள் உதிரியாகத் திரிந்துக் கொண்டிருந்தன. நான் சூடாக டீயைத் தயாரித்துக்கொண்டு, பால்கனியில் வந்து அமர்ந்தேன். டீ-பாயில் கிடந்த சஞ்சரிகைகளை இலேசாகப் புரட்டினேன். ‘வேளச்சேரி டைம்ஸ்’ - என்ற உள்ளூர் நாளிதழை அசுவாரசியமாகப் புரட்டியபோது கண்களில் சட்டென்று பட்டது அந்த விளம்பரம்.



எங்களிடம் பழைமையான தஞ்சாவூர் பாணி ஓவியங்கள் விற்பனைக்கு உள்ளன. தொடர்பு கொள்வும்’ என்று ஒரு பெட்டி விளம்பரம். அதன் அருகிலேயே கையில் வெண்ணெயுடன் காட்சி அளிக்கும் நவநீத கிருஷ்ணனின் அழகு சித்திரம். அதன் கீழே... ‘மினாட்சி’ என்றொரு கையெழுத்து. அது எனக்கு நன்குப் பரிட்சையமான கையெழுத்து!



அப்போது நாங்கள் கும்பகோணத்தில் வசித்தோம். எதிர்வீட்டுக்குப் புதிதாகக் குடிவந்தவள்தான் இந்த மீனாட்சி மாமி!



நல்ல பவுன் நிறம்; கொஞ்சம் பூசிய உடல்வாகு, சிரிக்கும் கண்கள் என நல்ல அழகானத் தோற்றம். நீண்ட பின்னலை, பின்னங்கழுத்தில் கைமுறுக்கு போல வட்டமாகச் சுற்றிக் கொண்டையிட்டிருப்பாள்.



அந்த வயசுக்கு அது எனக்கு புதுமையான ஹேர் ஸ்டைலாகத் தெரிந்தது.



நான் அப்போது பத்தாங்கிளாஸ் முடிச்சுருந்தேன்னு நினைக்கிறேன். மீனாட்சி மாமி வீட்டுக் கொல்லையில் மருதாணி, புதர் போல செழித்து வளர்ந்திருக்கும்.



குத்துச் செடி மருதாணி... குந்து மணியாட்டம் சிவக்கும்டி! மாமி வீட்டு மருதாணியை பறிச்சுத்தாடி!" என்று ஸ்கூல் ஃப்ரண்ட்ஸ் தொந்தரவு செய்வார்கள். நானும் அவர்களது அன்பு நச்சரிப்பைத் தட்ட முடியாமல் அடிக்கடி மீனா மாமி வீட்டுக்குப் போவேன்.



நான் போகும்போதெல்லாம் மாமி, பின் பக்கத்து திண்ணையில் உட்கார்ந்து, பெரிய அட்டையில் எதையாவது வரைந்து கொண்டிருப்பாள். அவளைச் சுற்றி, சிறிதும் பெரிதுமான ப்ரஷ்கள், பென்சில், ஸ்கெச் பேனாக்கள் சிதறிக் கிடக்கும். அது தவிர, ஒரு தகரப் பெட்டியில் சின்னச் சின்ன தகடுகள், சிறிதும் பெரிதுமான கத்திரிகள், பித்தளைக் கிண்ணங்களில் கலர் மணிகள், ரேக்குகள், வர்ணக் குப்பிகள் என பார்க்கவே ஆசையாக இருக்கும்.



ஓ! நீங்க ஆர்டிஸ்டா மாமி? ட்ராயிங் எல்லாம் வரைவீங்களா?"



ஏதோ... சுமாரா வரைவேன்!"



இல்ல மாமி! சூப்பரா வரையறீங்க!"



தாங்க்ஸ்டி உமா! மருதாணியைப் பறிச்சுக்கிட்டுப் போகும்போது, எனக்குக் கொஞ்சம் தண்ணி குடுத்துட்டுப் போ!" என்பாள் மீனா மாமி!



