Showing posts with label பற்கள் பாதுகாப்பு. Show all posts
Showing posts with label பற்கள் பாதுகாப்பு. Show all posts

Wednesday, October 21, 2015

மரபு மருத்துவம்: பற்கள் நூறாண்டு வாழ்ந்தது எப்படி?-டாக்டர் வி. விக்ரம்குமார்

விதவிதமான `டூத்-பிரஷ்களும்’, வண்ண வண்ண `டூத்-பேஸ்ட்களும்’ பயன்படுத்தப்பட்டாலும் இன்றைய தலைமுறைக்கு 30 வயதிலேயே பற்கள் ஆட்டம் காண்பதும், சொத்தை உண்டாக்கக்கூடிய கிருமிகள் பற்களில் குடியிருப்பதும், பல் கூச்சம் அதிகமாவதும் ஏன்?
பற்பசைகளும், பிரஷ்களும் இல்லாத அந்தக் காலத்திலேயே நம் முப்பாட்டன்களும் பாட்டிகளும் பற்களை நன்றாக பராமரித்தது எப்படி? அவர்கள் நூறு வயதுவரை ஆரோக்கியமாக வாழ்ந்தது மட்டுமன்றி, பற்களுக்கும் நூறு வயதில் ‘ஹாப்பி பர்த்-டே' கொண்டாடியது எப்படி? இதற்கான விடைகளை அறிய சித்த மருத்துவ பல் பராமரிப்பு முறைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
குச்சி வகைகள்
`ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி’ என்ற பழமொழியும் `ஆலப் போல் வேலப் போல், ஆலம் விழுதைப் போல்’ என்ற கவிஞர் வாலியின் வரிகளும், ஆலம் விழுது மற்றும் கருவேல மர குச்சிகளின் மகத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றன.
‘வேலுக்குப் பல்லிறுகும் வேம்புக்கு பல் துலங்கும் நாயுருவி கண்டால் வசீகரமாங் காண்' எனும் பதார்த்த குண சிந்தாமணி பாடல், வேல மரக் குச்சிகளில் பல் துலக்க, பற்கள் உறுதியாகிக் கல்லுக்கு நிகராகத் திடமாகும் எனவும், வேப்பங் குச்சிகளில் பல் துலக்க பற்கள் தூய்மையாகும் எனவும், பச்சை நாயுருவி வேரால் பல் அழுக்குகள் நீங்கி பற்கள் அழகாகும் என்றும் வலியுறுத்துகிறது.
பல் துலக்குவதற்கு மேற்குறிப்பிட்ட குச்சிகள் மட்டுமின்றி மா, தேக்கு, மருது, நாவல், விளா, நொச்சி, புங்கை மர குச்சிகளைப் பயன்படுத்தலாம் என்று மருத்துவ நூல்கள் கூறுகின்றன.
சுவையும் பலனும்
துவர்ப்பு சுவையுள்ள குச்சிகளால், ஈறுகளில் ஏற்படும் புண்கள், ஈறுகளிலிருந்து ரத்தம் வடிதல் போன்றவை குணமடைந்து ஈறுகள் பலமடையும். பற்களும் பிரகாசமாகக் காட்சி அளிக்கும். கசப்பு சுவையுள்ள குச்சிகளால் பற்களில் குடியேறியுள்ள கிருமிகளின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு, பற்கள் ஆரோக்கியமாகவும் தூய்மையாகவும் இருக்கும்.
எப்படி பயன்படுத்தலாம்?
பசுமையான மரங்களிலிருந்து, பூச்சி அரிக்காத நல்ல குச்சிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை நீரால் கழுவி, ஒரு பக்க நுனியை கடித்து, ‘பிரஷ்’ போல மாற்றிக்கொண்டு பல் துலக்க வேண்டும். ஒவ்வொரு பல், பல் இடுக்குகளிலும், ஈறுகளிலும் குச்சியின் நுனியைக்கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். நடந்துகொண்டும் `செல்-போனில்’ பேசிக்கொண்டும் பல் தேய்க்கக் கூடாது. ஓரிடத்தில் நிலையாக இருந்து, மனதை ஒருமுகப்படுத்தி பல் துலக்க வேண்டும் என்கிறது சித்த மருத்துவம்.
வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படும் `ஸ்கர்வி’ (Scurvey) நோயில் ஈறுகளிலிருந்து ரத்தம் கசிவது இயல்பு. எனவே, அந்த நிலையில் டூத்-பிரஷ்களையோ, குச்சிகளையோ பயன்படுத்தாமல் வேப்பங் கொழுந்தால் ஈறுகளை மிருதுவாகத் தடவலாம். திரிபலா சூரணத்தால் (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் கலவை) வாய் கொப்பளிக்கலாம். அத்துடன், வைட்டமின் சி குறைபாட்டைப் போக்க மருத்துவ சிகிச்சை தேவை. கால்சியம் சத்து நிறைந்த கீரைகள், காய்கள், பால் பொருட்களை உட்கொள்வதால் பற்கள் பலமடையும்.
இயற்கை பற்பொடிகள்
சிறிது வறுத்த ஓமத்தின் பொடி, மாசிக்காய், லவங்கப்பட்டை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், மிளகு ஆகியவற்றின் பொடிகளைப் பயன்படுத்தலாம். லவங்கம், சீரகம் ஆகியவற்றை லேசாக வறுப்பாக வறுத்துப் பொடி செய்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து பல் தேய்த்தால் அஜீரணம், வாந்தி போன்றவை குணமாகும். திரிபலா சூரணத்தைப் பற்பொடியாக தினமும் பயன்படுத்தினால் பல் கூச்சம் நீங்கும், பற்களில் நோய்க் கிருமிகள் அண்டாது. கடுக்காய் பொடியால் பல் துலக்க ஈறு வலி, புண், ஈறிலிருந்து குருதி வடிதல் குணமாகும்.
வாயை கொப்பளிப்போம்
ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்பும் வாயை நீரால் நன்றாகக் கொப்பளிக்க வேண்டியது அவசியம். தினமும் நல்லெண்ணெயால் வாய் கொப்பளித்து வந்தால் பற்களின் நலனுடன் சேர்த்து, உடல்நலமும் சிறப்படையும். ஆலம் பாலில் வாய் கொப்பளிக்க அசைகின்ற பல்லும் இறுகும் என்பதை `ஆலம்பால் மேக மறுதசையும் பல்லிறுகும்’எனும் அகத்தியர் குணவாகடப் பாடல் உணர்த்துகிறது. ஓமத் தீநீரால் வாய் கொப்பளிக்க, பற்களிலுள்ள கிருமிகள் மடியும்.
காலை எழுந்ததும் சிகரெட்டைத் தேடும் நவீன மனிதனின் மனம், வேப்பங் குச்சியையும் வேலமர குச்சியையும் தேடத் தொடங்கிவிட்டால், சுற்றுச்சூழல் ஆரோக்கியமாக பாதுகாக்கப்படுவது மட்டுமன்றி, பற்களும் ஆரோக்கியமடையும். டூத்-பிரஷ்களையும், டூத்-பேஸ்ட்களையும் அன்றாட வழக்கத்திலிருந்து முழுமையாக நீக்க முடியாவிட்டாலும், அவ்வப்போது இயற்கையின் செல்வங்களான குச்சிகளையும், பற்பொடிகளையும் பயன்படுத்த முயற்சிப்போம். நம் ஆரோக்கியத்தை இயற்கையும் எதிர்பார்க்கிறது.
பல் வலிக்கு எளிய மருந்துகள்
# பழுத்த கத்திரிக்காயைப் பல இடங்களில் ஊசியால் குத்தி நல்லெண்ணெயில் வதக்கி பல் வலிக்குக் கொடுக்கலாம்.
# கொய்யா இலைகளை வாயிலிட்டு மென்று சாப்பிடலாம்.
# சுக்கை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக்கிப் பற்களில் கடித்து சாப்பிடலாம். நந்தியா வட்டை வேரை மெல்லலாம்.
# மருதம் பட்டை பொடியால் பல் துலக்கலாம். லவங்கத் தைலத்துக்கு உணர்ச்சி போக்கும் (Anaesthetic) தன்மை இருப்பதால், அதை பஞ்சில் நனைத்து பற்களில் வலி ஏற்படும்போதும், ஆரம்ப நிலையில் உள்ள சொத்தைப் பற்களுக்கும் வைக்கலாம்.
பயன்படுத்தக் கூடாதவை:
செங்கல் தூள், மண், கரி, சாம்பல், கிருமிகள் தாக்கிய குச்சிகள் ஆகியவற்றை பல் துலக்க பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர் 

