Showing posts with label மண்ணுளி முதல் ஈமு வரை! ( மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் - 10). Show all posts
Showing posts with label மண்ணுளி முதல் ஈமு வரை! ( மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் - 10). Show all posts

Wednesday, September 30, 2015

மண்ணுளி முதல் ஈமு வரை! ( மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் - 10)

த்தாவது வாரத்தை எட்டி விட்டது இந்த தொடர். இருந்தாலும் தோண்டத் தோண்ட வந்துகொண்டிருக்கும் அளவுக்கு கொங்கு மண்டலத்தில் ஏகப்பட்ட ஏகப்பட்ட மோசடிகள் ஓடிக்கொண்டே இருக்கிறது. மோசடிகள் கற்றுத்தரும் பாடமோ, விழிப்புணர்வு முயற்சிகளோ எதுவும் மக்களிடம் பலனளிக்கவில்லை. மாறாக மக்கள் ஒரு வழியில் அலர்ட் ஆனால், மறுவழியில் புகுந்து அவர்களை ஏமாற்றி, ஆசையை தூண்டி பணத்தை பறித்துச் சென்றுவிடுகிறது கும்பல். அப்படி மிச்சம் இருக்கும் சில மோசடிகளை இந்த வாரமும் பார்த்து விடலாம்.

புதுக்கல்லூரி துவங்கப்போறோம்...

ஒரு புதுக்கல்லூரி துவங்குவதாக ஒரு அறிவிப்பு வருகிறது. அந்த அறிவிப்பின் பின்னணியில் ஒரு மிகப்பெரிய மோசடிக்கான அறிவிப்பும் மறைந்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உங்களுக்கு வேறு வழியில்லை. நீங்கள் நம்பிதான் ஆக வேண்டும். ஏனென்றால் இது ஏதோ கதை அல்ல. உயர் கல்வி நிறுவனங்களுக்கு புகழ்பெற்ற இடம் கோவை என்பது உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும். இங்கு கல்லூரி என்பது மிகப்பெரிய வருவாய் ஈட்டித்தரும் தொழில். 

அதேபோல் கல்வி நிறுவனர் என்பது மிகப்பெரிய மரியாதையை பெற்றுத்தருவதாகவும் உள்ளது. கை நிறைய பணம், பெரிய அளவில் பேர் என ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் என்ற ரீதியில் சொல்லி பணக்காரர்களை வலையில் வீழ்த்திய சம்பவம்தான் இது. அப்படி கோவை அருகே பணம், பேர், புகழுக்காக பெரும் பணத்தை இழந்த சம்பவத்தை இப்போது பார்க்கவிருக்கிறோம்.

கோவை அருகே ஒரு குறிப்பிட்ட இடத்தை குறிப்பிட்டு இந்த இடத்தில் கல்லூரி துவங்கப்போகிறோம் என்ற அறிவிப்பு வருகிறது. ஜாய்ன்ட் வென்ச்சர் எனும் அடிப்படையில் கல்லூரி துவங்குகிறோம் ரீதியில் இருந்தது அந்த விளம்பரம். அதைப்பார்த்து ஏராளமானோர் அந்த விளம்பரத்தை கொடுத்தவர்களை தொடர்பு கொள்கிறார்கள். அவர்களோடு பிரபலமான நட்சத்திர விடுதியில் சந்திப்புகள் நிகழ்கிறது. 'மிகப்பெரிய பொறியியல் கல்லூரி கட்டப்போகிறோம். இன்ஜினியரிங் ஸீட் இத்தனை லட்சத்துக்கு போகும், கல்லூரியின் இயக்குனர்களில் ஒருவராக நீங்கள் இருக்கலாம். உங்களுக்கு வருஷத்துக்கு 10 ஸீட் ப்ரீ. கல்லூரி இயக்குனர் என்ற பெயரும், அதன் மூலம் புகழும் வரும்' என வந்திருந்தவர்களின் ஆசையை கிளப்பி, அவர்களுக்கு தூண்டில் போடுகிறார்கள்.

பெயர் பலகை மட்டுமே முதலீடு

இதில் அவர்கள் விழாமல் போக வாய்ப்பு குறைவு என்றே சொல்லலாம். அந்தளவு சாதூர்யமாக பேசினார்கள். இந்த சந்திப்பின் போது பணப்பசை கொண்டவர்கள் யார் என்பதை உணர்ந்துகொள்ளும் மோசடியாளர்கள், பணப்பசை இல்லாதவர்களை கைகழுவிவிட்டு மீதமுள்ளவர்களிடம் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்தனர். 'முதல்ல நீங்க கொடுக்க வேண்டியது வெறும் 10 லட்சம்தான். மத்ததெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் என சொன்னார்கள். எந்த இடத்துல காலேஜ் வருது. அந்த இடத்தை நாங்க பாக்கணுமே என பணத்தை முதலீடு செய்பவர்கள் கேட்கும் முன்னரே, இடத்தை நாளைக்கு பாத்துடலாமா? என பேசினர் மோசடியாளர்கள்.

அடுத்த சந்திப்பு கல்லூரி அமையப்போவதாக சொல்லப்படும் இடத்தில் நடக்கும். புறநகரில் விவசாயத்தை மறந்து போன நிலப்பகுதி. கரடு முரடனான வழிப்பாதையில் சில கிலோ மீட்டர் துாரத்தில் ஆள் அரவமற்ற பகுதி, அந்த ஏரியாவின் பிரபலமான கடவுளரின் பெயரில் கல்லூரி பெயர் பலகை ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது. கல்லூரி கட்டுமானம் துவங்குவதற்கு அடையாளமாய் கற்களும், மணலும் கொட்டப்பட்டிருந்தது. 