எனக்குத் தெரிந்த எங்க வீதிப் பெண்கள் யாரும் மீனா மாமி அளவுக்கு சித்திரக்காரர்களாக இருந்ததில்லை. பாரதி தெரு பாட்டி ஒருவர், கோயில் விசேஷங்களில் படிக் கோலம் போட்டு அசத்துவார். கண்ணா சித்தியின் பெண் ஒருத்தி, சுவரில் அழகாக வரலக்ஷ்மி அம்மன் முகம் வரைவாள்; பார்த்திருக்கிறேன். ஆனால், மீனா மாமி ஒரு ஆர்ட் கேலரியே வைத்திருந்ததைப் பிறிதொரு நாளில் பார்த்தபோது அசந்தே போனேன்.



மாமி, இந்த மாசம் ‘ராணி முத்து’ல சிவசங்கரி நாவல் வந்திருக்கு. படிக்கறீங்களா?" என்றபடி நான் வீட்டுக்குள் போனபோது, மீனா மாமி பூஜையறையில் இருந்தார்.



ஆத்தாளை... எங்கள் அபிராம வல்லியை..." என்று அழகாகப் பாடியபடி, கற்பூர ஆரத்தி எடுத்துக் கொண்டிருந்தாள் மாமி.



அடேயப்பா! பூஜை அறையா அது? தெய்விகக் கலைக்கூடம் போல இருந்தது. கண்ணாடி ஃப்ரேம் போட்ட திரு உருவச்சித்திரங்கள். செந்தாமரை மலர் மீது அமர்ந்த மகாலக்ஷ்மி, ஸ்ரீராஜ ராஜேஸ்வரி, ராதை - கண்ணன், வெங்கடேசப் பெருமாள் என எல்லாமே வெள்ளி - தங்க ரேக்குகள் மின்னிப் பளபளத்தன. தெய்வத்தின் முகங்களில் அப்படியொரு வாத்ஸல்யம்.



ஒவ்வொரு சுவாமிப் படத்தின் வலது கீழ் மூலையிலும் ‘மினாட்சி’ என்று பெயர் இருந்தது.



மாமி, மீனாட்சின்னு ஏன் சுழிக்கல? மினாட்சின்னு இருக்கே?"



நான் என்னிக்காவது கோபப்பட்டு முகம் சுளிச்சுப் பார்த்திருக்கியா? அதுதான் என் கையெழுத்தும் சுளிக்கலை!" என்றாள் சிரித்துக்கொண்டே.



ஆடி வெள்ளி, தேடி வந்திருக்க... இந்தா பால் பாயசம்!" என்று அன்புடன் கொடுத்து அனுப்பினாள்.

அம்மா, மீனா மாமி வீட்டுல ஒரு ரூம் முழுக்க, சுவாமிப் படங்கள். எல்லாமே அவங்க வரைஞ்ச பெயின்டிங்ஸ்; சூப்பராய் இருக்கும்மா!" என்று நான் சொன்னதும், அந்தத் தெருவே போய் பார்த்து வந்து சிலாகித்து மகிழ்ந்தது. அன்றைக்கு இரவு சாப்பிடும்போது, எதிர்வீட்டுல என்ன பொம்பளைங்க கூட்டம்?" என்று கேட்டார் அப்பா.



அதுவா? அந்த மீனா மாமி, அழகழகாய் சாமிப்படம் வரைஞ்சு மாட்டி வெச்சுருக்காங்க. அதைப் பார்க்கப் போனோம். நல்ல கைவேலையெல்லாம் செய்றா. லவ் மேரேஜ் போல இருக்கு. புருஷன் வெளியூர்ல இருக்கார். எப்பவோ வர்றார் - போறார்! குழந்தை குட்டியும் ஏதுமில்ல. ஒண்டியா என்னதான் செய்வா? பொழுது போகறதுக்காக எதையாவது வரையறா போலிருக்கு!" என்றாள் அம்மா.



ஒருமுறை, மீனா மாமிக்கு என்ன பணமுடைவோ என்னவோ, எங்க வீட்டுக்கு வந்து, நூறு ரூபாய் கடன் கேட்டார். இரண்டு மாதமாக வாடகை தரலை என்று வீட்டுக்கு சொந்தக்காரர் சத்தம் போட்டுவிட்டுப் போனதையும் பார்த்தோம்.



