Showing posts with label சேமியா. Show all posts
Showing posts with label சேமியா. Show all posts

Saturday, July 16, 2011

30 வகை சேமியா ரெசிபி (புகுந்த வீட்டில் சமைக்கும் குறிப்பிட்ட சில பெண்கள்க்கு மட்டும்)

30 வகை சேமியா ரெசிபி

'சேமியா' என்றதுமே... பாயசம், உப்புமா, கிச்சடி... அதிகபட்சம் கேசரி இவைதான் நம் நினைவுக்கு வரும். சின்ன வயதிலிருந்தே இப்படி ஒன்றிரண்டு அயிட்டங்களைத்தான் பெரும்பாலானவர்கள் சாப்பிட்டு இருப்போம்... சமைக்கத் தெரிந்து வைத்திருப்போம்!

இங்கே... சேமியாவைப் பயன் படுத்தி ஸ்வீட், சாதம், பிரியாணி, கேக் என்று விதம்விதமாக... சப்புக் கொட்ட வைக்கும் சுவையோடு செய்துகாட்டி அசத்தியிருக்கிறார் 'வெரைட்டி சமையல் ஸ்பெஷலிஸ்ட்’ கிருஷ்ண குமாரி ஜெயக்குமார். அத்தனை அயிட்டங்களையும் தனது கற்பனை வளத்தில், மிக அழகாக அலங்கரித் திருக்கிறார் 'செஃப்' ரஜினி!

இனி, மாதாந்திர மளிகை சாமான் லிஸ்ட்டில், 'ஐந்து பாக்கெட் சேமியா' என்று எழுதப் போகிறீர்கள்தானே!

ஸ்வீட் கோதுமை கோன்

திடீர் விருந்தாளிகளுக்கு, அதிரடியாக ருசியுடன் கூடிய பட்சணம் செய்ய வேண்டுமா? சப்பாத்திக்கு பிசைந்த மாவை, பெரிய வட்ட சப்பாத்தியாக இட்டு, ஒரு சின்ன மூடியால் வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளுங்கள். இந்தத் துண்டுகளை கோன் வடிவத்தில் மடித்து எண்ணெயில் பொரியுங்கள். உடனடியாக, பொடித்த சர்க்கரையில் புரட்டி எடுங்கள். சர்க்கரை ஜீராவிலும் முக்கி எடுக்கலாம். நடுவில் உள்ள இடைவெளியில் பாதாம், முந்திரி, செர்ரிப் பழம், ஜெம்ஸ் மிட்டாய் போன்றவற்றைச் செருகி விடுங்கள். சப்புக் கொட்டிச் சாப்பிடுவார்கள்.


மரவள்ளி பொரியல்! 

மரவள்ளிக் கிழங்கை உப்பு போட்டு வேக வைத்து, மழைக்கால மாலை வேளைகளில் சாப்பிடுவதுதான் பலருக்கும் வழக்கம். இதையே சைட் டிஷ்ஷாகவும் தயாரிக்கலாம். கழுவி, தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, குக்கரில் வேக வைக்கவும். வெந்த பின்பு தண்ணீரை வடித்து, உப்பு, காரம் சேர்த்து வதக்குங்கள். பிறகு, கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்தால்... சுவையான மரவள்ளிக் கிழங்கு பொரியல் ரெடி!


கலர்ஃபுல் லெமன் ரைஸ்! 

எலுமிச்சை சாதம் தயாரிக்கும்போது, கடலைப் பருப்புக்கு பதிலாக... பொட்டுக்கடலை போட்டு தாளித்து, கொஞ்சம் துருவிய கேரட்டை சேர்த்தால், பார்க்க கலர்ஃபுல்லாகவும் சுவையாகவும் இருக்கும். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.


மல்ட்டி பர்ப்பஸ் மாவு! 

