Showing posts with label சுஜாதா. Show all posts
Showing posts with label சுஜாதா. Show all posts

Tuesday, May 19, 2015

சுஜாதா, சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் -கிரைம் நாவல் மன்னர் ராஜேஷ்குமார் சிறப்பு நேர்காணல்

வாசகர்களின் பாராட்டே எனக்கு மகத்தான விருது!- 2

October 22, 2014

- கிரைம் நாவல் மன்னர்
ராஜேஷ்குமார் சிறப்பு நேர்காணல்

Rajesh Kumar
தமிழின் முன்னணி எழுத்தாளரும் கிரைம் நாவல் மன்னருமான

திரு. ராஜேஷ்குமார் அளித்த சிறப்பு நேர்காணலின் இரண்டாம் பகுதி இது…
உங்களது சமகால எழுத்தாளர்களான சுஜாதா, சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றவர்களுடன் உங்கள் உறவு எப்படி?
என்னைப் பொருத்த வரை நான் யாரையுமே போட்டியாகக் கருதவில்லை. அவர்கள அனைவருமே என்னைப் பார்த்து பிரமித்தனர். ஒருமுறை சுரேஷ்- பாலா (சுபா) இருவருமே என்னிடம் கையில் ரேகை பார்த்தார்கள். ஏன் என்று கேட்டபோது,  “இவ்வளவு எழுதுகிறீர்களே, கையில் ரேகைகள் இருக்கிறதா, அழிந்துவிட்டதா என்று பார்த்தேன்” என்றார்கள்.
பலவிதக் கருத்துக்களில், விதவிதமாக எழுதுவது எப்படி கேட்கும் பல எழுத்தாளர்கள், என்னை எழுத்து இயந்திரம் என்று வர்ணிப்பார்கள். எனது ஆயிரமாவது புதினத்தை (டைனமைட் 98) எழுதியபோது பட்டுக்கோட்டை பிரபாகர்,  “ராஜேஷ்குமாரின் புதினங்களின் தலைப்புகளை எழுதினாலே நீண்டநேரம் ஆகும். எப்படி இவற்றை எழுதுகிறார்?” என்று பாராட்டினார்.
எழுத்தாளர் பாலகுமாரன் எனது நலம் விரும்பி. அவர் என்னிடம் ஒருமுறை சொன்னார்: “ராஜேஷ்குமார் நீ வாசகர்களைப் படிக்க வை; பிறகு நாங்கள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொள்கிறோம்” என்று. ஆரம்பநிலை வாசகர்கள் என்னிடம் துவங்கி பிற்பாடு மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் படிப்பதையே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
சுஜாதா ஒருமுறை கூறுகையில், “ராஜேஷ்குமார் வேகமாக எழுதுகிறார். அதே சமயம் விவேகமாகவும் எழுதுகிறார்’’ என்றார். எனது வளர்ச்சியில் மிகுந்த ஆர்வம் காட்டியவர் அவர்.
இந்த இலக்கியப் பயணத்தில் உண்மையில், என்னுடன் ஓடி வந்தவர்கள் யார் என்றோ, எனக்குப் பின்னால் ஓடி வருபவர்கள் யார் என்றோ பார்க்கவே நேரமின்றி நான் ஓடிக் கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்ததெல்லாம், எனக்கு முன்னே யாரும் இல்லை என்பது தான்.
உங்களது புதினங்களில் துப்பறிவாளராக வரும் விவேக், அவரது மனைவி ரூபலா, காவல்துறை அதிகாரி கோகுல்நாத் ஆகியோரை எவ்வாறு உருவாக்கினீர்கள்?
Rajeshkumar-Vivekஎனது புதினங்களில் தொடர்ந்து வரும் கதாபாத்திரங்கள் அவர்கள். சங்கர்லாலின் தாக்கம் இதில் உண்டு. குற்றப் புலனாய்வில் ஈடுபடும் நிபுணர் ஒருவரை கதையில் கொண்டுவர வேண்டியிருந்தது. அப்போது காவல்துறையில் உள்ள எனது நண்பர் விவேகானந்தனிடம் பல ஆலோசனைகள் பெற்றுப் பயன்படுத்தி வந்தேன். எனவே அவர் பெயரைப் பயன்படுத்தலாம் என்று யோசித்தேன்.
தவிர, நான் சுவாமி விவேகானந்தரின் தீவிர பக்தன். நான் படித்ததே ராமகிருஷ்ண வித்யாலயம் பள்ளியில் தான். கோவையில் தேவாங்கர் பள்ளி அருகே உள்ள விவேகானந்தர் இல்லம் எனது வாழ்வில் முக்கிய இடம் வகிப்பது. அங்குதான் இலவச தனிப்பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று படித்து முன்னேறினேன். அங்கு படிக்கும்போது ராமகிருஷ்ணர் பற்றிய பிரார்த்னைகளைப் பாடுவோம். அப்போதே சுவாமி விவேகானந்தர் மீது மிகுந்த பக்தி ஏற்பட்டுவிட்டது. அவரது உபதேசங்களே என் வாழ்க்கையில் முன்னேற உந்துசக்தி. எனவே விவேகானந்தர் நினைவாகவும், எனது நண்பருக்கு நன்றிக்கடனாகவும் அவர் பெயரைச் சுருக்கி  ‘விவேக்’ என்று எனது புலனாய்வு நிபுணருக்கு பெயர் சூட்டினேன். அவருக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
சில வருடங்கள் கழித்து விவேக்கிற்கு திரும்ணம் செய்வதாக ஒரு புதினத்தில் எழுதியபோது அவரது மனைவியாக உருவாக்கப்பட்டவர் ரூபலா. இப்பெயர் எனது வாசகி ஒருவரது பெயராகும். ஒருமுறை மதுரை சென்றபோது விடுதி ஒன்றில் வரவேற்பாளராக இருந்த ரூபலா என்ற பெண்ணைச் சந்தித்தேன். அவர் எனது வாசகி என்பது தெரியவந்தது. விடுதியில் இடம் இல்லாதபோதும் எனக்காக சிரமப்பட்டு ஓர் அறையை எனக்கு அவர் ஏற்பாடு செய்துகொடுத்தார். அப்போது எனது பெயரை உங்கள் புதினத்தில் மறக்க முடியாத பெயராகக் கொண்டுவர வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். அதையேற்று அவரது பெயரையே விவேக்கின் மனைவியாக்கினேன். ஆனால் அதன்பிறகு அந்தப் பெண்ணைப் பார்க்க முடியவில்லை. அவர் அங்கிருந்து வேறு வேலைக்குச் சென்றுவிட்டதாகக் கூறினார்கள். அவர் எனது கதையில் தனது பெயர் சேர்க்கப்பட்டதைப் படித்தாரா என்பதும் தெரியவில்லை. அவரைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இது எனக்கு வருத்தம் தான். இதையே,  ‘கல்கி’ வார இதழில் இரண்டாண்டுகளுக்கு முன் ‘எங்கே அந்த ரூபலா?’ என்ற தலைப்பில் தனிக் கட்டுரையாக எழுதினேன். இன்றும் அந்த வாசகியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
அதேபோல, காவல்துறையில் சிபிசிஐடி அதிகாரியாக கோகுல்நாத், இளமைத் துடிப்பான விஷ்ணு கதாபாத்திரங்களை தேவைக்கு ஏற்ப உருவாக்கினேன். ஒரு சுவாரசியமான சம்பவம். விவேக்- ரூபலா திருமணம் குறித்து நகைச்சுவையாக ஓர் அறிவிப்பை நண்பர் ஜீயேவும் நானும் திட்டமிட்டு  ‘கிரைம்’ நாவலில் வெளியிட்டோம். அதை உண்மையென்று நம்பி ஆயிரக் கணக்கில் பலநூறு வாசகர்கள் மொய் அனுப்பினர். அவற்றை எல்லாம் திருப்பி அனுப்பினோம். அந்த அளவிற்கு விவேக்- ரூபலா கதாபாத்திரங்கள் வாசகர்களுடன் ஒன்றிக் கலந்துவிட்டன.
சிறுகதை, புதினம் – இதில் எதை எழுதுவது சிரமம்?
சிறுகதை தான். ஏனெனில், குறிப்பிட்ட பக்கங்களுக்குள் கதைக் கருவைச் சுற்றிவந்து கதையை எதிர்பாராமல் முடித்துவிடுவதென்பது சிரமம். அது கிட்டத்தட்ட மருத்தை அடைத்திருக்கும் ‘கேப்சூல்’ போன்றது. ஆனால் புதினத்தை நீங்கள் விருப்பம் போல வளர்க்கலாம். கால்பந்தாட்ட மைதானத்தில் பந்தை உதைத்தபடி அங்குமிங்கும் கொண்டுசெல்வது போல, கதைக் கருவைப் பின்னிப் பிணைத்து, சம்பவங்கள், திருப்பங்களை உருவாக்கி, வாசகரைத் திகைக்கச் செய்யலாம். புதினத்தில் புதிய பாத்திரங்களை அறிமுகம் செய்யலாம். சிறுகதையிலோ, குறைந்த கதைமாந்தர்களே போதும்.
நீங்கள் எழுதிய படைப்புகள் அனைத்தும் உங்களிடம் இருக்கின்றனவா?
இல்லை. நான் ஆரம்பகாலத்தில் எழுதும்போது இந்த அளவிற்கு வளர்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. காலம் செல்லச் செல்லத் தான் எனது எழுத்துகளை பத்திரப்படுத்துவதன் அவசியம் புரிந்தது. இதுவரை 2,000க்கு மேற்பட்ட சிறுகதைகளையும் 1,500க்கு மேற்பட்ட புதினங்களையும் எழுதி இருக்கிறேன். ஆனால், இவற்றில் சுமார் 300 புதினங்கள் இப்போது என்னிடம் இல்லை. அவற்றை வெளியிட்டவர்களில் பலரும் இப்போது இல்லை. ஆனால், நான் எழுதிய படைப்புகளின் பட்டியல் என்னிடம் உள்ளது.
எனது வெற்றிக்கு பென்னும் பெண்ணும் தான் காரணம்
Rajeshkumar 001
சாதனை எழுத்தாளர் ராஜேஷ்குமார் தனது வெற்றிக்கு பென்னும் (PEN), பெண்ணும் (மனைவி) தான் காரணம் என்கிறார்.  “ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார்; எனது வெற்றிக்குப் பின்புலமாக இருப்பவர் எனது மனைவி தனலட்சுமி தான்” என்கிறார். அவரது மனைவியோ, ஒன்றரை மணிநேரம் நீண்ட கணவரின் நேர்காணலின் ஒவ்வொரு வார்த்தையையும் ஆவலுடன் கேட்டபடி கதவருகிலேயே நின்றுகொண்டிருக்கிறார்.

