Showing posts with label maathavidaai. Show all posts
Showing posts with label maathavidaai. Show all posts

Monday, December 17, 2012

மாத விடாய் - ஆவணப்படம் - அதிர்வ்லைகள்

முழுக்க முழுக்க பெண்களால் தயாரிக்கப்பட்ட ஆனால் ஆண்களுக்கான ஆவணப் படம் ஒன்றின் வெளியிட்டு விழா அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என தானம் அறக்கட்டளை நண்பர் சிவகுமார் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.
ஆவணப்படத்தின் தலைப்பு- மாதவிடாய்

சமுதாயத்தில் பாதிக்கு பாதியாக இருந்து, தாயாக, மணைவியாக, சகோதரியாக, மகளாக வலம் வரும் பெண்களின், இந்த மாதாந்திர பிரச்னையை எத்தனை ஆண்கள் மகனாக, கணவனாக, சகோதரனாக, அப்பாவாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்ற கேள்வியுடன் துவங்குகிறது.

கேள்விக்கு உண்மையான விடை பூஜ்யம் என்றுதான் வரும், அதற்காக வருந்த வேண்டாம் சகோதரர்களே, இதுவரை எப்படியோ இனியாவது புரிந்து கொள்ளுங்கள், அந்த நாளில் பரிவுடன் நடந்து கொள்ளுங்கள் என்று சொல்லி படம் ஆரம்பிக்கிறது.

மாதவிடாய் என்ற வார்த்தையை உபயோகிப்பதையே இன்னும் இந்த சமுதாயம் கேவலமாகவே நினைக்கிறது. வீட்டுக்கு "தூரம்' என்ற வார்த்தைகளிலேயே பெண்களை ஒடுக்குமுறை கொண்டு ஒதுக்குகிறது, எவ்வளவு நாகரிகம் பேசினாலும், எப்படிப்பட்ட செல்வந்தர்களாக இருந்தாலும், இன்னமும் அந்த நாட்களில் ஒதுக்கிவைக்கவும், ஒதுங்கிச் செல்லவும்தான் செய்கிறார்கள், பேட்டிகளில் பெண்கள் குமுறுகிறார்கள்.

இன்னமும் கிராமங்களில் "முட்டு வீடு' என்ற பெயரில் அந்த நாட்களில் பெண்கள் தனிமைப்படுத்தி கொடுமைப்படுத்தப்படுவதை ஆதாரத்துடன் காட்டும் போதும், அதனால் தாங்கள் எந்த அளவு பாதிக்கப்படுகிறோம் என்பதை கிராமத்து பெண்கள் அழுதபடி சொல்லும் போதும், கண்ணீர் நம் பக்கம் இருந்தும் வருகிறது. இந்த "முட்டு வீட்டில்'அடைக்கப்பட்ட பெண்கள் பாம்பு கடித்த இறந்த நிஜக்கதையெல்லாம் உண்டு என பக்கத்தில் இருந்து நண்பர் பழனிக்குமார் சொன்னபோது அதிர்ச்சி இன்னும் அதிகமானது.

மாதவிடாய் என்பது அசிங்கமானதோ, அருவெறுப்பானதோ, புதிரோ, தீட்டோ அல்ல, தாய்ப்பாலை போன்று பெண்ணின் உடலில், ரத்தத்தில் ஊறும் இயற்கையான சங்கதி. இந்த அறிவியல் ரீதியான புரிதல் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கே இல்லை என்பதுதான் சோகம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஆணுக்கு முகசவரம் செய்ய தேவைப்படும் "ரேசர்' போலத்தான் பெண்களுக்கு இந்த நாப்கின், ஆனால் இந்த நாப்கின் வாங்கிவரவோ, தரவோ ஏன் இவ்வளவு கூச்சம், அதை ஒரு செய்திப் பேப்பரில் சுருட்டி, கருப்புகலர் பாலீதீன் பையில் ரகசியமாக வைத்து கொடுக்கும் கெட்ட பழக்கத்தை எப்போது விடப்போகிறார்கள்.