தொடர்புக்கு: [email protected]

-தஹிந்து

Monday, June 08, 2015

பல் சொத்தை வருவது ஏன்? -மருத்துவக்கட்டுரை

முகத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்கள், நம்மைத் தாக்கத் தொடங்கும். 'பல் போனால் சொல் போகும்' என்பார்கள் பெரியோர். பற்களின் ஆரோக்கியத்தைக் காத்தால், உடலின் ஆரோக்கியத்தையே பாதுகாக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
பல்லின் அமைப்பு
பல்லானது வேதி அமைப்பில் கால்சியம், பாஸ்பரஸ் தாதுகளால் ஆனது. ஒவ்வொரு பல்லிலும் வெளியில் தெரிகிற மேற்பகுதிக்கு மகுடம் (Crown) என்று பெயர். பல், ஈறுக்குள் புதைந்திருக்கும் பகுதிக்கு வேர் (Root) என்று பெயர். பல் ஈறின் அடிப்பாகத்திலிருந்து, ஒவ்வொரு பல்லுக்குள்ளும் நடுவில் நரம்புகளும் ரத்தக்குழாய்களும் செல்கின்றன. இந்தப் பகுதிக்குப் பல் கூழ் (Pulp) என்று பெயர். இதைச் சுற்றி டென்டைன் (Dentine) எனும் பகுதியும், அதற்கும் வெளியே வெள்ளை நிறத்தில் பல்லுக்கு ஓர் உறைபோல் அமைந்திருக்கும் எனாமல் (Enamel) எனும் கடினமான பகுதியும் உள்ளன.
பல் சொத்தை
பல் பாதிப்புகளில் முதன்மையானது, பல் சொத்தை (Tooth Decay). குழந்தைகள், இளம் வயதினர், முதியோர் என எல்லோரையும் இது பாதிக்கிறது. இது ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடுவதுதான். குறிப்பாக, பற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு மாவுகள், பிஸ்கட்டுகள், மிட்டாய்கள், சாக்லேட்கள், ஐஸ்கிரீம், குக்கீஸ், கேக், பேக்கரிப் பண்டங்கள் போன்றவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள் பல் இடுக்குகளில் ஒட்டிக்கொள்ளும்போது, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுரிந்து, லாக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றன, இந்த அமிலம் எனாமலை அரித்துப் பற்களைச் சிதைக்கிறது. இதன் விளைவால் பற்கள் சொத்தையாகின்றன.
பற்களைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறினாலும் பாக்டீரியாக்கள் வளர்ந்து பல் சொத்தையை உண்டாக்கும். காபி, தேநீர் போன்றவற்றை அதிகமாகக் குடிப்பது, புகைபிடிப்பது, பான்மசாலா/வெற்றிலை பாக்குப் போடுவது போன்ற பழக்கங்களால் பற்களில் காரை படியும். இதில் பாக்டீரியாக்கள் சந்தோஷமாக வாழும். இந்த நிலைமை நீடித்தால், பற்களில் சொத்தை விழுந்து, பற்களின் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும்.
குழந்தைகள் இரவில் புட்டிப்பாலைக் குடித்தபடியே உறங்கிவிடுவார்கள். அப்போது பற்களின் மேல் பால் தங்கி, சொத்தையை ஏற்படுத்திவிடும். சிலருக்குப் பரம்பரை காரணமாகவும் பல் சொத்தை வரலாம்.
அறிகுறி என்ன?
சொத்தைப் பல்லின் ஆரம்ப அறிகுறி, பற்கூச்சம். முக்கியமாக இனிப்பு சாப்பிடும்போது, குளிர்ச்சியான அல்லது சூடான பானங்களை அருந்தும்போது பற்களில் கூச்சம் ஏற்படும். பிறகு பல்லில் வலி ஏற்படும். உணவை மெல்லும்போது பல் வலி அதிகரிக்கும். சொத்தைப் பல்லை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால், எனாமலை அடுத்துள்ள டென்டைன் பகுதிக்கும் சொத்தை பரவிவிடும். அப்போது பற்களில் கறுப்புப் புள்ளி அல்லது கோடு தெரியும். அங்குக் குழி விழும். காய்ச்சல், கழுத்தில் நெறி கட்டுதல், கழுத்து வலி, காது வலி போன்றவையும் தொல்லை தரும். இந்த நிலைமையிலும் சிகிச்சை பெறாவிட்டால், பல் கூழ் மற்றும் வேர்களில் சீழ் பிடித்துப் பழுதாகிவிடும். நாளடைவில் இந்த வேர்கள் வலுவிழந்து போகும். அப்போது பற்கள் ஆட்டம் கண்டு தாமாகவே விழுந்துவிடும்.
