Showing posts with label மண்ணுளி முதல் ஈமு வரை...!- மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் -5. Show all posts
Showing posts with label மண்ணுளி முதல் ஈமு வரை...!- மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் -5. Show all posts

Sunday, September 20, 2015

மண்ணுளி முதல் ஈமு வரை...!- மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் -5

ஈமு கோழி வளர்ப்பு மோசடி

"வீட்டோட மாப்பிள்ளையா இருக்கறதும், ஈமு கோழி வளர்க்கறதும் ஒண்ணு. ஆரம்பத்துல ஜாலியாதான் இருக்கும். அப்புறம் அவமானம்தான் மிஞ்சும்” கொங்கு மண்டல விவசாயிகளை கடுப்படித்த எஸ்.எம்.எஸ்.களில் இதுவும் ஒன்று. 

அந்தளவுக்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈமுவை நம்பி, கடனாளி ஆனார்கள். “ஆத்தா ஆடு வளர்க்க சொல்லி கொடுத்தா, கோழி வளர்க்க சொல்லி கொடுத்தா.. ஈமு கோழி வளக்க மட்டும் சொல்லிக் கொடுக்கவே இல்லையே...”னு  ஈமு கோழியில் முதலீடு பண்ணி, முச்சந்தில நின்னு  புலம்பற நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள் கொங்கு விவசாயிகள். இப்படியெல்லாம் ஏமாற்ற அல்லது ஏமாற முடியுமா என்பதின் உச்சம்தான் இந்த ஈமு மோசடி.. 

எப்படி ஏமாத்துனாங்க... எப்படி ஏமாந்தாங்க.? அதைப்பத்திதான் இங்கே பார்க்கப்போறோம். 

கவர்ச்சிகரமான மோசடி! 

விவசாயத்தில் இடுபொருட்களின் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை, விவசாயப் பொருட்களுக்கு சந்தை விலை இல்லாதது, பருவ மழை பொய்த்து போனது என தொடர் நஷ்டத்தால் நொந்து நொடிந்து போன விவசாயிகள், காடு கழனிகளை விற்றுவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம், அதிரடியாக கவர்ச்சிகரமாய் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த ஈமு மோசடி.

"ஒன்றரை முதல் இரண்டு லட்ச ரூபாய் முதலீடு செய்யணும். அப்படி முதலீடு செஞ்சா, உங்கள் நிலத்தில் எங்க செலவுல ஈமு கோழிகளுக்கான கொட்டகை போட்டு தந்து, அதுல ஆறு ஈமு குஞ்சுகளை விடுவோம். அதற்கான தீவனத்தையும் நாங்களே தருவோம். அந்த ஈமு கோழிகளை நீங்கள் வளர்க்கணும். அதுக்கு மாதக் கூலியாய் ரூ. 6000 முதல் 9000  வரை கொடுப்போம். கோழி பெரிசான உடன் முதலீடு பணத்தை திரும்ப கொடுத்துட்டு பணத்தை வாங்கிக்குவோம். ஈமுவை வளர்க்க எல்லாத்தையும் நாங்க தந்துடுவோம். நீங்கள் வளர்த்தா மட்டும் போதும்," என  விவசாயிகள் மத்தியில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது அந்த மோசடி.

ஆரம்பத்தில் விவசாயிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் மோசடியாளர்களின் அடுத்தடுத்த அஸ்திரங்கள் விவசாயிகளை காலி செய்தது. அடுத்தடுத்த வாரங்களில் இந்த மோசடி செயல்வடிவம் பெற்றது. தினப்பத்திரிகைகளில் முதல்பக்கத்தில் சிரித்தன ஈமு கோழிகள். ஈமுவோட முட்டை, கறி, கொழுப்பு, தோல்னு எல்லாத்துக்கும் மதிப்பு இருக்கு. புரட்சி செய்யலாம் வாங்க என்று கோடம்பாக்கத்துல இருந்து கொங்கு மண்டலத்துக்கு இடம்பெயர்ந்து நம் ஹீரோக்கள்  விவசாயிகளை  அழைச்சு ஆசை காட்ட... மழை இல்லை,  'கரன்ட் கட்'னு ஏகப்பட்ட பிரச்னைகளோட இருந்த விவசாயிகள், இதுலயாச்சும் லாபம் கிடைக்குமானு முதலீடு பண்ண ஆரம்பிச்சாங்க.