டி.வி.,களில் பிரமாதமாக நாப்கின் பற்றி விளம்பரம் செய்யப்பட்டாலும் உண்மையில் எண்பது சதவீத இந்திய பெண்கள் துணிதான் உபயோகிக்கிறார்கள், ஆனால் இந்த ஆண்களுக்கு பயந்து அந்த துணியை சரியாக உலர்த்தாமல், சுத்தம் செய்யாமல் அணிவதால் எத்தனை பேர் கர்ப்பப்பை வாய் புற்று நோய் வரைக்கும் உள்ளாகிறார்கள் தெரியுமா? என்ற கேள்வி எழும்போது கூடவே அதிர்ச்சி ஏற்படுவதை தடுக்கமுடியவில்லை.

நாப்கின் உபயோகிக்கும் பெண்களுக்கு அவர்களுக்கான கழிப்பறைகளில் அதற்கான அடிப்படை வசதி ஏற்படுத்தி தந்து இருக்கவேண்டும். ஆனால் அப்படி எங்குமே இல்லை, வெறும் ஆவண படம் எடுப்பதுடன் நின்று விடாமல், ஒரு படி மேலே போய் அரசு அலுவலகங்களில் உள்ள பெண்களுக்கான கழிப்பறைகளில் மாதவிடாய் தேவைகள் என்ன செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்ட போது, அப்படி ஒரு வசதியும் செய்து தரப்படுவதில்லை என்பதே பதிலாக வந்துள்ளது என்பதை ஆதாரத்துடன் காட்டும் போது பார்க்கும் நமக்கு வெட்கமாக இருக்கிறது.

அவ்வளவு ஏன் சட்டம் இயற்றும் சட்ட மன்ற கட்டிடத்திலேயே இந்த அடிப்படை வசதி இல்லை என்கிறார் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, இவரைப் போல 55 பெண்கள் தங்களது கருத்துக்களை வலுவாக பதிந்துள்ளனர். "அம்மா உங்க புடவையில கறை' என்றதுமே ஏதோ குற்றம் செய்துவிட்டது போல பதறிப்போவோம், இனி அந்த பதற்றமே கூடாது என்றும் கூறுகிறார்.

வீடுகளில், அலுவலகங்களில் இருக்கும் பெண்களுக்கு இது மாதிரி பிரச்னை என்றால், களப்பணியாற்றும் பெண் போலீசாரின் நிலமை இன்னும் மோசம், சாதிக்கலவரம் நடக்கும் இடத்திற்கு செல்லும் பெண் போலீசார் அவசரம் கருதி ஏதேனும் ஒரு வீட்டிற்குள் நுழைந்து விட்டால் போலீஸ் அந்த சாதிக்கு ஆதராவாயிடுச்சுன்னு சொல்லிவிடுவர் என்கிறார் முன்னாள் போலீஸ் அதிகாரி திலகவதி.

மகளுக்கு விதம், விதமாக நகைகள் வாங்கிக்கொடுத்து அழகு பார்ப்பதைவிட அவளின் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண விழையுங்கள், பொன் நகை ஏற்படுத்தாத புன்னகை அவள் முகத்தில் தவழும்.

மகப்பேறு, குழந்தை வளர்ப்பு போல மாதவிடாயும் பொம்பளைங்க சமாச்சாரம் என ஒதுக்கிவைக்கும் ஆண்களே இனியும் அப்படி இருக்காதீர்கள், அது உங்கள் ஆண்மைக்கே அழகல்ல, மேற்சொன்ன அனைத்திலும் உங்களுக்கு ஆழமான பொறுப்பு உண்டு, என்று அழுத்தந்திருத்தமாய் சொல்லி முடிகிறது ஆவணப்படம்.

படம் முடிந்த போது ஏற்பட்ட கைதட்டலைவிட, ஏற்புரையாக இயக்குனர் கீதா இளங்கோவன், "இந்த படத்தை இரண்டு வருடங்களாக திட்டமிட்டு எடுத்தோம், இருந்தாலும் இந்த ஆவண படத்தை யார் கேட்டாலும் இலவசமாக தர தயராக உள்ளோம் காரணம் விஷயம் நாட்டின் மூலை முடுக்கில் எல்லாம் போய்ச் சேரவேண்டும்' என்று கூறிய போது எழுந்த கைதட்டல் அதிகம்.

மாதவிடாய் பற்றிய இலவச டிவிடிக்கும் மற்ற விளக்கங்களுக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9443918808.
 நன்றி - தினமலர்