Showing posts with label தொடர். Show all posts
Showing posts with label தொடர். Show all posts

Sunday, September 06, 2015

ஜராசந்தன் போல் உங்கள் எதிரி இருந்தால் வீழ்த்துவது எப்படி?

  • ஓவியம்: வெங்கி
    ஓவியம்: வெங்கி
மகத நாட்டின் அரசர் பிரகத்ரதன். அவர் காசி நகர அரசரின் இரட்டைப் புதல்விகளை மணந்தார். அவர்களுக்கு குழந்தை பிறக்க வில்லை. அந்த வேதனையால் அரசர் கவுசிக முனிவரிடம் குழந்தைப் பேறு கிடைக்க வரம் வேண்டினார்.
கவுசிக முனிவர் ஒரு மாங்கனியை அரசரிடம் வழங்கி “நீ இதை உன் மனைவிக்குக் கொடுத்தால் விரைவில் குழந்தைப் பேறு உண்டாகும்” எனக் கூறி வாழ்த்தினார்.
அரசர் தனது இரு மனைவிகளுக்கும் பழத்தைச் சரிசமாகப் பிரித்து சாப்பிடுமாறு கொடுத்தார். முனிவரின் வாக்குப்படியே, மகத நாட்டு அரசரின் இரண்டு மனைவிகளும் கர்ப்பம் அடைந்தனர். இருவரும் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சமயத்தில் மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
பாதிக் குழந்தைகள்
பாதிப் பழத்தைப் பிரித்து உண்டதனால் ஒருவருக்கு குழந்தையின் இடப்பக்கமும், மற்றொருவருக்கு வலப்பக்கமும் பிறந்தது. இரு பாதியாய், உயிரற்ற நிலையில் இருந்த குழந்தையின் உடலைக் கண்டு துடித்த அரசர் உடலை தூக்கி எறியுமாறு ஆணையிட்டார்.
அதைக் கண்ட ஜரா என்ற துர்தேவதை இன்று நல்ல உணவு கிடைத்ததாகக் கருதியது. குழந்தையின் இரு உடல்பாகங்களை இடப்பக்கமும், வலப்பக்கமும் வைத்த தருணத்தில் இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து அழகான ஆண் குழந்தை உருவானது.
இதைக் கண்ட துர்தேவதை ஆச்சரியமடைந்தது. குழந்தையை அரசரிடமே கொண்டுவந்து ஒப்படைத்தது. அவரும் குழந்தைக்கு ‘ஜராசந்தன்’ (ஜரா என்ற துர்தேவதை மூலம் ஒன்று சேர்க்கப்பட்டவன்) எனப் பெயரிட்டார்.
குழந்தை விரைவில் அனைத்துக் கலைகளையும் கற்றறிந்து வாலிபனாகியது. அவன் மாவீரனாய் திகழ்ந்தான்.
ஜராசந்தனை கிழித்த பீமன்
ஜராசந்தனை வென்றால் தான் பாண்டவர்கள் வெற்றியை அடைய முடியும் என்பதால் கிருஷ்ணர், அர்ஜுனனையும் பீமனையும் ஜராசந்தனிடம் போர் புரிய அழைத்து வந்தார். ஜராசந்தன் பீமனுடன் போரிட்டார்.
இந்த மல்யுத்தப் போர் 13 நாள்கள் ஆக்ரோஷமாக நடைபெற்றது. எவருக்கும் வெற்றி, தோல்வியில்லை. 14 ம் நாள் போட்டியில் கிருஷ்ணர் பீமனுக்கு ஓர் இலையை இரண்டாகக் கிழித்து ஒரு ஜாடை காட்டினார்.
அதைப் புரிந்துகொண்ட பீமன், ஜராசந்தனின் கால்களைப் பிடித்து அவரது உடலை இரண்டாகக் கிழித்து இரு பக்கத்திலும் வீசி எறிந்தார். ஆனால், சில வினாடிகளிலேயே வீசி எறியப்பட்ட இரு உடற்பாகங்களும் ஒன்று சேர்ந்து ஜராசந்தன் மீண்டும் உயிர் பெற்றார். முன்பைவிட அதிக பலத்துடன் பீமனைத் தாக்கினார்.
மாத்தி யோசி
பீமன் திகைத்தார். மீண்டும் முன்பு போல் அவரை இரண்டாகக் கிழித்தெறிந்தார். இப்பொழுதும் ஜராசந்தன் மீண்டெழுந்து பீமனைத் தாக்கினார். எத்தனை முறை ஜராசந்தனை இரண்டாகக் கிழித்தெறிந்தாலும் மீண்டும், மீண்டும் அவர் உயிர் பெற்று மீள்வதைக் கண்டு துவண்டு போனார் பீமன்.
இந்த நேரத்தில் பீமனுக்கு கிருஷ்ணர் முன்புபோல ஒரு இலையைப் பாதியாகப் பிரித்து, இலைத்துண்டுகளை இடது, வலதாக மாற்றி வீசி எறிந்து ஜாடை காட்டினார்.
இதை உணர்ந்த பீமன் மிகக் கடுமையான முயற்சிக்குப் பின் ஜராசந்தனின் உடலை முன்பு போல் இரு பாகங்களாகப் பிரித்து, வலப்பாகத்தை இடப்பக்கத்திலும், இடப்பாகத்தை வலப்பக்கத்திலும் மாற்றி வீசி எறிந்தார். பாகங்களை மாற்றி வீசி எறிந்ததால் ஜராசந்தனால் மீண்டும் ஒன்று சேர முடியாமல் போய், அவர் இறந்தார்.
மறுபிறவி எண்கள்
ஜராசந்தன் மறுபிறவி எடுத்ததைப் போல, கணிதத்தில் சில எண்கள் உள்ளன. அவை 2025, 3025, 9801 ஆகும். இந்த எண்களைச் சரிபாதியாகப் பிரித்து அதன் இருபடிகளைக் கண்டறிந்தால் அந்த எண்களே மீண்டும் தோன்றுவதை கவனியுங்கள்.
(20 + 25)2 = 45 2 = 2025
(20 + 25)2 = 2025
(30 + 25)2 = 55 2 = 3025
(30 + 25)2 = 3025
(98 + 01)2 = 99 2 = 9801
(98 + 01)2 = 9801 ஜராசந்தனின் உடலை பீமன் இருபாதியாகப் பிரித்து வீசும்போது, மீண்டும் அந்த உடற்பகுதிகள் ஒன்று சேர்ந்து உயிருடன் மீளும் பண்புடன் இதை ஒப்பிடலாம். பீமன், ஜராசந்தனை இரு பாதியாகப் பிரித்ததால் நாம் மேற்கண்ட சமன்பாடுகளில் இரு படிகளைக் கருதிக்கொண்டோம். மேற்கண்ட எண்களின் இருபடிகள் மீண்டும் ஒன்றுசேர்ந்து அந்த எண்களையே வழங்குவதை பீமன் எவ்வளவு முயன்றும் ஜராசந்தனை வதைக்க முடியாததோடு ஒப்பிடலாம்.
மாற்றிப் போடு!
2025, 3025, 9801 எனும் எண்களை இடப்பக்க இரு இலக்கங்களை வலப்பக்கத்திலும், வலப்பக்க இரு இலக்கங்களை இடப்பக்கத்திலும் மாற்றி அமைத்தால் கிடைப்பது, 2520, 2530, 0198 ஆகும். இந்த எண்களின் இருபடிகளைக் கண்டறிந்தால் கிடைப்பது
(25 + 20)2 = 45 2 = 2025
(25 + 20)2 = 2520
(25 + 30)2 = 55 2 = 3025
(25 + 30)2 = 2530
(01 + 98)2 = 99 2 = 9801
(01+ 98)2 = 0198
ஆகையால், 2520, 2530, 0198 என்ற எண்களின் இருபடிகளைக் கண்டறிந்தால் மீண்டும் அதே எண்கள் தோன்றாமல் வேறு எண்கள் உருவாகின்றன.
இது போலவே ஜராசந்தனின் இரு உடற்பகுதிகளை பீமன் மாற்றி வீசி எறிந்தார். அவற்றால் மீண்டும் ஒன்று சேர முடியவில்லை. ஜராசந்தன் வதைக்கப்பட்டார்.
மகாபாரதத்தில் வரும் இந்தக் கதைக்கும் இந்த எண்களின் தன்மைக்கும் உள்ள ஒற்றுமை மிகவும் சுவாரஸ்யம்.
தொடர்புக்கு: [email protected] shutterstock