சிகிச்சை என்ன?
முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பல் சொத்தையாகிவிட்டால், ஒருவித சிமெண்டைக் கொண்டு சொத்தையை மூடுவார்கள் அல்லது அந்தப் பல்லை நீக்கிவிடுவார்கள். இப்போது இந்த நிலைமை மாறியுள்ளது. எந்த அளவுக்குச் சொத்தை பல்லில் பரவியுள்ளது என்பதை எக்ஸ்-ரே எடுத்துப் பார்ப்பதன் மூலம் அறியலாம். பல்லின் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்துச் சிகிச்சை மாறும்.
எனாமல், டென்டைன் வரைக்கும் சொத்தை இருந்தால் ‘ஃபில்லிங்’ எனப்படும் நிரப்புதல் சிகிச்சை போதுமானது. சொத்தையானது பல் கூழ்வரை சென்றிருந்தால், ‘வேர் சிகிச்சை’ என்று அழைக்கப்படும் ‘ரூட் கனால் சிகிச்சை’ (Root canal treatment) செய்யப்பட வேண்டும்.
ரூட் கனால் சிகிச்சை
இந்தச் சிகிச்சையின்போது ஈறுகளில் மயக்க மருந்தைச் செலுத்தி, பல் கூழ் வரை டிரில் செய்து பல்லில் ஏற்பட்டுள்ள சொத்தை, சீழைத் துப்புரவாக அகற்றிவிட்டு, அங்குள்ள நரம்பையும் வெட்டிவிட்டு, நன்றாகச் சுத்தப்படுத்துகிறார்கள். அங்கு நோய்த்தொற்று இல்லை என்று உறுதி செய்த உடனேயோ அல்லது 15 நாட்கள் கழித்தோ பல்லைச் சுத்தப்படுத்திய குழியில் ‘கட்டா பெர்ச்சா பிசின்’ (Gutta-percha resin), ஜிங்க் ஆக்சைடு, யூஜினால் (Eugenol) கலந்த வேதிப்பொருளைக் கொண்டு நிரப்புகிறார்கள். இதைத் தொடர்ந்து அந்தப் பல்லுக்குக் `கேப்’ போட்டு மூடிவிடுகிறார்கள். இதன் பலனால் சொத்தை சரியாகிவிடும். பல்லுக்கு உறுதித் தன்மை கிடைத்துவிடும். சிலருக்கு ‘ரூட் கனால் சிகிச்சை’ செய்ய முடியாத அளவுக்குப் பற்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும். அத்தகைய பற்களை நீக்கித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.
செயற்கை பல்
சிலர் சொத்தை விழுந்த பல்லை எடுத்து விடுகின்றனர். ஆனால், பதிலுக்கு அந்த இடத்தில் செயற்கைப் பல்லைக் கட்டுவதில்லை. இது தவறு. இதனால் அருகில் உள்ள பற்களுக்குப் பாதிப்பு ஏற்படும். இந்தப் பற்கள் பக்கத்தில் சாய்ந்துவிடலாம். இடைவெளி அதிகமாகிவிடலாம். அப்போது நாக்கை அடிக் கடி கடித்துக்கொள்ள வேண்டி வரும். பல பற்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால் பேச்சு குழறும்.
சொத்தையைத் தடுக்க வழி