ஏன், உங்க வீட்டுக்காரர் பணம் அனுப்புறதில்லையா? ஊருக்கு வந்தே இரண்டு மூணு மாசம் இருக்கும் போலிருக்கே!" என்றாள் அம்மா நைஸாக.



ஆமாம், அவர் வேலை செய்யற கம்பெனியை மூடிட்டாங்களாம். வேற வேலைக்கு முயற்சி பண்றதாய் சொன்னாரு. பணம் வந்ததும் திருப்பித் தந்துடறேன்!" என்றாள் மெல்லிய குரலில்.



அதைக் கேட்டுக் கொண்டிருந்த அப்பா, தப்பா நினைச்சுக்காதீங்க மாமி! நீங்க ரொம்ப நல்லா பெயின்டிங் பண்றீங்களாம். அதுவும் சுவாமிப் படங்கள் பார்க்கவே தெய்விகமாய் இருக்காம். அதை வித்தா நல்ல காசு வருமே... டவுன்ல ‘வாசவி ஆர்ட்ஸ்னு..."



அப்பா சொல்லி முடிக்கிறதுக்குள்ள மீனா மாமி, சுவரில் சாய்ந்து தேம்பித் தேம்பி அழுதுவிட்டாள்.



அண்ணா, அதெல்லாம் வெறும் பெயின்டிங்னா நினைக்கறீங்க... அதெல்லாம் என்னோட குழந்தைகள். பத்து மாசம் சுமந்து பெக்கற மாதிரி, நான் கண்ணுலயும் நெஞ்சுலயும் சுமந்து வளர்த்த பிள்ளைகள். அதை வித்து என் வயிற்றைக் கழுவுற நிலமை வந்துச்சுன்னா, இதோ... இந்தக் கட்டை விரலை வெட்டிக்குவேன்!" என்றாள் ஆவேசமாக!



சரிம்மா! அழாதே! இந்தா நூறு ரூபாய். உனக்கு எப்போ முடியுமோ அப்ப குடு!" என்று சொல்லிவிட்டு அப்பா உள்ளே போய்விட்டார்.



அதற்குப் பின், அப்பாவுக்கு சென்னைக்கு மாற்றலாகிவிட்டது. மீனா மாமி, பத்தும் ஐந்துமாக நூறு ரூபாயைத் திருப்பித் தந்ததாகப் பின்னாளில் அம்மா ஒருதரம் சொன்னாள். அதற்குப் பின் மீனா மாமி என் நினைவில் வெளிறிப் போனாள். இன்றைக்கு இருபது வருஷங்களுக்குப் பிறகு ‘மினாட்சி’ என்ற கையெழுத்தைப் பார்க்கிறேன். உடனே என் கணவருக்கு விவரம் சொல்லிவிட்டு, தொடர்பு எண்ணுக்கு ஃபோன் போட்டேன்.



எங்க பெரியம்மாதான் அவங்க. வேளச்சேரி சிவன் கோயில் தெருவுல இருக்கு வீடு!" என்று ஓர் இளைஞன் பேசினான். உடனே, என் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வேளச்சேரி நோக்கிப் பறந்தேன்.



குருநானக் கல்லூரி தாண்டி, பிரதான சாலையில் இருந்தது சிவன் கோயில். அதை ஒட்டிய குறுக்குச் சந்தில் இருந்தது அந்தப் பழைய வீடு!



வாங்க... நீங்கதான் ஃபோன் செஞ்சீங்களா?" என்று கேட்டபடியே உள்ளே அழைத்துப் போனான்.



ஹாலின் சுவர் முழுக்கவும், மர பெஞ்சுகள் மீதும் மீனா மாமியின் ஓவியங்கள் தேக்குமர ஃபிரேமில் மினு மினுத்தன.



மாமி எங்க?"


மாடில!"


‘எஸ்’ போன்ற வளைந்த படிக்கட்டுகளில் ஏறி மேலே போனபோது, பழைய பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்தார் மீனா மாமி.



அவர்தான்... அவரேதான்!



ஆளே உருக்குலைந்து, தலைமுடி எல்லாம் கொட்டிப் போயிருந்தது. ஆனால், அந்தக் கண்கள் மட்டும் அதே உயிர்ப்புடன் இருப்பதாகத் தோன்றியது.



