Showing posts with label மாணவர்கள். Show all posts
Showing posts with label மாணவர்கள். Show all posts

Sunday, April 08, 2012

எக்சாம் டைமில் பேரண்ட்ஸ் பின் பற்ற 100 ஐடியாக்கள்

பரீட்சையில் ஒரு மாணவன் வெற்றி பெறுவது, அவனது அறிவு மற்றும் முயற்சியில் மட்டும் இல்லை. பரீட்சைக்கு அவன்/அவள் நன்கு தயாராவதும், கூடுதல் மதிப்பெண்கள் எடுப்பதும், அவர்களோடு நாம் எவ்வளவு உறுதுணையாக இருக்கிறோம் என்பதையும் பொறுத்தே இருக்கிறது. நீங்கள் எப்படி எல்லாம் அவர்களின் வெற்றியில் பங்குபெற முடியும் என்பதில் உங்களுக்கு உதவிடவே இந்தத் தொகுப்பு.( ஆனந்த விகனின் சுட்டி விகடன் கட்டுரை)


பிரபல மனநல மருத்துவர் ஷாலினி, வெற்றி பெற்ற சுட்டிகளின் பெற்றோர், சீனியர் மாணவர்கள் எனப் பலருடன் பேசியதில் இருந்து இந்தத் தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இருக்கும் குறிப்புகள் அனைத்தையும் உற்சாகத்துடன் செயல்படுத்துங்கள். உங்கள்  சுட்டி, அனைத்துத் தேர்வுகளிலும் சிறப்பான வெற்றியைக் குவிக்க மனமார்ந்த வாழ்த்துகள்.



 
காலையில் தாமதமாக எழும் பழக்கம் உடையவராக இருந்தால், அதை மாற்றிக்கொள்ளுங்கள். பரீட்சை முடியும் வரை, உங்கள் மகன்/மகள் எழுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பே உங்கள் அலாரம் அடிக்கட்டும்.
 
எழுப்பிவிட்டு நீங்கள் படுத்துவிடாமல், அருகிலேயே இருக்க வேண்டும். குறிப்பாக, ஏதாவது வேலை இருந்தால் எடுத்து வந்து, சின்சியராகப் பார்க்கலாம். வேலையும் முடியும், படிக்கும் சுட்டிக்குத் துணையாக இருந்தது போலவும் ஆச்சு.
 
அதிகாலையில் உங்கள் சுட்டியை எழுப்பினால் மட்டும் போதாது. நீங்கள் முன்கூட்டியே குளித்துவிடுங்கள். உங்களுடைய ஃப்ரெஷ்ஷான முகத்தைப் பார்த்தால் அவர்களுக்கும் புத்துணர்ச்சி வரும்.
 
உங்கள் மகன்/மகள் அசதியில் அவர்களை அறியாமல் தூங்கிவிடலாம். அப்போது, ''உனக்காக நான் முழிச்சு இருக்கேன்'' என்று எல்லாம் கோபப்படாமல், அன்பாக எழுப்புங்கள்.
 
ஜிம், ஜாக்கிங் எனக் காலையில் டைட் ஷெட்யூல் வைத்து இருப்பவரா? உங்கள் சுட்டியின் பரீட்சை முடியும் வரை அவற்றுக்கான நேரத்தைக் குறைத்துக்கொண்டு, கூடவே இருப்பது, உங்கள் அக்கறையை உணர்த்தும்.
 
காலையில் நீண்ட நேரம் செய்தித்தாள் படிப்பவரா? அதையும் வேகமாக முடித்துக்கொண்டு, பரபரப்பாக பள்ளிக்குக் கிளம்பும் மகன் / மகளின் படிப்பு சம்பந்தமான விஷயங்களை எடுத்துவைக்க உதவலாம்.
 
பள்ளி வேன், பேருந்தை எல்லாம் எதிர்பார்க்காமல், பரீட்சை முடியும் வரை நீங்களே டூ வீலரில் பத்திரமாக அழைத்துச் செல்வது நல்லது. சுட்டிக்கும் டபுள் பாதுகாப்பு. நேரம் குறித்த டென்ஷனும் குறையும்.

 
மாலையில், நண்பர்களுடன் அரட்டைக் கச்சேரி நடத்துபவரா? அதைச் சில நாட்களுக்குத் தள்ளி வையுங்கள். சரியான நேரத்துக்கு வீட்டுக்கு வந்து, மகன் / மகளுடன் இருங்கள். இது, உங்கள் அக்கறையைச் சுட்டிக்கு நன்கு உணர்த்தும்.
 
24 மணி நேரமும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என மிரட்டாதீர்கள். நீங்களே சிறிது நேரம் அவர்களுடன் ஜாலியாகப் பேசி, விளையாடுவது...அவர்களின் டென்ஷனைக் குறைக்கும்.
 
உங்கள் மகன் / மகள் பரீட்சை மும்முரத்தில் இருக்கும் நேரத்தில், நீங்கள் நண்பர்களுடன் சினிமாவுக்கோ, வேறு இடங்களுக்கோ போய் வந்ததைப்பற்றி பெருமையாகப் பேசிக்கொண்டு இருக்காதீர்கள்.
 
