Showing posts with label பரபரப்பு பேட்டி. Show all posts
Showing posts with label பரபரப்பு பேட்டி. Show all posts

Monday, October 13, 2014

ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நாட்டுக்கு நல்லது: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரபரப்பு பேட்டி

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் | கோப்பு படம்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் | கோப்பு படம்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பதுதான் அவருக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
’தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:
ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி நடக்கும் போராட்டங்களை எப்படி பார்க்கிறீர்கள்?
தவறு செய்தவர்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் எப்படியும் தண்டனை கிடைக்கும் என்பது இந்தத் தீர்ப்பின் மூலம் உறுதியாகி இருக்கிறது. ஆனால், அவரை விடுதலை செய்யக் கோரி நடக்கும் போராட்டங்கள் தன்னிச்சையாக நடக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிமுக பிரபலங்களால் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகிறது என்றுதான் சொல்ல முடியும்.
2ஜி ஊழல் வழக்குக்கு பயந்துதான், இந்தத் தீர்ப்பை திமுக விமர்சிக்கவில்லை என்று கூறப்படுகிறதே?
2ஜி வழக்கில் நீதிமன்ற விசாரணை நடந்துகொண்டிருக் கிறது. வழக்கின் போக்கைப் பொறுத்துதான், இதில் தொடர்புள்ளவர்களின் நிலை குறித்து பேச முடியும். ஆனால், முதலில் மவுனமாக இருந்த திமுக தலைமை, கடந்த ஒரு வாரமாக, ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்ததால், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக சில கட்சிகள் பிரச்சாரம் செய்கிறதே?
அரசியல் வெற்றிடம் என்பதைவிட, தமிழக அரசியல் சூழல் மாறியிருக்கிறது என்பதுதான் உண்மை. இதைப் பயன் படுத்தி, தமிழகத்தில் காமராஜர் காலத்தில் காங்கிரஸுக்கு இருந்த செல்வாக்கை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். இதுவரை காங்கிரஸார் இதற்கு தயாரானார்களா என்று சொல்ல முடியவில்லை. ஆனால், இந்த நேரத்திலாவது காங்கிரஸை வலுப்படுத்த தலைவர்கள் தயாராக வேண்டும்.
காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் ஜி.கே.வாசன்தான் என அவரது ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்வது சரியா?
காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் ஜி.கே.வாசன் என்று கூறுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு காங்கிரஸ் தயாராக இருக்கிறதா என்பதை யோசிக்க வேண்டும். முதலில் அதற்கு தயாராகிவிட்டு, முதல்வர் வேட்பாளர் பற்றி பேசலாம்.
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பிடிப்போம் என பாஜக உள்ளிட்ட சில கட்சிகளின் தலைவர்கள் கூறுகிறார்களே?
அரசியல் கட்சிகள், வாய்ப்பு கிடைக்கும்போது, தங்கள் கட்சியை வளர்க்கப் பார்ப்பார்கள். ஆனால், எவ்வளவு முயற்சித்தாலும் குட்டிக்கரணமே போட்டாலும் தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது.
நடிகர் ரஜினிகாந்தை இழுக்க பாஜக தலைவர்கள் முயற்சிப்பது குறித்து?
ரஜினிகாந்த் எல்லோருக்கும் பொதுவானவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழக மக்களும் தலைவர்களும் அவரை நேசிக் கின்றனர். எனவே, மதசார்பு கட்சியான பாஜகவுக்கு ரஜினி வரமாட்டார் என நினைக்கிறேன். தமிழக மக்களும் மதசார் பின்மையை எப்போதும் கடை பிடிப்பவர்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு தேர்தலிலும் அதை நிரூபித்து வருகின்றனர். இதை ரஜினி அறிந்திருப்பார் என நினைக்கிறேன்.
மோடியைவிட ரஜினி செல்வாக்கு மிக்கவர் என்று நினைத்து, அவரை பாஜக அழைக்கிறதா?
மோடி பிரபலமானவர் என்பதையே நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அவருக்கு எங்கும் செல்வாக்கு இல்லை. மோடி அலை என்பதே ஒரு மாயை. மோடியை மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தால், இடைத் தேர்தலில் குஜராத்திலும் ராஜஸ்தானிலும் பாஜக தோற்று, காங்கிரஸ் எப்படி ஜெயித்தது.
ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நினைக்கிறீர்களா?
ரஜினியைப் பொறுத்தவரை, மக்கள் மத்தியில் பிரபலமானவர். நல்ல மனிதர். மதசார்பு கடந்து, அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் அவரை நேசிக்கின் றனர். எனவே, அவர் ஒரு கட்சிக்குள் தன்னை அடைத்துக் கொள்ளமாட்டார் என்று நினைக்கிறேன். அவர் அரசியலுக்கு வராமல் இருப்பதே அவருக்கும் நல்லது, தமிழ்நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது. 


இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். 


thanx - the hindu