இவர்களது அன்பான இல்லறத்தின் கனிகளாக, கார்த்திக்குமார், ராம்பிரகாஷ் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். ஒருவர் வங்கியிலும், இன்னொருவர் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் சென்னையில் பணிபுரிகின்றனர்.
ரங்கசாமி- கிருஷ்ணவேணி தம்பதியினரின் மகனான ராஜகோபால் (பிறந்த தேதி: 20.03.1947) எழுத்துலகில் ராஜேஷ்குமார் ஆனது தனிக்கதை. வாழ்க்கையில் வெல்ல தனி பாணி மட்டுமல்ல, பிரத்யேகப் பெயரும் தேவை என்பதை ராஜகோபால் உணர்ந்திருந்தார்; ராஜேஷ்குமாராக மாறினார்.
இவரது எழுத்துலக வாரிசாக குடும்பத்தில் யாரும் உருவாகவில்லையா என்று கேட்டால்,  “எழுத்து இறையருள், அதைத் திணிக்க முடியாது” என்கிறார் ராஜேஷ்குமார். ஆனால், தனது மகன்வழிப் பேரனான ஸ்ரீவத்சனிடம் கதை சொல்லும் திறமை ஒளிந்திருப்பதை அறிந்து மகிழ்கிறார்.
“எனது மரபணு அவனிடம் இருக்கலாம். அவன் பள்ளியில் தானாகக் கூறிய ஒட்டகச் சிவிங்கி கதையைக் கேட்டு விசாரித்தறிந்த சென்னை பள்ளி நிர்வாகத்தினர், ராஜேஷ்குமாரின் பேரன் அவன் என்பதை அறிந்து இன்ப அதிர்ச்சி அடைந்த்துடன், என்னை அவர்களது பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவித்தனர். பேரனால் கிடைத்த கௌரவம் அது” என்று நெகிழ்கிறார்.
இவ்வளவு எழுதி இருக்கிறீர்கள். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கிய உலகில் இருந்து வருகிறீர்கள். உங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?
Crime Novels3நிச்சயமாக இல்லை. எனது எழுத்துலக வாழ்வு திருப்திகரமானது. 40 ஆண்டுகளைக் கடந்தும் இன்னமும் என்னை பத்திரிகைகள் எழுதச் சொல்லி நாடி வருவதே எனக்கான அங்கீகாரம் தான். தமிழக அரசின் கலைமாமணி விருது 2009-ல் எனக்கு முதல்வர் கருணாநிதியால் வழங்கப்பட்டது. இது தவிர நான் விருதுகளை நாடிச் செல்வதில்லை.
இப்பொதெல்லாம், விருதுகள் விமர்சனங்களுக்கு உட்பட்டுவிட்டன. நான் விருதுகளை எதிர்பார்த்து எழுதுவதில்லை. எனது வாசகர் ஒருவர் அஞ்சல் அட்டையில் எனக்கு எழுதும் கடிதத்தை விட விருது எனக்குப் பெரிதல்ல. எனது கதையால் வாழ்க்கையில் முன்னேறியதாக பல வாசகர்கள் எழுதும்போது எனக்கு மிகுந்த திருப்தி உண்டாகிறது. அதுதான் எனக்கு மகத்தான விருது. இதைவிட நான் எழுத்துலகில் என்ன சாதிக்க வேண்டும்?
குமுதம் வார இதழில் எனது முதல் தொடர்கதை 1987-ல் ‘ஜனவரியில் ஒரு ஞாயிற்றுக்கிழமை’ வெளிவந்தது. இப்போதும் (2014) அதே இதழில் தொடர்கதை எழுதி வருகிறேன். பல தலைமுறைகளைத் தாண்டியும் வாசகர்களை ஈர்க்கும் சக்தி இருப்பதே எனக்கு பெருமை தான். வாசகர்களுக்கு எனது தேவை இருக்கும் வரை, எதைப் பற்றியும் கவலைப்படாமல் எழுதுவேன்.
எனது 1,500 புதினங்கள் எழுதிய சாதனையை கின்னஸில் பதிவு செய்ய வேண்டும் என்று நண்பர்கள் கூறியதால் அதற்கு முயன்றேன். அப்போது தான் அதற்கு பணம் செலுத்திக் காத்திருக்க வேண்டும் என்று தெரிந்தது. அதுவும் ஒருவகை வர்த்தகமாகவே தெரிந்தது. எனவே அம்முயற்சியையும் கைவிட்டுவிட்டேன். வாசகர்களின் பிரியமே எனக்கான மதிப்பீடு.
சின்னத்திரையில் உங்கள் அனுபவம் குறித்து…
முதன்முதலில் பொதிகை தொலைக்காட்சியில் தான் எனது புதினங்கள் ஒருமணி நேரத் தொடராக சின்னத்திரை வடிவம் பெற்றன. அதன்பிறகு சன் தொலைக்காட்சியில் பவானி தொடர் வந்த்து. பிறகு விஜய் தொலைக்காட்சியில் நண்பர் லேகா ரத்னகுமார் தயாரிப்பில்  ‘நீ எங்கே என் அன்பே?’ வெளிவந்தது. அதைத் தொடர்ந்து  ‘இருட்டில் ஒரு வானம்பாடி, அஞ்சாதே அஞ்சு’ ஆகிய சின்னத்திரை தொடர்கள் வெளிவந்தன. கடந்த இரண்டாண்டுகளாக, கலைஞர் தொலைக்காட்சியில் ‘சின்னத்திரை சினிமா’ என்ற தலைப்பில் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 10.30 மணிவரை 2 மணிநேரம் ஒளிபரப்பாகும் வகையில் எனது புதினங்கள் தொடராக வெளிவந்து கொண்டிருக்கின்றன. நூறு வாரங்களை எட்ட உள்ள இத்தொடரால் புதிய வாசகர்கள் பலர் கிடைத்து வருகின்றனர்.
உங்கள் புதினம் ஒன்று திரைப்படமாக தயாரிக்கப்பட்டதே?
திரைப்படத் துறையில் நான் அதிக கவனம் கொடுக்காததற்கு அதற்கு அதிக நேரம் செலவிட வேண்டியிருப்பதே காரணம். ஆயினும் எனது இரு புதினங்கள் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. நண்பர் நாகா வெங்கடேஷ் தயாரித்த  ‘அகராதி’, கோவை நண்பர் தயாரித்த  ‘சிறுவாணி’ ஆகிய திரைப்படங்கள் வெளியிடத் தயார்நிலையில் உள்ளன. தவிர நடிகர் சரத்குமார் நடிக்கும்  ‘சண்டமாருதம்’ திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளேன். அந்தப்படம் அநேகமாக முதலில் வெளியாகும். அதைத் தொடர்ந்து பிற படங்களும் வெளியாகும். அதன்பிறகு பெரிய திரையிலும் எனது பயணம் தொடரும்.

குற்றப் புனைவுப் புதினங்கள் இலக்கியமல்ல என்று இலக்கியவாதிகள் சிலர் கூறுவதை அறிவீர்களா?
இதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நடிகர் ரஜினிகாந்த் 64 வயதிலும் சூப்பர்ஸ்டாராக இருக்கிறார். அவருக்கு சிறந்த நடிகர் என்று விருது கிடைக்கவில்லை. ஆனால் மக்கள் மனங்களில் அவர் தான் என்றும் சூப்பர்ஸ்டார். யாருக்கு என்ன கிடைக்குமோ அதுதான் கிடைக்கும்; யாருக்கு எது சிறப்பாக வருமோ அதுதான் வரும். எனவே, இதுபோன்ற விமர்சனங்களை நான் பொருட்படுத்துவதில்லை. நான் அண்மைக்கால எழுத்தாளர்களையே படிப்பதில்லை. அதற்கு எனக்கு நேரமும் இல்லை.
சமுதாயம் நன்றாக இருக்க வேண்டுமானால், கெட்டதைச் சொல்லி அதன் விளைவைச் சொல்லி எச்சரிக்க வேண்டும். அதையே எனது குற்றப் புனைவுக் கதைகளில் சொல்லி வருகிறேன். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும்; தப்பு செய்தவன் தண்டனை பெற வேண்டும் என்பதே எனது கதைகளின் நீதி. இதனைக் கொச்சைப்படுத்துவோர் குறித்து எனக்கு கவலையில்லை. பாமரரையும் படிக்கவைக்கும் எழுத்தாளனாக இருப்பதையே நான் பெருமையாகக் கருதுகிறேன்.
Rajeshkumar 004சாஹித்ய அகாதெமி விருது சர்ச்சைகள் குறித்து…
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவுகோல் உண்டு. சாஹித்ய அகாதெமிக்கும் ஒரு அளவுகோல் வைத்திருக்கிறார்கள். அதன் விருதுகள் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. நான் தான் விருதுகளை நாடிச் செல்வதில்லையே? எனவே இதுபற்றி எனக்கு எந்தக கருத்தும் இல்லை; வருத்தமும் இல்லை.
தமிழ் பத்திரிகையுலகப் பிதாமகர்களான எஸ்.ஏ.பி.அண்ணாமலை, சாவி, விகடன் பாலசுப்பிரமணியம், இதயம் மணியன் போன்ற ஆலமரங்களின் நிழலில் வளர்ந்தவன் நான். குத்துச்செடிகளின் ஆர்ப்பாட்டம் குறித்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்? இறைவன் எனக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டான். இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.
இளம் எழுத்தாளர்களுக்கு உங்கள் அறிவுரைகள்…
எழுத்தாளனுக்கு எப்போதும் ஒரு தேடல் இருக்க வேண்டும். நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்ச்சிகளில் தான் கதைகளுக்கான கரு புதைந்திருக்கிறது. அதேபோல விடாமுயற்சியும் கடும் உழைப்பும் அவசியம்.
நான் கோவையிலிருந்தபடியே இத்தனைகாலம் எழுதி வந்திருக்கிறேன். எழுத்துத் துறைக்கு சென்னையே தலைமையிடமாக இருந்தாலும், எனது திறமையை நம்பி கோவையில் இருந்தபடியே சாதித்தேன். திறமை உள்ளவர்கள் எங்கிருந்தாலும் உலகம் அவர்களைத் தேடி வரும்.
நான் எழுதத் துவங்கியபோது என்னை நகலெடுத்து பலர் எழுத முயன்று தோற்றார்கள். எனவே, ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு நடையை, தனி பாணியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். கதை சொல்லும் பாணியில் வாசகர் மனதைக் கவர்பவரே வெற்றி பெற முடியும். அதேபோல எடுத்தவுடன் புதினம், தொடர்கதை என்று விண்ணுக்குத் தாவ முயற்சிக்க்க் கூடாது. சிறுகதையில் தேர்ச்சி பெற்றபின், மெல்ல அடுத்த நிலை நோக்கி வளர வேண்டும். அவசர அணுகுமுறை இத்துறையில் நிலைக்க சரியான வழியல்ல.
தவிர யதார்த்தம் என்ற பெயரில் ஆபாசத்தையும் வக்கிரத்தையும் அள்ளித் தெளிக்கக் கூடாது. சமுதாயத்தைச் சீரமைக்க விரும்பும் நமது எழுத்தில் ஒரு நாகரிகம் இருந்தாக வேண்டும்.

thanx -the hindu

Monday, May 18, 2015

தமிழ்வாணன், பி.டி.சாமி. புஷ்பா தங்கதுரை, சுஜாதா - நாவல் மன்னர் ராஜேஷ்குமார் சிறப்பு நேர்காணல்

வாசகர்களின் பாராட்டே எனக்கு மகத்தான விருது!- 1

October 22, 2014

- கிரைம் நாவல் மன்னர்
ராஜேஷ்குமார் சிறப்பு நேர்காணல்

RajeshKumarகிரைம் நாவல் மன்னரான எழுத்தாளர் திரு. ராஜேஷ்குமாரை தமிழ் எழுத்துலகில் அறியாதவர் யாரும் இருக்க முடியாது. 1,500-க்கு மேற்பட்ட குற்றப்புனைவு (கிரைம்), அறிவியல் புனைவு புதினங்கள், 2,000க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள ராஜேஷ்குமார் (66), உலக சாதனையாளர். தேசிய அளவில் மட்டுமல்ல, உலக அளவிலும் கூட இவரது எழுத்துலக சாதனையை முறியடிக்க நீண்டகாலம் ஆகும்.
கோவையில் வசிக்கும் திரு.ராஜேஷ்குமார்  விஜயபாரதம் தீபாவளி மலருக்கு அளித்த சிறப்பு நேர்காணலின் முழு வடிவம் இது…