பாசிப்பருப்பை வாசம் வரும் வரை கடாயில் வறுத்துக் கொள்ளுங்கள். இத்துடன், அரை பங்கு சர்க்கரை, உரித்த ஏலக்காய் ஏழெட்டு சேர்த்து, மிக்ஸியில் நைசாகப் பொடித்து, பாட்டிலில் சேமியுங்கள். தேவையானபோது தேங்காய்ப்பால் சேர்த்துக் கஞ்சி யாகக் குடிக்கலாம். அல்லது ஒரு கப் பாலில், ஒரு டேபிள்ஸ்பூன் மாவைக் கரைத்து, அடுப்பில் இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு, முந்திரிப்பருப்புடன் பாயசமாக பரிமாறலாம். உருக்கிய நெய் விட்டுப் பிசைந்து, பயத்தமாவு உருண்டையும் தயாரிக்கலாம்.


1.  சேமியா பிர்னி 

தேவையானவை: சேமியா - 2 டேபிள்ஸ்பூன், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 250 கிராம், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி, திராட்சை, சாரப்பருப்பு (மூன்றும் கலந்தது) - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன்,  பாதாம் பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: சேமியாவை சிறியதாக உடைத்து, அதனை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுக்கவும். பிறகு, கால் டம்ளர் பாலில் சேமியாவை வேகவிட்டு, வெந்ததும் ஆற வைக்கவும். மீதியுள்ள பாலுடன் சர்க்கரை சேர்த்து... அது நன்கு சுண்டும் வரை காய்ச்சவும். ஆறிய சேமியாவுடன் பாதாம் பவுடர், வறுத்த முந்திரி, திராட்சை, சாரப்பருப்பு, ஏலக்காய்த்தூள், சுண்ட வைத்த பால் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்; ஃபிரிட்ஜில் வைத்து 'ஜில்’ என்றும் பரிமாறலாம்.  

பாயசம் போல் கெட்டியாக இல்லாமல், தளர இருந்தால் ருசியாக இருக்கும். 

2. சேமியா பகளாபாத் 

தேவையானவை: சேமியா - ஒரு கப், தயிர் (புளிக்காதது) - முக்கால் கப், பால் - அரை கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் சேமியாவை வறுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, சூடானதும் வறுத்த சேமியாவைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு, தண்ணீரை நன்கு வடிகட்டி, அதனை ஆறவிடவும். ஆறியதும் தயிர், உப்பு சேர்த்துக் கிளறவும். கடாயில், எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அதில் சேர்த்துக் கலக்கவும். பிறகு பாலை தளர சேர்த்துக் கலக்கவும். நிறைவாக கொத்தமல்லி சேர்க்கவும்.
கூடுதல் சுவைக்காக... திராட்சை, மாதுளை முத்துக்கள், ஆப்பிள் துண்டுகள் சேர்த்துப் பரிமாறவும்.

3. சேமியா - தர்பூசணி கேசரி

தேவையானவை: சேமியா - ஒரு கப், தர்பூசணி ஜூஸ் - 2 கப், சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை - தலா 10.
செய்முறை: கடாயில் நெய் விட்டு, சேமியா, முந்திரி, திராட்சையைத் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தர்பூசணி ஜூஸ் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதித்த சில நிமிடங் களில் வறுத்த சேமியாவை சேர்த்து வேக விடவும். பாதி வெந்ததும், அதனுடன் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். பாத்தி ரத்தில் ஒட்டாமல் வந்ததும்... வறுத்த முந்திரி, திராட்சை, மீதியுள்ள நெய் சேர்த்துக் கிளறி இறக்கினால், கலர் பவுடர் சேர்க்காமலே இயற்கையான நிறத்துடன் சேமியா, தர்பூசணி கேசரி ரெடி!

4. சேமியா வடை 

தேவையானவை: சேமியா - ஒரு கப், தயிர் - முக்கால் கப், இஞ்சி - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, வெங்காயம் - ஒன்று, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தயிரை விட்டு சேமியா சேர்த்து 20 முதல் 30 நிமிடங்கள் ஊற விடவும். நன்கு ஊறியதும், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து வடை மாவு பதத்தில் கெட்டியாகப் பிசையவும். பிறகு, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, சிறுசிறு வடைகளாகத் தட்டி... சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் டெலீஷியஸ் சேமியா வடை ரெடி

சேமியா கிச்சடி
தேவையானவை: சேமியா - ஒரு கப், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி - கால் கப், பெரிய வெங்காயம் - ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு (மூன்றும் கலந்தது) - ஒரு டீஸ்பூன், நெய், எலுமிச்சம்பழச் சாறு - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, சேமியாவை வறுத்துக் கொள்ளவும். கழுவி, நறுக்கிய காய்கறிகளை 5 நிமிடம் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், வேக வைத்த காய்கறிகள் சேர்த்துக் கிளறவும். பிறகு, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு, வறுத்த சேமியாவை அதில் சேர்த்துக் கிளறி இறக்கவும். இறக்குவதற்கு முன் நெய், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து கலந்து கொள்ள... சுவையான கிச்சடி பரிமாறுவதற்குத் தயார்.

