Tuesday, November 04, 2014

''நெருங்கி வா முத்தமிடாதே'' - சினிமா விமர்சனம்

ஆரோகணம் படத்தை இயக்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனின் இரண்டாவது படைப்பு
தான் ''நெருங்கி வா முத்தமிடாதே''. டைட்டிலை வைத்துக் கொண்டு மேலோட்டமாக
பார்த்தால் இது ஒரு காதல் படைப்பாக தெரிந்தாலும், நெடுஞ்சாலையில்
நடக்கும் டீசல் கடத்தலும், அதை ஒட்டி நிகழ இருக்கும் அசம்பாவிதமும், தேச
துரோகமும், அதை தடுக்கும் ஹீரோவின் சாமர்த்தியமும் தான் ''நெருங்கி வா
முத்தமிடாதே'' படத்தின் மொத்த கதையும். அதனூடே காதல், காமெடி,
சென்டிமெண்ட் எல்லாவற்றையும் கலந்து கட்டி வித்தியாமும், விறுவிறுப்புமாக
கதை சொல்ல முயன்று அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்றிருக்கிறார்
இயக்குநர் லட்சுமி !

நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு கடுமையாக நிலவும் சூழலில், ஊரை
அழிக்க ஊடுருவும் தீவிரவாத கும்பலும் தான் என்ன செய்கிறோம் என்பது
தெரியாமலே லாரியில் டீசல் கடத்தி செல்கிறார் ஹீரோ ! ஒரு கட்டத்தில் உண்மை
தெரிந்து அந்த கடத்தலின் பின்னணியில் இருக்கும் லோக்கல் எம்.எல்.ஏ.,வில்
தொடங்கி, முன்னாள் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் லட்சுமி
ராமகிருஷ்ணன் வரை சகலரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தான் எப்படி
தப்பிக்கிறார் எனும் கதையுடன், இரண்டு காதலையும் (நாயகர் மீதான நாயகியின்
காதல் உள்பட) கலந்து கட்டி பக்காவாக கதை, திரைக்கதை எழுதியிருக்கும்
இயக்குநர் லட்சுமி ராகிருஷ்ணன், தலையை சுற்றி மூக்கை தொடும் விதமாக
இக்கதையை இயக்கி இருப்பதால் அந்த இயக்கத்தில் மட்டும் சற்றே கோட்டை
விட்டிருக்கிறார்.

நாயகராக புதுமுகம் ஷபீர் ஒரே லுங்கி சட்டையுடன் வீம்பும், வீராப்புமாக
தன் பாத்திரத்திற்கேற்ற நடிப்பை வாரி வழங்கி இருக்கிறார். அப்பா
ஒய்.ஜி.மகேந்திரனிடம் அப்படி என்னதான் ஷபீருக்கு கோப தாபமோ.?!

நாயகி பியா, அப்பா யார்? என்று சொல்லாத அம்மா விஜி சந்திரசேகர் மீது
காட்டும் வெறுப்பில் ஆகட்டும், நண்பன்(காதலன்?) என்று உடன் வந்தவன்
இக்கட்டான சூழலில் 'எஸ்' ஆகிவிட, காப்பாற்றி கரை சேர்த்த லாரி
ஓட்டுநரும், உரிமையாளருமான ஹீரோ ஷபீர் மீது காதல் கொள்ளும்
காட்சிகளிலாகட்டும்... ஒவ்வொன்றிலும் உருக்கி விடுகிறார் அம்மணி. 'கீப்
இட் அப்' பியா!

விஜி சந்திரசேகர், நான்குபேர் சேர்ந்து செய்த 'கேங்ரேப்'பில் தான் நீ
பொறாந்தாய்.? என தன் அப்பா யார்? என்று அடிக்கடி கேட்கும் பெண்ணிடம்,
ஒருநாள் வெடித்து உண்மையை உடைத்து சொல்லிவிட்டு அந்த சூடு ஆறுவதற்குள்
மலேசியாவிற்கு பாட்டு கச்சேரிக்கு பாட கிளம்புவதெல்லாம் ரொம்ப ஓவர்.
ஆமாம், கடைசிவரை விஜி ஸ்டேஜில் பாடவே இல்லையே? ஏன்.?

சித்தப்பா சாவுக்காகவும், சொத்துக்காகவும் காத்திருக்கும் பாலசரவணனின்
காமெடி ஓ.கே! லாரியில் லிப்ட் கேட்டு ஏறும் தம்பி ராமையாவின் காமெடி கடி!
எம்.எல்.ஏ. ஏ.எல்.அழகப்பன், மத்திய மந்திரி லட்சுமி ராமகிருஷ்ணன்
உள்ளிட்டோரின் வில்லத்தனமும், சதி செயல்களும் புரியாத புதிர். 'தலைவாசல்'
விஜய்யின் காதல் அட்வைஸூம், ரோட்டோரத்து பாலியல் தொழிலாளியின் இரக்க
சுபாவமும் ஈரம்!

மெலடி புளூஸின் இனிய இசை, வினோத் பாரதியின் அழகிய ஒளிப்பதிவு எல்லாம்
இருந்தும் லட்சுமி ராமகிருஷ்ணனின் இயக்கத்தில், நடுக்கடலில் நிற்கும்
கப்பலுக்கு போக, படகில் டீசல் இல்லாமல் காத்திருக்கும் தீவிரவாதி யார்.?
அவன் காரைக்காலில் செய்த அல்லது செய்ய இருக்கும் சதிச்செயல் என்ன.?
ஒய்.ஜி.எம்.முக்கு மகன் ஷபீர் மீது அப்படி என்ன வெறுப்பு.? என்பது
உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு விடை அளிக்கப்பட்டிருந்ததென்றால்
''நெருங்கி வா முத்தமிடாதே'' ரசிகர்களை இன்னும் கிறங்கி போய் முத்தமிட
வைத்திருக்கும்! அவ்வாறு இல்லாதது படத்தில் உள்ள பலங்களை மிஞ்சிற்கும்
பலவீனம்!

மொத்தத்தில், ''நெருங்கி வா முத்தமிடாதே'' - பல இடங்களில் ரசிகர்களை
''நெருங்கி'' கிறங்கிபோக செய்யும்! சில சீன்களில் ''உறங்கிபோகவும்
செய்யும்!!''



thanx- dinamalar