Showing posts with label சூரிய பகவான். Show all posts
Showing posts with label சூரிய பகவான். Show all posts

Sunday, June 12, 2011

சூரிய பகவான் செய்த பாவங்கள் + சாப விமோசனம் பெற்ற கதை ( ஆன்மீகம்)

http://www.mazhalaigal.com/images/issues/mgl0809/im0809-63_satyabhama.jpgஎட்டு தேவதைகள் பாடிய ஸ்ரீலலிதா சகஹ்ரநாமம்!

லலிதாம்பிகையே சரணம்!

ருப்பதிலேயே மிகப்பெரிய பாவம், இறைவனைத் தரிசிப்பதற்கு ஆசைப்படும் ஒருவருக்கு, முட்டுக்கட்டை போடுவதுதான்! ஒருவரது அங்கக் குறைபாட்டினைச் சுட்டிக்காட்டி ஏளனம் செய்வதும் மகாபாவம். சூரிய பகவான் இந்த இரண்டு பாவங்களையும் செய்தார்!


சூரியனின் ரதத்தினைச் செலுத்துகிற அருணன் அங்க ஹீனம் கொண்டவன்; அவனுக்கு திருக்கயிலாயத்துக்குச் சென்று சிவனாரைத் தரிசிக்கவேண்டும் என விருப்பம். சூரியனிடம் அனுமதி கேட்டதற்கு, மறுத்ததுடன் உடற் குறையைச் சொல்லி ஏளனம் செய்தான். சிவபக்தியில் திளைத்திருந்த அருணன், மோகினிப் பெண்ணாக உருவெடுத்தான்;

 திருக்கயிலாயம் புறப்பட்டான்; மோகினியின் அழகில் மயங்கினான் இந்திரன். இதில் உருவானவன்தான் வாலி. ஆயிற்று. சிவதரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில்திரும்பி வந்த அருணன், சூரியனாரிடம் விஷயத்தைச் சொன்னான். 'மோகினிப் பெண்ணாகவா? உருவம் மாறிச் சென்றாயா? எங்கே மாறிக்காட்டு’ என்றார். அருணன், மோகினியாக மாறினான். அவளது அழகில் சூரியனும் மயங்கினான். விளைவு... சுக்ரீவன் பிறந்தான்.


தனது பக்தனைத் தடுத்து, அவனது ஊனத்தைக் கிண்டல் செய்ததைச் சும்மா விடுவாரா, சிவனார்? சூரியனைச் சபித்தார். இருளடைந்து போனார் சூரியனார். 'ஏழு மாதங்கள், மேகமண்டலத்தில் எங்களை யானை மீது வைத்து பூஜித்து வா. அப்போதுதான் உனது சாபம் தீரும்’ என அருளினார்

. இதையடுத்து சூரியனார், மேகமண்டலத்தில் யானை மீது, சிவ-பார்வதியை வைத்து பூஜை செய்யத் துவங்கினார். ஆனால், ஏழு மாதங்கள் நிறைவுறுவதற்கு முன்பே, சிவனாரிடம் சென்று, 'என்ன இது... இன்னும் சாப விமோசனம் தரவில்லையே?’ எனக் கேட்க... வெகுண்டாள் ஸ்ரீபார்வதி. 'உரிய காலம் வரும்வரை பொறுக்க மாட்டாயா?’ என்று கடும் உக்கிரத்துடன் சூரியனாருக்குச் சாபம் கொடுக்க எழுந்தாள். பதறிப்போன சிவனார்,

 'ஏற்கெனவே கொடுத்த சாபத்தால் இருளில் மூழ்கினான் சூரியன். இன்னொரு சாபம் கொடுத்தால், இந்த உலகம் இருளில் விழிபிதுங்கித் தவிக்கும். வேண்டாம் தேவி, சாந்தமாக இரு!’ என்று உமையவளை அமைதிப்படுத்தினார். பிறகு உரிய காலம் வந்ததும், சூரியனாருக்குச் சாப விமோசனம் அளித்தார். அவரின் திருமுகமும் இந்த உலகமும் பழையபடி இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வந்தது!


சூரியனாருக்கு அருளிய ஈசன், ஸ்ரீமேகநாதர் எனும் திருநாமத்துடன், கஜபிருஷ்ட விமானத்தின் கருவறை யில், அனைவருக்கும் அருள்புரிந்து வருகிறார். அந்தத் திருத்தலம், திருமீயச்சூர். இங்கே, ரதசப்தமி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

 அதுமட்டுமா? சித்திரை மாதம் 21-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை, ஸ்வாமியின் மீது தனது கதிர்களால், பூஜிக்கிறார் சூரிய பகவான்!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருமீயச்சூர் தலத் துக்கு, ஏகப்பட்ட சிறப்புகள் உண்டு. ஸ்ரீசனீஸ்வரர், எமதருமர், அருணன், கருடன், வாலி, சுக்ரீவன் ஆகிய ஆறு பேரின் அவதாரத் தலம் இது!