5. சேமியா வெஜ் பிரியாணி 

தேவையானவை: சேமியா - ஒரு கப், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி, காலிஃப்ளவர் (நறுக்கியது) - ஒரு கப், வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கியது), தக்காளி - ஒன்று, இஞ்சி-பூண்டு விழுது - ஒன்றரை டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாதூள் - தலா ஒரு டீஸ்பூன், முதல் தேங்காய்ப்பால் - ஒரு கப். இரண்டாம் தேங்காய்ப்பால் - 2 கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
தாளிக்க: பட்டை - ஒரு சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, பிரிஞ்சி இலை - ஒன்று, சோம்பு - கால் டீஸ்பூன்.

செய்முறை: பாத்திரத்தில் நெய், எண்ணெய் விட்டு, சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, சோம்பு போட்டுத் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறவும். நறுக்கிய காய்கறிகள், கரம் மசாலாதூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்துக் கிளறி, இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து வேக விடவும். காய்கறிகள் முக்கால் பதத்தில் வெந்ததும்... சேமியா, உப்பு சேர்த்துக் கிளறி முதல் தேங்காய்ப் பால், கொத்தமல்லி, புதினா சேர்த்து மிதமான தீயில் வைத்து பாத்திரத்தை மூடி வைக்கவும். வாசனை வந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

6.  சேமியா புலவு 

தேவையானவை: சேமியா - ஒரு கப், வெங்காயம், தக்காளி, கேரட், உருளைக்கிழங்கு - தலா ஒன்று, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,  பீன்ஸ் - 5, பச்சைப்பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, பச்சை மிளகாய் - 2.
செய்முறை: சேமியாவை வறுத்துக் கொள்ளவும். காய்கறிகளை வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் நெய், எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, பச்சை மிளகாய் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, வேக வைத்த காய்கறிகளுடன் உப்பு சேர்த்துக் கிளறி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பித்ததும் வறுத்த சேமியா சேர்த்து மெதுவாகக் கிளறி, வேக விடவும். வெந்து விட்டதற்கு அறிகுறியாக வாசம் வந்ததும் நெய் விட்டு கிளறி... நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கி சூடாகப் பரிமாறவும்.

7.சேமியா துவரம்பருப்பு பாத் 

தேவையானவை: சேமியா - ஒரு கப், துவரம்பருப்பு - அரை கப், மஞ்சள்தூள், வெந்தயம், சீரகம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை, சின்ன வெங்காயம் - 10, தக்காளி - ஒன்று, கீறிய பச்சை மிளகாய் - 2, பூண்டு (நசுக்கியது) - 4 பல், கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:  கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு , கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை: துவரம்பருப்புடன் மஞ்சள்தூள், வெந்தயம், சீரகம், பெருங்காயம் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். சேமியாவை என்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... அது சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன்... நசுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் 2 கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். வேக வைத்த துவரம்பருப்பு, வறுத்த சேமியா ஆகியவற்றை அதில் சேர்த்து, (கேஸ்) அடுப்பை 'சிம்’மில் வைத்து மூடி, வேக விடவும். வெந்ததும் கிளறி, நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கிப் பரிமாறவும்.

துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீரை மட்டும் பயன்படுத்திக் கூட செய்யலாம்.