உங்களது எழுத்துலகப் பிரவேசம் எப்படி நிகழ்ந்தது?
நான் கல்லூரியில் படிக்கும்போதே எழுதத் துவங்கிவிட்டேன். 1966-ல் நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது எழுதிய முதல்கதை (உன்னை விட மாட்டேன்) கோவையில் வெளியாகும் ‘மாலைமுரசு’ பத்திரிகையில் வெளியாகி ரூ. 10 பரிசைப் பெற்றுத் தந்தது. அதைப் பார்த்து நண்பர்கள் பலரும் என்னை ஊக்குவித்தனர். தொடர்ந்து பல இதழ்களில் எழுதி வந்தேன்.
அந்தச் சமயத்தில் அறிமுக எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியை தினமணிக்கதிரில் அதன் ஆசிரியர் சாவி நடத்தினார். அதில் என் கதை தேர்வாகி (நானும் ஒரு ஹீரோ தான்) வெளிவந்தது. அதன் பிறகு சாவி, ராணி பத்திரிகைகளில் அவ்வப்போது எழுதி வந்தேன்.
 ஆனால் நீங்கள் ஆசிரியராகப் பணியாற்றிய பிறகு தானே எழுத்தாளரானீர்கள்?
ஆமாம், பி.எஸ்சி, பி.எட். படித்து முடித்தவுடன், பவானிசாகரில் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தேன் (1976). அங்கு ஒரேவிதமான பாடத்தை திரும்பத் திரும்ப ஏழு வகுப்புகளுக்கு சொல்லிக் கொடுத்ததில் எனக்கே அலுத்துவிட்டது. அதிலிருந்து மீள ஆசிரியர் பணியை விட்டுவிட்டு, என் தந்தை செய்துவந்த ஜவுளித் தொழிலில் ஈடுபட்டேன். அப்போது பல ஊர்களுக்குச் செல்லும் வாய்ப்பும் அதனால் பலதரப்பட்டவர்களைச் சந்திக்கும் அனுபவமும் கிடைத்தன. ஆனால், ஜவுளித் தொழிலில் எனக்கு நஷ்டமே ஏற்பட்டது. அப்போது தான் மீண்டும் எனது கவனம் எழுத்துலகில் திரும்பியது.
தொழிலில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து விடுபட எழுத்து எனக்கு மிகவும் துணையாக இருந்தது. அப்போது எனது எழுத்துத் திறனையே மூலதனமாக்கி முழுநேர எழுத்தாளராக முடியும் என்ற உறுதி ஏற்பட்டது. தொடர்ந்து எழுதத் துவங்கினேன்.
 எந்தப் புதிய முயற்சியும் உடனே வெற்றி கண்டுவிடுவதில்லை. உங்களுக்கு எப்படி?
உண்மைதான். நானும் ஆரம்பகாலத்தில் பல சோதனைகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்திருக்கிறேன். ஆனால் அதனால் நான் நிலைகுலைந்ததில்லை. அதையே சவாலாக ஏற்று தொடர்ந்து எழுதி எனது எழுத்தை மேலும் மெருகேற்றிக் கொண்டேன்.
எனது முதல் கதை 1966-ல் வெளியானது. அதன்பிறகு பல பத்திரிகைகளில் எழுதியிருந்தாலும் பரவலாக நான் கவனம் பெறவில்லை. அந்தக் காலத்தில் ‘குமுதம்’ வார இதழில் எழுதுவதே பெரும் சாதனையாக இருந்தது. நானும் குமுதத்திற்கு தொடர்ந்து சிறுகதைகளை அனுப்பி வந்தேன். ஆனால், ஒருகதையும் வெளியாகவில்லை; நானும் விடவில்லை. தொடர்ந்து தினசரி ஒரு கதையை எழுதி அனுப்பிக் கொண்டே இருந்தேன். அதன் பட்டியலையும் தனியே தயாரித்து வைத்திருந்தேன்.
இவ்வாறு நூறு கதைகளுக்கு மேல் அனுப்பிய நிலையில் ஒருமுறை சென்னை, குமுதம் அலுவலகத்திற்கே நேரில் சென்றுவிட்டேன். அங்கு ஆசிரியர் குழுவில் இருந்த ரா.கி.ரங்கராஜன் அவர்களைச் சந்தித்து என்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோதுதான். நான் நூறு கதைகளைத் தொடர்ந்து அனுப்பியதே அவருக்கு தெரியவந்தது. அப்போது அவர், “நீங்கள் நூறு கதைகளை எழுதியது பெரிய விஷயமல்ல, குமுதம் பத்திரிகைக்கு ஏற்றவிதமாக எழுதினால் தான் அது வெளியாகும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு எழுதுங்கள்” என்று கூறி அனுப்பிவைத்தார். அதன்பிறகு அதுவரை குமுதத்திற்கு அனுப்பிய அனைத்துக் கதைகளும் ‘பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்’ என்ற கடிதத்தோடு திரும்பின. அதையே சவாலாக ஏறு, ‘இது நியாயமா?’ என்ற தலைப்பில், குமுதம் அளவுகோலுக்கு ஏற்றவிதமாக ஒரு சிறுகதை எழுதி அனுப்பிவைத்தேன். அந்தக் கதை அடுத்த வாரமே குமுதம் வார இதழில் வெளியானது.
அரசு ஆசிரியராகப் பணியாற்றுவதை விடுத்து, எழுத்துத் துறையில் சவாலாக இறங்கித்தான் நான் சாதித்தேன். இதுபோல பல சோதனைகளை,  புறக்கணிப்புகளைக் கடந்து தான் உயர்நிலையை அடைந்திருக்கிறேன்.
 எழுத்துலகில் பல துறைகள் இருக்கின்றன. அதில்  ‘கிரைம் எனப்படும் குற்றப்புனைவுத் துறையை எப்படி உங்களுக்கு உரியதாகக் கண்டுபிடித்தீர்கள்?
Crime Novelsஉண்மையில் கிரைம் எழுத்து எனக்கு இயல்பிலேயே இருந்துள்ளது. இதற்கு எனது அம்மா சிறுவயதில் கூறிய கதைகளும் காரணமாக இருக்கலாம். எல்லா அம்மாக்களையும் போல எனது அம்மா சாதாரணக் கதை கூறியதில்லை. அவர் சொன்ன கதைகள் எல்லாமே வீரக்கதைகள். எனது தாத்தா காலத்தில் மருதமலைக்கு மாட்டுவண்டி ஓட்டிக்கொண்டு செல்வாராம். அந்தக் காலத்தில் மருதமலைப் பக்கம் இரவு நேரத்தில் செல்லவே அனைவரும் அஞ்சுவார்களாம். ஆனால் எனது தாத்தா துணிவுடன் அங்கு வியாபார விஷயமாக சென்று வருவாராம். அந்த அனுபவக் கதைகளை நேரில் பார்த்தது போல அம்மா சொல்லியிருக்கிறார். மருதமலை முருகன் கோயிலில் திருட முயன்ற மூன்று திருடர்களை முருகர் கல்லாக மாற்றிய கதையை எனது சிறுவயதில் சோறூட்டியபோது அம்மா சொன்னது இன்னமும் என் நினைவில் இருக்கிறது. இதுவும் கூட எனக்கு திகில் கதைகளை பின்னாளில் எழுதத் தூண்டுகோலாக இருந்திருக்கலாம்.
நான் எழுதத் துவங்கிய காலத்தில் எழுதிய பெரும்பாலான கதைகளில் இந்த அம்சம் வெளிப்பட்டதைக் கவனித்தேன். கடவுள் மீதான அச்சம் தான் மனிதனை நல்வழிப்படுத்தும் என்பதையும் எனது கதைகளில் சொல்லிவந்தேன். அதற்கு குற்றப்புனைவுக் கதைகள் உதவிகரமாக இருந்தன. 1976 வரையிலும் எனது கதைகளின் மூலப்பொருளாக குற்றச் செய்திகளும் ஒவ்வொருவருக்கும் இறையச்சம் தேவை என்ற அடிப்படை அறவுணர்வுமே இருந்து வந்தன. சட்டத்தின்முன் குற்றவாளி தப்பினாலும் இயற்கை அவனைத் தண்டிக்கும் என்ற நீதிபோதனையையே எனது கதைகளில் வலியுறுத்தி வந்தேன்.
1980களில் பத்திரிகைகளில் எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, லட்சுமி, சாண்டில்யன் போன்றோர் பிரபலமாக இருந்தார்கள். அவர்கள் அனைவருமே சமூகப் புதினங்கள் எழுதுவதில் தேர்ந்தவர்கள். அவர்களுடன் போட்டியிட முடியாது என்பதை எனது இளம் மனது உணர்ந்தது. அப்போதுதான், அவர்கள் தொடாத, அதே சமயத்தில் எனக்கு நன்றாக வரக்கூடிய குற்றப்புனைவுத் துறையை (கிரைம்) தொடரத் தீர்மானித்தேன்.
 கடவுள் மீதான அச்சம் தான் மனிதனை நல்வழிப்படுத்தும் என நம்புகிறீர்களா?
கண்டிப்பாக. நான் எழுதும் எந்த குற்றப்புனைவு புதினத்திலும் இறுதியில் நியாயமே வெல்லும் என்பதையே உறுதிப்படுத்தி இருப்பேன். எனது ஆரம்பகாலக் கதைகளில் கடவுள் பக்தியே மனிதர்களைக் காக்கும் என்பதை பலவாறாகச் சித்தரித்திருக்கிறேன். உதாரணமாக ஒரு கதை. இக்கதை குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை அவர்களுக்குப் பிடித்த கதை.
அந்தக் கதையில் தாய் ஒருவர் நேர்த்திக்கடனாக அம்மனுக்கு சிவப்புப்புடவை சார்த்த வேண்டும் என்று நச்சரித்து விருப்பமில்லாத மகனுடன் கோயிலுக்குச் செல்வார். செல்லும் வழியில் ரயில்பாதையில் ஏற்பட்டிருக்கும் விரிசலைக் காணும் மகன், அம்மனுக்கு சார்த்த வைத்திருந்த புடவையை எதிர்த்திசையில் காட்டியபடி ஓடி, பெரும் விபத்து நேராமல் காப்பாற்றுவான். கதையில் முடிவே அதுதான். இதைத் தானே ‘தெய்வம் மனுஷ்ய ரூபே’ என்கிறார்கள்.
கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற விவாதத்துக்குள் பலர் செல்வார்கள். அதுவும் அவனது விளையாட்டுத் தான். கடவுள் எக்காலத்திலும் நேரடியாக வர மாட்டார். சக மனிதராகத் தான் அவர் வருவார். இந்த ஞானம் வர நீண்டகாலம் ஆகலாம்.
நான் கடவுள்பக்தி மிகுந்தவன். சிறுவயதில் தினசரி கோயிலுக்குச் செல்வேன். காமாட்சியம்மன், முருகன், தண்டுமாரியம்மன், சாயிபாபா கோயில் என முறைவைத்து ஒவ்வொருநாளும் கோயிலுக்குச் சென்ற காலம் உண்டு. பிறகு சக மனிதரை மகிழச் செய்வதே தெய்வகாரியம் என்பதை உணர்ந்தேன். கோயில் வழிபாடு வர்த்தகமயமாகிவிட்ட சூழலில், நேர்மையுடன், நல்ல காரியங்களைச் செய்வதே இறைபணி என்று தீர்மானித்துக்கொண்டேன். எனது கதைகள் மூலமாக சமுதாயத்திற்கு நல்லது செய்தாலே போதுமே?
Rajeshkumar 008நீங்கள் எழுத வந்த காலத்தில் தமிழ்வாணன், பி.டி.சாமி. புஷ்பா தங்கதுரை, சுஜாதா   போன்றவர்கள் குற்றப்புனைவுக் கதைகளை எழுதிவந்தனர். அவர்களின் பாதிப்பு உங்களிடம் உண்டா?
நான் எழுதவந்த காலத்தில் தமிழ்வாணன் மறைந்துவிட்டார். ஆனால் அவரது புதினங்களைப் படித்திருக்கிறேன். சங்கர்லால் துப்பறியும் அக்கதைகள் குற்றப்புனைவுத் துறையில் எனக்கு ஆர்வம் ஏற்படுத்தின. ஆனால், அவரது தாக்கம் எனது எழுத்தில் வரக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். பிற எழுத்தாளர்களைப் போல ஆபாசமும் வக்கிரமும் கலந்து எழுதக் கூடாது என்றும் எனக்கு நானே கட்டுப்பாடு விதித்துக் கொண்டேன்.
எழுத்தாளர் சுஜாதாவின் தாக்கமும் என்மீது இருந்தது. அழுதான் என்பதை உடைந்தான் என்று புதிய சொல்லாட்சியாக அவர் எழுத்துலகில் கொண்டுவந்தார். இலக்கியம் என்றால் ஏதோ ஒரு ஜந்து என்றிருந்த நிலையை அவர் தான் உடைத்தார். எனினும் அவரது எழுத்தின் பாதிப்பு என்னிடம் வந்துவிடக் கூடாது என்பதிலும் நான் தெளிவாக இருந்தேன். எனக்கென்று ஒரு தனி பாணியை நானே உருவாக்கிக் கொண்டேன்.
ஆங்கிலத்தில் குற்றப்புனைவு இலக்கியம் பேரிடம் வகிக்கிறது. அகதா கிறிஸ்டியின் உலகப்புகழ் அனைவரும் அறிந்தது. எழுத்தாளர் ஆர்தர் கனான் டாயல் உருவாக்கிய புலனாய்வாளர் ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்திற்கு இன்றும் கோடிக் கணக்கான ரசிகர்கள் உண்டு. அவர்களின் தாக்கம் உங்களிடம் உண்டா?
நான் கல்லூரி நாட்களில் ஆங்கிலத்தில் வந்த குற்றப்புனைவுப் புதினங்களைப் படித்திருக்கிறேன். இத்துறையில் எனது ஈடுபாட்டை வளர்க்க அவை பயன்பட்டன. அதிலும், இர்வின் வாலஸ் (1916- 1990) எழுதிய அறிவியல் புனைகதைகளில் எனக்கு அந்நாட்களில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. அவரது ‘தி பிரைஸ்’ புதினம் நோபல் பரிசு வழங்குவதில் உள்ள ஊழல்களை வெளிப்படுத்தியது.
