Showing posts with label செக்ஸ் கல்வி. Show all posts
Showing posts with label செக்ஸ் கல்வி. Show all posts

Wednesday, October 28, 2015

சுயஇன்பம்/மாபெரும் குற்றம் அல்ல-சித்த மருத்துவர் க. சங்கர்

என்னுடைய 10-வது வயதிலிருந்து சுயஇன்பம் அனுபவித்து வருகிறேன். இதனால் தற்போது உயிரணுக்களின் அளவு குறைந்திருக்குமோ என்ற அச்சம் உண்டாகியிருக்கிறது. அதோடு ஆணு றுப்பு விறைப்படைவதற்கும் காலதாமதம் ஆகிறது. எனக்கு ஆலோசனை கிடைக்குமா?
- சரவணகுமார்
இக்கேள்விக்கு செங்கல்பட்டைச் சேர்ந்த சித்த மருத்துவர் க. சங்கர் பதில் அளிக்கிறார்:
சுயஇன்பத்தை மாபெரும் குற்றச் செயலாக நினைப்பது தவறு. பருவ வயதில் ஏற்படும் உளவியல்ரீதியான ஆர்வக்கோளாறுதான் இது. ஆனால், அதுவே ஒரு கட்டாயமாக மாறும்போது உடல் சோர்வு, மனத்தளர்வு போன்ற உபாதைகள் உண்டாகும். எனவே, அந்த எண்ணத்திலிருந்து விடுபட முயலுங்கள். உங்களுக்கு விறைப்படைதல் சற்று தாமதப்படுதல் சில நேரம் இயல்புதான். உடல் அசதி, மனச்சோர்வு இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
நல்ல உணவு, எளிய உடற்பயிற்சிகள், முறையான யோகா பயிற்சிகள் போன்றவை இதற்கு உதவும். பழங்களில் மாதுளை, செவ்வாழை நல்லது. கீரைகளில் முருங்கை மற்றும் புளிச்ச கீரை மிகவும் நல்லது. வாரம் இரு முறை மீன் மற்றும் ஆட்டிறைச்சி உண்பது பலன் தரும். வாரம் ஒரு முறை வேகவைத்த உருளைக் கிழங்கை மிளகு தூவியும், வாழைப்பூவும் சாப்பிட்டுவாருங்கள்.

