Showing posts with label சிவபெருமான்.சில பாதைகள். Show all posts
Showing posts with label சிவபெருமான்.சில பாதைகள். Show all posts

Wednesday, June 12, 2013

கூட்டுக் குடும்பங்களைக் குலைத்தது பெண்களா? - பாரதி பாஸ்கர்

சில பாதைகள்... சில பயணங்கள்...


- பாரதி பாஸ்கர்

பள்ளியின் கோடை விடுமுறை ஆரம்பிக்கும் முன்னரே, என் மகள் ஆரம்பித்து விட்டாள். லீவுல போர் அடிக்கும்... நான் என்ன செய்யுறது?"... போன விடுமுறைகளில் காலை 8 மணிக்கு எழுந்து 8.05க்கேரொம்ப போர் அடிக்குதுஎன்று அவள் புலம்பிய ஞாபகங்கள் என் வயிற்றில் புளியைக் கரைத்தன.


போன தலைமுறைப் பிள்ளைகளின் அகராதியில்போர்என்ற சொல் இருந்ததேயில்லை. பரீட்சை முடிந்த நாளே அத்தனைப் பசங்களும் கிளம்பி பாட்டி வீட்டுக்கு ஓடிவிடும். எல்லாடிக்கட்டுகளையும்உட்கார வைத்து, கல்சட்டியில் சுண்ட வைத்த குழம்பில் சோற்றைப் பிசைந்து, உருட்டி, குட்டிக் குட்டியாய் மலர்ந்திருக்கும் உள்ளங்கைகளில் பாட்டி வைக்க, சோற்று உருண்டைகளை விழுங்கும் குழந்தைகளைப் பார்த்தால், புத்துணர்வு முகாமுக்குப் போன யானைகள் கூட வெட்கப்படும்.


வீட்டின் சிறிய கூடத்தில் கிடைத்த தலையணைகளையும் பாய்களையும் பற்றிக் கொண்டு, லீவுக்கு வந்த அத்தனை குழந்தைகளும் நெருக்கி நெருக்கிப் படுத்திருக்கும். பாய், தலையணை கிடைக்காத குழந்தைகளுக்குப் பாட்டி மற்றும் அம்மாக்களின் பழைய புடைவைகளே பஞ்சுமெத்தை.


சளப்... சளப்என்று அடுப்படியில் நீர்தெளிக்கும் ஒலியும்வரட் வரட்என்று துடைப்பத்தால் பெருக்கும் ஓசையும் கேட்டால்பாட்டி வரப் போறான்னு அர்த்தம். பாட்டி வந்ததுமே கதை செஷன் ஆரம்பம்.

சண்டையில ஜெயிச்சப்புறம், அனுமார் வந்து சீதையைப் பாத்தாராம். இவ்வளவு நாள் கஷ்டப்படுத்தின அரக்கிகளுக்கு ஓங்கி ரெண்டு அடி வைக்கட்டுமா?’ன்னு கேட்டாராம்... பாட்டி சொல்லிக் கொண்டிருக்கும்போதேநான்தான் அனுமார்... இவதான் அரக்கி!’ன்னு பக்கத்திலிருக்கும் தங்கையை ஒருபஞ்ச்விட முயற்சித்த வாண்டை செல்லமாக மிரட்டி, ‘நீ அரக்கி இல்லடி... அழகின்னு சமாதானம் சொல்லும் பாட்டியின் மடியில் தலை வைத்து ஏற்கெனவே ரெண்டு பொடிசு உறங்கியிருக்கும். வெயில் பாழாகாமல் விளையாடி, வயிறு வாடாமல் எதையும் தின்று, கதை கேட்டுக் கண்ணயர்ந்த காலங்களில் போராவது... ஒன்றாவது!

மனிதர்கள் நிறைந்து கிடந்த அன்றைய வீடுகளில் வாழ்ந்த குழந்தைகள், உறவுகளின் வீரியத்தை, வெம்மையை, அடித்துக் கொண்டாலும் அடுத்த நொடியில் பிணைத்துக் கொள்ளும் அழகான அபத்தங்களை நேரில் கண்டு வளர்ந்தார்கள். முதிர்ந்த மரத்தின் வேர்களைப் போலவும் பருத்த பறவையின் சிறகுகள் போலவும் உறவுகளைக் கட்டிக்காத்த பெருசுகள் அந்த வீடுகளில் இருந்தார்கள்.


இன்றைய பிள்ளைகள்... பாவம்... ஆட்களே இல்லாத கான்கிரீட் காடுகளான அபார்ட்மென்ட் வீடுகளில், டீ.வி... கம்ப்யூட்டர்... செல்போன்... ப்ளே ஸ்டேஷன்... என்று சாதனங்களை வாங்க, சந்தோஷங்களை விற்றவர்கள். மாமாவின் கல்யாணத்தைவிடமன்த்லி எக்ஸாம்முக்கியம் இவர்களுக்கு. சித்தப்பா, மாமா, பெரியப்பா, பக்கத்து வீட்டுக்காரர், பால்காரர்... எல்லாருமே இவர்களுக்குஅங்கிள்தான்.