8. தக்காளி சேமியா சூப் 

தேவையானவை: தக்காளி - 4, வேக வைத்த சேமியா - 2 டேபிள்ஸ்பூன், பால் - கால் கப், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி - தலா ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - ஒன்றரை டீஸ்பூன், கொத்தமல்லி, புதினா - சிறிதளவு,  சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளியை வேக வைத்து, தோலுரித்து, மிக்ஸியில் போட்டு சாறு ரெடி செய்யவும். கடாயில் வெண்ணெய் விட்டு சூடானதும்... பூண்டு, நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளிச் சாறு, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு, பாலில் சோள மாவைக் கரைத்துச் சேர்க்கவும். அந்தக் கலவையை அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன் வேக வைத்த சேமியா, மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்கு கலந்து  சூடாகப் பரிமாறவும்.
விருப்பப்பட்டால் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்

9. சேமியா புட்டிங்
தேவையானவை: வறுத்த சேமியா - முக்கால் கப், பால் - அரை லிட்டர், மில்க் மெய்ட் - அரை டின், வெனிலா எசன்ஸ், ரோஸ் மில்க் எசன்ஸ் - தலா 3 சொட்டு, சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்.
அலங்கரிக்க: முந்திரி, பாதாம், பிஸ்தா (அல்லது) டூட்டி ஃப்ரூட்டி.
செய்முறை: வறுத்த சேமியாவை பாலில் வேக வைக்கவும். வெந்ததும் அதனுடன் மில்க் மெய்ட் சேர்த்து நன்கு  கலக்கவும். அந்தக் கலவை கெட்டியானதும், அடுப்பிலிருந்து  இறக்கி, இரண்டு எசன்ஸையும் சேர்த்துக் கலந்து, ஒரு பாத்திரத்தில் விட்டு ஆவியில் 15-20 நிமிடம் வேக விடவும். வாசனை வந்ததும், வெளியே எடுத்து ஆற விடவும். பிறகு, ஒரு தட்டில் கவிழ்த்து வைத்தால் புட்டிங் ரெடி! இன்னொரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, அடுப்பில் வைத்து சூடாக்கி அது ப்ரவுன் கலர் ஆனதும், புட்டிங் மேல் பரவலாக விடவும். பிறகு, அதன் மேல் முந்திரி, பாதாம், பிஸ்தா அல்லது ரூட்டி ஃப்ரூட்டி கொண்டு அலங்கரிக்கவும்.
விருப்பப்பட்டால், அலங்கரிக்க, வெனிலா ஐஸ்கிரீம் வைக்கலாம். புட்டிங் மோல்டு இருந்தால் அதைப் பயன்படுத்தியும் செய்யலாம்.

 10. சேமியா குல்பி
தேவையானவை: சேமியா - அரை கப், பால் - ஒரு லிட்டர், சோளமாவு - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - அரை கப், வெனிலா எசன்ஸ் - 3 சொட்டு.
செய்முறை: சேமியாவை வறுத்து, வேக வைத்து ஆற விடவும். பாலுடன் சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சி, கரைத்த சோளமாவைச் சேர்க்கவும். அந்தக் கலவையை சிம்மில் வைத்து அடிப்பிடிக்காமல் கிளறவும். திரண்டு கெட்டியாக வரும்போது சேமியாவை சேர்த்து நன்கு கிளறவும். பிறகு அடுப்பில் இருந்து இறக்கி எசன்ஸ் சேர்த்து, ஆற விட்டு குல்பி 'மோல்டி’ல் விட்டு, ஃபிரிட்ஜில் வைக்கவும். குல்பி 'மோல்டு’ இல்லையென்றால், சிறுசிறு கிண்ணங்களில் விட்டு, ஃபிரிட்ஜில் வைக்கலாம். அவை நன்கு இறுகி 'செட்’ ஆனதும் வெளியே எடுத்து, தட்டில் வைத்துக் கவிழ்த்து எடுத்தால் குல்பி தயார்.  
விருப்பட்டால் பாதாம், முந்திரி, பிஸ்தா சேர்க்கலாம்.