உங்கள் சுட்டி பரீட்சைக்குப் படிக்கும்போது, நீங்கள் செல்போனில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது வேண்டவே வேண்டாம். அது, நீங்கள் வேறு அறையிலோ, மொட்டை மாடியிலோ இருந்தாலும்கூட சரியல்ல.
  
உங்கள் அலுவலகத்தில் எத்தனையோ பிரச்னைகள் இருக்கலாம். அந்த டென்ஷனை எல்லாம் படிக்கும் சுட்டியிடம் காட்டாதீர்கள். அலுவலகம் பற்றி வீட்டில் உள்ள மற்றவர்களுடன் பேசுவதையும் தவிர்க்கலாம்.
 
வீட்டுப் பிரச்னை, பிசினஸ் சம்பந்தமான கோபமான அல்லது குழப்பமான விஷயங்களையும் பேசாதீர்கள். அதை எல்லாம்... மகன் / மகள் இல்லாத சமயத்தில் பேசிக்கொள்வது நல்லது.
 
நீங்கள் தீவிர கிரிக்கெட் ரசிகரா? நண்பன் வீட்டுக்குப் போய் பார்க்கலாம் எனக் கிளம்பிடாதீங்க. அதை, சுட்டியால் யூகிக்க முடியும். மேட்ச் நடக்கிற நேரத்தில் அவன் பக்கத்தில் இருந்தால், உங்கள் அக்கறை நன்கு புரியும். கிரிக்கெட் பற்றிய கவனமும் சுட்டியிடம் இருந்து விலகும்.
 
வீட்டில் சுப காரியங்கள் நடத்துவதை பரீட்சை முடியும் வரை தள்ளிப் போடுங்கள்.
 
தேர்வு சமயத்தில்தான் கல்யாணம், காதுகுத்து என்று வரிசை கட்டி வரும். அவற்றுக்கு, சுட்டியின் தாத்தா-பாட்டியை அனுப்புவது நல்லது.  பரீட்சை சமயத்தில் அம்மாவும் அப்பாவும் உடன் இருப்பதே பெஸ்ட்.
 
தாத்தா-பாட்டி இல்லை... நீங்கதான் போக வேண்டும் என்கிற கட்டாயம் வந்தால், சரியான மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். 'வேலை ஆட்கள்தான் இருக்கிறார்களே...’ என்று நினைக்காதீர்கள். படிப்பைப் பற்றி அக்கறை உடைய உறவினர் அல்லது நண்பர் பொறுப்பில் விட்டுச் செல்வது நல்லது. மறக்காமல் போன் செய்து பேசுங்கள்.
 
விழித்து இருந்து ஏதோ வேலை செய்கிறேன் என்று, 'கடாமுடா’ என எதையாவது இழுத்துப் போட்டு சத்தத்தை எழுப்புவது, படிக்கும் சுட்டிக்குத் தொந்தரவையே அளிக்கும். அதை முழுவதுமாகத் தவிர்க்கவும்.
 
காலையில் படிக்க எழும் சுட்டி பல் துலக்கி, முகம் கழுவியதும் சூடாக காபி அல்லது டீ கொடுத்து, ஃப்ரெஷ்ஷாகப் படிக்க உதவுங்கள். இரவில் கண் விழித்துப் படிக்கும் சுட்டிகளுக்கு டீ, காபி போட்டுக் கொடுங்கள்.
 
பொங்கல், பூரி மாதிரி  கொஞ்ச நேரத்துக்கு 'திம்’ என்று இருக்கச் செய்கிற உணவு வகைகளைத் தவிர்க்கவும். இட்லி, இடியாப்பம்  போன்ற ஆவி ஐட்டங்கள் நல்லது. அதையும்கூட அளவாக சாப்பிடச் சொல்லுங்கள். கொஞ்ச நேரத்தில் பசித்தால் ஜூஸ், சூப் மாதிரியான வேறு ஆகாரங்கள் மூலம் சரிக்கட்டிக் கொள்ளலாம்.
 
'சம்மர்’ தொடங்கியாச்சு. திடீரென்று பவர் கட்டாகி, வேர்த்துக் கொட்டலாம். இருட்டு மிரட்டலாம். அதனால், கை விசிறி, பேட்டரி லைட் இதை எல்லாம் பக்காவாக ரெடி செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

 
சமையல் கேஸ் தீரும் நாட்களாக இருந்தால், முன்கூட்டியே பதிவு செய்து வாங்கிவைத்துக்கொள்ளுங்கள். விளக்குகள் சரியாக எரிகிறதா, நீர் ஏற்றும் மோட்டார் சரியாக இயங்குகிறதா என்பதை எல்லாம் செக் செய்துகொள்ளுங்கள். இவை எல்லாமே உங்கள் கவனத்தை சுட்டியிடம் இருந்து திசை திருப்பும் விஷயங்கள்.
 
'குழந்தை சாப்பிட்டுக்கொண்டே படிக்கட்டும்’ என்று நொறுக்குத் தீனி கொடுத்துப் பழக்காதீர்கள்.இது, சுட்டியின் கவனத்தைப் பாதிக்கும். அதற்குப் பதில், அடிக்கடி பால் அல்லது சத்து பானம் கொடுப்பது நல்லது.
 