நீங்க வளர்த்தா மட்டும் போதும்? 

லட்சம் லட்சமாக பணத்தை வாங்கிட்டு, கொஞ்சம்  ஈமு கோழியை கொடுத்தவங்க, 'அதுக்கு சாப்பாட்டை நாங்க கொடுத்துடுவோம். நீங்க வளர்த்தா மட்டும் போதும், நீங்க வளத்தா மட்டும் போதும்’னு முதலில் சொன்னவங்க, பின்னர் சிவாஜி படத்துல ஸ்ரேயாகிட்ட ரஜினி சொன்ன மாதிரி, ‘வளத்துப்பாக்கலாம் வாங்க'ன்னு விவசாயிகள்கிட்ட சொன்னாங்க. அதுக்கு அப்புறம் என்ன..? ஸ்டார்ட் மியூசிக் தான். 

ஈமு கோழி என்னவோ நெருப்பு கோழி மாதிரி ஆறடிக்கு வளர்ந்து நின்னுச்சு. ஆனா ஈமு கோழி கொடுத்தவன்தான் ஆபீசை மூடீட்டு போயிட்டான். இது தான் ஈமு மோசடியின் சுருக்கம். கிட்டத்தட்ட சில மாதங்களில் இந்த மோசடியில் ஏமாந்த விவசாயிகளின் எண்ணிக்கை பல ஆயிரம். ஏமாந்த தொகை பல நூறு கோடிகள்.

'ஈமுவை வைத்து மோசடி; ஈமு இல்லாமலும் மோசடி'

எப்படி இத்தனை பேரை ஒரே நேரத்தில் ஏமாற்ற முடியும்? என்பது உங்கள் கேள்வியாக இருந்தால்,  அதற்கு இவர்கள் பின்பற்றியது இரு முறைகள். முதல் முறை மற்ற மோசடிகளை போலத்தான். முதலில் முதலீடு செய்பவர்களுக்கு பணத்தை அள்ளி வழங்கி விட்டு, இறுதியில் ஒட்டுமொத்தமாக ஏமாற்றுவது.
இத்திட்டத்தில் ஆரம்பத்தில் சேரும் விவசாயிகளுக்கு, அடுத்தடுத்து வந்துசேரும் விவசாயிகளின் முதலீட்டு பணத்திலிருந்து எடுத்துக் கொடுக்கப்பட்டது. "எனக்கு கரெக்டா பணம் வந்துடுச்சு. திரும்பவும் ஒரு ரெண்டு லட்சத்தை கடன் வாங்கி கட்டியிருக்கேன். ஒரே வருஷத்துல ரெண்டு லட்சமும் வந்துடும்” என்று ஆரம்பத்தில் இத்திட்டத்தில் சேரும் விவசாயிகள் பேசியதுதான் ஆரம்ப கட்ட விளம்பரம். 

அதன் பின்னர் தான் பேப்பர் விளம்பரங்கள், சினிமா நடிகர்களின் புரட்சி விளம்பரங்கள் எல்லாம். முதலில் வந்த விவசாயிகள் கோழியை வளர்த்து முட்டையை கொடுக்க, அந்த முட்டையில் இருந்து வரும் குஞ்சு மீண்டும் சில லட்சங்களுக்கு விவசாயிகளிடம் கொடுக்கப்பட்டது. 

