Showing posts with label வலைப்பூ வாசம். Show all posts
Showing posts with label வலைப்பூ வாசம். Show all posts

Monday, May 12, 2014

மேஜிக் ரைட்டர் அமரர் சுஜாதா பிறவிக்கலைஞன் கமல் ஹாசனை டாமினேட் செய்த நிமிடங்கள்

வலைப்பூ வாசம்: சுஜாதாவின் ஆட்டோகிராப்

http://www.skpkaruna.com 

 
சுஜாதாவுடனான எனது முதல் சந்திப்பு இது. ( அதாவது  திரு கருணா அவர்கள் )


எனது கல்லூரியின் முதல் வருடம் முடி யும் நேரத்தில், பல்கலைக்கழகம் முழுவதும் நடந்த ஏதோ ஒரு வேலை நிறுத்தத்தால் திடீர் விடுமுறை கிடைத்தது. ஊருக்கு திரும்புவதற்காக பெங்களூர் வந்து விட்டு, வழக்கம் போல எம்.ஜி ரோடு, பிரிகேட் ரோட்டில் அலைந்து கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் இரவு ஏழு மணிக்கு மேல்தான் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் தமிழ்நாட்டுக்கு வண்டிகள் கிளம்பும். 


ஒரு சோம்பலான மதியப் பொழுதில் கப்பன் பார்க்கில் திரிந்து கொண்டிருக்கும் போதுதான் அந்த பியட் காரைப் பார்த்தேன். காரின் டிரைவர் இருக்கையில் அமர்ந்து பக்கத்தில் இருப்பவரிடம் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தது சாட்சாத் சுஜாதா! எனக்கு மூச்சு சற்று நேரம் நின்று விட்டது. உண்மையில் கையும் ஓடவில்லை! காலும் ஓடவில்லை! காருக்கு பின்னாலேயே தயங்கி நின்று கொண்டிருந்தேன். 


நீண்ட நேரம் நின்று கொண்டு காரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை ரியர்வியூ கண்ணாடி வழியே சுஜாதா கவனித்து விட்டார். தனது பக்க கதவைத் திறந்து கைகளால் என்னை அழைத்தார். அருகில் சென்ற என்னிடம், “ என்னப்பா வேண்டும்! இப்படி முறைத்து பார்த்துக் கொண்டேயிருக்கிறாயே?” என்றார். 


“இல்லை சார்! நான் உங்கள் ரசிகன். ஒரு ஆட்டோ கிராஃப் வேண்டும்” என்றேன். 


“சரி! பேப்பர், பேனா கொடு” என்று கேட்ட பிறகுதான் எனக்கு உறைத்தது. என்னிடம் இரண்டுமே இல்லை! பின்னே! காலேஜ் ஸ்டூடண்ட் ஆயிற்றே! 


“இதோ வாங்கி வருகிறேன் சார்” என்று சொல்லிவிட்டு ஓட ஆரம்பித்தேன். 


பெங்களூர் அவ்வளவாக பரிச்சயம் இல்லாத 1987-ம் வருடம் அது. கப்பன் பார்க்கில் இருந்து தவறான வழியில் விதான் சவுதா வழியே வெளியே வந்து விட்டேன். அங்கு மருந்துக்குக்கூட ஒரு கடை இருக்காது. பதட்டத்தில் ஓடிக் கொண்டேயிருந்தேன். ஒரு வழியாக சில கிலோமீட்டரில் கனரா வங்கி தலைமையகம் அருகில் இருந்த ஒரு பெட்டிக் கடையில் பேப்பர், பேனா வாங்கிக் கொண்டு மீண்டும் கப்பன் பார்க் நோக்கி வேகமெடுத்தேன். எத்தனை நேரம் ஓடினேன், எவ்வளவு தூரம் ஓடினேன் என்றெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. 


கப்பன் பார்க் உள்ளே நுழைந்து, அந்த பியட் கார் அங்கேயே நிற்பதை பார்த்த பின்புதான் கொஞ்சம் ஓட்டம் தளர்ந்தது. என் கையிலிருந்த பேப்பர் முழுவதும் வியர்வையில் நனைந்திருந்தது. பையில் இருந்த ஒரு துண்டில் முகத்தை துடைத்துக் கொண்டு, மூச்சு சற்று ஆசுவாசப்பட்ட பின்பு மீண்டும் காரின் பின்னே காத்திருத்தல் ஆரம்பமாயிற்று. 


கொஞ்ச நேரத்தில் என்னை கவனித்து மீண்டும் கையசைத்து கூப்பிட்டார். நான் வியர்வை பொங்க டிரைவர் இருக்கையின் அருகே சென்றேன். இம்முறை கையில் பேப்பரும் பேனாவும் இருந்தது. ‘ கொடு அதை!’ என்று என்னிடம் வாங்கிக் கொண்டு அருகில் இருப்பவரிடம் அந்த பேப்பரையும் பேனாவையும் கொடுத்தார். 


“கமல்! ஒரு பையனுக்கு உன்னோட ஆட்டோகிராஃப் வேணுமாம்... பாரு! ரொம்ப நேரம் வெயிட் பண்றான்” என்று சொன்ன பின்புதான் நான் கவனித்தேன். அவர் அருகில் அமர்ந்து கொண்டிருந்தது நடிகர் கமலஹாசன்! 


கமல் அந்த பேப்பரில் ஆட்டோகிராஃப் போடும் வேளையில், நான் சுஜாதாவிடம் சற்று சத்தமாகவே சொன்னேன். “இல்லையில்லை! எனக்கு உங்கள் ஆட்டோகிராஃப்தான் வேண்டும்” என்று! 


