Showing posts with label நீதிபதி குன்ஹா. Show all posts
Showing posts with label நீதிபதி குன்ஹா. Show all posts

Tuesday, May 12, 2015

தீர்ப்பின் முக்கிய விவரங்கள்

சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை 'நிரபராதி' என விடுதலை செய்வதற்கான காரணங்களை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தனது 919 பக்க தீர்ப்பில் விவரித்துள்ளார்.
அதில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா ஏற்க மறுத்த ஆதாரங்களாக பலவற்றை சுட்டிக் காட்டியுள்ளார்.
குன்ஹா கடந்த செப்டம்பர் 27-ம் தேதி 1136 பக்க தீர்ப்பை அறிவித்தார். அதில் 1.7.1991 முதல் 1.4.1996 வரை ஜெயலலிதாவின் செலவினம் ரூ.8,49,06,833. இதே காலக்கட்டத்தில் வருமானம் ரூ.9,91,05,094. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த பலவற்றின் மதிப்பில் 20 சதவீதம் கழிவு வழங்கப்பட்டு 1.4.1996 அன்று ஜெயலலிதாவின் சொத்துமதிப்பு ரூ.55,02,48,215-ஆக இருந்தது.
பொது ஊழியர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்தது, நால்வரும் கூட்டுச்சதி செய்தது, பினாமியாக செயல்பட்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக நால்வரும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து, சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிடுகிறேன் என தீர்ப்பில் எழுதினார் குன்ஹா.
ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டை விசாரித்த கர்நாடக‌ உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி குன்ஹாவின் தீர்ப்பை முற்றிலுமாக நிராகரித்துள்ளார். தனது 919 பக்க தீர்ப்பில் குன்ஹாவின் தண்டனை, அபராதம், பறிமுதல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் நிராகரித்துள்ளார்.
ஜெயலலிதா மீது வழக்கு தொடுத்துள்ள தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கணக்குப்படி 1991-96 காலக்கட்டத்தில் வருமானத் துக்கு அதிகமான சொத்துமதிப்பு ரூ.66,65,20,396.ஆனால் நீதிபதி குன்ஹா கணக்கீட்டின்படி அவரது சொத்து மதிப்பு ரூ.53,60,49,954. இந்த மதிப்பில் பொது ஊழியரான ஜெயலலிதாவின் தனிப்பட்ட சொத்து மதிப்பு தனியாக கணக்கிடாமல் நால்வரின் மொத்த மதிப்பாக கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் அரசு தரப்பு கட்டிடங்களின் மதிப்பு, சுதாகரனின் திருமண செலவு, தனியார் நிறுவனங்களின் சொத்துகள் ஆகியவற்றை ஒன்றாக கருத்தில் கொண்டுள்ளது. அதனை நீதிபதி குன்ஹாவும் பரிசீலித்து முடிவுக்கு வந்துள்ளார். ஆனால் ஜெயலலிதா தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவரிடம் ரூ.2,82,36,812 மதிப் புள்ள சொத்துகள் இருந்ததற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. அதனை கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது.
இதேபோல குற்றம்சாட்டப் பட்டவரின் சொத்துகள், தனியார் நிறுவனங்கள், பிற சொத்துகள், கட்டுமான மதிப்பு ஆகியவற்றை சேர்த்து ரூ.27,79,88,945 என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சுதாகரனின் திருமண செலவு ரூ.6,45,04,222 தொகையும் சேர்த்து ஜெயலலிதாவின் மொத்த சொத்துமதிப்பு ரூ.66,44,73,573 என்று அரசு தரப்பு காட்டியுள்ளது.
இதில் உரிய ஆதாரங்கள் இல்லாமல் மிகைப்படுத்தி கணக்கிடப்பட்ட கட்டுமான மதிப்புத் தொகையையும் திருமண செலவு தொகையையும் நீக்கிவிட்டால், குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்து மதிப்பு ரூ.37,59,02,466 ஆக உள்ளது.
இதேபோல ஜெயலலிதா தரப்பின் சொத்துகள், நிறுவனங்கள் மற்றும் பிற வருவாய் 34,76,65,654 ரூபாயாக உள்ளது. இதில் வருமான வரி முறையாக செலுத்தப்பட்டதை நீக்கிவிட்டு கணக்கிட்டால், வருமானத்துக்கு அதிகமாக குவித்த சொத்துமதிப்பு ரூ.2,82,36,812 ஆகும். எனவே வருமானத்துக்கு அதிகமாக பொது ஊழியரான ஜெயலலிதா சேர்ந்த சொத்துகளின் விகிதாச்சாரம் 8.12% ஆகும். இது அவரது வருமானத்துடன் ஒப்பிடுகையில் மிகச்சிறிய தொகை.
கிருஷ்ணான‌ந்த் அக்னிஹோத்ரி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘வருமானத்துக்கு அதிகமாக 10% வரை அதிக சொத்துகள் வைத்திருக்கும் நபர்கள் விடுதலை செய்ய உரிமையுடையவர்கள்'என தீர்ப்பளித்துள்ளது. இதேபோல ஆந்திர அரசு அனுப்பிய சுற்றறிக்கை ஒன்றில் பொது ஊழியர் வருமானத்துக்கு அதிகமாக 20% வரை சொத்துகள் வைத்திருப்பது அனுமதிக்கக் கூடியதே என தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் இவ்வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக‌ 10%-க்கும் குறைவாக சொத்து வைத்துள்ள ஜெயலலிதா, உச்ச நீதிமன்றம் அனுமதிக்கப்பட்ட வரையறைக்குட்பட்டவர். எனவே ஜெயலலிதா குற்றமற்றவர் என்பதால் அவரை இந்த நீதி மன்றம் விடுதலைக்கு உரியவராக கருதுகிறது. குற்றம்சாட்டப் பட்டோர் பட்டியலில் முதன்மை யானவராக இடம்பெற்றிருக்கும் ஜெயலலிதாவே குற்றமற்றவர் என்பதால் மற்ற மூவரையும் விடுதலைக்கு உரியவர்களாக கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்மானிக்கிறது.
இதேபோல ஜெயலலிதா தரப்பு அபிராமபுரம் இந்தியன் வங்கியில் பெற்ற கடனை, கீழ் நீதிமன்றம் வருமானமாக கருதவில்லை. அந்தப் பிழையை கீழ் நீதிமன்றம் செய்யாமல் இருந்திருந்தால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகளாக கருத வேண்டிய நிலை கீழ் நீதிமன்றத்துக்கு ஏற்பட்டு இருக்காது'' என குமாரசாமி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.



thanx - the hindu