மாமி, ஞாபகமிருக்கா? நான் உமா. கும்பகோணத்துல எதிர்வீட்டுல இருந்தோமே! மருதாணி பறிச்சுக்க வருவேனே!"



ஓ! சங்கரி பொண்ணா? நல்லா இருக்கியாம்மா... அப்பா - அம்மா சௌக்கியமா?"



எல்லாரும் நல்ல சௌக்கியம் மாமி! நீங்க எப்போ சென்னை வந்தீங்க...? உங்க வீட்டுக்காரர்..."



அவர் போயி பத்து வருஷமாச்சு!"



த்சொ...த்சொ! இந்தப் பையன்?"



இவன் என் மகன்தான். என் கணவரோட இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவன். அவர் பெங்களூருல வேலையாய் இருந்தப்ப, அங்க ஏற்பட்ட சிநேகிதத்துல பிறந்த பிள்ளை. வேற வழியில்லாமல், அவங்க உறவை ஏத்துக்கிட்டேன். ஒரு முறை இரண்டு பேரும் பைக்ல போகும் போது, ஆக்ஸிடென்ட் ஆகி, ஸ்தலத்துலியே போயிட்டாங்க. அப்ப இவன் இரண்டாம் கிளாஸ் படிச்சுட்டிருந்தான். ஏதோ கொஞ்சம் இன்ஷ்யூரன்ஸ் பணம் வந்தது. கம்பெனியிலும் கொஞ்சம் கொடுத்தாங்க. அதை வெச்சு காலேஜ் வரைக்கும் வளர்த்துட்டேன். கைல இருந்த காசெல்லாம் கரைஞ்சுடுச்சு. அதான் என்னோட பெயின்டிங்ஸை விற்கலாம்னு!" முகத்தைத் துடைத்துக் கொண்டு கண்ணீரை மறைத்தார்.



மாமி கவலைப்படாதீங்க. என் ஹஸ்பென்ட் கிஃப்ட் ஷாப் வெச்சுருக்காரு. என் ஃப்ரெண்ட் ஒருத்தி ஆர்ட் கேலரி வெச்சிருக்கா. நானே உங்க ஓவியங்களை நல்ல விலைக்கு வித்துத் தர்றேன்!"



ரொம்ப தாங்க்ஸ்டி உமா!"



அது மட்டுமில்லை. உங்களுக்கு போர்ட், கலர்ஸ் எல்லாமே வாங்கித் தர்றேன். நீங்க மறுபடியும் வரையலாம்."



மறுபடி வரையறதா? ஸாரி உமா... அது என்னால இனி முடியாது!"



ஏன் மாமி?"



இதோ பார்!" சால்வைக்குள் இருந்த வலது கையை எடுத்துக் காட்டினார்.



வலது கையில் கட்டை விரல் இருக்கவில்லை!



ஷுகர் எக்கச்சக்கமா ஆயிடுச்சு. வெட்டி எடுத்துட்டாங்க!" சொல்லும் போதே கண்ணீர் வழிந்தது.



‘என்னோட ஓவியங்களை வித்து சாப்பிடற நிலைமை வந்ததுன்னா, நான் என்னோட கட்டை விரலை வெட்டிக்குவேன்!’



எப்போதோ மீனா மாமி சொன்னது, நினைவுக்கு வந்து நெஞ்சைப் பிசைந்தது!



நன்றி - கல்கி, புலவர் தருமி

Wednesday, August 01, 2012

சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு ரூ 12,500 பரிசு பெற்ற மங்கையர் மலர் சிறுகதை

http://4.bp.blogspot.com/-zvoKVi2n8cQ/TZDA7HGFmmI/AAAAAAAAGxc/spVJWU3tuks/s1600/p86.jpg 


தெளிவு!



கதை: ர.கிருஷ்ணவேணி



ஓவியம்: ஸ்யாம்





வங்கி சற்றே மூச்சுவிடும் மதிய நேரம். கலகலவென்று சாப்பாட்டு நேரம் நடந்து கொண்டிருந்தது. புளியோதரையும், புலாவும் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தன.



இந்தா உஷா, உனக்காக புளி சாதமும், வெங்காய வத்தலும் கொண்டு வந்திருக்கேன்... சாப்பிடு."