11. சேமியா பக்கோடா 

தேவையானவை: சேமியா - ஒரு கப், பச்சரிசி மாவு, கடலை மாவு - தலா கால் கப், வெங்காயம் - ஒன்று (நீளமாக நறுக்கியது), இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து அரைத்த விழுது - ஒன்றரை டேபிள்ஸ்பூன், புதினா - சிறிதளவு, தயிர் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சேமியாவை எண்ணெய் விட்டு வறுத்து, கைகளால் நொறுக்கி, தயிரில் அரை மணி ஊற விடவும். ஊறியதும், அதனுடன் பச்சரிசி மாவு, கடலை மாவு, இஞ்சி பச்சைமிளகாய், சோம்பு விழுது, வெங்காயம், புதினா, உப்பு சேர்த்து நன்கு பிசிறிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், மாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, உதிர் உதிராக எண்ணெயில் போட்டு பொரித் தெடுக்கவும்.

12.  சேமியா கட்லெட் 

தேவையானவை: வறுத்த சேமியா - அரை கப், வேகவைத்த உருளைக்கிழங்கு - 2, கேரட் - ஒன்று, இஞ்சி, பச்சைமிளகாய், புதினா அரைத்த விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வறுத்த சேமியாவை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து, வேகவைத்த சேமியா, துருவிய கேரட், இஞ்சி, பச்சைமிளகாய், புதினா விழுது, உப்பு சேர்த்து நன்கு பிசையவும். அந்தக் கலவையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து விருப்பமான வடிவில் தட்டி, சூடான தவாவில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு முறுகலாக வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.  இதற்கு தக்காளி சாஸ் சரியான சைட் டிஷ்!

 13. சேமியா இட்லி 

தேவையானவை: சேமியா - ஒரு கப், இட்லி மாவு - ஒரு கப், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை: சேமியாவை வறுத்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு சில நிமிடங்கள் கழித்து வடிகட்டி எடுத்து ஆறவிடவும். இட்லி மாவில் கேரட், இஞ்சித் துருவல், ஆற வைத்த சேமியா சேர்த்து நன்கு கலக்கவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி, மாவுக் கலவையை தட்டில் விட்டு, ஆவியில் வேகவைத்து எடுக்க புதுச்சுவையில் சேமியா இட்லி தயார்.
இதற்குக் காரச் சட்னி பெஸ்ட் காம்பினேஷன்!

14. சேமியா கொழுக்கட்டை 

தேவையானவை: வறுத்த சேமியா - ஒரு கப், ரவை - அரை கப், தேங்காய்த்துருவல் - 2 டேபிஸ்ஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப் பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
பொடிக்க: மிளகு, சீரகம், கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.
செய்முறை: பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். வறுத்த சேமியாவை கைகளால் நொறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து... இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். அதில் உப்பு, தேங்காய்த் துருவல், ரவை, வறுத்த சேமியா, பொடித்து வைத்துள்ள பொடி சேர்த்து நன்கு வேக விடவும். வெந்ததும் இறக்கி ஆறவிட்டு, சிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுத்தால்... சூப்பரான சேமியா கொழுக்கட்டை பரிமாற ரெடி!

15. சேமியா பேர்ட்ஸ் நெஸ்ட் 

தேவையானவை: வறுத்த சேமியா - ஒரு கப், வேகவைத்து தோலுரித்த உருளைக்கிழங்கு - இரண்டு, துருவிய கேரட் - ஒன்று, வேகவைத்த பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன், நறுக்கிய புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வறுத்த சேமியாவை வேக வைத்து, தண்ணீர் இல்லாமல் வடிகட்டிக் கொள்ளவும். தண்ணீர் நன்கு வடிந்ததும், எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். அதை ஒரு தட்டில் 'பறவைக்கூடு’ போல் பரப்பவும். துருவிய கேரட், வேகவைத்த பச்சைப் பட்டாணி, ஒரு உருளைக்கிழங்கு, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள் சேர்த்துப் பிசிறி... கூட்டின் மேல் பரவலாகத் தூவி வைக்க கூடு ரெடி!
மீதமுள்ள உருளைக்கிழங்கில் பாதியை எடுத்து சிறு சிறு முட்டைகள் போல் உருட்டி கூட்டின் நடுவில் வைக்கவும். எஞ்சியுள்ள உருளைக்கிழங்கை எடுத்து பறவைபோல் செய்து நடுவில் வைத்து புதினா, கொத்தமல்லி தூவினால்... 'பேர்ட்ஸ் நெஸ்ட்’ தயார்.
பார்க்கவே வித்தியாசமாக இருப்பதால் இதனை குழந்தைகள் ஆசையுடன் சாப்பிடுவார்கள்.