இவ்வளவு தூரத்துல காலேஜ் இருந்தா சரியா வருமா என முதலீடு செய்பவர்கள் கேட்க, 'எந்த காலேஜ் ஊருக்குள்ள இருக்கு நீங்க சொல்லுங்க பார்ப்போம்...!' என பதில் கேள்வியால் மடக்கிய மோசடியாளர்கள், 'அது எல்லாம் நல்லா வரும் சார்... 10, 15 பஸ்சை விட்டா போகுது. கொஞ்சம் வருஷத்துல இந்த இடம் நடு ஊரா இருக்கும் பாருங்க' எனச்சொல்ல, உடனே சில லட்சங்கள் கை மாறியது.

வெளிநாட்டு பேராசிரியர்கள் (?) வருகை!

அடுத்தடுத்த சந்திப்புகள் நடக்கும். 'கல்லூரியை வெளிநாட்டு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்போகிறோம். அந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் வர இருக்கிறார்கள்' என அடுத்தடுத்த ஆசை வலைகள் விரிக்கப்படுகிறது. தமிழக வீதிகளில் சுற்றித்திரிந்த வெளிநாட்டு ஆசாமிகள், டிப்டாப் ஆடையுடன் வரவழைக்கப்படுகிறார்கள். எது கேட்டாலும் தலையை மட்டும் ஆட்டும் அந்த வெளிநாட்டினர், டைரக்டர்களிடம் எதுவும் பேசுவதில்லை. பேசக்கூடாது என்பதுதான் அவர்களுக்கு போடும் கண்டிஷன்.

அடுத்த சந்திப்பு, கல்லூரி அமையும் இடத்தில். பூமி பூஜை விழா நடக்கிறது. பரபரப்பாய் பலர் வருகிறார்கள். கல்லூரி பற்றி பலர் பேசுகிறார்கள். அவை எல்லாம் அன்றோடு முடிவடைகிறது. அதன் பின்னர் கல்லூரி பற்றிய எந்த பேச்சும் இல்லை. கல்லூரி கட்ட அனுமதி பெறுவதில் தாமதம், அதிகாரிகள் ஆய்வுக்கு வர வேண்டும் என காரணங்களை அடுக்கி பல மாதங்கள் ஓட்டுகிறார்கள். 

இந்த நேரத்தில் 100க்கும் மேற்பட்டோரிடம் பல கோடிகளை வாரிக்கொண்டு தலை மறைவானது அந்த மோசடிக் கும்பல். சிறிது இடைவெளி விட்டு மீண்டும் துவங்குகிறது மோசடி. அதே கல்லூரி போர்டு, அதே ஆசாமிகள் ஆனால் இடம் மட்டும் வேறு. புதிய முதலீட்டாளர்கள், வெளிநாட்டு கல்லூரி பேராசிரியர்கள் வருகை என அதே மோசடி மற்றுமொரு இடத்தில் சத்தமில்லாமல்  அரங்கேறத்துவங்கியது.

மெத்தப் படித்தவர்களும் தப்பவில்லை

இன்னும் ஏராளமான மோசடிகள்  நிரம்பிக்கிடக்கிறது. இந்த முதலீடு மோசடிகளாவது பராவாயில்லை. அரசு வேலை, பெரிய நிறுவனத்தில் வேலை, வெளிநாட்டில் வேலை என வேலை வாங்கித்தருவதாக சொல்லி நடந்த மோசடிகள் எக்கசக்கம். 

படித்தவர்களை மையப்படுத்தி நடந்த மோசடிகள் என பெரிய பட்டியலே போடலாம். அப்படி கம்ப்யூட்டர் படிப்பு படித்த இளைஞர்களை குறிவைத்து நடத்தப்பட்ட மோசடி தான் இது. 

''நாங்கள் அமெரிக்காவின் பிரபல சாஃப்ட்வேர் நிறுவனத்துக்கு புரோகிராம்களை அனுப்புகிறோம். இதில் உங்களை யும் இணைத்துக்கொள்ளலாம்' என்ற அடிப்படையில் வரும் அந்த விளம்பரம். புரோகிராம் பேப்பர்கள்ல இருக்குற வரிகளை டைப் பண்ணி, அதை சிடியில கொடுத்தா மாசம் 15 ஆயிரம் எனச்சொல்வார்கள். 

டெபாசிட்டாக ஒரு லட்சம் கட்ட வேண்டும் என்பார்கள். டெபாசிட் திரும்ப வழங்கப்படும் என்றும் சொல்வார்கள். முதல் மாத தவணை சரியாய் வரும். அதோடு சரி. அதற்கு அடுத்த மாதம் செக் எதுவும் வராது. சில மாதங்களுக்கு பின்னரே ஏமாற்றப்பட்டது உங்களுக்கு தெரியவரும்.

இது போன்ற மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஏமாந்தவர்களும் கொஞ்ச நஞ்சமல்ல. கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் அதிகம்? நாம் கடந்த பத்து வாரங்களாக பார்த்த இந்த மோசடிகள் மட்டுமல்ல. இன்னும் ஏராளமான மோசடிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. வெவ்வேறு உருவில் அவை தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. 

ஏமாற்றியவர்கள், ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். அதேபோல் ஏமாறியவர்கள், ஏமாறுபவர்களும் ஏமாறிக்கொண்டே தான் இருக்கிறார்கள். இவை எல்லாம் கொங்கு பெல்ட்டில் தான். 

அது சரி...கொங்கு பெல்ட்டில் மட்டும் ஏன் இது மாதிரியான புதுப்புது மோசடிகள் நடக்கின்றன என நினைக்கிறீர்களா?. அதை பற்றி விரிவாக அடுத்தவாரம் பார்க்கலாம்.

- ச.ஜெ.ரவி

நன்றி-ஆனந்தவிகடன்