முதல் நாள் உணவு மிச்சம் இருந்து, அது கெட்டுப்போகாமல் இருந்தாலும்கூட சுட்டிக்குக் கொடுக்காதீர்கள்.
 
சுட்டி படிக்கும் அறை, சுத்தமாக இருப்பது முக்கியம். அறையில் இருக்கும் விளக்கின் வெளிச்சம் போதுமானதாக இல்லை என்றால், உடனடியாக புதிதாக மாற்றுங்கள். அதோடு, காற்று வசதியும் இருக்கிற மாதிரி செய்துகொடுங்கள்.
 
பக்கத்தில் எங்காவது வீட்டின் ரிப்பேர் வேலை நடந்தால், அவர்களிடம் அன்பாகப் பேசி, அதை வேறு நாட்களுக்கு மாற்ற முயற்சிக்கலாம். முடியாதபட்சத்தில் சுட்டியை அருகில் உள்ள வேறு உறவினர் வீட்டில் தங்கவைக்கப் பாருங்கள். அதற்கும் வழி இல்லை என்றால், அறையில் பெட்ஷீட், தலையணை போன்றவற்றைக் கொண்டு 'சவுண்ட் ப்ரூஃப்’ வேலையைச் செய்துகொடுங்கள்.
 
பரீட்சை இல்லாத பக்கத்து வீட்டுச் சுட்டிகள், விளையாடிக் கூச்சல் இடலாம். அல்லது, எதிர் வீட்டு டி.வியோ, ரேடியோவோ வால்யூம் அதிகமாக அலறலாம். இதையும் சரிசெய்ய வேண்டியது உங்கள் கடமை.
 

கார நெடி, தாளிப்பு, வெங்காயம் அரிதல் போன்ற காரியங்களை, சுட்டிகள் ரிலாக்ஸ் செய்யும் சமயம் பார்த்துச் செய்வது நல்லது. பூச்சிக் கொல்லி மருந்து அடிப்பது, ஒட்டடை அடிப்பது, மிக்ஸி, வாஷிங் மிஷின், வேக்குவம் கிளீனர் போன்றவற்றை இயக்குவது ஆகிய வேலைகளிலும் இந்தக் கவனம் அவசியம்.
 
திடீரென்று விருந்தாளிகள் வீட்டுக்கு வந்தாலும் சுட்டியின் படிப்பு பாதிக்காத வகையில் நடந்துகொள்ளவும். சுட்டியின் கவனத்தை மாற்றும் வகையில்  தின்பண்டத்தை நடுக்கூடத்தில் பிரிப்பது, விநியோகிப்பது, சுவாரஸ்யமான சம்பவத்தை விவரிப்பது போன்ற விஷயங்களைச் செய்யாமல் இருக்க, விருந்தாளியிடம் பக்குவமாகப் பேசிப் புரியவையுங்கள்.
 
எவ்வளவு அவசரமாக இருந்தாலும் படிக்கிற சுட்டியை, 'இங்கே போய் வா, அங்கே போய் வா, இந்த வேலையை செய்துவிட்டுப் படி... அதை அங்கே கொடுத்துவிட்டு வந்து படி’ என்று வேலை வாங்குவதை முழுவதுமாகத் தவிர்த்துவிடுங்கள்.
 
 குளிப்பதற்குத் தண்ணீர் பிடிப்பது, வெந்நீர் வைத்துக்கொள்வது, யூனிஃபார்மை அயன் செய்வது, ஷூவுக்குப் பாலிஷ் போடுவது போன்ற சுட்டியே செய்துகொள்ளும் வேலைகளை, பரீட்சை முடியும் வரை நீங்கள் செய்துகொடுத்து உதவுங்கள்.
உங்கள் சுட்டி படித்துக்கொண்டு இருக்கும்போது உங்களுக்கு போன் வந்தால், சுருக்கமாகப் பேசுங்கள். அதேபோல, ரகசியம் பேசுற மாதிரி பேசாதீர்கள். அது என்னவாக இருக்கும் என்று சுட்டியை யோசிக்க வைக்கும். அந்தச் சிந்தனையால் படிப்பதில் கவனம் சிதறும்.
 பரீட்சைக்குப் படிக்கிற சுட்டிக்கும் சமயத்தில் போன் கால்ஸ் வரலாம். மிக அவசியமான அழைப்பாக இருந்தால், 'சுருக்கமாகப் பேசி முடிக்கவும்’ என்று அழைப்பாளியிடம் வேண்டி, சுட்டியிடம் கொடுங்கள். மற்ற அழைப்புகளை நீங்களே பேசி, விஷயத்தைப் பிறகு சொல்லலாம்.
உங்கள் உடல் ஆரோக்கியமும் ரொம்ப முக்கியம். லேசான தலைவலி, ஜலதோஷம் என்றால்கூட உடனே டாக்டரிடம் காட்டி, ஆரம்பத்திலேயே சரி செய்துகொள்ளுங்கள். 'லேசான அசதிதானே’ என்று அலட்சியமாக இருந்து, பிறகு உடம்பு முடியாமல் படுத்துவிட்டால், எல்லோருக்குமே கஷ்டம். ஸோ, வரும் முன் காத்து, பரீட்சை சமயத்தில் நீங்களும் ஆரோக்கியமாக இருப்பது நல்லது.
சுட்டிகளின் உடல்நிலையில் கவனமாக இருங்கள். ஒரு வேளை, உடல்நிலை சரி இல்லாமல் போனால், மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சுட்டிகளுக்கு எந்த மாத்திரை, மருந்தையும் நீங்களாகத் தர வேண்டாம்.
எதிர் வீட்டு, பக்கத்து வீட்டு, சொந்தக்கார வீட்டுப் பையனோ, பெண்ணோ நிறைய மார்க் வாங்கி இருக்கிறார்கள், அதுபோல் உன்னால் எடுக்க முடியவில்லையே... என்று யாருடனும் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்.
 
