Showing posts with label நமக்கு நாமே பயணத்தில் ஸ்டாலினுக்கு 'ஞானோதயம்'!. Show all posts
Showing posts with label நமக்கு நாமே பயணத்தில் ஸ்டாலினுக்கு 'ஞானோதயம்'!. Show all posts

Tuesday, November 03, 2015

நமக்கு நாமே பயணத்தில் ஸ்டாலினுக்கு கிடைத்த 'ஞானோதயம்'!

கிருஷ்ணகிரி:  அரசியல்வாதிகளை தேடி மக்கள் செல்லக் கூடாது. மக்களை தேடித்தான் அரசியல்வாதிகள் செல்லவேண்டும் என்று தனது நமக்கு நாமே பயணத்தின் மூலம் தனக்கு தெரியவந்துள்ளதாக கூறியுள்ள திமுக பொருளாளர் ஸ்டாலின், எம்.எல்.ஏக்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை தங்களது தொகுதி மக்களை சந்திக்காவிட்டால், அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார்.

நமக்கு நாமே என்ற விடியல் மீட்பு பயணத்தை ஆரம்பித்து, தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். 

அதன் ஒரு அம்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டையை அடுத்த பென்னங்கூரிலிருந்து இன்று பயணத்தை துவங்கிய ஸ்டாலின், பல்வேறு கிராமங்களுக்கு சென்றார். அங்கு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அங்கிருந்து புறப்பட்டு தளி பகுதிக்கு சென்றவர், அங்கு தெலுங்கு, கன்னட மக்களை சந்தித்தார்

அப்போது அவர்கள், “ தி.மு.க ஆட்சியில்தான் கட்டாய தமிழ் வழிக்கல்வியை கொண்டு வந்தீர்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு பேசும் மொழி சிறுபான்மையினர் அதிகமாக இருக்கிறோம். தமிழ்வழிக்கல்வியால் எங்கள் பிள்ளைகள் பள்ளிப்படிப்பைக்கூட தாண்டமுடியாமல் தவிக்கிறார்கள். மொழி சிறுபான்மையினராக இருக்கும் எங்களுக்கு எங்கள் தாய்மொழியிலேயே கல்விகற்க அனுமதிக்க  வேண்டும்" என்று கோரிக்கைவிடுத்தனர். 

அதை கேட்டுக்கொண்ட ஸ்டாலின்,  தி.மு.க ஆட்சி அமைத்ததும் அது நிறைவேற்றப்படும் என்றார்.

அடுத்ததாக ஓசூர் யசோதா மஹாலில், தொழிலாளர்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு  பேசிய மு.க.ஸ்டாலின், “ நமக்கு நாமே பயணம் குறித்து சிலர் கேலி செய்கின்றனர். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. அவர்கள் அப்படி கேலி கிண்டல் செய்வதால் எனக்கு உற்சாகமும், ஊக்கமும் அதிகமாகியுள்ளதே தவிர சோர்ந்து போய் விடவில்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “பல இடங்களில் சுற்றுப்பயணம் செய்த எனக்கு ஒன்றுமட்டும் புரிந்து விட்டது. அரசியல்வாதிகளை தேடி மக்கள் செல்லக் கூடாது. மக்களை தேடித்தான் அரசியல்வாதிகள் செல்லவேண்டும். 

15 நாட்களுக்கு ஒருமுறை தனது தொகுதிக்கு சென்று மக்களை சந்திக்காத எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், கவுன்சிலர்கள் ஆகியோரை தகுதி நீக்கம் செய்யும் சட்டத்தை கொண்டு வருவது தப்பில்லை. இதற்கான சட்டத்தை மத்திய அரசு ஆதரவுடன்தான் கொண்டு வரமுடியும். தி.மு.க.,வினர், 15 நாட்களுக்கு ஒருமுறை தங்களது தொகுதி மக்களை சந்திக்காவிட்டால், இடைத்தேர்தல் நடத்தலாம் என்ற நடைமுறையை கொண்டு வர முயற்சி செய்வோம்” என்று முடித்தார்.

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: வீ.சதீஸ்குமார்

விகடன்