சில நொடிகள் அங்கு ஒரு அமைதி. சுஜாதா லேசாக அதிர்ந்து விட்டார். கமல் உடனே சுதாரித்துக் கொண்டு, “சார்! நான் சொன்னேன் இல்லையா? இப்போதெல்லாம் நீங்கள்தான் எங்களை விட பாப்புலர்!” எனக் கூறிக் கொண்டே பேப்பரை சுஜாதாவிடமே தந்து விட்டார். சுஜாதா எதுவும் எழுதாமல் ரங்கராஜன்/ சுஜாதா என்று வெறுமனே கையெழுத்திட்டு என்னிடம் கொடுத்தார். 


அந்த ஆட்டோகிராஃபை சட்டையில் வைத்துக்கொண்டு, அன்று முழுதும், கப்பன் பார்க் முழுக்க கெத்தாக நடந்து கொண்டேயிருந்தேன். அப்போதே நான் கமல் ரசிகனும்தான். ஆனால், சுஜாதாவிற்கு முன்பு வேறு எந்த ஆளுமையும் என்னை அந்த அளவிற்கு பாதித்திருக்கவில்லை. 


இருபது வருடம் கழித்து, நானும் நண்பர் பவா.செல்லதுரையும் ஒரு மாலைப் பொழுதில் சுஜாதாவை சந்திக்கச் சென்றிருந்தோம். அப்போதெல்லாம், அவர் சென்னைக்கே வீடு மாற்றி வந்து விட்டிருந்தார். அவரை பார்க்கப் போகிறோம் என்றவுடன், எங்கள் நண்பர் திலகவதி ஐபிஎஸ், தானும் வருவதாக சொல்லி உடன் வந்தார். 


நீண்ட நேர சுவாரஸ்யப் பேச்சுக்கு பின், அவரிடம் நான் அந்த முதல் சந்திப்பைக் குறிப்பிட்டு சொன்னேன். சட்டென்று அங்கும் ஒரு அமைதி! பின் ‘அது நீங்கதானா?’ என்றவர் அந்த சம்பவத்திற்கு பின்புதான் தானும் ஒரு பிரபலம் என்பதை நம்பவே ஆரம்பித்தேன் என்றார். கமல் இன்னமும் அதை நினைவில் வைத்திருக்கிறார் என்று ஒரு கூடுதல் தகவலும் கொடுத்தார். 


“இன்ஜினியரிங் படிக்க பெங்களூருக்கு ஏன் வந்தீர்கள்? மார்க் குறைவா?” என்றார். மார்க்கை சொன்னேன். “தமிழ்நாட்டி லேயே கிடைத்திருக்குமே? பின் ஏன் பெங்களூர்”என்றார். 



“உங்களால்தான் சார்!” என்றேன். 


“வாட்!” 


“ஆமாம் சார்! நீங்கள் பெங்களூரில் இருந்தீர்கள். அங்கே படித்தால் உங்களைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்குமே? அதனால் தான் பிடிவாதம் பிடித்து அங்கே வந்தேன்.” 


“நீங்கள் மேலும், மேலும் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறீர்கள்!” என்றவர், “பின்பு ஏன் என்னை பெங்களூர் வீட்டுக்கு வந்து பார்க்காமல், இந்த கப்பன் பார்க் விளையாட்டெல்லாம்?” என்றார். 


நீங்கள்தானே சார், அப்போது எழுதியிருந்தீர்கள்! “உண்மையான ரசிகர்கள் கடிதம் போடுகிற அல்லது நேரில் வந்து பார்க்கிற ஜாதியில்லை என்று?” என்றேன். 


சட்டென அதிர்ச்சியுற்று, பின் நீண்ட நேரம் மவுனமாக இருந்து விட்டு, வீட்டினுள்ளே திரும்பி, “சுஜாதா! இங்கே வா! இன்னுமொரு சுவாரஸ்யமான ரசிகன் எனக்கு” என்று அவரின் மனைவியை அழைத்தார்.


நன்றி - த தமிழ் இந்து , திரு கருணா அவர்கள்
  • ரத்தினசாமி கோமகன்  
    சுஜாதா-மாதிரியே முடித்திருக்கிறீர்கள்-சுவாரஸ்யம்!
    about 18 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
    kaarthik   Up Voted
  • anandan  from Chennai
    sandilyan / கல்கி கூட
    about 21 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • பொன்.முத்துக்குமார் Ponnambalam  
    அற்புதம் போங்கள். முன்பே படித்திருந்தாலும் சுஜாதா என்றாலே சுவாரஸ்யம்தான். என்னவொரு மனிதன். தமிழகம் இழந்த மற்றொரு மாணிக்கம்.
    a day ago ·   (2) ·   (0) ·  reply (0)
  • Sampath  from Coimbatore
    sujathavai எழுத்து எண்ணி padithavarkalukku மட்டும் thaan தெரியும் ........ அவருடைய இழப்பு நிரப்ப mudiyadhea vetridam என்று...
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • veera  
    super
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • gurumurthy  
    சுஜாதாவை தமிழகம் மறந்தாலும் ஹிந்து மற்றும் சுஜாதா வாசகர்கள் மறக்க மாட்டார்கள்.
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Bruno  
    செம..!
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Rajan  from Mumbai
    மிக அருமையான ரசிகன், ரசிகனுக்கான வரைமுறையை மீறாத SKPK அருகில் இருந்த கமலின் பெருந்தன்மையும் மதிக்கத்தக்க ஒன்று. மொத்தத்தில் கலைஞர்களுக்கு ஏற்ற ரசிகன்.