அதென்ன உஷாவுக்கு மட்டும் ஸ்பெஷல்? இந்தப் பக்கம் கொஞ்சம் திருப்புங்க ராதா!"


உஷா உண்டாயிருக்கா. அதுக்காகக் கொண்டு வந்தேன். உனக்கென்ன வேண்டிக்கெடக்கு?"


நான் குண்டாயிருக்கேன். போதாதா?"



சிரிப்பு அலைகள் எழுந்தவண்ணம் இருந்தன. பேச்சு சினிமா, புடவை என்று திரும்பியது.


சாந்தா மேடம், உங்களுக்கு ஃபோன் வந்திருக்கு."


பியூனின் குரல் கேட்டு, வாயில் போட்ட தோசையை அவசரமாக விழுங்கி, தண்ணீரைக் குடித்தாள் சாந்தா.



‘யாராக இருக்கும்?’



ஹலோ, நான் திவ்யா பேசறேன்."



திவ்யா? சட்டென புரியவில்லை.



யாரு?"



போன ஞாயிற்றுக்கிழமை, என்னைப் பொண்ணுப் பாக்க வந்தீங்களே. அந்த திவ்யா தான்".



ஓ! ஆமாம். என் ஃப்ரெண்டோட பொண்ணு பேரும் திவ்யாதான். ஆனா, அவ கல்யாணமாகி அமெரிக்கா போயிட்டா. இந்த நேரத்துல கூப்பிட சான்ஸே இல்லை. அதான் யோசிச்சேன். சொல்லும்மா திவ்யா. என்ன விஷயம்?"



உங்களோட கொஞ்சம் பேசணும்."



சொல்லும்மா."



இல்ல, நேர்ல பாத்து பேசணும்."



பொண்ணுப் பாத்து, சம்மதம் சொல்லி, நிச்சயத்துக்கு நாள் குறிக்கும் நிலையில், பொண்ணு வருங்கால மாமியாரிடம் தனியாகப் பேச வேண்டுமென்றால், விஷயம் என்னவாக இருக்கும்? காதல்... திருமணம் செய்ய சம்மதம் இல்லை என்று ஏதாவது சொல்லப் போகிறாளோ?’



மைலாப்பூர் கற்பகாம்பாள் கோயிலுக்கு வாம்மா திவ்யா. நேர்ல பாக்கலாம்" சொல்லி ஃபோனை வைத்தாள் சாந்தா.



அம்மா, புதுப் பூமா. இரண்டு முழம் பத்து ரூபாதாம்மா." பூக்காரியின் குரலுக்கு மதிப்பு கொடுத்து, தேவையான பூவை வாங்கிக்கொண்டாள். திவ்யாவுக்கு என்று தனியாகக் கொஞ்சம் வாங்கினாள்.



மஞ்சள் நிற சுடிதாரில், பளிச்சென்று ஸ்கூட்டியில் வந்து இறங்கினாள் திவ்யா. வண்டியை நிறுத்த வேண்டிய இடம் பார்த்து நிறுத்திவிட்டு வந்தாள். பக்கத்திலிருந்த கடையில் அர்ச்சனைத் தட்டு வாங்கிக் கொண்டாள்.



என்னம்மா திவ்யா பொண்ணு, கோவில் பக்கம் பாத்து ரொம்ப நாளாச்சு?"



ஆமாம் கனகவள்ளியம்மா! வேலைக்குப் போறேன். நேரம் சரியாப் போயிடுது. உங்கப் பொண்ணு நல்லா படிக்குதா?"



படிக்குதும்மா."


நல்லா படிக்க வைங்க. எதுக்காகவும் படிப்ப நிறுத்திடாதீங்க. ஏதாவது உதவி வேணும்னா சொல்லுங்க."



சரி கண்ணு."


தங்கவேலு அண்ணன் எங்க காணோம்?"



இங்கதான் இருந்தாரு. டீ குடிக்க எங்கனா போயிருப்பாரு. உம் பேச்சுதான் அவருக்கு. நீதான ஆபரேஷன் பண்ண, தெரிஞ்சவங்க மூலம் ஏற்பாடு பண்ணி பிழைக்க வச்ச?"