இறுதி கட்டத்தில் அதிகரித்து வரும் விவசாயிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஈமு கோழிகள் இல்லாமல் போக, அப்போதும் கூட ஈமுவை கொடுக்காமல் 'பணத்தை கொடுத்தால் மட்டும் போதும். ஈமுவை வளர்க்காவிட்டாலும் மாத தவணை கொடுப்போம்' எனச்சொல்லியும் முதலீட்டை அள்ளிக்கொண்டது மோசடிக் கும்பல். 

அதாவது ஈமு வளர்ப்புக்கு நிலமும், நேரமுமில்லாதவர்களுக்கும் என தனித்திட்டத்தை துவக்கினர். அதாவது முதலீடு செய்பவரின் சார்பாக ஒரு இடத்தில் பண்ணையை அமைத்து கோழிகளைப் பராமரிக்கும் திட்டம்தான் அது. முதலீடு செய்தவர்கள் அவ்வப்பொழுது தங்கள் பண்ணையைப் பார்வையிட்டு வரலாம். ஆனால் அது நீங்கள் முதலீடு செய்த பண்ணை தான் என்பதற்கு ஒரு ஆதாரமும் கிடையாது. ஒரே பண்ணையை திரும்ப திரும்ப காட்டி, 'இது தான் உங்கள் பண்ணை' என பல நூறு பேரை கூட ஏமாற்ற முடியும். இப்படியும் பல கோடிகளை ஈமு நிறுவனங்கள் சுருட்டின.

விவசாயிகளை ஏமாற்ற மாஸ்டர் ப்ளான்

அடுத்த முறை கொஞ்சம் வித்தியாசமானது. 'நாம சொல்லுற பொய்யில கொஞ்சமும் உண்மையும் கலந்திருக்கணும்' - இது 'சதுரங்க வேட்டை' படத்தில் மோசடியில் ஈடுபடும் நாயகன் பேசும்.  ஈமு மோசடியிலும் இது பொருந்தும். 'பெரும்பான்மையான விவசாயிகளை ஏமாற்ற வேண்டும் என்றால் அவர்கள் காலம் காலமாக செய்து வரும் தொழிலை ஒத்திருக்க வேண்டும். அதேநேரத்தில் கவர்ச்சிகரமாகவும் இருக்க வேண்டும். அப்படியென்றால் தான் பெரும்பான்மையான விவசாயிகளை ஆசை காட்டி, கவர்ந்திழுத்து ஏமாற்ற முடியும்.' இது தான் ஈமு மோசடியின் சுருக்கம். 

அப்படித்தான் விவசாயிகள் தாங்கள் காலம் காலமாக செய்து வரும் கால்நடை வளர்ப்பு தொழிலை ஒத்து அமைக்கப்பட்டது ஈமு மோசடி. தங்களின் தொழில் சார்ந்து இது இருந்ததாலும், சில லட்சங்களை போட்டால் கூடுதலாய் வருவாய் கிடைக்கும் என்பதாலும் இந்த தொழிலில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டனர். சில லட்சங்களை கொடுத்து ஏமாற, ஈமு கோழிப்பண்ணை வாசல்களில் கால்கட்ட வரிசையில் காத்திருந்து பணம் கட்டி ஏமாந்து போனதுதான் இதன் உச்சம்.
மருத்துவ குண நலன் கொண்டதாம் ஈமு இறைச்சி?

ஈமுவோட முட்டை, கறி, கொழுப்பு, தோல்னு எல்லாத்துக்கு மதிப்பு இருக்குனு சொல்லியதும் விவசாயிகளை கவர்ந்திழுக்க பயன்படுத்தப்பட்டது. அதில் ஒன்றுதான் இந்த கோழி மருத்துவத்துக்கு உகந்தது என்பது.

"நல்லா வளர்ந்த ஈமு கோழி 5 ல இருந்து 6 அடி உயரத்துக்கு வரும். எடை 50 ல் இருந்து 60 கிலோ வரை இருக்கும். எப்படி பார்த்தாலும் 40 கிலோ கறி தேறும். ஒரு கிலோ ஈமு கோழி கறி 500 ரூபாய். ஒரு கோழியின் கறி மட்டும் 20 ஆயிரத்துக்கு போகும். 