உங்கள் சுட்டியை நீங்கள்தான் டூவீலரில் ஸ்கூலுக்கு அழைத்துச் செல்வீர்களா? அப்படி என்றால், வண்டியை பக்காவாக வைத்துக்கொள்ளுங்கள். ஸ்கூலுக்குப் போகும்போது பாதி வழியில் பெட்ரோல் தீர்ந்துபோவது, ரிப்பேராகி நிற்பது போன்றவை, டென்ஷனை ஏற்படுத்திவிடும். ஆகவே, ஒவ்வொரு நாளும் மாலையில் வண்டியைச் சரிபார்த்துக்கொள்வது சிறந்தது.
 
ஸ்கூல் பஸ்ஸோ, ஆட்டோவோ  சுட்டியை அழைத்துச் செல்லுமா? அப்படி என்றால், வழக்கமான நேரம் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே போன் செய்து, வண்டி வருவதை உறுதி செய்யுங்கள். பரீட்சை முடிகிற வரை பஸ், ஆட்டோவுக்கு லீவு கொடுத்துட்டு, நீங்களே அழைத்துச் செல்வது இன்னும் நல்லது.
 
பள்ளியில் விடச் செல்லும்போது மறக்காமல் உங்களுடைய செல்போன், பர்ஸ், மூக்குக் கண்ணாடி போன்ற  விஷயங்களைக் கூடவே எடுத்துச் செல்லுங்கள். திடீரென்று இவற்றின் தேவை அவசியப்படலாம்.
 
படித்ததைச் சொல்லிக் காட்டுவதற்கு, டிக்டேஷன் வைப்பதற்கு, என்ன எல்லாம் அன்றைய நாளில் படிக்கத் திட்டமிட்டு இருக்கிறோம் என்பதை டிஸ்கஸ் செய்ய, சுட்டிகளுக்கு உதவி தேவைப்படலாம். சில சுட்டிகளுக்கு இது மாதிரித் தேவைகள் பிடிக்காமலும் இருக்கலாம். அதற்காக கோபப்படாமல், அவர்கள் விருப்பத் துக்கு ஏற்ப நடந்துகொள்ளுங்கள்.
 
ரொம்ப நாளாக விருப்பப்பட்டுக் கேட்கும் பொருளை, தேர்வு முடிந்ததும் வாங்கித் தருவதாகச் சொல்லுங்கள். எங்கேயாவது சென்று பார்க்க வேண்டிய இடமாக இருந்தால், விடுமுறையில் அழைத்துச் செல்வதாகச் சொல்லுங்கள் (அதை கட்டாயம் நிறைவேற்றுங்கள்).
 
'போன பரீட்சைக்கும் நல்லாப் படிச்சிருக்கேன்னுதான் சொன்னே... 70 மார்க், 75 மார்க் வாங்கி இருந்தே... இப்ப என்ன பண்ணப் போறியோ...’ போன்ற நெகட்டிவ் பேச்சு வேண்டாம்.

 
சுட்டிகளை அருகில் வைத்துக்கொண்டே, 'பாவம், தூக்கமே இல்லை. குழந்தைக்கு எந்நேரமும் படிப்புதான்’ என்றோ, 'என்னத்தைப் படிக்கிறாங்க... சும்மா புத்தகத்தை வெச்சுப் புரட்டிக்கிட்டே இருக்கான்’ என்று எந்த வித காமென்ட்ஸும் வேண்டாம் ப்ளீஸ்.

 
முதல் முறை பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் சுட்டி, எவ்வளவு நன்றாகப் படித்து இருந்தாலும் டென்ஷன் வருவது இயல்பு. 'அம்மாவும் இப்படித்தான் பயந்தேன், ரிசல்ட் வந்தப்ப எதிர்பார்த்ததைவிட அதிக மார்க் வாங்கினேன், தெரியுமா?’ என்று கூறி, பயத்தைப் போக்குங்கள்.

 
ஆசிரியர்களும் மற்ற மாணவர்களும் சில நேரம், 'பரீட்சை கஷ்டமாத்தான் இருக்குமாம்’, 'என்னத்தைப் பண்ணப் போறியோ...’ என்று எல்லாம் சொல்லிப் பயமுறுத்தி இருக்கலாம். அதை, உங்களிடம் வந்து பகிர்ந்துகொள்ளும் உரிமையைச் சுட்டிகளுக்குக் கொடுங்கள். அதோடு, 'அந்தப் பயம் தேவையற்றது... உன்னால் நன்றாகப் பரீட்சை எழுத முடியும்’ என்று தன்னம்பிக்கை ஊட்டுங்கள்.
 
