Sunday, March 31, 2013

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை - திடீர்த்திருப்பம்

3. ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி பணியாளர்கள் போராட்டம் ! ( படங்கள் ) 
 
 
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில்,‘ஆலையை தொடர்ந்து இயக்கவேண்டும்’ என்கிற கோரிக்கையை வலியுறுத்தி ஸ்டெர்லைட் ஆலையின் பணியாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

‘ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும்’ என்கிற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு தரப்பிலிருந்து போராட்டங்கள் நடத்தப்பட்டதை தொடர்ந்து, ஆலையை மூடிவிடுவதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியம் உத்தரவிட்டது.

இப்போது ‘ஆலையை தொடர்ந்து இயக்கவேண்டும்’ என்கிற கோரிக்கையை வலியுறுத்தி ஸ்டெர்லைட் ஆலையின் பணியாளர்கள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.

தூத்துக்குடியில் கடந்த 1994 ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதிலிருந்தே அந்த ஆலைக்கு எதிரான போராட்டங்களும் துவங்கின. அத்தனை எதிர்ப்புகளையும் சமாளித்த அந்த ஆலை நிர்வாகம், கடந்த 23 ஆம் தேதி, சல்பர்டை ஆக்ஸைடு அதிகமாக வெளியேறியதை கட்டுப்படுத்த தவறியது.

அதனைத்தொடந்து ஆலைக்கு எதிரான போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்தது.வரும் நாடாளுமன்ற தேர்தலில் இதன் பாதிப்பு தெரியும் என்கிற உளவுத்துறையின் தகவல் அரசு கவனத்துக்கு சென்றது.

அதனைத்தொடர்ந்து எப்பொழுதுமே கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பிலிருந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தவறவிட்டு விழித்துக் கொண்டதுபோல் ‘ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதனிடையே  ஸ்டெர்லைட் ஆலையில் வேலைபார்த்து வரும் பணியாளர்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாசுக்கட்டுபாட்டு வாரிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.

இந்நிலையில், இன்று பணியாளர்கள் குடும்பத்தார் உட்பட இரண்டாயிரம் பணியாளர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில்,"ஆலையின் மூலம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றால் அந்த பாதிப்பை அகற்றுவது எப்படி என்று பார்க்க வேண்டும்? அதற்கென்று உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை முடுக்கிவிட்டு கண்காணிக்க செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு ஒட்டுமொத்தமாக மூடிவிடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?.

ஸ்டெர்லைட் ஆலையை நம்பியிருக்கும் சுமார் இருபதாயிரம் குடும்பத்தினர் வாழ்வாதாரம் என்னாகும்? எனவே ஆலையை மூடாமல் தொடர்ந்து இயங்க செய்யவேண்டும். சட்டவிதிமுறைப்படி இயக்க கடுமையாக கண்கானிக்க வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ஆலைக்கு எதிராகவும் ஆலைக்கு ஆதரவாகவும் நடந்துவரும் போராட்டங்களை பார்த்து சிரிக்கவா அழுகவா என விழித்துக் கொண்டிருக்கிறார்கள் தூத்துக்குடி பொதுமக்கள்.

- எஸ்.சரவணப்பெருமாள்

படங்கள்: ஏ.சிதம்பரம்  
 
நன்றி - விகடன்
 

 
 
. தூத்துக்குடி: ரசாயனவாயு கசிந்து, பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப்பட்ட பிரச்னையில், தொடர் போராட்டங்கள் நடந்ததையடுத்து, காற்று மற்றும் நீரை மாசுபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை, நேற்று மூடப்பட்டது.

தூத்துக்குடியிலிருந்து, 15 கி.மீ., தூரத்தில், மதுரை பை-பாஸ் ரோட்டில், "வேதாந்தா' என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை உள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து, தாமிர தாதுவை இறக்குமதி செய்து, அதை உருக்கி, தாமிர பிளேட்டுகள், அதைச்சார்ந்த பொருட்களாக மாற்றி, இங்கிருந்து, வெளியிடங்களுக்கு அனுப்பப்படுகிறது.
 
 
 கடந்த, 1993ல், இந்த ஆலைக்கு, முதல்வராக இருந்த ஜெ., அடிக்கல் நாட்டினார். 1996ல், இங்கு, உற்பத்தி துவங்கப்பட்டது. இந்த ஆலை, 5,000 பேருக்கு நேரடியாகவும், 10 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்கிறது. இங்கு, கந்தக அமிலம் உற்பத்தி உள்ளிட்ட பல பிளான்ட்டுகள் உள்ளன. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இந்த ஆலையை மூடவேண்டும் என, ம.தி.மு.க., பொது செயலர் வைகோ மற்றும் போராட்டக் குழுவினர், 17 ஆண்டாக, தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
 
 
 வைகோ, சமூக அமைப்புகள் தொடர்ந்த வழக்கில், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகக்கூறி, இந்த ஆலை இயங்க, 2010 செப்., 28ல், சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. அதை எதிர்த்து ஆலை நிர்வாகம், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அதையேற்று, 2010 அக்., 18ல், ஐகோர்ட் உத்தரவிற்கு, இடைக்கால தடைவிதித்த சுப்ரீம் கோர்ட், ஆலை இயங்க அனுமதியளித்தது. 2012 நவ., 6ல், ஆலை தொடர்ந்து இயங்குவதற்கான அனுமதியை, சுப்ரீம் கோர்ட் நீடித்தது. இந்த ஆலையை மூடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில், வைகோ தொடர்ந்த வழக்கில், விசாரணை முடிந்த நிலையில், ஏப்., 2ல், தீர்ப்பு கூறப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