இது தவிர இதோட முட்டை, கறி, கொழுப்பு, தோல்னு எல்லாம் நல்ல விலைக்கு போகும். கோழி தோலை சாயம் போட பயன்படுத்தலாம். இறகுகளை வைச்சு பிரஷ் தயாரிக்கிறாங்க. இதோட முட்டை ஓடு அலங்கார வேலைக்கு பயன்படுத்துறாங்க. எண்ணெய் மருத்துவத்துக்கு பயன்படுது. ஈமு கோழிகள்ல கொலஸ்ட்ரால் சுத்தமா இல்லை. ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், ஆஸ்த்துமா உள்ளவங்க தாராளமாக இதை சாப்பிடலாம். கோழிக்கறி, ஆட்டுக்கறிக்கு எல்லாத்துக்கும் மேல இனி ஈமு கோழிக்கறி தான் இருக்கும்," என  இஷ்டத்துக்கும் சொல்லிதான் இந்த மோசடி அரங்கேறியது. கிட்டத்தட்ட அதன்  எச்சத்தை தவிர மற்ற எல்லாவற்றையும் தங்கள் விளம்பரங்களுக்கு பயன்படுத்திக்கொண்டனர் மோசடிக்காரர்கள்.

உண்மையில் ஈமு வளர்ப்பு லாபமானது தானா?

ஈமுவை வைத்து மோசடி நடப்பது ஒரு புறம் இருக்கட்டும். உண்மையில் ஈமு வளர்ப்பது லாபமானது தானா? என நிபுணர்கள் சிலரிடம் பேசினோம். நிச்சயம் இல்லை என சொன்னவர்கள், ஈமுவின் பின்னணியை விளக்கினர். 

ஈமு கோழி ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு பறவை இனம். 1980களில் ஆஸ்திரேலியாவில் வணிக ரீதியான ஈமு கோழி  பண்ணைகள் இருந்தன. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அங்கு மதிப்பிழந்த ஈமுக்கள் தான் இங்கு வந்துள்ளன. ஈமு கோழி வளர்ப்பு என்பதே மோசடிதான். கொங்கு மண்டலத்தை மையப்படுத்தி நடந்த இந்த மோசடியில், முட்டை கொள்முதல், குஞ்சு உற்பத்தி என இங்கே மட்டுமே இது நடந்து வருகிறது. 

ஆனால் இங்கு ஈமு கோழிக்கு தேவையான தீவன நிறுவனங்கள் இல்லை. கறியை வெட்டிப் பதப்படுத்தும் நிறுவனங்கள் இங்கு துவக்கப்படவில்லை, தோலை உரித்துப் பதப்படுத்தும் நிறுவனங்களோ, கறியிலிருந்து எண்ணெய் எடுக்கும் நிறுவனங்களோ கூட இங்கு இல்லை. அப்படியிருக்க இவை எல்லாம் சுத்தப்பொய். ஈமுவை வைத்து மோசடி மட்டுமே நடந்தது என்பதுதான் உண்மை. ஈமுவின் அனைத்து உடல் பாகங்களை விற்றால் கூட சில ஆயிரங்கள் கூட தேறாது என்பதுதான் உண்மை நிலை. ஆனால் அதை விவசாயிகள் உணரத்துவங்கும் முன்னர் விவசாயிகள் ஏமாற்றப்பட்டு விட்டனர். 

கடைசி வரை பாம்பை காட்டாமல் மோடிவித்தை செய்யும் பாம்பாட்டி போலத்தான் இந்த மோசடியும். இந்த மோசடியில் ஈமு கோழி என்பது வெறும் கண்கட்டு வித்தையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்பதுதான் உண்மை," என்றனர்.

