Showing posts with label NOESCAPE -நோ எஸ்கேப் (2015)- சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label NOESCAPE -நோ எஸ்கேப் (2015)- சினிமா விமர்சனம். Show all posts

Saturday, September 05, 2015

NOESCAPE -நோ எஸ்கேப் (2015)- சினிமா விமர்சனம்

நடிகர் : ஓவன் வில்சன்
நடிகை :லேக் பெல்
இயக்குனர் :ஜான் எரிக் டௌடில்
இசை :பஃக் சாண்டர்ஸ்
ஓளிப்பதிவு :லியோ ஹின்ஸ்டின்
'நோ எஸ்கேப்' எனும் ஆங்கில படம், லாவோஸில் நடைபெறும் உள்நாட்டு போரில் சிக்கித்தவிக்கும் ஒரு அமெரிக்க குடும்பத்தை பற்றிய கதையாகும். படத்தின் நாயகனான ஓவன் வில்சன் (ஜாக்), அமெரிக்காவிலிருந்து தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸில் பணி செய்ய தனது மனைவி ஆனி மற்றும் மகள்கள் லூஸி, பிரீஸ் ஆகியோருடன் விமானத்தில் பயணிக்கிறார்.

இவர்கள் லாவோஸ் நோக்கி பயணிக்கும் அதே நேரத்தில், அங்கு அரசாங்கத்திற்கு எதிராக உள்நாட்டு போர் வெடிக்கிறது. போராளிகள் அனைவரும் பிறநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பணியாளர்களை சுட்டு வீழ்த்துகின்றனர். இந்நிலையில் தனது குடும்பத்தினரோடு அங்கு வரும் ஜாக்கை, அவரது நண்பர் கென்னி ஒரு ஹோட்டலுக்கு அழைத்து செல்கிறார்.

ஓட்டலில் தங்கியிருக்கும் ஜாக், தனது குடும்பத்தை ஓட்டலில் விட்டுவிட்டு நாளிதழ் வாங்க கடைக்கு செல்கிறார். அப்போது, போராளிகள் மற்றும் காவல் துறையினர் இடையே கடும் சண்டை ஏற்படுகிறது. அப்பகுதியில் நிலவும் இக்காட்டான சூழலை அறியும் ஜாக், அங்கிருந்து தப்பி தனது குடும்பம் இருக்கும் ஓட்டலுக்கு செல்கிறார்.

ஓட்டலுக்கு செல்லும் வழி எங்கும் வேறு நாட்டவர்கள் மற்றும் காவல் துறையினரின் சடலங்களை கண்டு திடுக்கிடுகிறார் ஜாக். ஓட்டலை வந்தடையும் ஜாக், தனது குடும்பத்தினரை தேடுகிறார். அப்போது அங்கு வரும் போராளிகள் வேறு நாட்டவர்களை கண்டதும் சுட்டு தள்ளுகின்றனர். இவரது அறையில் இருந்த மனைவி மற்றும் மகள்களும் காணாமல் போகின்றனர்.

இறுதியில் ஜாக் அவர்களை கண்டறிந்தாரா? தனது மனைவி மற்றும் மகள்களுடன் அங்கிருந்து தப்பித்து சொந்த நாடு திரும்பினாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

ஜான் எரிக் இயக்கியிருக்கும் இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்தின் திரைக்கதை தெளிவு இல்லாமல் இருக்கிறது. முதலில் லாவோஸில் எதனால் போராளிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே போர் ஏற்படுகிறது என்பதற்கான சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை. மேலும், ஆசியர்கள் அனைவரும் கொடூரமானவர்கள் என்பது போல படம் முழுவதும் சித்தரித்துள்ளனர். படத்தின் துவக்கும் முதல் இறுதி வரை ஆசியர்கள் கண்ணில் படும் அமெரிக்கர்களை எல்லாம் கொலை செய்துகொண்டே இருக்கின்றனர்.

படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், படம் முழுக்க அவர்கள் உயிருக்கு பயந்து ஓடிக்கொண்டே இருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. இயக்குனர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அதிக கவனம் செலுத்தி, கதை களத்தை சுவாரஸ்யமாக அமைத்திருந்தால் 'நோ எஸ்கேப்' ரசிக்கும்படியாக அமைந்திருக்கும்.

மொத்தத்தில் ‘நோ எஸ்கேப்’ தப்பிக்க முடியாது.

நன்றி- மாலைமலர்