Showing posts with label தமிழ் பாடல்கள். Show all posts
Showing posts with label தமிழ் பாடல்கள். Show all posts

Monday, August 03, 2015

புலி - பற்றி கவிதைப்புலி வைரமுத்து பேட்டி

விஜய், சிம்புதேவன், தேவிஸ்ரீபிரசாத் கூட்டணியில் உருவாகிவரும் ‘புலி’ படத்தின் மொத்தப் பாடல்களையும் எழுதியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகவுள்ள நிலையில் வைரமுத்துவை சந்தித்தோம்.
“பாட்டு என்பது நீண்ட பயணத்துக்கு மத்தியில் ஒரு சிறு இளைப்பாறுதல். கதையாடலுக்கு மத்தி யில் ஒரு கலையாடல். அறிவின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்ற ரசிகனை உணர்ச்சியின் பின்னால் ஓடவைக்கும் உத்தி. இன்னும் சொல்லப்போனால் கதை என்பது கல்யாணம்; பாட்டு என்பது முத்தம். பல படங்களின் ஆயுள் முடிந்த பிறகும் படங்களுக்கு முகவரியே பாடல் கள்தான். பாமரர்களின் இலக்கியம் பாட்டு.
பாடல்களின் எண்ணிக்கை இப்போது குறை வதற்குக் காரணம் படத்தின் நீளம் குறைந்தது தான். 180 நிமிடங்களாக இருந்த சினிமா, 100 நிமிட மாகக் குறைக்கப்பட்டுவிட்டது. இதில் எத்தனை பாட்டு இடம்பெற முடியும்? வாலி சொன்னது என் நினைவுக்கு வருகிறது. ‘ஒரு காலத்தில் 30 பாட்டு என்றார்கள்; பிறகு 10 பாட்டு என்றார்கள்; பிறகு 8 பாட்டு என்றார்கள்; பிறகு 4 பாட்டு என்றார்கள். இப்போது நிப்பாட்டு என்கிறார்கள்’ என்றார். பாடல்கள் குறையலாம்; ஆனால் தவிர்க்க முடியாது’’ என்று பேசத் தொடங் கினார் வைரமுத்து. ‘புலி’ படத்தின் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கும் பூரிப்பு அவர் முகத்தில் தெரிந்தது.
‘‘மன்னவனே! மன்னவனே
மச்சமுள்ள மன்மதனே
தீக்கடலில் மீன்பிடிக்கும்
தென்னவனே!
கொள்ளை மாற மாட்டேன் உன்
கூண்டில் மாட்ட மாட்டேன்
சிறகு முளைத்த சிங்கம் நானே இப்போது…
- என்று இப்படத்தின் ஒரு பாட்டின் வரிகள் நகரும். நாயகன் விஜய், நாயகி ஹன்சிகா மோத் வானி, தேவி, வில்லன் சுதீப் ஆகியோர் ஒரே பாட்டுக்குள் தோன்றும் பின்னணியில் உருவாக்கப் பட்ட போட்டிப் பாடல் இது. தனித்த கவனத்தை ஈர்ப்பதோடு, பிரமிப்பையும் ஏற்படுத்தும் விதமாக இந்தப் பாடல் படமாக்கப்பட்டிருக்கிறது’’ என் றார். அவரிடம் தொடர்ந்து உரையாடியதிலிருந்து…
தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் திரைப் படப் பாடல்களை எப்படி பார்க்கிறீர்கள்?
இதிகாச - புராண காலம், வரலாற்றுச் சிந்தனைக் காலம், தேசியச் சிந்தனைக் காலம், திராவிடச் சிந்தனைக் காலம், பொதுவுடைமைச் சிந்தனைக் காலம், தமிழ் இயக்கச் சிந்தனைக் காலம், கூட்டுக்குடும்பச் சிந்தனைக் காலம், கிராமியச் சிந்தனைக் காலம் என்பவற்றையும் கடந்து நுகர்வுச் சிந்தனைக் காலத்தில் நிகழ்கால சினிமா நிலை கொண்டுள்ளது.
அதனால் காதல், போகம், கேளிக்கை என்ற வட்டங்களுக்குள் திரைப்படப் பாடல்கள் இயங்கி வருகின்றன. இந்த வட்டத்துக்குள்ளும் இலக்கியப் பாடல்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், என்னைப்போன்ற இலக்கியப் பசிகாரர் களுக்கு இந்தச் சின்னப் பாத்திரத்தில் படைக்கப் படும் விருந்து போதாது. நான் பெரிதினும் பெரிது கேட்பவன். வாழ்வியல் சார்ந்த உயர்ந்த பாடல் களை வழங்க வேண்டும் என்ற தீ தினந்தோறும் எனக்குள் புதிய கொழுந்துவிட்டு வளர்ந்து கொண்டே இருக்கிறது.
இன்றைய திரையுலகத் தில் என்னைப் போன்றவர்களின் தினவுக்குரிய தீனி குறைவு. என்னை முழுமையாக அள்ளி எடுத்துக்கொள்ளும் இயக்குநர்கள் மற்றும் திரைக் கதைகளுக்காக இன்னும் நான் காத்திருக்கிறேன். நுகர்வுக் கலாச்சாரத்தின் போக்கு சற்றே கவலை தருகிறது. ஆனால் திரைப்படங்களின் எண்ணிக்கையும் பாடலாசிரியர்களின் எண் ணிக்கையும்தான் ஆறுதலாக இருக்கிறது.