16. சேமியா பொங்கல்
தேவையானவை: வறுத்த சேமியா - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, முந்திரி - 10, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நெய்யில் முந்திரி, சேமியாவை தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த சேமியா மற்றும் பாசிப்பருப்பை தனித்தனியே வேக விடவும். கடாயில் நெய், எண்ணெய் விட்டு சூடானதும்... கறிவேப்பிலை, மிளகு, சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி சேர்த்து தாளிக்கவும். அதனுடன், வேக வைத்த சேமியா, பாசிப்பருப்பு, உப்பு ஆகியவற்றை சேர்த்து சீராகக் கலக்கவும். பிறகு, நெய் சேர்த்து மீண்டும் நன்கு கிளறி பரிமாறவும். தொட்டுக் கொள்ள தேங்காய்ச் சட்னி கலக்கல் காம்பினேஷன்!

 17. சேமியா - மாம்பழ கீர் 

தேவையானவை: வறுத்த சேமியா - கால் கப், மாம்பழம் - ஒன்று, பால் - அரை லிட்டர், சர்க்கரை - கால் கப்.
செய்முறை: வறுத்த சேமியாவை பாலில் நன்கு வேக விடவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். மாம்பழத்தை பாதியாக வெட்டி, ஒரு பாதியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பால் - சேமியாக் கலவையை ஆற வைத்து, அரைத்த மாம்பழக் கூழை சேர்த்து நன்கு கலக்கி, நறுக்கிய மாம்பழத் துண்டுகளை மேலே போட்டு, 'ஜில்ஜில்’ என்று பரிமாறவும்.
விருந்தினர்களையும் குழந்தைகளையும் அசத்தும் அட்டகாசமான கீர் இது!

18.  சேமியா தோசை 

தேவையானவை: இட்லி மாவு - 2 கப், வேக வைத்த சேமியா - முக்கால் கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, வெங்காயம் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இட்லி மாவுடன் வேக வைத்த சேமியா, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு கலக் கவும். தோசைக்கல் சூடான தும் எண்ணெய் விட்டு தோசை வார்த்து, இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
புளித்துப் போகும் இட்லி மாவிலும் இதனை செய்யலாம்.  அனைத்து வகை சட்னியு டனும் பரிமாறலாம்.

 19/. சேமியா பனீர் க்ரிஸ்பி பால்ஸ் 

தேவையானவை: வேக வைத்த சேமியா - அரை கப், பனீர் - 100 கிராம், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன், சோள மாவு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பனீரைத் துருவி, அதனுடன் வேக வைத்த சேமியா, இஞ்சித் துருவல், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்துப் பிசையவும். பிறகு சோள மாவு சேர்த்து, கையில் உருட்டும் பதத்தில் பிசைந்து கொள்ளவும். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். அவற்றை சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும். எளிதில் செய்யக்கூடிய ஈவினிங் ஸ்நாக்ஸ் இது.


20. சேமியா - சோயா க்ரேவி 

தேவையானவை: சோயா உருண்டைகள் - 10, வேக வைத்த சேமியா - கால் கப், இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று (அரைத்துக் கொள்ளவும்), வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - ஒன்று, பட்டை - சிறிய துண்டு, கிராம்பு - 2, ஏலம், பிரிஞ்சி இலை - தலா ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டீஸ்பூன், நறுக்கிய புதினா, கொத்தமல்லி - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கொதிநீரில் சோயா உருண்டைகளைப் போட்டு 5 நிமிடம் வைத்து, பிறகு அவற்றை எடுத்து குளிர்ந்த தண்ணீரில் போட்டு பிழிந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதன் பிறகு இஞ்சி-பூண்டு விழுது, அரைத்த தக்காளி, வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்துக் கிளறி தண்ணீர் விட்டு சூடாக்கவும். லேசாக கொதிக்க ஆரம்பித்ததும் சோயா உருண்டை, உப்பு சேர்த்துக் கலக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும், வேகவைத்த சேமியா, புதினா, கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும். இது, பூரி மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்!