 படிக்கும்போது கண்காணியுங்கள். ஆனால், அது வேவு பார்ப்பது மாதிரி இருக்கக் கூடாது. ரிலாக்ஸ் பண்ண உதவுவது, டீ போட்டுத் தருவது போன்றவை அவனை உற்சாகப்படுத்தும். மாறாக, உங்கள் கண்காணிப்பு கறாராக இருந்தால், சுட்டிக்கு கோபமும் எரிச்சலும் வருமே தவிர, படிப்புக்குப் பயன் தராது.
 
சுட்டிகளின் இஷ்டப்படி அவர்களைப் படிக்க விடுங்கள். முதலில் பிசிக்ஸ், அப்புறம் கெமிஸ்டரி என்று எல்லாம் அட்டவணை போடாதீர்கள். தேர்வுகள் எழுதியது, நண்பர்களிடம் பேசியது என அவர்களுக்கே எந்த வரிசையில் படிக்க வேண்டும் என்ற யோசனைகள் இருக்கும். கடைசி நேரத்தில் அவர்களின் இஷ்டப்படி படிப்பதுதான் சிறந்தது.
 
காலை, மாலை என எந்த நேரத்தில் படிக்க வேண்டும் என்று உங்கள் சுட்டிக்கு விருப்பமோ... அப்போது படிக்கட்டும் என்று விட்டுவிடுங்கள். 'அதிகாலையில் படிச்சாதான் நல்லாப் படிக்க முடியும்’ என்று மாற்றிச் சொல்லிக் கட்டாயப்படுத் தாதீர்கள்.
 
 பரீட்சைக்குத் தேவையான பொருட்கள் நன்றாக இயங்குகிறதா என்பதைக் கவனிக்கவும். நீங்களும் ஒரு முறை பேனா, பென்சில் எல்லாம் நன்றாக எழுதும் நிலையில் உள்ளதா, ரப்பர், ஷார்ப்னர், கர்சீஃப் எல்லாம் உள்ளதா? ஜியோமெட்ரி பாக்ஸில் அனைத்து உபகரணங்களும் சரியாக இருக்கின்றனவா? என்பதை செக் செய்து உதவுங்கள்.
 
தன்னம்பிக்கை ஊட்டும் விஷயங்கள்... அதாவது, ''நீ நல்லாப் பரீட்சை எழுதணும், கேள்விகள் எல்லாம் படிச்சதில் இருந்து வரணும். ஈஸியா இருக்கணும்னு சாமியை வேண்டிக்கிட்டேன். இந்தா குங்குமம், பிரசாதம்'' ''ரொம்ப ராசியான பரீட்சை அட்டை, நம் வீட்டில் எல்லோரும் பரீட்சை எழுதி, அதிக மார்க் வாங்கியது'' ''வீட்டை விட்டுக் கிளம்பும் போது, இந்த ஸ்லோகத்தைச் சொல்லிட்டுக் கிளம்பு'' ''நான் பார்த்துட்டுதான் இருந்தேன், நீ நல்லா படிச்சே. நிச்சயம் ஈஸியா இருக்கும்.'' இப்படி பாசிட்டிவான விஷயங்களைச் சொல்லி, சுட்டியின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தலாம்.
 
ஹால் டிக்கெட், பரீட்சை அட்டை, பரீட்சை எழுதுவதற்கான உபகரணங்கள், தண்ணீர் பாட்டில் இப்படி ஒரு செக் லிஸ்ட்டை, பரீட்சைக்குக்  கிளம்பும்போது சுட்டிக்கு நினைவுபடுத்தினால், அது உதவியாக இருக்கும்.
 
செருப்பு, ஷூ ஆகியவை பிய்ந்து இருந்தால், புதிதாக வாங்கியோ, அல்லது சரிசெய்தோ கொடுங்கள்.
 
பரீட்சைக்குத் தேவையான பேனா, பென்சில், ஸ்கேல் ஏதாவது வேண்டும் என்று கேட்டால், 'இப்போதானே வாங்கிக் கொடுத்தேன்’ என்று சொல்லாமல், உடனே வாங்கிக் கொடுங்கள்.
 
பரீட்சை நாட்களில் சுட்டிகளின் கவனம் எல்லாம்  பரீட்சைக் கேள்விகள், டென்ஷன், படபடப்பு என்று இருக்கும். நீங்கள் அவர்களோடு பள்ளிக்குச் சென்று வாழ்த்தி, பரீட்சை ஹாலுக்கு அனுப்புவது, பரீட்சை எழுதிவிட்டுத் திரும்பும்போதும், ஆதரவான வார்த்தைகளைப் பேசி அழைத்து வருவது... இப்படிச் செய்தால், சுட்டிக்கு தைரியத்தைத் தரும்.
 