நன்றி-த இந்து

Thursday, September 03, 2015

தலைச்சுற்றல் ஏற்படுவது ஏன்? - டாக்டர் கு.கணேசன்

ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி
நடைமுறையில் ஒருவருக்குக் கிறுகிறுப்பு, தலைச்சுற்றல் வந்துவிட்டால், உடனே அது மூளை தொடர்பான நரம்புக் கோளாறு என்றுதான் பலரும் நினைக்கிறார்கள், அப்படியில்லை. பெரும்பாலான நேரங்களில் இந்தப் பிரச்சினைகளுக்குக் காதுதான் முக்கியக் காரணமாக இருக்கும். ஏனென்றால், கேட்பதற்கு மட்டுமல்ல காது! உடலைச் சமநிலைப்படுத்த உதவும் உறுப்புகளில் முக்கியமானதும் காதுதான்!
காது கேட்பது எப்படி?
காதில் வெளிக்காது, நடுக்காது, உள்காது என்று மூன்று பகுதிகள் உள்ளன. வெளிக்காது ஒலி அலைகளை உள்வாங்கிக் காதுக்குள் கொண்டு செல்கிறது. நடுக்காதில் உள்ள செவிப்பறை அந்த ஒலி அலைகளை ஏற்றுக்கொள்ளும்போது அதிர்கிறது. இந்த அதிர்வுகள் செவிப்பறையை ஒட்டியுள்ள சுத்தி, பட்டடை, அங்கவடி எனும் மூன்று எலும்புகள் மூலம் உள்காதுக்குள் நுழைந்து, அங்கு நத்தை வடிவில் உள்ள ‘காக்ளியா'வை (Cochlea) அடைகின்றன.
அங்கு பெரிலிம்ப் (Perilymph), எண்டோலிம்ப் (Endolymph) என்று இரு வகைத் திரவங்கள் உள்ளன. இதில் எண்டோலிம்ப் திரவத்தின் மீது நடுக்காதின் அங்கவடி எலும்பு பிஸ்டன் போல் இயங்குவதால், இங்கேயும் அதிர்வுகள் உண்டாகின்றன. அப்போது இந்தத் திரவங்களில் மிதந்துகொண்டிருக்கும் இழை அணுக்கள் (Hair cells) தூண்டப்படுகின்றன. உடனே, அங்கு மின்னலைகள் உருவாகி, செவி நரம்பு வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. பிறகுதான் நாம் கேட்பது பேச்சா, பாட்டா, இசையா, இரைச்சலா என்று வகை பிரித்துச் சொல்கிறது, மூளை.
சமநிலை காவலன்
உள்காதில், கேட்கும் திறனைத் தருகிற காக்ளியாவோடு உடலைச் சமநிலைப்படுத்துகிற லேப்ரிந்த் (Labyrinth) என்னும் பகுதியும் உள்ளது. லேப்ரிந்தின் ஒரு பக்கத்தில் காக்ளியாவும், இன்னொரு பக்கத்தில் அரைவட்டக் குழல்களும் (Semicircular canals) இருக்கின்றன. லேப்ரிந்த் என்பது எலும்பு லேப்ரிந்த், படல லேப்ரிந்த் என்று இரண்டுவிதமாக இருக்கிறது.
மேலும் கீழும் உள்ள எலும்பு லேப்ரிந்தில் பெரிலிம்ப் திரவமும், நடுவில் உள்ள படல லேப்ரிந்தில் எண்டோலிம்ப் திரவமும் உள்ளன. நாம் நடக்கும்போது, எழுந்திருக்கும்போது, ஓடும்போது, தலையைத் திருப்பும்போது படல லேப்ரிந்தில் உள்ள எண்டோலிம்ப் திரவம் அசைகிறது. இந்த அசைவின் வேகம், விகிதம், திசை, பரப்பு ஆகியவற்றைக் கொண்டு அரைவட்டக்குழல்களில் வெவ்வேறு குறியீடுகள் உண்டாகும்.
இவற்றை இழை அணுக்கள் கிரகித்துச் செவிநரம்பின் வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லும். இந்தத் தகவல்களைக் கொண்டு நாம் நிற்கிறோமா, நடக்கிறோமா, தலையைத் திருப்புகிறோமா என்று நம் மூளை தெரிந்துகொள்ளும். அதற்கேற்ப மூளை செயல்பட்டு உடல் தசைகளுக்கு ஆணை பிறப்பித்து, உடலைச் சமநிலைப்படுத்துகிறது. இந்தச் சங்கிலிவினைச் செயல்பாட்டில் ஏதாவது குறை ஏற்படுமானால், காதிலிருந்து தவறான தகவல்கள் மூளைக்குச் செல்லும். அப்போது மூளை குழம்பிவிடும். இதனால்தான் தலைச்சுற்றல் ஏற்படுகிறது.
தலைச்சுற்றல் என்பது என்ன?
கிறுகிறுப்பு (Dizziness) என்பது மிதமான தலைச்சுற்றல். கிறுகிறுப்புக்கு அடுத்த நிலைதான் உண்மையான தலைச்சுற்றல். காதுப் பிரச்சினை காரணமாக உடல் சமநிலையை இழக்கும்போது, நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் தலை தனியாகச் சுற்றுவதுபோல் தோன்றும். அல்லது சுற்றியுள்ள பொருட்கள் சுற்றுவதுபோல் தோன்றும். இந்த வகைத் தலைச்சுற்றலை ஆங்கில மருத்துவத்தில் ‘வெர்டைகோ’ (Vertigo) என்கிறார்கள்.
இது முப்பது வயதுக்கு மேல் எவருக்கும் வரலாம் என்றாலும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் நூறு பேரில் பத்து பேருக்குக் கட்டாயம் உள்ளது. ஆண்களைவிட பெண்களுக்குத்தான் தலைச்சுற்றல் தொல்லை அதிகம். என்றாலும், இந்த மாதிரித் தலைச்சுற்றல் காரணமாக உயிருக்கு ஆபத்து ஒன்றும் ஏற்பட்டுவிடாது என்பது ஓர் ஆறுதல்.
மூன்று வகை
மிதமான வகை: இந்த வகை தலைச்சுற்றல் உள்ளவர்களுக்குக் குமட்டலும் தலைச்சுற்றலும் சிறிது நேரம் இருக்கும். படுத்துக்கொண்டு சில மணி நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டால், இந்த அறிகுறிகள் தானாகவே மறைந்துவிடும்.
மத்திய வகை: இவர்களுக்குத் தலைச்சுற்றலோடு வாந்தியும் இருக்கும். படுத்து ஓய்வு எடுத்துக்கொண்டால் இவை சரியாகிவிடும்.
தீவிர வகை: இந்த வகைதான் மோசமானது. தலைச்சுற்றலும் அதிகமாக இருக்கும், வாந்தியும் மோசமாக இருக்கும். தலையை அசைத்தாலே இந்த இரண்டும் அதிகப்படும். நடந்தால் மயங்கிவிடுவோமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும்.
மினியர் நோய்
உள்காதில் எண்டோலிம்ப் திரவம் அளவுக்கு அதிகமாகச் சேருவதால் காதுக்குள் அழுத்தம் அதிகரித்துத் தலைசுற்றல் வருவது ஒரு வகை. இது தூங்கும்போதுகூட வரும். இந்த வகை தலைசுற்றல் உடனே குறையாது; இரண்டு நாட்களுக்கு மேல்கூட நீடிக்கும். குமட்டலும் வாந்தியும் அதிகமாக இருக்கும். எப்போதும் படுக்கையிலேயே இருக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு இருக்கும். காதில் இரைச்சல் கேட்கும். காது மந்தமாகக் கேட்கும். இதற்கு ‘மினியர் நோய்’ (Meniere’s disease) என்று பெயர்.
ஒரு திசை தலைச்சுற்றல்
சிலருக்கு ஏதாவது ஒரு பக்கமாகக் கழுத்தைத் திருப்பும்போது, மேல்நோக்கிப் பார்க்கும்போது, குனியும்போது, நிமிரும்போது தலை சுற்றும். இதற்கு ‘ஒரு திசை தலைச்சுற்றல்’ ( Benign Paroxysmal Positional Vertigo) என்று பெயர். இதன் அறிகுறிகள் மினியர் நோய்க்கு எதிராக இருக்கும். குறிப்பாக, இந்த வகைத் தலைச்சுற்றலின்போது காதில் இரைச்சல் இருக்காது. காது கேட்பதில் பிரச்சினை இருக்காது. தலைசுற்றலுக்காகச் சிகிச்சை பெற வருகிறவர்களில், பெரும்போலோருக்கு இந்த வகை தலைசுற்றல்தான் முக்கியக் காரணமாக இருக்கும்.
உட்செவி நரம்புப் பிரச்சினை
ஜலதோஷம் பிடிக்கும்போது உட்செவி நரம்பில் வைரஸ் கிருமிகள் பாதிக்குமானால், நரம்பு வீங்கித் தலைச்சுற்றலை ஏற்படுத்தும். லேப்ரிந்த் பகுதியில் வீக்கம் ஏற்பட்டாலும், உட்செவியில் கட்டிகள் தோன்றினாலும் தலைச்சுற்றல் உண்டாகும். நடுக்காதில் சீழ் வைக்கும்போது, வெளிக்காதில் அழுக்கு சேர்ந்து அடைக்கும்போது எனப் பலவிதக் காதுப் பிரச்சினைகளால் தலைச்சுற்றல் ஏற்படலாம்.
இதர காரணங்கள்
பொதுவாகக் காதுப் பிரச்சினை காரணமாக 80 சதவீதம் பேருக்குத் தலைச்சுற்றல் ஏற்படுகிறது என்றால், மீதி 20 சதவீதம் பேருக்கு மற்றக் காரணங்களால் தலைச்சுற்றல் ஏற்படுகிறது. ஒற்றைத் தலைவலி, உயர் ரத்தஅழுத்தம், குறை ரத்தஅழுத்தம், மிகை ரத்தக்கொழுப்பு, ரத்தச் சோகை, ஊட்டச்சத்துக் குறைவு, கட்டுப்படாத நீரிழிவு நோய், தாழ் சர்க்கரை, கழுத்து எலும்பில் பிரச்சினை, தைராய்டு பிரச்சினை, கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டம், இதயத்துடிப்புக் கோளாறுகள், மருந்துகளின் பக்கவிளைவு, பார்வைக் கோளாறு, மன அழுத்தம், உறக்கமின்மை, மலத்தில் ரத்தம் போவது, தலைக்காயங்கள் என்று பல காரணங்களால் தலைச்சுற்றல் ஏற்படுவதுண்டு.
பரிசோதனைகள் என்ன?
ஒருவருக்கு முதல்முறையாகத் தலைச்சுற்றல் ஏற்படும்போது முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அப்போதுதான் காரணம் தெரிந்து சிகிச்சை செய்துகொள்ளமுடியும். மேலும் தலைச்சுற்றல் என்பது பலருக்கும் மீண்டும் மீண்டும் வருகிற தொல்லை என்பதால், ஒருமுறை காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டால், அடுத்தமுறை இது தொல்லை தரும்போது பயப்படாமல் இருக்கலாம்.
பொதுவாக, தலைச்சுற்றல் ஏற்பட்ட நபருக்கு உட்கார்ந்த நிலையிலும் படுத்த நிலையிலும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படும். முழு ரத்தப் பரிசோதனை உதவக்கூடும். ஆடியோகிராம், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட காதுக்கான அனைத்துப் பரிசோதனைகளும் தேவைப்படும். சில வேளைகளில் கழுத்தெலும்பு எக்ஸ்ரே, கண் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை மற்றும் இதயத்துக்கான பரிசோதனைகளும் தேவைப்படும்.
சிகிச்சை என்ன?
தலைச்சுற்றலுக்குப் பலதரப்பட்ட காரணங்கள் உள்ளதால், முதலில் அடிப்படைக் காரணத்துக்குச் சிகிச்சை பெற வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். காது தொடர்பான தலைச்சுற்றல் பிரச்சினையைப் போக்க, இப்போது நல்ல மருந்துகள் உள்ளன. இவை காதின் சமநிலை உறுப்புக்கு ஓய்வு கொடுப்பதால், தலைச்சுற்றல் சரியாகிறது. சில மருந்துகள் உட்செவிக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். இதனாலும் தலைச்சுற்றல் கட்டுப்படும்.
மினியர் நோய்க்குக் காதின் செவிப்பறையில் ஸ்டீராய்டு ஊசி மருந்து அல்லது ஜென்டாமைசின் ஊசி மருந்தைச் செலுத்திக் குணப்படுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. இப்போது இதைக் குணப்படுத்துவதற்கு நல்ல மாத்திரைகள் வந்துள்ளன. இதில் குணமடையாதவர்களுக்கு அறுவைச் சிகிச்சை உதவுகிறது.
பயிற்சிகள் உதவும்
இங்கு ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘ஒரு திசை தலைச்சுற்றல்’ உள்ளவர்களுக்கு மாத்திரை மருந்துகளால் மட்டுமே தலைச்சுற்றலைத் தடுக்க முடியாது. குறிப்பிட்ட உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டியதும் முக்கியம்.
படுத்திருக்கும்போது கண்களைச் சுழற்றுதல், உட்கார்ந்துகொண்டு கழுத்துத் தசைகளுக்கும் தோள்பட்டைத் தசைகளுக்கும் பயிற்சி அளித்தல், தலையை முன்னும் பின்னும் வளைத்தல், பக்கவாட்டில் வளைத்தல், நடந்துகொண்டே பந்தைப் பிடித்தல் போன்ற பல பயிற்சிகள் இவ்வகை தலைச்சுற்றலைத் தடுக்க உதவுகின்றன. இவற்றைக் காது மூக்கு - தொண்டை மருத்துவர் மற்றும் இயன்முறை மருத்துவர் ஆலோசனையுடன் முறையாகவும் சரியாகவும் செய்துவந்தால், தலைச்சுற்றல் விடைபெற்றுக்கொள்வது உறுதி.
தடுப்பது எப்படி?
l உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
l அதிகக் கொழுப்புள்ள உணவைத் தவிர்க்க வேண்டும்.
l சரியான அளவுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியம்.
l ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு மற்றும் ரத்தச் சர்க்கரை அளவுகளை நல்ல கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள்.
l புகைபிடிக்காதீர்கள்.
l மது அருந்தாதீர்கள்.
l போதை மாத்திரைகளைச் சாப்பிடாதீர்கள்.
l தலை சுற்றுவதுபோல் உணர்ந்தால், உடனே தரையில் படுத்துக்கொள்ளுங்கள். கால்களைச் சற்று உயரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
l படுக்கமுடியாத நிலைமைகளில் தரையில் உட்கார்ந்துகொண்டு, உடலை முன்பக்கமாகச் சாய்த்து, முழங்கால்களை மடக்கி, கால்களுக்கு இடையில் தலையை வைத்துக்கொள்ளுங்கள்.
l படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது நேராக எழுந்திருக்காமல், பக்கவாட்டில் முதலில் படுத்துக்கொண்டு அந்தப் பக்கமாகவே எழுந்திருங்கள்.
l எழுந்தவுடனேயே நடந்து செல்ல வேண்டாம்.
l படுக்கையில் சிறிது நேரம் உட்கார்ந்த பிறகு நடந்தால், தலைசுற்றல் ஏற்படாது.
l படுக்கையிலிருந்து எழுந்ததும் எதையாவது எடுப்பதற்குக் கீழ்நோக்கிக் குனியவோ, சட்டென்று திரும்பவோ முயற்சிக்காதீர்கள்.
l தலைக்குத் தலையணை வைக்காதீர்கள்.
l உடலின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு உடனடியாக மாறாதீர்கள். உதாரணத்துக்கு, புரண்டு படுக்கும்போது திடீரெனப் புரளாதீர்கள்.
l அடிக்கடி தலைச்சுற்றல் பிரச்சினை உள்ளவர்கள், வீட்டுக் கழிப்பறை, குளியலறை போன்ற இடங்களில் பிடிமானக் கம்பிகளைச் சுவற்றில் பதித்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் தலைச்சுற்றல் வரும்போது இந்தக் கம்பிகளைப் பிடித்துக்கொள்வதன் மூலம் கீழே விழுவதைத் தடுக்கமுடியும்.
l வீட்டிலும், குளியலறை மற்றும் கழிப்பறைகளிலும் வழுக்காத தரைவிரிப்புகளையே பயன்படுத்துங்கள்.
l இரவு விளக்குகளைப் பயன்படுத்துங்கள்.
l அடிக்கடி மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
l ரோலர் கோஸ்டர் போன்ற ராட்டினங்களில் சுற்றுவதைத் தவிருங்கள்.
l மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து சாப்பிடாதீர்கள். அப்படிச் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டுச் சாப்பிடுங்கள்.
l மன அழுத்தத்தைத் தவிருங்கள்.
l வாகனத்தை ஓட்டாதீர்கள். ஆபத்தான இயந்திரங்களை இயக்காதீர்கள்.
l ஆண்டுக்கு ஒருமுறை காதுப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: [email protected]

