Showing posts with label ப.சிதம்பரம். Show all posts
Showing posts with label ப.சிதம்பரம். Show all posts

Saturday, May 25, 2013

ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் -ரூ.30 ஆயிரம் கோடி மோசடி?

ரூ.30 ஆயிரம் கோடி மோசடி: சாரதா நிதி நிறுவனத்திற்கு முதலீட்டு ஆலோசனை கூறியது நளினி சிதம்பரம்? 


கொல்கத்தா: 'நிருபேந்திர நாராயண சென் மகனாகிய நான்...' என்று துவங்கும் ஒரு கடிதம் - கொல்கத்தா நிஜாம் பேலஸில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு எழுதப்பட்டுள்ளது.


'சுதிப்தோ சென்' என்ற சர்ச்சைக்குரிய மனிதர் எழுதியதாகக் கூறப்படும் இந்தக் கடிதம், 'அரசியல்வாதிகளாலும், அவர்களைச் சார்ந்த சில பிரபலங்களாலும் நான் பயங்கரமாக மிரட்டப்பட்டேன். அதனால் அடுக்கடுக்காக பல மோசடிகளில் இறங்கினேன். மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களில் டுபாகூர் பிசினஸ்களை ஆரம்பித்தேன். மக்களின் பணத்தை இந்த டுபாகூர் கம்பெனிகளின் பெயரால் திரட்டினோம். தற்போது என்னை மட்டுமே சட்டம் குறி வைக்கும் நிலையில்... எந்த நேரமும் நான் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் உள்ளதால், இந்தக் கடிதத்தையே எனது மனப்பூர்வமான வாக்குமூலமாக எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்...' என்று போகிறது.


கொல்கத்தா பத்திரிகை ஒன்று மேற்கோள் காட்டும் இந்தக் கடிதத்தில், திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த எம்.பி-க்கள், வேறு கட்சிப் பிரபலங்கள் ஆகியோரோடு சேர்த்து, தமிழகத்தைச் சேர்ந்த டெல்லி பிரபலம் ஒருவரின் குடும்பப் பெண்மணி ஒருவர் பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.

தன்னை நிர்வாகத் தலைவராக வைத்துக்கொண்டு, பல்வேறு மோசடி நிறுவனங்களின் பெயரில் மக்களிடமிருந்து பல கோடி ரூபாய்களை அரசியல்வாதிகள் திரட்டியதாகவும்... சாரதா கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி, சாரதா குரூப் சிட்பண்ட் என்ற நிறுவனங்கள் தவிர, சகட்டுமேனிக்கு 160 கம்பெனிகள் வரை இப்படி தன் பெயரால் துவங்கியதாகவும் கூறும் இந்த சுதிப்தோ சென், வெளிநாட்டுக்குத் தப்பி ஓடப் பார்க்க... இந்த சுதிப்தோ சென் மற்றும் இருவரை மடக்கிப் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, உள்ளே தள்ளி உள்ளனர்.

முப்பதாயிரம் கோடி ரூபாய் எப்படி மக்களை ஏமாற்றி முழுங்கப்பட்டது என்பதைப் பற்றி மேற்கு வங்களாத்தில் இபபோது பரபரப்பான விவாதங்கள் அரங்கேறிக் கொண்டிருக்க... இந்த பலே கில்லாடி ஆசாமி எழுதியாகக் கூறப்படும் கடிதத்தில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு அரசியல் புள்ளிகள் இதில் எப்படி எல்லாம் தொடர்பு கொண்டுள்ளனர் என்பது பற்றி அக்கு வேறு ஆணி வேறாக அடுக்கப்பட்டு உள்ள விவரங்கள், அகில இந்திய அளவில் பெரும் புயலைக் கிளபபும் என்று கூறப்படுகிறது. முதலில் இந்த விவகாரம் குறித்து பிரச்னை எழுப்பிய காங்கிரஸ் பிரமுகர்கள், சுதிப்தோ சென்னுக்குப் பின்னால் சில காங்கிரஸ்காரர்களும் இருந்தனர் என்று பரவும் தகவலால் வெலவெலத்துப் போய் இருககிறார்கள்.