வரும்போது அவரைப் பாக்கறேன். இருக்கச் சொல்லுங்க." பேசியவாறே சாந்தாவைப் பார்த்து அருகே வந்தாள்.




ரொம்ப நேரமாய் காத்துக்கிட்டு இருக்கீங்களா?"



இல்லம்மா. இப்பதான் வந்தேன். இந்தா, பூ வச்சுக்கோ."


உள்ளே போகலாமா?"




சென்றார்கள். அர்ச்சனை முடித்து, பிரசாதம் வாங்கி வெளியில் வந்தார்கள். ஒதுக்குப்புறமாக உட்கார்ந்தார்கள்.



சொல்லு திவ்யா! என்ன விஷயம்?" நேரடியாக வந்தாள் சாந்தா.


எங்கம்மா, உங்ககிட்ட எங்கக் குடும்பத்தைப் பத்தி என்ன சொல்லி இருக்காங்க?"



ஏன் இப்ப என்ன பிரச்னை திவ்யா?"



நீங்க முதல்ல சொல்லுங்க."



உங்கப்பா சின்ன வயசுல இறந்துபோயிட்டாரு! நீ ஒரே பொண்ணு. வேற யாரும் உறவுக்காரங்க இல்லைன்னு சொன்னாங்க."




எங்கப்பா சாகலை. உயிரோடதான் இருக்காரு."



உங்கம்மா வெத்து நெத்தியோட, கழுத்தில தாலி இல்லாம இருக்காங்களே!"




அது, எங்கப்பா செஞ்ச தப்புக்கு, எங்கம்மா தனக்குத் தானே கொடுத்துக்கிட்ட தண்டனை." திவ்யா மேலே பேசிக் கொண்டே போனாள்.



பொறுப்பில்லாத கணவனுக்கு வாழ்க்கைப்பட்டும், பொறுமை காத்தாள் என் அம்மா. காலம் போனால் எல்லாம் சரியாகி விடும் என்று நம்பினாள். ஆனால், வேறொரு பெண்ணைத் தேடி, அவளை, தான் இருக்குமிடத்துக்கே அழைத்து வந்தபோது தாங்க முடியாதவளாய் தட்டிக் கேட்டவளை எட்டி உதைத்தான் கணவன்.




அவ இங்கதான் இருப்பா. என்ன செய்வ?" திமிராகக் கேட்டான்.



கணவன் கட்டிய தாலியைக் கழற்றி, அவன் கையிலே தந்தாள். என்னைப் பொறுத்தவரை, இன்னிக்கே நீ செத்துட்ட; கட்டிய பெண்டாட்டிக்கும் பிறந்த குழந்தைக்கும் மட்டும் துரோகம் செய்யல. இன்னொருத்தன் பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு வந்து, அந்தப் புருஷனுக்கும் கெடுதல் செஞ்சுட்ட. இனிமே உன்கூட வாழ நான் தயாரில்லை" என்று தூக்கி எறிந்துவிட்டு, கைகுழந்தையான என்னைத் தூக்கிக்கொண்டு வெளியேறிய என் அம்மாவை, நான்கு பெண்களுடன் இருந்த அவள் பிறந்தகம், அணைத்துக் கொள்ள மறுத்தது.




இப்புடி சடக்குனு வந்துட்டா எப்பிடிம்மா? ஆம்பிளைங்க முன்ன, பின்ன இருந்தாலும், நாமதான் அனுசரிச்சுக்கிட்டு போகணும். உனக்கு நாலு தங்கச்சிங்க இருக்காங்க. நீயும் ஒரு பொண்ணைப் பெத்து வச்சிருக்க. எல்லாத்தையும் யோசிச்சுப்பாரு. அவசரப்படாத" என்று அறிவுரைதான் வழங்கியது. பிறந்த வீட்டையும் துறந்து, தனித்து ஜெயித்துக் காட்டுவதாக சபதம் செய்து, தெரிந்தவர்கள் உதவியால் மேலே படித்து, பள்ளி ஆசிரியையாகி, தன்னை வளர்த்து ஆளாக்கின கதையை நீளமாக முடித்தாள் திவ்யா.