வீடுகளுக்குள் உள்ள உறவுகளோ இன்னும் வேடிக்கை... அப்பா, அம்மா, பையன்... மூன்று பேரும் வீட்டிற்குள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவரோடு ஒருவர் அல்ல... ஆளுக்கொரு அலைபேசியில் முகம் தெரியாத யார்யாருடனோ... 750 சதுர அடி வீட்டுக்குள் ஒவ்வொருவரும் ஓராயிரம் மைல் தள்ளி வாழ்கிறார்கள்.

உறவுகளின் அருமையை உணராமல் பிள்ளைகள் வளர்வதற்கு அவர்களது அம்மாக்கள்தான் காரணம்என்கிறார் ஒரு நண்பர்.

கூட்டுக் குடும்பங்களைக் குலைத்ததே பெண்கள்தான்’, எனக் குமுறுகிறார் இன்னொருவர்.

தனிக்குடித்தனம் போகக் கணவன் சம்மதிக்காத காரணத்தால்தான் பல பெண்கள் விவாகரத்து வழக்குப் போடுகிறார்கள்என்கிறது விஷயமறிந்த நீதிமன்ற வட்டாரம்.
இது மருமகள்களின் தவறா? மாமியார்களின் தவறு!’ என்று சூடாகிறார் ஒரு மனநல மருத்துவர். ‘ஆண்பிள்ளையைப் பெற்ற தாய்மாரின் சுயநலம் மிருகங்களைவிட மோசமானதுஎன்று கழுத்து நரம்பு புடைக்கப் பேசுகிறார் அவர்.


பண்பாடு, கலாசாரம், குடும்ப உறவுகள் எல்லாமே பொம்பளைங்க கையிலதாம்மா இருக்கு’, என்று இயம்புகிறார் ஒரு பண்பாட்டுக்காவலர்.


எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே... அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலேஎன்று பேசுகிறது பட்டிமன்ற மேடை.


ஆக, எல்லாரும் கூடிப் பொறுப்புகளைப் பெண்களின் தலையில் வைத்தாயிற்று. பிள்ளை வளர்ப்போ, உறவுகளின் பராமரிப்போ எதில் சிக்கல் வந்தாலும் விமர்சிக்கப்படுவது பெண்கள் மட்டுமே. ஆண்கள் ஒண்ணும் தெரியாத பாப்பாக்களாம்.


அம்மாவுக்கும் மனைவிக்கும் சண்டை வரும்போது, ‘எக்கேடோ கெட்டுப் போங்கன்னு சட்டையை மாட்டிக்கிட்டு பெட்டிக்கடைக்குப் போற ஆண்... காரணமே கிடையாது.


அண்ணன் தம்பிக்குள்ள வர்ற வரப்புத் தகராறுல, ‘வயலையே விற்று வக்கீல் ஃபீஸ் கொடுப்பேனே தவிர வழக்கை வாபஸ் வாங்க மாட்டேன்னு உறுமுகிற ஆண் சிங்கங்கள் நிஜமாகவே அப்பாவிங்க... இல்லை?


யாரு வச்ச தீயோ... வீடு வெந்து போச்சு!’ங்கிற சொலவடை போல, யார் காரணமோ தெரியவில்லை... இன்றைய தலைமுறைப் பிள்ளைகள் சொந்த பந்தங்களின் சுகம் அறியாமல் வளர்கிறார்கள். ‘விட்டுக் கொடுத்தல்’, ‘அனுசரித்துப் போதல்’, என்பதெல்லாம் தோற்றுப் போகிறவர்களின் வார்த்தைகள் என அவர்கள் நம்புகின்றனர்.


இந்தியப் பள்ளிப் பிள்ளைகளைப் பற்றி ஓர் ஆய்வை ஐரோப்பியக் குழு ஒன்று சமீபத்தில் நடத்தியது. அபாரமான புத்திசாலிகள்... கடும் உழைப்பாளிகள்... ஆனால் குழுவாக இயங்குவதை விரும்பாதவர்கள் தொடர்ந்து அவர்களை அவதானித்தோம். ‘ ஆம் ஸாரி’, என்கிற வார்த்தையே வரவில்லை. ஒருவேளை யாராவதுஸாரி’, என்று சொன்னாலும், ‘இட்ஸ் ஓகே’, என்ற பதில் இல்லவே இல்லை’... இப்படிப் போகிறது அந்த ஆய்வறிக்கை. கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது!