சொர்க்கத்தின் சாவி! - கி.ராஜநாராயணன்

எனக்கு நெருக்கமாக ஒரு நண்பர் ஒருவர் இருந்தார். அவரை அவருடைய அத்தைதான் அன் போடு எடுத்து வளர்ந்து வந்தாள். அத்தைக்கு வயதாகி தலை சாய்ந்த வுடன், வீட்டு முன்வாசல் திண்ணைக் கட்டிலில் படுத்த படுக்கையாகிவிட்டாள். தளர்ந்த வயோதிகத்தைத் தவிர அத்தையை வேறு எந்த சீக்கும் அண்டவே இல்லை. சீக்குதான் இல்லை என்றாலும்கூட எப்பப் பார்த் தாலும் பொழுது முச்சூடும் அனத்திக் கொண்டே இருப்பாள். இந்த அமைதியின்மைக்கு என்ன காரணம் என்று நண்பர் யோசித்துக்கொண்டே இருந்தாராம்.
ஒருநாள் பக்கத்துத் தெருவில் ஒரு கல்யாணம். கதவைப் பூட்டிக்கொண்டு எல்லோரும் அங்கே புறப்படும்போது, பூட்டிய தலைவாசக் கதவின் பெரிய இரும்புச் சாவியை அத்தையிடம் கொடுத்தார்களாம். அப்படி ஒரு மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டாளாம்.
அத்தையின் நிம்மதியின்மைக்கான முழுக் காரணம் உடனே புரிந்துவிட்டதாம் நண்பருக்கு. அதன் பிறகு இதே வழியைப் பின்பற்றினோம் என்றார். அத்தையின் சாவு நெருங்க நெருங்க, ஒரு வேற்றுச் சாவியை அத்தையின் கையில் நிரந்தரமாக கொடுத்து வைத்துவிட்டார்களாம்.
ஒருநாள் அத்தை இறந்துவிட்டார். முறையான இறுதிச் சடங்குகள் செய்வதற்காக உறவுமுறைகள் எல்லாரும் கூடி, அவரது உடம்பைக் குளிப்பாட்ட முனைந்தபோது… விரல் கள் அழுத்தமாக மூடியிருந்த அத்தை யின் ஒரு கையில் இருந்து அந்த சாவியை எடுக்க ரொம்பவும் சிரமப்பட வேண்டியிருந்திருந்ததாம். அப்போ ஒரு வேடிக்கை ஆசாமி இப்படி சொன்னாராம்: ‘‘மேலே சொர்க்கவாசல் பூட்டியிருந்தாக்கூட, தள்ளு தள்ளு… நானே சாவி கொண்டாந்துட்டேன்னு சொல்லி, திறந்திருப்பார் உங்க அத்தை.’’
‘‘ஞாயப்படி பார்த்தா அந்தச் சாவியையும் அத்தையோட பிரேதத் துடன் கூடவே வெச்சுத்தான் அவங்களை மேலே ’அனுப்பி’ இருக்கணும். எப்படி சும்மா வெறுங்கையோட அவங்களை மேலே அனுப்பி வைக்க முடிஞ்சுதோ…’’ என்று சொன்னார் ஒரு பெண்மணி. அதையும் இங்கே நினைச்சுப் பார்க்க வேண்டியிருக்கு!
ஒரு மாதாந்த வெள்ளிக்கிழமையன்று உத்தியம்மா வீட்டை ஒதுங்க வைத்து, சாணிப் பால் கரைசலால் மெழுக ஆயத்தம் செய்தாள்.
வீட்டினுள் அடைசலாக இருந்த சாமான் சட்டுகளையெல்லாம் ஓர ஒதுங்க வைக்கிறபோது உத்தியம்மாவின் கண்கள் தேடுவது அத்தையம்மாவின் சிறுவாட்டு வெள்ளிப் பணம், பாக்கி தங்க நகைககளை எல்லாம் அத்தையம்மா எந்த இடத்தில் புதைத்து வைத்துவிட்டுப் போயிருப்பார் என்பதைத்தான்.
அந்தக் காலத்தில் ஒளித்து வைக்க வேற வழியே கிடையாது. ஒழுக்கரைப் பெட்டிகள் புழக்கத்துக்கு பட்டிதொட்டிகளுக்கு வராத காலம் அது. ரூபாய் நோட்டுகளேகூட அவ்வளவாக சகஜமாகப் புழக்கத்துக்கு வரவில்லை.
அந்த வீட்டின் மண் தரையில் எல்லா இடத்தையும் நினைச்ச சமயத்தில் அடிக்கடி தோண்டியோ, நோண்டியோ பார்க்க முடியாது. குறிப்பிட்ட, சந்தேகம் வரும் இடங்களை மட்டும்தான் நோண்டிப் பார்க்க முடியும். அப்படிப் பார்த்த ஓர் இடத்தில் மண் சும்மாடு ஒன்று தலை காட்டியது. ‘‘வாங்க அத்தையம்மா’’ என்று மகிழ்ச்சியோடு சொல்லிக்கொண்டு, வெளிவாசக் கதவுகளெல்லாம் சரியாகப் பூட்டி யிருக்கா என்று பார்த்துவிட்டு, ஒரு பிள்ளைக் கடப்பாரையும், கொத்து வேலைக்குப் பயன்படும் தேய்ந்துபோன ஒரு கரணையையும் எடுத்துக்கொண்டு வந்தாள். இன்னும் கொஞ்சம் தோண்டிய உடனே ஒரு தோண்டி தெரிந்தது.
வேகமாகப் போய் ஒரு கோழியைப் பிடித்துக்கொண்டு வந்து, அதன் ஒரு காலின் விரல்நுனியை அறுத்து ரத்தப் பலி காட்டிவிட்டு, மேற்கொண்டு தோண் டினாள். முயற்சி வீண் போகவில்லை.
வெள்ளி நாணயங்கள், தங்க நாணயங்கள், பழங்காலத்து தங்க ஆபரணங்கள் இன்னும் ஏதேதோ உள்ளே இருந்துகொண்டு சிரித்தன.
‘கையும் ஓடலை காலும் ஓடலை’ என்று சொல்வார்களே அந்த நிலைதான் உத்தியம்மாவுக்கு. மனசு கிடந்து திக்குமுக்காடியது. அதுமட்டுமா…
ஓவென்று கூப்பாடு போட்டு சங்… சங்… என்று கும்மாளமும் போட்டது மனசு.
‘கொடுக்கிற தெய்வம் கூரை யைப் பிய்த்துக்கொண்டுதான் கொட் டும்’ என்பார்கள். இதுவோ, தரையைப் பிய்த்துக்கொண்டல்லவா மேலெழுந்து துருத்திக்கொண்டு வந் திருக்கிறது. இதுவொரு வகை விபத்துப்போலத்தான்.
கரிசல்ச் சீமையில் ‘தன்னூத்து’ என்று சொல்வார்கள். அவனுக்கு எதுவும் பூமியின் கீழ் இருந்தே வர வேண்டும். குளமோ, குளத்துக்குள் கிணறோ தோண்டும்போது எதிர்பாராத கணத்தில் காத்துக்கொண்டே இருந்ததுபோல் பூமியின் அடியில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கும்.
அந்த நீர் ஒருவருக்கானது அல்ல; ஊருக்கே ஆனது. அப்படி பீய்ச்சியடிக்கும் தண்ணீரைக் கண்டு விட்டால் ஆனந்தக் கூத்திடுவார்கள் மக்கள். ஊரே அதில் நனையும்.
தூங்கா நாயக்கரின் குடும்பம் அதில் இருந்து நிலம் நீச்சு என்று நிமிர்ந்து எழுந்து நின்றது.
எந்திரங்கள் இல்லாத தனிமனித உழைப்பை மட்டுமே கொண்டு வாழ்ந்த காலம் அது. எந்திரம் என்றால் அது சுற்ற வேண்டும்.
அப்போது திரிகை ஒன்றுதான் இருந்தது. அதுவும் கல்லால் ஆனது. அதன் கைப்பிடியும் உள் அச்சு மட்டுமே மரத்தில் ஆனவை.
உலக்கைகளுக்கான பூண்கள் பின்னால் வந்தவை. உரல்களும் மரத்தில் இருந்து பிறகு கல் பிறப் பெடுத்தவையாகும். இரும்புச் சுத்திய லுக்கு முந்தி இருந்தது கொட்டாப்புளி கட்டை.
வெகுநாள்ப்பட்ட வைரம் பாய்ந்த புளிய மரத்தில் இருந்து வந்ததினால் அது கொட்டாப்புளி எனப்பட்டது.
மரச்செக்குகள் கல் செக்குகளாயின. பருத்தியில் இருந்து கொட்டையையும் பஞ்சையும் பிரிக்கும் எந்திரம் முழுவதும் மரத்தினால் ஆனதே.
உலோகத்தினால் முதல் சக்கரம் செய்து எதிரிகளை வதைத்த முதலவன் அசோதை வளர்த்தெடுத்த கண்ணபிரானே. அந்த மாயம் அவனோடு போய்விட்டது.
ஓவியங்கள்: மனோகர்
- இன்னும் வருவாங்க…