எங்கம்மாவைப் பொறுத்தவரைக்கும், எங்கப்பா என்னைக்கோ செத்துட்டாரு. ஆனா, எனக்கு விவரம் புரியற வயசு வந்த பிறகு, ஒருநாள், எங்கம்மா என்னைக் கூப்பிட்டு, எல்லா விவரமும் சொன்னாங்க. தஞ்சாவூர் பக்கம், முனிசிபல் சேர்மனா எங்கப்பா இருக்கிறதா தகவல் சொன்னாங்க.




உனக்கு வசதியாய் வாழணும்னா, அவர் செஞ்சது தப்பில்லைன்னு பட்டா, நீ அவரோட போய் சேர்ந்திருக்கலாம்’னு சொன்னாங்க. எனக்குப் பிடிக்கலை. அதனால நான் போகலை. ஆனா, அம்மா இந்த உண்மையை உங்கக்கிட்ட சொல்லியிருக்கணும். உங்களுக்கு நான் மருமகளாய் வந்தபிறகு, வேற யார் மூலமாவது உங்களுக்குத் தெரிய வந்து, எங்கம்மாவ நீங்க தவறாய் நினைக்கக்கூடாது இல்லையா? அதுக்காகத்தான். உங்களை நேர்ல பாத்து சொல்லணும்னு நெனச்சேன். இப்ப நீங்க என்ன முடிவு எடுத்தாலும் சரி."




பேசி முடித்த திவ்யா, கைப்பையிலிருந்த பாட்டிலிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடித்து தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். சில நிமிடங்கள் மௌனத்தில் கரைந்தன.



வா, திவ்யா போகலாம்."



நீங்க என்ன சொல்றீங்க? எனக்குப் புரியலையே."




நிச்சயத்துக்கு நாள் குறிக்கணும். முகூர்த்தப் புடவை எடுக்கணும். நிறைய வேலைகள் இருக்கு. உனக்கு என்ன கலர் பிடிக்கும்?" பேசிக்கொண்டே போன சாந்தாவை புரியாமலே பார்த்தாள் திவ்யா.



எதையும் போட்டுக் குழம்பிக்காம கிளம்பு."



நான் இவ்வளவு சொன்னதுக்கப்புறமும் நீங்க...?"



நீ இன்னிக்கு ஃபோன் பண்ணினபோது, இந்தப் பொண்ணு என்ன பேசப் போகுது?" அப்படின்னு யோசன போச்சு. இங்க கோயில் வாசல்ல உன்னைப் பார்த்தேன். உன்னோட வண்டிய, முறையாய் பார்க்கிங்ல நிறுத்தி வந்ததப் பார்த்தேன். அங்க இருந்தவங்ககிட்ட, தன்மையாய் பேசறதப் பார்த்தேன். அவங்களுக்கெல்லாம், உன்னாலான உதவிகள் செய்யறேங்கறதும் புரிஞ்சது. கோயிலுக்கு, அடிக்கடி வர்ர தெய்வ பக்தி உள்ள பொண்ணுங்கறதும் தெரிஞ்சது.




என்கிட்ட பேசும்போது, உனக்கு படபடப்பு இல்லை. உண்மைய சொல்லணும்கற நேர்மை மட்டுமே இருந்தது. உங்கப்பா யாருன்னு உங்கம்மா சொன்னதுக்கப்புறமும், வசதியான வாழ்க்கை வாழணும்னு நீ ஓடலை. எது தப்பு, எது சரின்னு, உனக்குள்ள ஒரு தெளிவு இருக்கு. இந்த விஷயத்த வேற யார் மூலமும், ஏன் என் பிள்ளைக்குக்கூட சொல்லாம, என்னை நேர்ல கூப்பிட்டு, என் கண்ணைப் பாத்து சொல்ற துணிவு இருக்கு. சுருக்கமாய் சொன்னா, உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு."



எங்கம்மா...?"





இவ்வளவு தெளிவான பெண்ணா, உன்னை வளர்த்திருக்காங்கன்னா, உங்கம்மாவைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. இப்பிடி ஒரு பொண்ணு வேற எங்க தேடினாலும் என் ஹரிக்கு கிடைக்காது. உங்கம்மா செஞ்சது தப்பே இல்லை. இதைப்பத்தி, நானே உங்கம்மாகிட்ட பேசிக்கறேன்."