இது விவசாயியின் புலம்பல்

விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து விவசாயிகள் சிலரிடம் பேசினோம். நடந்தவற்றை நகைச்சுவையாய் நம்மிடம் பகிர்ந்து கொண்ட ஒரு விவசாயினுடைய பேட்டி அப்படியே இதோ... 

"ஈமு மோசடியில் பணம் போனது ஒரு பக்கம் மன உளைச்சல்னா,  போற இடத்துல எல்லாம் " ஏன் மாப்ளே... ஈமு கோழி வளர்த்தா லட்சமா பணம் சம்பாதிக்கலாம்னு சொன்னியே? யாரு சம்பாதிப்பானு சொல்லவே இல்லையே”னு கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்க. நாமளே மறந்தாலும் விடாம ஞாபகப்படுத்துனாங்க. இழவு வீட்டுக்கு போனாலும் கட்டிப்பிடிச்சு அழற கேப்புல, "என்ன ஈமுல போனது, போனது தானா?'னு கேட்டு ரொம்ப அழ வைச்சாங்க. எப்படி ஏமாந்தேன்னு நினைச்சு பாத்தாத்தாங்க ரொம்ப கடுப்பாகுது. 

சத்யராஜ், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பாக்கியராஜ்னு எல்லாரும் ஒரே அடியாய் கிளம்பி வந்து, ஈமுவுல அது இருக்கு. இது இருக்குனு எங்களை மூளைச்சலவை பண்ணிட்டு சூட்டிங் முடிஞ்சதும் பேக்கப் சொல்லிட்டு, பேமண்ட் வாங்கிட்டு போய்ட்டாங்க. 

விவசாயத்துக்கு மழையும் இல்லை. கிணத்து தண்ணியை இறைக்க மோட்டார் போட்டா, கரண்ட்டும் இல்லை. ரியல் எஸ்டேட்காரன் வேற, கையில ஸ்டாம்ப் பேப்பரோட நிலத்தை சுத்தி சுத்தி வந்துட்டு இருந்தான். வயித்துப்பாட்டுக்கு வேற வழியில்லாமத்தானே ஈமுக்கோழியில இன்வெஸ்ட் பண்ணிட்டு, இருளடைஞ்சு போன எங்க வாழ்க்கையில வெளக்கு ஏத்தலாம்னு நினைச்சோம்.

ஆனா அப்புறம்தான் தெரிஞ்சது, அது விளக்கு இல்லை. கொள்ளினு. கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிஞ்ச  கதையாயிடுச்சு. எங்க சாப்பாட்டை குறைச்சிட்டு ஈமுவுக்கு நிறைய  சத்தான உணவை கொடுத்து வளர்த்தோம். கடைசியில இப்படி பண்ணிட்டானுவ. நம்பி வளர்த்தோம். நெருப்பு கோழி மாதிரி ஆறடிக்கு வளந்து நின்னுச்சு. திடீர்னு ஒரு நாள் பாத்தா , ஈமு கோழியை கொடுத்தவன் ஆபிச இழுத்து மூடிட்டு போயிட்டானுங்க. 

அப்படியெல்லாம் ஏமாத்த மாட்டாங்க. ஏதாவது விசேஷத்துக்கு போயிருப்பாங்க. வந்துடுவாங்கன்னு மனசை திடப்படுத்திகிட்டுதான் இருந்தோம். இதுக்கிடையில ஈமு சாப்பாடு இல்லாம செத்திர கூடாதேன்னு வூட்டுல இருக்கற அரிசி, பருப்பு எல்லாம் போட்டோம். ஆனா அதை எங்கே அது சாப்பிடுச்சு. சாப்பிட்டா சாப்பிடு, இல்லைனா போன்னு போலாம்னுதான் யோசிச்சோம். அப்ப தான் ஞாபகம் வந்துச்சு. சோத்துக்கு வழியில்லாம ஈமு கண்ணை மூடிக்கிட்டா…நாம தலையில துண்டைப் போட்டுக்கிட்டு தலைமறைவா திரிய வேண்டியதுதான்.. அதை நினைச்சு அது என்ன சாப்பிடும், அதை வாங்கலாம்னு போனா நாங்க வாங்குற அரிசி விலையை விட அது அதிகம்.