இதுவரை இந்தியாவில் (உலகிலேயே) இல்லாத 'புதுமை'யாக - 'இவரிடம் ஏமாந்த மக்களுக்குப் பணம் திரும்பக் கிடைக்கும் வகையில், முதல் கட்டமாக 500 கோடி மூலதனத்தில் மேற்கு வங்காள அரசே ஒரு நிதியத்தைத தொடங்கும்' என்று அறிவித்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வரான மம்தா பேனர்ஜி. இதில் ஒரு பகுதி பணத்தைத் திரட்டுவதற்காக சிகரெட்டின் வரியை உயர்த்தப் போவதாகவும் கூறி இருக்கிறார்.                        அந்த கடிதம்...
                                                                                                                               

''தனியார் ஒருவர் ஏமாற்றிய பணத்துக்கு அரசாங்கம் ஏன் இத்தனை வேகமாக 'வக்காலத்து' வாங்கி வரவேண்டும்? நாளை அரசியல்வாதிகளும் தனியாரும் சேர்ந்து நடத்தும் ஒவ்வொரு மோசடிக்கும் இப்படி அரசுகள் நஷ்ட ஈடு தர முன்வருவதற்கு இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடாதா?'' என்ற கேள்விகளும் தற்போது எழத் துவங்கி உள்ளன.

மல்ட்டி மார்க்கெட்டிங் தொடங்கி இன்னும் என்னவெல்லாம் டுபாகூர் பிசினஸ்கள் உண்டோ அத்தனையையும் சில அரசியல்வாதிகள் தன்னைச் செய்யத் தூண்டியதாகவும்... அதற்கு சில புரோக்கர்களும், பத்திரிகையாளர்களும்கூட துணையாக இருந்ததாகவும் சுதிப்தோ சென் எழுதியாகக் கூறப்படும் அந்தக் கடிதத்தில் உள்ளது. 'வாயில் கை வைத்தால் கடிக்கக்கூட தெரியாத பச்சைக் குழந்தை நான்' என்ற ரீதியிலேயே அந்த மிக நீண்ட கடிதம் அமைந்திருந்தாலும்... அதில் வரிக்கு வரி இடம்பெற்றிருக்கும் விவகாரங்கள் அரசியல் உலகைக் கலக்கக்கூடியதாக அமைந்துள்ளன.

இதற்கிடையே சாரதா நிதி நிறுவனத்தை, முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அரசில் அமைச்சராக இருந்த மடாங் சிங் குடும்ப நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு நளினி சிதம்பரம் ஆலோசனை கூறியதாக டெல்லி வட்டாரங்களை மேற்கோள்காட்டி, டெல்லி ஆங்கில சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சாரதா நிதி நிறுவனத்தின் நிர்வாக தலைவர் சுதிப்தா சென் சிபிஐ-க்கு எழுதியுள்ள கடிதத்தில், தனது நிதி நிறுவனத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புள்ளிகள் ஆரம்பத்தில் ஏராளமான தொல்லைகள் கொடுத்துவந்ததாகவும், இதனைத் தொடர்ந்து தனது நிறுவனத்திற்கு மாநில மற்றும் மத்திய அரசிலிருந்து எவ்வித பிரச்னைகளும் வராமல் பார்த்துக்கொள்வதாக கூறி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தம்மிடமிருந்து மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணம் பெற்றதாகவும், அவர்களுக்கு சொந்தமான ஊடகங்களில் முதலீடு செய்யுமாறு வற்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