எனக்கு இப்பத்தான் ரொம்ப பயமாய் இருக்கு."



என்ன திவ்யா நான் இவ்வளவு விளக்கு சொன்னதுக்கப்பறம், பயம்னா என்ன அர்த்தம்?"



நான் சொல்லாத விஷயங்களைக்கூட, நீங்களாய் புரிஞ்சுக்கிட்டீங்க. எதையுமே பட்டுன்னு முடிவெடுக்காம, யோசிக்கிறீங்க. அடுத்தவங்க பக்கம் இருக்கற நியாயத்த புரிஞ்சுக்கிறீங்க. உங்களுக்கு, நல்ல மருமகளாய் நான் இருக்கணும்கற பயம்தான்."



என்ன திவ்யா! இப்படி புகழ்ந்தா எனக்கு ரொம்ப வெட்கமாய் இருக்கு. குளிருது வேற."



பொய்யாக நடுங்கி, புடவைத் தலைப்பை இழுத்துப் போர்த்திக்கொண்ட சாந்தாவைப் பார்த்து கலகலவென சிரித்தாள் திவ்யா. மரியாதையுடன் பார்த்தாள். இத்தனை நல்ல உறவை தனக்குக் கொடுத்த இறைவனுக்கு மனதால் நன்றி கூறினாள்.




கிளம்பலாமா திவ்யா?"



வீட்டுக்குத்தானே போறீங்க?"



ஆமாம்...!"



நான் உங்களை ட்ராப் பண்ணட்டுமா?"



ஓ.கே. தாரளமா. ஆனா அதுக்கு முன்னால ஒரு சின்ன வேலை இருக்கு."





என்ன வேலை?"

எதுத்த ஹோட்டல்ல பாதாம் அல்வா சூப்பரா இருக்கும். ஒரு பிடி பிடிச்சுட்டு போகலாமா?"



ம்... எனக்கும் பாதாம் அல்வா பிடிக்கும்!"



நீ சொல்லாமலே, உனக்கு மஞ்சள் கலர் பிடிக்கும்னும் புரிஞ்சுக்கிட்டேன்."



கோயிலைவிட்டு வெளியே வந்த போது, கடல் காற்று, இதமாக வீசத் தொடங்கியிருந்தது. மாமியாரும், மருமகளும் பழகும் தோழமை உணர்வும் அதில் அழகாய்க் கலந்திருந்திருந்தது.


நன்றி - சீதாரவி, அமிர்தம் சூர்யா, கதிர் பாரதி , புலவர் தருமி , மங்கயர் மலர்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhn-xl2jh03RD1KwiamDSMkG1SXBg1rDBPGgQvNbqszY-qAH6hWFjrmLVkx1TXYfc5fC_zkfM73AN6bhLUFC_cuovUXKoIzI4ihT8NCvWDmwHERrX4z5F-xvHRfN3DVgj6T3zkalQsNoUc/
ஈரோடு நகர படங்கள்


1. அபிராமி  70 MM AC  DTS - பில்லா 2

2. தேவி அபிராமி AC  - சகுனி


3. ராயல் - மனங்கொத்தி பறவை


4. வி எஸ் பி AC  DTS - பொல்லாங்கு


5. ஆனூர் AC  DTS - நான் ஈ


6. ஸ்ரீ சண்டிகா - பில்லா 2


7. ஸ்ரீ கிருஷ்ணா  DTS- THE DARK KNIGHT RISES ( BAT MAN 3)


8. அன்ன பூரணி -மாலைப்பொழுதின் மயக்கத்திலே

9. ஸ்ரீ லட்சுமி   DTS- நாடோடி மன்னன்


10. ஸ்டார் - BLOOD MARY


11. பாரதி - கொஞ்சும் இளமை


12. அண்ணா  DTS - சுழல்


13. ஸ்ரீநிவாசா   DTS  மாலைப்பொழுதின் மயக்கத்திலே


14. சங்கீதா DTS- திருடி திருடன்


15. மாணிக்கம்  - பாட்ஷா