திருமீயச்சூர் தலத்துக்கு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் என எங்கிருந்தெல்லாமோ ஏராளமான அன்பர்கள், தினந்தோறும் வந்தபடி இருக்கின்றனர்; சிலிர்ப்பும் பக்தியும் பொங்க, தரிசித்துச் செல்கின்றனர்.  காரணம்... இந்தத் தலத்தின் நாயகி, ஸ்ரீலலிதாம்பாள்!

இந்த உலகின் எல்லா இடங்களில் இருந்தும், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து, அவளை அனுதினமும் மனமுருகிப் பிரார்த்திப்பவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது! அதனைப் பாராயணம் செய்தாலே, மன பாரமெல்லாம் போய்விடும் எனச் சொல்வார்கள், பக்தர்கள்! அப்பேர்ப்பட்ட, சக்தியும் சாந்நித்யமும் கொண்ட ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் உருவான திருத்தலம், திருமீயச்சூர்!

பண்டாசுரன் எனும் அரக்கனால், துன்பங்களுக்கு ஆளான தேவர்கள், ஈசனின் திருவடியைச் சரணடைந்து கதறினர். அரக்கனை அழிக்க, ஸ்ரீபார்வதியை ஸ்ரீலலிதையாக அவதரிக்கச் செய்தார், சிவனார். கடும் உக்கிரத்துடன் தோன்றிய ஸ்ரீலலிதை, சகஸ்ர கோடி வருடங்கள், அரக்கனுடன் யுத்தம் செய்தாள்; இறுதியில் அவனை அழித்தொழித்தாள்.

 ஆனாலும் அவளது உக்கிரம் தணியவில்லை. 'இந்தக் கோபம், பூமிக்கும் மக்களுக்கும் நல்லதல்ல’ என்பதால், 'ஸ்ரீபுரத்தில் தவம் செய்தால், உனது உக்கிரம் தணியும்’ என அருளினார் சிவபெருமான். இதையடுத்து ஸ்ரீலலிதை ஸ்ரீபுரத்துக்கு வந்தாள்; அங்கே கடும் தவம் புரிந்தாள். அவளுக்குள்ளிருந்து 'வாக் தேவதைகள்’ எட்டுப்பேர் வெளிவந்தனர். ஸ்ரீலலிதையைச் சுற்றி வட்டமாக நின்றனர். ஸ்ரீலலிதையின் கூந்தல், கண்கள், கன்னம், நெற்றி, திருப்பாதம் என அவளது அழகை வியந்து, பாடினர்.


'அடடா... இத்தனை அழகா எனது கண்கள்? பிறகு ஏன் இவ்வளவு கொடூரமாகப் பார்க்கவேண்டும்?! என் கன்னமும் நெற்றியும் அழகு பொருந்தியிருக்கிறதா? அப்புறம் எதற்காக, முகத்தை உக்கிரமாக வைத்திருக்கவேண்டும்?! நெடுநெடுவென, கரிய நிறத்தில் வளர்ந்திருக்கிறதாமே கூந்தல்?! அந்தக் கூந்தலை தலைவிரி கோலமாகவா வைத் திருப்பது?!’ என யோசித்தாள்

. எட்டுத் தேவதைகளும் அந்தஸ்தோத்திரத்தைப் பாடப்பாட... அவளது உக்கிரம் காணாமல் போனது; அவளுக்குள் சாந்தமும் கருணையும் பொங்கிப் பிரவாகித்தன! அதே தலத்தில் இருந்தபடி, அன்பர்களுக்கு அருட்கடாட்சத்தை அள்ளித்தர திருவுளம் கொண்டாள்.

இதோ... இன்றளவும், உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு, ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எவர் பாடினாலும், அவர்களது சகல தோஷங்களையும் போக்கி; சகல ஐஸ்வரியங் களைத் தந்து மகிழ்கிறாள்; மகிழ்விக்கிறாள்! இங்கே, ஸ்ரீசதா சிவலிங்க பீடத்தில், ஸ்ரீசக்ரத்தில் நின்றபடி, அகில உலகத்தையும் ஆட்சி செய்கிறாள், ஸ்ரீலலிதாம்பிகை!

வருடம் முழுவதும், இங்கே தேர்க்கூட்டம்; திருவிழாக் கூட்டம்தான்! ஸ்ரீலலிதாம்பிகைக்கு அன்னப்பாவாடை சார்த்தும் வைபவம், வருடத்தில் மூன்று முறை நடை பெறுகிறது. நவராத்திரியில்..