தஹிந்து

பதின் பருவம் புதிர் பருவமா? 6 - புதுப்புது சந்தேகங்கள் முளைக்கும் காலம்

ஓவியம்: முத்து
ஓவியம்: முத்து
‘செக்ஸ்’. இந்த வார்த்தையைக் கேட்டவுடன் காதை பொத்திக்கொண்டு ஓடுபவர்களும், ‘களுக்' என்று வாயை மூடிக்கொண்டு நமுட்டுச் சிரிப்பு சிரிப்பவர்களுமே அதிகம். இதன் காரணமாகவே வளரிளம் பருவத்தினர் 'செக்ஸ்' என்பது பாவமான காரியம் என்றோ அல்லது கேலிக்குரிய செயல் என்றோ குழப்பத்தில் தத்தளிக்கின்றனர்.
உலகில் எத்தனையோ பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் மனிதர்களுக்கு, இன்னும் பல நேரங்களில் புரியாத புதிராய் இருப்பது செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்கள்தான். அதிலும் இந்தியர்களுக்குப் பாலியல் குறித்த சந்தேகங்களும், அதனால் ஏற்படும் மனக்குழப்பங்களும் அதிகம்.
இதைத்தான் மனநலப் பேராசிரியர் ஒருவர் நகைச்சுவையாக இப்படிச் சொன்னார்: "ஆங்கிலேயர்கள் செக்ஸை இனப்பெருக்க உறுப்புகளில் (Genitals) வைத்து முடித்துவிடுவார்கள், ஆனால் இந்தியர்கள் அதை எப்போதும் மனதிலேயே (Mind) வைத்திருப்பார்கள்".
உளவியல் அடிப்படை
‘செக்ஸ் உணர்வு என்பது மனிதர்கள் குழந்தைகளாக இருக்கும் போதே உருவாகிவிடுகிறது. ஆனால், அது வெவ்வேறு வழிகளில் வெளிப்படுகிறது' என்று உளப் பகுப்பாய்வின் தந்தை சிக்மண்ட் ஃபிராய்ட் கூறுகிறார். இப்படிச் சொன்ன தற்காகப் பல எதிர்ப்புகளை அவர் சம்பாதித்தார்.
அவருடைய கூற்றுப்படி பாலியல் உணர்வை ஒரு விதைக்குள் இருக்கும் மரத்தோடு ஒப்பிடலாம். ஊன்றப் பட்டதிலிருந்து மண்ணுக்குள்ளிருந்து வெளியே வரும்வரை வெளியில் தெரியாமல் இருக்கும். அந்த விதை செடியாக வளரும் பருவம் போலத்தான், விடலைப் பருவமும். பதிமூன்று வயதில்தான் பாலியல் உணர்வுகள் வெளிப்படையாகத் தோன்ற ஆரம்பிக்கும். சில வருடங்களில் அது தீவிரமடையும், பரிசோதித்துப் பார்க்க முயற்சி செய்யும்.
பாலியல் தேடல்
இந்த ஆர்வத்தில்தான் ‘குழந்தை எப்படிப் பிறக்கிறது?’ என்றும் ‘திருமணமன்று கழுத்தில் தாலி கட்டிவிட்டால் குழந்தை பிறந்துவிடுமா?’ என்றும் ஏடாகூடமான கேள்விகளைச் சில வளர் இளம்பருவத்தினர் பெற்றோரிடமே கேட்டுவிடுவார்கள். கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைக்காதபட்சத்தில், அவர்களுடைய தேடல் ஆரம்பித்துவிடும்.
‘அய்யய்யோ... இந்தப் புள்ள இப்படியெல்லாம் பேசுதே!' ன்று பெற் றோர் கவலைப்படத் தேவையில்லை. மனிதனின் முக்கிய அடிப்படைத் தேவைகள் மூன்று. அந்த வகையில் உணவு, தூக்கத்துக்கு அடுத்துச் செக்ஸுக்கு மூன்றாவது இடம். அதனால்தான் பெரும்பாலான விடலைப் பருவத்தினர் தங்கள் ரகசியக் கேள்விகளுக்கான விடைகளை ராத்திரி 11 மணிக்கு மேல் டிவி சேனல்களிலோ, வலைதளங்களிலோ தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
எதிர்பாலின ஈர்ப்பு
கிட்டத்தட்ட 12 வயதுவரை பெண் குழந்தைகளுடன் உட்கார விரும்பாத ஆண் குழந்தைகள் ‘பதின்பருவ' வயதில் பெண் குழந்தைகளுடன் ஒன்றாக உட்கார ஆசைப்படுவார்கள். அதேபோல, ஆண் குழந்தைகளைப் போட்டியாளர்களாகப் பாவிக்கும் பெண் குழந்தைகள், பதின் பருவத்தில் ஆண் குழந்தைகளின் மீது கரிசனம் காட்டத் தொடங்குவார்கள்.
