Showing posts with label சென்னையில் ஒரு நாள். Show all posts
Showing posts with label சென்னையில் ஒரு நாள். Show all posts

Thursday, April 04, 2013

சென்னையில் ஒரு நாள் - சினிமா விமர்சனம் (விகடன் விமர்சனக் குழு)


சென்னையின் நான்கு முனை சந்திப்பு ஒன்றில் நடக்கும் விபத்து, யார் யாருடைய வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறது என்பதே... 'சென்னையில் ஒரு நாள்!’

சென்னையில் மூளைச் சாவு அடைந்த ஹிதேந்திரனின் இதயம் சில நிமிடங்களில் தேனாம்பேட்டையில் இருந்து முகப்பேருக்கு அசுர வேகத்தில் கொண்டுசெல்லப்பட்டு, சிறுமி அபிராமிக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.


 அந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு மலையாளத்தில் வெளியான 'டிராஃபிக்’ படத்தின் தமிழ் ரீமேக், 'சென்னையில் ஒரு நாள்’. பதற்றத்தில் கார் ஓட்டும் அக்ஷரா, முதல் நாள் வேலை உற்சாக சச்சின், துரோகத்தால் பொருமும் பிரசன்னா, பணியிடை நீக்கத்துக்குப் பிறகு மீண்டும் வேலையில் சேரும் சேரன், மகளைப் பார்க்க மருத்துவமனை விரையும் நடிகர் பிரகாஷ்ராஜ், கெடுபிடி கமிஷனர் சரத்குமார் என எக்கச்சக்கப் பாத்திரங்களைக் கச்சிதமாகத் திரைக்கதைக்குள் பின்னிய வகையில் இயக்குநர் ஷஹீத் அசத்துகிறார்.  

சச்சின் (அறிமுகம்) - பார்வதி, பிரசன்னா - இனியா என ஜூனியர் ஜோடிகளுக்கு சின்ன ரோல்தான். ஆனாலும் அசரடிக் கிறார்கள். சீனியர் ஜோடிகள் பிரகாஷ்ராஜ் - ராதிகா, ஜெயப்பிரகாஷ் - லட்சுமி ராமகிருஷ்ணன், சேரன் - மல்லிகா... பாத்திரங்களுக்கு மிகவும் பாந்தமாகப் பொருந்துகிறார்கள்


.

ஒரு பேட்டியில், 'எனக்கு எல்லாமே என் குடும்பம்தான்!’ என்று பந்தா செய்யும் 'ஷைனிங் ஸ்டார்’ பிரகாஷ்ராஜிடம், 'உங்க மகளுக்குப் பிடிச்ச டீச்சர் யார்?’ என்று கேட்கப்பட, 'கட்’ சொல்லி 'டச்-அப்’ என்று நேரம் வாங்கி, மகளிடம் டீச்சர் பெயர் கேட்டுப் பிறகு சமாளிக்கும் இடத்தில்... பிரகாஷ்ராஜ் செம செம. மருத்துவமனையில் இருந்து வந்த அலைபேசி அழைப்பிலேயே செய்தி உணர்ந்து, லஷ்மி ராமகிருஷ்ணனும் ஜெயப்பிரகாஷ§ம் கலங்குமிடம்... கலக்கம்! அதிகம் பேசாமல், முதுகு காட்டி விம்மி அழாமல் ஸ்கோர் செய்கிறார் சேரன்.


'ஒவ்வொரு நாளும் நமக்காக என்ன ஆச்சர்யங்கள் வெச்சிருக்குனு நமக்குத் தெரியாது’, 'என்னால முடியுமா... முடியாதான்னு தெரியாத ஒரு வேலை!’, 'படத்தோட பப்ளிசிட்டிக்கு என் பேர் இருக்கே... போதாதா?’ என எளிமையாக வசீகரிக்கும் அஜயன் பாலாவின் வசனம் படத்தின் பெரும் பலம். சந்துபொந்துகளுக்குள் வளைந்து நெளிந்து சென்று டென்ஷன் கிளப்பும் ஷஹநாத் ஜலாலின் ஒளிப்பதிவு விறுவிறு.


'பருவநிலை சரியில்லை’ என்று ஹெலிகாப்டரில் பயணிக்க முடியாது என்கிறார்கள். ஆனால், மருத்துவமனை வளாகத்துக்கு வெளியே வெயில் வெளுத்துக்கட்டுகிறதே? அதைவிடச் சிறந்த பருவநிலை வேண்டுமா என்ன? அத்தனை நவீன வசதிகள் நிரம்பிய கட்டுப்பாட்டு அறையெல்லாம் வைத்திருப்பவர்கள், சேரன் பயணிக்கும் காரில் சிம்பிளாக ஒரு ஜி.பி.எஸ். கருவியைப் பொருத்தியிருக்க மாட்டார்களா என்ன?



திகுதிகு திரைக்கதையில் ஜிந்தா காலனி, சூர்யா ரசிகர்கள் எல்லாம் செட்டப் டிராமா!


இருந்தாலும், 'உடல் உறுப்புத் தானம்’ என்ற நல்ல விஷயத்தை சுவாரஸ்யமாகச் சொன்னதற்காக, இந்த ஒரு நாளைக் கொண்டாடலாம்!  

thanx - vikatan