அவர் எந்தக் கதை எழுதினாலும், அதைப் பற்றி நன்கு ஆராய்ச்சி செய்து அதன் பின்னரே எழுதுவார். விமானநிலையம் பற்றிய கதையானால், அங்கேயே சென்று ஆராய்வார்; கார் தொழிற்சாலை பற்றிய கதையானால், அதே தொழிற்சாலையில் ஆய்வு செய்து நுட்பமான தகவல்களுடன் கதை எழுதுவார். இந்த அணுகுமுறை என்னைக் கவர்ந்தது. ஆனால், அவரைத் தொடர்ந்து படித்தால் அவரது பாதிப்பு என் எழுத்தில் படிந்துவிடும் என்பதால் அதையும் விட்டுவிட்டேன். நல்ல எழுத்தாளருக்கு கதைக் கரு எங்கிருந்தும் கிடைத்துவிடும். இதற்கு ஆங்கில புதினங்களைப் படிக்க வேண்டியதில்லை.
 உங்கள் கதைகளில் பல தகவல்களை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறீர்கள். இந்தத் தகவல்களை எப்படித் திரட்டுகிறீர்கள்?
நான் எந்தக் கதை எழுதினாலும், அதற்கு பத்திரிகைகளில் வெளியாகும் உள்ளூர் செய்தித் துணுக்குகளே ஆதாரமாக இருக்கின்றன. எழுத்தாளனுக்கு முதல் தேவை தேடுதல் தான். நான் தினசரி பத்திரிகைகளில் படிக்கும் செய்திகளில் குற்றம் தொடர்பானவற்றை குறித்துவைத்துக் கொள்வேன். அதை எனது பாணியில் சம்பவங்களாகத் தொகுத்து, வளர்த்தெடுத்து கதையாக்குவேன்.
எனது புதினங்களில் பெரும்பாலானவை கற்பனையல்ல. நான் படித்த, பார்த்த, என்னை பாதித்த நிகழ்வுகளே கதையாக வடிவம் பெறுகின்றன. அதற்காக முன்னர் பத்திரிகைகளை நம்பி இருந்தேன். இப்போது இணையதள வசதியைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
Crime Novels4ஒரு உதாரணம். செயற்கை இருதய வால்வ் தயாரிக்க பல்லேனியம் என்ற தனிமம் பயன்படுகிறது. அதைக்கொண்டு அமெரிக்காவில் அறுவைச் சிகிச்சை செய்து மனிதனின் வாழ்நாளை நீட்டிக்கிறார்கள் என்பது செய்தி. அதில் ஒரு முக்கிய தகவல், அணுக்கதிர் இயக்கம் கொண்ட இந்த வால்வின் விலை ரூ. 20 கோடி என்றும், இந்த அறுவைச் சிகிச்சையை ரகசியமாகச் செய்வார்கள் என்றும் ஓர் ஆங்கில பத்திரிகையில் படித்தேன். இந்த அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகளின் விவரங்களை பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளிப்படுத்த மாட்டார்கள் என்றும் அந்தச் செய்தி கூறியது. அதில் தான் எனது ‘ஃபர்ஸ்ட் ஃபிளைட் டு நியூயார்க்’ புதினத்திற்கான கரு கிடைத்தது. அந்த வால்வை இந்திய கோடீஸ்வரரின் ஒரே இளம்வயது மகளுக்குப் பொருத்த அவர் செய்யும் முயற்சியையும், அவளைக் கொன்று வால்வை அபகரிக்கத் திட்டமிடும் குற்றவாளியையும் சித்தரித்து புதினத்தை உருவாக்கினேன். குற்றவாளியிடமிருந்து அந்த இளம்பெண் எப்படித் தப்பினாள் என்பதே கதையின் முடிவு.
இப்படித்தான் அணுவியல், ஸ்டெம் செல், உடலுறுப்பு தானம் போன்ற புதிய விஷயங்களில் தகவல்களைத் திரட்டிக் கொள்வதன் மூலமாக புதிய கதைகளை உருவாக்குகிறேன். நான் இதுவரை விமானநிலையத்திற்கே போனதில்லை. ஆனால், விமானப்பயணம் செல்லும் லேனா தமிழ்வாணன் போன்ற நண்பர்களிடம் விமான நிலையம் குறித்த தகவல்களை கிரகித்துக் கொள்வேன்.
எனது ‘நந்தினி 440 வோல்ட்ஸ்’ புதினத்தில் குற்றவாளியிடமிருந்து கண்தானம் பெற்ற ஒரு பெண் எவ்வாறு அநீதிக்கு எதிரானவளாக தன்னை மாற்றிக்கொள்ள நாடகமாடுகிறாள் என்பதைச் சித்தரித்தேன். இப்படித்தான் புதிய கோணங்களில் கதையை நடத்துவேன். ஆர்வமூட்டும் துவக்கம், அதிரடித் திருப்பங்கள், திடீர் உச்சம் என எனது கதைக்கு ஒரு வடிவம் உள்ளது. அதன் முடிவில் நீதிபோதனை மறைந்திருக்கும்.
இப்போதும் கூட குமுதம் வார இதழில் எழுதும் ‘வெல்வெட் குற்றங்கள்’ தொடர்கதையில், காணாமல் போன மலேசிய விமானம் என்ன ஆனது என்று, சமீபத்திய பரபரப்புச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு எழுதி வருகிறேன். அதற்காக, காணாமல் போன விமானங்களின் வரலாறு, அதைக் கண்டுபிடிக்கச் செய்யப்படும் படிப்படியான நடவடிக்கைகள், கண்காணிப்பு விமானம், மீட்பு நடவடிக்கைகள், கடலுக்குள் உள்ள பொருள்களைக் கண்டறியும் ஒலி அலை தொழில்நுட்பம் போன்ற பல புதிய விஷயங்களை அறிந்துகொண்டு, அதை கதையில் எழுதுவதால், புதிய வாசகர்கள் மிகவும் வரவேற்கிறார்கள்.
 1980 முதல் 1990களின் பிற்பாதி வரையிலும் வார இதழ்களின் பொற்காலமாக இருந்தது. தவிர காகிதக்கூழ் பதிப்பு (பல்ப்  ஃபிக்‌ஷன்) எனப்படும் பாக்கெட் நாவல்களின் வளர்ச்சி அதீதமாக இருந்தது. அக்காலகட்டத்து எழுத்தாளர்களில் முதன்மையானவராக நீங்கள் திகழ்ந்தீர்கள். ஒரே சமயத்தில் 7 வார இதழ்களிலும் 3 பாக்கெட் நாவல்களிலும் தொடர் கதைகளாகவும், குறும் புதினங்களாகவும் எழுதித் தள்ளினீர்கள். எப்படி இதனை நீங்கள் சாதித்தீர்கள்?
Crime Novels2எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் உழைப்பு தான். தவிர எனக்கு வாய்ப்பளித்த பத்திரிகை ஆசிரியர்கள், என்னைத் தொடர்ந்து படித்த வாசகர்களின் ஆதரவு இல்லாவிட்டால் இந்தச் சாதனை நிகழ்ந்திருக்காது.
குறிப்பாக குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவர்கள், கல்கண்டு வார இதழில் 1980-ல் அளித்த தொடர்கதை வாய்ப்பே என்னை அனைவரும் உணரச் செய்தது. அதில் எழுதிய ‘7வது டெஸ்ட் டியூப்’ தொடர்கதை எனது அடையாளத்தை பதிவு செய்த்து. அதைத் தொடர்ந்து பல வார இதழ்கள் எனது படைப்புகளை வெளியிடத் துவங்கின. எனக்கும் வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம்.
எஸ்.ஏ.பி. மட்டுமல்ல, ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியம், இதயம் பேசுகிறது ஆசிரியர் மணியன், சாவி ஆசிரியர் விஸ்வநாதன், கல்கி ஆசிரியர் ராஜேந்திரன் போன்றவர்கள் என் மீது வைத்திருந்த அன்பே என்னை கடுமையாக உழைக்கச் செய்தது. அந்தக் காலத்தில் வாரத்தின் 7 நாட்களும் ஏதாவது ஒரு வார இதழில் எனது தொடர்கதை வந்து கொண்டிருந்தது. விகடன், ராணி, கல்கி, குமுதம், சாவி, இதயம் என அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த அனைத்து இதழ்களும் எனது தொடர்கதையையைக் கேட்டு வாங்கிப் பிரசுரித்தன.
தவிர எனது நண்பரும் உடன்பிறவாத் தம்பியுமான அசோகன் (ஜீயே) 1985-ல் ஆரம்பித்த பாக்கெட் நாவல்கள் விற்பனையில் சரித்திரம் படைத்தன. அசோகனுடனான எனது உறவு எழுத்தாளர்- பதிப்பாளர் என்ற நிலையையும் தாண்டியது. கடந்த 30 ஆண்டுகளில், அவருக்கு மட்டுமே 500-க்கு மேற்பட்ட புதினங்களை நான் எழுதி இருக்கிறேன்.
இவர்கள் அனைவருக்கும் கதை எழுத எனக்கு ஒருநாள் போதாது என்ற நிலைமை இருந்தது. தினமும் ஒவ்வொரு பத்திரிகைக்கும் தொடர்கதை அத்தியாயங்களை எழுதி கூரியரிலோ, அல்லது எனது வாசகர்களான ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் மூலமாகவோ சென்னைக்கு அனுப்பி விடுவேன்.
 ஒவ்வொரு வார இதழிலும் வெவ்வேறு விதமான தொடர்கதை எழுதும்போது, எப்படி அதை நினைவில் கொண்டு எழுதுவீர்கள்?
உண்மையில் இதை கடவுளின் கிருபை என்று தான் சொல்ல வேண்டும். எனது ஞாபக சக்தி கூர்மையானது. தவிர, ஒவ்வொரு பத்திரிகைக்கும் எழுதும் அத்தியாயங்களின் சுருக்கத்தை தனிக் குறிப்பேட்டில் குறித்து வைத்திருப்பேன். எந்த ஒரு கைப்பிரதியையும் நகல் எடுத்து வைத்துக் கொள்வதில்லை.
நாம் எந்த ஒரு விஷயத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்கிறோமோ, அதை மறந்துவிட மாட்டோம். அப்படித்தான் எனக்கு என் கதைகளின் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததால் நினைவில் வைத்திருப்பதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. தவிர அர்ப்பணிப்பு மனநிலையில் நீங்கள் எழுதும்போது எல்லாம் கூட வரும். எழுத்துத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆவேசம் தான் என் அர்ப்பணிப்புக்குக் காரணம்.
Rajeshkumar 002இன்னமும் நீங்கள் கையில் தான் எழுதுகிறீர்களா?
ஆமாம். கணினியில் தட்டச்சு செய்யப் பழகி இருந்தாலும், கையில் எழுதும்போது வரும் தொடரோட்டம் தட்டச்சில் வருவதில்லை. எனவே, இப்போதும் கையில் தான் எழுதுகிறேன்.
முந்தைய காலத்தில் வார இதழ்களுக்கு இருந்த கிராக்கி தற்போது குறைந்துவிட்டது. புதினங்களைப் படிக்கும் வாசகர் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எல்லாமே மாற்றங்களுக்கு உட்பட்டது தான். மாறிவரும் தகவல் தொழில்நுட்ப உலகிற்கு ஈடு கொடுக்க பத்திரிகைகளும் மாறியாக வேண்டியிருக்கிறது. முன்னர் 6 லட்சம் பிரதிகள் விற்றது குமுதம். வாசகர்களுக்கு பொழுதுபோக வாசிப்பு மட்டுமே கருவியாக இருந்த காலம் அது. இப்போதோ அலைபேசிகள், தொலைக்காட்சிகள், இணையதளங்களின் காலம். எனவே ஒருநிமிடக் கதை, கால்பக்கக் கதைகள் என வாசகருக்கேற்ப வார இதழ்களும் வணிகரீதியாக மாறி இருக்கின்றன. ஆனாலும் தொடர்கதைக்கு இன்னமும் மவுசு இருக்கிறது.
வாசகர்களைப் பொருத்த வரை, புத்தக வாசிப்பு குறைந்திருந்தாலும், இணையதள வாசிப்பு பெருகி இருக்கிறது. அதற்கேற்ப மின்னூல்கள் வெளிவரத் துவங்கிவிட்டன. எனது புதினங்களே இப்போது மின்னூல் வடிவில் கிடைக்கின்றன.
1980- 1990களில் ஓய்வே இல்லாமல் எழுதிய நீங்கள் இப்போது எப்படி உணர்கிறீர்கள்? உங்கள் தேவை குறைந்துவிட்டதா?
இல்லை. இப்போதும் நான் மும்முரமாக எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். சொல்லப்போனால் முன்னை விட இப்போது தான் நான் அதிகம் எழுதுகிறேன். இப்போதும்கூட, மங்கையர் மலர் மாத இதழ், குமுதம், சூரியகதிர் வார இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறேன். தவிர தொலைக்காட்சிக்காக சின்னத்திரை தொடர்களிலும் எழுதுகிறேன். திரைப்படத் துறையிலும் எழுதுகிறேன். இவை தவிர, புனைவல்லாத கட்டுரைகளும் எழுதுகிறேன்.
நான் எப்போதுமே தொலைக்காட்சி பார்ப்பது கிடையாது. கோயிலுக்குப் போகக்கூட எனக்கு நேரம் இல்லை. இப்போதும்கூட பல்வேறு இதழ்களின் தீபாவளி மலர்களுக்கு சிறப்புச் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். இவையல்லாது முகநூலில் ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ என்ற தலைப்பில் பல புதிய விஷயங்களை எழுதி வருகிறேன். அங்கு எனக்கு மிகப் புதிய வாசகர்கள் பலர் அறிமுகமாகி வருகின்றனர்.
எனது மகன்கள் கூட, ‘ஏம்ப்பா கொஞ்சம் ஓய்வெடுக்கக் கூடாதா?’ என்று கேட்கிறார்கள். என்னால் ஓய்வெடுக்க முடியாது. ஓய்வெடுத்தால் எனக்கு வயதாகிவிடும் என்று அவர்களிடம் கூறுவேன்.