21.  சேமியா மஞ்சூரியன் 

தேவையானவை: வேக வைத்த சேமியா - ஒரு கப், வேக வைத்து தோலுரித்த உருளைக்கிழங்கு - ஒன்று, மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு - தலா 4 டேபிள்ஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - ஒன்று, பூண்டு - 2, இஞ்சி - சிறிய துண்டு (நறுக்கியது), குட மிளகாய் - ஒன்று, நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வேக வைத்த சேமியாவுடன் உருளைக்கிழங்கு, உப்பு, மிளகுத்தூள் இஞ்சி-பூண்டு விழுது, பாதியளவு சோள மாவு சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். மைதா மாவு, அரிசி மாவு, மீதமுள்ள சோள மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அதில் போட்டு எடுத்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு... பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு, சோயா சாஸ், நறுக்கிய குட மிளகாய் சேர்த்துக் கலந்து, பொரித்த உருண்டைகளைப் போட்டு நன்கு கலக்கவும். வெங்காயத்தாள் சேர்த்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

 22. சேமியா பான் கேக் 

தேவையானவை: சேமியா - முக்கால் கப், தண்ணீர் - கால் கப், முட்டை - 2, தேன் - ஒரு டேபிள்ஸ்பூன், பேகிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன், நெய் - சிறிதளவு.
அலங்கரிக்க: பொடித்த சர்க்கரை, முந்திரி, பாதாம் பொடி (அல்லது) டூட்டி ஃப்ரூட்டி.
செய்முறை: சேமியாவை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்துவிட்டு, அதனை நுரை வரும் அளவுக்கு அடித்துக் கொள்ளவும். அதனுடன் தேன், 'பேகிங் பவுடர்’, வேக வைத்த சேமியா, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். மிதமான தீயில் 'தவா’வினை வைத்து சூடானதும், நெய் விடவும். பிறகு மாவை தோசை போல் வார்த்து, திருப்பிப் போடாமல் சுடவும். அதன் மேல் பொடித்த சர்க்கரை, முந்திரி, பாதாம் பொடி அல்லது டூட்டி ஃப்ரூட்டி தூவி... ரோல் போல் சுருட்டிப் பரிமாறவும்.

23.  சேமியா - ரவை குழிப்பணியாரம் 

தேவையானவை: சேமியா - ஒரு கப், ரவை - அரை கப், பொடித்த வெல்லம் - ஒரு கப், வாழைப்பழம் - 2, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய்த் துண்டுகள் (பொடியாக நறுக்கி, வறுத்தது) - கால் கப்.
செய்முறை: சேமியாவை அரைமணி நேரம் ஊற விடவும். வெல்லத்தை தண்ணீரில் நன்கு கரைத்து வடி கட்டவும். ஊற வைத்த சேமியா, வெல்லக் கரைசல், ஏலக்காய்த்தூள், ரவை, பிசைந்த வாழைப்பழம், தேங்காய்த் துண்டுகள் சேர்த்து பணியார மாவு பதத்தில் கலக்கிக் கொள்ளவும். குழிப்பணி யாரக் கல்லை சூடாக்கி, அதில் நெய் விட்டு, மாவை ஒரு ஸ்பூனில் அளவாக ஒவ்வொரு குழியிலும் விட்டு, மிதமான தீயில் வேக வைத்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.

24.  சேமியா ஆம்லெட் 

தேவையானவை: வேக வைத்த சேமியா - அரை கப், முட்டை - 2, வெங்காயம், பச்சை மிளகாய் - ஒன்று, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், கேரட் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து விட்டு நுரை வருமளவு நன்கு அடித்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு, பச்சை மிளகாய், வெங்காயம், கேரட் துருவல், வேகவைத்த சேமியா, நறுக்கிய கொத் தமல்லி சேர்த்து நன்கு கலக்கவும். சூடான தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு இதனை வார்த்து, மிளகுத் தூள் தூவி இருபுறமும் சுட்டு எடுக்கவும்.