நன்றி-த இந்து

Tuesday, August 11, 2015

மினரல் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள்

ஒரே ஒரு நாள் வெளியில் தண்ணீர் குடித்துவிட்டாலும்கூட, உடனே சிலருக்குச் சளி பிடித்து மூக்கு ஒழுக ஆரம்பித்துவிடும், தொண்டை கட்டிக்கொள்ளும், காய்ச்சலும்கூட எட்டிப்பார்க்கலாம். டாக்டரிடம் போனால், அவர் முதலில் கேட்கும் கேள்வி, “வெளியே தண்ணீர் குடித்தீர்களா?” என்பதுதான்.
பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை பாட்டில் குடிநீரை வாங்கிக் குடிப்பதைப் பரவலாகப் பார்க்க முடிந்ததில்லை. போகுமிடத்தில் கிடைத்த தண்ணீரைத்தான் எல்லோரும் குடித்துக்கொண்டிருந்தோம். எல்லா நேரமும் பெரிய நோய்கள் தொற்றிக்கொண்டிருக்கவில்லை. ஆனால், இன்றைய நிலைமை தலைகீழாக இருக்கிறது. என்ன நோய் தொற்றிவிடுமோ என்ற அச்சத்தில், பலரும் லிட்டருக்கு 15 ரூபாய் கொடுத்து பாட்டில் குடிநீரை நம்பிக் குடிக்கிறோம்.
என்ன இருக்கிறது?
கல்யாணம்-காதுகுத்து-பிறந்தநாள்-புதுமனை புகுதல் என்று எந்த வீட்டு நிகழ்ச்சி, திருவிழா என பார்க்கும் இடமெல்லாம் பாட்டில் குடிநீரே தரப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகத் தர வசதியாகக் குட்டிக் குட்டி பாட்டில்களில் தண்ணீர் அடைத்து விற்கப்படுகிறது. ஒவ்வொரு கொண்டாட்டம் முடிந்த பிறகும் தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் குப்பையின் அளவு பிரம்மாண்டமாக இருக்கிறது. மற்றொரு புறம் இவ்வளவு செலவு செய்து குடிக்கும் தண்ணீர் பாதுகாப்பானதாக இருக்கிறதா?
இல்லை என்கிறது ‘அறிவியல், சுற்றுச்சூழல் மையம்’ (சி.எஸ்.இ.) 2003-ல் நடத்திய பரிசோதனை முடிவு. இந்தப் பரிசோதனைக்காக மும்பை, டெல்லியில் சேகரிக்கப்பட்ட பாட்டில் குடிநீர் மாதிரிகளில் நாம் எதிர்பார்ப்பதை விடவும், மிகவும் ஆபத்தானதாக இருந்திருக்கின்றன. பாதுகாப்பான குடிநீருக்காகத் தரநிர்ணயம் செய்யப்பட்ட அளவை விடவும், அதிகப் பூச்சிக்கொல்லி எச்சங்கள் இவற்றில் நிறைந்திருந்தன. குறைந்தபட்சம் ஐந்து பூச்சிக்கொல்லிகள் இருந்திருக்கின்றன.
எப்படி வந்தது?
இந்த வேதியியல் பகுப்பாய்வு பரிசோதனையை டெல்லியைச் சேர்ந்த சி.எஸ்.இ. மாசுபாடு கண்காணிப்பு ஆய்வகம் மேற்கொண்டது. அதில், அதிகம் விற்பனையாகும் பிரபல வணிக நிறுவனங்களின் பாட்டில் குடிநீரில் வயல்வெளியில் தெளிக்கப்படும் லிண்டேன், மாலத்தியான், குளோர்பைரிஃபாஸ், டி.டி.டி. ஆகிய பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இன்றைக்குப் பெரும்பாலான குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் புறநகர் பகுதிகளிலும், கிராமங்களிலும் வயல்வெளிகளுக்கு அருகேதான் தங்களுடைய சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்துள்ளன. அங்கு ஆழ்குழாய் கிணறு மூலம் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டுச் சுத்திகரிக்கப்படுகிறது. இங்குதான் தொடங்குகிறது பிரச்சினை. எடுக்கப்படுவது நிலத்தடி நீர்தான் என்றாலும், பசுமைப் புரட்சி காலத்திலிருந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாகக் கட்டுப்பாடு இல்லாமல் ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டுவருவதே, நிலத்தடி நீர் மாசுபாட்டுக்குக் காரணம் என்கிறது சி.எஸ்.இ நிறுவனம். சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இதையே வலியுறுத்துகிறார்கள்.
பூச்சிக்கொல்லி நீங்கவில்லை
மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் நிலத்தடி நீரை உறிஞ்சி, தூய்மைப்படுத்தி, பாட்டிலில் அடைத்துப் பல மடங்கு விலையேற்றி பாட்டில் குடிநீர் உற்பத்தியாளர்கள் விற்கிறார்கள். நிலத்தடி நீர் கடுமையாக மாசுபட்டிருப்பது ஒருபுறம், மற்றொருபுறம் சுத்திகரிப்பு நடவடிக்கையில் பூச்சிக்கொல்லி எச்சம் முழுமையாக நீக்கப்படுவதும் இல்லை.
இன்றைக்குக் குக்கிராமத்தில் உள்ள சிறிய கடைகளிலும்கூட பாட்டில் குடிநீர் கிடைக்கிறது. வீடுகளுக்கான குடிநீர் தேவைக்குத் தனித்தனி பாட்டில்களாக வாங்காவிட்டாலும், சென்னை போன்ற நகரங்களில் பப்பிள் டாப் பிளாஸ்டிக் கலன்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்தான் வாங்கப்படுகிறது. இதற்கும் மேற்கண்ட சுத்திகரிப்பு முறையே பின்பற்றப்படுவதால், அவற்றிலும் பூச்சிக்கொல்லி எச்சம் இருக்கலாம்.
படியும் நஞ்சு
இருந்தபோதும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைக் குறைவாகத்தானே குடிக்கிறோம் என்று சிலர் நினைக்கலாம். நம்மில் பெரும்பாலானோர் அதை அனுதினமும் குடித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தப் பூச்சிக்கொல்லி எச்சங்களால் யாரும் உடனடியாக இறந்துபோய்விட மாட்டார்கள் என்பது உண்மைதான். அதேநேரம் நம் உடலில் உள்ள கொழுப்பின் மீது இந்த எச்சங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் படிவதால், சீரமைக்க முடியாத உடல்நலக் கோளாறுகள் எதிர்காலத்தில் ஏற்படலாம்.
பயமுறுத்தும் பாதிப்புகள்
பாட்டில் குடிநீரில் இருக்கும் நஞ்சு நீண்ட காலமாக உடலில் சேர்வதால் புற்றுநோய், கல்லீரல், சிறுநீரகங்களைச் சிதைக்கக்கூடியதாகவும், நரம்புமண்டலக் கோளாறுகளை உருவாக்கக்கூடியதாகவும், நோயெதிர்ப்புசக்தி குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் பிறக்கும் குழந்தைகளுக்குப் பிறவிக் குறைபாடுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
நகரங்களில் வாழும் பெரும்பாலான கர்ப்பிணிகள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைத்தான் குடிக்கிறார்கள். அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை என்னவென்று சொல்வது?
குளோர்பைரிஃபாஸ் என்ற வேதிப்பொருள் மிக மிக ஆபத்தானது. குழந்தையின் நரம்பு மண்டல வளர்ச்சியைக் கருவிலேயே பாதிக்கக்கூடியது. ஐரோப்பாவில் பூச்சிக்கொல்லி எச்சம் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவைவிட, சி.எஸ்.இ. பாட்டில் குடிநீர் பரிசோதனை மாதிரிகளில் குளோர்பைரிஃபாஸ் அளவு 400 மடங்கு அதிகமாக இருந்துள்ளது. பாட்டில் குடிநீர் மாதிரிகளில் மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வுகள் இன்னும் அதிர்ச்சியளிப்பவை. அதைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.
பாட்டில் குடிநீரில் பாக்டீரியா
சென்னையில் விற்பனை செய்யப்படும் பல்வேறு நிறுவனங்களின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் தீமை பயக்கும் பாக்டீரியா இருப்பது சென்னை மாநகராட்சி மேற்கொண்ட பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. சென்னையில் 450-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்துவருகின்றன.
இந்த நிறுவனங்களிடமிருந்து 2007-2012-ம் ஆண்டுவரையிலான காலத்தில் பரிசோதிக்கப்பட்டதில், 70 நிறுவனங்களின் பாட்டில் குடிநீர் குடிப்பதற்கு உகந்தது இல்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில் சில நிறுவனங்கள் தரமில்லாத குடிநீரை விநியோகித்ததற்காக மீண்டும் மீண்டும் பிடிபட்டிருக்கின்றன. சுத்திகரிக்கப்படாத தண்ணீர் கேனில் அடைத்து விற்கப்படுவது இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தக் குடிநீர் மாதிரிகளில் கோலிஃபார்ம், இ. கோலி போன்ற ஆபத்தான பாக்டீரியா இருந்ததே இதற்குக் காரணம். சில மாதிரிகளில் 100 மில்லியில் இ. கோலி 1,200-ம், 100 மில்லியில் கோலிஃபார்ம் 200-ம் இருந்தன. இ. கோலி பாக்டீரியாவால் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். சிறுநீரகச் செயலிழப்பை ஏற்படுத்தும் ஒரு வகை ஆபத்தான குறைபாடு (hemolytic uremic) உருவாகவும் வாய்ப்பு உண்டு.

