Showing posts with label Keywords: தீபிகா படுகோன். Show all posts
Showing posts with label Keywords: தீபிகா படுகோன். Show all posts

Sunday, September 21, 2014

ஒரு லட்சம் லைக்குகளை அள்ளிய நடிகை தீபிகா படுகோன் ஃபேஸ்புக் நிலைத்தகவல்


நடிகை தீபிகா படுகோன் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட சற்றே நீளமான நிலைத்தகவல், 12 மணி நேரத்தில் சுமார் 8 ஆயிரம் பேரால் ஷேர் செய்யப்பட்டதுடன், ஒரு லட்சம் லைக்குகளை அள்ளியது. ஒரு நடிகை மீதான சமூகத்தின் பார்வையை பதிவு செய்திருக்கும் அந்த நிலைத்தகவல் அப்படியே:


 
என்னுடைய பார்வை... 


ஒரு பெண் பாலுறவு வைத்துக்கொள்ள விரும்புகிறாள் என்பதற்கு, ஒரே ஒரு அடையாளம் தான் இருக்கிறது. அது அவள் "ஆம்!" என்று சொல்கிற பொழுது மட்டுமே.


இந்த வரியை நான் மேலே எழுதுவதன் காரணம், நாமெல்லாம் இந்தியாவில் சமூகத்தின் ஒரு பகுதியினர் கொண்டிருக்கிற பார்வையை மாற்ற தீவிரமாக பாடுபடுகிறோம் என்பதே காரணம். இப்படி செய்வதன் மூலம் சமூகத்தை சமத்துவமின்மை, வன்புணர்வு, பயம், வலி அற்ற உலகை நோக்கி நடை போடவே நாம் விரும்புகிறோம். 


என்னுடைய தொழிலைப் பற்றி நான் எதுவும் தெரியாத அப்பாவியாக இல்லை. அது வெவ்வேறு விஷயங்களை என்னிடம் இருந்து எதிர்பார்க்கிறது. சில வேடங்கள் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை போர்த்திக்கொண்டு நடிக்க வேண்டியிருக்கலாம், இன்னொன்று முழுமையாக நிர்வாணமாக நடிக்க வேண்டிய பாத்திரமாக இருக்கலாம். இதில் எதை நான் ஏற்று நடிக்க வேண்டும் என்பது என்னுடைய தேர்வு மட்டுமே. அது ஒரு வேடம் மட்டுமே, அதுவே உண்மை கிடையாது. எந்த வேடத்தில் நடித்தாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டியது என்னுடைய வேலை. 


நான் இதைத் தெளிவாக சொல்கிறேனா என்பதே என்னுடைய கவலை. அதை ஷாருக்கானின் 8 பேக் அல்லது வேறொரு ஆண் அல்லது பெண்ணின் உடலமைப்போடு குழப்பிக்கொள்ளக்கூடாது. பெண் சமத்துவம் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக நாம் உழைத்துக்கொண்டிருக்கிற பொழுது இப்படிப்பட்ட கீழ்மையான தந்திரங்களின் மூலம் வாசகனின் கவனத்தை ஈர்ப்பதையே நான் எதிர்க்கிறேன். ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தில் பெண்கள் முன்னேறுவதை கொண்டாடும் அதே சமயம் நிழல் மற்றும் நிஜ வாழ்க்கையை நாம் குழப்பிக்கொள்ளக்கூடாது. ஒரு பழைய கட்டுரையைத் தோண்டி எடுத்து “OMG: Deepika’s Cleavage Show!” என்று தலைப்பிட்டு வாசகர்களை ஈர்ப்பது பின்னோக்கி செலுத்தும் சிந்தனையை பெருக்கவே நம்முடைய தாக்கத்தை பயன்படுத்திக்கொள்வது ஆகும். 