thanx -  the hindu

Monday, May 12, 2014

மேஜிக் ரைட்டர் அமரர் சுஜாதா பிறவிக்கலைஞன் கமல் ஹாசனை டாமினேட் செய்த நிமிடங்கள்

வலைப்பூ வாசம்: சுஜாதாவின் ஆட்டோகிராப்

http://www.skpkaruna.com 

 
சுஜாதாவுடனான எனது முதல் சந்திப்பு இது. ( அதாவது  திரு கருணா அவர்கள் )


எனது கல்லூரியின் முதல் வருடம் முடி யும் நேரத்தில், பல்கலைக்கழகம் முழுவதும் நடந்த ஏதோ ஒரு வேலை நிறுத்தத்தால் திடீர் விடுமுறை கிடைத்தது. ஊருக்கு திரும்புவதற்காக பெங்களூர் வந்து விட்டு, வழக்கம் போல எம்.ஜி ரோடு, பிரிகேட் ரோட்டில் அலைந்து கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் இரவு ஏழு மணிக்கு மேல்தான் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் தமிழ்நாட்டுக்கு வண்டிகள் கிளம்பும். 


ஒரு சோம்பலான மதியப் பொழுதில் கப்பன் பார்க்கில் திரிந்து கொண்டிருக்கும் போதுதான் அந்த பியட் காரைப் பார்த்தேன். காரின் டிரைவர் இருக்கையில் அமர்ந்து பக்கத்தில் இருப்பவரிடம் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தது சாட்சாத் சுஜாதா! எனக்கு மூச்சு சற்று நேரம் நின்று விட்டது. உண்மையில் கையும் ஓடவில்லை! காலும் ஓடவில்லை! காருக்கு பின்னாலேயே தயங்கி நின்று கொண்டிருந்தேன். 


நீண்ட நேரம் நின்று கொண்டு காரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை ரியர்வியூ கண்ணாடி வழியே சுஜாதா கவனித்து விட்டார். தனது பக்க கதவைத் திறந்து கைகளால் என்னை அழைத்தார். அருகில் சென்ற என்னிடம், “ என்னப்பா வேண்டும்! இப்படி முறைத்து பார்த்துக் கொண்டேயிருக்கிறாயே?” என்றார். 


“இல்லை சார்! நான் உங்கள் ரசிகன். ஒரு ஆட்டோ கிராஃப் வேண்டும்” என்றேன். 


“சரி! பேப்பர், பேனா கொடு” என்று கேட்ட பிறகுதான் எனக்கு உறைத்தது. என்னிடம் இரண்டுமே இல்லை! பின்னே! காலேஜ் ஸ்டூடண்ட் ஆயிற்றே! 


“இதோ வாங்கி வருகிறேன் சார்” என்று சொல்லிவிட்டு ஓட ஆரம்பித்தேன். 


பெங்களூர் அவ்வளவாக பரிச்சயம் இல்லாத 1987-ம் வருடம் அது. கப்பன் பார்க்கில் இருந்து தவறான வழியில் விதான் சவுதா வழியே வெளியே வந்து விட்டேன். அங்கு மருந்துக்குக்கூட ஒரு கடை இருக்காது. பதட்டத்தில் ஓடிக் கொண்டேயிருந்தேன். ஒரு வழியாக சில கிலோமீட்டரில் கனரா வங்கி தலைமையகம் அருகில் இருந்த ஒரு பெட்டிக் கடையில் பேப்பர், பேனா வாங்கிக் கொண்டு மீண்டும் கப்பன் பார்க் நோக்கி வேகமெடுத்தேன். எத்தனை நேரம் ஓடினேன், எவ்வளவு தூரம் ஓடினேன் என்றெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. 


கப்பன் பார்க் உள்ளே நுழைந்து, அந்த பியட் கார் அங்கேயே நிற்பதை பார்த்த பின்புதான் கொஞ்சம் ஓட்டம் தளர்ந்தது. என் கையிலிருந்த பேப்பர் முழுவதும் வியர்வையில் நனைந்திருந்தது. பையில் இருந்த ஒரு துண்டில் முகத்தை துடைத்துக் கொண்டு, மூச்சு சற்று ஆசுவாசப்பட்ட பின்பு மீண்டும் காரின் பின்னே காத்திருத்தல் ஆரம்பமாயிற்று. 


கொஞ்ச நேரத்தில் என்னை கவனித்து மீண்டும் கையசைத்து கூப்பிட்டார். நான் வியர்வை பொங்க டிரைவர் இருக்கையின் அருகே சென்றேன். இம்முறை கையில் பேப்பரும் பேனாவும் இருந்தது. ‘ கொடு அதை!’ என்று என்னிடம் வாங்கிக் கொண்டு அருகில் இருப்பவரிடம் அந்த பேப்பரையும் பேனாவையும் கொடுத்தார். 


“கமல்! ஒரு பையனுக்கு உன்னோட ஆட்டோகிராஃப் வேணுமாம்... பாரு! ரொம்ப நேரம் வெயிட் பண்றான்” என்று சொன்ன பின்புதான் நான் கவனித்தேன். அவர் அருகில் அமர்ந்து கொண்டிருந்தது நடிகர் கமலஹாசன்! 


கமல் அந்த பேப்பரில் ஆட்டோகிராஃப் போடும் வேளையில், நான் சுஜாதாவிடம் சற்று சத்தமாகவே சொன்னேன். “இல்லையில்லை! எனக்கு உங்கள் ஆட்டோகிராஃப்தான் வேண்டும்” என்று! 


சில நொடிகள் அங்கு ஒரு அமைதி. சுஜாதா லேசாக அதிர்ந்து விட்டார். கமல் உடனே சுதாரித்துக் கொண்டு, “சார்! நான் சொன்னேன் இல்லையா? இப்போதெல்லாம் நீங்கள்தான் எங்களை விட பாப்புலர்!” எனக் கூறிக் கொண்டே பேப்பரை சுஜாதாவிடமே தந்து விட்டார். சுஜாதா எதுவும் எழுதாமல் ரங்கராஜன்/ சுஜாதா என்று வெறுமனே கையெழுத்திட்டு என்னிடம் கொடுத்தார். 


அந்த ஆட்டோகிராஃபை சட்டையில் வைத்துக்கொண்டு, அன்று முழுதும், கப்பன் பார்க் முழுக்க கெத்தாக நடந்து கொண்டேயிருந்தேன். அப்போதே நான் கமல் ரசிகனும்தான். ஆனால், சுஜாதாவிற்கு முன்பு வேறு எந்த ஆளுமையும் என்னை அந்த அளவிற்கு பாதித்திருக்கவில்லை. 


இருபது வருடம் கழித்து, நானும் நண்பர் பவா.செல்லதுரையும் ஒரு மாலைப் பொழுதில் சுஜாதாவை சந்திக்கச் சென்றிருந்தோம். அப்போதெல்லாம், அவர் சென்னைக்கே வீடு மாற்றி வந்து விட்டிருந்தார். அவரை பார்க்கப் போகிறோம் என்றவுடன், எங்கள் நண்பர் திலகவதி ஐபிஎஸ், தானும் வருவதாக சொல்லி உடன் வந்தார். 


நீண்ட நேர சுவாரஸ்யப் பேச்சுக்கு பின், அவரிடம் நான் அந்த முதல் சந்திப்பைக் குறிப்பிட்டு சொன்னேன். சட்டென்று அங்கும் ஒரு அமைதி! பின் ‘அது நீங்கதானா?’ என்றவர் அந்த சம்பவத்திற்கு பின்புதான் தானும் ஒரு பிரபலம் என்பதை நம்பவே ஆரம்பித்தேன் என்றார். கமல் இன்னமும் அதை நினைவில் வைத்திருக்கிறார் என்று ஒரு கூடுதல் தகவலும் கொடுத்தார். 


“இன்ஜினியரிங் படிக்க பெங்களூருக்கு ஏன் வந்தீர்கள்? மார்க் குறைவா?” என்றார். மார்க்கை சொன்னேன். “தமிழ்நாட்டி லேயே கிடைத்திருக்குமே? பின் ஏன் பெங்களூர்”என்றார். 



“உங்களால்தான் சார்!” என்றேன். 


“வாட்!” 


“ஆமாம் சார்! நீங்கள் பெங்களூரில் இருந்தீர்கள். அங்கே படித்தால் உங்களைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்குமே? அதனால் தான் பிடிவாதம் பிடித்து அங்கே வந்தேன்.” 


“நீங்கள் மேலும், மேலும் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறீர்கள்!” என்றவர், “பின்பு ஏன் என்னை பெங்களூர் வீட்டுக்கு வந்து பார்க்காமல், இந்த கப்பன் பார்க் விளையாட்டெல்லாம்?” என்றார். 


நீங்கள்தானே சார், அப்போது எழுதியிருந்தீர்கள்! “உண்மையான ரசிகர்கள் கடிதம் போடுகிற அல்லது நேரில் வந்து பார்க்கிற ஜாதியில்லை என்று?” என்றேன். 


சட்டென அதிர்ச்சியுற்று, பின் நீண்ட நேரம் மவுனமாக இருந்து விட்டு, வீட்டினுள்ளே திரும்பி, “சுஜாதா! இங்கே வா! இன்னுமொரு சுவாரஸ்யமான ரசிகன் எனக்கு” என்று அவரின் மனைவியை அழைத்தார்.