பரீட்சை எழுதிவிட்டு வீட்டிற்குள் நுழையும்போதே, ''எப்படி எழுதினே? கொஸ்டீன் பேப்பரைக் காட்டு. இதுக்கு என்ன பதில்? அதுக்கு என்ன பதில்? எவ்வளவு மார்க் வரும்?'' என்று கேள்விகளை அடுக்காமல், சுட்டியைச் சிறிது நேரம் ரிலாக்ஸாக விடுங்கள். அவர்களாகச் சொன்னால் கேட்டுக்கொள்ளுங்கள்.

 
நீங்கள் அலுவலகத்தில் பிஸியாக இருந்தாலும், உங்கள் சுட்டி பரீட்சை முடித்து வீட்டுக்கு வரும் நேரத்தில்,  ஐந்து நிமிடங்கள் ஒதுக்கி, ''எப்படி எழுதி இருக்கே? கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு. நான் சீக்கிரம் வர்றேன்'' என்று போனில் பேசுங்கள். வரத் தாமதமாகும் என்றால், அதையும் சொல்லிவிடுங்கள்.
 

அன்றைய பரீட்சையில் பதிலைத் தப்பாக எழுதிவிட்டதாகவோ, எழுதாமல் விட்டுவிட்டதாகவோ கவலையோடு சொன்னால், நீங்களும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு கவலைப்படாதீர்கள். ''அவ்வளவுதானே... இதில் விட்ட மார்க்கை நாளைய பரீட்சையில் பிடிச்சுடலாம். டோன்ட் வொர்ரி'' என்று உற்சாகமாப் பேசி, கவலையைத் துரத்துங்கள்.
 
இரண்டு சுட்டிகள் இருக்கிற வீட்டில், இன்னும் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும். ஒருவர் உற்சாகமாகவும் அடுத்தவர் டல்லாகவும் இருந்தால், முதலில் டல்லாக இருப்பவரை நன்றாகக் கவனித்து, உற்சாகப்படுத்த வேண்டும். அதில், முதலாவது பையனையும் பங்கு எடுத்துக்கொள்ள வைக்க வேண்டும். இரண்டாமவனுக்கு எந்த விதத்திலும் தாழ்வு மனப் பான்மை வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல், பரீட்சை முடிந்த சுட்டியின் உற்சாகம், பரீட்சை எழுதும் சுட்டியைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்வதும் மிக அவசியம்.
 
 சுட்டிகள் தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்காமல், அவர்கள் விரும்பும் சமயங்களில் சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்துகொள்ள அனுமதியுங்கள்.
 
தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை தூங்க வேண்டிய அவசியத்தை உணர்த்தி, அதற்கான தொந்தரவு இல்லாத சூழ்நிலையை உருவாக்கிக் கொடுங்கள்.
 
 சுட்டிகளின் பரீட்சை நேரத்தில் நீங்களும் இயல்பாக இருங்கள். இதனால், 'அம்மா-அப்பா நம்ம பரீட்சையை நினைச்சு டென்ஷன் ஆகாமல், நம்பிக்கையோடு எப்பவும் போல இயல்பா இருக்காங்க, அந்த நம்பிக்கையை நாம காப்பாத்தணும்’ என்கிற எண்ணம் தோன்றும். படிப்பதில் கவனம் கூடும்.
 
 அவ்வப்போது 'நல்லாப் படி’ என்று சொல்லுங்கள். அதற்காக அடிக்கடி 'படி படி’ என்று ரிலாக்ஸ் பண்ணிக்கொள்ளவும் விடாமல் படுத்தி எடுக்காதீர்கள்.
 
சுட்டிகள் பரீட்சை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி வரும்போது, பெற்றோர் வீட்டில் இருக்க வேண்டும். இருவரும் வேலைக்குப் போகிறவர்கள் என்றால், ஒருவராவது இருக்க வேண்டும். எழுதிய பரீட்சை பற்றி அவர்கள் சொல்வதைக் கேட்டு, ஆறுதலாகப் பேசி, அடுத்த தேர்வுக்குத் தயார்ப்படுத்த வேண்டும்.
 
ஆஸ்துமா, சைனஸ், அலர்ஜி என ஏதாவது உங்கள் வீட்டுச் சுட்டிக்கு இருந்தால், அது தொடர்பான உணவுப் பொருட்கள் அல்லது மற்றதை வீட்டுக்குள் அண்டாமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம்.
 
 ஏதாவது ஒரு பிடித்த உணவைச் செய்து கொடுக்கச் சொல்லி சுட்டி ஆசைப்பட்டுக் கேட்டால், செய்து கொடுத்து,அவர்களை சந்தோஷப்படுத்துங்கள். அது ஹெவியான உணவாக இருந்தால், கொஞ்சமாகக் கொடுப்பது நல்லது.
 
வீட்டுக்கு ரெகுலராக வாங்கும் குடிதண்ணீரை மாற்றாதீர்கள். சுட்டிகளுக்கு உடல்நிலை கெட்டுப்போக வாய்ப்பு இருக்கிறது.
 
 பழச்சாறு போன்ற குளிர்ச்சி தரும் உணவை வெளியே வாங்கித் தராமல், முடிந்தவரை வீட்டிலேயே செய்து கொடுங்கள்.