குழந்தைகளின் இந்தச் சுபாவத்துக்கு மாறிவிட்ட நம் குடும்பச் சூழ்நிலைகளும் ஒரு காரணமாயிருக்குமோ?


உறவுகள் ஒரு சமயம் இனிக்கும்... மறு சமயம் புளிக்கும்... சில வேளை கசக்கும்... ஆனாலும் உறவுகளை விட்டுவிடக் கூடாது என்கிற பெருந்தன்மை முன்பெல்லாம் நம் வீட்டுப் பெண்களிடம் இயல்பாய் குடியிருந்தது.

உறவுகளின் உரசல்கள் தரும் வெம்மையைப் பெரும்பாலும் பெண்களே உணர்ந்தார்கள். அந்த வெம்மையை, ‘போனால் போறது... விட்டுத் தள்ளுஎன்ற விவேகத்தால் குளிர வைத்தார்கள். என்னையும் என் சகோதரிகளையும் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த என் அத்தை ஐந்தாண்டுகளுக்கு முன் இறந்தபோது தியாகமும் விவேகமுமான மானுட தர்மத்தின் ஒரு பாகம் முடிந்து போனதாகவே நான் உணர்ந்தேன்.


மிக இளம் வயதில் சிறு மகனையும், பின் கணவரையும் அடுத்தடுத்து லக்ஷ்மி அத்தை இழந்து நின்ற நேரம் அது. கணவரின் பத்தாம் நாள் காரியத்திற்கு வந்த சில நெருங்கிய உறவினர் கூட, துக்க வீட்டின் சம்பிரதாயப்படி அவளிடம்சொல்லாமலேபுறப்பட்டுப் போனபோது அவள் அதிர்ந்து விட்டாள்.


படிப்பு இல்லை... வேலை கிடையாது. கூட அழைத்துப் போய் ஆதரவு தரவேண்டிய உறவினர்கள் போன இடம் தெரியாது. இனி யாரை அண்டி வாழ்வது? முடிவே இல்லாத ஆழ் பள்ளத்தில் விழுந்துவிட்ட அந்த வாழ்க்கையை என் அப்பாவும் அம்மாவும் மீட்டெடுத்தனர்.


என் அக்காவைப் பிரசவித்தபின், விடுமுறை முடிந்து, அலுவலகம் செல்ல ஆயத்தமான என் அம்மா, கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள நம்பிக்கையான ஆளைத் தேடிக் கொண்டிருந்த நேரம் அது. அப்போது எங்கள் வீட்டிற்கு லக்ஷ்மி வந்தாள். என் அக்கா அவளைஅத்தைஎன்று உறவு சொல்லி அழைத்தாள். அடுத்துப் பிறந்த நாங்களும்அத்தைமடி மெத்தையடிஎன வளர்ந்தோம்.


எங்கள் வீட்டில் அத்தை கால் ஊன்றிய பிறகு, முன்பு நிராகரித்துப் போன அவளது உறவுக்காரர்கள் மெள்ள மெள்ள வர ஆரம்பித்தார்கள்.


அப்போதெல்லாம், ‘அத்தை! நீ அவங்களை சேர்க்கவே கூடாதுஎன்று நாங்கள் போர்க்கொடி தூக்குவோம்.

போனாப் போறது. அன்னைக்கு அவங்க நிலைமை அப்படி. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை" என்று சொல்லியபடியே, அவர்களுக்காக வீட்டின் கதவுகளை விரியத் திறந்த லக்ஷ்மி அத்தையின் ஐந்தரை அடி உயரம், இப்போதும் என் கண் முன்னே விஸ்வரூபமாய் விரிந்து நிற்கிறது.


என் அத்தை பள்ளிப் படிப்பில் மூன்றாம் வகுப்புக் கூடத் தாண்டவில்லையாம். ஆனால் அவளது பக்குவத்தையும் பரந்த மனசையும் பார்க்கும் போதெல்லாம் என் பட்டங்களையும் பதவிகளையும் அவள் பாதத்தில் போட்டுவிட்டுப் பல நாட்கள் நான் கண்ணீரில் கரைந்திருக்கிறேன்.


பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய விஷத்தைத் தான் உண்டு, அமுதத்தைத் தேவர்களுக்கு அளித்தாராம் சிவபெருமான்.

குடும்பம் எனும் பாற்கடலில் உறவுகளின் உரசல்களால் ஊறும் விஷத்தை எல்லாம் தன் நெஞ்சுள் தேக்கி, மன்னிப்பு என்ற அமுதத்தால் குடும்ப உறவுகளை நிரந்தரமாக்கிய நூறு நூறு லக்ஷ்மிகளின் வாழ்க்கை, தடுமாறும் நம் பயணத்தில் வழி




நன்றி - கல்கி