நன்றி - த இந்து

ரத்தச் சர்க்கரை குறைவது ஏன்? - மருத்துவக்கட்டுரை

ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி
‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ என்று சொல்வதற்குப் பதிலாக இனி, ‘வீட்டுக்கு வீடு ஒரு நீரிழிவு நோயாளி’ என்று சொல்லும் அளவுக்கு உலகில் நீரிழிவு உள்ளவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் ஏழு கோடிப் பேருக்கு நீரிழிவு உள்ளது. தமிழ்நாட்டில் 90 லட்சம் பேர் இந்த நோயால் அவதிப்படுகிறார்கள்.
இது குழந்தைகள் முதல் முதியோர்வரை எல்லா வயதினரையும் பாதிக்கிற நோயாகவும் உள்ளது. இந்த நோய்க்குச் சிகிச்சை எடுத்துவருபவர்கள், அவ்வப்போது சந்திக்கிற பிரச்சினைகளில் முக்கியமானது, தாழ்சர்க்கரை மயக்கம் (Hypoglycaemic Coma). இன்சுலினை மட்டுமே நம்பியுள்ள டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குச் சராசரியாக ஆண்டுக்கு ஒருமுறையாவது தாழ்சர்க்கரை ஏற்பட்டுவிடுகிறது.
என்ன காரணம்?
ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு, ரத்தச் சர்க்கரை சாதாரணமாக 120 முதல் 140 மி.கி./ டெ.லி. (ஒரு டெசிலிட்டரில் உள்ள மில்லி கிராம் அளவு) வரை இருக்கும். இவர்களுக்கு இயல்பாகச் சுரக்கிற இன்சுலின், இந்த அளவைச் சரியாக வைத்துக்கொள்கிறது. அப்படியே இன்சுலின் குறைவாக இருந்தாலும், ரத்தத்தில் குளுக்ககான் (glucagon) ஹார்மோன் சுரந்து, ரத்தச் சர்க்கரையை அதிகப்படுத்தி, நிலைமையைச் சரிசெய்துவிடும்.
ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நிலைமை வேறு. இவர்கள் உணவுக் கட்டுப்பாடு, மாத்திரை, இன்சுலின் ஊசி ஆகியவற்றால்தான் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு ரத்தச் சர்க்கரையைச் சரியான கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சிக்கும்போது, இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றில் தவறு ஏற்பட்டாலும், ரத்தச் சர்க்கரை ரொம்பவே குறைந்துவிடும் அல்லது அதிகமாகிவிடும். அப்போது மயக்கம் வரும். இந்த இருவகை மயக்கங்களில் தாழ்சர்க்கரை மயக்கம் மோசமானது. உயிருக்கு ஆபத்தை உடனே வரவழைப்பது.
எது தாழ்சர்க்கரை?
ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 70 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும் நிலைமையை ‘தாழ்சர்க்கரை’ (Hypoglycaemia) என்கிறோம். ஒருவருக்கு இந்த அளவு 50 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது அவருக்கு மயக்கம் வருகிறது. இதை ‘தாழ்சர்க்கரை மயக்கம்' என்கிறோம். என்றாலும், சொல்லிவைத்ததுபோல் எல்லோருக்கும் இந்த அளவு பொருந்தாது. ஒருவருக்கு ரத்தச் சர்க்கரை 70 மி.கி./டெ.லி. இருந்தாலே மயக்கம் வரலாம். சிலருக்கு 50 மி.கி./டெ.லி. இருக்கும்போதும் மயக்கம் வராமல், எப்போதும்போல் இருக்கலாம். இது அவரவர் உடல் இயல்பைப் பொறுத்தது.
எப்படி வருகிறது?
சாதாரணமாக, நமது மூளை செயல்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 5 - 6 கிராம் குளுக்கோஸ் தேவை. தொடர்ந்து மூன்று நிமிடங்களுக்கு குளுக்கோஸ் மூளைக்குச் செல்லவில்லை என்றால், மூளை செயலிழந்துவிடும். வழக்கமாக, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 100 மி.கி./டெ.லி.க்குக் குறையாமல் இருந்தால், மூளைக்குத் தேவையான குளுக்கோஸ் சரியான அளவில் கிடைத்துக்கொண்டிருக்கும்.
ஆனால், ரத்தத்தில் இந்த அளவு 50 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது மூளைக்குக் குளுக்கோஸ் கிடைப்பது குறைந்துவிடும். இதன் விளைவாக, மூளை செல்கள், மூளை நரம்புகள் குறிப்பாக, தானியங்கி நரம்புகள் - வேலை செய்யாமல் போகும். மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது, அதை சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிற குளுக்ககான் ஹார்மோன் அப்போது செயல்படுவதில்லை. இதனால், உடலானது ரத்தச் சர்க்கரையைத் தானாக அதிகப்படுத்திக்கொள்ள வழி இல்லை. ஆகவேதான், இந்த மயக்கம் ஏற்படுகிறது.
அறிகுறிகள் என்ன?
ஆரம்ப அறிகுறிகள
ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 60 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது இந்த அறிகுறிகள் தென்படலாம். இவற்றை முன்னெச்சரிக்கை அறிகுறிகள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
உடல் அதிகமாக வியர்ப்பது.
உடல் குளிர்ச்சியாக இருப்பது.
உடல் தளர்ச்சி.
படபடப்பு.
உடல் நடுக்கம்.
அதிகப் பசி.
தலைவலி.
தலைசுற்றல்.
பார்வை குறைவது.
இதயத் துடிப்பு அதிகரிப்பது.
அடுத்த கட்ட அறிகுறிகள்
ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 40 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது ஏற்படும் அறிகுறிகள்.
l பேச்சு குழறுதல்.
l மனக் குழப்பம்.
l அரை மயக்கம் (Semiconsciousness).
இறுதி கட்ட அறிகுறிகள்
l வலிப்பு வருவது.
l முழு மயக்கம் (Unconsciousness).
l 'கோமா' (Coma) எனும் ஆழ்நிலை மயக்கம்.
முழு மயக்கம் ஏற்பட்டால்?
முழு மயக்கத்தில் உள்ளவருக்கு மேற்சொன்ன முதலுதவிகளைச் செய்ய முடியாது. அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து, குளுக்கோஸ் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால் குளுக்ககான் ஊசி போடப்பட வேண்டும்.
டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி தாழ்சர்க்கரை மயக்கம் வரலாம். இவர்கள் வீட்டிலேயே குளுக்ககான் ஊசியைப் போட்டுக்கொள்ளலாம். டாக்டர் ஆலோசனைப்படி அளவு அறிந்து, இன்சுலின் சிரிஞ்சிலேயே இந்த மருந்தை எடுத்து, வீட்டில் யார் வேண்டுமானாலும் அவருக்குப் போட்டுவிடலாம்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள்!
வாகனம் ஓட்டுபவர்கள், இயந்திரங்களில் வேலை செய்பவர்கள், உயரமான இடங்களில் வேலை செய்பவர்கள், தண்ணீருக்கு அருகில் வேலை செய்பவர்கள் போன்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களுக்குத் தாழ் சர்க்கரை ஏற்பட்டால், விபத்து ஏற்படவும், உயிருக்கு ஆபத்து உண்டாகவும் வாய்ப்பு அதிகம்.
குழந்தைக்கு ரத்தச் சர்க்கரை குறைந்தால்?
டைப் 1 நீரிழிவு நோய் குழந்தைகளுக்குத்தான் அதிகம். இவர்களுக்குத் தாழ்சர்க்கரை மயக்கம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். குழந்தைக்கு ரத்தச் சர்க்கரை குறைய ஆரம்பித்துவிட்டால், குழந்தையின் நடத்தையில் மாறுதல்கள் தெரியும். அதிகம் பசிக்கும், வியர்க்கும், படபடப்பு வரும், நாக்கு உலரும், உடல் நடுங்கும், பார்வை குறையும். குறிப்பாக, குழந்தையின் பேச்சு குழறும்; குழப்பமான மனநிலையில் இருக்கும். இன்னும் சொல்லப்போனால், குடிபோதையில் நடப்பது போன்ற நிலையில் இருக்கும்; மயக்கம் வரும்; சில வேளைகளில் வலிப்பு வரலாம்.
பொதுவாக, மயக்க நிலையில் உள்ளவர்களுக்கு வாய்வழியாக எதுவும் கொடுக்கக் கூடாது; அப்படிக் கொடுத்தால், புரையேறி சுவாசத்தை நிறுத்திவிடும் என்றுதான் சொல்வோம். ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை குறைவதன் காரணமாக மயக்கம் ஏற்படும்போது, அவர்களுக்கு எவ்வளவு விரைவில் இனிப்புப் பொருள் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு மயக்கம் விரைவில் தெளியும், ஆபத்து குறையும்.
எனவே, நீரிழிவு நோய் உள்ள குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டால்,உடனே மாவு போலிருக்கும் குளுக்கோஸ் பவுடர், இனிப்பு மாவு போன்றவற்றில் ஒன்றைப் பிசைந்து, நாக்கிலும் பல் ஈறுகளிலும் தடவி, முன்பக்கத் தொண்டையைத் தடவிவிட வேண்டும். இப்படிச் செய்யும்போது, குழந்தை மயக்கத்தில் இருந்தாலும், அந்த இனிப்புப் பொருளை விழுங்கிவிடும். இதனால் மயக்கம் தெளிந்துவிடும். இந்த முதலுதவி தரப்பட வேண்டிய அவசியத்தைப் பள்ளியிலும் சொல்லிவைப்பது நல்லது.
தடுப்பது எப்படி?
l நீரிழிவு உள்ளவர்கள் சரியான நேரத்தில் தேவையான அளவு உணவைச் சாப்பிட வேண்டும்.
l இடைவேளை உணவைத் தவிர்க்கக் கூடாது.
l டாக்டர் சொல்லாமல் மாத்திரை அல்லது இன்சுலின் அளவை மாற்றக்கூடாது.
l இன்சுலினுக்கு ஏற்ற சிரிஞ்சைப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, 40 யூனிட் இன்சுலினுக்கு 100 யூனிட் சிரிஞ்சைப் பயன்படுத்தினால், இன்சுலின் அளவு அதிகரித்துவிடும். இது தாழ்சர்க்கரை மயக்கத்தை வரவேற்கும். இதைத் தவிர்க்கவே இந்த எச்சரிக்கை.
l இன்சுலின் ஊசியைப் போட்டுக்கொண்ட உடனே அல்லது நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளைச் சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யக் கூடாது.
l அடிக்கடி இப்படி மயக்கம் வருபவர்கள், வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்யக் கூடாது. சர்க்கரை இல்லாத பால் அருந்திவிட்டு நடைப்பயிற்சி செய்யலாம்.
தாழ்சர்க்கரை ஏன் ஏற்படுகிறது?
l தேவைக்குச் சாப்பிடாமல், குறைந்த அளவில் உணவைச் சாப்பிடுவது.
l இடைவேளை உணவைச் சாப்பிடாமல் இருப்பது.
l தாமதமாகச் சாப்பிடுவது.
l விரதம் இருப்பது.
l நீரிழிவு நோய் மாத்திரைகள் அல்லது இன்சுலின் அளவை அதிகமாக எடுத்துக்கொள்வது.
l அதிக நேரம் உடற்பயிற்சி / நடைப்பயிற்சி செய்வது.
l கடுமையாக உடற்பயிற்சி செய்வது.
l வெறும் வயிற்றில் மது அருந்துவது.
யாருக்கு வருகிறது?
கீழ்க்காணும் நபர்களுக்குத் தாழ்சர்க்கரை ஏற்பட வாய்ப்பு அதிகம்.
l இன்சுலின் ஊசி போட்டுக்கொள்பவர்களுக்கு.
l டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு.
l சல்ஃபொனைல் யூரியா மாத்திரைகள் சாப்பிடுவோருக்கு.
l முதியோருக்கு (வயது 70-க்கு மேல்)
l மது அருந்தும் நீரிழிவு நோயாளிகளுக்கு.
l கல்லீரல் நோய், சிறுநீரக நோய், பிரிட்டில் டயபடிஸ் உள்ளவர்களுக்கு.
இவர்கள் என்ன செய்ய வேண்டும்?
கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:
l ‘தான் ஒரு நீரிழிவு நோயாளி’ எனும் அடையாள அட்டையை எப்போதும் சட்டைப் பையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
l தினமும் சாப்பிடும் மாத்திரை விவரங்கள், அதில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
l இன்சுலின் எடுத்துக்கொள்வதாக இருந்தால் அதன் அளவு, நேரம் போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
l 25 கிராம் குளுக்கோஸ் மாவு, சாக்லேட், மிட்டாய் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
l குளுக்ககான் ஊசியைக் கைவசம் வைத்துக்கொள்வதும் நல்லதுதான்.
l தாழ்சர்க்கரையின் அறிகுறிகள் தெரிந்த உடனேயே இனிப்புப் பொருளைச் சாப்பிட்டுவிட வேண்டும்.
l வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள், அலுவலக நண்பர்கள் போன்றோரிடம் தனக்குத் தாழ்சர்க்கரை வந்தால், எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பதைக் கற்றுத் தந்துவிட வேண்டும்.
l குளுக்கோமீட்டரைக் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.
l தனியாக உறங்குவதைத் தவிர்ப்பது நல்லது.
l படுக்கை அறையைத் தாழ்ப்பாள் போட்டு உறங்குவதைத் தவிர்ப்பதும் நல்லது.
என்ன முதலுதவி?
தாழ்சர்க்கரையின் ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தவுடன் வீட்டில் அல்லது அலுவலகத்தில் செய்ய வேண்டிய முதலுதவி:
l குளுக்கோமீட்டர் இருந்தால் உங்கள் ரத்தச் சர்க்கரையைப் பரிசோதித்து ‘தாழ் சர்க்கரை’ உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள். அப்படி உறுதியானால், உடனடியாக 20 - 25 கிராம் குளுக்கோஸ் மாவைச் சாப்பிடுங்கள்.
l குளுக்கோஸ் மாவு இல்லாதபோது சாக்லேட், மிட்டாய், ஜீனி, தேன், பழச்சாறு, ஜாம் போன்றவற்றில் ஒன்றைச் சாப்பிடுங்கள்.
l மாத்திரை வடிவில் இருக்கும் குளுக்கோஸ் மாத்திரைகளையும் சாப்பிடலாம்.
l கிடைக்கிற ஏதாவது ஒரு இனிப்புப் பானத்தை அவசரத்துக்குப் பருகலாம்.
l இந்த ஆரம்ப அறிகுறிகள் 10 - 12 நிமிடங்களுக்குள் மறைந்துவிடும். என்றாலும், பிரச்சினை சரியாகிவிட்டது என்று வீட்டில் இருந்து விடக்கூடாது. மேல் சிகிச்சைக்கு டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.
l முக்கியமாக, மாத்திரைகளை மாற்ற வேண்டுமா, உணவு முறையைச் சரி செய்ய வேண்டுமா அல்லது இன்சுலின் அளவை குறைக்க வேண்டுமா என்பது போன்ற விவரங்களைத் தெரிந்துகொண்டு சிகிச்சையைத் தொடர வேண்டும்.
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: [email protected]

