Showing posts with label அதிர வைக்கும். Show all posts
Showing posts with label அதிர வைக்கும். Show all posts

Wednesday, February 27, 2013

. ஹெலிகாப்டர். ஊழல் -முன்னாள் ராணுவ அதிகாரி அதிர வைக்கும் பேட்டி

போஃபர்ஸ்... ஹெலிகாப்டர்... இந்த பட்டியல் தொடரும்!''


அதிரவைக்கும் முன்னாள் ராணுவ அதிகாரி
 
 
தேசம் நிம்மதியாக சுவாசிக்க வேண்டுமானால், அதன் கவசமாகத் திகழும் பாதுகாப்புத் துறை வலுவாக இருக்க வேண்டும். ஆனால், அங்கேயே ஊழல்களும், இடைத்தரகர்களும், நிழல் பேரங்களும் நடக்கின்றன என்றால், பாதுகாப்புத் துறையும் பாதுகாப்பாக இல்லை; அதை நம்பி உள்ள தேசமும் பாதுகாப்பாக இல்லை என்றே அர்த்தம்.


 போஃபர்ஸ் பீரங்கி ஊழல் இதை 25 ஆண்டுகளுக்கு முன்பே வெளிச்சம் போட்டுக் காட்டியது. விடை தெரியாமல் முடிந்த அந்தப் புதிரின் தடம் மறைவதற்குள், இப்போது வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.   


ராணுவம் உள்ளிட்ட துறைகளில்நிலவும் இதுபோன்ற மோசமான நிலைக்குக்காரணங்கள் என்ன என்பது குறித்து, தெற்காசிய பிராந்தியத்​துக்கான ராணுவஉளவுத்துறையின் முன்னாள் சிறப்பு அதிகாரி ஹரிஹரனிடம் பேசினோம்.



''தேசத்தின் கவசமாக இருக்கும் பாதுகாப்புத் துறையில் மிகப்பெரிய ஊழல்கள் நடைபெற என்ன காரணம்?''



''பணம்தான். அதைத்தவிர வேறு என்ன இருக்க முடியும்? பணம் என்றால், சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒரு தேசத்தின் ஒட்டு​மொத்த பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்குப் பணம். 2009-ம் ஆண்டு கணக்குப்படி, உலக நாடுகள் தங்களுடைய பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கிய தொகை 1.6 டிரில்லியன். இந்தப் பணத்தில்தான் ஒரு நாட்டுக்குத் தேவையான ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்கள் ஆகியவை கொள்முதல் செய்யப்படுகின்றன. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 20 நாடுகள் இதில் முன்னணியில் உள்ளன. அந்த 20 நாடுகள் வாங்கும் ராணுவத் தள வாடங்களை மொத்தமாகக் கணக் கிட்டால், அதில் 10 சதவிகிதத்தை இந்தியா வாங்குகிறது.  1,93,000 கோடி ரூபாயை இந்தியா இதற்காகச் செலவிடுகிறது.



அதில் ஊழல் நடைபெற, சிக்கலான நடை​முறைகளைக் கொண்ட நமது அரசு இயந்திரம்தான் காரணம். திட்டம் தயாரிப்பதில் தொடங்கி, குறிப்பிட்ட அந்தத் தளவாடத்தைக் கொள்முதல் செய்வது வரை, நாம் 12 படிநிலைகளைக் கடக்க வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் ஏற்படும் தாமதம், அர்த்தமற்ற கேள்விகள், பொறுப்பற்ற பதில்கள் சகித்துக்கொள்ளவே முடியாதவை. இந்தத் தாமதத்தை சரிசெய்ய வேண்டும் என்றால், ஒவ்வொரு படிநிலையிலும் சரியான இடத்தை 'கவனிக்க’ வேண்டும். அப்படி கவனிக்கும் வேலையை இடைத்தரகர்கள் நன்றாகத் தெரிந்து வைத்துள்ளனர். தாமதம் செய்தால்தான் நாம் 'கவனிக்கப்படுவோம்’ என்பதை, அதிகார மையங்கள் புரிந்து வைத்துள்ளன. இந்தத் தெரிதலிலும் புரிதலிலும்தான் தொடங்குகிறது ஊழலின் ஊற்றுக்கண்.



