Showing posts with label மனுசங்க.. 12: மைனா சொற்கள்!-கி.ராஜநாராயணன். Show all posts
Showing posts with label மனுசங்க.. 12: மைனா சொற்கள்!-கி.ராஜநாராயணன். Show all posts

Tuesday, August 04, 2015

மனுசங்க.. 12: மைனா சொற்கள்!-கி.ராஜநாராயணன்

தாயைப் பெண்டாள வந்த ராஜ குமாரன் கதையில் ஒரு தாய்ப் பசு தன்னுடைய கன்றுவிடம் என்ன பேசியது என்று நமக்குத் தெரியும். அதைக் கேட்ட ராஜகுமாரன் நாணம் கொண்டு வருந்தித் திரும்பிப் போய்விடுகிறான்.
மைனாவிடம்தான் அதிகப்படியான சொற்கள் உண்டு என நான் நினைத் திருந்தேன். கிளி ஒருவிதமான கீச்சுக் குரல் ஒலிப்பில் பேசிக் காட்டும். மைனாவின் பேச்சு அப்படியில்லை. அசல் மனுசக் குரல் போலவே பேசும்.
நான் அறிய, மைனா ஒன்றுதான் அப்படிச் செய்யும். அதுவும் மனித வீட்டில் வளர்த்த மைனாவாக இருக்க வேண்டும்.
காகம் இணை சேர்ந்து கொஞ்சுவது ஒரு வகை என்றால், அது தன் குஞ்சோடு கொஞ்சிப் பேசுவதைக் கேட்க வேண்டும். அடேயப்பா!
புதுச்சேரி லாஸ்பேட்டையில் Q-13 வீட்டுக்கு வந்த பிறகு எங்களுக்குப் புறவாசலும் கொஞ்சம் மண்ணும் கிடைத்தன. கற்பூரவல்லி செடிக்கு இங்கே ‘மண்ணுக்கு வீங்கி’ என்று ஒரு பெயர் இருக்கிறது. அந்தச் செடியை ‘மண்ணுக்கு வீங்கி’ என்பதைவிட ‘மண்ணுக்கு ஏங்கி’ என்பதுதான் நல்லப் பொருத்தமாக இருக்கும்.
எங்களுடைய மனசுக்கு உள்ளேயும் அப்படி ஓர் ஏக்கம், எங்களையும் அறியாமலே இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. அப்படி ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது இந்த மண்ணைப் பார்த்ததும்.
முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் மகன் கலியாணத்துக்குப் போயிருந் தோம். தாம்பூலப் பை தந்து அனுப்பும் இடத்தில் பல வகையான பூச்செடிகளின் நாற்றுகள் கொண்ட பைகள் வைக்கப் பட்டிருந்தன.
‘வேண்டிய பூச்செடிகளை எடுத்துக் கொண்டு போகலாம்’ என்றார்கள். ‘‘ஜாதி மல்லி (பிச்சிப் பூ) செடி இருந்தால் ஒன்று வேணுமே’’ என்று நான் கேட்டேன்.
நாம் கேட்பது, தேடுவது எப்பவும் கிடைக்காது என்பதைப் போலவே, பிச்சிப் பூச் செடி கிடைக்கவில்லை. ரெட்டை மல்லிச் செடியைத் தேடினேன். கிடைத்தது. ரெட்டை மல்லிச் செடியில் ஒன்றையும் செம்பரத்தம் பூச்செடியில் ஒன்றையும் அங்கிருந்து கொண்டு வந்து நட்டு வைத்தோம்.
அருமையான இந்த மண்ணுக்கு எந்தத் தாவரமும் குதியாளம் போட்டுக் கொண்டு வளரும். அப்படியொரு மவுசு இந்த மண்ணுக்கு இருக்கிறது.
ஒருநாள் பேராசிரியர் பஞ்சு வந்து பார்த்துவிட்டு, வெற்றிலைக் கொடி ஒன்றையும் ஜாதி மல்லிப் பூக்கொடி ஒன்றையும் மனம் விரும்பி கொண்டுவந்து தந்தார். வெற்றிலைக் கொடி நன்றாகப் படர்ந்து தரை பூராவும் மூடியதைப் போல உண்டாகிவிட்டது இந்த மண்ணுக்கும் தண்ணிக்கும் பலா மரமே வரும். மற்றதுக்குச் சொல்லணுமா என்ன?
இங்கே எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் எங்களைப் போலவே அவரும் ஒரு ‘மண் புழு’ என்று தெரிந்துகொண்டோம். ரொம்ப உதவி எங்களுக்கு. அவருடைய மண்ணில் ஒரு பழமரம் ஒன்று இருக்கிறது. அந்த மரம் எங்களுக்குப் புதுசு. சுண்டைக்காய்ப் பருமன் உள்ள அதன் பழங்களுக்கு ஏகப் போட்டி. மைல்கணக்கான தூரங்களில் இருந்தெல்லாம் ராத்திரியும் பகலுமாக அடையாளம் தெரியாத, பெயர் சொல்ல முடியாத பறவைகளெல்லாம் அந்த மரத்தைத் தேடிக்கிட்டு வரும்.
அந்த மரத்தின் காய்ப்பு தொடங்கிவிட்டது என்றால் விதவிதமான பறவைச் சத்தங்கள் எப்போதும் கேட்ட வண்ணமிருக்கும்.
