Showing posts with label SELFLESS - ஹாலிவுட் சினிமா. Show all posts
Showing posts with label SELFLESS - ஹாலிவுட் சினிமா. Show all posts

Saturday, July 04, 2015

SELFLESS - ஹாலிவுட் சினிமா

உறுப்பு மாற்று சிகிச்சையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஒருவரின் மனதை அப்படியே இன்னொரு மனிதனின் மூளைக்கு இடமாற்றம் செய்தால் என்ன நடக்கும். இந்த விபரீதக் கற்பனையை இயக்கியிருக்கிறார் இந்திய - அமெரிக்க இயக்குநரான தர்செம் சிங். வரும் ஜூலை 10 அன்று வெளியாகப் போகும் திரைப்படம் செல்ஃப்/லெஸ்.
காந்தியாக நடித்த பென்கிங்ஸ்லி, ரியான் ரெனால்ட்ஸ், மாத்யூ கூட் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே த செல், த ஃபால், இம்மார்ட்டல்ஸ் ஆகிய படங்கள் மூலம் பிரபலமான தர்செம் சிங்கின் இப்படம் சயின்ஸ் பிக்‌ஷன் வகையைச் சேர்ந்தது.
பெரும் பணக்காரரான பென் கிங்ஸ்லி புற்றுநோயால் அவதிப்படுகிறார். இன்னும் கொஞ்ச நாட்களில் இறந்துவிடுவோம் என்னும் நிலையில் உலகில் அவர் வாழ ஆசைப்படுகிறார். ஆகவே விஞ்ஞானி ஒருவரின் முயற்சியில் நவீன மருத்துவ சிகிச்சையின் மூலம் அவரது மனம் ஆரோக்கியமான ஓர் இளைஞனின் உடம்புக்குள் புகுத்தப்படுகிறது.
இனி தான் நினைத்தபடி வாழ்க்கையை அனுபவிக்கலாம் வியாதியின் பிடியிலிருந்து விலகிவிட்டோம் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையைத் தன் மனத்துடனும் இளைஞனின் உடம்புடனும் தொடர்கிறார் பணக்காரர் பென் கிங்ஸ்லி.
ஆனால் கோடீஸ்வரரான பென் கிங்ஸ்லிக்குக் கிடைத்த உடம்பின் மர்மத்தை அவர் அறிந்துகொள்ள நேர்கிறது. அந்த இளைஞனின் குடும்பம், வாழ்க்கை போன்ற நினைவுகள் அவருக்கு வருகின்றன. தொடர்ந்து நடைபெறும் பல நிகழ்வுகளால் நினைத்தபடி நிம்மதியாக அவரால் இருக்க இயலவில்லை.
அதன் பின்னர் நடைபெறும் சம்பவங்களைச் சுவாரஸ்யமாகச் சித்தரிப்பதே செல்ஃப்/லெஸ். இந்தப் படம் 1966-ல் வெளிவந்த செகண்ட்ஸ் என்னும் படத்தின் மறுஆக்கம் என்று சொல்லப்படுகிறது. மனத்துக்கும் உடம்புக்குமான போராட்டத்தை உணரவைக்கும் விதமான காட்சி அமைப்புகள் படத்தின் பலம் என்று தெரிகிறது.
கடந்த பிப்ரவரி மாதமே இந்தப் படம் வெளியாகவிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் படம் குறித்தபடி வெளியாகவில்லை. படத்தின் டிரெயிலர் மட்டும் மார்ச்சில் வெளியானது. தர்செம் சிங்கின் முந்திய படமான மிரர் மிரர் தந்த காட்சி அனுபவங்களால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் இந்தப் படத்தையும் காணக் காத்திருக்கிறார்கள்.


நன்றி - த இந்து