# காலை, இரவு என இரண்டு வேளை பல் துலக்க வேண்டும். மேல் தாடைப் பற்களைக் கீழ்நோக்கிச் சுழற்றியும், கீழ்த் தாடைப் பற்களை மேல் நோக்கிச் சுழற்றியும் துலக்க வேண்டும். கடிக்கும் பகுதியை முன் பின்னாகத் துலக்க வேண்டும். நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும்.
# ஃபுளூரைடு கலந்த அனைத்து வகைப் பற்பசைகளுமே உகந்தவைதான். பல்லில் தேய்மானம் இருந்து, பல்லில் கூச்சம் ஏற்பட்டால், அப்போது மட்டும் 'டிசென்சடைசிங்' பற்பசையைப் பயன்படுத்தலாம்.
# பட்டாணி அளவிலான பற்பசை போதுமானது.
# கரி, உப்பு, மண், செங்கல்பொடி, சாம்பல், நெல்உமி போன்றவற்றால் பல் துலக்கக் கூடாது.
# பல் துலக்கியைப் பொறுத்தவரையில், மிருதுவான அல்லது நடுத்தர வகை பல்துலக்கியைப் பயன்படுத்துவது பற்களின் பாதுகாப்புக்கு நல்லது.
# ஆரோக்கியமான நிலைப்பற்களுக்குப் பால்பற்கள்தான் அஸ்திவாரம். ஆகவே, கை விரலில் பொருத்திக்கொள்ளும் மிருதுவான 'விரல் பல்துலக்கி'யைப் பயன்படுத்தி, ஐந்து வயதுவரையிலும் குழந்தைகளுக்குப் பெற்றோரே பல் துலக்கிவிட வேண்டும்.
# குழந்தைக்குப் பாட்டிலில் பால் கொடுத்தவுடன், ஈறுப் பகுதியைத் தண்ணீரால் நன்றாகத் துடைத்துவிட வேண்டும்.
# தினமும் ஒரு காரட், ஒரு வெள்ளரிக்காயைச் சாப்பிட்டு வந்தால், பல் சுத்தமடையும்.
# வைட்டமின் - சி, வைட்டமின் - டி, கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் மிகுந்த மீன் எண்ணெய், திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, எலுமிச்சை, நெல்லிக்காய், பச்சையிலைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் முதலியவற்றையும், புரதச்சத்து மிகுந்த பால், முட்டை, இறைச்சி, பயறு, பருப்பு முதலியவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், பல் ஈறுகளும் எனாமலும் நல்ல வளர்ச்சி பெறும்.
# பற்களில் ஒட்டிக்கொள்ளக் கூடிய இனிப்பு மாவு, சாக்லேட், மிட்டாய், ஐஸ்கிரீம் போன்றவற்றைச் சாப்பிட்டால் உடனே வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
# காபி, தேநீர் உள்ளிட்ட அதிகச் சூடான உணவு வகைகளையும், ஐஸ்கிரீம் உள்ளிட்ட அதிகக் குளிர்ச்சியுள்ள உணவு வகைகளையும், குளிர் பானங்களையும் அடிக்கடி சாப்பிடக்கூடாது.
# வெற்றிலைப் பாக்கு போடுவது, புகைபிடிப்பது, பான்மசாலா பயன்படுத்துவது, மது அருந்துவது போன்றவற்றைத் தவிர்த்தால், பல்லுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.
# குண்டூசி, குச்சி போன்றவற்றால் பல் ஈறுகளைக் குத்தி அழுக்கு எடுக்கக்கூடாது.
# குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொள்வது பற்களுக்கு நல்லது. காரணம், அவற்றில் உள்ள அமிலங்கள் எனாமலை தாக்கிப் பற்களையும் சிதைக்கின்றன.
# குழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கம் இருந்தால், சிறு வயதிலேயே அதைத் தடுத்து விட வேண்டும். தவறினால், சொத்தைப் பற்கள் மட்டுமல்ல தெற்றுப் பற்களும் தோன்றக்கூடும்.
# தினமும் பால் அருந்துங்கள். அதிலுள்ள கால்சியம் பல்லுக்குப் பாதுகாப்பு தரும்.
# நகம் கடிக்கக் கூடாது. காரணம், அதன் மூலம் கிருமிகள் வாய்க்குள் சென்று நோய்களை உண்டுபண்ணும்.
# ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறும் பழக்கத்தைப் பின்பற்றினால், பற்சொத்தை உள்ளிட்ட பல்வேறு பல் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே தவிர்த்துவிடலாம்.
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

தொடர்புக்கு: gganesan95@gmail .com


நன்றி-த இந்து