நன்றி - த இந்து

Tuesday, August 04, 2015

அடிக்கடி களைப்பு ஏற்படுவது ஏன்? மருத்துவக்கட்டுரை

ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி
நம்மில் பலருக்கும் சில வேளைகளில் களைப்பு (Fatigue) ஏற்படுவதுண்டு. கடுமையான உழைப்புக்குப் பிறகு உடலில் களைப்பு ஏற்படுவது இயற்கை. மாலையில் அல்லது இரவில் போதுமான அளவுக்கு ஓய்வு எடுத்துக்கொண்டால், காலையில் ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை மேற்கொண்டால் களைப்பு மறைந்து, உடல் புத்துணர்ச்சியைப் பெற்றுவிடும். மறுநாள் உழைப்புக்கு உடல் தயாராகிவிடும்.
ஆனால், சிலருக்கு எந்த நேரமும் களைப்பாக இருக்கலாம்; அன்றாட வேலைகளைச் செய்ய முடியாத அளவுக்கு உடல் பாதிக்கப்படலாம்; உடல் தளர்ந்து, உள்ளம் உற்சாகம் இழந்துபோகலாம். அப்படியானால், அது சாதாரணக் களைப்பு அல்ல! உடலில் அல்லது உள்ளத்தில் உள்ள பிரச்சினையின் வெளிப்பாடு; அறிகுறி!
களைப்பைப் பற்றி சொல்லும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்வார்கள். ஒரு வேலையைச் செய்வதற்குச் சோம்பேறித்தனமாக இருக்கிறது; உற்சாகம் இல்லாமல் இருக்கிறது; உடல் சக்தியை இழந்த மாதிரி இருக்கிறது; உடலில் சக்தியே இல்லாததுபோல் இருக்கிறது; ஆர்வமில்லாமல் இருக்கிறது; அசதியாக இருக்கிறது; கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறது. இப்படியாகத்தான் களைப்பை வெளிப்படுத்துவார்கள்.
காரணம் என்ன?
களைப்புக்கு உடல் சார்ந்த காரணங்களும் உண்டு; உள்ளம் சார்ந்த காரணங்களும் உண்டு. ஒரு சிலருக்கு இந்த இரண்டு விதக் காரணங்களும் சேர்ந்தே இருக்கவும் வாய்ப்புள்ளது. இன்னும் சில பேருக்கு, முதலில் உடல் சார்ந்த காரணங்களால் களைப்பு ஏற்படும். அதற்குத் தீர்வு கிடைக்கத் தாமதமாகும்போது உள்ளம் சார்ந்த காரணங்களும் சேர்ந்துகொள்ளும்.
களைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு உடல் சார்ந்த களைப்பு என்றால், பகலில் தெரிகிற களைப்பைவிட மாலையில் களைப்பு சற்று அதிகமாகவே தெரியும். உள்ளம் சார்ந்த களைப்பு, நாள் முழுவதும் தொல்லை தரும். இது ஒரு பொதுவான மருத்துவக் கருத்து. என்றாலும், அவரவர் காரணத்தைப் பொறுத்துக் களைப்பின் தன்மை, அளவு, நேரம், தீவிரம் அமையும்.
முறையற்ற உணவுப் பழக்கம்
கொழுப்பும் எண்ணெயும் மிகுந்த பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், துரித உணவு வகைகள் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது களைப்பை வரவேற்கும். காரணம், இந்த உணவு வகைகளில் வைட்டமின்களும் தாதுச் சத்துகளும் குறைவு. இது ஊட்டச்சத்துக் குறைவுக்கு வழிவகுக்கும். மேலும், கொழுப்பு மிகுந்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட்டால், உடல் மந்தமாகவே இருக்கும்; தூக்கக் கலக்கமாகவே இருக்கும்.
ரொட்டி, கேக் போன்ற பேக்கரி உணவு வகைகளில் ‘குளூட்டன்’ எனும் புரதம் உள்ளது. இது ஒவ்வாமையாக மாறினால் ‘சிலியா’ நோயை (Coeliac disease) ஏற்படுத்தும். அப்போது களைப்பு பிரதானத் தொல்லையாக இருக்கும். நேரம் தவறிச் சாப்பிடும் உணவுப் பழக்கம் நீடிக்கும்போது செரிமானம் குறையும். அப்போது உணவுச் சத்துகள் உடலில் சேராது. இதுவும் களைப்புக்குப் பாதை அமைக்கும்.
ஊட்டச்சத்துக் குறைவு
உடல் உற்சாகமாக உழைப்பதற்குக் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் என எல்லாச் சத்துகளும் தேவையான அளவில் தரும் சமச்சீரான உணவைச் சாப்பிட வேண்டியது அவசியம். ஆனால் வறுமை, விரதம், உடல் எடையைக் குறைப்பதில் / ஒல்லியாவதில் விருப்பம் போன்ற காரணங்களுக்காகப் பலரும் உணவு சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்வார்கள். இதனால் உடலுக்குத் தேவைப்படுகிற ஊட்டச்சத்துகள் கிடைப்பதில்லை. இது களைப்புக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும். குறிப்பாக இரும்புச் சத்து, வைட்டமின் பி12, வைட்டமின்- டி, ஃபோலிக் அமிலம் போன்றவை குறைய ஆரம்பித்ததும் களைப்பு தலைகாட்டும்.
ரத்தசோகை
ஊட்டச்சத்து குறைவால் ஏற்படுகிற நோய்களில் மிக முக்கியமானது ரத்தசோகை. ஆண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 13.5 கிராமுக்குக் கீழும், பெண்களுக்கு 12 கிராமுக்குக் கீழும் குறைந்துவிட்டால், அந்த நிலைமையை ‘ரத்தசோகை’ என்கிறோம். இன்றைய தினம் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், பெரியவர்கள் என்று வயது வேறுபாடின்றிப் பாதிக்கிற நோய் இது. அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு ஊட்டச்சத்துக் குறைவு மட்டுமன்றி, முறையற்ற மாதவிலக்கு காரணமாக வும் ரத்தசோகை ஏற்படுகிறது. ரத்த சோகையின் ஆரம்ப அறிகுறி களைப்பு.
தொற்றுநோய்கள்
எந்த ஒரு தொற்றுநோயும் களைப்பை ஏற்படுத்தும். தடுமம், ஃபுளூ காய்ச்சல் போன்ற சாதாரணத் தொற்றுகளில் தொடங்கி மலேரியா, டைபாய்டு, கல்லீரல் அழற்சி, மஞ்சள் காமாலை, காச நோய் என்று பல விபரீத நோய்கள்வரை களைப்பை ஏற்படுத்து வதில் முன்னிலை வகிக்கும். ஆனால், இவை எல்லாமே தற்காலிகமாகவே களைப்பை ஏற்படுத்தும். நோய் குண மானதும் களைப்பும் மறைந்துவிடும்.
தூக்கமின்மை
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பலருக்கும் தூங்கும் நேரம் குறைந்துவிட்டது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாளொன்றுக்கு 8 மணி நேரத் தூக்கம் அவசியம். ஆனால், இன்றைய குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி சராசரியாக 5 மணி நேரமே தூங்குகிறார்கள் என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு. இரவில் போதுமான தூக்கம் இல்லாத நிலையில் பகலில் களைப்பு ஏற்படுவது இயல்பு. குறட்டை விடுதல், தூக்கத் தடை (Obstructive Sleep Apnea), அதீதத் தூக்கம், தூக்கக் குறைவு நோய், வேலை நேர மாறுதல்கள், இரவில் நெஞ்செரிச்சல், புராஸ்டேட் வீக்கம் போன்ற தொல்லைகளைக் கொண்டவர்களுக்கு, இதுபோலத் தூக்கம் குறைந்து களைப்பு உண்டாகிற வாய்ப்பு அதிகம்.
மருந்துகளின் பக்கவிளைவு
தடுமத்துக்குத் தரப்படும் மருந்துகள், அரிப்பு மருந்துகள், தூக்க மருந்துகள், மன அழுத்த மாத்திரைகள், மன அமைதியூட்டிகள், போதை மாத்திரைகள், ரத்த அழுத்த மாத்திரைகள், ஸ்டீராய்டுகள் போன்ற பலதரப்பட்ட மாத்திரை மருந்துகளின் பக்கவிளைவாகவும் களைப்பு ஏற்படும்.
நீரிழந்த உடல்
ரத்தத்தில் சோடியம், பொட்டாசியம் மற்றும் பிற தாதுகளின் அளவு எப்போதும் சரியாக இருக்க வேண்டும். போதுமான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது, வெயில், அதிக வியர்வை, வயிற்றுப்போக்கு, கடுமையான வாந்தி, நீரிழிவு, சிறுநீரக நோய் போன்ற பல காரணங்களால் உடலில் நீரிழப்பு ஏற்படும். அப்போது களைப்புதான் மற்ற அறிகுறிகளைவிட முன்னிலை வகிக்கும்.
உளவியல் காரணங்கள்
தனிமை, தோல்வி, இழப்பு, பொருளாதார நெருக்கடி, வேலைப் பளு போன்ற காரணங்களால் ஏற்படுகிற மனச்சோர்வு, மன அழுத்தம், மனப் பதற்றம், கோபம், பொறுமையின்மை, பரபரப்பான வாழ்க்கைமுறை ஆகியவற்றாலும் களைப்பு ஏற்படுகிறது.
மற்ற காரணங்கள்
தைராய்டு சுரப்புக் குறைவு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய், நுரையீரல் நோய், புற்று நோய், மூட்டழற்சி நோய், நார்த்திசு அழற்சி வலி (Fibromyalgia) போன்ற பல நோய்களிலும் களைப்பு தலைதூக்குவதுண்டு. புற்று நோய்க்கு மருந்து சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை தரப்படும்போது களைப்பு ஏற்படுவதுண்டு. முதுமை, கர்ப்பக் காலம், சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை, மாசுபட்ட சுற்றுச்சூழல், மது அருந்துவது, புகைபிடிப்பது, பசிக் குறைவு, அதீதப் பசி போன்றவையும் களைப்பை வரவேற்பவையே.
நாட்பட்ட களைப்பு
ஒருவருக்குக் களைப்பு ஆறு மாதங்களுக்கு மேல் நீடித்தால், அதை ‘நாட்பட்ட களைப்பு’ (Chronic fatigue syndrome). என்கிறோம். இவர்களுக்குக் களைப்பு கடுமையாக இருக்கும். தசைவலி, மூட்டுவலி, தலைவலி, நிணநீர்ச் சுரப்பிகளில் வலி, தொண்டை வலி, கவனக்குறைவு போன்ற பல அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளும். இதற்கான காரணம் மருத்துவர்களுக்கே இன்னும் தெளிவாகப் புரியவில்லை. எனவே, அடிப்படை நோய்க்குச் சிகிச்சை அளிக்கமுடியவில்லை; நோயாளி கூறும் அறிகுறிகளைப் போக்குவதற்கு மட்டும் சிகிச்சை அளிக்கிறார்கள்.
பரிசோதனை என்ன?
களைப்பு என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல என்பதால், இதற்கென்று தனிப்பட்ட பரிசோதனை எதுவும் இல்லை. களைப்புடன் சேர்ந்து காணப்படும் மற்ற அறிகுறிகளை வைத்து, அடிப்படை நோய் எது எனத் தீர்மானிக்கப்படும். அதற்கேற்பப் பரிசோதனைகள் பரிந்துரை செய்யப்படும். பொதுவாக, ரத்தஅணுப் பரிசோதனைகள், ரத்தச் சர்க்கரைப் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை, சிறுநீரக நோய் மற்றும் கல்லீரல் நோய்க்கான பரிசோதனைகள், ரத்த அயனிகள் பரிசோதனை, மார்பு எக்ஸ்-ரே, எக்கோ உள்ளிட்ட ‘முழு உடல் பரிசோதனைகள்’ மூலம் களைப்புக்குக் காரணம் தெரிந்துகொள்வது வழக்கம்.
மேலும், இவர்களுக்கு உளவியல் சார்ந்த பரிசோதனைகளும் உளவிய லாளரின் ஆலோசனைகளும் தேவைப் படும். என்றாலும், நடைமுறையில் மூன்றில் ஒருவருக்குக் களைப்புக்கான காரணம் தெரிவதில்லை.
தடுப்பது எப்படி?
களைப்புக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெறுவதுதான் சரி. அப்போதுதான் களைப்பு மறுபடியும் தொல்லை தராது.
அலுவலகத்திலும் வீட்டிலும் நீங்கள் அதிக நேரம் இருக்கிற இடத்தில் நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும். மாசில்லாத காற்றைச் சுவாசிக்க வேண்டும்.
தினமும் குறைந்தது ஆறு மணி நேரம் எவ்வித இடையூறும் இல்லாமல் தூங்க வேண்டும். முடியாதவர்கள் வார இறுதி நாட்களிலாவது ஓய்வு எடுக்க வேண்டும்.
உடல் பருமனாக இருந்தால் உடல் எடையைக் குறைக்க வேண்டும்.
சமச்சீரான இந்தியப் பாரம்பரிய உணவு வகைகளைச் சாப்பிடுங்கள்.
மேற்கத்திய உணவு வகைகளையும் அதிக எண்ணெய் உள்ள, கொழுப்புள்ள உணவு வகைகளையும் குறைத்துக்கொள்ளுங்கள்.
காய்கறி, பழங்களைத் தேவையான அளவுக்குச் சாப்பிடுங்கள்.
தினமும் காலையில் நடைப் பயிற்சி அல்லது உடற்பயிற்சி ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும். முடிந்தால் மாலையில் யோகாசனம் செய்யலாம்.
இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு, சிறிது நேரம் தியானம் செய்யலாம்.
வேலைகளை முறைப்படுத்திச் செய்யுங்கள். முக்கிய வேலைகளுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுத்துச் செய்வதும், நன்கு திட்டமிட்டு, நேர மேலாண்மையைப் பின்பற்றி, நிதானமாகச் செய்யவேண்டியதும் முக்கியம். காரணம், தினமும் அவசர அவசரமாகவும் பரபரப்பாகவும் வேலை செய்வதை வழக்கப்படுத்திக்கொண்டால், உடல் விரைவிலேயே களைப்பு அடைந்துவிடும்.
தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
குளிரூட்டப்பட்ட அறைகளில் பணிபுரிபவர் களுக்கு நீரிழப்பு ஏற்படுவது கோடைக் காலத்தில் வெளியில் தெரியாது. ஆனால், களைப்பு தெரியும். அவர்களும் தேவைக்கு ஏற்பத் தண்ணீர் அருந்தினால்தான் களைப்பு நீங்கும்.
உங்களுக்கு நீரிழிவு நோய் இல்லை என்றால், இயற்கைப் பழச்சாறுகளை அருந்துங்கள். செயற்கைப் பழச்சாறுகள் வேண்டாம்.
காபி, தேநீர், கோலா மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவால் களைப்பு ஏற்படுகிறதா என்பதை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் சாப்பிடாதீர்கள்.
புகை பிடிப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.
மது அருந்த வேண்டாம்.
மன அழுத்தத்துக்கு இடம் தராதீர்கள். மனக் கவலை இருக்கும்போது உங்கள் நம்பிக்கைக்கு உரியவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் ஆசைகளுக்கு ஓர் எல்லை வகுத்துக்கொள்ளுங்கள். கோபத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். பிறருடன் வாதிடுவது, சண்டை போடுவது போன்றவற்றைத் தவிருங்கள். பாதுகாப் பான முறையில் உங்கள் உரிமைகளைப் பெறுவதற்குப் பழகிக்கொள்ளுங்கள். இம்மாதிரி பழக்கங்கள் மூலம் மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம்; களைப்பையும் தடுக்கலாம்.
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: [email protected]

