Showing posts with label ON THE SLY - சினிமா விமர்சனம் ( உலக சினிமா -ஃபிரெஞ்ச்). Show all posts
Showing posts with label ON THE SLY - சினிமா விமர்சனம் ( உலக சினிமா -ஃபிரெஞ்ச்). Show all posts

Wednesday, February 11, 2015

ON THE SLY - சினிமா விமர்சனம் ( உலக சினிமா -ஃபிரெஞ்ச்)

on the sly
Director: Olivier Ringer
பரபரக்கும் வாழ்க்கையில் பெற்றோர்கள் எதையும் பார்த்துப் பார்த்து செய்யமுடியவில்லைதான். ஆனால் தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகள்சார்ந்து என்ன நடக்கிறது என்பதையாவது இந்த அவசரஉலகத்துப் பெற்றோர்கள் பார்க்கவேண்டுமல்லவா?
ஒரு குழந்தை தன்னைப் பெற்றோர்கள் சரியாகக் கவனிக்கவில்லை, எப்போதும் ஏதோ ஞாபகத்தில் உள்ள அப்பாஅம்மாவுக்கு தன்மீது கவனம் செலுத்த வேண்டும் என்ற பிரக்ஞையே இல்லை என்று ஒரு குழந்தை நினைக்குமானால் அது எவ்வளவு வலியான தருணம். உண்மையில் அத்தகைய ஒரு மனநெருக்கடியிலிருக்கும் ஒரு குழந்தையின் பார்வையிலிருந்துதான் on the sly எனும் பிரெஞ்சு / பெல்ஜியம் படம் ஆரம்பமாகிறது.
பாரீஸிலிருந்து வெகுதொலைவிலிருக்கும் தங்கள் கிராமத்திற்கு வாரந்தோறும் வந்துவிடுகிறார்கள் ஒரு நடுத்தர வயது தம்பதியினர். உடன் அவர்களது ஒரே ஒரு ஆறுவயது கேத்தி என்ற அழகான பொன்வண்டு, சாரி பெண் குழந்தை. உண்மையில் வாரத்தின் வேலைதினங்களில் அவர்கள் மூவருமே கூட சந்தித்துக்கொள்வதில்லை. எனும்போது இந்த சனி, ஞாயிறு என்பது பரபரக்கும் நகரத்தின் வேலை தினங்களிலிருந்து தப்பிக்கவும் மூவரும் சந்தித்துக்கொள்ளவும் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவுமான ஒரு வெளியாகத் திகழ்கிறது.
அப்படி வாரந்தோறும் சனி ஞாயிறுகளில் அவர்கள் கிராமத்திற்கு போய்விடுவது உத்தமமான காரியமே. ஆனால் அவர்கள் இருவரும் அத்தகைய பிரத்யேகமான சூழலுக்கு இடம்பெயர்ந்து பலநூறு மைல்கள் கடந்து வந்தபிறகும் கூட அவர்கள் இருவரும் ஏதோ உலகத்தையோ புரட்டிப்போட உள்ளவர்கள்போல (அப்படிப் புரட்டிப்போட்டவர்கள் கூட இப்படி இருந்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்) எப்போது பார்த்தாலும் ஆழ்ந்த சிந்தனையில் இருத்தலும் குழந்தையைக் கண்டுகொள்ளாதிருத்தலும்தான் ஒரு குழந்தையாக இருக்கும்பட்சத்தில் கேத்திக்கு மிகவும் உறுத்துகிற பிரச்சனையாக அது இருக்கிறது.
தன்னுடைய இந்த ஐயம் சரிதானா என்பதை உறுதிசெய்து கொள்ளும்பொருட்டு அவள் ஒரு சோதனை செய்துபார்க்க திட்டமிடுகிறாள். அந்த மாதிரி ஒருமுறை கிராமத்திலிருந்து நகரத்திற்கு திரும்பும்போது கிராமத்திலிருந்து சற்றுத் தள்ளி ஒரு பெட்ரோல் பங்கில் நுழைந்து வண்டி நிற்கிறது. இந்நேரம் பார்த்து காரின் பின் இருக்கையில் அமர்ந்திருக்கும் இவள் கதவைத் திறந்துகொண்டு மெல்ல இறங்கி கதவை சாத்திவிட்டு சற்றுத்தள்ளி ஓரமாக மறைந்துநிற்கிறாள். தன்னை அவர்கள் தேடுகிறார்களா என்றும் பார்க்கிறாள்... மேலும், காரின் பின்கதவு திறந்துமூடும் சத்தமாவது அவர்களை திரும்பிப்பார்க்க வைக்கிறதா என்று பார்க்கிறாள்.
ஆனால் காரின் பின்பக்கக் கதவுமூடும் ஓசை அவர்களை ஒன்றும் செய்யவில்லை. கார் பெட்ரோல் பங்கை விட்டு வேகமெடுத்துச் செல்ல அப்போது கேத்தி, காரைப் பின்தொடர்ந்து ஓடவும் செய்கிறாள். ஆனால் கார் பாய்ந்துசென்று விடுகிறது. தனித்து விடப்பட்ட கேத்திக்கு அத்தருணம் எந்த அச்சமும் இல்லை. வருத்தமும் இல்லை. ஆனால் தனியே விடப்பட்டது அப்பொன்வண்டைப் பரவசப்படுத்துகிறது... அதன்பிறகு அந்த கேத்தி வண்டு தனியே சுற்றித்திரிய உருவாகும் உலகம் மிகமிக அழகானது.
