Thursday, February 27, 2014

வெண்மேகம் - சினிமா விமர்சனம்

 
 
தினமலர் விமர்சனம்

கேரளாவைச் சார்ந்த ராம்-லக்ஷ்மன் எனும் இரட்டையர்கள் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம் தான் விதார்த் நடித்திருக்கும் ''வெண்மேகம்''!

விளம்பர போர்டுகள் வரையும் ஓவியர்கள் விதார்த், ஜெகன் இருவரும்! இவர்களது கடை அருகில் இருக்கும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியை ரோகிணியின் துறுதுறு மகள் ஜெயஸ்ரீ சிவதாஸூக்கு அம்மா ரோகிணியின் கண்டிப்பு, கடுப்பிற்கு வடிகாலாக விதார்த்தின் நட்பு கிடைக்கிறது. விதார்த்திடம் ஜாலியாக பழகும் ஜெயஸ்ரீயை, ரோகிணி மேலும் கண்டிக்கிறார். இது ஜெயஸ்ரீயை வெறுப்பாக்க, ஒரு வேலையாக விசாகப்பட்டினம் செல்லும் விதார்த்தை தேடி ஜெயஸ்ரீயும் கிளம்புகிறார். 
 
 
 
 
 விதார்த் ஊர் திரும்புகிறார். ஆனால் ஜெயஸ்ரீ, விசாகப்பட்டினத்தில் அப்பாவி பெண்களை வாடகைத்தாயாக மாற்றி அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் லேடி தாதா மஞ்சரியிடம் சிக்குகிறார். அப்புறம்? அப்புறமென்ன? விதார்த், ரோகிணியால் காவல் துறையிடம் சிக்குகிறார், இன்னல்களை அனுபவிக்கிறார். ஒருகட்டத்தில் காவல் துறையின் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு மீண்டும் விசாகப்பட்டினம் போகும் விதார்த், ஜெயஸ்ரீயை ஒற்றை ஆளாக கண்டுபிடித்தாரா? தாயகம் பார்த்தாரா.? தாயிடம் சேர்த்தாரா? என்பதுடன் விதார்த் - இஷாராவின் காதலையும் கலந்து கட்டி வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது 'வெண்மேகம்' படத்தின் மீதிக்கதை!


பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் டீன்-ஏஜ் பெண்களின் கண்ணீர் நிலையை, காண்போர் கண்களிலும் கண்ணீர் வரவழைக்கும் விதத்தில் அதிரடியாக சொல்லி இருக்கின்றனர் இரட்டையர்கள் ராம் - லக்ஷ்மன் இருவரும்!
 
 


ஓவியர்களாக விதார்த் - ஜெகன் இருவரும் ஓ.கே.! விதார்த் - இஷாரா காதல் கவிதை என்றால், விதார்த் - ஜெயஸ்ரீயின் நட்பு ஒருக்கட்டத்திற்கு மேல் ஜெயஸ்ரீயிடம் மட்டும் காதலாக மாறுவது சலிப்பு! விதார்த் காதல் காட்சிகளிலும், போலீஸிடம் அடிவாங்கும் அனுதாபகாட்சிகளிலும் வழக்கம் போலவே ஸ்கோர் செய்திருக்கிறார்.

இஷாரா, ஜெயஸ்ரீ இருவரில் துறு துறு ஜெயஸ்ரீக்கே நம் ஓட்டு! ஆனால் இஷாராவின் காதலை ஏற்றுக் கொள்ள முடியும் நம்மால் ஜெயஸ்ரீயின் ஒருதலை காதலை விதார்த் மாதிரியே ஏற்றக் கொள்ள முடியவில்லை! கண்டிப்பான தாயாக ரோகினி, லேடி தாதாவாக மஞ்சரி, டபுள் மீனிங் ஜெகன் என எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.


ஜித்து தாமோதரின் ஓவிய ஒளிப்பதிவு, ஜாபர் ஹனியின் இசை, சு.செந்தில் குமரன், தோழன், தனபால் உள்ளிட்டோரின் பாடல்வரிகள் உள்ளிட்டவைகள் 'வெண்மேக'த்திற்கு அழகிய வண்ணம் தீட்டியிருக்கின்றன என்றால் மிகையல்ல!

மாணவி காணாமல் போனது பற்றி போலீஸ் பெரிதாக அலட்டிக் கொள்ளாதது, மஞ்சரியையும், அவர் தொழிலையும் ஆந்திர போலீஸ் கண்டு கொள்ளாதது, விதார்த் மீது ஜெயஸ்ரீ காதல் கொள்வது உள்ளிட்ட ஒருசில குறைகள் இருந்தாலும், இரட்டையர்கள் ராம்-லக்ஷ்மன் இயக்கத்தில், வீட்டை விட்டு வெளியேறும் 'டீன்ஏஜ்' பெண்களுக்கு 'வெண்மேகம்' சரியானதொருபாடம்!

மொத்தத்தில், ''வெண்மேகம் - வெற்றி பெறட்டும்!''
 
 
thanx - dinamalar
 
 
  • நடிகர் : விதார்த்
  • நடிகை : புதுமுகம்
  • இயக்குனர் :ராம் லக்ஷ்மன்