 
ஹோட்டல் உணவுகளை பரீட்சை முடியும் வரை தவிர்த்தல் நல்லது.
பிள்ளைகள் விழித்து இருந்து படிக்கும் வரை, அவர்கள் உடன் நீங்களும் விழித்து இருப்பது நல்லது. அதற்காக, அவர்கள் பக்கத்திலே அமர்ந்து, கொட்டாவி விட்டுக்கொண்டோ, கேள்விகளாய்க் கேட்டுக்கொண்டோ இருப்பதைவிட, அவர்களை தனியாய் விட்டுவிடுவது உத்தமம்.
  
பரீட்சை சமயத்தில் ஐஸ்க்ரீம், சாக்லேட், குளிர்பானங்கள் எதையும் உங்கள் சுட்டிகளுக்கு வாங்கிக் கொடுக்காதீர்கள்.

 
ஜன்னலுக்கு திரைச் சீலை போட்டுவைத்தால், காற்றோட்டமா கவும் இருக்கும், வேடிக்கை பார்ப்பதும் தவிர்க்கப்படும்.
 
பரீட்சை இல்லாத சுட்டிகள் மற்றும் குழந்தைகள் யாரும் உங்கள் சுட்டி படிக்கும் போது, அங்கே சென்று இடையூறு செய்வதோ, உரக்க சத்தம் போட்டு விளையாடுவதோ இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
 
நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், பரீட்சை முடியும் வரை லஞ்ச், காபி நேரத்தை உங்கள் சுட்டியோடு  பகிர்ந்துகொள்ளுங்கள்.
 
 'நாம் படித்தது வருமா... இல்லை சரியாக எழுத முடியாமல் போய்விடுமா?’ என்கிற குழப்பத்தில் உங்கள் சுட்டி இருந்தால், அவர் செய்த பழைய சாதனைகளை நினைவுபடுத்தி, ''அந்த மாதிரி இப்பவும் முடியும்'' என்று உற்சாகப்படுத்துங்க.
 
குரூப் ஸ்டடி, வீட்டிலேயே நடப்பது முக்கியம். சுட்டியின் நண்பர் வீடாக இருந்தால், அந்த வீட்டுப் பெரியவர்களிடம் சொல்லிக் கவனிப்பது நல்லது.
 
''இன்னிக்கு எவ்வளவு படிச்சே?'' என்று சுட்டியிடம் கேட்டு, அதிகமாக இருந்தால், 'வெரிகுட்’ சொல்லுங்கள். குறைவாக இருந்தால் ''டோன்ட் வொர்ரி, நாளைக்குக் கொஞ்சம் முன்னாடியே ஆரம்பிச்சுடு'' என்று சொல்லி உற்சாகப்படுத்தலாம்.
 
தெரு முனை பொதுக்கூட்டம், கல்யாணம், கோயில் திருவிழா என எந்த ரூபத்திலும் பரீட்சை சமயத்தில் திடீரென்று ஸ்பீக்கர் அலறலாம். எனவே, நண்பர்கள் அல்லது உறவினர் வீட்டில் சென்று உங்கள் சுட்டி படிப்பதற்கு முன் கூட்டியே அனுமதிவாங்கி வெச்சுக்கங்க. இதில் தயக்கமோ, கூச்சமோ வேண்டாம்.
 
உங்க சுட்டி கிளம்பும் நேரத்தில், ''அந்தப் பாடம் ஞாபகம் இருக்கா? இதை மறக்கலியே'' என்று கேட்டு, டென்ஷன் ஆக்காதீர்கள்.
 
பள்ளிக்கு முன்கூட்டியே அழைத்துச் செல்லத் தயாராக இருங்கள். சுட்டி தயாரான பிறகு நீங்கள் ரெடியாவதோ, அல்லது சுட்டி கிளம்ப வேண்டிய சமயத்தில் ஒரு சின்ன வேலை என அதில் சிக்கிக்கொள்வதோ வேண்டாமே.
 
புத்தகத்தை கண்ணில் இருந்து ஓர் அடி தூரத்தில் வைத்து படிப்பது நல்லது. படிக்கும்ஆர்வத்தில் நாற்காலியில் கோணல் மாணலாகஅமருவது, மேஜையை ஆட்டியவாறு படிப்பது போன்ற ஆபத்தான விஷயங்களை கவனித்து சரி செய்யுங்கள்.
 
எந்தக் காரணத்துக்காகவும் தேர்வுக்குத் தயாராகும் உங்கள் சுட்டியைத் திட்டி, அவர்களுக்கு மனஅழுத்தத்தைத் தந்துவிடாதீர்கள்.

 
'சைக்கிளை ரிப்பேர் செய்கிறேன்’ என்று ஸ்பேனருடன் கிளம்புவது, பரணில் இருந்து எதையோ எடுக்கிறேன் என்று மேலே ஏறுவது போன்ற விஷயங்களில் உங்கள் சுட்டி ஈடுபடாமல் பார்த்துகொள்வது மிகவும் முக்கியம். ஏனெனில் சிறிய கவனக்குறைவும் காயத்தை ஏற்படுத்தும்.

 
பரீட்சை டென்ஷனில்  இருக்கிற சுட்டிக்கு, எந்த ஒருவிவாதமும் எரிச்சலையே ஏற்படுத்தும். எனவே,விவாதங்களைத் தவிர்க்கவும்.