நன்றி - த தமிழ் இந்து , திரு கருணா அவர்கள்
  • ரத்தினசாமி கோமகன்  
    சுஜாதா-மாதிரியே முடித்திருக்கிறீர்கள்-சுவாரஸ்யம்!
    about 18 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
    kaarthik   Up Voted
  • anandan  from Chennai
    sandilyan / கல்கி கூட
    about 21 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • பொன்.முத்துக்குமார் Ponnambalam  
    அற்புதம் போங்கள். முன்பே படித்திருந்தாலும் சுஜாதா என்றாலே சுவாரஸ்யம்தான். என்னவொரு மனிதன். தமிழகம் இழந்த மற்றொரு மாணிக்கம்.
    a day ago ·   (2) ·   (0) ·  reply (0)
  • Sampath  from Coimbatore
    sujathavai எழுத்து எண்ணி padithavarkalukku மட்டும் thaan தெரியும் ........ அவருடைய இழப்பு நிரப்ப mudiyadhea vetridam என்று...
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • veera  
    super
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • gurumurthy  
    சுஜாதாவை தமிழகம் மறந்தாலும் ஹிந்து மற்றும் சுஜாதா வாசகர்கள் மறக்க மாட்டார்கள்.
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Bruno  
    செம..!
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Rajan  from Mumbai
    மிக அருமையான ரசிகன், ரசிகனுக்கான வரைமுறையை மீறாத SKPK அருகில் இருந்த கமலின் பெருந்தன்மையும் மதிக்கத்தக்க ஒன்று. மொத்தத்தில் கலைஞர்களுக்கு ஏற்ற ரசிகன்.

Monday, May 06, 2013

எழுத்தாளர் அமரர் சுஜாதா பேட்டி @ விஜய் டி வி ( நீயா நானா கோபினாத் ) வீடியோ

சுஜாதா பெரும்பாலானவர்களுக்கு எழுத்துலக குரு. மானசீக ஆசான். அவரை எந்த அளவுக்கு மிஸ் பண்றோம்னு எல்லாரும் உணர முடியுது . நீயா நானா கோபினாத் விஜய் டி விக்காக எடுத்த ஒரு பேட்டி இப்போ தான் பார்த்தேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் 




Saturday, February 23, 2013

எய்தவன் - சுஜாதா - சிறுகதை ( 1996)

பெசன்ட் நகரில் ஒரு வீடு - டிசம்பர் 4, 1995... 


 
 சுந்தரலிங்கம் காலையில் தன் வீட்டு வாசலிலேயே குத்தப்பட்டார். கோர்ட் விடுமுறை நாள்... பெசன்ட் நகர் வீட்டில் காலை நிதானமாகவே எழுந்திருந்து தோட்டத்துக்கு நீர் இறைத்து காபி சாப்பிடுகையில் 'ஹிண்டு’வில் விளையாட்டுப் பக்க ஓரத்தில் யார் இறந்தார் கள் என்பதை முதலில் பார்த்துவிட்டு முன் பக்கத்துக்கு வந்தார். பொடி எழுத்தில் காலமான வர்களின் வயதையெல்லாம் தன் வயதுடன் ஒப்பிடுவது வழக்கம். காபி குடித்துவிட்டு வராந்தா பிரம்பு நாற்காலியில் இருந்து எழுந்த போது அந்த அந்நியன் அணுகினான். நாய் குரைக்கும். இன்று மரகதம் அதை வாக் அழைத் துப் போயிருந்தாள். போன வாரம்தான் பாதுகாப்புக்காக பாரி ஏஜென்ஸியில் இருந்து ஒரு ஆள் போட்டிருந்தார். அவன் மரகதத்துடன் போயிருந்தான். கவனக்குறைவான வேளை. வலுவான இரும்புக் கதவு தாளிடாமல் இருந்தது. தள்ளித் திறந்து வந்தான்.




குறுகிய சமயத்தில் அவன் நடுத்தர வயது, சதுர முகம், மாநிறம், காலர் இல்லாத சட்டை, அதனுள் தெரிந்த சங்கிலி. மீசை ஏன்... அடர்த்தியான காதோர முடியைக்கூடக் கவனித்தார். ஒருவிதத்தில் இவனை உள் மனதில் எதிர்பார்த்திருந்தாரோ...


''யாருப்பா?''
''சாரைப் பார்க்கணும்.''
''என்ன விஷயமா?''
''கேஸ் விஷயமா.''
''அதுக்கெல்லாம் தம்புசெட்டித் தெருவில் ஆபீஸ் இருக்குது... அங்க வாப்பா...'' என்று சொல்லி முடிப்பதற்குள், அவன் ஒளித்துவைத்து இருந்த இரண்டு ஆயுதங்களை முதுகுப் பக்கத் தில் இருந்து எடுப்பதைப் பார்த்தார். வாசலில் ஆட்டோ ரிக்ஷா இன்ஜின் அணைக்காமல் ஓடிக்கொண்டு இருந்தது. ஆபத்து என்று அவருக்குள் அட்ரினலின் பாய்வதற்குள், அவன் நேராக மார்பைக் குறிவைத்துக் குத்தினான். சற்றே திரும்பிவிட, விலா எலும்புக்குள் தாக்குதலின் வேகத்தினாலும் பலத்தினாலும் மென்மையான தசைகளுக்குள் புகுந்து கத்தி யின் நீளத்துக்கு அதிகமாகவே கிழித்தது. தடுமாறி ''மரகதம், மரகதம், மணி...'' என்று அலறுவதற்குள் மற்றொரு குத்து. இந்த முறை கழுத்தில் மற்றொரு ஆயுதத்தால் மண்டை மேல் பக்கவாட்டில் பாய்ந்து, நெற்றிக்கு அருகில் பட்டு, வலது கண்ணைச் சேதப்படுத்தி, தாடைக்குள் பாய்ந்து வராந்தாவில் அலங்காரத்துக்கு வைத்திருந்த 'டெரகோட்டா’ குதிரை மேல் ரத்தம் தெறித்தது. ரத்த சேதத்தில் நினைவிழப்பதற்கு முன் அவன் முகத்தின் தழும்பையும் வியர்வை நாற்றத் தையும் மூச்சில் சாராய நெடி யையும் உணர்ந்தார்.



அக்கம்பக்கத்தினர் குரல் கேட்டு ஓடி வருவதற்குள் அவன் ஆட்டோ ரிக்ஷா ஏறி வேகமாகச் சென்றுவிட்டான். தெரு முனையில் மற்றொரு ஆட்டோ காத்திருந்தது. இந்த ஆட்டோ அவனை உதிர்த்துவிட்டுக் கூட்டத்தில் கரைந்து விட்டது. 40 தூரத்தில் ஒரு டி.வி. சீரியலுக்குப் படம்பிடிக்க டிபன் பாக்ஸ், ஜெனரேட்டர் எல்லாம் வந்து இறங்கிக்கொண்டு இருந்தன.


 அவர்கள் யாரும் கவனிக்கவில்லை.
சுந்தரலிங்கம் மயங்கிவிழுந்தார். அவர் மகன் முகச்சவரம் பண்ணிக்கொண்டு இருந்தவன் ஓடிவந்தான். கொஞ்ச நேரம் செய்வது அறியாமல் தடுமாறிய பின், மாருதியில் அவரைத் திணித்து (பின் சீட்எல்லாம் ரத்தம்) அருகே இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசென்றான். 'போலீஸ் கேஸ்’ என்று அவர்கள் எடுக்க மறுத்து, ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு போன் செய்து ஆம்புலன்ஸ் கொடுத்தார்கள். அடையாறில் இருந்து ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு மயக்க நிலையில் எடுத்துச் செல்கையில், மிகுந்த ரத்த சேதத்தில் அழுத்தம் குறைந்து, மூச்சு நூல்போல வெளிப்பட்டுக்கொண்டு இருந்தது. இதயம் நின்றுபோகும் அவசரத்தில் இருந்தது. எமர்ஜென்ஸியில் அவருக்கு ரத்தம் மணிவாசகம்தான் கொடுத்தான். வெளிப்புறக் காயங்களை மிகக் கவனமாகச் சுத்தம் செய்து எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எடுத்தார்கள்... தையல் போட்டார்கள். மார்பில் பாய்ந்திருந்த கத்திக்குத்து அகலக் குறைவாக, ஆனால், எட்டு இன்ச்சுக்கு மேல் ஆழமாக இருந்த அதன் பாதையில் டிஷ்யூக்களை எல்லாம் சேதப் படுத்தியிருந்தது.



ராயப்பேட்டை ஆஸ்பத்திரி      மாலை 5 மணி... 



அதே தினம் டெலிவிஷன் கேமராக்களும் நிருபர்களும் ஆஸ்பத்திரியைச் சூழ்ந்துகொள்ள... போலீஸ் டி.ஐ.ஜி. வந்தபோது, கேள்விக்கணை களால் துளைக்கப்பட்டபோது...
''மணிமோகன் ஆளுங்கதான் செய்திருப்பாங்கன்னு சொல்லிக்கிறாங்களே.?''
''நோ கமென்ட்ஸ் ப்ளீஸ்...''
''கொலைகாரனைப் பிடிச்சுருவீங்களா?''
''முதல்ல இது கொலை இல்லை. கொலை முயற்சி... சுந்தரலிங்கம் உயிருடன் இருக்கார். ட்ரொமா வார்டில் உயிருக்கு ஊசலாடிக்கிட்டு இருக்கார்...''
''இது ஏற்பாடு செய்த கொலைனு...''
''நாங்க எந்த முடிவுக்கும் வரலை...''
''கொலை முயற்சி செய்தவனைப் பிடிச்சுருவீங்களா?''
''அதுக்குத்தானே போலீஸ் இருக்கு.''
''பிடிக்க மாட்டீங்கன்னு சொல்றீங்க?''
''எனக்குக் கோபம் வரலை'' என்று சிரித்தார் டி.ஐ.ஜி.
''ஆட்டோ நம்பர் தெரியுமா?''
''முதல்ல ஆட்டோவான்னே ஊர்ஜிதமாகலை. அவருக்கு நினைவு வந்தப்புறம்தான் மேல் விவரம் தெரியும். அவர் குத்தப்பட்ட சமயத்தில் பக்கத்துல யாரும் இல்லை. 40 அடி தள்ளி ஷூட்டிங் செய்துக்கிட்டு இருங்காங்க... அவங்க யாரும் கவனிக்கலை. போலீஸ் என்ன செய்யும், சொல்லுங்க...''
''சுந்தரலிங்கம் போலீஸ் பாதுகாப்பு கேட்டு, கொடுக்க வேணாம்னு மேலிடத்து உத்தரவு வந்தது உண்மையா?''
''பொய்... அவர் எங்ககிட்ட புரொட்டெக்ஷன் எதும் கேக்கவே இல்லை.''



சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சுந்தரலிங்கத்துக்கும் அவர் மனைவி மரகதத்துக்கும் நிகழ்ந்த உரையாடல்... 




மரகதம்: ''எதுக்காகங்க உங்களுக்கு வம்பு? அவன் ஆளைவெச்சு அடிப்பானாம். இப்பவே நீங்க பாட்டுக்கு கோர்ட்டுக்குப் போயிர்றீங்க. தெனம் ரெண்டு போன்கால் வருது... 'தாலி அறுக்கணுமா... உம் புருஷனை ஜாக்கிரதையா இருக்கச் சொல்லு... கேஸை வாபஸ் வாங்கச் சொல்லு’னு.''
சுந்தரலிங்கம்: ''இதுக்கெல்லாம் பயப்படக் கூடாது மரகதம்...''
மரக: ''பின்ன எதுக்குத்தான் பயப்படணும்?''
சுந்: ''கடவுளுக்கும் மனசாட்சிக்கும்தான் பயப்படணும்.''
மரக: ''எனக்கு மணிமோகன்கிட்டயும் பயம்.''


சுந்: ''இவனெல்லாம் மந்திரியா இருக்க லாயக்கு இல்லை. சாராய சாம்ராஜ்யம், ஹவாலா மார்க் கெட்னு கோடி கோடியா சம்பா திச்சு வெச்சிருக்கான். இவன் தொழிற்சாலையில வொர்க்கர்ஸ் கேஸ்ல அப்பியர் ஆனேன். எத்தனை ஊழல் தெரியுமா..? ரிஜிஸ்தர்ல ஒரு சம்பளம்... கொடுக் கறது ஒரு சம்பளம். 'லேபர் லா’வுக்குப் பயந்து பர்மனென்ட் ஆக்காம ஆறு மாசத்துக்கு ஒரு முறை டிஸ்மிஸ் செஞ்சு மறுபடி வேலைக்கு எடுத்துக்கற ட்ரிக்... 200 பேரை அப்படி வெச்சிருக் கான். சைல்டு லேபர்... வயசை அதிகமாகச் சொல்லி சைல்டு லேபர் பதினஞ்சு ரூபா சம்பளம் உயர்த்த அழறான். பதினஞ்சு நாளைக்கு ஒருமுறை வெளிநாடு போறான். கட்சிக்காக ஓப்பனாவே இன்டர்வியூ ஒன்றுக்கு ஒரு லட்சம் வெச்சாத்தான் பேட்டியே உண்டு. தினம் 20 பேர்கிட்ட வாங்கறான் இப்படி.''