ஒரு நடிகையின் உள்ளாடை உள்ளே எட்டிப்பார்க்க தூண்டுகிறது என்றால், அவள் அதை திட்டமிட்டு செய்யவில்லை. அதை ஜூம் செய்தோ, வட்டமிட்டு, அம்புக்குறியிட்டோ, புள்ளி வைத்தோ காட்டுவதைவிட அவளுக்கு ஏன் நீங்கள் கொஞ்சம் மரியாதை தரக்கூடாது. அதை அப்படியே விட்டுவிட்டு நகர்வதை விட்டு ஏன் அதை தலைப்புச்செய்தியாக ஆக்குகிறீர்கள்? நாங்கள் மனிதர்கள் இல்லையா? ஆம் நாங்கள் சினிமாவில் கதாநாயகர்களின் 8 பேக்ஸை ரசிக்கிறோம், விரும்புகிறோம், ஜொள்ளு வடிக்கிறோம். ஆனால், நாங்கள் ஆண்களின் கவட்டையை அவர் பொதுமக்கள் முன்னர் தோன்றும் பொழுது பெரிதுபடுத்திக்காட்டி அதை மலிவான தலைப்புச்செய்தி ஆக்குகிறோமா? 



என் உடலைக் கொண்டாடுவதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆன் ஸ்க்ரீனில் எந்த வேடத்திலும் நடிக்க நான் வெட்கப்பட்டதில்லை. என் அடுத்த படத்தில் நான் உண்மையில் பார் டான்சராக நடிக்கிறேன். அந்த வேடத்தில் ஆண்களின் காம உணர்வுகளை தன்னுடைய வாழ்வாதாரத்துக்காக தூண்டிவிட்டு சம்பாதிக்கிற பெண் வேடத்தில் தான் நடிக்கிறேன். ஓர் உண்மையான நபரை போகப்பொருளாக மாற்றுவதற்கும், அவர் நடிக்கிற வேடத்தை அப்படி அணுகுவதற்கும் வேறுபாடு இருப்பதாகவே பார்க்கிறேன். என்னுடைய கதாப்பாத்திரங்களை அவை சுவராசியமாக இருக்குமென்றால் கூராய்வு செய்யுங்கள். அந்தப் பாத்திரத்தின் மார்பக அளவு, கால் நீளம் ஆகியவற்றை அந்த வேடத்தை அது ஏற்றுக்கொள்ளுமாறு ஆக்குமென்றால் நிச்சயமாக விவாதியுங்கள். ஒரு பெண்ணை திரைக்கு வெளியே மதியுங்கள் என்று தான் கேட்கிறேன். 



இது மார்பகம், ஆணுறுப்பு, மற்ற பாகங்கள் பற்றிய ரிப்போர்டிங் பற்றியது அல்ல. எந்தச் சூழலில் இந்த ரிப்போர்டிங் நிகழ்ந்தது என்பதைப் பற்றியது. ஒரு தலைப்பு விற்க வேண்டுமென்பதற்காகவே இப்படி செயல்பட்டுள்ளார்கள். அதுவும் பெண்கள் மீதான பார்வை மாற வேண்டிய அவசரத்தேவை இருக்கும் இந்த காலத்தில் இப்படி நடந்துகொண்டிருக்கிறார்கள். 



இந்த விஷயத்தை இத்தோடு முடித்துக்கொள்கிறேன். எல்லாருக்கும் ஒரு பார்வை இருக்கிறது. இதை மேலும் கொண்டு சேர்த்தால் அது பெற வேண்டிய கவனத்தைவிட அதிகம் பெற்று, இன்னமும் என் வாதங்கள் திரிக்கப்பட்டும், தவறாக புரிந்துகொள்ளப்பட்டும் தேவையில்லாத தலைப்பு இன்னமும் அதிகமாக விற்பனையாகவே உதவும் என்று எண்ணுகிறேன். 


இவையெல்லாவற்றையும் சொல்லிய பின்னர் நமக்குள் அன்பு, கண்ணியம், மரியாதை ஆகியவற்றை ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்வோம். 


நன்றாக வாழ்வோம், அடிக்கடி சிரிப்போம், எல்லையில்லாமல் அன்பு செய்வோம் - தீபிகா படுகோன்

 
தமிழில்: பூ.கொ.சரவணன்