அப்போது நடந்த போஃபர்ஸ் ஊழல், இப்போது வெளிவந்துள்ள வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் எல்லாவற்றிலும் இதுதான் ஆதார சுருதி. இவற்றோடு இது முடியப்போவதும் இல்லை. ஏனென்றால், இது​போன்ற பல ஒப்பந்தங்கள் பல நிறுவனங்களுடன் செய்யப்​பட்டுள்ளன. அந்த ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக முடியும்போது, பின் விளைவுகளாக அதில் மறைந்துள்ள ஊழல்களும் வெளி​வரும்.''



''ஊழல்கள் வெளிவந்தாலும் யாரும் தண்டிக்கப்படுவது இல் லையே?''



''யாரைத் தண்டிப்பது? எப்படித் தண்டிப்பது? ஆயுதம் மற்றும் ராணுவத் தளவாட விற்பனை என்பது... வல்லரசு நாடுகள், உலகின் மிகப் பெரிய ஆயுத விற்பனை நிறுவனங்கள், இடைத்தரகர்கள், உள்நாட்டு அரசியல்வாதிகள், அரசுப் பொறுப்பில் உள்ள அதிகார மையங்களின் கூட்டு வலைப்பின்னல். இவர்கள் செய்யும் ஊழல்கள் வெளிவரும்போது, ஒருவர் மாற்றி ஒருவர் மற்றொருவரைக் கைகாட்டுவார்கள். நம் நாட்டில் அதிகபட்சமாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்படும்.



 ஆனால், விசாரணைக்குத் தேவையான ஆவணங்கள் எதுவும் அவர்கள் கைக்குப் போகாது. தேசியப் பாதுகாப்பு, ராணுவ ரகசியம் என்று காரணம் சொல்லப்பட்டு இழுத்தடிக்கப்படும். இறுதியில் விசாரணைக் குழு, பூனை தன்னுடைய வால் முனையை பிடிக்க முயன்று அதைச் சுற்றி சுற்றி வருவதுபோல், சுற்றிச் சுற்றி வந்து சோர்ந்து விடும். ஒரு கட்டத்தில் எல்லோரும் அதை மறந்து விடுவார்கள். போஃபர்ஸ் பீரங்கி ஊழல் தொகை 64 கோடி ரூபாய். ஆனால், அதை விசாரிக்க நாம் 250 கோடியை செலவிட்டோம். 25 ஆண்டுகள் ஆகின. இறுதியில் என்ன நடந்தது என்பதைப் பார்த்திருப்பீர்களே. அதேகதிதான் பாதுகாப்புத் துறை மற்றும் ராணுவத்தில் நடக்கும் ஊழல்களுக்கு ஏற்படும். இப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி இதில் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் செயல்படுகிறார். முறைகேடான காரியங்களில் ஈடுபடும் 12 ராணுவத் தளவாட விற்பனை நிறுவனங்களை, கறுப்புப் பட்டியலில் சேர்த்து விட்டார்.''



''இதற்கு என்னதான் தீர்வு?''



''நம்முடைய ராணுவத்துக்கான தளவாடங்களை நாமே தயாரிக்க வேண்டும். நம்முடைய ஆயு தங்களை நாமே வடிவமைக்க வேண்டும். நம்முடைய தேசியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம், இந்த ஆராய்ச்சிகளில் முன்னணியில் உள்ளது. ஆனாலும், ஆராய்ச்சி முடிவுகளுக்கு செயல் வடிவம் கிடைப்பது இல்லை. அவை காகிதங்களில் மட்டுமே உள்ளன. எனவே, ராணுவத் தளவாடங்களை வடிவமைப்பது மட்டும் அல்ல... அவற்றின் தயாரிப்புப் பணியிலும் அவர்கள் ஈடுபட வேண்டும். இப்போது, பொதுத் துறையிடம் மட் டுமே தளவாடங்கள் தயாரிப்புப் பட்டறைகள் உள்ளன. ஆனால், அவர்களிடம் வேகம் இல்லை. நவீனத் தொழில்நுட்பங்கள் பற்றிய புரிதல்கள் இல்லை. நாம் எதை நோக்கிச் செயல்படுகிறோம் என்ற நோக்கமும் இல்லை. இதை சரிசெய்தாலே போதுமானது.''


- ஜோ.ஸ்டாலின்

thanx - vikatan