இன்றைய தலைமுறையினரிடையே தமிழ்ப் பற்றும், இலக்கிய நாட்டமும் உள்ளதா?
தமிழின் நிகழ்காலம் குறித்து வருந்துகிறேன். எதிர்காலம் குறித்து அஞ்சுகிறேன். இது தமிழுக்கு மட்டுமான பின்னடைவாக இல்லாமல் தேசிய மொழிகள் அனைத்துக்குமான பின்னடைவாகக் கருதுகிறேன். ஒரு தமிழன் என்பதால் தமிழ் மொழி குறித்துக் கூடுதல் கவலை அடைகிறேன். எழுத்து, பேச்சு என்ற இரண்டு வடிவங்களில்தான் ஒரு மொழி நிலை கொள்கிறது. தமிழ் படித்தால் என்ன பயன் என்று கருதுகிற ஒரு கூட்டம் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்விக்கு ஆற்றுப்படுத்துகிறது. காலப்போக்கில் தமிழ் எழுத்து அடையாளத்தை இழந்துவிட்டு பேச்சு மொழியாக மட்டும் சுருங்கிவிடும் விபத்து நிகழாது என்பதற்குக் காரணங்கள் குறைவாக உள்ளன.
தாய்நாட்டிலேயே தமிழன் மொரீசியஸ் தமிழன் ஆகி விடுவானோ என்று அஞ்சுகிறேன். இலங்கைத் தமிழன் நாட்டை இழந்தான். இந்தியத் தமிழன் மொழியை இழந்தான் என்றாகிவிட்டால் செவ்வாய்க் கிரகத்தில் குடியேறுபவனா தமிழ் பேசப் போகிறான்? தாய்மொழி என்பது வயிற்றுப்பாட்டுக்கானதல்ல; பண்பாட்டுக்கானது என்று தமிழினம் புரிந்துகொள்ள வேண்டும். மொழியை இழப்பவன் நிலத்தை இழக்கிறான். நிலம் இழப்பவன் அடையாளம் இழக்கிறான்.
மதுவுக்கு எதிராக பலரும் குரல் விடுத்து வருகிறார்கள். ஆனால் திரைப்படங்களில் மதுக் கலாச்சாரம் சார்ந்த காட்சிகள் குறைந்ததாக தெரியவில்லையே?
மது எந்த வடிவத்தில் இருந்தாலும், எந்த படிமத்தில் இருந்தாலும் அது தீங்குதான். மேல்நாட்டில் மது அருந்துவதற்கும், நம் நாட்டில் மது அருந்துவதற்கும் வேறுபாடு இருக்கிறது. மேல் நாட்டில் மதுவை அவர்கள் குடிக்கிறார்கள். நம் நாட்டில் மது மக்களை குடிக்கிறது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது மனித வளம்தான். மனிதர்களை மயங்க செய்துவிடும், மனிதர்களின் ஆற்றலை ஒடுக்கிவிட்ட ஒரு நாட்டில் எப்படி மேலெழும்ப முடியும் ஒட்டு மொத்த நாடும் திருந்தும்போதுதான் திரைத்துறை உள்ளிட்ட ஒவ்வொரு துறையும் திருந்தும்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவர் நீங்கள். பாடலாசிரியராக நீங்கள் அவரிடம் கற்றுக் கொண்டது என்ன?
ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து வயல் வெளிகளிலும், காடுகளிலும் திரிந்தபோது இசை, மொழி என்ற இரண்டையும் காற்று வழியாக எனக்கு கற்றுக்கொடுத்தவர் அவர். என்னுடைய 10 வயதுக்கு மேல் வடுகப்பட்டி பகவதி அம்மன் கோயில் படிக்கட்டுகளில் உட்கார்ந்துகொண்டு வீதிகளில் ஒலிபரப்பான பாடல்களைக் கேட்ட நாட்களைத்தான் என் வகுப்பறை நாட்களாக நினைக்கிறேன். பாடல்களில் மொழியின் இடம் என்ன என்பதை தெரிந்துகொள்ள வைத்தவர், எம்.எஸ்.வி.
அவரது பாடல்களை பாடிப் பாடி வளர்ந்ததால் மெட்டுக்குள் மொழியின் இடம் என்ன என்பதை பாடலாசிரியரான பிற்காலத்தில் தீர்மானிக்க எனக்கு வசதியாக இருந்தது.
வேறு என்னென்ன படங்களுக்கு தற்போது பாடல் எழுதுகிறீர்கள்?
கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’, சூர்யா நடிக்கும் ‘24’, விஷால் நடிக்கும் ‘பாயும் புலி’, கார்த்தி நடிக்கும் ‘காஷ்மோரா’, விக்ரம் பிரபுவின் ‘வாகா’, விஜய் சேதுபதியின் ‘இடம் பொருள் ஏவல்’ உள்ளிட்ட 20 படங்களுக்குப் பாடல்கள் எழுதி வருகின்றேன்.
உங்கள் பிள்ளைகள் மதன்கார்க்கி, கபிலன் வைரமுத்து ஆகியோர் திரைத்துறையில் ஈடுபட்டுள்ளது பற்றி?
“தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது”

நன்றி - த இந்து