Showing posts with label வித்யூலேகா. Show all posts
Showing posts with label வித்யூலேகா. Show all posts

Sunday, September 06, 2015

புலி - படத்தின் மெயின் காமெடி ஹீரோயின் வித்யூலேகா நேர்காணல்

நடிகை வித்யூலேகா
நடிகை வித்யூலேகா
தமிழ் சினிமாவில் தற்போது வேகமாக வளர்ந்துவரும் நகைச்சுவை நடிகை வித்யூலேகா. மனோரமா, கோவை சரளா வழியில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அவரைச் சந்தித்தோம்.
நாடகத் துறையில் இருந்து நீங்கள் சினிமா துறைக்கு வந்தது எப்படி?
நான் சினிமாவுக்கு வந்ததே ஒரு விபத்துதான். பள்ளி, கல்லூரி காலங்களில் நான் மேடை நாடகங்களில் நடித்து வந்தேன். கல்லூரியில் என்னுடைய தோழிகள், “உனக்கு இயக்குநர் கெளதம் மேனனைத் தெரியுமா? அவருடைய புதிய படத்தில் நடிக்க ஒரு புதுமுகத்தை தேடி வருகிறார். நீ வேண்டுமானால் அந்த தேர்வுக்குப் போய் வா” என்றனர். நடிகை தேர்வுதானே, சும்மா போய் பார்ப்போம் என்று நானும் போனேன். என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு தன் படத்தில் நடிக்க கௌதம் மேனன் என்னைத் தேர்ந்தெடுத்தார். அந்தப் படம்தான் ‘நீதானே என் பொன்வசந்தம்’.
தமிழை விட தெலுங்கில் அதிகப் படங்களில் நடிக்கிறீர்களே?
‘நீதானே என் பொன்வசந்தம்’ தெலுங்கு பதிப்பிலும் நானே நடித்தேன். அப்படத்தில் நடிக்கும் போது எனக்கு தெலுங்கு தெரியாது. கெளதம் சார் முதலில் என்னை தெலுங்கில் டப்பிங் பேசவேண்டாம் என்று கூறினார். ஆனால் படம் முடிவடைந்த பிறகு, ‘நீதான் டப்பிங் பேச வேண்டும்’ என்று அதிர்ச்சியூட்டினார். நன்றாகத் தெலுங்கு தெரிந்த ஒருவரை அருகில் வைத்துக்கொண்டு நான் அப்படத்துக்கு டப்பிங் பேசினேன். அப்படத்தில் எனது குரல் வளத்தால் அடுத்த தெலுங்கு படத்துக்கு வாய்ப்பு வந்தது. அப்படத்திலும் என் நடிப்பு பலருக்கும் பிடித்துவிட தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜுன் படம், ‘சுந்தரபாண்டியன்’ ரீமேக், சுதிர் பாபு சார் படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன்.
காமெடி வேடத்தில் மட்டும்தான் நடிப்பீர்களா?
காமெடி வேடத்தில் மட்டுமே நடிப்பது என்று நான் முடிவு செய்யவில்லை. ஆனால் மக்களும் திரையுலகினரும் அப்படி முடிவு செய்துவிட்டார்களா என்று தெரியவில்லை. காமெடி மட்டுமின்றி குணசித்திர வேடம், வில்லி வேடம் ஆகியவற்றையும் என்னால் செய்ய முடியும் என்பதை மக்களுக்கு புரிய வைக்க விரும்புகிறேன். ஏற்கெனவே ‘இனிமே இப்படித்தான்’ படத்தில் என்னால் குணச்சித்திர வேடம் செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளேன்.
‘வி.எஸ்.ஓ.பி’ படத்தில் உங்களது உடலமைப்பை கிண்டல் செய்து போல காட்சிகள் இருக்கிறதே. எப்படி ஒப்புக் கொண்டீர்கள்?
நான் அந்தக் காட்சிகளின் முக்கியத்துவத்தைத்தான் பார்த்தேன். என்னை கிண்டல் பண்ணுகிறார்கள் என்றால், அனைவருடைய பார்வையும் என் மீது தான் இருக்கும். என் மீது அனைவரது பார்வையும் விழும்போது எனக்குத்தானே முக்கியத்துவம். ராஜேஷ் சார் படம் என்றாலே கலாய்ப்புதானே. அதனால் நான் அதை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. தனிப்பட்ட கிண்டலாகவும் அதை எடுத்துக் கொள்ளவில்லை.
‘புலி’ படத்தில் என்ன பாத்திரத்தில் நடித்திருக்கிறீர்கள்?
விஜய் சாரோடு நான் ஏற்கெனவே ‘ஜில்லா’ படத்தில் நடித்திருக்கிறேன். அப்படத்தைப் பொறுத்தவரை நிறைய காட்சிகள் படமாக்கப்பட்டு நீளம் கருதி எடுத்துவிட்டார்கள். எனக்கு மட்டுமல்ல நிறைய நடிகர்களுக்கு அப்படித்தான் நடந்தது. அதை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டேன். நீளம் அதிகமாகிறது என்றால் முதலில் காமெடி காட்சிகளை தான் நீக்குகிறார்கள். அதுதான் வருத்தமாக இருக்கிறது.
‘புலி’ படத்தில் நான் செய்திருக்கும் பாத்திரம் வித்தியாசமானதாக இருக்கும். கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். இயக்குநர் சிம்புதேவன் சாரே “இது ரொம்ப முக்கியமான பாத்திரம், உங்களுக்கு கண்டிப்பாக மிகவும் திருப்புமுனையாக இப்படம் இருக்கும்” என்று கூறியுள்ளார். ‘புலி’ படத்தில் எனது பாத்திரத்தின் படப்பிடிப்பு முழுவதும் க்ரீன் மேட்டிலேயே இருந்தது. அவ்வளவு கிராஃபிக்ஸ் காட்சிகள் அப்படத்தில் இருக்கிறது.


நன்றி-த இந்து