தனியே வந்து புகைகூண்டு வழியாக வீட்டுக்குள் இருந்துபார்க்கும் அவள் அது சரிபட்டுவராமல் வீட்டுக்கு அருகிலுள்ள மரத்தோப்புக்குள் நுழைந்தவள்... மெல்ல நடந்துசென்று காட்டுக்கு போய்விடுகிறாள். அங்கு சின்னதான குடில் ஒன்றை அமைத்துக்கொண்டு சிலதினங்கள் வாழ்கிறாள். அங்கு அவள் சாப்பிட சில பழங்கள் கிடைக்கின்றன... பூச்சிகளுடன், பறவைகளுடன், விலங்குகளுடன், மீன்களுடன், தாவரங்களுடன் அவளுக்கு ஏற்படும் நெருக்கம் வசீகரமானது. அவள் கண்ணெதிரே கொம்புகள் கிளைத்த கலைமான் கடந்து செல்கிறது.
இத்திரைப்படம் மிக மெதுவாகத்தான் ஆரம்பமாகிறது. ஆனால் போகப்போக அது எங்கேயோ நம்மைக்கொண்டு சென்றுவிடுகிறது. கேத்தி அடர்ந்த காட்டுக்குள் போனபிறகு ஒருவித திகில் நம்மைப் பற்றிக்கொள்கிறது. அவள் இரவில் தனது சின்னதான குடிலில் (ஒரே ஒரு ஓலைதான், அதுவும் மழைக்காக அவள் போட்டுக்கொண்டது) உறங்கும்போது இரவு ஓநாய் ரகசியமாக (on the sly) அவள் அருகில் வந்து உறங்கிவிட்டுச் செல்கிறது. அது கேத்தியை எதுவும் செய்யவில்லையென்றாலும் உண்மையில் அந்த இடங்களில் நம் நெஞ்சம் பதறுகிறது....
ஓடையில் செல்லும் மீன்களைக்கண்டு பரவசமடையும் கேத்தி சிறு கால்வாயில் ஓடும் தண்ணீரின் நடுவே தனியே கூண்டுகட்டி சில மீன்களைப் போட்டு வளர்க்கிறாள். அதற்காக சேற்று மண்ணைத் தோண்டி புழு கொண்டுவந்து அதற்கு உணவாகத் தருகிறாள்... இப்படி போகும் அவள் வாழ்க்கையில் ஒருநாள் நிறைய மீட்புக்குழுவினர் காட்டுக்குள் பிரவேசிப்பதைக் காண்கிறாள். அவர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அவள் பதுங்குவதை யாருமே கவனிக்கவில்லை. தூரத்தில் அவள் அப்பா போல உருவம் தெரிகிறது.... ஆனாலும்
அவரைக் கண்டும் அவள் பதுங்கிக்கொள்ளத்தான் செய்கிறாள். எல்லோரும் தேடி அலுத்துப்போய் காணாமல் போய்விடுகிறார்கள்... அவள் வீட்டுக்குத் திரும்புகிறாள்... அங்கிருக்கும் ஒரு தோட்டத்தில் உள்ள பள்ளத்தில் தான் வணங்கும் கடவுளின் நினைவாக குச்சிகளை நடுகிறாள். அங்கே சில விதைகளை ஊன்றுகிறாள்... அது முளைவிடுகிறது... யாருமில்லாத இடத்தில் முளைவிடும் செடியைக் கண்டு அவளுடைய அப்பா வந்து உணர்ச்சிவசப்படுகிறார்.
இது கேத்திபோன்ற வண்டுசெய்த வேலையாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறார். அதனால் அவளைத் தேடாமல் பதுங்கியிருந்து அவள் தென்படும் தருணத்தை எதிர்நோக்கியிருக்கிறார்.... தனக்காக காத்திருக்கும் தந்தையைநோக்கி கேத்திக் குட்டி போனாளா இல்லையா என்பதை படத்தில் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆறுவயது கேத்தியாக நடித்துள்ள Wynona Ringer தன் மௌன மொழியைக்கொண்டு குழந்தைகளுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ்ந்து சலனத்தை ஏற்படுத்தி இருக்கிறாள். அவள் இப்படத்தைத் தாங்கிநிற்கும் தேவதை. இப்படியொரு சிறந்த படத்தை தர நினைத்த இயக்குநர் Olivier Ringer-ன் மகள் அவள். 2011ல் வெளிவந்த இப்படம் லண்டன், பெர்லின் உலகத் திரைப்படவிழாக்களில் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றது. சென்ற ஆண்டு உலகம் முழுவதும் நடைபெற்ற ஐரோப்பா திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படம். 2014 சென்னை ஐரோப்பா திரைப்படவிழாவிலும் திரையிடப்பட்டு பலரது கவனத்தை ஈர்த்தது.
குழந்தைகள் படம் எடுக்க விரும்புபவர்கள் இந்தமாதிரி படங்களின் காட்சி ரீதியான திரைமொழியை, அதன் உள்ளடக்கத்தை, அதன் வெளிப்பாட்டுத்தன்மையை, அதன் நடையமைதியை ஊன்றி கவனித்து உள்வாங்க வேண்டும். அப்போது உண்மையிலேயே காத்திரமானதொரு பேசுபொருளை முன்னெடுக்கும் கவிதைப்பூர்வமான திரைவடிவாக்கம் நமக்கு வாய்க்கப்பெறலாம்.


நன்றி  - த இந்து
பால்நிலவன்