மரக: ''அவங்க எல்லாருமே இப்படித்தான் இருக்காங்க. இந்த உலகத்தையே திருத்துவீங்களா?''
சுந்: ''இல்லை, மணிமோகன் ஒரு டெஸ்ட் கேஸ்... நான் எடுக்கறதெல்லாம் டெஸ்ட் கேஸ்தான். பப்ளிக் இன்ட்ரஸ்ட் கான்ஸ்டிட்யூஷனல் லா... கன்ஸ்யூமர் மேட்டர் இப்படித்தான் எடுப்பேன். மணிமோகன் மாதிரி ஆளுகளையெல்லாம் கேள்வி கேக்காம சுட்டுருவாங்க சைனாபோல நாட்ல.''
மரக: ''அங்கேயும் கரப்ஷன் இருக்குன்னு கல்கண்டுல படிச்சேன்.''
சுந்: ''கரப்ஷன் எல்லா இடத்துலயும்தான் இருக்கு. ஏன்... அமெரிக்காவுல இல்லையா? ஆனா, அதை எதிர்த்துப் போராடறவங்களும் எல்லா இடத்துலயும் என்னை மாதிரி நிறையப் பேர் இருப்பாங்க. இங்க நான் ஒருத்தன்தான்.''
ராயப்பேட்டை ஆஸ்பத்திரி டாக்டர் ராம்குமார் தன் டீனுடன் பேசிய பேச்சு..

.
டீன்: ''என்ன ராம்... எப்படி இருக்கார். புரட்சி வக்கீலு?''

ராம்குமார்: ''சுந்தரலிங்கம் ஸ்கல்ல அடிபட்டு கன்கஷன் உள்ளே கொஞ்சம் ரத்தம் கசிந்து, கட்டி தட்டிப் போயிருக்குது... ஸ்கேன்ல தெரியுது பாருங்க... காயங்கள்லாம் நல்லாவே ஆறிக்கிட்டு வருது... ஸுச்சர் போட்டது... நல்லவேளை டயாபட்டிக் இல்லை.''
டீன்: ''தெரியுது. மூளைல கட்டி கரையறத்துக்கு மருந்து கொடுத்துருங்க. ரொம்ப பேஜார் கேஸுங்க... பத்திரிகைக்காரனுவ, போலீஸ்காரனுவ, ஜீ.டி.வி-லருந்து ஒரு பொம்பளை உயிரை எடுக்கறா... 'பேட்டி கொடு, விவரம் எப்ப வரும்’னு.''
ராம்: ''சுயநினைவு வந்து, யார் தாக்கினார்கள் என்கிற விவரம் வெளிப்பட ஒரு வாரமாவது ஆகும் சார்.''
டீன்: ''பொழைச்சுருவார் இல்ல?''
ராம்: ''பிழைச்சுருவார். ஆனா, ஒரு கண்ணு போயிருச்சு. க்ளாஸ் ஐதான் பொருத்தணும். முகத் துக்குக் குறுக்கே தழும்பு. ஆனாலும் ரொம்ப அதிர்ஷ்டக்காரர். கத்திக்குத்து இதயத்தை அரை இன்ச்ல தவறவிட்டிருக்குது.''
22.1.96 பெசன்ட் அவென்யூ சுந்தரலிங்கத்தின் வீட்டில்... 



டிஸ்சார்ஜ் ஆகி காரில் இருந்து இறங்கியவரைக் கண்ணீருடன் வரவேற்றாள் மரகதம்.
''உயிர் பிழைச்சு வந்தீங்களே... அஷ்டலட்சுமி கோயிலுக்கு ஒரு முறை போயிட்டு வந்துருவம்...''
''இல்லை, மரகதம் இப்ப டயர்டா இருக்குது... டி.ஐ.ஜி. வேற வரேன்னுசொல்லியிருக்காரு.''
''உங்க கண்ணு... உங்க கண்ணு..?''
''ஒரு கண்ணு போனது போனதுதான். எதையோ கோலிக்குண்டை வெச்சுப் பொருத்தியிருக்காங்க. ஊசிநூல் கோக்க சிரமமா இருக்கும்னாங்க. படிக்கறதுல அதிகம் ஸ்ட்ரெயின் வேண்டாம்னாங்க. அதும் இடது கண்ணு. அழுவாத கண்ணு. நீ சொன்னாப்பல உயிரோட திரும்பினதே பெரிசு. காயம் ஆறிடுச்சு. தழும்பு போயிடும்... இந்தத் தழும்பு! ஆனா, இன்னொரு தழும்பு போகாது.''
''ஐயோ! இந்த வக்கீல் வேலையே வேணாங்க. இருக்கறதை வெச்சுக்கிட்டு ஏதாவது கம்பெனியில லீகல் அட்வைஸர் வேலை பாத்துக்கங்க. பையனும் படிப்பை முடிச்சுருவான். ஊருக்காக பிராது கொடுத்து அலைஞ்சு உசிரைவிட்டது போதுங்க. என்னங்க... இத்தனை ஃபீல் பண்ணிச் சொல்லிக்கிட்டு இருக்கேன்... சிரிக்கிறீங்களே?''
''ஒண்ணும் ஆகாது, கவலைப்படாதே. கடவுள் காப்பாத்துவார்.''
''உங்களைத் திருத்தவே முடியாதுங்க.''



23.1.96 பிற்பகல் - டி.ஐ.ஜி. வந்து நலம் விசாரித்தபோது...
டி.ஐ.ஜி.: ''மிஸ்டர் சுந்தரலிங்கம்... சும்மா ஒரு கர்ட்டசி விசிட்தான். உங்க கேஸு ரொம்ப ஹாட் ஆயிருச்சு. நீங்க எப்ப ஐடென்டிபிகேஷனுக்கு வர முடியும்னு சொல்லுங்க. ஒரு மாதத்துக்கு செக்யூரிட்டி போட்டிருக்கோம். பார்த்திங்கல்ல...''
சுந்தரலிங்கம்: ''கண்டுபிடிச்சுட்டீங்களா ஆளை?''
டி.ஐ.ஜி.: ''நாலு பேரைப் புடிச்சுவெச்சிருக்கோம். இந்த மாதிரி காசு வாங்கிட்டுக் கொலை செய்யற நாலஞ்சு கும்பல் இருக்குதுங்க. எல்லாருக்கும் கான்டாக்ட் உண்டு. ஹிட்மென் போலீஸ்லயும் இவங்களுக்குத் தொடர்பு உண்டு. நீங்க குத்துப்பட்டஉடனேயே அவங்கள்ல சேகர்னு ஒருத்தன் கன்னியாகுமரில தக்கலைன்னு ஒரு ஊர்க்காரன்... தலைமறைவாய்ட்டான். ஆறு இன்ச், எட்டு இன்ச் கத்திஎல்லாம் அவன்தான் பயன்படுத்திட்டு ஆட்டோ மாத்திப் போயிருவான். இப்பத்தான் ஒரு மாசம் விட்டு மெட்ராஸ் திரும்பியிருக்கான். அவனாத்தான் இருக்கும்னு தோணுது. உங்களைக் குத்தினவன், முகம் ஞாபகம் இருக்குமா உங்களுக்கு?''
சுந்: ''கண்டிப்பா... அந்த முகத்தை மறக்கவே மாட்டேன்.''
டி.ஐ.ஜி.: ''தட் மேக்ஸ் அவர் ஜாப் ஈஸி. மேலும், உங்க கேஸ் ரொம்ப பொலிட்டஸைஸ் ஆயிருச்சு. யாரையாவது கைது பண்ணியே ஆகணும்... பத்திரிகைக்காரங்க துளைக்கிறாங்க. அதும் தனியார் டி.வி-லருந்து மாயானு ஒரு பொண்ணு... என்னென்னவோ வரம்பில்லாமக் கேக்குது. என் மக வயசு தான் இருக்கும்.''
சுந்: ''நீங்க சேகரோ எவனோ... அவனைப் பிடிச்சு என்னங்க பிரயோஜனம்? அவன் ஒரு அம்புங்க. எய்தவன் யாருனு.''
டி.ஐ.ஜி.: ''முதல்ல அடையாளம்... அப்புறம் அவனைச் செலுத்தியது யாருனு கண்டுபிடிக்கறம்.''
சுந்: ''அவனைச் செலுத்தியது மந்திரினு தெரிஞ்சா, மந்திரிய அரெஸ்ட் பண்ணுவீங்களா?''
 டி.ஐ.ஜி.: (சற்றுத் தயக்கத்துக்குப் பின்) ''நீங்க யாரைச் சொல்றீங்கனு தெரியுது. ஆனா, மினிஸ்டர்ங்க எல்லாருமே தடயங்களை மறைச்சுருவாங்க. என்ஃபோர்ஸ்மென்ட் டைரக்டரேட்லயே திணர்றாங்களே. எதையும் கோர்ட்ல நிரூபிக்கறது கஷ்டம். என்னைக் கேட்டா, நீங்க இந்தக் கோணத்தை விட்டுர்றதுதான் நல்லது.''
சுந்: ''மழுப்பறீங்க... நான் கேக்கறது, 'ஒரு மந்திரிதான் குத்த வெச்சார்’னு அவன் சொன்னா, அந்த மந்திரியைக் கைது பண்ண மனோபலம் உங்களுக்கு இருக்கா? சந்திரலேகா கேஸ்ல என்ன ஆச்சு... ஏன் விட்டீங்க..?''
டி.ஐ.ஜி.: ''நீங்களும் மாயா மாதிரியே கேள்வி கேக்கறீங்க. ஒருமுறை நான் அஃபீஷியலா இல்லாம தனியா வரேன். அப்ப பேசலாம்... அடுத்த சனிக்கிழமை வெச்சுக்கலாமா?''
சுந்: ''என்ன?''
டி.ஐ.ஜி.: ''அடையாள பரேடு. அஞ்சு பேர்ல யாருன்னு நீங்க அடையாளம் காட்டணும்.''
சுந்: ''எய்தவன் இருக்க அம்பைக் கொண்டுவர்றீங்க.''
டி.ஐ.ஜி.: ''அம்பையும் அடைக்கணும் இல்ல.''
சுந்: ''ஒண்ணு பண்ணுங்க முதல்ல... அந்த சேகர்ங்கறவனை இங்க கூட்டிட்டு வாங்க.''
டி.ஐ.ஜி.: (சற்று யோசித்து விட்டு) ''இல்லைங்க. அது முறைப்படி தவறுங்க. முதல்ல ஐ.டி. பரேடு ஆவட்டும். அப்புறம் அவன்தான்னு நிச்சயமா தெரிஞ்சா தனியா அழைச்சுட்டு வரேன். அவனை எல்லாம் அடிச்சுக் கிடிச்சு வழிக்குக் கொண்டுவர முடியாதுங்க. சரியான உதை தாங்கு வாங்க.''
சுந்: ''அடிக்கிறதுக்கு இல்லைங்க...''
எழும்பூரில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் அந்த பரேடு நடை பெற்றது. கொண்டுவந்த ஐந்து பேரில் சேகர் என்பவனைப் பார்த்த மாத்தி ரத்திலேயே கண்ணாடிக்குப் பின்னால் இருந்து ''இவன்தான்'' என்றார்.
''எப்படிச் சொல்றீங்க?''
''முகத்துல தழும்பை மறக்கவே மாட்டேன். அவ்வளவு கிட்டத்தில் பார்த்தேனே. கை வேத்திருக்கு பாருங்க. முகம்கூட... இவன்கூடக் கொஞ்சம் தனியா பேச விரும்பறேன்.''
''ஏற்பாடு பண்றேங்க. ப்ரஸ் கான்ஃபரன்ஸ் போட்டுச் சொல்லிரவா... நிஜ குற்றவாளியைக் கைது பண்ணிஆச்சுன்னு.''
''நான் பேசிடறேங்க முதல்ல...'' என்றார் சுந்தரலிங்கம்.