இதற்கு பதிலடியாகத்தான், அந்த கடிதத்தில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் குறித்தும் சுதிப்தோ சென் குறிப்பிட்டுள்ள விஷயங்களை ஊடகங்களுக்கு கசியவிட்டுள்ள திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அரசில் அமைச்சராக இருந்த மடாங் சிங் மற்றும் அவரது மனைவி மனோரஞ்சனாவுக்கு சொந்தமான குடும்ப நிறுவனத்தின் வழக்கறிஞராக நளினி சிதம்பரம் செயல்பட்டதாகவும், இவர்களுக்கு சொந்தமான வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள தொலைக்காட்சி சேனலை வாங்குமாறு, மத்திய அரசில் செல்வாக்கு மிக்கவர் மற்றும் முன்னணி வழக்கறிஞர் என்ற வகையில் சாரதா நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான தமக்கு ஆலோசனையும், அறிவுரையும் கூறியதாகவும், இது குறித்த இரு தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக முன்னின்று செயல்பட்டது நளினி சிதம்பரம்தான் என்றும், இது தொடர்பாக மத்திய அரசின் கம்பெனி சட்ட வாரியத்தில் நடைபெற்ற வழக்கில், மனோரஞ்சனா சார்பில் வழக்கறிஞராக ஆஜரானது நளினி சிதம்பரம்தான் என்றும் சுதிப்தா சென், சிபிஐ-க்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, April 17, 2013

பிரபாகரனை ப.சிதம்பரம் சந்தித்தாரா? - லாயர் அதிரடி பேட்டி

லங்கைத் தமிழர்கள் பிரச்னையில் தங்களுக்கும் ஈடுபாடு உண்டு என்பதைக் காட்டிக் கொள்ள படாதபாடுபடுகிறது காங்கிரஸ். 'கோடம்பாக்கத்தில் இருந்த பிரபா​கரனை நானே கார் ஓட்டிச் சென்று சந்தித்தேன்’ என்று, ப.சிதம்பரம் ஒரு கூட்டத்தில் பேசினார். அந்த நாளில் இருந்து இன்றுவரை இலங்கைப் பிரச்னைகளில் தீவிரமாகச் செயல்பட்டுவரும் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அது​குறித்து விரிவாகப் பதில் அளிக்கிறார். 

''1984-ம் ஆண்டு, கோடம்பாக்கத்தில் தங்கி இருந்த பிரபாகரன், பாலசிங்கத்தை சந்தித்து இலங்கை பிரச்னையில் தீர்வு ஏற்படுத்த முயன்றதாக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியுள்ளாரே?''

''பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு சம்ப​வத்தை முன்னிட்டு விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், ராகவன், பிளாட் தலைவர் முகுந்தன் ஆகியோர் 1983-ல் கைது​செய்யப்பட்டு சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். பிரபாகரனுக்காக மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமாமலையும் நானும் ஆஜராகி பெயில் வாங்கிக் கொடுத்தோம். 

முகுந்தன் சென்னையிலும், பிரபாகரன் மதுரையிலும் தங்கி இருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதன்பிறகு, திருவான்மியூர் காமராஜர் நகரில் சிறிது காலம் பிரபாகரன் தங்கியிருந்தார். பின்னர், அடையாறு இந்திரா நகருக்குக் குடிபெயர்ந்தார்.

1983 இறுதியில் பாலசிங்கம் சென்னை வந்தார். நானும் பேபி சுப்பிரமணியன் என்ற இளங்குமரனும் அவரை இரண்டு வாரங்கள் நியூ உட்லண்ட்ஸ் ஓட்ட​லில் தங்கவைத்தோம். அதன்பிறகு, பெசன்ட்நகர் வேளாங்கன்னி மாதா கோயில் அருகிலுள்ள வீட்டில் பாலசிங்கம் தங்கி இருந்தார். பின் அவர் அடையாறு இந்திரா நகரில் தங்கினார். ஆக, 83-க்குப் பிறகு அவர்கள் கோடம்பாக்கத்தில் தங்கவே இல்லை. 

பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோர் கோடம்பாக்கத்தில் தங்கி இருந்தபோது 1984-ல் சந்தித்து, இலங்கை பிரச்னை குறித்து பேசியதாக நிதி அமைச்சர் சிதம்பரம் கூறுவது வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. 80 தொடக்கத்தில் இருந்து பாண்டி பஜார் சம்பவம் வரை மயிலாப்பூர் சாலைத் தெருவில் நெடுமாறனின் பழைய வீட்டில் என்னுடன் பிரபாகரன் தங்கியிருந்தார்.''


''தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்து வீணாகப் பிரச்னையை உருவாக்குவதாக இலங்கைத் தமிழ் மீனவர்கள் புகார் தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி பேசிவருகிறாரே?''

''தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய மத்திய அமைச்சர் நாராயணசாமி, இலங்​கைக்கு வக்காலத்து வாங்குவது தமிழக மீனவர்கள் நெஞ்சில் வேல் பாய்ச்சுவது போன்றது. அவர், இந்திய அமைச்சரா? இலங்கை அமைச்சரா?

1974-ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த போது, தலைவர் கலைஞர் அதைக் கடுமையாக எதிர்த்தார். கலைஞர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் கலந்துகொண்ட அரங்கநாயகம் அரசுத் தீர்மானத்துக்கு ஆதரவாக இல்லை. பிரதமர் இந்திரா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரண் சிங்கிடம், கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்கக் கூடாது என்றார் கலைஞர். நாடாளுமன்றத்திலும் தி.மு.க. கடுமையாக எதிர்த்தது. அதே கோரிக்கையை வலியுறுத்தி, தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டன. 

ஆனாலும் கச்சத்தீவை மத்திய காங்கிரஸ் அரசு கொடுத்தது. மீன் வலைகளை உலர்த்தவும் அந்தோணியார் கோயிலுக்குச் செல்ல​வும் மீனவர்கள் ஓய்வு எடுக்கவுமான உரிமை, கலைஞரின் போராட்டத்தால் அந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. 

ஆனால், 1976-ம் ஆண்டு நெருக்கடி நிலையில் அந்த மூன்று ஷரத்துக்களையும் காங்கிரஸ் அரசு விட்டுக் கொடுத்து விட்டது. அப்போது, தி.மு.க. ஆட்சியில் இல்லை. கச்சத்தீவை இழந்ததால்​தான் தமிழக மீனவர்கள் இப்போது இத்தனை கொடுமைகளை அனுபவிக்கின்றனர். இதையெல்லாம் தெரிந்துகொண்டு அமைச்சர் நாராயணசாமி பேச வேண்டும்.''

''இலங்கை பிரச்னையில் இந்திய ஆட்சியாளர்கள் பொறுப்புடன் செயல்படவில்லை என்று, இலங்கை பாதுகாப்புத் துறை செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே குற்றம்சாட்டியுள்ளாரே?''

''இந்தியா இல்லை என்றால் இலங்கை இல்லை. சேதுக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற பிரதமர் நேரு அமைச்சரவை 1963-ல் ஒப்புதல் அளித்தது. 'சேதுத்திட்டம் நிறைவேறினால் இலங்கையின் பொருளாதாரமே சீர்குலைந்துவிடும்’ என்று, இலங்கை ஆட்சியாளர்கள் மன்றாடினர். 

அண்டை நாடு என்ற ரீதியில் அந்தத் திட்டத்தை நேரு கைவிட்டார். சாஸ்திரி- ஸ்ரீமாவோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய வம்சாவழி தோட்டத் தொழிலாளர்கள் திரும்ப அழைக்கப்பட்டனர். அந்த நடவடிக்கையே தவறு என்று கண்டித்தோம். 

ஆனாலும், இலங்கையின் பொருளாதார சிக்கலைத் தவிர்க்க அந்த முடிவை இந்தியா ஏற்றுக்கொண்டது. இந்திரா காந்தி காலத்தில் இருந்து தொடர்ந்து இன்றளவும் உதவுகிறோம்.
இந்தியாவின் செயல்பாட்டைக் குறை சொல்ல சிங்கள ஆட்சியாளர்களுக்கு அருகதையே கிடையாது.''
- எஸ்.முத்துகிருஷ்ணன்

 நன்றி - ஜூ.வி.