இது இந்த மண் மரமாகத் தெரிய வில்லை. இதை ‘மூக்குச் சளி மரம்’ என்று சொல்லுகிறார்கள். இந்த மரம் கொடுக்கிற பழத்தோட ருசி ஒருவிதமான விநோதத் தித்திப்புக் கொண்டது. குற்றாலத்தில் மங்குஸ்தான் பழம் என்று ஒரு பழம் கிடைக்கும். அந்தப் பழத்தை உடைத்து பார்க்கிறபோது, அதன் சதைப் பகுதி கெட்டியான மூக்குச் சளி போலவே இருக்கும் பார்க்க. இந்த மரத்தின் பழத்துக்கும் மூக்குச் சளிக்கும் என்ன சம்பந்தம் என்றே தெரியவில்லை.
நான் சொல்ல வந்த விஷயம், காக்கைகளுக்கு இந்தப் பழத்தை ரொம்பப் பிடிக்கிறது. அதனால், காக்கை களுக்கும் எங்களுக்கும் சிநேகம் கிடைத்தது.
பழ சீசன் (பருவம்) முடிந்த பிறகு தான் காக்கைகளின் முகம் எங்கள் பக்கம் திரும்பும். சமையல் அறையின் சன்னல் பக்கமாக உட்கார்ந்துகொண்டு, ‘என்னவும் இருக்கா..?’ என்று கேட்கிற மாதிரி இருக்கும் அதன் கூப்பாடு.
எங்களுக்கும் ஒரு சிநேகம் வேண் டியதிருந்தது. கேட்கிறதே என்று சன்னல் விளிம்பில் ஏதாவது உண்டியை வைத்தால், உடனே எடுத்துக் கொள் ளாது. சற்று தூரத்தில் போய் உட்கார்ந்துகொண்டுப் பார்க்கும் ‘யோக்யர்கள்தானா இவர்கள்’ என்று. அந்தக் காக்கைகளின் நம்பிக்கையைப் பெற சிரமப்பட வேண்டும். நம்முடைய கவனம் வேற பக்கம் திரும்புகிறபோது பார்த்து, டக்கென்று கவ்விக்கொண்டுப் பறந்து போய்விடும்.
இப்படியே காக்கைகளோடு பழகிப் பழகி, கையில் கொடுக்கும் உண்டியை அருகே நெருங்கி வந்து வாயில் பெற்றுக் கொள்ளும் அளவுக்குப் பழகிக்கொண்டுவிட்டோம். தோட்டத்துப் புறவாசல் கம்பிக் கதவில் வந்து பிடித்து நின்றுகொண்டு எங்களைக் கூப்பிட்டு, நாங்கள் அதன் வாயில் ஊட்டிவிடும் அளவுக்குப் பழகிவிட்டோம்.
பக்கத்தில் எங்காவது திடீரென்று வெடி வெடித்து ஒசை கேட்டதும் அதுகள் கூவிக்கொண்டே எழுந்து பறக்குபோது ‘நாசமாப் போவீங்கட' என்பது போல இருக்கும் அது.
மாடுகள், பச்சைக் குழந்தைகள், தாய்மார்கள் இவர்களுக்கும் வெடி ஓசை பிடிப்பதில்லை.
தீபாவளி சமயத்தில் காகங்கள் தலைமறைவாகிவிடும். புயல்காற்று சமயத்தில் மழையும் சேர்ந்துகொண்டால் காகங்கள் கொத்துக் கொத்தாக செத்து விழுந்து கிடப்பதைப் பார்க்கும்போது, நமக்குக் கண்ணீர் வந்துவிடும்.
பாரதி புதுவையில் வாழ்ந்த காலத் தில் இப்படியான ஒரு புயல் மழைக் காலத்தில் காகங்கள் செத்து விழுந்ததாக சொல்லக் கேட்டிருக்கிறோம்; எங்கள் காலத்திலும் இங்கே ரெண்டு முறை அப்படி கண்டிருக்கிறோம்.
சமீபத்தில் ஒரு நண்பரோடு பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார்:
‘‘ஒவ்வொரு ஊர்களிலும் குரங்குகள் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து வாழ்வது போலத்தான் காகங்களும்.
இந்த ஊர்க் காகம் வெளியூர்களுக்குப் போகாது. அடுத்த ஊர்க் காகங்களை யும் இங்கே இருக்க அனுமதிக்காது’’ இப்படி அந்த நண்பர் சொன்ன போது. எனக்கு அது புதுத் தகவலாக இருந்தது.
இங்கே அதிகாலையில் காகங்கள் கரையும் சத்தம் கேட்டவுடன், ‘மணி என்ன..?’ என்று பார்த்தால் சரியாக 6 மணியாக இருக்கும்.
சூரியோதயம் பார்த்து அநேக நாட்கள் ஆகிவிட்டன.
படுக்கை அறையின் சன்னல்கள் கிழக்குப் பக்கம் அமைந்திருந்தால் இது நடக்கலாம்.
ஊரில் ‘தலைக்கோழி கூப்பிடுகிறது’ என்று சொல்வது உண்டு; பள்ளிக் கூடத்தில் முதல் மணி அடிப்பது போல. சில கிராமங்களில் சங்கு ஊதுகிறார்கள். நகரா அடிப்பதும்கூட உண்டு. இவை இரண்டும் எனது பக்கத்து ஊரான நாச்சியார்புரத்தில் இருந்தது.
கிராமத்துக்காரனை சேவல் கூப்பிட் டுத்தான் எழுப்பும். போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு கூவும்!
இங்கே காகம் கூப்பிட்டுத்தான் எழ வேண்டியிருக்கிறது.
அதாவது, கோழியில் இருந்து காக்காய்க்கு வந்தாயிற்று. என்ன செய்வது கால மாறுபாடு!
கோழி கூப்பிடும் சத்தம் கேட்டு நாள் கணக்கு வருஷக் கணக்காகிவிட்டது.
இன்னும் வருவாங்க…

நன்றி -த இந்து