கமிஷனர் அலுவலகத்தின் பின்பகுதி. கார் பார்க் அருகில் தனியான இருண்ட ஒற்றை பல்பு அறையில்...
சேகர் என்பவன் அழைத்து வரப் பட்டான். வெளியே காவற்படையினர் எச்சரிக்கையுடன் இருக்க, இருவருக்கும் நிகழ்ந்த, முழு உரை யாடலின் வடிவாக்கம் -
சுந்தரலிங்கம்: ''உன் உண்மைப் பேரு என்ன?''
சேகர்: ''என்னவா இருந்தா உனக்கென்ன... எனக்கு நிறையப் பேர் உண்டு.''
சுந்: ''டிசம்பர் 5-ம் தேதி காலைல பெசன்ட் நகர்ல என் வீட்டுக்கு வந்து கத்தியால வயித்துல குத்திட்டு, மண்டை மேல கீறிட்டுப் போனியே... இதப் பாரு, என் கண்ணு போச்சு. (சட்டையைக் கழற்றி) தழும்பைப் பாரு. நான் சாவலைடா, என்னைச் சாவடிக்க முடியாது.''
சே: ''இதெல்லாம் என்கிட்ட எதுக்குச் சொல்ற?''
சுந்: ''எத்தனை முறை ஜெயிலுக்குப் போய் இருக்கே?''
சே: ''எத்தனையாயிருந்தா உனக்குஎன்ன?''
சுந்: ''நான் ஒரு வக்கீல். உன்னைப் பதினஞ்சு வருஷம் ஜெயிலுக்கு அனுப்ப முடியும். உன்னைப் பார்த்தது நான் ஒருத்தன்தான். நீதான்னு அடையாளம் காட்டிட்டா நீ காலி. உள்ள போனா வெளிய வரவே முடியாது. சொல்லு, உன்னை அனுப்பிச்சது மணிமோகன் ஆளுங்கதானே?''
சே: ''எனக்கு எதும் தெரியாது. என்னை அடிச்சு உதைச்சாலும் எந்த வெவரமும் கெடைக்காது. நல்லா உதை தின்னுவேன்?''
சுந்: ''என்ன செஞ்சா வெவரம் கெடைக்கும்?''
சே: ''பாரு... எனக்கு மந்திரியும் தெரியாது, முந்திரியும் தெரியாது. காதர் பாச்சானு ஒரு பார்ட்டி வருவான். 'இந்த மாதிரி ஒரு பார்ட்டி இருக்குது. இந்த விலாசத்தில் பார்ட்டி இருக்குது’னு காட்டி வுடுவான். 'மூணு நா பார்த்து வெச்சுட்டுத் தீர்த்துரு’னு. கைல காசு மெய்ல குத்து. அவ்ளவ்தான். ஆளை வுடு.''
சுந்: ''என்னைத் தீர்க்கச் சொன்னாங்களா, காயம்படுத்தச் சொன்னாங்களா?''
சே: ''கட்சில உன்னைத் தீர்க்கத்தான் சொன்னாங்க. காயம்படுத்தணும்னா கதியே வேற. ரூட்டே வேற. பால் காட்டிக்கிட்டே நாலு தட்டு தட்டிரலாம். உன்னைய மார்லதான் வெச்சுக் குத்தினேன். கொஞ்சம் அதிகப்படியாவே சரக்கு ஏத்திருந்தனா... கை நடுங்கிருச்சு. தப்பிச்சுக்கிட்ட, சாவலை. மண்டைக்குத்தான் குறிவெச்சேன். நீதான் முட்டாத்தனமா திரும்பி கண்ல வாங்கிக்னே... அது உன் தப்பு. முதக்க சும்மா ஒரு கீறல் கீறிட்டுப் பயங்காட்டிட்டுத்தான் வரச் சொன்னாங்க. அன்னைக்குக் காலைலதான் சொன்னாங்க... 'பார்ட்டி ரொம்ப பேஜார் பண்ணுது. தீர்த்துரு’னு.''
சுந்: ''உனக்கு எத்தனை பணம் கொடுத்தாங்க?''
சே: ''ஏளாயிரத்துச் சில்லறை. இன்னும் ஒரு ரெண்டு ரூபா வரணும்.''
சுந்: ''இப்ப 'மேன் ஸ்லாட்டர்’னு சட்டத்தில் உனக்குச் சிறை தண்டனை நிச்சயம் வாங்காம நான் உன்னை விடமாட்டேன்.''
சே: ''எனக்கு வக்கீல் வெப்பாங்க. பெயில் அப்ளிகேஷன் போடுவாங்கனு காதர் பாய் சொன்னாரு. இதுக்கு மிந்தி செய்திருக்காங்க. பெங்களூர்ல ஒரு மார்வாடியைக் குத்தினப்ப.''
சுந்: ''இப்ப மாட்டாங்க. கேஸ் சூடாயிருச்சு. யாரும் உனக்கு பெயில் அப்ளிகேஷன் கொடுக்க மாட்டாங்க. பாத்துக்கிட்டே இரு.''
சே: ''அப்படிங்கறே நீ?''
சுந்: ''பெயில் கேட்டாக்கூடக் கடுமையா அதை எதிர்ப்பேன். இந்த கேஸ்ல யாரும் தலையிட மாட்டாங்க. நீதிபதிங்களே பயப்படுவாங்க. நீ தப்பிக்கிற துக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு.''
சே: ''என்ன வளி? மந்திரி யாருன்னே எனக்குத்
தெரியாதுபா. சொல்றனில்லை. நான் ரொம்ப அடிமட்டத் தில் இருக்கற 'பார்ட்டி’பா. பெரிய மனுசங்களுக்காகத் தொளில் செய்றம தவிர, பெரிய மனுசன் யாருன்னே தெரியாது. மிஞ்சிப் போனா, கட்சித் தொண்டனுங்க அல்லது அந்த அந்தப் பேட்டைக்குக் கட்சி ரவுடிங்க, கலெக்ஷன் மாஸ்டர்ங்க உண்டு. குடுமிங்களை வீட்டைக் காலி பண்ணவெக்க... கடையைக் கொளுத்தணும்... பொறம்போக்குல கடை போடறப்ப துணை வேணும்... கொருக்குப்பேட்டை, அபிராமபுரம்னெல்லாம் கூப்பிடுவாங்க... போவேன். எவனுக்குக் காரியம் செய்ய றோம்னுலாம் தெரியாது. ஏதோ வவுத்துப் பொயப்புக்கு அஞ்சு பத்துக்குப் பளுதில்லாம செய்யறன். அகஸ்தியர் கோயில்ல கலசம் திருடலாம், வரயான்னாங்க... போவலை. இந்த வருசம் மாலை போடலாம்னிருக்கேன்.''
சுந்: ''பதினஞ்சு வருஷமாவது ஜெயில் வாங்கிக் கொடுக்காம விட மாட்டேன் உன்னை. கமிஷனரை வேணா கேட்டுப் பாரு. யோசிச்சுப் பாரு... இளமையா இருக்கே. உன் வாழ்க்கைல முக்கியமான பதினஞ்சு வருஷத்தை சிறைச்சாலையிலயே கழிக்கச் சம்மதமா?''
சே: (கலவரத்துடன்) ''என்ன செய்யணுங்கறீங்க?''
சுந்: ''சேகர், நீ செஞ்ச பாரு காரியம்? அரைகுறை. வெட்டுருத்தில இதைப் போல அமெச்சூர்த்தனமான முயற்சி இருக்க முடியாது. காலை வேளையில செய்திருக்கக் கூடாது. மேலும், மோடஸ் ஆப்பரண்டின்னு சொல்வாங்க. உன் முறை ஆறு இன்ச் கத்தியைப் பயன்படுத்தறது. ஆட்டோவுல ஓடிட்டு தெரு முனையில மற்றொரு ஆட்டோவுக்கோ, மோட்டார் சைக்கிளுக்கோ மார்றது இதெல்லாத்தை யும் போலீஸ் கவனிக்கிறாங்க. சுலபமா கண்டுபிடிச்சுருவாங்க.''
சே: ''என்ன சொல்ற வாத்யாரே, புரியும்படி சொல்லு?''
சுந்: ''ஒவ்வொரு தடவையும் முறைய மாத்தணும். அடுத்த கொலை செய்யறப்ப ராத்திரில போகணும். கத்தியால குத்தக் கூடாது... துப்பாக்கி பழகியிருக்கியா... ரைஃபிள் ஏகே-47?''
சே: ''இல்ல, வாத்யாரே. நான் சில்ற ஆசாமி.. எனக்கென்னவோ நீ டமாஸு பண்றனு பச்சி சொல்லுது.''
சுந்: ''தமாஷ் இல்லை சேகர்... நான் கத்துக்கொடுக்கறேன். போலீஸுக்கு ஸ்டேட்மென்ட் கொடுக்கறப்ப உன்னைக் காட்டிக் கொடுக்கப்போறது இல்லை. 'இவன்தானான்னு சந்தேகமா இருக்குது. ஐம் நாட் ஷ்யூர்’னு சொல்லி உன்னை விடுதலை செய்துடப்போறேன். ஒருத்தன் கெடுதல் செஞ்சாலும் அவன் வெக்கப்படும்படி நன்மை செய்து ரணும்னு திருவள்ளுவர் சொல்லி இருக்காரு... சேகர், நீ படிச்சிருக் கியா?''
சே: ''ஆறு கிளாஸ், பாளையங்கோட்டைல இருக்கறப்ப... என்னைக் காப்பாத்தறியா? என்ன சொல்ற?''
சுந்: ''ஆமாம், உன்னைக் காப்பாத்தறேன்.''
சே: ''அதுக்கு நான் இன்னா செய்யணும்... திருந்திடணுமா... கதர் குல்லாய் மாட்டிக்கிட்டு சுதந்திர தினத்துல கொடி ஆட்டணுமா?''
சுந்: ''அதெல்லாம் எதும் வேண்டாம். அடுத்தமுறை காரியத்தைச் சுத்தமா செய்யணும். யாரும் நீதான்னு கண்டுபிடிக்க முடியாதபடி. வேட்டைக்குப் போன தடயங்களை மறைக்கணும். நான்தான் உன்னை ஏவினேன்னு தெரியக் கூடாது. சரியான சந்தர்ப்பம் பார்த்து கிரீன்வேஸ் ரோட்டில அந்த வீட்டைக் கண்காணிக்கணும். எப்ப கோட்டைக்குப் போறான், எப்ப வாக் போறான், எப்ப சின்ன வீட்டுக்கு... எல்லாத்தையும் கவனிச்சு, ராத்திரியில ரைஃபிள் வெச்சுச் சுடணும். ஸ்தலத்தை விட்டு விசில் அடிச்சுட்டே நடந்து போகணும். எல்லாம் சொல்லித் தரேன்.''
சே: ''யாரைச் சுடணும்!''
சுந்: ''மணிமோகனை... அதுக்கு என்ன விலை தெரியுமா... உன் விடுதலை... பதினஞ்சு வருஷம் சுதந்திரம்.''
சே: (யோசித்து!) ''சரிங்க...''


நன்றி - விகடன் 

Wednesday, December 26, 2012

மேஜிக் ரைட்டர் சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்…

(கண்டிப்பாக படிக்கவும் !!!)


1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள்,
இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி

... கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம்
அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.



2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக
இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள்
கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு
கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான்
இருக்கும்.



3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள்.
க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப்
போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு
உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும்
குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம்
செய்யாதீர்கள்.



4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது
விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல்
இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக்
கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.
\

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில்,
முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம்
ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.



6. இந்தச்
தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு
ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத
கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.



7.
வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ்
வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்),
எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும்.
வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன
படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும்,
கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக்
கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.



8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும்
நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும்.
கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது.
எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும்
உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம்
வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக
சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.



9. ஒன்பது
மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம்.
ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.



10. படுக்கப்
போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது
பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம்,
நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது
காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.



இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.

நன்றி - ஆர் பார்த்திபன் ஃபேஸ்புக் , அமரர் சுஜாதா ..