நன்றி - த இந்து

Monday, July 20, 2015

கண்களைப்பாதுகாப்பது எப்படி? - மருத்துவக்கட்டுரை

ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி
பார்வை இழப்புக்குக் கண் புரை நோய், விழித்திரை நோய் எனப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ‘கிளாக்கோமா’ (Glaucoma) என்று அழைக்கப்படும் கண் நீர் அழுத்த நோய் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. கண் புரையைத் தெரிந்துவைத்திருக்கிற அளவுக்குக் கண் நீர்அழுத்த நோயைப் பற்றி, பலருக்கும் பெரிதாகத் தெரிவதில்லை. இந்த நோயின் ஆரம்பத்தில் கண்ணில் வலி இருக்காது என்பதால், பெரும்பாலானோர் இதை ஆரம்ப நிலையில் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். பார்வை பறிபோனபின்தான் சிகிச்சைக்கு வருகின்றனர்.
கண் நீர்அழுத்த நோய் என்பது எது?
கண்ணுக்குள் லென்ஸின் முன்புறத்தில், கருவிழியும் (Iris) கார்னியாவும் (Cornea) இணைகிற இடத்தில் சிலியரி இழைகள் இருக்கின்றன. இவற்றில் ஒரு திரவம் சுரக்கிறது. இதற்கு ‘முன்கண் திரவம்' (Aqueous Humor) என்று பெயர். கண்ணின் வெளிப்பக்கத்தில் வட்ட வடிவில் இருக்கிற கார்னியா மற்றும் லென்ஸ் உள்ளிட்ட கண்ணின் பல்வேறு பகுதிகளுக்குத் தேவையான உணவுச் சத்துகளை விநியோகிக்கவும், கண்ணுக்குள் உண்டாகின்ற கழிவுகளை அகற்றவும் இது தேவைப்படுகிறது.
இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லிவிட வேண்டும். அதாவது, முன்கண் திரவமும் கண்ணீரும் ஒன்றல்ல. கண்ணின் வெளிப்பக்கமாகக் கண்ணீர் சுரக்கிறது என்றால், இது கண்ணின் உட்பக்கமாகச் சுரக்கிறது. இது விழிவெண்படலமும் (Conjunctiva) கார்னியாவும் இணையும் இடத்தில் உள்ள சல்லடை போன்ற வடிகால்களின் மூலம் வெளியேறுகிறது. இந்தப் பாதையில் அடைப்பு ஏற்பட்டு, இதன் வடிதலில் தடை உண்டானாலோ, அதிகத் திரவம் சுரந்தாலோ, திரவத்தின் அளவு அதிகமாகி, கண் நீர் அழுத்த நோயை ஏற்படுத்துகிறது.
ரத்தக் குழாய்களில் பயணிக்கும் ரத்தத்துக்கு ஒருவித அழுத்தம் உள்ளதைப் போல, கண்ணில் பயணிக்கும் இந்தத் திரவத்துக்கும் அழுத்தம் இருக்கிறது. அதுதான் கண்ணின் அழுத்தத்தை நிர்ணயிக்கிறது. இந்தத் திரவம் சுரக்கிற அளவும் வெளியேறுகிற அளவும் சமமாக இருந்தால், கண் நீர் அழுத்தம் சரியான அளவில் இருக்கும். நமக்குச் சரியான கண் நீர்அழுத்தம் 10 முதல் 20 மி.மீ. பாதரச அளவாகும். விழிக்கோளத்தின் கனஅளவுகள் மாறாமல் இருப்பதற்கு, இந்த அழுத்தம் தேவைப்படுகிறது.
அதே வேளையில் இந்த அழுத்தம் அதிகமானால், அது கண் முழுவதும் பரவும்; குறிப்பாக, விழித்திரைக்குப் பின்புறம் இருக்கிற பார்வை நரம்பைப் பாதிக்கும். பார்வை பற்றிய தகவல் மூளைக்குச் செல்லாது; அதனால் பார்வை பறிபோகும். இதுதான் இந்த நோயின் அபாயகரமான தாக்குதல்.
வகைகள்
நோயின் தன்மைகளை வைத்தும் அது உண்டாகிற காரணத்தை வைத்தும் இதை விரிகோணக் கண் நீர்அழுத்தம் (Open angle glaucoma), குறுங்கோணக் கண் நீர்அழுத்தம் (Closed angle glaucoma), பிறவி கண் நீர்அழுத்தம் (Congenital glaucoma) என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
அறிகுறிகள்
இந்த மூன்றில் முதல் வகைதான் முக்கியமானது. இந்த நோயின் தொடக்கத்தில் எந்தவொரு அறிகுறியும் வெளியில் தெரியாது. திடீரெனக் கண்பார்வை குறைவது, இதன் முதல் அறிகுறி. இந்த நிலைமையில் டாக்டரிடம் வரும்போது, நோயாளிக்குப் பார்வை நரம்பில் 30 முதல் 50 சதவீதம்வரை பாதிப்பு ஏற்பட்டுவிடும். இந்தப் பாதிப்பைச் சரிசெய்ய முடியாது.
இதைத் தொடர்ந்து, இன்னும் சில அறிகுறிகள் ஏற்படும். எரியும் மின்விளக்கைப் பார்க்கும்போது, அதைச் சுற்றி வட்டவட்டமாக வண்ண வளையங்கள் அல்லது புள்ளிகள் தெரியும். இவர்கள் அடிக்கடிக் கண்ணாடியின் 'பவரை' மாற்றுவார்கள். தியேட்டர்களில் சினிமா பார்த்துவிட்டு இருட்டிலிருந்து வெளியே வரும்போது கண்களைச் சுற்றிக் கனமாகத் தெரியும்.
இரவில் பார்வை மங்கலாக இருக்கும். இருட்டுக்குக் கண்கள் பழகத் தாமதமாகும். பகலில் ஒரு பொருளைப் பார்த்தால், அந்தப் பொருளின் நடுப்பகுதி நன்றாகத் தெரியும். ஆனால், பக்கப்பார்வை இருக்காது. நடுப்பார்வை நன்றாகத் தெரிவதால், தங்களுக்கு உள்ள நோயை முன்கூட்டியே உணர்ந்துகொள்ள இவர்கள் தவறிவிடுகின்றனர். ஆனால், நாளாக ஆக நடுப்பகுதிப் பார்வையும் குறைந்துவிடும். கண்ணைச் சுற்றி ஒரு மந்தமான வலி, எப்போதும் இருக்கும்.
இரண்டாம் வகை கண் நீர்அழுத்த நோய் உள்ளவர்களுக்குத் திடீரென்று கடுமையான கண்வலியும் தலைவலியும் ஒரே நேரத்தில் உண்டாகும். வாந்தி வரும். கண்கள் சிவந்துபோகும். கண்களில் நீர் வழியும். பார்வை மங்கும். கண்கள் கூசும். விளக்கைச் சுற்றி வளையங்கள் தெரியும்.
மூன்றாவது வகை பிறவியிலேயே குழந்தைகளுக்கு ஏற்படுவது. இதுதான் கொடூரமானது. குழந்தையின் கண் மாட்டுக்கண் போல, பெரிதாக இருக்கும். கண்களில் நீர் வடிந்துகொண்டே இருக்கும். வெளிச்சத்தைப் பார்க்க முடியாத அளவுக்குக் கண்கள் கூசும். பார்வை குறைந்திருக்கும்.
யாருக்கு வரும்?
இந்த நோய் எந்த வயதிலும் வரலாம். பிறவியிலேயேகூட வரலாம். பொதுவாக, நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகம். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் இருப்பர்களுக்கும், அடிக்கடி ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்துவோருக்கும் இது சீக்கிரத்திலேயே வந்துவிடுகிறது. குடும்பத்தில் யாருக்கேனும் இந்த நோய் பரம்பரை ரீதியாக வந்திருக்குமானால், அவர்களுடைய வாரிசுகளுக்கும் இது வரலாம். அதிக மைனஸ் பவர் கண்ணாடி போட்டுக்கொள்கிறவர்களுக்கு, இது வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். கண்ணில் அடிபட்டு, முன் கண் திரவம் போகும் பாதையில் அடைப்பு ஏற்பட்டாலும் இது வரலாம்.
என்ன பரிசோதனை?
‘விழி அழுத்தமானி' (Tonometer) எனும் கருவி மூலம் கண்ணின் அழுத்தத்தைத் தெரிந்துகொள்ளலாம். ‘விழி அகநோக்கி' (Ophthalmoscope) பயன்படுத்திப் பார்வை நரம்புக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்த்துவிடலாம். ‘விழிக்கோணமானி' (Gonioscope) உதவியுடன் முன்கண் திரவம் வெளியேறுவதில் எங்குத் தடை ஏற்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். பார்வை பரப்பளவை அளக்க உதவும் கணினி இணைக்கப்பட்ட ‘பெரிமீட்டர்’ (Perimeter) கருவிப் பரிசோதனையால் பக்கப் பார்வை எவ்வளவு குறைந்துள்ளது என்பதை அளந்துகொள்ள முடியும்.
என்ன சிகிச்சை?
இந்த நோய்க்கு மருந்து சிகிச்சை, லேசர் சிகிச்சை, அறுவை சிகிச்சை என மூன்றுவித சிகிச்சைகள் இருக்கின்றன. நோய் ஆரம்ப நிலையில் இருந்தால் மருந்து சிகிச்சை பலன் தரும். ஆனால், ஆயுள் முழுவதும் இவர்கள் கண் சொட்டு மருந்துகளைப் போட வேண்டியிருக்கும். மாத்திரைகளையும் சாப்பிட வேண்டும். டாக்டர் யோசனைப்படி தொடர்ந்து முறையான கால இடைவெளிகளில் கண் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
சிலருக்கு மருந்து சிகிச்சை யோடு லேசர் சிகிச்சையும் தரப்படும். கருவிழியில் மிகச் சிறிய துளை போட்டு முன்கண் திரவத்தை வெளியேற்றிக் கண்ணின் அழுத்தத்தைக் குறைப்பது லேசர் சிகிச்சையின் (Laser iridotomy) முக்கிய நோக்கம். இந்த நோய்க்குத் தற்போதுள்ள நவீன சிகிச்சை இதுதான்.
கண் நீர்அழுத்த நோயை இந்த இரண்டு சிகிச்சைகளாலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், கண்ணில் திரவ அடைப்பைத் திறக்க ‘டிரபிகுலெக்டமி’ (Trabeculectomy) எனும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இந்தச் சிகிச்சையின்போது முன்கண் திரவம் வெளியேறுகிற பாதை மாற்றி அமைக்கப்படுகிறது. இதன்மூலம் கண் நீர்அழுத்தம் ஒரு குறிப்பிட்ட அளவில் நிலைநிறுத்தப்படுகிறது.
இந்த அறுவை சிகிச்சையால் இனிமேல் ஏற்படக்கூடிய பார்வை இழப்பை மட்டுமே தடுக்க முடியும்; அறுவை சிகிச்சைக்கு முன்பு ஏற்கெனவே இழந்துவிட்ட பார்வையை மீட்டுத் தர முடியாது. அந்தப் பார்வை இழப்பு நிரந்தரமானது. ஆகையால், கண் நீர்அழுத்த நோயைப் பொறுத்தவரை நோய்த்தடுப்பு ஒன்றே பார்வை இழப்பைத் தவிர்க்க ஒரே வழி.
தடுக்க என்ன வழி?
கண் நீர்அழுத்த நோய்க்கு ‘ஓசையின்றிப் பார்வையைத் திருடும் நோய்’என்று ஒரு பெயரும் இருக்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட வேண்டும். பொதுவாகவே 30 வயதைக் கடந்தவர்கள் வருடத்துக்கு ஒருமுறை கண்களைப் பரிசோதித்துக்கொண்டால் இந்த நோய் இருப்பது தெரிந்துவிடும்.
நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அவற்றைக் கட்டுப்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி யாருக்காவது கண் நீர்அழுத்த நோய் இருந்தால், குடும்பத்தில் உள்ள அனைவரும் 30 வயதுக்கு மேல் வருடத்துக்கு இரண்டு முறை கண் நீர்அழுத்தத்தைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம்.
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: [email protected]

நன்றி - த இந்து

Tuesday, July 14, 2015

சினிமா ரசனை 6: சிறந்த இயக்குநர்களின் பாதை!