. விஜயதசமியிலும், மாசி மாதத்தின் அஷ்டமி நாளிலும், வைகாசி - பௌர்ணமியின் போதும் அன்னப்பாவாடை சார்த்தும் வைபவத்தைக் காண, வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.

 சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வெண் பொங்கல், பட்சணங்கள், பழ வகைகள் என வைத்து, நெய்யை ஊற்றிக் குளம் போலாக்கிவிடுவார்கள்

. அம்பிகையின் சந்நிதிக்கு முன்னேயுள்ள அர்த்த மண்டபத்தில் இதனை வைத்திருக்க... குளம் போல் ததும்பியிருக்கும் நெய்யில், அம்பிகையின் திருவுருவம் பிரதிபலிக்கும் அழகே அழகு!


இந்த ஆலயம், வேளாக்குறிச்சி ஆதீன மடத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. காஞ்சி மகான், இந்த வழியே வரும் போது, ஸ்ரீலலிதாம்பிகையைத் தரிசிக்காமல் செல்லமாட்டாராம்! ஒருமுறை, பெரியவா இந்தத் தலத்துக்கு வந்தபோது, பக்தர் கூட்டத்தில்,  மகானைத் தரிசித்த பரவசம்!


அவர்களை ஆசீர்வதித்த மகா பெரியவா, ''இது சாதாரண தலமல்ல; மிக உன்னதமான புண்ணிய க்ஷேத்திரம். பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால்தான், இங்கு வரமுடியும்; அப்படி வந்து தரிசித்தீர்கள் என்றால், ஏழேழு ஜென்மத்துக்கும் உங்களைக் காப்பாள், ஸ்ரீலலிதாம்பிகை!'' என அருளினாராம்!
http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/nnozizi//mywebdunia/UserData/DataB/bakthi/images/restricted/07-04-2009/suryanar_1.jpg

மாதா ஜெயஓம்...
ஸ்ரீலலிதாம்பிகையே சரணம்!





12 ராசிகள்; 12 நாகர்கள்!   
ஸ்ரீசனீஸ்வரரின் அவதாரத் திருத்தலம்; ஸ்ரீசூரியனாரின் சாபம் போக்கிய தலம். ஆகவே இங்கே நவக்கிரகங் களுக்குச் சந்நிதி இல்லை. மாறாக, 12 ராசிகளுக்கு உரிய 12 நாகர்களும் உள்ளனர். இவர்களுக்கு தீபமேற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால், ராகு - கேது முதலான சகல தோஷங்களும் விலகும்; திருமணம் முதலான அனைத்து வரங்களும் கிடைக்கும்!


ரதசப்தமி விசேஷம்!   

சூரிய பகவானின் சாபம் போக்கிய இந்தத் திருத் தலத்தில், ரதசப்தமி விழா விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. திருமலைத் திருப்பதி தலத்தில், சந்திர புஷ்கரணியிலும் திருமீயச்சூரில் சூரிய புஷ்கரணியிலும் ரதசப்தமி விழா அன்றைய நாளில் நடைபெறுமாம்! பஞ்ச மூர்த்தி புறப்பாடு, சிறப்பு வழிபாடு, சூரிய புஷ்கரணியில் தீர்த்தவாரி என அமர்க்களப்படுமாம் ஆலயம்! அப்போது, சூரிய புஷ்கரணித் தீர்த்தக்குளக்கரையில், கல் வைத்து, எருக்கம்பூ, இலை, பஞ்சகவ்யம், மங்கல அட்சதை ஆகியவை கொண்டு சங்கல்பம் செய்து, குளத்தில் நீராடி, ஸ்வாமி- அம்பாளை வணங்கினால், ஏழேழு ஜென்மத்தில் உண்டான அத்தனைப் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்!
கொஞ்சுகிறார்; கெஞ்சுகிறார்
க்ஷேத்திர புராணேஸ்வரர்! 


கோயில் பிராகாரத்தில் உள்ளது, ஸ்ரீக்ஷேத்திர புராணேஸ் வரரின் திருவுருவம். காண்பதற்கு அரிதான விக்கிரகத் திருமேனி இது. சூரியனாருக்குக் கடும் கோபத்துடன் சாபம் கொடுக்க உமையவள் முனைந்தாள், அல்லவா?! அப்போது அவளைச் சாந்தப்படுத்துகிறார் பரமேஸ் வரன். இங்கே... ஒரு பக்கம் பார்த்தால் தேவியின் முகம் உக்கிரமாகவும் இன்னொரு பக்கத்தில் இருந்து பார்த்தால், தேவி புன்னகைத்தபடியும் இருப்பதைத் தரிசிக்கலாம்! இந்தத் தம்பதியை மனதார வணங்கினால், திருமணத் தடை அகலும்; பிள்ளை வரம் பெறலாம்; பிரிந்த தம்பதியும் விரைவில் இணைவர்!