ஆபிசை மூடிட்டு போனவங்க. திரும்ப வரவே இல்லை...!  

போலீஸ் ஸ்டேஷன் போய் ஈமுல மோசடி பண்ணீட்டாங்கன்னு சொன்னதும், " போ... போய் லைன்ல நில்லு!"ன்னு சொன்னது போலீஸ். லைன்ல நின்னா, எனக்கு முன்னாடி இருந்தவங்க “உங்களுக்கு எவ்வளவு போச்சு. அவ்வளவா? "னு ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிட்டாங்க. ஸ்டேஷன்ல தந்த மரியாதையை பார்த்தா, முதலீடு பண்ணது கிடைக்காதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம்,  'போனால் போகட்டும்  போடானு' பாட்டுப்பாடிட்டே (வேற வழி?) வீட்டுக்கு வந்தேன். 

ஈமுக்கோழிகளை என்னதான் பண்றது யோசிச்சா வழியே தெரியலை. ஆடு கோழின்னா அய்யானாருக்கு பலி கொடுத்து செஞ்ச பாவத்துக்கு பிராயசித்தமாவது பண்ணிக்கலாம். ஆனா ஆஸ்திரேலியாவுல இருந்து கொண்டாந்த இந்த  ஈமு கோழிய என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சோம். 

கிலோவுக்கு 2 ஆயிரம் கிடைக்கும், 3 ஆயிரம் கிடைக்கும்னு ஆசை காட்டுனாங்க பாவி பயலுக. இப்ப என்னடான்னா விவசாயத்தையும் விட்டுட்டு வீதிக்கு வந்தது தான் மிச்சம்.

பல லட்சம் முதலீடு... கிடைச்சது சில ஆயிரம்... இதுவா புரட்சி?

இந்த நிலைமையில தான், ஈமு வாங்க, விற்க நாங்க இருக்கறோம்னு அந்த கர்நாடகா பார்ட்டியும், ஆந்திரா பார்ட்டியும் வந்தாங்க. ஒரு கோழி 500 ரூபாய், 600 ரூபாய்னா எடுத்துக்கறேன்னு சொன்னாங்க. பாத்து போட்டு கொடுங்க னு சொன்னோம். அதெல்லாம் முடியாதுனு கட்அன்ட் ரைட்டா சொல்லி அடிமாட்டு விலைக்கு, சாரி அடிஈமு விலைக்கு வாங்கிட்டு போயிட்டாங்க. பல லட்சம் முதலீடு பண்ணி சில ஆயிரங்களை மட்டும் சம்பாதிச்ச பின்னாடிதான் ஆரம்பத்துல அவங்க விளம்பரத்துல சொன்ன 'புரட்சி' க்கு அர்த்தம் புரிஞ்சது” என்றார் பரிதாபமாக.

ஆனால் சினிமா மாதிரி க்ளைமேக்ஸில் எல்லோரும் திருந்தி, இனி ஏமாறுவதில்லை என முடிவு செய்துவிடவில்லை என்பதுதான் வருத்தம். இந்த க்ளைமேக்ஸ் சற்று வித்தியாசம். ஈமு மோசடி பரபரப்பாய் இருந்த நேரம், பணத்தை இழந்தவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கும், வீட்டுக்குமாய் நடந்து கொண்டிருந்த நேரம்... மற்றொரு புறம் சத்தமே இல்லாமல் இன்னொரு மோசடி. அங்கும் கேள்வியே இல்லாமல் முதலீடு செய்து கொண்டிருந்தனர் விவசாயிகள். 

அதில் ஈமுவில் பணத்தை இழந்தவர்களும் கூட இருந்தார்கள். அது என்ன மோசடி என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

- ச.ஜெ.ரவி

நன்றி-விகடன்