 25. சேமியா - ஓட்ஸ் - கீரை அடை 

தேவையானவை: சேமியா - முக்கால் கப், ஓட்ஸ் - அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய், சோம்பு அரைத்த விழுது - ஒரு டீஸ்பூன், கீரை நறுக்கியது - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சேமியா, ஓட்ஸ் இரண்டையும் தனித்தனியே அரைமணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் இரண்டையும் ஒன்றாக்கி, எண்ணெய் தவிர அனைத்துப் பொருட்களையும் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலந்து ஒரு மணி நேரம் ஊற விடவும். சூடான தோசைக்கல்லில் மாவை கொஞ்சம் தடிமனாக வார்த்து, இருபுறமும் எண் ணெய் விட்டு சுட்டெடுக்கவும். இதற்கு, காரச் சட்னி கரெக்ட் காம்பினேஷன்!

26.  சேமியா ஃப்ரூட் சாலட் 

தேவையானவை: வேக வைத்த சேமியா - 4 டேபிள்ஸ்பூன், வாழைப்பழம் - ஒன்று, மாதுளை முத்துக்கள் - கால் கப், கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை (கலந்தது) - 2 டேபிள்ஸ்பூன், பப்பாளி துண்டுகள் - ஒரு டீஸ்பூன், ஆப்பிள் - ஒன்று (நறுக்கியது), வெனிலா ஐஸ்கிரீம் - ஒரு கப், தேன் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் பழங்கள் அனைத்தையும் போடவும். வேக வைத்த சேமியாவை அவற்றுடன் சேர்த்து நன்கு கலந்து, வெனிலா ஐஸ்கிரீம் சேர்த்து மீண்டும் சீராகக் கலக்கவும். அதன் மீது தேன் விட்டு, ஃபிரிட்ஜில் வைத்து 'ஜில்’ என்று பரிமாறவும்.


27.  சாக்லெட் சேமியா 

தேவையானவை: பால் - 800 மி.லி, சாக்லெட் - 75 கிராம், சேமியா - 50 கிராம், பொடித்த சர்க்கரை - 75 கிராம், வெனிலா எசன்ஸ் - 3 சொட்டு.
செய்முறை: மொத்தம் உள்ள பாலில், முக்கால் பங்கு பாலை காய்ச்சவும். அதில் சேமியாவைப் போட்டு வேக விடவும். மீதி பாலில், 'சாக்லெட்’டைத் துருவி அதனுடன் சேர்த்து நன்கு சூடாக்கவும். மிதமான தீயில் வைத்து சூடாக்கும்போது, சாக்லெட் சீராக உருகும். மொத்தமும் உருகி நன்கு கலந்ததும் வேக வைத்த சேமியா - பால் கலவையுடன் சேர்த்து... பொடித்த சர்க்கரை, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்க, சாக்லெட் சேமியா தயார்!
குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

 28. சேமியா அடை 

தேவையானவை: சேமியா - ஒரு கப், புளித்த தயிர் - ஒரு கப், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 2, வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - ஒன்று, கேரட் (துருவியது) - ஒன்று, நறுக்கிய புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வறுத்த சேமியாவை, ஒரு மணி நேரம் தயிரில் ஊற விடவும். ஒன்றரை மணி நேரம் கழித்து அதனுடன் இஞ்சித் துருவல், பச்சைமிளகாய், கேரட் துருவல், வெங்காயம், புதினா, கொத்தமல்லி, உப்பு நன்கு சேர்த்து அடை மாவு பதத்தில் கலக்கவும். சூடான தவாவில் மாவை வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு, வெந்ததும் எடுத்து, சூடாகப் பரிமாறவும்.
அனைத்துவிதமான சட்னி யுடனும் சாப்பிடலாம்.

29.  சேமியா வாங்கி பாத் 

தேவையானவை: வேக வைத்த சேமியா - ஒன்றரை கப், பிஞ்சுக் கத்திரிக்காய் - 8, வெங்காயம் - 2, புளிக் கரைசல் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, சிவப்பு மிளகாய் - 2, கடுகு - கால் டீஸ்பூன், கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், கரம் மசாலா தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,  நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, அது சூடான தும் கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கத்திரிக்காய் சேர்த்து வதக்கிய பிறகு,  பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். காய் நன்கு வதங்கியதும் புளிக் கரைசல், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து, சிறிது நீர் தெளித்து வேக விடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது வேக வைத்த சேமியா சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்.

நன்றி - அவள் விகடன்