திடீர் வாயு கசிவு: இதனிடையே, மார்ச் 23ம் தேதி அதிகாலை, இந்த ஆலையின், கந்தக அமில முதல் பிளான்ட், பழுது சரி செய்யப்பட்டு இயக்கப்பட்டபோது, அதிலிருந்து, கந்தக-டை-ஆக்சைடு வாயு கசிந்து காற்றில் கலந்தது. அந்த காற்றை சுவாசித்த, தூத்துக்குடி நகர், புறநகர் பொதுமக்கள் பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல், இருமல் போன்ற உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இந்த ஆலையை மூட வேண்டுமென, பொதுமக்கள், கலெக்டர் ஆஷிஷ்குமாருக்கு மனு அனுப்பினர். கந்தக-டை-ஆக்சைடு வாயு கசிந்த, பிளான்டை ஏன் மூடக்கூடாது என, ஆர்.டி.ஓ., லதா, ஆலை நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆலையை ஆய்வு செய்த, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், உறுப்பினர் செயலர், விளக்கம்கேட்டு, தனியாக நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, வைகோ தலைமையில், போராட்டக் குழுவினர், மார்ச் 25ல், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடவும், மார்ச் 28ல், ஆலையை முற்றுகையிடவும் முயன்றனர். கடைகள் அடைக்கப்பட்டன. பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராடின. இதனிடையே, ஆலை தரப்பினர் தந்த விளக்கம் திருப்தி இல்லாததாலும், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, கந்தக-டை-ஆக்சைடு அதிகளவு கசிந்து, பொதுமக்களின் உடல்நலம் பாதித்து, காற்று, நீரை மாசுபடுத்தியதாக குற்றம் சாட்டிய, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கார்த்திகேயன், பொதுமக்களின் புகார், கலெக்டர் அறிக்கை அடிப்படையில், காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் சட்ட படி, ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட, நேற்று முன்தினம் இரவு, ஆலை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

அதன் நகல், கலெக்டர், மின் வாரியம், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பப்பட்டது. அதை ஏற்று, ஆலைக்கான மின் இணைப்பை, மின் வாரியத்தினர் துண்டித்தனர். கலெக்டர் உத்தரவுப்படி, நேற்று காலை, ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்ற ஆர்.டி.ஓ., லதா, தாசில்தார் ஆழ்வாரம்மாள், மாசு கட்டுப்பாடு வாரியத்தினர், ஆலையை மூட எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர். அதன்படி, ஆலையிலுள்ள அனைத்து பிளான்ட்டுகளிலும், உற்பத்தி நிறுத்தப்பட்டு, அவை படிப்படியாக மூடப்பட்டன. தொழில்நுட்ப காரணங்களால், ஆலையை முற்றிலும் மூட, 30 மணி நேரத்திற்கும் மேலாகுமென, அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொண்டாட்டம்: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு, வரவேற்பு தெரிவித்து, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், பொதுமக்கள், வியாபாரிகள், போராட்டக் குழுவினர், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது, மக்களின், 17 ஆண்டு கால தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என, அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர். இதனிடையே, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின், இந்த உத்தரவை எதிர்த்து, ஆலை தரப்பில், ஐகோர்ட்டில், ஓரிரு நாளில், மேல்முறையீடு செய்யப்படுமென, எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வருக்கு வைகோ பாராட்டு: "ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுத்துள்ளதற்கு, தமிழக முதல்வருக்கு பாராட்டுகள்' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கூறினார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள, தாமிர உருக்கு ஆலையான, ஸ்டெர்லைட் ஆலையால், நிலம், நிலத்தடி நீர், காற்று மண்டலம் ஆகியன நஞ்சாக மாறி வருகிறது. கடல்வாழ் உயிரினங்களும், விவசாய நிலமும் வெகுவாக பாதித்துள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என, 17 ஆண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், மார்ச் 23ம் தேதி, ஆலையிலிருந்து வெளியேறிய நச்சுப் புகையால், தூத்துக்குடி பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
 
 
 
 பல இடங்களில், மரம், செடி, கொடிகள் நிறம் மாறி கருகிப் போயின. இதையடுத்து, ஆலையை மூடக் கோரி, கடந்த மூன்று நாட்களாக, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் கோரிக்கையை ஏற்று, ஸ்டெர்லைட் ஆலையை மூடும் சரியான நடவடிக்கையை, முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ளதற்கு, பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஆலை மூடப்பட்டதால், தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரவும், அரசைக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
 

ஆலையை திறக்கக்கோரி மனு: மூடப்பட்ட, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை, மீண்டும் திறக்க வேண்டுமென வலியுறுத்தி, அதன் பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரிய கோட்டப் பொறியாளர் கோகுல் தாசிடம், மனு கொடுத்தனர். ஆலை மூடப்பட்டதால், தாங்கள் வேலையிழந்து, தங்களின் குடும்ப வாழ்வாதாரம், கடுமையாக பாதிக்கப்படுமென, அதில் குறிப்பிட்டுள்ளனர். அது போல, தொழிலதிபர்களின் கூட்டமைப்பும், இந்த ஆலையை திறக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
 
நன்றி - தினமலர்