பெரும்பாலான திரைப்படங்கள், பெரிய ஸ்டூடியோக்களின் வாயிலாகவே தயாரிக்கப்படுகின்றன. அப்படி இல்லாமல், சிறிய பட்ஜெட்டுடன், தனிநபராலோ அல்லது ஒரு சிறிய குழுமத்தாலோ, பெரிய ஸ்டூடியோக்களின் ஆதரவு இல்லாமல் எடுக்கப்படும் படங்களும் வருகின்றன. இன்டிபென்டண்ட் சினிமா’ (Independent Cinema) என்று இப்படங்கள் அழைக்கப்படுகின்றன.
சுருக்கமாக ‘இன்டி ஃபில்ம்ஸ்’ (Indie films). இப்படிப்பட்ட படங்களில் வழக்கமான மசாலாத் தன்மைகள் இருக்காது. மாறாக, இயக்குநரின் நோக்கம், அவரது கதைசொல்லல் முறை ஆகியவைகளுக்கே முக்கியத்துவம் இருக்கும். இந்த ‘இன்டி’ படங்கள் இன்றுவரை பல ஜாம்பவான்களை அளித்திருக்கின்றன. இந்த வகைப் படங்கள் பற்றியும், ஒரு சிறந்த ‘இன்டி’ இயக்குநர் பற்றியும் இந்த வாரம் கவனிக்கலாம்.
கிட்டத்தட்ட நாற்பதுகளிலிருந்தே இந்த ‘இன்டி’ படங்கள் எடுக்கப்பட்டுவந்திருக்கின்றன. குறைந்த பட்ஜெட்டில், சொல்ல விரும்பிய கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, பிற கேளிக்கை அம்சங்கள் திரைப்படத்தைக் கெடுக்காமல், நல்ல நடிகர்களை வைத்து இயக்கப்பட்ட இப்படிப்பட்ட படங்களில் 1953-ல் வெளியான ‘லிட்டில் ஃப்யூஜிட்டிவ்’ (Little Fugitive) முக்கியமானது.
இந்தப் படம் இன்றளவும் பேசப்படும் படங்களில் ஒன்று. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னர் பல குறைந்த பட்ஜெட் படங்கள் எடுக்கப்பட்டன. ‘தி ஃபில்ம்-மேக்கர்ஸ்’ கோஆப்பரேட்டிவ்’ (The Film-Makers' Cooperative) போன்ற சில அமைப்புகளும் நிறுவப்பட்டு, ஸ்டூடியோ முறைக்கு வெளியே, இதுபோன்ற நல்ல படங்களை விநியோகிப்பதற்காகத் துவங்கப்பட்டன.
அறுபதுகளிலும் எழுபதுகளிலும் ‘இன்டி’ படங்கள் பல்வேறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டன. திகில், செக்ஸ், போதை மருந்துகள் ஆகியவற்றை உள்ளடக்கிய கதைகள் வெளியாயின. இந்தச் சமயத்தில்தான் ஃப்ரான்ஸிஸ் ஃபோர்ட் காப்புலா (Francis Ford Coppola), ‘தி ரெய்ன் பீப்புள்’ (The Rain People) மூலம் அறிமுகமாகிறார். இதன் பின்னர் ஜார்ஜ் லூகாஸும் ‘டிஎச்எக்ஸ் 1138’ (THX 1138) படத்தை எடுக்கிறார். இவர்கள் மூலம் ‘இன்டி’ படங்கள் மிகவும் பிரபலம் அடைந்தன.
 s
டேவிட் லிஞ்ச், தனது ‘எரேசர்ஹெட்’ (EraserHead) படம் மூலம் பிரபலம் அடைந்தார். இப்படத்துக்கு ஏராளமான ஆஸ்கர் பரிந்துரைகள் கிடைத்தன. உடனடியாக ஜார்ஜ் லூகாஸ் இவரிடம் வந்து, ‘ஸ்டார் வார்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கச் சொல்லிக் கேட்கிறார். ஆனால், சுதந்திரமான இயக்குநராக அறிமுகமாகி, பின்னர் ஹாலிவுட் ஸ்டூடியோக்களிடமே போய் சிக்கிக்கொண்ட ஜார்ஜ் லூகாஸின் அழைப்பை லிஞ்ச் நிராகரித்தார். இனியும் தன்னிஷ்டத்துக்கே படங்கள் எடுக்க வேண்டும் என்பதே டேவிட் லிஞ்ச்சின் விருப்பமாக அப்போது இருந்தது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் அமெரிக்க மக்கள் மீது இந்த ‘இன்டி’ படங்கள் செலுத்திய ஆதிக்கம் மறக்க முடியாதது. ஸ்டூடியோக்களின் மசாலா கலந்த, மிகைப்படுத்தப்பட்ட திரைப்படங்கள் மக்களை எப்போதெல்லாம் அலுப்பாக்கினவோ, அப்போதெல்லாம் ‘இன்டி’ படங்களே நல்ல படங்களை மக்களுக்கு வழங்கியுள்ளன. பல புதிய இயக்குநர்கள் இப்படங்களில் அறிமுகமாகி, இன்றளவும் மிகப் பிரபலமாகவும் விளங்குகின்றனர். அதேசமயம், ஜார்ஜ் லூகாஸ், க்வெண்டின் டாரண்டினோ (Reservoir Dogs) போன்ற ‘இன்டி’ இயக்குநர்களுமே தற்போது ஸ்டுடியோக்களின் பக்கம் சாய்ந்துவிட்டனர்.
இப்போதும் ‘இன்டி’ படங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் சிறந்த இயக்குநர்களில் ஜிம் ஜார்முஷ் (Jim Jarmusch) முக்கியமானவர். 1980-ல் ‘பெர்மனெண்ட் வக்கேஷன்’ (Permanent Vacation) படத்துடன் தனது ‘இன்டி’ வாழ்க்கையை ஆரம்பித்தவர் ஜார்முஷ். இந்தப் படத்தின் பட்ஜெட் வெறும் பனிரண்டாயிரம் டாலர்களே. அந்தப் பணமும், NYU திரைப்படக்கல்லூரியில் இவருக்கு ஸ்காலர்ஷிப்பாகக் கிடைத்த பணம். அதைக் கல்லூரியில் கட்டாமல் அதை வைத்துப் படம் எடுத்துவிட்டார் ஜார்முஷ். இதன்பின்னர் 1984-ல் ‘ஸ்டிரேஞ்சர் தன் பேரடைஸ்’ (Stranger Than Paradise) படத்தை 1,25,000 டாலர்களில் எடுத்து வெளியிட்டார்.
உலகெங்கிலும் உள்ள நல்ல சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்த படம் இது. கான் திரைப்பட விழாவில் Camera d'Or என்ற, சிறந்த முதல் படத்துக்கான விருது இப்படத்துக்குக் கிடைத்தது (காரணம், ‘பெர்மனெண்ட் வெகேஷன்’ படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை). இப்படத்துக்குப் பின்னர் பல படங்களை அவ்வப்போது எடுத்து வெளியிட்டிருக்கிறார் ஜார்முஷ். இவரது படங்களில் டெட் மேன், கோஸ்ட் டாக், காபி அண்ட் சிகரெட்ஸ் ஆகியவை மிகவும் பிரபலமானவை.
குறிப்பாக, ‘காபி அண்ட் சிகரெட்ஸ்’ படம் மிகவும் வித்தியாசமாக எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் மொத்தம் பதினோரு குறும்படங்கள் இடம்பெற்றிருந்தன. கிட்டத்தட்ட இருபது வருடங்களில் அவ்வப்போது ஜார்முஷ் எடுத்த குறும்படங்களின் தொகுப்பு இது. ஆனால் இந்தக் குறும்படங்கள் எல்லாமே, காபியையும் சிகரெட்களையும் மையமாகக் கொண்டே எடுக்கப்பட்டிருந்தன. இவற்றின் கதாபாத்திரங்கள், காபியை அருந்திக்கொண்டே சிகரெட்களைப் புகைத்துக்கொண்டிருப்பார்கள். இவற்றினூடே நடக்கும் பேச்சுகள்தான் படம்.
‘Don't let school get in the way of your education’ என்ற மார்க் ட்வெய்னின் மேற்கோள் ஜார்முஷுக்குப் பிடித்தமான மேற்கோள். 'திரைப்படக் கல்லூரியில் படித்த 70 சதவீத விஷயங்களை நான் மறக்க வேண்டியிருந்தது. அங்கு கற்றுக்கொண்ட 30 சதவீத விஷயங்களே இன்றுவரை எனக்கு உதவுகின்றன' என்று சொல்லியிருக்கிறார். இவரது படங்களைக் கவனித்தால், ஹாலிவுட் போன்று ஒரு குறிப்பிட்ட திரைக்கதையமைப்பை (ஸிட் ஃபீல்ட், ராபர்ட் மெக்கீ, ப்ளேக் ஸ்னைடர் இத்யாதி) பின்பற்றும் படங்களாக இவரது படங்கள் இருக்காது.
அந்தத் திரைக்கதை அமைப்புகள் சொல்லும் ஆரம்பம், நடுப்பகுதி, முடிவு என்பதெல்லாம் அப்படியப்படியே பின்பற்றும் நபரல்ல ஜார்முஷ். அவரைப் பொருத்தவரை, ஒரு இயக்குநராக, தனது உணர்வுகளைத் திரைப்படமாக எடுக்கவே விரும்புகிறார். 'ஆடியன்ஸ் விரும்புவதைக் கொடுப்பது என் வேலை அல்ல' என்பது ஜார்முஷின் கருத்து. இதனாலேயே ஹாலிவுட்டின் மசாலாத்தனம் நிறைந்த படங்களைக் கிண்டல் செய்யும் ஜார்முஷின் பல பேட்டிகளையும் நீங்கள் படிக்கலாம்.
‘இன்டி’ என்று அழைக்கப்படும் சுதந்திரப் படங்கள் அமெரிக்கக் கலாச்சாரத்துடன் ஒன்றிப் பல வருடங்கள் ஆகின்றன. அமெரிக்காவின் சிறந்த இயக்குநர்களில் பலர் இங்கிருந்து வந்தவர்களே. இன்னும் பலரும் இதிலிருந்து அவசியம் தோன்றுவார்கள். யாருக்கும் அஞ்சாமல், வளைந்துகொடுக்காமல் மனதில் தோன்றும் கருத்துகளையும் உணர்வுகளையும் பேசும் ஜிம் ஜார்முஷ் போன்ற இயக்குநர்கள், மசாலா மலிந்த ஹாலிவுட்டுக்கு அவசியம் தேவைதான். அப்போதுதான் எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும் அரைத்த மாவு நிரம்பிய குரல்கள் மட்டுப்பட்டு, புதிதான குரல்கள் அங்கே கேட்கத் தொடங்கும். இது உலகம் முழுமைக்குமே பொருந்தக்கூடிய விஷயம்தானே?
தொடர்புக்கு [email protected]

நன்றி -த இந்து