வளர் இளம்பருவத்தில் எதிர்பாலினத்தவருடன் பழக வேண்டும், நட்புகொள்ள வேண்டும் என்ற ஆசை அரும்புவிட ஆரம்பிக்கும். இதுவும் சமூகப் பழக்கங்களைக் கற்றுக்கொள்ள ஒருவகையில் உதவி செய்யும், இயற்கையின் உந்துதல்தான். இந்த ஈர்ப்பு, வளர் இளம்பருவத்தினர் மத்தி யில் காதலாக மாறவும் வாய்ப்புண்டு.
ஹார்மோன் விளையாட்டு
ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோனும், பெண்களுக்கு ஈஸ்டிரோஜன், புரொஜெஸ்டீரான் என்ற ஹார்மோன்களும் செய்யும் வேலையால் உடலிலும் மனதிலும் பலவிதமான பாலியல் ரீதியான மாற்றங்கள் தோன்ற ஆரம்பிக்கும்.
பையன்களுக்கு மீசை மற்றும் உடலில் ரோம வளர்ச்சியும், பெண் குழந்தைகளுக்கு மார்பக வளர்ச்சி, உடல் வடிவங்களில் மாற்றம் மற்றும் மாதவிடாய் ஆரம்பிப்பதும் இந்தப் பருவத்தில் நுழைவதற்கான லைசென்ஸ் என்றே கருதலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் மட்டுமல்ல, உடல் மற்றும் பாலியல் வளர்ச்சியிலும் முதலிடம் பெண்களுக்குத்தான். ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பின் வளர்ச்சி வேகமடைவதும் விடலைப்பருவம்தான்.
ஒப்பிடுதல்
ஆணுறுப்பு வளரும் இந்த நேரத்தில்தான் பையன்களுக்குப் பல சந்தேகங்கள் வரும். நண்பர்களுடன் அடிக்கடி இதைப் பற்றி பேசுவதால் ஆணுறுப்பின் வளர்ச்சியைக் குறித்த பயம் ஏற்படும். பாலியல் மீதான எதிர்பார்ப்பு கூடுவதற்கு ஏற்ப, ஆணுறுப்பின் வளர்ச்சியையும் எதிர்பார்ப்பார்கள். பள்ளியில் சிறுநீர் கழிக்கும்போது நண்பர்களின் ஆணுறுப்பின் அளவை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக எட்டிப்பார்க்கவும் கூச்சப்பட மாட்டார்கள்.
தங்கள் ஆணுறுப்பு சிறிதாக இருக்கிறது என்று தோன்றுகிற பட்சத்தில், மொத்தப் பாலியல் வாழ்க்கையுமே பாழாகிப்போனது போன்ற கவலை அவர்களைத் தொற்றிக் கொள்ளும். போதாக்குறைக்குப் புத்தகங்களிலும் வலைதளங்களிலும் வரும் ‘இந்தக் கிரீமை உபயோகித்தால் பல சென்டிமீட்டர் அளவுக்குக் கூட்டலாம்’ என்பது போன்ற விளம்பரங்கள் வேறு, அவர்களை அதிகப் பதற்றமடைய வைக்கும். ஆனால், ஆணுறுப்பின் அளவுக்கும் பாலியல் செயல்பாடுகளுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுதான் மருத்துவரீதியில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை.
மார்பக வளர்ச்சி
ஆண்களுக்கு ஆணுறுப்பைப்போல, பெண்களுக்கு மார்பக வளர்ச்சியில் பல சந்தேகங்களும் பயங்களும் தோன்றும். மார்பக வளர்ச்சி குறித்துத் தோழிகளுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்த்துப் பதற்றமடைவதும் இயற்கை. தாயிடம் இருக்கும் நல்ல உறவு, அவர்களுடைய சந்தேகங்களைத் தீர்க்க உதவும்.
மாதவிடாய் குறித்த பயம், அது வரும் நாட்களில் உடல், மனரீதியாக ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆலோசனை பெறுவது மிக அவசியம். சிலருக்கு மாதவிடாய் ஆரம்பிக்கும் முன் ஐந்து நாட்கள் அதிகப் பதற்றம், தூக்கமின்மை, மார்பு கனமாகத் தோன்றுதல், எரிச்சல்தன்மை, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதற்கு premenstrual syndrome என்று பெயர். இதைச் சமாளிக்க ஆரோக்கியமான உணவு, போதிய ஓய்வுடன் சிலநேரம் மாத்திரைகளின் உதவியும் தேவைப்படலாம்.
(அடுத்த முறை: கலக்கம் தரும் திடீர் கனவு)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர் 
தொடர்புக்கு: [email protected]


தஹிந்து