தூது செல்லும் ஸ்ரீதுர்கையின் கிளி! 

இங்கே... எட்டுத் திருக்கரங்களுடன் திகழும் ஸ்ரீதுர்கை ரொம்பவே விசேஷம். அவளது கையில் ஸ்ரீசுகப் பிரம்ம ரிஷியே, கிளியாக அமர்ந்தி ருப்பதாகச் சொல்கிறது, ஸ்தல புராணம். இந்தத் தலத்துக்கு வந்து வேண்டுதல் வைப்பவர் அனைவரது பிரார்த்தனையையும் ஸ்ரீதுர்கையின் கையில் உள்ள கிளி, கொடிமரம் அல்லது விமானத்தில் இருந்தபடி, ஸ்ரீலலிதாம்பிகையிடம் சொல்லுமாம்! 'அவங்களை நீதாம்மா பாத்துக் கணும்’ என்று நமக்காகச் சிபாரிசு செய்யும் அந்தக் கிளி! எனவே, ஸ்ரீதுர்கையிடம் தங்களது குறைகளையும் பிரார்த்தனை யையும் சொல்லிச் செல்கின்றனர், பக்தர்கள்!
பிரண்டை சாத நைவேத்தியமும்

சஷ்டியப்த பூர்த்தி  சதாபிஷேகமும்! 

அப்பேர்ப்பட்ட எமதருமனே நீண்ட ஆயுளுடன் இருப்பதற்காக, இங்கே இந்தத் தலத்துக்கு வந்து, ஈசனை வழிபட்டான். அதுவும் எப்படி? எமலோகத்தின் தலவிருட்சமான பிரண்டையைக் கொண்டு (வஜ்ரவல்லிச் செடி) அன்னத்தில் கலந்து நைவேத்தியம் செய்து, சங்கு மற்றும் புஷ்பத்தால் அர்ச்சனை செய்து, வழிபட்டு வரம் பெற்றான். இன்றைக்கும், உச்சிக்காலத்தில் ஸ்வாமிக்கு பிரண்டை சாதம் நைவேத்தியம் படைக்கப்படுகிறது. இந்த நைவேத்தியம் செய்து, பிரசாதத்தை வாங்கி உட்கொண்டால், அத்தனை தடைகளும் அகலும்; ஆயுள் கூடும் என்பது ஐதீகம்! அதுமட்டுமா? இந்தத் தலத்தில் ஆயுக்ஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் செய்வது மிகவும் புண்ணியம் சேர்க்கும்; ஆயுளுடனும் ஆரோக்கியத்துடன் நீண்டகாலம் வாழலாம் என்கின்றனர், பக்தர்கள்!


அகத்தியர் அருளிய ஸ்ரீநவரத்ன மாலை! 

ஸ்ரீஅகத்தியர், தன் மனைவி லோபமுத்திரையுடன் இங்கு வந்து, ஸ்ரீலலிதாம்பிகையின் கழுத்தில் அணிந்திருந்த நவரத்தின மாலையைக் கண்டு சிலிர்த்து, ஒரு ரத்தினத்துக்கு ஒரு பாமாலை என்று நவரத்தின மாலையையும் தேவியின் மகிமையையும் போற்றும் வகையில் பாடியதுதான் ஸ்ரீநவரத்ன மாலை ஸ்தோத்திரம்! இதனைப் பாடி, ஸ்ரீலலிதாம்பிகையை வணங்கினால், உள்ளம் குளிர்ந்து அருளையும் பொருளையும் அள்ளித் தருவாளாம் தேவி!


'எனக்குக் கொலுசு வேணும்!’ 

பக்தையின் கனவில் அம்பிகையே வந்து,''எனக்குக் கொலுசு போடு; நீ நல்லா இருப்பே!'' என்று கேட்டாளாம். அதன்படி அம்பிகைக்கு கொலுசு அணிவிக்க... அந்தப் பக்தையின் துன்பம் அனைத்தும் தொலைந்து போனதாகச் சொல்வர்! மனதில் ஸ்ரீலலிதாம்பிகையை வணங்கி, காரியம் நிறைவேறப் பிரார்த்தனை செய்பவர்கள், நேர்த்திக்கடனாக ஸ்ரீலலிதாவுக்கு கொலுசு (முக்கால் இன்ச் அளவு துவாரம் கொண்ட, பதினொன்றரை இன்ச் கொலுசுதான், ஸ்ரீலலிதாம்பிகையின் சரியான அளவு என்கின்றனர்) அணிவித்து மகிழ்கின்றனர். அதுமட்டுமின்றி, வளையல், ஒட்டியாணம், திருமாங்கல்யம், தோடு - ஜிமிக்கி-'மாட்டல்’ என்று அணிவிக்கிற பக்தர்களும் உண்டு!


நன்றி -சக்தி விகடன்