 
''நீ உன் எல்லா முயற்சியையும்100 சதவீதம் செய்தாலே எங்களுக்குப் போதும். மற்ற விஷயங்கள் தானாக நடக்கும்'' என்று ஊக்கம் கொடுங்கள்.
 
அவர்கள் மனதில் இருக்கும் சின்னக் கவலையையும் அடையாளம் கண்டுதீர்த்துவையுங்கள். ஃப்ரெண்ட்ஸோடு சண்டை, பேனா மிஸ்ஸிங், இப்படி  பல காரணங்கள் இருக்கலாம்.
 

''என் பையன் நல்லாப் படிக்கிறான். இந்தப் பரீட்சையில் நிறைய மார்க் எடுப்பான்'' என ஊக்கப்படுத்தும் வார்த்தைகளை, சுட்டியின் காதுபட பேசுங்கள். அது சுட்டிக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.  
 
பரீட்சை நேரத்தில் நீங்கள் அவர்களுக்குச் செய்யும் சின்னச் சின்ன உதவிகள்கூட அவர்களுக்கு  பெரியதாகத் தெரியும்.

 
சுட்டிக்கு எதிரே எப்போதுமே பெற்றவர்களாகிய நீங்கள் சண்டைப் போடக் கூடாது. அதிலும் பரீட்சை சமயத்தில் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் சண்டையால் சுட்டிக்கு சின்னதாக மன அழுத்தம் ஏற்பட்டாலும், அது தேர்வைப் பாதிக்கும்.
 
சுட்டியின் அறையைச் சுத்தம் செய்கிறேன் என உள்ளே புகுந்து, புத்தகங்கள், குறிப்புகளை எல்லாம் மாற்றிவைத்துவிடாதீர்கள். இந்த களேபரத்தில் முக்கியமான குறிப்புகள் தொலைந்துகூடப் போகலாம். சுட்டியின் படிக்கும் அறை செட்டப் மாறாமல் இருப்பது முக்கியம்.  
 
உங்கள் சுட்டிகளின் பழைய தோல்விகளை நினைவுபடுத்தாதீர்கள்.

 
தேர்வு டென்ஷனில் இருக்கும் சுட்டிக்கு சமயம் கிடைக்கும்போது  எல்லாம் கலகலப்பான சூழலை உருவாக்குவது அவசியம். எனவே, குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள். அப்போது, நகைச்சுவையான விஷயங்களைப் பேசி மகிழுயுங்கள்.  
 
பரீட்சைக்கு செல்லும் சுட்டியின் ஆடைதூய்மையாகவும் நேர்த்தியாகவும் இருப்பது மிக முக்கியம். இதுவே ஒருவிதத் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். ஆகவே, சுட்டியின் ஆடை விஷயத்தில் வழக்கத்தைவிடக் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
 

சுட்டியின் வகுப்புத் தோழனாகமாறி, அவர்களுக்கு சமமாக இருந்துபடிக்க உதவுங்கள்.

 
புதிய வகை வாசனைத் திரவியங்கள், கூலிங் கிளாஸ் என எதையும் பரீட்சை சமயத்தில் வாங்கிக் கொடுக்காதீர்கள்.   ஒவ்வாமை ஏற்படலாம்.
 
சுட்டியின் நண்பர்களை மதிப்பது சுட்டிகளுக்கு சந்தோஷத்தைத் தரும். அதே சமயம், அவர்களின் செயல்களில் கவனம் வைப்பதும் மிக அவசியம்.

 
உங்கள் சுட்டியிடம் பரீட்சையைக் காட்டிப் பயமுறுத்தாமல், தைரியம் வரும் விதமாகப் பேசுங்கள்.

 
கொசு, மூட்டைப்பூச்சி தொந்தரவு இருந்தால், அதற்கு முன்கூட்டியேசரியான வழிமுறைகள் மூலம் தீர்வு செய்யுங்கள். சுட்டி படிக்க வரும் நேரத்தில் மருந்தை அடிக்காமல், முன்னதாகவே அடிப்பது முக்கியம். இல்லை எனில், அவற்றின் வாசம் சுட்டிக்குபாதிப்பை உண்டாக்கலாம்.  
 
இரவில் நீண்ட நேரம் படித்துவிட்டுத் தூங்கப்போகும் சுட்டிக்கு, ஒரு தம்ளர் பால், கூடவே ஒரு பழம் சாப்பிடக் கொடுத்தால், களைப்புத் தீரும்.  நிம்மதியான தூக்கம் வரும்.
 
'இதை முன்பே படித்திருக்கலாமே...’ என்று குற்றம் சொல்லாமல், 'இப்ப இருந்து படித்தாலே போதும், நிறைய மார்க் வாங்கிவிடலாம்’ என்று நம்பிக்கை ஊட்டிப் பேசுங்கள்.
 
'புலிக்குப் பிறந்தது பூனையாகாது’, 'தாய் பத்து அடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்’ என்று எல்லாம் சொல்லி, நீங்கள் எடுத்த மார்க்கைவிட அதிகமாக உங்கள் சுட்டியால் எடுக்க முடியும் என்பதாக சுட்டியை ஊக்கப்படுத்துங்கள்.